Monday, November 15, 2010

மதுரை மாலை




    ஞாயிறு காலைஆறு முப்பது மணிக்கு கா.பா என்னை அலைப்பேசியில் எழுப்பி இன்னும் கிளம்ப வில்லையா..? என்ற வினாவுடன் அன்றையப் பொழுது விடிந்தது. இதோ வந்துவிட்டேன்.. என விரைந்து குளித்து கிளம்பிய நிலையில்  என் நண்பர் திரு. ரவி ”சரவணா.. எங்கும் போய் விடாதீர்கள் .. இன்று நாம் பத்து மணிக்கு மதுரையில் உள்ள நக்கீரர் சமாதிக்கு அழைத்துச் செல்ல விருக்கிறேன்..” என எழு மணிக்கு அன்புக் கட்டளையிட, நான் கீழக்குயில் குடி செல்வதை தவிர்த்து, நக்கீரருக்காக காத்திருந்தேன்.






மணி பத்து ஆயிற்று, ரவியை அழைத்தேன்.. எப்பொழுதும் போல .. பிரபாகர் இன்று வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார். நீங்கள் மேல மாசி வீதிக்கு பன்னிரண்டு மணிக்கு வாருங்கள் என நேரத்தை தள்ளிப்போட... தில்லு முல்லு படம் பார்க்க உட்கார்ந்தேன். கா. பா இந்த தில்லு முல்லு தெரியாமல் மனதிலேயே திட்டி தீர்த்திருப்பார். (உண்மை.. நான் இன்று திங்கள் மதியம் பேசிய போது  கடிந்துக் கொண்டார்.. இன்னும் இரண்டு நாள் கழித்து சொல்லியிருக்கலாம்லா... போங்க அண்ணே...!) 

       பன்னிரெண்டு முப்பதற்கு நான் ரவியை மேலமாசிவீதி ஐயப்பன் கோவில் எதிர்புறம் உள்ள இரும்புக் கடை அருகிலுள்ள ஒரு வீட்டில் ஒரு பெரியவரை சந்திக்க செய்தனர். என்ன விபரம் என்றேன்...” மதுரை பற்றி செய்தி கேட்டீர்...  இது புதிது .. நீங்களே பிளாக்கில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் இவரை அறிமுகம் செய்யும் முதல் நபராக இருப்பீர்.. நான் சென்ஸஸ் டுட்டியில் இவரை சந்தித்தேன்..” என பிரபாகர் மாடியில் பெரியவர் திரு . சிவ சண்முகத்தை  அறிமுகம் செய்தார்.






 யார் இந்த சிவ சண்முகம் ? என்ற என் கேள்விக்கு மேலேயுள்ள படத்தைக் காட்டி என் தந்தை திரு எம்.எஸ். ரத்தின சபாபதி , அவரின் அப்பா , என் தாத்தா திரு மதுரையம்பதி மகாவித்துவான் சு. சபாபதி முதலியார் (1837-1898) .. நான் என் தாத்தாவின் தமிழ் ஆர்வத்தையும் , அவர் முதன் முதலில் செம்மொழி என்ற சொல்லை பயன்படுத்தியதையும் ஆராய்ந்துக் கொண்டுள்ளேன். நான் மிகவும் குறைந்த அளவே படித்துள்ளேன் என்று மிக ஞானத்துடன் பேசத்துவங்கினார். 



திரு . இர. சிவசண்முகம் தன் தாத்தாவை தமிழ் தாத்தா என்றே அழைக்கிறார். அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். சபாபதி முதலியார் இயற்றிய மதுரை மாலை நூலை தேடிக்கண்டு பிடித்து  அதற்கு உரையும் தயாரித்து அதனை மறு வெளியீடு செய்ய முயற்சி செய்து வருகிறார். 


    பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரி அவர்களால் 1901 ஆம் ஆண்டு இந்த மதுரை மாலை என்னும் தமிழ் தாத்தா சபாபதி அவர்கள் நூலை வெளியிட்டார். அந்நூலிலின் அணிந்துரையில் முடிவில் திருப்பரங்குன்றம் அந்தாதி விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். அந்நூலின் நகலைப் பெற அல்லது அதன் ஒரு பிரதியை எப்படியாவது பெற வேண்டுன் என்று ஆவலில் பல ஆவண காப்பகங்களுக்கு இந்த தள்ளாத எழுப்பத்தைந்து வயதில் அலைகிறார் என்பது அவருடன் பேசும் போது தெளிவாகத் தெரிகிறது.

     பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரி மதுரை மாலை சபாபதி முதலியாரின் மாணவன் என்பது நம்மை மிகவும் பிரமிக்க வைக்கிறது.
சபாபதி அவர்கள் மதுரை எம். சி. பள்ளியில் செயல் பட்ட மதுரை நேடிவ் காலேஜ் ( மதுரை துரைத்தனத்தார் கலாசாலை) யில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இக்கல்லூரி சென்னை யுனிவர்சிட்டிக் கண்ட்ரோலில் செயல் பட்டது என்ற தகவலையும் நமக்கு தருகிறார்.   


        28 சிவ ஆகமங்களில் காமிக ஆகமம் இசையைப்பற்றி சொல்லுகிறது. இந்த காமிக ஆகமப்படி இசையுடன் பாடும் பாடலை பாடக் கூடியவர் என் தாத்தா என்கிறார்.  வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரி -கலாசாலை வாழ்க்கையில் பக்கம் 29 ல் சாபாபதியை  தன் ஆசிரியர் என குறிப்பிடுகிறார். மேலும் அவர் இசையுடன் பாடம் நடத்தும் அழகு சிறப்பு வாய்ந்த்து. அவர் தமிழ் , ஆங்கிலம், தெலுங்கு ஆகியவற்றில் தேற்சிப்பெற்று விளங்கினார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது போல அக்கால வித்துவான்கள் , தமிழாசிரியர்கள் சபாபதி முதலியார் அவர்களிடம் படித்த அருமை பெருமைகளை எடுத்துக் கூறினார்.  ஒரு மணிக்கு சந்தித்த சந்திப்பு மாலை ஐந்து மணி வரை ஒரு டம்ளர் தண்ணீர் கூட குடிக்காமல் சென்றது என்றால் , அந்த எழுபத்து ஐந்து பெரியவர் தமிழ் மீதும் , அவர் தாத்தா மீது கொண்டுள்ள பாசத்தை பார்த்து என்னால் வியக்க முடிய வில்லை.

        
தமிழ் ஆர்வலர் சாபாபதி முதலியார் இயற்றிய நூல்கள்

-திருக்குளந்த வடிவேலன் பிள்ளைத் தமிழ் 1896

-திருப்பரங்குன்றம் அந்தாதி

-நளவிலாசம் (1872)

-பாரத விலாசம்

-மதுரை மாலை (!901)


மதுரை மாலையில் எனக்கு பிடித்தப்பாடல்

மானச்சங் கூடு மடவார்கண் டத்தொலிசெய்ம்
மானச்சங் கூடு மதுரையே-பானச்சம்
பூவணத்தா னத்தன் புரம்பாதி கொள்ளுமறைப்
பூவணத்தா னத்தான் புரம்”

5ஆம் பாடல் ஆகும் இது திருப்பூவணத்தைப்பற்றி சொல்லுகிறது.


”வைகையினே டேறு மலரிடைக்கா ழிக்கோன்முன்

 வைகையினே டேறு மதுரையே- யுய்கையரு
னம்பரம ராரனகர் நாடுமண கானரியார்
நம்பரம ராடனகர்”

மதுரை மாலை மொத்தம் 100 பாடல்களைக் கொண்டது . இதில் 50 பாடல்கள் சிலேடை , 50 எமக வடக்கு வாய்ந்தது அதாவது ஒரு பாட்டுக்கு பல பொருள் சொல்லும் அமைப்புடையது .


