Thursday, September 5, 2013

மார்க் போடு ...! அப்புறம் போன் போடு...!


அட எவ்வளவு நாட்கள் தான்  இவர்கள் நமக்கு மார்க் போடுவது ? நாமும் இவர்களுக்கு மார்க் போடும் நாள் வந்து விட்டது. அட இன்னைக்கு தான் ஆசிரியர் தினம். நீங்கள் படித்த ஆசிரியருக்கு மார்க் போட வேண்டாமா? அல்லது அவர் சிறந்த அல்லது நல் ஆசிரியரா என நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டாமா? பேனாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கீழ் கண்ட வினாக்களை படியுங்கள்.

    1.   என் ஆசிரியர் தினமும் சிரித்த முகத்துடன் எங்களை வரவேற்பார்.
    2.   தினமும் கதைகள் கூறுவார்.
    3.   கடிந்து பேசியதில்லை. எப்போதாவது கடிந்து பேசி நாங்கள்                 அழுதோமென்றால் , அதற்காக கண் கலங்குவார்.
    4.    தன் வகுப்பறையில் பிரம்பு வைத்திருக்க மாட்டார்.
    5.   வகுப்பறையில் எங்களை விளையாட வைப்பார். சில சமயம்             மைதானத்திற்கு அழைத்து சென்று விளையாட வைப்பார்.                 எங்களுடன்    விளையாடுவார்.
     6.   அவர் வாராத நாட்கள் நகர்வது சிரமம்.  கடினமானதாகவே அந்நாளை     உணர்கிறோம்.
     7.   வகுப்பறையில் கற்பித்தல் உபகரணம் இன்றி பாடம் நடத்தியதில்லை.
     8.   களப்பயணம் அழைத்து செல்லும் போது எங்களை விட்டு அவர்           விலகியதும் இல்லை. நாங்கள் அவரை விட்டு விலகி சென்றதும்         இல்லை.
     9.   பிற ஆசிரியர்கள் அடித்தால் , காரணம் தெரிந்து அந்த ஆசிரியரிடம்       உங்களுக்கு ஆதரவாக பேசி, அடிக்க வேண்டாம் என எடுத்து             கூறுவார்.
     10. மாணவர்கள் உடல்நலக்குறைவால் விடுப்பு எடுத்தால், வீட்டிற்கு          வந்து நலம் விசாரித்து செல்வார்.
     11. வகுப்பில் உள்ள ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வார்.
     12. பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருப்பார். தலைமையாசிரியர்      தவறான முடிவு எடுத்திருந்தால்,அத்தவற்றை சுட்டிக்காட்டுவார்.
     13. பாட குறிப்பேடுகளை அன்றே திருத்தம் செய்து தருவார். அன்றைய        வீட்டுப்பாடத்தை அன்றே கையொப்பமிட்டு தருவார்.
    14.  2,4 கோடு நோட்டுக்களில் தானே எழுதி தருவார். எழுத்தை திருத்தம்     செய்ய அறிவுரை கூறுவார்.
    15.  எங்கள் பள்ளியில் எல்லா மாணவர்களுக்கும் அவரை பிடிக்கும் .
    16. வகுப்பறையில் செல் போன் பேசியதில்லை. அல்லது செல்போன்         பள்ளிக்கு கொண்டு வர மாட்டார்.
   17. மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யாவிட்டால், துரத்தி துரத்தி பிரம்பால்     அடிக்கமாட்டார். முட்டிப் போட்டு வகுப்புக்கு வெளியில் வீட்டுப்பாடம்     செய்ய சொல்ல மாட்டார்.
    18. மாதம் இருமுறை பெற்றோர்களை அழைத்து பேசுவார். மாணவர்         முன்னேற்றத்திற்கு பாடுபடுவார்.
    19. இவர் வகுப்பு எடுப்பதை எல்லா மாணவர்களும் விரும்புவர்.
  20.கரும்பலகையில் எங்களை எழுதுவற்கு அனுமதிப்பார். ஆனால்,           கேள்வி பதில் போன்றவற்றை அவரே எழுதிப்போட்டு சொல்லிக்         கொடுப்பார்.

சரி தாயாராகுங்கள் ! இதில் எத்தனை சரி என பார்க்கவும். 15க்கு மேல் வாங்கினால் உண்மையில் அவர் சிறந்த ஆசிரியர்.ஆசிரிய பணியை நேசிப்பவர்.  10-15 மார்க் வாங்கினால் சுமாரான ஆசிரியர். 5- 10 மதிப்பெண் எடுத்தால் பித்தமில்லாமல் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர். 0-5 உண்மையிலே ஆசிரியராக வேலைப்பார்க்க தகுதியற்றவரிடம் படித்துள்ளோம் .
மார்க் போட்டால் மட்டும் போதாது, போனும் போடணும் சிறந்த ஆசிரியருக்கு !

எல்லா ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தின வாழ்த்துக்கள்..  

Tuesday, September 3, 2013

தலைவா ....ஒரு கலாச்சார சீரழிவு...!

     எங்கே இருக்கிறோம் நாம் ! பல்லாயிரம் ஆண்டுகள் குடும்பங்களாக வாழ்ந்த  நம் வாழ்க்கை, வாழ்வை இயக்கிய சமயம் , அதனை தொடர்ந்து நாம் பேசிய மொழி ,  மொழி வாயிலாக நாம் பரிமாறிய மரபு , அதன் தொடர்ச்சியால் உருவான பண்பாடு என அனைத்தையும் நாம் மறந்து வாழ்கிறோம். நவீன உலக உருவாக்கத்தில் நாம் நாத்திகனாக மாறி , கடவுளை சபித்து, அல்லது அறிவியலில் பெயரால் மதத்தை மறுத்து பேசி , அடையாளத்தை மாற்றி , அழிந்து கொண்டிருக்கிறோம். அதற்காக நான் மதவாதத்தை ஆதரிப்பவன் என்று நீங்கள் நம்பினால் , அந்த புள்ளியில் இருந்து நான் விலகி சென்று விட நேரிடும்.

    இந்த மண்ணின் வாசனையை நாம் மறந்து திரிகிறோம். நாடு கடந்து பொருள் சேர்க்கிறோம். இருப்பினும் இருப்பை விட்டு விட முடியாமல் தவிக்கிறோம். இந்த தவிப்பிற்கும் பிரிதலுக்கும் நடுவில் நம் மண்ணின் மரபுகள் இன்று புதைய தொடங்கியுள்ளன. பல ஊர் திருவிழாக்கள் நம் மரபின் வெளிப்பாடாக, பண்பாட்டின் எச்சமாக இருந்தன. அவைகள் இன்று அருகிவிட்டன். சுருங்கிய குறிகள் ,  கலவிக்கு ஏற்றதல்ல. தனிக்குடும்பங்களாய் சுருங்கி விட்ட பின் , திருவிழாக்கள் அதனைத் தொடர்ந்த கொண்டாட்டங்கள் குறைந்து விட்டன. நாம் நம் மரபுகளையும் , பண்புகளையும் மறந்து, காசுக்காக உறவுகளை துறந்து வாழ்கிறோம். நம் ஊர் தெருக்களில் திரிந்தாலும் களைப்புடன் ஒடுங்கிப்போகிறோம். இயந்திர வாழ்க்கையில் நாம் நம் அடையாளத்தை துரந்து, நம் பழமையை இழந்து , எதையோ தேடுவதாக கருதி நம்மை நாமே புதைத்துக் கொண்டிருக்கிறோம்.

       இன்று அகராதியில் புதிய வார்த்தைகளை தேடிச் செல்ல வேண்டிய நிலையுள்ளது. தமிழில் தெருக்களில் சிறார்கள் பேசும் மொழியை ஆய்வு செய்து பாருங்கள் . அத்தனையும் அபத்தங்கள். மொழிக்கான களங்கம். அதற்கான அர்த்தத்தை தேடி சென்றால் நமக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது. இதனை எந்த வகை நவீனத்தில் சேர்ப்பது. தயவு செய்து உங்கள் குடும்ப சிறுவர்கள் நூற்றில் எத்தனை பேர் நூறு வார்த்தைகளில் எத்தனையான இவ்வகை அபத்த வார்த்தைகளை பேசுகிறார்கள் என்று ஆய்வு செய்யுங்கள் . அப்போது தான் என் ஆதங்கம் புரிய வரும்.

      “அடுத்தவன் ஆட்டோவுக்கு ஆயுத பூஜை போடதடா” போன்ற இரட்டை அர்த்த படங்கள் நமக்கு எந்த வகையான மொழிச்சார்ந்த அறிவைத் தேடித்தரும்? கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கும்? இப்படிப்பட்ட அபத்த வசனங்கள் நிறைந்த படங்கள் வெளிவரவில்லையே என உயிரை மாய்க்கும் இளசுகளை என்ன வென்று சொல்வது!  அதை விட அதற்கு அப்படத்தின் கதா நாயகன் எதுவும் வருத்தம் தெரிவிக்க வில்லையே என குரல் கொடுக்கும் கூட்டம்  தனி. நாம் எந்த பாதையை தேர்ந்தெடுத்து வாழ்கிறோம். புரியவில்லை. ஆனால், இச்செயல் குறித்து அப்படத்தின் கதாநயகனின் மொளனம் எனக்கு பிடித்திருக்கிறது. இவ்விசயத்தில் அப்படித்தான் நடக்க வேண்டும் . அவரின் எந்த ஆதங்கமும் மற்றவனுக்கு தூண்டுகோலாக இருந்து விடக்கூடாது. சபாஷ் சொல்ல தோன்றுகிறது. படத்தில் தலைவனோ என்னவோ தெரியாது . நிஜ வாழ்வில் தலைவனாகி போனான்.

