Tuesday, June 2, 2015

வெகுஜனங்களின் மத்தியில் இந்த அரசு வெற்றி கண்டுள்ளது!

இது சார் கொடுத்த புத்தகம் அல்ல. அரசு கொடுத்தது!
*
நேற்றே ஜாலி தொடங்கி விட்டது. முதல் பாடம் சக்ஸஸ்.
பாடநூல், நோட்டு என எல்லா இலவசங்களையும் கொடுத்தவுடன் பாடம் தொடங்குவது தானே கடமை!
அதுக்குள்ள பாடமா? ஆமாங்க. என் முதல் பாடம் ஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது தான்! அதுக்கு முதல்ல நாம் யாரையும் அடிக்க மாட்டோம். யாரையும் தேவையில்லாமல் திட்டமாட்டோம் என்பதை உணர்த்த வேண்டும். அதுக்காக நான் அடிக்க மாட்டேன், திட்ட மாட்டேன் என்றால் ஏறி மேய்ந்து விடுவார்கள். அதுவும் துவக்கப்பள்ளி மாணவர்கள் ரெம்ப விவரம். மாணவர்களை நேசியுங்கள் . இவ்விசயம் தானாக அமைந்துவிடும்.
மாணவர்களை நேசிப்பவர்கள், தான் கற்றுத்தருகின்றோம் என்ற மனநிலையை மறந்து, தாம் கற்பதற்கு உதவுகின்றோம், அதேவேளையில் கற்று கொள்கின்றோம் என்பதை உணர்ந்து செயல்படுவார்களாக இருப்பர். 