தஞ்சை மாவட்டம் நன்னிலம் பெருவட்டம், கொகந்தனூர் வட்டத்தை சேர்ந்த குமாரமங்கலம் கிராமத்தில் திரு. சுந்தரலிங்கம் , நீலாம்பாள் அவர்களுக்கு மகனாக 1837 ல் பிறந்தார். பின் மதுரை சோழவந்தானில் ருக்குமணி என்ற பாப்பம்மாளை மணந்தார்.  இவர் யாழ்பாணத்து நல்லூர் திரு . சின்னத்தம்பி  புலவர் எழுதியளித்த இறை வழிபாட்டு நூல் மறைசையந்தாதிக்கு ஒரு உரை எழுதியுள்ளார்.இது வேதாரண்யத்தில் கோயில் கொண்டுள்ள வேதபுரீஸ்வரர் அந்தாதி ஆகும் .  இவர் தம் 61 ஆம் வயதில் அதாவது விளம்பி வருடம் ஆனித்திங்கள் ஏகாதசி திதியில் (14-6-1898) காலமானார். அவர்  வாழ்த்த வீடு தான் நான் சென்ற அந்த வீடு. அன்றும் மாடி இருந்துள்ளது.
  
      
” சூரிய நாராயணருக்கு கிடைத்த அங்க்கீகாரம் , அவரின் ஆசிரியரான தன் தமிழ் தாத்தா சபாபதி முதலியாருக்கு கிடைக்க வேண்டும் , அவரின் பெயரில் ஒரு டிரஸ்டு ஆரம்பித்து , அவரின் பாடல்கள் இசையுடன் பாடப்பட வேண்டும் , தமிழில் போட்டிகள் நடத்தி குழந்தைகளுக்கு பரிசு வழங்க வேண்டும் , தமிழில் கருத்தரங்கங்கள் நடத்திட வேண்டும் ”என தன் பற்பல ஆசைகளை நம் முன் வைத்து நம்மை அசையாமல் உட்கார வைத்துவிடுகிறார்.
  

       மதுரை மாலை இயற்றிய சபாபதி அவர்களின் திருப்பரங்குன்றம் அந்தாதி புத்தகம் வைத்துள்ளேர் அவரை அணுகி அவருக்கு தன் தாத்தாவின் நூலினை படித்து மகிழும் மகிழ்ச்சியை தரலாம். எழுபத்து ஐந்து தமிழ் மீது ஆர்வம் கொண்ட இளைஞரிடம் பிரிய மணமில்லாமல் பிரிந்தோம்..       





 


 

Friday, November 12, 2010

மதுரை-திருப்பூவணம் புராணம்





”மணிதிகழ் மாடமலிமது ராபுரி வாழ்சித்தரேந்
துணிவுட னின்னன்பு கேட்டணைந் தோமென்று சொல்லிப் பின்ன
ரணி திகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் றாணிப் பொன்னைப்
பணிவிடைக் கீந்த சொக் தேசி பயகரனே”

இது ரசவாதம் செய்த திருவிளையாடல் புராணம் பற்றி சொல்லும் திருவிளையாடல் பயகர மாலைப்பாடல்(எண்45) ஆகும்.

       மதுரை     மதுரை சோமசுந்தரக் கடவுள் சித்தராக திருப்பூவணத்தாசியான பொன்னனையாளுக்கு காட்சி தந்து அவளின் ஆசையான திருப்பூவண இறைவனுக்கு திருவுருவம் செய்த காட்சி தான் 36 வது திருவிளையாடல் புராண ஆகும்.




பொன்னனையாள் இறைவனின் கன்னத்தில் கிள்ளி முத்தமிடும் காட்சி


     இறைவன் முன் நடனமாடும் சிவபக்தை பொன்னனையாள் , தன் வருமானம் அனைத்தையும் திருப்பூவண நாதரை வணங்க வரும் அனைத்து சிவனடியாருக்கும் அன்னதானம் வழங்கி செலவு செய்தாள்.அதனால் மகிழ்சியும் கொண்டாள் . அவளுக்கு திருப்பூவணக் கோவிலில் பூசிப்பதற்கு தங்கத்தால் ஆன திருவுருவச் சிலை வடித்துக் கொடுக்க ஆசை. ஆனால் , அதற்கான தங்கம் செய்ய காசு இல்லை. வருமானம் எல்லாம் அன்னத்தானத்திற்கே செல்வதால் , என்ன செய்வேன் என மதுரை சோமசுந்தரக் கடவுளை நோக்கி வேண்டினாள்.