     கூட்டுக்குடும்ப வாழ்வை நாம் இழந்த நாளிலே , நம் மரபும் நம் தொப்புள் கொடிப்போல அறுந்து விட்டது. நாம் நம் பெற்றோர்களை முதியோர் இல்லங்களை தேடிப்பிடித்து அமர செய்த அன்றே,  பால் குடியை நிறுத்தியது போல நம் பண்பாட்டினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தி, சத்து இழந்த சமூக அமைப்பை உருவாக்கி விட்டோம். இதன் தொடர்ச்சி கலவரம், வன்முறை,  கொலை, கொள்ளை, கற்பழிப்பு என  நீள்கிறது.
(தோ.ப வுடன் நான்... பண்பாட்டு அசைவுகள் நூலுக்கு சொந்தக்காரர்)

     இன்று இரவு 9.30 வாக்கில் அய்யர் பங்களா சந்திப்பில் ஒரு எஸ்.ஐயை இருவர்  போதையில் போட்டு துவைத்து விட்டனர். பின் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து அதனை தடுத்து நிறுத்தினர். எதுவுமே செய்யாமல், அவர்களுடன் வந்த ஒரு மாணவனை பொது மக்கள் மடக்கி பிடிக்க, அவனை போலீஸ் (வந்து) மனிதாபிமானம் இன்றி நடுரோட்டில் பொது மக்கள் மத்தியில் துவைக்க தொடங்கினர். என்ன அபத்தம் ! அவன் சாட்சி மட்டுமே. அவனை வைத்து பிறரை பிடிக்கலாம். அதற்காக பிறருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக எல்லோரும் வந்து வதைப்பது எந்த நாகரீகமான செயல் புரிய வில்லை. பொது மக்களில் ஒருவர் என்ன பிரச்சனை என மாட்டியவனிடம் கேட்க , போலீஸ் காரர் சாதிய சொல்லி வஞ்சான் அதனால் சண்டை ஏற்பட்டதாம்.

      அட என்னத்த சொல்ல.. மனம் நொருங்கி வெளியேறினேன். இருப்பினும் என்னால் பிறரைப்போல இயங்க முடியவில்லை. யாரைச்சாடுவது. எதைச்சாடுவது. பண்புகளும் பாசங்களும் இன்றி தவிக்கும் தமிழ் சமூகத்தில் சாராய ஆறு ஓடி , சீரழிக்கிறது. எதையாவது மறக்க நாமும் சாக்கடையில் மூழ்குவோம் என்றால் , அந்த கன்றாவி குடி பழக்கமும் கிடையாது.

       வேலியே பயிரை மேய்கிறது. அதே நேரத்தில் பயிர்கள் சாதியப் பெயரால் வேலிகளையே தின்று வளர துடிப்பதையும் என்னால் சகிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் நம்மிடம் பெரியவர்கள் இல்லாமல் இருப்பது மட்டுமே காரணமாக தெரிகிறது.  நகர வாழ்வின் நெருக்கடியில் என்னை இழந்து கரைந்து வீடு அடைந்த போது தூக்கமின்றி , சமூகத்தின் அவலைத்தை சிந்தித்து நித்தம் மடிகிறேன் தூக்கம் இழந்து !இந்த புலம்பல் மூலம் பாரத்தை இறக்கி வைத்த பெரு அமைதியில் கண்களை மூடி சாகிறேன். விடியல் நல்லதை தரட்டும். நல்ல பண்பாட்டை உருவாக்கட்டும்.     

Monday, September 2, 2013

கன்னத்தில் முத்தமிட்டாள்...!பதிவர் சந்திப்பில் நிகழ்ந்தவை.

தூறல் போட ஆரம்பித்து  இருந்தது. இந்த தூறல் நோற்றோ தொடங்கியது. இது எப்படியும் வலுத்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது அது சோவ் என்று கொட்ட தொடங்கியது . அட நனைந்து போய் விட்டேன். வெகு நாள் ஆகிவிட்டதல்லவா..! யாருக்கு தான் ஆசையிருக்காது.  அதுவும் அன்பு மழையில் நனைவதற்கு.  நல்ல சகுணம் பார்த்து நெட்டை திறந்து, இரயிலுக்கு முன்  பதிவு செய்து, என்னை அன்புடன் அழைத்து சென்ற தமிழ்வாசி மழைக்கான இடி முழக்கம்.


இரயில் திண்டுக்கலை தொட்டதும் மின்னியது தனப்பாலாய்.. ஹாய் என சிரித்த முகத்தோடு வாழ்த்துக்கள் தெரிவித்து தூற ஆரம்பித்தது. கோணங்கியின் மதினிமார் கதைகள் அசைப்போட்ட படி , பல மதினிமார்களை நோட்டமிட்டு நகர்ந்தது இரயில் . இரவு பணியின் அயர்ச்சியில் உறங்க துடித்த தழிழ்வாசியின் கண்களை அயரச்செய்யாமல் தொடர்ந்து அலறிய அலைப்பேசியில் பட்டிக்காட்டான், ஸ்கூல் பையன், நாய்நக்ஸ் என அரட்டையுடன் வலுத்த மழை மதியம் எங்களை நனைத்தது.

சங்கவி, ராஜா, அட ஏகப்பட்ட சரவணங்க பாஸ்.. இப்படி அன்புமழையில் நனைந்த போது, அட சங்கவி புத்தகம் வெளியிட அகநாழி வாசு கடைக்கு செல்ல முற்பட என் மனசு மணிஜி வாசுவை நோக்கி பயணப்பட்டது. மதுமிதா எனக்கு ஸ்கூல் பையனை நியமித்து அவரை சைதாப்பேட்டையில் வாசு கடையில் விட சொல்ல... கே ஆர் பி செந்தில் அட நான் அங்கு தான் செல்கிறேன் வாருங்கள் என ஸ்கூல் பையனை இந்த ஆசிரியருக்கு உதவ வேண்ட , அவர்களை பின் தொடர்ந்தோம். ஸ்கூல் பையனும் தலைமையாசிரியர் என்று தெரிந்தவுடன் மிகவும் பணிவுடன் நடக்க தொடங்கினார். ( ஆசிரியர் என்று தெரிந்து தான் ஸ்கூல் பையனை எனக்கு உதவிக்கு அனுப்பினாரோ...!)  அன்பு மழையில் அவரின் வாகனம் பறந்தது.

பாலங்கள் தன் பாடியை காட்டி ஆங்காங்கு இன்னும் முழுமையாக முடிக்காப்படாமல் அவதிக் கொடுக்க ... நெருக்கம் நிறைந்த சென்னை சந்துகளை கடந்தோம்.  மோகன் குமாரின் புத்தகம் வெளியிட , ஜாக்கி சேகர்,கேபிள் சங்கர், மணி ஜி, சரவணக்குமார், வாமுகோமு, அதிஷா , பத்மா, தாமோதர் சந்துரு, வால்பையன்  என அன்பு நெஞ்சங்கள் குழுமியிருக்க... வாசு ஒரு படி மேலே போய் இந்த நிகழ்வுக்கு மதுரை சரவணன் வந்தது பெருமையாக இருக்கிறது என அன்பை கொட்டி பொருமழையில் நனைய வைத்தார்.

மறுநாள் சொல்ல தேவையில்லை அத்தனை பதிவுகள் இரண்டு நாளில் படித்திருப்பீர்கள். அது என்னப்பா ஒரு குடும்பமே பதிவு எழுதுகிறார்கள் என ஆச்சரியப்படுத்தினார்கள் டெல்லியிலிருந்து வந்து. ...! அப்போது என் மனைவி , மக்கள் கண் முன் வந்து மறைந்தார்கள். அந்த வகையில் எனக்கு எப்போதும் என் இரண்டு மச்சினன்களும் எழுத ஆதரவு அளிப்பது எனக்கு என் பணிக்கு வலு சேர்க்க உதவுவதை இத்தருணத்தில் நினைத்துப் பார்த்தேன். தருமி என் ஆசான் வழிக்காட்டி. என் போன்ற மாணவர்களுக்கு தோழன் எது சரி எது தவறு என்பதை தட்டி கேட்பவர், தட்டிக் கொடுத்து வேலை வாங்குபவர். தன்க்கு தெரிந்த விசயத்தை பற்றி மட்டும் எழுதி என்றும் அனைவர் மனதில் நிற்பவர். இன்றும் பாடம் கற்றுத்தருபவர். ஆம். தெரிந்ததை மட்டும் எழுது. ஆம் ... கல்வி . அது சார்பாக எழுதும்போது வரும் வரவேற்பு தனித்தான். பத்மா மேடம் என் வாசகர் என தன்னை என்னிடம் அறிமுகப்படுத்தியது நான் தொடர்ந்து எழுத கொடுத்த டானிக்காகவே கருதுகிறேன்.

அட என்ன மனிசனப்பா.. இந்த பாமரன் என்ன பேச்சு.. அட தம்பியை பற்றி சொல்லி எங்களையும் கண்ணீர் விட செய்தார். சிரிக்க செய்தார். சிந்திக்க செய்தார். ஒரு திரைப்படத்தை பார்த்த ஒரு திருப்தி. நிஜமான எழுத்துக்கள் தான் வெற்றிப்பெறும் என்பதற்கு அவரே சாட்சி.

90 டிகிரி மனதை நொருக்கியது. என்னைப் போன்றா ஆசானின் மனங்களில் ஒலித்துக் கொண்டிருந்க்கிறது.

அட சென்னை ... கடைசியில் போடா வெண்ணை என்று சொல்லியது. அந்த வட பழனி பஸ் ஸ்டாப் அடைந்த போது.. ஒரு ஆண் மகன். ஒரு பெண் அதுவும் குண்டு பெண். அவளை இவன் டிராப் செய்கிறான். ( அப்படி தான் அர்த்தம் கொள்ள வேண்டும்) அவள் அவன் கைகளை பற்றுகிறாள். அவன் சரி போய் வருகிறேன் என்கிறான். ஹெல்மெட் அணிந்திருந்தான். தலையில் அப்படியே இருந்தது. அவள் அவன் கைகளை முத்தமிடுகிறாள். கண்களில் பிரிவின் வலி தெரிகிறது. கூடியிருந்த மக்கள் எவரும் கண்டு கொள்ள வில்லை. என் வயிற்று எரிச்சல் மட்டும் தொடருகிறது. பக்கத்தில் தமிழ்வாசி வாசிக்க முடியாமல் திசையை திருப்புகிறார். அவள் இன்னும் கைகளை பிடித்து கொஞ்சம் நேரம் இருந்து விட்டு போ என்கிறாள். அவன் எதோ சொல்ல. அவள் அப்படியே அணைக்கிறாள் . மார்பு முட்டி (ஹக் செய்தல்) அவனை கன்னத்தில் முத்தமிடுகிறாள். அருகில் இருக்கும் போலீசும் இதை கண்டு கொள்ள வில்லை. அட வயிற்று எரிச்சல்.  அவனும் இப்போது அவளை ஹக் செய்கிறான். இருவரும் ஏக்கமுடன் பிரிகிறார்கள். அவளை நான் பார்க்கிறேன். அப்போது தான் அவள் என்னைப் பார்த்தாள்..... அட போங்கப்பா....

