Wednesday, June 24, 2015

ஆசிரியர்களின் மனப்பான்மையில் மாற்றம் தேவை ! - உண்மை ரிப்போர்ட்


*
இன்று துவக்கப்பள்ளி அளவில் கல்வி முறை மாறி விட்டது. கல்வி குழந்தை மையமாக உள்ளது. ஆகவே, குழந்தைகளை மையப்படுத்தி கல்வி கற்பிக்க படுவதற்கு ஏற்றார் போல், கற்பிக்கும் முறைகளிலும் SABL, ALM என்று மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாணவர்களை மதிப்பீடு செய்வதிலும் பெரும் மாற்றம் கண்டுவருகின்றோம்.


மாற்றங்கள் இப்படி எல்லா நிலைகளில் மாறினாலும், அம்மாற்றம் கற்று கொடுக்கும் ஆசிர்யர்களின் மனதில் வர வேண்டும். இன்று சூழல் மாறி விட்டதாக உணர்கின்றேன். முகநூலினை திறந்தால் ஆசிரியர்கள் குழுமமாக செயல்படுவது ஆச்சரியமாகவும், கல்வி குறித்த மாற்று சிந்தனையுடன் செயல்படுவதாகவும் உணர்கின்றேன்.
ஒருவரின் செயல்பாடுகளில் இருந்து மற்றொருவர் செயல்களை எடுத்துக் கொண்டு, அச் செயல்பட்டைபள்ளிகளில் செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.


குழந்தைகள் பள்ளிகளில் எளிய செயல்பாட்டின் வழியாக கற்பதையே விரும்புகின்றனர். களப்பயணம், உற்று நோக்குதல், பதிவு செய்தல், விவாதித்தல், ஒருமித்த கருத்தை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபாட்டுடன் திகழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் விளையாட்டையும் விரும்புகின்றனர்.


விளையாட்டுகளை பொதுவாக மதிப்பீட்டு செயல்பாடுகளுக்கு உருவாக்கி கொள்வது ஆசிரியர்களுக்கு நல்லது. மாணவர்கள் அறியாமலே அவர்களை மதிப்பிட உதவும். அதன் வழியாக மாணவர்கள் பின் தங்கியுள்ள பகுதிகளில் முழு திறன் பெற மாணவர்களுக்கு உதவ முடியும். ஒட்டுமொத்தமாக எல்லோரும் பின்தங்கிஉள்ளர்கள் எனில் கற்பித்தல்முறையில் மாற்றம் செய்யவும், அப்பாடப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தவும், ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்தி கொள்ள உதவும்.
அறிவியல் 5 ம் வகுப்பு , “பசுமை உலகம்” பாடத்தில் பூவின் பகுதிகள் பாடத்தினை செம்பருத்தி பூவினை வைத்து மாணவர்களுக்கு அதன் பகுதிகளான ஆண் பகுதி மகரந்தம் பெண் பகுதி சூலகம் என்பதனை விளக்கி, ஆண் பகுதியில் மகரந்த தாள் , மகரந்த துகள், மகரந்த கம்பி ஆகியவற்றை பிளேட்டால் அறுத்து மாணவர்களிடம் காட்டவும். அதன் பின் பெண் பகுதியான சூலகத்தில், சூல் முடி, அதனை தொடர்ந்து சூல் தண்டு, சூல் பை, சூல்கள் ஆகியவற்றை செம்பருத்தி பூவில் வெளியில் எடுத்து காட்டவும். அதன் பின் ஒவ்வொரு மாணவர்களுக்கும் செம்பருத்தியினை கொடுத்து , மாணவர்களை ஆசிரியர் செய்து போல் பூவின் ஆண், பெண் பகுதிகளை அறுத்து டிஸ்ப்ளே செய்ய சொல்லவும்.


மாணவன் இச்செயல் பாட்டின் வழியாக பூவின் ஆண், பெண் பகுதிகளை புரிந்து கொண்டானா என அறிய , மாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும்.
பூவின்ஆண் பகுதிக்கு உரிய பாகங்களை சொன்னால் வட்டத்திற்கு வெளியேயும், பெண்பகுதிகளை சொன்னால் வட்டத்திற்கு உள்ளேயும் குதிக்க சொல்லவும். சூல் முடி என்றால் மாணவன் வட்டத்திலிருந்து முன்னால் குதிக்க வேண்டும். மகர்ந்த துகள் என்றால் பின்னால் குதிக்க வேண்டும்.


இவ்வாறு ஆண், பெண் பகுதிகளை கூறி குதிக்க செய்யவும். மாணவர்கள் ஆசிரியர் கூறும் பூவின் பகுதியை கவனித்து குதிக்க வேண்டும். தவறாக செய்யும் மாணவன் வட்டத்தில் அதே இடத்தில் கீழே அமர்ந்து , அவர்களில் ஒருவர் பூவின் பகுதிகளை கூற வேண்டும். இப்படி தொடர்ந்து விளையாட ஒரு மாணவன் மட்டுமே இருக்கும் நிலை ஏற்பட, அவனே வெற்றிப்பெற்றவன் ஆவான். இதனை தொடர்ந்து விளையாடுவதன் மூலம் மாணவர்கள் பூவின் ஆண் மற்றும் பெண் பகுதி குறித்து தெளிவு பெறுவர்.
அதன் பின் பூவின் குறுக்கு வெட்டு தோற்றம் வரைந்த தாளினை கொடுத்து மாணவர்களிடம் பூவின் பாகங்களை குறிக்க செய்ய, சரியாக குறிப்பார்கள். மாணவர்களை இவ்வாறாக மதிப்பிடலாம்.
விளையாட்டாக கற்பதால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வருகை தருகின்றார்கள். வீட்டில் படித்து விட்டு வருகின்றார்கள். அடுத்த நாள் கொடுக்கும் விளையாட்டில் தவறில்லாமல் செய்ய வேண்டும் என்று முயன்று கற்று கொள்கின்றனர். இந்த இயல்பூக்கத்தினை பயன்படுத்தி ஆசிரியர்கள் அவர்களின் சிந்தனைக்கு வேலைகொடுத்தால், படைப்பாக்க திறன் வெளிப்பட்டு உண்மையான கல்வியின் குறிக்கோள் நிறைவடையும்.
எல்லா பாடங்களுக்கும் வகுப்பறை விளையாட்டுகள் உள்ளன. இனி தினமும் விளையாட்டு தொடரும்.
மதுரை சரவணன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...

Post a Comment