தியானக் கட்ட முனிவர்களுக்காக திருநடனம் ஆடும் பிரமதாண்டவ நடேசுவரர்



    பக்தையின் விருப்பம் அறிந்த சோமசுந்தரரும் , அதனை பூர்த்தி செய்ய , சித்தர் வடிவில் , திருப்பூவணத்தில் பொன்னனையாள் வீட்டிற்கு
எழுந்தருளினார். தாதியர்கள் உணவு உண்ண அழைத்தனர், அப்போது சித்தர் வடிவம் கொண்ட சோமசுந்தரக் கடவுள் பொன்னனையாள் அவர்களை பார்க்க விரும்புவதாக கூறி அழைத்துவரச் செய்தார்.

      சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள். உன் முகம் வாடியுள்ளது ஏன்? என சித்தர் வடிவிலுள்ள சிவன் கேட்க , பொன்னனையாளும் தன் விருப்பமான திருப்பூவண நாதனுக்கு  பொன்னாலான திருவுருவம் செய்யும் ஆசையைச் சொல்ல,   சித்தர் அவளை வாழ்த்தி, அவளிடம் உள்ள அனைத்து உலோகப்பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்து , திருநீற்றினைத் தூவினார். பின் தீயிலிட்டு காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்கும் என்று  சொன்னார்.






                 பொன்னனையாள் செய்த திருவுருவச் சிலை

 மீனாட்சியம்மனைப் பிரியாத சோமசுந்தரரை அன்று இரவு தங்கிவிட்டுச் செல்லும் படி கூற, இறைவன் ,”யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம்” என கூறி மறைந்தார். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறியாடும் அம்பலவானரே என்பதைக் கண்டு பக்தியால் நெகிழ்ந்தாள்.

  ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குவதைப் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக விளங்கின. அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்கு திருவுருவம் வார்ப்பித்தாள்.

       இறைவனின் அழகான திருவுருவ்த்தைக் கண்டு  “அச்சோ! அழகிய பிரனோ இவன்” என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது . இத் திருவுருவத்தில் இன்றும் கோயிலில் உள்ள சிலையில் காணலாம்.

         மதுரையில் திருவிளையாடல் புராணக் கதைகள் தொடர்பான விழாக்கள் நடைப்பெறும் நாளில், 36 வது ரசவாத புராணக் கதை அன்று சோமசுந்தரக் கடவுள் , திருப்பூவணம் வந்து காட்சி தந்து , மதுரை சென்று வந்துள்ளார். தற்போது அவ்வாறு வருவதில்லை. அவை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலே வைத்து நடத்தப்படுகினறன.குறித்த நேரத்திற்கு மீண்டும் மதுரைக் கோவிலுக்கு  அழைத்து செல்ல முடியாத்தே , தற்போது இங்கு சோமசுந்தரர் வராமைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. 


வளரும் சந்ததியினருக்கு இவ்வரலாறு மறக்கடிக்கும் முன் திருவிழா அன்று திருப்பூவணம் வந்து செல்ல இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
மதுரை அண்ணனுக்கு கோரிக்கை கொண்டு சென்று விழா  நடத்த சிவவச்சாரியார்கள் முடிவெடுக்கவும்.

Thursday, November 11, 2010

குலோப்ஜாமூன்

வலையேற்றப்படாத
என் கவிதைகள்
குலோப்ஜாமூன் போல
ஊறிக்கொண்டுள்ளன
நீங்கள் சுவைப்பதற்காக...!


வலையேற்றம் அடைந்த
என் கவிதைகள்
சொல்லும் கருத்தில்
ஆட்கொண்டு
நான்கு யாமமும் விழித்து
மனதோடு பூசித்ததால்
சிவலோகம் அடைந்தீர்
என் கவிதையுடனே தாங்களும்..!
 
என் கவிதைகள்
பாரிசாதம் போல
கேட்டதையெல்லாம் கொடுக்கும்
கவி வரிகளை சுற்றி சுற்றி வருவதாலே..!

என் கவிதைகள்
நீங்கள் முத்தமிடும் போது
குழந்தையாக சிரித்துத்
தவழ்கிறது உங்கள் கரங்களில்...!