முதல் நாள் இரவு ஒன்பது மணி மேலிருக்கும் கமலா தியேட்டரில் இருந்து ஏவிம் ஸ்டுடியோ எதிரில் உள்ள லாட்ஜ்க்கு வந்தேன். பாவம் அத்தனை நெருக்கடி... இருசக்கர வாகனம் கூட நகர முடியாத ஒரு போக்குவரத்து இடஞ்சல்.  எத்தனை ஏக்கங்களுடன் தூக்கங்களுடன் குழந்தைகளை பிரிந்து கணவன் மனைவி இருவரும் பயணிக்கிறார்கள். இவர்கள் இரவில் உறங்கி , காலை பயணத்தை தொடரும் போது காணமல் போகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பட்டணத்தில் தொலைத்து விடுகிறார்கள்...

அன்பு மழையில் நனைந்தாலும்.. சென்னைவாசிகள் இருப்புக்கள் குறித்து கனத்த மனதுடன் பஸ் ஏறி வந்தேன்....!


 


Friday, August 30, 2013

மெட்ராஸ் கபே....!


அட மெட்ராஸ் பட்டணம் ....அங்க காபி சாப்பிடப் போகும் பற்றி நினைத்தாலே பல நினைவுகள் அள்ளி வருகின்றன.

  பசுமை நடை சார்பாக நடைப்பெற்ற புரட்சிகரமான 25 வது நடையில் நண்பர்களை  சந்தித்து உரையாடிய மகிழ்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. இந்த வாரம் அதை விட மிகப்பெரிய அளவில் நாம் நண்பர்களை சந்திக்க போகிறோம் எனும் பொழுது  மனதுக்குள் அளவில்லா மகிழ்ச்சி.

எங்கு சென்றாலும் அதில் மாணவர்களுக்கு எதாவது விசயம் இருக்குமா என்று தான் ஆராய்வேன். பல தடவை கீழக்குயில் குடிக்கு சென்று வந்திருக்கிறேன்.  ஒவ்வொரு தடவையும் செல்லும் போது புது புது விசயங்களை வெளிவிடுகிறது மலை. அது சேகரித்து வைத்துள்ள ரகசியங்களின் குவியல்கள் தான் மலையோ என எண்ணத் தோன்றுகிறது. அதோப் போல ஒவ்வொரு முறையும் பாடம் கற்றுத் தருகிறது. அதனால் தான் சமணர்கள் அங்கு பள்ளி நிறுவினார்களோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. மலைக்கு அடிவாரத்திலுள்ள ஆலம் விழுதுகளைப் போல வேர் பரப்பி தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது பல கதைகளை சொல்லி மலை.

“உயிர்குடி” என்பது தான் மருவி கீழக்குயில்குடி என்று இன்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் உள்ள செட்டிப்புடவு பகுதியில் உள்ள சிற்பம் செட்டியாரைப் போல இருப்பதால் இப்பகுதிக்கு செட்டிப் புடவு என பெயர் காரணம் வந்தது என்ற கதையை கேட்ட மாணவர்கள் பெயர்காரணங்கள் வரலாற்றில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருப்பார்கள். ( அன்று விழாவில் நிறைய பள்ளி மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்) .

 சில மன வருத்தங்கள். அந்த வாய்ப்பும் மெட்ரிக் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது. அரசு பள்ளி பொதுவாக சொன்னால் தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் வரவில்லையே என்பது மன நெருடலை தந்தது.  இருப்பினும் முத்துகிருஷ்ணன் குழுவினர் அளித்த உணவு அதை மறக்க செய்தது.

கீழக்குயில் குடி மறைந்து வைத்துள்ள கதைகள் ஏராளம். சமணர்களை சைவர்கள் கொன்றார்கள் என்பது ஒரு கதை தான் என்று பெரும் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டது இம்முறை மலை.  இம்மலை இப்போது உள்ளது போல மூன்று மடங்கு இருந்ததாம். நம் மாபியா மலைக்கள்ளர்கள் மன்னிக்கவும் மலைக்கொள்ளையர்கள் வந்த பிறகு இம்மலையை சுரண்ட தொடங்கினர். ஆனால், இது சமண மலை என்பதால் எந்த தீங்குக்கும் செவி மடுக்காமல் அப்படியே இருந்தது. இருந்தாலும் இக்கொள்ளையர்களின் சுரண்டல் தாங்கமல் ஒரு நாள் ஓ வென்று அழுததாம். அட அழுகை நிஜாமானது அல்ல.. அதாவது சுரண்டலின் தொடர்ச்சி மலை சரிந்தது. இதன் அலறல் வெடிச்சத்தம் போல பல மடங்கு அப்பகுதியில் எதிரொலித்துள்ளது. இதில் ஆச்சரியம் அங்கு வேலை பார்த்த கல்லுடைக்கும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் காயமின்றி உயிர் பிழைத்துள்ளனர். அட அன்று அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல். அதுவும் அக்குவாரியின் முதலாளி வேட்பாளர் என்பதால் அனைவருக்கும் விடுப்பு. ஆகவே அதை அறிந்து மலை அழுதுள்ளது. அனைவரின் உயிரையும் காத்துள்ளது. அட சமண மலையாச்சே பலி நடக்குமா?

இப்பேர்பட்ட சமணர்களை சைவ சமயத்தவர் கொன்று இருப்பார்களா? கேட்பது நம் வரலாற்று பேராசிரியர் சங்கர லிங்கம். அனல் புனல் வாதம் நிகழ்ந்து இருக்கலாம். கழுவேற்றம் ஒரு கட்டுக்கதையாக தான் இருக்க முடியும் என்கிறார்.

அட மெட்ராஸ் கபேன்னு தலைப்பை போட்டுட்டு.. என்ன கட்டுக்கதை சொல்லுற என கேட்டு விடாதிங்க... ?

இதுவும் மெட்ராஸ் கபே மாதிரி மெட்ராஸை கலக்குற விசயம் தானுங்க...!

நாளை நான் சென்னைக்கு செல்கிறேன் . அதுவும் தமிழ்வாசியுடன் . அங்கு தருமி அய்யா வருகிறார்கள். அவர்களுக்கு சீனா அய்யா இல்லாதது வருத்தமாம். இருந்தாலும் எங்கள மாதிரி பழசுகள் வருவதால் வருகிறாராம்.!

மலையோடு பேசியது போல பிளாக்கருடன் உரையாடலையும் பதிவிடுவேன். அது சரி இப்ப ரயிலுக்கு நேரமாச்சு... அட இப்ப படுத்தா தனுங்க காலையில வைகை எக்ஸ்பிரச பிடிக்க முடியும்.

எல்லோரும் ஒன்று கூடுவோம்.. மகிழ்வோம். கருத்துக்களை பகிர்வோம். தொடர்புகளை விரிவுபடுத்துவோம்.

Wednesday, August 28, 2013

நினைவுகளின் குளிர்காலம்

நினைவுகளின் குளிர்காலம்

இன்று இரவு எப்போதையும் விட
அதிக குளிராக யிருந்தது

உன் நினைவுகள் நிரம்பிய
போர்வையால் முடிக்கொண்டேன்.

அனல் காக்கும் வார்த்தைகள்
உஷ்ணத்தை ஏற்படுத்திடவே
போர்வை நீக்கி
உறங்க முற்படுகிறேன்

சுழலும் மின்விசிறி
உருவாக்கும் காற்று
உடலை தீண்டுகிறது உன்னைப்போல்
இப்போது
குளிரவுமில்லை
வேர்க்கவுமில்லை

ஆனால்
மின்விசிறியின்
சத்தம் மட்டும்
தொடர்ந்து கேட்கிறது
இந்த குளிர்கால இரவில்
உன் நினைவுகளில்
உறைந்து

விழித்திருக்கின்றேன்.

Tuesday, August 27, 2013

தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம்.

நான் செய்யும் சேவையானது ஒரே ஒரு துளிதான். ஆனால் தேவையோ ஒரு கடலளவு. அந்த ஒரு துளியை நான் சேர்க்காவிடில், கடலில் ஒரு துளி குறைந்து விடும்” - அன்னை தெரசா.

ஆதரவற்ற குழந்தைகள் , தொழு நோயாளிகள் , சாவின் விளிம்புகளில் ஆதரவற்று வாழும் ஜீவன்கள் , போர் அகதிகள், அனாதை குழந்தைகள் , போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள், தீராத நோய் கண்டவர்கள் , உடல் ஊனமுற்றோர், ஏழைகள்  என அனைவரும் நீலக்கரையிட்ட எளிய, கெட்டிப்புடவைக்கு சொந்தக்காரியான அன்னையின் அணைப்பில் கடலளவு சேவையை பெற்றவர்கள்.

யுகோஸ்லேவியாவில் உள்ள ஸ்கோப்ஜே என்ற ஊரில் 1910ம் ஆண்டு ஆகஸ்டு 27ல் பிறந்த அக்னேஸ் என்ற குழந்தை , முதல் உலகப்போரின் முடிந்த மூன்றாண்டுகளில் தந்தையை இழந்தவர், யுகேஸ்லோவியாவில் பள்ளிப்படிப்பை முடித்து, 18 வயதில் பெண் துறவியானவர் தான் நம் அன்னை தெரசா.  1946 செபடம்பர் 10 இந்தியாவின் இயமமலையின் கர்ஸியாங் பகுதியிலுள்ள தூய மேரி மடத்தில் சேர்ந்து, கல்கத்தாவின் சேரிப்பகுதியில் தன் தொண்டை ஆரம்பித்தார்.

பள்ளியில் புவியியல் ஆசிரியராக பணியினை தொடங்கிய அன்னை, பள்ளியின் எதிரில் உள்ள மோதிஜீல் பகுதியிலுள்ள ஏழை மக்களின் வாழ்வு நிலமையினை பார்த்து , அவர்களின் நோய் , வேலையின்மை, பசி, கல்வியற்று தெருக்களில் சுற்றி திரியும் குழந்தைகளின் நிலமையினை பார்த்து , மடத்தை விட்டு( அனுமதியுடன்) வெளியேறி, சேரி மக்களுடனே  வாழ்ந்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து, அப்பகுதியில் அவர்களுக்கு என்றே ஒரு பள்ளியை தொடங்கி தன் சேவையை துவக்கியவர் தான்  நம் அன்னை தெரசா.

மைக்கேல் கோம்ச் என்ற தர்ம சிந்தனையாளர் அளித்த ஒரு சிறிய அறையில் 1948ல் அன்னை தன் (அன்னை இல்லம்)அறக்கட்டளையை துவங்கினார். எண்டாலியில் தன்னிடம் பயின்ற சுபாஷிணிதாஸ் முதல் உதவியாளராக சேர்ந்து சேவைபுரிந்தார். இன்று மைக்கேல் தந்த இடம் தான் தலைமையகமாக செயல்படுகிறது.

அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து , தியானம், பிரார்த்தனை, கூட்டுவழிப்பாடு என நடத்தி முடித்து, எளிய உணவு அருந்திய பின், கல்கத்தாவின் குடிசைப்பகுதியில் பசியால் வாடும் மக்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை தேடி அழைத்து உதவி செய்வார்கள் அன்னையின் உதவியாளர்கள்.

கல்கத்தாவின் காளி கேயில் எதிரில் மாநகராட்சி ஒதுக்கிய வீட்டில் சாவும் தருவாயில் உள்ளவர்களுக்க்கான இல்லம் தொடங்கப்பட்டது. சாகும் தருவாயில் ஆதரவற்று நிற்கும் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளிப்பதன் மூலம், இறப்புக்கு முன் சிறிய மகிழ்ச்சி பெறுவதை அன்னை விரும்பினார். சாக விரும்பி வந்தவர்கள் மனம் மாறி மீண்டும் தங்கள் இல்லம் சென்றதும் உண்டு. நோயின் கொடுமையால் விடப்பட்டவர்கள் (காலரா, கால் புண் புரை) அன்னையின் அன்பில் , மருத்துவ சேவையில் குணமாகி சென்றுள்ளனர். இந்து மத எதிர்ப்பு குரல்கள் இவரின் சேவையை கண்டு ஒதுங்கி சென்றனர். காளி கோயில் பூசாரி காலரா நோயால் கைவிடப்பட்ட போது, அன்னை தன் அன்பால், மருத்துவ சேவையால் காப்பாற்றியதை அறிந்து , எதிர்த்தவர்கள் மனம் வருந்தினர்.

1972 ஜவஹர்லால் நேரு விருது, 1973 மத நல்லிணக்கத்துக்கான டெம்பிள்டன் விருது, 1974 ல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின், மாடர் எட் மஜிஸ்ட்ரா விருது, 1979 அமைதிக்கான நோபல் பரிசு , 1980 ல் இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது ஆகியவை அன்னை பெற்ற விருதுகள்.


தன்னலமற்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சேவைபுரிபவர்கள் அரிதாகி விட்ட இன்றைய கால கட்டத்தில், அன்னையின் வரலாற்றை விதைப்பதன் மூலம் , நம் குழந்தைகளிடத்தில் சேவை மனப்பான்மையுடன் அன்பு செய்ய கற்று தருவோம். தலைகளுக்காக உயிர்விடும் கலாச்சாரத்தை மாற்றி, வரியவர்களுக்கு உதவி செய்யும் தலைமுறையை உருவாக்குவோம். 

Monday, August 26, 2013

இது காதலப்பா..!

கண்ணில் கலந்து
கருத்தில் கலந்து
கவிதையில் கலந்து
எண்ணில் கலந்து
கருணையின்றி
விலகியதால்
அவள்
காதலியானாள்!
  

அரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆங்கில வழிக்கல்வி.

அரசு பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கும் ஆங்கில வழிக்கல்வி.
செயல்வழிக் கற்றல், சமச்சீர் கல்வி, பொதுப்பாடத்திட்டம் , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு , கலர் பென்சில் முதல் காலில் அணியும் செருப்பு வரை 16 வகையான இலவசங்கள் என தமிழக கல்வித் துறை அடுத்தடுத்து மாற்றங்களை நிகழ்த்தி பெற்றோர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறது. பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு எட்டாக்கனியாகவும், நடுத்தர மக்களை அதிக கட்டணங்களால் வாட்டி வதக்கிய ஆங்கிலவழிக் கல்வியை அரசுபள்ளிகளிலும் 2013-14 கல்வி ஆண்டு முதல் தொடங்க உத்தரவு வெளிட்டு, அதனை  நடைமுறைப்படுத்தியிருப்பது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியளித்தாலும், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
 தமிழக கல்வித்துறையில் சுதந்திரத்திற்கு பின் திட்டங்களும் மாற்றங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் கருப்பு காந்தி காமராசர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம் ,ஏழைக்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப உதவியது. மிகவும் பின் தங்கிய மக்கள் மதிய உணவுக்காவே பள்ளிக்கு அனுப்பினார்கள். மதிய உணவுத்திட்டத்தை மக்கள் திலகம் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் சத்துணவு திட்டமாக விரிவுப்படுத்தியதன் விளைவு, இன்றளவும் ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அதன் வரிசையில் இன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் அறிவித்துள்ள 16 வகையான இலவசங்கள் இடைநிற்றல் சதவீதத்தை குறைத்து, பள்ளிகளில் மாணவர்கள்  சேர்க்கை மற்றும் வருகை வீதத்தை உயர்த்தியுள்ளது. இந்த வரிசையில் ஆங்கில வழிக்கல்வி அறிவிப்பு பொதுமக்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்று அரசு பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி அவசியமா? நடைமுறை சாத்தியமா?  
ஒருபுறம் அரசு பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையில் இயங்கும் நிலையில் இத்திட்டம் வெற்றிப் பெறுமா? 100 மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு மாணவர் ஆசிரியர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. ஆங்கில வழிக்கல்விக்கு என்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்காத நிலையில் கற்பித்தல் தனியார் பள்ளிகளுக்கு இணையான ஒன்றாக இருக்குமா ? என்ற ஐயங்கள் பொது மக்களிடம் எழுந்துள்ளன.
தொடங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடப்புத்தகங்கள் இன்னும் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புலம்பித்தள்ளும் நிலையுள்ளது. இருப்பினும் பத்திரிக்கை செய்தி, பெற்றோர்களின் தொடர் படையெடுப்பால், போர்கால அடிப்படையில் ஆங்கில வழிக்கல்வி பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டதாக அறிய நேர்வது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது.
    தமிழ் வழிக்கல்விக்கு செயல்வழிக்கற்றல் முறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஆனால், செயல்வழிக்கற்றல் முறையில் பாடம் நடத்திட ஆங்கில வழியில் கற்றல் அட்டைகள் , லேடர்கள் , குழு அட்டைகள் இன்னும் கொடுக்கப்படவில்லை. எம்முறையில் பாடம் கற்பிப்பது , என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். தற்போதைய நிலையில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ்வழிக்கல்வி கூடங்களில் அம்மாணவர்களுடன் சேர்ந்தே அமர்ந்து பாடம் கற்கும் சூழல் நிலவுகிறது. ஆங்கில வழிக் கல்வி என்று பெயர் பலகை மட்டும் இருந்து எல்லாம் செயல்பாடுகளும் தமிழ் வழியில் நடைப்பெற்றால், இத்திட்டம் தொடர்ந்து நிலைக்குமா ? அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். தனியார் பள்ளிக்களுக்கு ஈடாக இதனை நடைமுறைப்படுத்த குறைகளை களைந்து , முதல்வர் கொண்டு வந்த இத்திட்டம் வெற்றிப் பெற முனைப்புடன் செயல்பட வேண்டும். அதற்கான ஆயுத்த வேலையாக  அதில் உள்ள குறைகளை  உடனடியாக நீக்கி , தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளுக்கு இணையாக செயல்திட்டங்களை தீட்ட வேண்டும். அப்போது தான் வரும் கல்வியாண்டில் பெற்றோர்கள் தனியார் ஆங்கில வழிக்கல்வி கூடங்களுக்கு டாட்டா சொல்ல முடியும். இக்குறைப்பாடுகளுக்காக ஆங்கில வழிக்கல்வியை அரசு பள்ளிகளில் புறக்கணிப்பதா? ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் சரியான முடிவா?    
    கட்டாய இலவசக்கல்வி சட்டம் அனுமதிக்கும் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு பல பள்ளிகளில் அமல்படுத்தாத நிலையில் , ஆங்கில வழிக்கல்வி பயில தங்கள் குழுந்தைகளுக்கு வாய்ப்பு இல்லையே என ஏங்கிக் கொண்டு இருந்த , தமிழக பெற்றோர்களின் நாடித்துடிப்பை தமிழக அரசு சரியாக புரிந்து வைத்ததனால் , அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி அறிவிப்பை வெளியிட்டுள்ளது சரியானதாகத் தான் தெரிகிறது.
 2012 -2013 ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 36.5 % மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் குறைந்துள்ளது. ஆனால்,. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 45% அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த ஆங்கில வழிக் கல்வி சரியான மாற்று ஏற்பாடாகத் தான் தெரிகிறது. இந்த கல்வியாண்டில் மூடும் முடிவில் இருந்த சில மாநகராட்சிப் பள்ளிகள் ஆங்கில வழிக்கற்பித்தல் வகுப்புகள் தொடங்கியதால் உயிர் பெற்றிருப்பதை கண்கூடக் காண முடிகிறது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடியுள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடைப்பெறும் நர்சரிப்பள்ளிகளுக்கு சாவுமணி அடிப்பதாக இந்த அறிவிப்பு உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

பொறியியல் ,மருத்துவம், நுண்ணுயிரி தொழில் நுட்பவியல், கணினி தொழில் நுட்பம் போன்ற உயர்கல்விகள் ஆங்கில வழி மூலம் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்கே சமூகத்தில் முன்னுரிமை அளிக்கப் படுகிறது. ஆங்கிலத்தில் பேசும் குழந்தைகளையே இச்சமூகம் பாராட்டுகிறது. ஏதாவது விழாக்களுக்கு செல்லும் போது , ஆங்கிலத்தில் உரையாற்றுபவரே (அரை குறையாக பேசினாலும் )சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறார் மற்றும் மதிக்கப்படுகிறார். உறவினர்கள் மத்தியிலும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத்தருவதாகவும் , உயர்த்துவதாகவும்  ஆங்கிலம் உள்ளது . ஒட்டு மொத்தப் பெற்றோர்களும் ஆங்கிலவழிக்கல்வியை எதிர்நோக்கியிருந்த தருணத்தில் , அரசின் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விக்கான அறிவிப்பு சமூக எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதாகவே உள்ளது.