நான் எப்போது என் மாணவர்களுக்கு கற்று தருவதில்லை. அவர்கள் கற்பதற்கு உதவி செய்து வருகின்றேன். கற்பதற்கான சூழலை உருவாக்கி தருகின்றேன். இணை கற்றலை, குழு கற்றலை ஊக்குவிப்பவனாக இருக்கின்றேன். அதனால் என்னை அவர்களில் ஒருவனாக நினைக்கின்றனர். தங்கள் நினைக்கும் கருத்தை வெளிப்படுத்துகின்றனர். அதன் மூலம் எது சரி? எது தவறு? என்பதை தங்களுக்குள் விவாதித்து புரிந்து கொள்கின்றனர். அதிகம் சிந்திக்கு திறன் பெற்றவர்களாக இருப்பதால், தங்களுக்குள் உள்ள தனித்திறன் வெளிப்படுத்துபவர்களாக உள்ளார்கள்.
இன்று அறிவியல் முதல் பாடம் எடுத்தேன். எல்லோரும் பாடப்புத்தகத்தை திறந்தனர். வேண்டாம் . முடிவையுங்கள். தேவைப்படுமானால் நான் திறக்க சொல்லும் போது திறங்கள். பாட அறிமுகம் செய்து வைக்கின்றேன் என்றேன்.
ஆமா என்ன படிக்க போறோம்ன்னு தெரிஞ்ச பின்னால நாம் புத்தகத்தை திறப்போம் என்றான் ரா. மணிகண்டன். வீர மணிகண்டன் சார் நீங்க சொல்லுங்க சார், இவன் எப்பவும் இப்படி தான் முந்திரி கொட்டை மாதிரி பேசுவான் என ரா. மணிகண்டனை பிரேக் செய்தான்.
சரி உயிருள்ளவை எவை? உயிர ற்றவை எவை? என கேள்வி கேட்டேன். அனைவரும் செடி கொடி மரம் மனிதன், விலங்கு உயிர் உள்ளவை என கத்தினர். யார் பெயர் சொல்லி அழைக்கின்றேனோ, அவரே தான் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரும் பதில் கூற வேண்டாம்.. அப்படி அழைப்பவரை தவிர்த்து வேறு யாராவது பதில் அளித்தால், அவர்கள் அடுத்து நாம் விளையாட போகும் விளையாட்டில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்று குண்டை தூக்கி போட்டேன். அனைவரும் அமைதியானார்கள். மிகவும் கவனமாக கவனித்தார்கள்.
உயிர் இல்லாதவைகள் கல், மண் , பெஞ்சு என பா. மணிகண்டன் கூற , பொதுவாக சொல்லவும் என கூறினேன். அவன் யோசிக்க ஆரம்பித்தான். பின் மூன்று பேராக யோசித்து கூறவும் என்றேன். மணிகண்டன் குழு நீர் , காற்று என்று பதில் கூறினர். சபாஷ் என அனைவரையும் பாராட்ட சொன்னேன். . உடனே சினேகா குழு சூரியன், நிலம் என்று கூறியது. அக்குழுவிற்கும் கைதட்டல் கூறினேன்.
இப்போ விளையாடலாம் என்றேன். அனைவரும் ஜாலி ஆனார்கள்.
வட்டமாக நிற்க சொன்னேன். அனைவரும் வட்டமாக நின்றனர்.ராகவன் என்ற புதிய மாணவன் சார் பாத்ரூம் என்றான். சென்று வா என்றேன். அவன் வரும் வரை காத்திருக்க நினைத்து அவனின் புத்தகத்தை திறந்தேன். அருகில் இருந்த ரஞ்சித், “ சார், புத்தகத்தில் விளையாட்டு போட்டிருக்கா? “ என கேட்டான். இல்லை, அடுத்து என்ன நடத்துவது என பார்த்தேன் என்றேன்.அதற்குள் மூஞ்சு இறைக்க ஓடி வந்தான், ராகவன்.
சார் , என் புத்தகத்தை காணாம் என்றான். அதற்குள் முத்துகுமார், “ சார் வச்சு இருக்கார் தெரியலைய்யா? “ என மறு வினா எழுப்பினான். ”சார் என் புத்தகம் அது, தாங்க “ என்றான். “டேய், சார் தானே , உனக்கு புத்தகம் தந்தார், அவருக்கே புத்தகம் கொடுக்க மாட்டேன்னு சொல்ற !” என்றான் முத்து குமார். அதற்கு யாரும் எதிர்பார்திராத பதிலை ராகவன் சொன்னான்.
“இது ஒண்ணும் சார் தரலை, கவர்மெண்டு தந்த புத்தகம்”
”என்ன இருந்தாலும் அதை சார் தானே வாங்கி தந்தார். அதுனால சார் புத்தகம் தான்” என்று தொடர்ந்தான் முத்துக்குமார்.
“அப்படி பார்த்தா இது முதல்வர் அம்மா கொடுத்த புத்தகம் “ என ராகவன் பதிலுக்கு பேசினான்.
நான் அவனை சைகையில் அருகில் அழைத்தேன். அவன் பயந்து போய், “சார், சாரி சார்” என்றான். இப்போது நானே அவன் அருகில் சென்றேன். அவன் கைகளை குலுக்கினேன். அவன் மகிழ்ச்சியுடன் குலுக்கியப்படி , “சார், நீங்க அடிக்க போறீங்கன்னு பயந்தே போயிட்டேன்” என்றான்.
”இப்படி தான் தைரியமாக எது மனசில் பட்டதோ அதை பேச வேண்டும். உண்மையில் அது உன்னுடைய புத்தகம் தான். அரசு உனக்கு அளித்த புத்தகம் . அடுத்து செயல்பாட்டிற்காக பார்த்தேன். இந்தா...” என்றேன்.
“சார், நான் படிச்ச பழைய பள்ளி கூடத்தில் இப்படி எல்லாம் சார் டீச்சர் கிட்ட பேச முடியாது சார். நீங்க ஜாலியா அடிக்காம சிரிச்சு பேசுறீங்க..அங்க கேள்வி கேட்டாலே முட்டிய பேர்த்துபுடுவாங்க ” என கண்களில் நீர் பூக்க என் கரங்களை பற்றி பேச தொடங்கினான்.
வா விளையாடலாம்..இந்த வருடம் முழுவதும் நீ கேள்வி கேட்கலாம். பயப்படாம பதில் சொல்லலாம். நிறைய பிரண்ட்ஸ் கூட பேசலாம் என கூறி வட்டத்தில் நிற்க வைத்தேன். முதல் கேம் ஸ்டார் ஆகியது. உயிருள்ள பொருள் சொல்லும் போது வட்டத்தின் உள்ளே குதிக்க் வேண்டும். உயிரற்ற பொருள் கூறும் போது அப்படியே இருக்க வேண்டும். சிறிது அசைந்தாலும் அப்படியே அமர்ந்து விட வேண்டும்.
மீன் என்றேன். ஒருவன் மட்டும் அப்படியே நின்றான். அவனை அமர செய்தோம். கல் என்றேன். அடுத்து உட்கார்ந்த மாணவனை இப்படி மாற்றி மாற்றி பெயர்களை கூற சொன்னேன். ஆனந்தமாக விளையாண்டனர்.
அடுத்தடுத்து ஓவ்வொருவராக ஒவ்வொன்றாக நீர் காற்று சூரியன் நிலம் உயிரற்றவை மனிதன் விலங்கு பறவை உயிருள்ளவை என கூற வேண்டும். முதல் மாணவன் நீர் என்றான் அடுத்தவன் காற்று என்றான். மூன்றாமவன் நிலம் என்றான். அவுட் அமர சொன்னேன். மீண்டும் நீர் காற்று சூரியன் நிலம் உயிரற்றவை மனிதன் விலங்கு பறவை என வரிசையை நினைவு படுத்தி மீண்டும் கூற சொன்னேன். மாற்றி கூறியவர் அவுட் . இப்படி விளையாட்டு தொடர்ந்தது.
இது அரசு அளித்த புத்தகம் என தைரியமாக பதில் சொல்லியதன் மூலம் ஆசிரியரிடம் உள்ள பயம் நீங்கியது கண்டு மகிழ்ந்தேன். முதல் பாடத்தில் நான் பாஸ் செய்து விட்டேன். இனி தொடர்ந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
மதுரை சரவணன்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களைப் போல் ஒவ்வொரு ஆசிரியரும் இருக்க வேண்டும்...

பாராட்டுகள்... வாழ்த்துகள்....

Post a Comment