என் கவிதைகள்
மன ஆழத்தில் பதிந்து
உணர்வுகளைத் தூண்டி
சமூகப் பொறுப்பை உணர்த்தும் போது
வீர வாளாக உங்கள் கரங்களில் ....!

சமூக அவலங்களைச் சாடும்
என் கவிதைகள்
தோட்டாக்களாக
சீறிப்பாய்ந்து
என் கவுண்டர் செய்கின்றன...!

மொத்தத்தில்
என் கவிதைகள்
உங்களுடன் வாழ்கின்றன...!

Wednesday, November 10, 2010

வகுப்பறைகள் நூலகங்களாக...



அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல் படும் செயல் வழிக் கல்வி இன்று மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக திகழ்கிறது. ஒன்றாம் வகுப்புக் குழந்தை செய்தித்தாள் வாசிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். மாணவர்கள் முதல் வகுப்பில் இருந்து எந்த திறனும் விடுபடாமல் முழுமையாக படிக்க வாய்ப்பை இக்கல்வி முறைத் தருகிறது .மாணவ்ர்களின் கற்றல் முறையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது என்பதை விட ஆசிரியர்களை அதட்டும் நிலையிலிருந்து கீழே இறக்கி, மாணவர்களுடன் மாணவர்களாக உட்கார வைத்து உயர்த்தி இருக்கிறது. கல்வி மீதும் , கல்வி நிலையங்கள் மீதும் இருந்த பயம் நீக்கப்பட்டுள்ளது.


       வகுப்பறைகள் சரஸ்வதி குடியிருக்கும் மாளிகைகளாக மாற்றம் அடைந்துள்ளன. மாணவர்கள் அவரவரின் கற்கும் திறனுக்கு ஏற்ற வகையில் அட்டைகளை வைத்து , அவற்றை படித்துக்காட்டுவதைப் பார்க்கும் போது நமக்கு சந்தோசம் பிறக்கிறது. பெற்றோர்களிடத்தும் ஒரு வித மகிழ்ச்சி தென்படுகிறது. சக மாணவன் உதவி ஒரு சாதி பாகுபாடு அற்ற ஒரு சமுகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கிறது.இதை கிராமங்களில் பார்க்கலாம். பிறருக்கு உதவும் மனப்பான்மையை மறைமுகமாக வளர்க்கிறது. 
   இன்று அனைத்துப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஒரு நூலகமாக மாற்றம் அடைந்துள்ளன. நான் படிக்கும் காலத்தில் நூலகம் என்பது ஒரு தீண்டத்தகாத இடமாக கருதப்பட்டது. அது ஏதோ ஆசிரியர்கள் மட்டுமே செல்லும் இடம் எனவும் , அங்கு சென்றால் , யாரிடமும் பேசக்கூடாது என்ற அச்சத்தையும் உண்டாக்கி , நம்மை கடைசிவரை அண்டவே விடவில்லை. நான் கல்லூரி சென்ற பின்பே நூலகம் சென்றுள்ளேன். 
   
    ஆனால் இன்று ஒன்றாம் வகுப்புக் குழந்தை கதைப்புத்தகம்வாசிக்கிறது. தான் படித்தக் கதைகளை பிறருடன் பகிர்ந்துக் கொள்கிறது. இது எப்படி சாத்தியம் ..? 

      அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அனைத்துப்பள்ளிகளுக்கும் தேர்வுசெய்யப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் , வயதுக்கு ஏற்ற வகையில் சிறியதும் ,பெரியதுமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒவ்வொரு வகுப்பிலும் தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டுள்ளன.அவைகள் தோரணமாகத் தொங்கும் அழகைப்பார்க்கும் பொழுது அவைகளை எடுத்து வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் நமக்கே தோன்றும். பெட்டிக்கடைகளில் அந்த வார வார இதழை பார்வைக்குப்படும்படி அழகாக தொங்கவிட்டு இருப்பர். கடைக்கு வருபவர் , அதன் அட்டைப்படத்தை பார்த்தே, என்ன என்று கேட்டு வாங்கிச் செல்வர். தொன்கும் அழகே பலரை இதழ் வாங்கத்தூண்டும். நான் சிறுவனாக இருக்கும் போது என் வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் தொங்கிய அம்புலி மாமா இதழை பார்த்து ஆர்வப்பட்டு , என் தந்தையிடம் அழுது வாங்கிய அனுபவம் நினைவிற்கு வருகிறது. 