சமூக ஆர்வலர்கள் , கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்  இப்பார்வையிலிருந்து சற்று விலகி நிற்கிறார்கள். இதுவரை அமைக்கப்பட்ட அனைத்து கல்விக்குழுக்களும் (கோத்தாரி கமிட்டி, ஏ.எல் முதலியார் கமிட்டி, வி.சி. குழந்தைச்சாமி கமிட்டி போன்ற பல) தாய் மொழி வழிக்கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. கட்டாய இலவச கல்விச்சட்டமும் விதி 29ல் 2(எஃப்)  தாய்வழிக்கல்விக்கு ஆதரவாக உள்ளது. ஏனெனில் தாய் வழிக்கல்வி மட்டுமே மாணவனின் புரிதல் தன்மையை அதிகரித்து கற்றல் அடைவை முழுமையாக பூர்த்தி செய்ய உதவுவதுடன் அவனின் தனித்தன்மையை வெளிப்படுத்த காரணமாகிறது. தாய்மொழி வழிச் சிந்தனை அவனுக்கு வளமான வாழ்வை தொழிலை ஏற்படுத்திக்கொடுக்கும் . முன்னோறிய நாடுகளான ஜப்பான், சீனா போன்றவை தாய்மொழிக் கல்வியை பின்பற்றுபவை. ஆங்கிலம் என்ற மொழியை பயன்பாட்டுத் தேவைக்காக கற்கலாம். மொழிவழிக் கல்வி என்பதை அனைத்து கல்வியாளர்களும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றனர். 
தாய் மொழி வழிக்கல்வி ஒரு புறம் இருக்கட்டும், உலகமையமாக்கலில் எதிர்நீச்சல் போடவும் , வருங்காலத்தில் ஏற்பட உள்ள போட்டிகளை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் ஆங்கிலம் அவசியமானதாகி விட்டதால், ஆங்கிலவழிக்கல்வியை எதிர்ப்பது நியாயமில்லை. என்றாலும் நம் குழந்தைகளுக்கு தமிழ் மொழி கல்வியில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் பயின்ற டி.இ.டி ( டிப்ளமோ இன் டீச்சர் எஜீகேஷன் ) தமிழ் வழியில் கற்றுத்தரப்பட்டது. தமிழ்வழியில் பயின்ற மொழிப்புலமை இல்லாத அவர்களால் எப்படி ஆங்கிலவழியில் கற்றுத்தர முடியும்? அவர்களிடம் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கும் ஆங்கில மொழிப்புலமை இருக்குமா ? இப்படி இருக்க அரசின் இந்த திட்டம் வெற்றிப்பெறுமா? நாளடைவில் பெற்றோர்கள் மொழிப்புலமையை வெளிப்படுத்தும், மொழிப்புரிதலை ஏற்படுத்தும் தனியார் பள்ளிகளையே நாடிச்செல்லும் சூழல் உருவாகுமல்லவா?! .
இக்குறையை போக்க அரசு ஒன்று முதல் பன்னிரெண்டு வரை ஆங்கில வழிக்கல்விமுறையில் பயின்று டி.இ.டி முடித்தவர்களை தற்போது தொடங்கும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளில் நியமிக்க வேண்டும். தற்போது பணியில் அவ்வாறான ஆசிரியர்கள் இருப்பின் அவர்களை ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளில் ஆசிரியர்களாக, தலைமையாசிரியராக அவர்களை நியமிக்கலாம். தனியார் பள்ளிக்களுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் மூலம் தற்போது தொடங்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வி அரசு பள்ளிகளில் அழிந்து போகாமல் பாதுக்காக்கலாம். 

அசர் அறிக்கை தெரிவிக்கும், மோசமான நிலையான ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன் 5ம் வகுப்பு மணவர்களில் தமிழ்நாட்டில் 19 சதவீதம் என்ற நிலை மாறி அரசு பள்ளிகளில் வாசிப்பு திறனை மேம்படுத்துதல் மூலம், அரசு பள்ளிகள் பெற்றோரின் நம்பிக்கையை பெறலாம். அதுமட்டுமல்ல கற்பித்தல் முறையில் முழுமையான மாற்றத்தை கொண்டு வருதல் வேண்டும்.. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயல்வழிக்கற்றல் முறையை தீவிரமாக நடை முறைப்படுத்துதல் மூலமாக அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி பொது மக்களிடம் நற்பெயர் சம்பாதிப்பதன் மூலம் அரசு நடத்தும் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளில் எதிர்காலத்தில் கூட்டம் நிரம்பலாம்.   

பல இலட்சக்கனக்கான கிராமப்புற மாணவர்களுக்கும், பொருளாதர சூழலில் பின்தங்கிய மாணவர்களுக்கும் ஏக்கங்களை உருவாக்கியிருந்த ஆங்கில வழிக்கல்வி எல்லா காலங்களிலும் சிறப்பாக நடைப்பெறவும் கிடைக்கவும்  கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் நம் ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிப்போம். காலத்தின் கட்டாயமாம் ஆங்கிலவழிக் கல்விக்கு ஆதரவு தெரிவிப்போம். 

( இந்த கட்டுரை ஹுமன் ரைட்ஸ் டூடே யில் ஆகஸ்ட் மாதம் வெளிவந்துள்ளது) 

Saturday, March 23, 2013

அப்பாவ எனக்கு பிடிக்காது..!


இரண்டு நாட்களுக்கு முன் குழந்தைகளை ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என அலுவல் வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு  வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப்பில் தெரிந்த முகம் கொண்டவர் போல இருந்த நபர் கை காட்டி லிப்ட் கேட்கவே , அந்த அவசரத்திலும் நான் வண்டியை நிறுத்தினேன். அதற்குள் லிப்ட் கேட்ட நபர் ஓடி வந்தார். நான் நினைத்த மாதிரி அருகில் வந்த போது அவர் தெரிந்த முகமாயில்லை. அருகில் வந்தவர்(மிகவும் இளைமையாக இருந்தான்) , தனக்கு உடம்புக்கு முடியவில்லை என்றும் அடுத்த ஸ்டாப் ஆத்திக்குளம் போலீஸ் பீட் அருகில் நிறுத்தினால் புண்ணியமாக போகும் எனவும்  கெஞ்சவே , நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.

அதுவரையிலும் எனக்கு தெரியாமல் வைத்திருந்த சிக்ரெட் துண்டை என்னிடம் காட்டி , சாரி சார், என தூக்கி கீழே போட்டான். சரி உட்காருங்கள் என பின் இருக்கையில் அமர வைத்தேன். வண்டி நகரத்தொடங்கியது. சாராயவாடை அடிக்கவே , தண்ணி அடிச்சிருக்கியா? என்றேன். லைட்டா சார். உடம்புக்கு என்ன செய்யுது? அப்புறம் தண்ணி அடிச்சிருக்க? தண்ணி அடிச்சதுனால தான் சார் பிரச்சனையே. ஆனாலும் நிறுத்த முடியல. எனக்கு லிவர் வீக்கம் இருக்கு . சலம் வச்சுருக்காம் என குண்டை தூக்கி போட்டான். உனக்கு வயசு என்ன? இருபத்து ஐந்து. லிவர் கெட்டு போச்சுன்னு சொல்லுற அப்புறம் இப்படி குடிக்கலாமா? இல்ல சார் ரெம்ப முடியாம செத்து பொழச்சேன் போன வருசம்.நடுவில சுத்தமா  குடிக்கிறத நிப்பாட்டிட்டேன். போன மாசம் போல ஐயப்பனுக்கு மாலை போட்டேன் . உடம்பு நல்ல இருக்கிற மாதிரி தெரிஞ்சுச்சு…. அதுனால லைட்டா தண்ணி அடிச்சேன்..அது நாலு அஞ்சு நாள தொடரவே வயிறு வலிச்சு ஆஸ்பத்திரியில சேர்ந்தேன். திரும்ப லிவர் கெட்டு போச்சுன்னு சொல்லி ஆஸ்பத்திரியில தங்க வச்சுட்டாங்க.. நேத்து தான் ஆஸ்பத்திரியில இருந்து வந்தேன். நடக்க முடியல.. அதான் லிப்ட் கேட்டேன் என்றான். என்ன வேலை செய்ற? தச்சு வேலை. பில்டிங்குக்கு கதவு, ஜன்னல் செய்து மாட்டிற வேலை. நல்ல வருமானத்தை சேத்து வைக்கலாமே .. ஏன் குடிக்குற? பாழா போன குடியை நிறுத்த முடியல… சார் ....இங்க தான் நிறுத்துங்க என இறங்கிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்தேன். அனைவரும் கோவில் செல்ல தயாரக இருந்தனர்.  லிப்ட் கேட்டவன் இளம் வயதில் சாராயம் அடித்து கெட்டு போன கதையை சொல்லி வருத்தப்பட்டேன் . என் மனைவி இப்படி தான் ஆறாவயல் சித்தப்பா குடித்து குடல் வெந்து போய் ஆஸ்பத்திரியில கிடக்கிறார்… அவரை போய் பார்க்க போகணும் . அவரும் மில்லில கூலி வேலை பார்க்கிறார். கிடைக்கிற வருமானத்தை இப்படி குடிச்சே அழிக்கிறார் என ஆதங்கப் பட்டு கொண்டார்.

அதற்குள் என் மாமனார் தபால் தந்தி நகரில் ஆட்சி வீட்டிற்கு அருகில் உள்ள இளைஞன் தண்ணி அடித்து இறந்து விட்டான் அவன் மனைவி ரெம்ப கொஞ்ச வயசு என தன் தரப்புக்கு புலம்பி கொட்டினார்.

அரசு அதிகப்படியான வருவாயை டாஸ்மார்க் வருமானம் மூலம் ஈட்டி, அதனைக் கொண்டு நல்ல திட்டங்களை உருவாக்குகிறது என்பது  கேட்பதற்கு நல்ல விசயமாக இருந்தாலும், இந்த நல்ல நலத்திட்டங்களை அனுபவிக்க ஆட்கள் வேண்டுமே..! திட்டங்களின் பலனை அடையாமலே அல்லது அனுபவிக்கும் முன்னரே தண்ணி அடித்து அடித்து அல்பாய்சில் போய் விடுவார்கள் போலத் தெரிகிறதே..!


