மதுரையில் எதோ
ஒரு மாற்றம் நிகழத்தொடங்கியுள்ளதை உணர முடிகிறது. இந்தி எதிர்ப்பு போராட்ட காலக்கட்டங்களில்
மாணவர்களின் எழுச்சி ஓங்கியது போன்ற பிரமிப்பை உணர முடிகிறது. இவர்கள் எங்கு கூடிகிறார்கள்?
எப்படி இது போன்ற கருத்துக்களை முன் வைக்கிறார்கள்
எல்லாம் மர்மமாக இருந்தாலும், செயல்பாடுகள் வெளிப்படையாகத்தான் இருக்கின்றன. சுற்றுசூழல்
இயல் கல்வி குறித்த அறிவு தற்போதைய இளம் கல்லூரி மாணவர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதை
சமீப காலமாக நீர் ஆதரங்களுக்காக மதுரை கண்மாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதிலிருந்து
காணமுடிகிறது.
”உனக்குள் அளவற்ற
ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத சக்தியும் குடிகொண்டிருக்கின்றன என்று நீ நினைப்பாயானால்,
அந்தச் சக்திகளை உன்னால் வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்”
என்ற சுவாமி விவேகனாந்தரின் பொன்மொழிகளை இன்று பக்ரித் பெருநாளில் உண்மையாக்கி கொண்டிருந்தார்கள்.
சிஇஓஏ பள்ளி அருகில் குழுமிய “ஐ லீட் மதுரை “ குழுவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அரசியல்
வாதிகளுக்கும் முன் உதாரணமாக விளங்கினர். சென்ற வாரம் வண்டியூர் கண்மாய் சீரமைப்பு
பணியினை மேற்கொண்ட பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள், கல்லூரிமாணவர்கள் எழுச்சி அரசியல்வாதிகள்
மனதிலும் நல்விதையை விதைத்து இருப்பதை அறிய முடிந்தது.
குலமங்கலம் சாலையில்
கலெக்டரை சந்தித்த, மேயர், துணைமேயர், கவுன்சிலர்கள், போஸ் எம்.எல்.ஏ., வார்டு தலைவர்கள்
குழுமிய அரசியல் தலைவர்கள் குழு, தாங்களும் இப்பணியினை மேற்கொள்ள இருப்பதாக தங்களின்
கோரிக்கையை வைத்தனர். வாக்கிங் பாதையை கண்மாயை சுற்றி அமைக்க கேரிக்கையை வைத்து கலெக்டரின்
உதவியை நாடினர். திரளாக திரண்டு இருந்த இந்த கூட்டமே , மாணவர்களின் எழுச்சியின் வெற்றி.
யார் இந்த ஐ லீட்
மதுரை அமைப்பினர் ? டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் கல்லூரி மாணவர்களைக் கொண்டு , மதுரை
, கோயம்புத்தூர் , சென்னை ஆகிய பகுதியில் கண்மாய் பகுதிகளை சீர்செய்து நீர் ஆதாரத்தை
பெருக்க திட்டம் தீட்டியுள்ளது. மாணவர்கள் என்று சும்மா சொல்லிவிட முடியாது. அட நாம எல்லாரும் தாங்க. இன்று இதை எடுத்து நடத்தியவர்கள்
தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள், பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர்கள்,
மதுரை சமூகவியல் கல்லூரி மாணவர்கள், மாணவர் தலைவனான அண்ணாமலை, விஸ்வநாதன் , அருண் பிரசாத்,
யோகேஷ் கார்த்திக், பிரசாத், ஜெயஸ்ரீ தங்கம், ப்ரீத்தி (சாப்ட்வேர் இஞினியர்) சமூக
ஆர்வலர்கள் ஸ்ரீதர் , இளைய பாரி, செல்வம் ராமசாமி, சொப்னா கார்த்திக், முகம் தெரிந்த
பெயர் தெரியாத பல நண்பர்கள், ரோட்டரி கிளப் செண்டரல் மெம்பர்கள், பொது மக்கள்,அஇஅதிமுக
பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் நான் (மதுரை
சரவணன்) இணைந்து இன்று இப்பணியினை மேற்கொண்டோம்.
ஐ லீட் மதுரை நோக்கம்?
நீர் நிலைகளை காப்பது. நீர் ஆதாரத்தை பெருக்குவது, அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை
உயர்த்துவது. பாலைவனமாக மாறும் மதுரையை அதன் அழிவிலிருந்து காப்பது.
மாணவன் அண்ணாமலை
சொல்லும் போது, நாங்கள் திரட்டிய தகவலின் படி இந்த செல்லூர், குலமங்களம், மீனாட்சிபுரம்
பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் 1500 அடிக்கும் மேல் குறைந்து விட்டது. நாம் மேற்கொள்ளும்
இப்பணி, கலெக்டர் அவர்களின் உதவியால், பொக்கிலின் கொண்டு முட்கள் வெட்டப்பட்டு, அவை
அகற்றப்பட்டு, சுத்தமாக்கப்படுவதன் மூலம் , மழைக்கால தொடக்கமான இப்பருவத்தில், நமக்கு
50 அடிகளில் நீர் கிடைக்க வாய்ப்பு உண்டு என்றான்.
எம்.எல்.ஏ அவர்கள் பேசும் போது, மாநகர தந்தை இருக்கிறார் , மாணவர்கள் முன்னெடுத்து செய்யும் இப்பணியினை நீங்கள் தொடர்ந்து அரசு இயந்திரத்தைக் கொண்டு சீர்படுத்தி நீர் ஆதரத்தை திரட்ட உதவிட வேண்டும் என்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் இப்பணியினை துவங்கி வைக்க, முள்களை சட சட என வெட்டி தள்ளினர் மாணவர்களும்,பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் முட்கள் கைகளை கிழித்தாலும் பரவாயில்லை என இரத்தம் சிந்தியும் வேர்வைகளை கண்மாயில் நிரப்பியும் சுத்தம் செய்து , நீர்நிலை உயர உதவினர். இக்கட்டுரையை எழுதி முடிக்கும் போது மழை பெய்து கொண்டிருந்தது. நிச்சயம் முட்கள் அற்ற , மாணவர்கள் சுத்தமாக்கிய பகுதிகளில் மழை நீர் முத்தமிட்டு தேங்கி யிருக்கும் என்ற நம்பிக்கை இச்செயல்பாட்டினை ஊக்குவிப்பதாக இருக்கிறது. அதை விட மாணவர்கள் எழுச்சி அரசியல் தலைவர்களால் உற்று நோக்கப்படுவது சமூக மாற்றத்திற்கான எழுச்சியாக கருதுகிறேன். இதனை எடுத்து நடத்தும், வந்து இணைந்து நடத்தும், தொடர்ந்து சமூக செயல்பாடுகளில் இணைந்து செயல்படும், அனைத்து நண்பர்களுக்கும் நன்றி… வாழ்த்துக்கள்.
4 comments:
உங்களின் சமூக சேவைக்கு வாழ்த்துக்கள்...
அருமை! இப்படியே எல்லா ஊர்களிலும் நடந்தால் நாடு நலம் பெறும்! வாழ்க மாணவர் பணி! வளர்க எங்கும்!
மாற்றங்கள் தொடரட்டும்...
உங்கள் சேவை வெற்றி பெறட்டும்.
இன்றரும்பிய இந்த மாற்றம்
நிலைபெறட்டும்...
விழிப்புணர்வு ஓங்கட்டும்...
அருமையான பகிர்வு நண்பரே.....
Post a Comment