Friday, June 5, 2015

குழந்தைகளை சேர்க்க எளிய வழி - பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ஸ்.


இரண்டு நாட்களாக என் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் ஒருவர் என்னிடம் ஓர் வேண்டுகோள் விடுத்து கொண்டிருக்கின்றார். குறிப்பிட்ட பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதியில் , அக்குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அழைத்து துண்டு போட்டு, இவர் நம் பள்ளிக்காக குழந்தைகளை நிறைய சேர்த்துவிடுவார். விட்டுள்ளார் என பாராட்டி உள்ளார்கள். அதனால் நம் பள்ளி குழந்தைகள் நான்கு பேர் அப்பள்ளிக்கு சென்று விட்டனர். எனவே, நாமும் அப்படி செய்வோம் என்றார்.
நான் அந்த ஆசிரியரிடம் நீங்கள் அக்குழந்தைகளின் பெற்றோரிடம் நாங்கள் துண்டு போடுவதில்லை. நாங்கள் ஆள்சேர்ப்பதற்கு அரசியல் கட்சி நடத்தவில்லை , பாடம் கற்று தரும் ஆசிரியர்கள். ஆகவே, உங்கள் குழந்தைகளுக்கு நன்றாக பாடம் சொல்லி தருவோம் என உறுதி அளித்து வாருங்கள். முடிந்தால் என்னிடம் பேச செய்யுங்கள் என்றேன்.
அந்த ஆசிரியை, துணைக்கு மற்றொரு ஆசிரியரை அழைத்து சென்று, அந்த பெற்றோரிடம் நான் கூறியது போல கூறியுள்ளனர். மேலும் என்னிடம் பேச சொன்னதற்கு அக்குழந்தையின் தந்தை மறுத்துள்ளார். அதை என்னிடம் வந்து தெரிவித்தனர்.மறுநாள் சென்று எப்போது அம்மாணவர்களின் தந்தை இருப்பார் என அறிந்து வாருங்கள் , நான் வருகின்றேன் என்ற தகவலையும் தெரிவியுங்கள் என்றேன். அவரின் மாமா ( துண்டு வாங்கியவர் ) இருக்கும் போது அவசியம் நான் வருகின்றேன் என்றேன்.
மறு நாள் காலை ஆசிரியர் அப்பெற்றோர் வீட்டில் இருந்தபடி போன் செய்தார்கள். “சார் ,மாலை வந்து பேச சொல்லுகின்றார்” என்றார் ஆசிரியை. என்னிடம் ஒருநிமிடம் பேச சொல்லுங்கள் என்றேன். அவர் லைனில் வந்தார்.
“சார், நாங்கள் உங்கள் குழந்தைக்கு நன்றாக கற்று தருவோம். தந்துள்ளோம். அதில் குறை இருக்கின்றது என்றால், நானே உங்களுக்கு முறையாக டிசி வழங்கி அனுப்பி வைக்கின்றேன். முதல் வகுப்பு குழந்தை செய்தி தாள் வாசிக்கின்றது. நீங்கள் எங்கு சேர்க்க விரும்புகின்றீர்களோ அப்பள்ளி குழந்தைகள் அருகில் இருந்தால் வாசிக்க சொல்லுங்கள். விபரம் புரிந்துவிடும். நாங்கள் நன்றாக கற்று தருகின்றோம். நாங்கள் பாடம் நடத்த தொடங்கி விட்டோம். உங்கள் குழந்தைகளின் படிப்புக்கு நான் கேரண்டி ” என்றேன். நாளை பள்ளிக்கு அனுப்புகின்றேன் என்றார்.
இன்று பள்ளிக்கு குழந்தைகள் வந்துவிட்டார்கள்.
அட ஆசிரிய பெருமக்களே ! குழந்தைகளை சேர்ப்பது எப்படி ? என விழித்துக் கொண்டு தெருதெருவாக போய் வீடு வீடாக ஏறி இறங்க வேண்டாம். குழந்தைகளை சேர்க்க இரு எளிதான வழி முறைகளை கூறியுள்ளேன்.
இதில் எது உங்களுக்கு எளிதோ அதை உடனே செயல்படுத்துங்கள்.
தரம் தான் என்றும் நிரந்தரம் என்பதை மனதில் நிலை நிறுத்தி கொள்ளுங்கள்.
மதுரை சரவணன்.

No comments:

Post a Comment