வைகோ போன்றோர் டாஸ்மார்க் எதிராக குரல் கொடுப்பது மனசுக்கு ஆறுதல் அளித்தாலும், மதுவிலக்கு என்பது சாத்தியமா? என சிந்திக்க தூண்டுகிறது. கடந்த பத்து வருடங்களாக நல்ல பச்சை லைட்டை போட்டு ஆட்களை கவர்ந்து, சாராயத்திற்கு அடிமை படுத்திய பின் , மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு தொண்டன் எப்படி வருவான், வந்தாலும் எப்படி இருப்பான்?  சிந்திக்க வேண்டியது.
என் நண்பர் பெரியர் பேருந்து நிலையத்தில் நின்று இருந்தார். அப்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நோட்டீஸ் விநியோகித்த ஒரு கட்சியின் தொண்டன், நோட்டீஸ் கொடுத்து முடித்த பின் , டேய் வேலை முடிஞ்சுச்சு .. ஒரு கட்டிங்க போட்டுட்டு வீடு போய் சேர வேண்டியது தான் என்றானாம் என்று கூறியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மது நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு என்பதை நாம் உணர வேண்டும். அது நம் எதிர் காலத்தை பாதிக்கும் என்பதையும் அறிய வேண்டும். 

சமீபத்தில் இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பின் தர மதிப்பீட்டு பட்டியலில் கையொப்பம் பெற என் வகுப்பு மாணவர்களின் பெற்றோரை அழைத்து வர சொல்லியிருந்தேன். அனைத்து மாணவர்களும் தன் தந்தையை அழைத்து வந்து கையொப்பமிட போவதாக பேசிக் கொண்டனர். அப்போது ஒரு மாணவன் என்னிடம் வந்து சார் இதுல கையெழுத்துப் போட அப்பாவ தான் கூட்டிகிட்டு வரணுமா சார்? என கேட்டான். ஏண்டா அப்படி கேட்கிற…?இல்ல சார் எனக்கு அப்பாவ பிடிக்காது ? ஏன்டா அப்படி சொல்லுற?அப்படி யெல்லாம் சொல்லக்கூடாது? இல்ல சார்.. என் அப்பா சாய்ங்காலம் ஆச்சுன்னா.. தண்ணியபோட்டுகிட்டு சண்டை போடும்… ஊடால நான் சிக்கினேன் வச்சுக்கங்க.. என்ன தூக்கி போட்டு மிதிச்சுடும்.. எங்க அம்மா தான் பாவம் நித்தம் அடிவாங்கிட்டு கிடக்குது. அதுனால எனக்கு பிடிக்காது சார்.. அம்மாவை கூட்டிகிட்டு வர்றேன் என்றான்.  

இதுமாதிரி எத்தனை எத்தனை மாணவர்கள் மனதால் புழுங்கி சாகின்றனரோ…? எத்தனை மனைவிமார்கள் போதைஏறிய கணவனின் கொடுமைகளை தாங்கி தன் மகனுக்காக, குடும்பத்திற்காக உயிர்த்தெழுகின்றனரோ? அரசு இதற்கு நல்ல முடிவு எடுத்து மதுவிலக்கு அமுல் படுத்த வேண்டும்.   


Wednesday, March 20, 2013

புகார்களும் நடவடிக்கையும் புஸ்வானமும்


மாலை அண்ணா நகர் பகுதியில் என் நண்பர்  தனியார் உதவி பெறும் பள்ளியின் தாளாருமான அவரை சந்தித்து உரையாடினேன். அப்போது அவர் காலையில் நடந்த கூத்தை சொல்ல ஆரம்பித்தார். பேஸ்புக் என்று காதில் விழவே , எங்கள் அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த மருத்துவ துறையை சார்ந்த நண்பர் தானாகவே ஆஜராகி தன் ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தார்.

எதாவது ஒரு பேக் இமெயில் ஐடி வைத்து கொண்டு வாய்க்கு வந்ததை அரைகுறை ஆங்கிலத்தில் புலம்பி வைக்கிறார்கள். சில சமயம் தமிழில் அடிக்கிறார்கள். கலெக்டர் நல்ல எண்ணத்துடன் ஆரம்பித்த ஒன்றை பணி செய்ய விடாமல் தடுக்கும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர் என ஆதங்கத்துடன் சொல்ல ஆரம்பித்தார். நான் மருத்துவ துறையில் மருந்து கொடுக்கும் அதிகாரி . சரியான மருந்தை கொடுக்க வேண்டும் தவறினால் உயிர் பலி யாகி விடும் ஆபாயம் உள்ளது . ஆகவே கண்டித்து வேலை வாங்க வேண்டியுள்ளது. அதனை குறையாக தவறாக பேசுகிறேன் எனவும் , மிகவும் கண்டித்து வேலையை வாங்குவதால் மன உளைச்சலுக்கு ஆளாக நேருகிறது என குறையாக பேஸ்புக் கில் போட்டவுடன் எங்கள் டிடிக்கு கலெக்டர் போன் செய்து விசாரிக்கிறார். பின்பு எங்கள் உயர் அதிகாரியும் மறுப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதனால் அவரும் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுகிறது. இதே போல் நாம் அவர்கள் குறைகளை பேஸ்புக்கில் பதிவு செய்தால் யாரும் வேலை பார்க்க முடியாது 

 உண்மையாக வேலைபார்ப்பவர்களும் சோர்ந்து போய்விட நேரிடும். புகார்கள் , புகார்களுக்கு உடனடி நடவடிக்கை .
புகார்கள் அதிகப்படியான எண்ணிக்கை . அதிகப்படியான நடவடிக்கை என்பது மனதுக்கு சந்தோசம் கொடுத்தாலும், உண்மை தவறினால் தண்டனை , உண்மையாக இருந்தால் தண்டனை என இருந்தால் , பேஸ் புக் புகார் மனு என்பது நல்ல பயனுள்ள விசயமாக மாறும் வாய்ப்பு உள்ளது என்றார். அவர் பக்கமும் நியாயம் உள்ளதாகவே எனக்கு படுகிறது.

    டெங்கு காய்ச்சலில் போது உண்மையாகவே மெடிக்கல் லீவு போட்டு , அதன் அழுத்தத்தில் இருந்து தப்பிக்க நினைத்த மருத்துவரை கலெக்டர் பணி நீக்கம் செய்தார். ஆனால்  அந்த மருத்துவர் இப்போது அதே ஊரில் மருத்துவராக பணிபுரிகிறார். எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை. இதுவும் நடக்கிறது.  வாழ்நாள் முழுவதும் கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என உழைத்து , எதார்த்தமாக ஒரு நாள் அஜாக்கிரதையாக இருப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு எந்த ஆள் பழக்கமும் தெரியாது. யாரை பார்பது என்பதும் அறியாத காரணத்தால் சிக்கலில் இருந்து விடுபட தெரியாமல் தண்டனைக்கு ஆளாகிறார்கள். அப்படிப் பட்ட அப்பாவிகளை வதைக்க உருவானது தான் இந்த பேஸ்புக் புகார் பெட்டி என கூடுதல் தகவலையும் தெளித்து சென்றார்;

பள்ளி தாளாளரும் பள்ளி மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் , தவறினால் தன் நிர்வாகத்திலுள்ள வேறு பள்ளிக்கு மாற்றி விடுவேன் என எச்சரித்துள்ளார். வேறு பள்ளி என்பது மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆகவே வேலைக்கு பயந்து , பள்ளியில் தன்னை கொடுமை படுத்துகிறார்கள் . அமர ஆசனம் தருவதில்லை. பணம் வசூல் செய்கின்றனர் என பெங்களூரில் இருக்கும் தன் மகன் மூலம் புகார் அளித்துள்ளார். ஆசிரியர் பணி என்பது காலப்போக்கில்  தொழில் என உருவாகியுள்ளது வருத்தமளிக்கிறது. அன்று அதிகப்படியான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்பறை என்பதை ஆசிரியர்கள் சந்தோசமாக நினைப்பார்கள். தனக்கு கிடைத்த கொளரவமாக நினைப்பார்கள் இன்று அதிக்கப்படியான எண்ணிக்கை என்பது பணி சுமை யாகி விட்டது வெட்கக் கேடு. இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது மாத ஊதியத்திற்கு வருவாய் ஈட்டும் அரசு ஊத்தியோகமாக நினைக்கும் மனநிலையில் தான்  ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என இப்படிப்பட்ட குறைகளைக் கேட்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. 

வெகுஜனமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி, பொங்கல் போனஸ், ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு போன்றவற்றை பார்த்து புலம்புவதை அங்கிகரிக்க தோன்றுகிறது.  பணியாற்றும் நிர்வாகத்தினை குறை கூறுவதும் , அதனை புகாராக பதிவு செய்வதும் எப்படிப்பட்ட மனநிலையை கொண்டவர்களாக இருப்பார்கள் என எண்ணத்தோன்றுகிறது. உண்ட வீட்டிற்கு துரோகம் செய்வதற்கு சமம். அதை விட வேடிக்கை என்னவென்றால் புலி தானாக எலி வலையில் சிக்குவதைப் போல , புகார் அளித்த ஆசிரியர் முதலாவது ஆளாக வந்து நான் இப்பள்ளியில் சந்தோசமாக பணியாற்றுகிறேன் என எழுதி கொடுத்து தன் ராஜ விசுவாசத்தை தெரிவித்துள்ளார் என்பது தான்.

  புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மாவட்ட நிர்வாகமே , அது சார்ந்த துறையின் உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளும் போது துணிவின்றி, தங்கள் கோரிக்கைகளை உரிய அதிகாரிகளிடன் எடுத்துச் சொல்லி, தங்கள் குறையை போக்கிக் கொள்ள பயப்படுவதேன். எதற்காக இந்த புகார்.? எதற்காக அதிகாரிகள் தங்களின் அனைத்துப் பணியினையும் தள்ளி வைத்து , மனுவுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்? நடவடிக்கைக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு நல்கி அக்குறையினை களைய முயற்சித்த போதும் , நேரடி விசாரணையின் போது , மனுவுக்கு புறம்பாக பதில் தருவதேன்?  இதனால் அதிகாரிகளும் சலிப்பு தட்டிவிடுகிறது. பல உண்மையான மனுக்களும் புறம்தள்ளப்படுகின்றன. யாரை மிரட்டுவதற்காக இவை மேற்கொள்ளப்படுகின்றன? சிறிய அதிர்வு எல்லாவற்றையும் சரி செய்து விடுமா? புகார்தாரர்களே சிந்தியுங்கள். சிறந்த பேஸ்புக் திட்டத்தை ;உங்களின் மிரட்டலுக்கு பயன்படுத்தாதீர்கள்.