              இன்று அதேப் போல குழந்தைகள் தொங்கவிடப்பட்டுள்ள புத்தகங்களைப் பார்த்து ,ஆசிரியரிடம் “டீச்சர்... இன்னைக்கு இந்த கதைப்படிப்போம் ... எனக்கு அந்தப்புத்தகம் கொடுங்க”என மதிய இடைவேளையில் ஓடி விளையாடுவதைத் தவிர்த்து புத்தகங்கள் படிப்பதை பார்க்கும் போது நாம் ஒரு அடிமைப்போல பள்ளிகளில் நடத்தப்பட்ட நினைவுகள் வந்து போகின்றன. இன்றைய மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  ஒன்றாம் வகுப்பு மாணவன் படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்து , அதில் உள்ள எழுத்துக்களைக் கூட்டி வாசித்து , தன் உடன் உள்ள மாணவனுடன் கொஞ்சி கதை போசும் அழகு ரசிக்கச் செய்கிறது.

            
           முன்று, நான்கு, ஐந்து படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளில் புத்தகத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரு வட்டமாக படிக்கும் அழமு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அதுவும் ஆசிரியரும் மாணவர்களுடன் மாணவர்களாக புத்தகங்கள் படிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நான் படிக்கும் காலங்களில் நூலகம் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும், செய்தித்தாள் வாசிக்கும் இடமாகவும், பல சமங்களில் பல ஆசிரியர்கள் ஒன்று கூடி அரட்டை அடிக்கும் இடமாகவும் இருந்தது. தப்பித்தவறி நாம் அங்கு சென்றால் உதையும் கிடைக்கும் இங்கெல்லாம் வரக்கூடாது என வசவும் கிடைத்துள்ளது.



     இன்று வகுப்பறைகள் நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதுவும் சத்தம் போட்டுப்படிக்கும் இடமாகவும், தான் படித்தக் கதைகள், அனுபவங்களை எந்தவித பயமும் இன்றி சக மாணவனுடன் பகிர்ந்து கொள்ளும்  வசதிகளை உடையதாகவும் , பாடபுத்தகங்களைத் தவிர்த்து , அறிவு பெறும் இடமாகவும் வகுப்பறைகள் மாற்றம் அடைந்துள்ளன. செயல் வழிக்கல்வி தமிழத்தில் வெற்றிகரமாக செயல்படுவதைக் கண்டு பிற மாநிலத்தவரும் நம்மை அணுகுவதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.




   



   



Tuesday, November 9, 2010

ம்துரை-திருப்பூவணம் சிவன் கோவில் 3

 திருப்பூவணத்தில் அசுவமேதயாகம் நடந்தது என்பதை சொன்னால் நம்பவா முடிகிறது? அந்த யாகத்தின் பின்னனியில் கிடைத்த கோவில் சொத்து ,இன்று அரசியல் மாற்றத்திலும், வேகமான கால மாற்றத்திலும் கோவில் சொத்து  தனி நபரின் உரிமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் போது மனம் மிகவும் வேதனையடைகிறது.

”பிரமனூர் கணக்கு வழக்கும் , திருப்பூவணத்தின் கிழக்கும் , மேற்கும் சொல்ல முடியாது “ என்ற பழமொழி உண்டு.

        நள மகாராஜா திருப்பூவணத்தில் அஸ்வமேத யாகம் செய்துள்ளார். அதனால் கிடைத்த மண் பொன் அனைத்தையும் கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார். அதற்கான ஆவணங்கள் அழிந்துள்ளன. எப்படி என்பது தெரியாது என்கின்றனர். மடப்புரம், மற்றும் பிரமனூர் கிராமம் முழுவதும் கோவிலுக்கு உரிமையுள்ளவை.

இக்கோவில் முஸ்லீம் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டுள்ளது. பல மன்னர்களால் ஒவ்வொரு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. இக் கோவில் கோபுரத்தில் சிற்பங்கள் இல்லை. படத்தைப்பார்த்தாலே தெரியும். இன்றும் கோவில் நுழையும் போது கட்டப்படாத ஒரு கோபுர தூண் உள்ளதை காண முடிகிறது.


    இங்கு உள்ள சிவன் சுயம்பு ஆகும். மேலும் இங்குள்ள சிவனின் நெற்றியில் திரிசூலம் அடையாளமுள்ளது.இக்கோவில் வடகிழக்கே அமைந்துள்ளக் கோவில் ஆகும். இக்கோவிலில் தினமும் விளக்கு போடப்படுகிறது. பிறகோவில்களில் அம்மாவசை அன்று மட்டுமே விளக்குப்போடப்படும் . தினம் விளக்குப்போடுவதால், இங்கு கிரிகைகள் செய்யப்படுகின்றன. தினம் அம்மாவாசை தரிசனம் அளிக்கும் ஒரே கோவில் திருப்பூவணம் சிவன் கோவில் ஆகும்.

     இங்குள்ள பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்க்க வாசல் திறகிறார்கள். சிவன் கோவிலில் வேறு எங்கும் சொர்க்க வாசல் திறக்கப்படுவதில்லை என்கின்றனர். 


 
          இக்கோவிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன். பிரம்மதீர்த்தம், மணிகர்ணிகைத்
தீர்த்தம், லெட்சுமி தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என்பன அவையாகும்.


         மணிகர்ண தீர்த்தத்தில் குளித்தால், செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து விடும் என்றனர். உடனே என்னுடன் வந்த ரவி முந்திக்கொண்டு தீர்த்தமாடினார். நானும் என் பாவங்களைத் தொலைத்தேன்.
      
          சிவனே தனக்கு சிலை வடித்த ரச வாத புராணத்தை அடுத்த இடுகையில் பகிர்கிறேன்... தொடரும்.




 

Monday, November 8, 2010

மதுரை- திருப்பூவணம் சிவன் கோவில்

    திருப்பூவணம் கோவில் பெயர்காரணம் மிகவும் நம்மைக் கவருவதாகவே உள்ளது. கோவில் தன்னுள் கொண்டுள்ளக் கதை என்னை மீண்டும் மீண்டும் அதனுள் புதைந்துள்ளக் கதைகளை அறியவே என்னை பலமுறை திருப்புவணம் அழைப்பதாகவே உள்ளது. மீண்டும் செல்ல முயற்சித்துள்ளேன்.




   காசியில் இருந்து அஸ்தியை கரைத்து மீதியைக் கரைக்க இராமேஸ்வரம் வருகிறார் . வரும் வழியில் மதுரையைக் கடந்து , இராமேஸ்வரம் நோக்கிப் பயணம் மேற்கொள்ளும் போது , திருப்புவணம் என அழைக்கப்படும் , இக்கோவில் உள்ள ஆற்றுப்பகுதியில் தங்கியுள்ளனர். அப்போது அவர்களின் வழி போக்குக்கு துணையாக வந்தவன் , பசிக்கவே, பாத்திரத்தை திறக்கிறான், அதில் அஸ்திக்கு பதிலாக எலும்புகள் பூவாகவே காட்சி அளிக்கின்றன. பின் மறுபுறம் இருந்த , பாத்திரத்தை திறந்து , உணவு அருந்தி , தன் பயணத்தைத் தொடருகிறார்கள்.


      இராமேஸ்வரம் சென்று கரைக்க அஸ்தியை எடுக்கும் போது, அது மீண்டும் சாம்பலாகவே காட்சி அளிக்கிறது.  துணைக்கு வந்தவன் தான் கண்ட காட்சியை அவர்களிடம் காட்ட, அவர்கள் மீண்டும் வந்து , இங்து வந்து பார்க்கும் போது , அது மீண்டும் பூவாகவே நறுமணத்துடன் காட்சி தருகிறது. அங்கு கரைத்து விட்டு செல்கிறார்கள். ஆக, பூ வாக காட்சி தந்து , இறந்தவருக்கு மோட்சம் தந்ததால், இவ்விடம் திருப்பூவணம் என அழைக்கப்படுகிறது.