   போலி புகார்களை தவிர்த்து அதிகாரிகளை நியாயமான முறையில் பணியாற்ற விடுங்கள். நல்ல திட்டத்தை சிறப்பாக செயல்பட உண்மையான ஆதாரங்களுடன் , தைரியமாக அநியாங்களுக்கு எதிர்த்து நில்லுங்கள். உங்கள் பக்க நியாயங்களை எப்போதும் எந்த சூழலிலும் எடுத்துச் சொல்ல பின்வாங்கி விடாதீர்கள். இது நமக்கான திட்டம் , இதை நாமே பாழ் படுத்தி விடக்கூடாது. இப்படிப்பட்ட மாவட்ட அதிகாரிகள் , மாவட்ட கலெக்டர் கிடைப்பது அரிது . மீனாட்சி கிருபையால் நமக்கு தொடர்ந்து நல்ல அதிகார்கள் கிடைத்திருப்பதை தவறவிட்டு விடக்கூடாது.  

Sunday, March 17, 2013


 முருகதாஸ் தயாரிப்பில் ஒரு படம் வந்திருக்கு அதுல அவரு தம்பி நடிச்சுருக்கானாம்… பார்க்கவே ரெளடி மாதிரி தெரியிறான்..சண்டை படம் போல இருக்கு ..இருந்தாலும்  பார்க்கலாம் வர்றீய்யா என அழைத்த என் நண்பர் பாபுவின் அழைப்பை மறுக்காமல் படம் பார்க்க சென்றேன். தியேட்டர் பழனிஆறுமுகம் என்றதும் கொஞ்சம் யோசித்தேன். மதுரையில் தியேட்டர்கள் நவீனமாகிக் கொண்டு வருகிறது உண்மை என்பதை அங்கும் காண முடிந்தது.

    ஊரு வம்புக்கு போகாத பையனொருவன் , அடுத்தவருக்கு உதவி செய்தால், (அதுவும் கிரிமினல் குற்றங்களை தடுத்தால்) அவனுக்கு என்ன நேரிடும் என்பது தான் கதை. இன்னும் பழசா சொன்னால், தர்மம் காக்கும் ஒருவனை அதர்மம் அழிக்க நினைக்கிறது , தர்மம் வென்றதா? அதர்மம் அழிந்ததா? இது தான் கதை.


டைட்டில் கார்ட்டில் கொலை , கொள்ளை , கடத்தல் செய்திகள் அடங்கிய செய்திகளைக் காட்டி பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதே எதிர்ப்பார்புடன் மூவர் ஒருவரை கொலை செய்ய துடிப்பது போல காட்டி ஏன் என்ற எதிர்ப்பார்ப்புடன் நம்மை இருக்கையை நோக்கி  நகர்த்துகிறார்கள். பின் மெல்ல சீட்டில் சாய்வது உண்மை தான்.

  அட திலீபன் ஆட்டோகாரனாக முயற்சி எடுத்திருந்தாலும் செட்டாக வில்லை. முதல் படத்திலேயே ஆக்சன் நன்றாக வந்துள்ளது பாராட்ட வேண்டியது. காதல் காட்சிகளில் அவ்வளவாக பொருந்தாததற்கு காரணம், அவருக்கு பொருத்தமில்லா அஞ்சலியாக இருக்கலாம். ஆனால், அஞ்சலி பாத்திரத்தில் பொருந்திப் போகிறார் என்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான நடிப்பு நமக்கு முகம் சுளிக்க செய்கிறார். ஆங்கிலம் உதார் விடும் பார்டியாக வந்துள்ள அஞ்சலி ஓவர் பில்ட அப் விடுவது எரிச்சல் தருகிறது.

   தன்னிடம் வழிப்பறி செய்யும் சம்பத் அவனின் கூட்டாளிகளிடம் தன் பணத்தை திரும்ப கேட்டு அடித்தடியில் ஈடுப்பட்டு, அவர்களிடம் பணத்தை திரும்பப் பெறுவதால் அவர்களின் எதிர்ப்பை பெற்றுள்ளான் கதாநாயகன் திலீபன் என்றால் பரவாயில்லை. திலீபன் அடித்ததால் ரவுடி மார்க்கெட் சரிந்தது என்பது ஏற்க முடியவில்லை. அதே சமயம் தெருவில் டீக்கடையில் கொலை பற்றி பேச வாய்ப்பு உள்ளதா? லாஜிக் யோசிக்க வைக்கிறது. அது தவிர்த்து படம் பார்த்தால் விறு விறுப்பான படம் தான்.
சம்பத், ரவிமரியா, ஜெயபிரகாஷ், நண்டு ஜெகன் என அற்புதமான படைப்பாளிகளிடம் குறைந்த வேலை வாங்கப்பட்டுள்ளது. சரண்யா பொன்வண்ணன் அம்மா பாத்திரத்தில் பொருந்திப்போனாலும் இட்டிலியை அள்ளிக் கொட்டுவது ஒட்டவில்லை.

   அட நம்மை சுற்றி இவ்வளவு விசயங்கள் நடக்குதா ? என யோசிக்க வைக்கிறார் இயக்குநர் கின்ஸ்லி.  கதையின் முன்பாதியில் காட்டியுள்ள விறுவிறுப்பை கதையின் பிற்பாதியில் கொண்டு செல்லாதது ஏன் என்று தெரியவில்லை. நீண்ட க்ளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை படத்தின் முடிவு தெரிந்ததால் , அசதி ஏற்படுத்தி படத்தின் முன் பாதியின் விறுவிறுப்பை பேசவிடாமல் மறக்க செய்துவிடுகிறது. ஆர்.பி. குரு தேவ் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. பாடல்கள் ஹிட். கிப்ரான் இசை ஒ.கே. வசனம் மனதில் பல இடங்களில் ஒட்டிக் கொள்கிறது.

       படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ரசிக்கலாம்.

வத்திக்குச்சி கொஞ்சம் பதத்தது. இருந்தாலும் பத்திக்கொள்ளும்.  

Friday, March 15, 2013

குற்றம் எங்கே உள்ளது ? பதிலளியுங்கள் கல்வியாளர்களே!


கடந்த வாரம் கூர் நோக்கு இல்லம் சென்று இருந்தேன்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்துக் குழந்தைகளையும் படிக்க வைப்பதில் முழு முனைப்புடன் எல்லா வழிகளிலும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் படிப்பு தொடர உதவிகள் மேற்கொள்ளப்பபடுகின்றன. 

இத்திட்டத்தின் படி, மைனர் ஜெயில் எனப்படும் கூர் நோக்கு இல்லத்தில் சிறு குற்றங்கள் புரிந்து பெயிலில் வெளி செல்ல முடியாத குழந்தைகளின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காக தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியரை நியமித்து,  அவருக்கு சம்பளம் வழங்குவதும் ,தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தும் ஆசிரியர் கூர்நோக்கு இல்ல மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுக்கிறாரா என ஆய்வு செய்வதும் , அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாணவர்களுக்கு முறையானபடி கொடுக்கவும் அருகிலுள்ள பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டு , அதன் தலைமையாசிரியர் மூலம் அனைத்து செயல்களும் நடைப்பெறுகிறது.

இம்முறை என் பள்ளி மூலம் இச்செயல் பாடு நடைப்பெறுகிறது.இது சார்பாக முதல் முறையாக  கூர்நோக்கு இல்லம் சென்ற போது தனிச்செல்லில் நன்றாக வளர்ந்த மாணவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விசாரித்தேன். கிரிக்கெட் விளையாடும் போது கோபத்தில் மட்டையை வைத்து மண்டையில் அடித்ததால் , அடிப்பட்டவன் இறந்து விட்டதால், கொலை குற்றம் சாட்டப்பட்டு அடைக்கப்பட்டவர்கள் என  அறிந்தேன். ஏன் தனி செல்? என மீண்டும் என் கேள்வியின் அர்த்தத்திற்கான விடையை , இங்கிருந்து சுவர் ஏறி குதிச்சு ஓடிப்போயிட்டேன் அதான் என்ற , அவனின் பதிலில் இருந்து அறிந்துக் கொண்டேன்.

இம் முறை என்னுடன் வந்த மேற்பார்வையாளர் நீண்ட உரைக்கு பின் ஒரு மாணவனை எழுப்பி நீ என்ன தவறுக்காக வந்தாய் என்றார். திருடி விட்டேன் என்றான். அது தவறு என உணர்ந்து விட்டாயா? ம் என தலையாட்டினான். என்ன செய்தாய்? என்றார். மெடிக்கல் சாப்பில் 3000 ரூபாய் திருடினேன். உண்மை தான ? ஆமாம். எடுத்த காச போலீசுல கொடுத்துட்டேன். தப்பு செய்ய கூடாதில்லையா? ஆமா. உங்க அப்பா என்ன செய்கிறார்? அப்பா இல்ல சார். அம்மா? இருக்காங்க.. துணி தேய்ச்சு கொடுக்கிறாங்க. பார்த்தியா , அம்மா எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார் போலீஸ் உன்னை பிடிச்சுட்டு போனப்ப. சார் இவன் வகுப்பில முதல் மாணவன் . நல்லா படிப்பான் என்று ஆதரவாய் பேசினார் கூர் நோக்கு இல்லத்தின் மூதாய்.

பெற்றோர்களின் கவனிப்பு அற்ற குழந்தைகள் கோபத்தில் தவறு செய்து மாட்டியவர்கள், குடும்ப வறுமைக்காக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுவதை குறித்து மேற்பார்வையாளர் ஆதங்கப் பட்டுக் கொண்டார். 

திருட்டு  , கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றங்களுக்காக மட்டுமே கைதாகி இங்கு உள்ளனரோ என கேட்டேன். அதிர்ச்சி தரும் தகவலை தந்தார்கள். குடும்ப பகைக்காக கற்பழிப்பு வழக்கில் ஒரு சிறுவன் வந்துள்ளான். ஒருபுறம் உண்மையிலே பாலியல் குற்றங்கள் பெருகுவதை தடுக்க குரல் கொடுத்து வரும் சூழலில், கடுமையான சட்டங்கள், இது போன்ற சம்பவங்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ள குற்றமற்றவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தி விடுமோ? அவனும் நன்றாக படிப்பவனாம் என்பது எனக்கு மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

நேற்று மாலை செய்தி. தேர்வு அறையில் கணித வினாத்தாள் கடினம் என்பதால் மாடியில் இருந்து விழுந்து கை, கால் முறிந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள உசிலம்பட்டி சிறுவன்.
ஒருபுறம் கோபத்தில் தவறு செய்து விட்டு வாடும் சிறுவர்கள். மறுபுறம் இயலாமையால் , தன்னை தானே மாய்த்துக் கொள்ள நினைக்கும் சிறுவர்கள். தேர்வு எழுதும் போதே, இப்படி என்றால் ? தேர்வு முடிவுகள் வெளிவந்தால் , இயலாமையால் தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும் இம்மாணவர்களை நினைத்து பயம் கொள்ள வேண்டியுள்ளது. இவர்களை என்ன செய்வது?

நானும் கணிதத்தில் ஆறாம் வகுப்பில் முட்டை வாங்கியவன் தான் என்றால் நம்ப முடியவில்லை தானே. இருப்பினும் எனக்கு மனதைரியத்தை அன்றைய கல்வி முறை வழங்கியிருந்தது என்று தான் நினைக்கிறேன். அது மட்டுமல்ல என் தந்தையும் தாயும் அதற்காக என்னை அடிக்கவும் இல்லை, திட்டவுமில்லை. கவனமாக கணக்கு செய் நீயும் பிறரைப் போல நூறு மதிப்பெண் பெறுவாய் என்றனர். இருவரும் ஆசிரியர் என்பதால் இருக்கலாம். என்னுடைய கணக்கு ஆசிரியர் மட்டும் இருகைகளிலும் பிரம்பால் அடித்ததாக நினைவு இருக்கிறது. அந்த தேர்வுக்கு பின் எனக்கு முதல் வரிசை இருக்கை அளிக்கப்பட்டு, கரும்பலகையில் நானே கணக்குகள் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டு, தவறுகள் , பிழைகள் ஏற்படும் போது, அன்பால் அவைகள் திருத்தப்பட்டு, சரி செய்யப்பட்டு , அதன் தொடர்ச்சி, +2 வில் கணித குரூப்பை தேர்வு செய்ய தூண்டியிருந்தது. என் நினைவில் அச்சம்பவத்தை தவிர ஆசிரியர்கள் யாரும் அடித்ததாக நினைவு இல்லை.

தற்போது ஆசிரியர்கள் மத்தியில் மாணவர்கள் குறித்து அக்கறையில்லை என்று தான் நினைக்கிறேன். சமீபத்தில் ஆசிரியப் பயிற்றுனராக இருந்து , முதுகலையாசிரியரா சென்றுள்ள என் நண்பர் என்னிடம் குறைப்பட்டுக் கொண்டது என்னவென்றால், மாணவர்கள் படிப்பு குறித்து எவரும் அக்கறை கொள்வதில்லை. அது போல மாணவர்களும் ஆசிரியர்களுக்கு பயந்து நடக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லை. செய்திதாள் செய்திகளை சுட்டிக்காட்டி மிரட்டும் நிலையில் மாணவர்கள் போக்கு உள்ளது. தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களை தண்டிக்கும் கண்டிக்கும் திறன் அற்றவர்களாக எந்த வம்புகளிலும் சிக்காமல் காலத்தை தள்ளவே நினைக்கிறார்கள். பட்டதாரி , முது நிலை ஆசிரியர்கள் டியூசன் அமைத்து வருமானத்தை ஈட்டுவதில் தான் ஆர்வமாக உள்ளார்கள். பெற்றோர்களும் டியூசன் அனுப்பி தன் மகனை அதிக மதிப்பெண் எடுக்க வைக்கவே நினைக்கிறார்கள். பள்ளியில் நன்றாக ஆசிரியரை கற்பிக்கச் செய்யலாமே ? அதற்காக தானே ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர்ஆசிரியர் கழகம் உள்ளது. பெஆக மூலம் தலைமையாசிரியருக்கு ஆதரவு தெரிவித்து வகுப்பறையிலே அனைத்தையும் மாணவர்களுக்கு கற்று தர செய்யலாமே என்ற மனநிலை பெற்றோரிடம் இல்லாதது இவர்களின் பலம். +1 ல் ஆங்கிலத்தில் எளிய வார்த்தைகளைக் கூட வாசிக்க தெரியாத மாணவர்கள் அதிகம். இவர்கள் எப்படி தேர்ச்சி பெற்று வந்துள்ளார்கள் என்பது கூட விந்தையாக இருக்கிறது என்று ஆதங்கப்பட்டு பேசினார்.

சமீபத்தில் மதுரையில் ஆசிரியர்கள் கைது எதிரொலிக்கு பின், நடந்த பாலியல் குற்றங்கள் சார்ந்த கல்வி நிலைய தலைமையாசிரியர், கல்வி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் மாவட்ட உயர் அதிகாரி , சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் புரிந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்த போது, தொடக்க கல்வி துறையில் இருந்து பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களாக உள்ளது என்றும் , தொடக்க கல்வி ஆய்வு மேற்கொள்ளும் அதிர்காரிகள் , முக்கியமாக ஆண் ஆசிரியர்கள் மீது கெடிபிடியுடன் கண்காணிப்புடன் இருக்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் ,அரசாணை 121 அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி கையொப்பம் பெற்று பைல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்த  கல்வி அதிகாரி, தவறு செய்வதில் என்ன தொடக்க கல்வி , உயர்கல்வி என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.
      
இவைகள் எல்லாவற்றையும் அலசி ஆராயும் போது எங்கோ எதிலோ ஓட்டையுள்ளது தெளிவாக தெரிகிறது. அந்த ஓட்டை கல்வி முறையிலா, கற்பிப்பவர் மன நலன் பாதிப்பிலா, மாணவர்களின் அறிவு நிலைக்கு தகுந்த வாய்ப்புள்ள கல்வி இல்லாததாலா, விழுமியங்கள் குறைந்த கல்விமுறையா? நீங்கள் யோசியுங்கள் !முடிவுக்கு வாருங்கள் ! முடிந்தால் என் கமண்டு பெட்டியில் பதிவு செய்து செல்லுங்கள்.
( இனி தினம் இடுகைகள் வரும் …சூடான விவாதங்களுக்கு தயாரக இருங்கள் கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்பட இணைவோம்.)

Thursday, January 17, 2013

ந(க)ரமையமாதல்


ந(க)ரமையமாதல்
இருள் அப்பிய வீதிகள்
தீபாவளியை நினைவூட்டும்
பொட்டுல் வெடிகளின் சத்தம்
தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது
கைகளில் பேட்டுகள்
வண்ண வண்ண கலர்களில்
அனைவரும்
லியாண்டர் பயஸ் சானிய மிர்சாவாக
பந்துகளாய் சீரிப்பாய்கின்றன கொசுக்கள்
மலேரியா, சிக்குன் குன்யா , டெங்கு
என்று பரப்பிச் செல்கின்றன
விடிந்தும் விடியாமலும்
அங்காங்கே அலறல் சத்தம்
நகரமயமாதல் தந்த அன்பு பரிசு

Saturday, January 12, 2013

மக்களுக்காக வாழும் எழுத்தாளர்


எழுத்தாளர்களில் மிகவும் மாறுபட்டவர். யாரையும் சாடுவதில் எந்த தயக்கமும் காட்டாதவர். இதனாலே பலரின் மோசமான விமர்சனங்களுக்கு உட்படுபவர். இல்லை என்பதை இல்லை என்றும் , ருக்கு என்பதை இருக்கு என்றும் உண்மையான வாழ்க்கை வாழ்பவர். தன் நண்பர்கள், வாசகர்கள் மத்தியில் போலியாக வாழாமல் உண்மையாக வாழ்வதால் கோபத்தையும் பாசத்தையும் அபட்டமாக காட்டுபவர். இவர் வட்டத்தில் உண்மையான மனநிலையில் வாழ்வதால், இவரால் எதையும் கேட்க முடிகிறது . எதையும் தைரியமாக சொல்லவும் முடிகிறது. இதற்கு எதிர்மறையாளர்கள் வைத்திருக்கும் பெயர் பிச்சை. அதற்கும் பதில் அளிப்பவர்.

     காரிய சாமர்த்தியம் மிகுந்தவர்களில் இருந்து மாறுபட்டு , நிகழ்கால நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்து , தன் கருத்துக்களை யாரையும் சாராமல் , வேண்டியவர்கள் பக்கம் சாயாமல், தில்லாக , தான் தன் சார்ந்த சமூகத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற இலட்சியத்தை சுமந்து விமர்சன கட்டுரை எழுதுபவர் .

    உதயக்குமாரின் போராட்டம் நேர்மையானது, உண்மையானது, நாடகத்தன்மையற்றது என வக்காலத்து வாங்கும் எழுத்தாளார்கள் மத்தியில் , உதயக்குமாரின் போராட்டத்தை தோலுரித்துக்காட்டுகிறார், ‘சலவையாக்கப்பட்ட சிந்தனைகள்’ என்ற தன் கட்டுரையில் இவர்.
திரை விமர்சனம் என்றாலும் இந்த சினிமாவை என்னால் ஐந்து நிமிடம் கூட உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என பொட்டில் அறைந்த மாதிரி விமர்சிப்பவர். வாசகர் மனநிலை யறிந்து செயல் படுபவர்கள் மத்தியில் சமூக அக்கறை கொண்டு நடப்பவர். தனக்கென ஒரு வட்டத்தை (அரசியல் ) வகுத்து  செயல்படுபவர்கள் மத்தியில் எதிலும் சிக்காமல் , அரசை எதிர்ப்பவர் மட்டும் அல்ல, நல்ல கருத்துக்காக ஆதரிக்கவும் செய்பவர். முன்னாள் முதல்வரின் மகன் தன் தந்தைக்கு அவரின் மகனின் திருமணப் பத்திரிக்கையை கொடுப்பதை செய்தியாக்கிய போது கடுமையாக சாடியவர். எந்திரனை எந்திரிக்காத அளவு விமர்சனம் செய்தவர். இன்று தமிழக அரசின்  செயலுக்கு பாராட்டு தெரிவிப்பவர்.

    மக்களுக்காக வாழும் எழுத்தாளர் என்ற உயர்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவர் மனதை அரசு எதிர்ப்பு கொள்கையால் சலவை செய்யாமல், மக்கள் நல சிந்தனையால் சலவை செய்துள்ளதால், பிற எழுத்தாளர்களைப் பார்த்து  கேட்கிறார், “ எழுத்தாளர்கள் எப்போது விஞ்ஞானிகளாயினர்? “

     இன்று தினமலர் 13.1.2013 பக்கம் 9 ல் வந்துள்ள இவரின் கட்டுரையை படித்து பார்த்து இதுவரை நான் கூறிய எழுத்தாளர் யார் என்று அறிந்து கொள்ளுங்கள்.
  
     இரண்டாவது பாராவில் உள்ள சிவப்பு எழுத்துக்களை வரிசையாக சேர்த்தால் இவர் யார் என்று தெரியும்.  

Wednesday, December 12, 2012

சிரிக்க வைக்கும் தெருநாடகம்