    ஆகவே, இராமேஸ்வரத்தை விட , இங்கு வந்து அஸ்தியைக் கரைப்பவர்கள் அதிகமே. அனைத்து பாகுதியிலும் வந்து , அஸ்தியை கரைக்கின்றனர். நாங்கள் செல்லும் போது பலர் அஸ்தி கரைக்க வந்து இருப்பதைக் கண்டு மிரண்டு போனேன். அவ்வளவு கூட்டம். இங்கு அஸ்தி கரைத்தால் அவருக்கு மோட்சம் உண்டாகுமாம். அது மட்டுமல்ல , நம் குடும்பத்தில் யாராவாது இறந்து அவர்களுக்கு அஸ்தி கரைத்து , அதற்கான சடங்குகளை செய்யாமல் விட்டு , அக்குடும்பத்தை சேர்ந்த யாராவது இறந்து , அவர்களுக்கு கரைத்தால், அவர்களின் முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமாம். அதானாலே , இங்கு அஸ்தி கரைத்து சடங்கு செய்பவர்கள் அதிகம்.

        இங்குள்ள நந்தி திரும்பியுள்ளது. அதற்கும் ஒரு கதை சொல்லுகிறார்கள். சம்பந்தர் அக்கரையிலிருந்து சிவனை நோக்கி பதிகம் பாட, பாட, சிவன் பூவாக மாறி ஆற்று நெடுகிலும் தோன்றுகிறார், அதைக் காண லிங்கம் திரும்பியதால், அப்படியே திரும்பிய படி உள்ளது . அதற்கு முன்பு வரை அது நேராக சிவனை நோக்கியே இருந்தது என கதை கூறுகின்றனர்.


சிவபுராணம் பார்ப்போம்... தொடரும்.

Saturday, November 6, 2010

மதுரை-திருப்பூவணம் சிவன் கோவில்

   திருப்பூவணம் சிவன் கோவில் சென்று விவரங்கள் சேகரித்த போது அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. இந்து அறநிலைத்துறையின் நிலைக் கண்டு வருத்தம் ஏற்பட்டது.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் ,அனைத்துக் கோவில் சொத்துக்களும் பறிப்போகும் நிலை கண்டு கோபம் வருகிறது. சிவன் சொத்து குல நாசம் என்ற காலம் மாறிவிட்டது. கோவில் சொத்து எடுத்தா பாவம் என்பது மாறி கோவில் சொத்து எடுத்தா என்ன மோசம் என்றாகிவிட்டது. திருப்பூவணம் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டக் கோவில். இது தன்னுள் பல வரலாறுகளையும் , புராணங்களையும் கொண்டுள்ளது, இதற்கு பட்டா வழங்காமல் , அரசு புறம் போக்கு என தகவல்கள் வருவது ஆச்சரியம் என்பதுடன் விசயம் முடிந்துபோகவில்லை . இதனால் வருமான இழப்பு என்பதுடன் முடிவதில்லை.விசயம் இன்னும் ஆழமானது..!      


   


     அறுபத்து நான்கு சிவப் புராணங்களில், முப்பத்தியாறாவது புராணம் நடைப்பெற்ற இடம் இந்த திருப்பூவணம் சிவன் கோவில் ஆகும். இது ரசவதா சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

திருப்பூவணம் சிவன் கோவிலின் தலவிருச்சம் பிலா மரம் ஆகும் . திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள். இதன் புண்ணிய விபரத்தை கீழ் கண்டவாறு பட்டியலிடுகின்றனர்.

காசியை காட்டிலும்  வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.


       இந்த கோவில் நால்வர் பாடிய திருத்தலம் ஆகும். ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்திரமூர்த்தி, மாணிக்க வாசகர் ஆகியோர் பாடிய திருக்கோவில் ஆகும்.

      புறப்பாடு விக்கிரகத்தில் கந்தர் நின்று இருப்பார். ஆனால் இக்கோவிலின் புறப்பாடு விக்கிரகத்தில் குழந்தைப்பருவத்தில் தாய் மடியில் அமர்ந்துள்ளார். இது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.

    இக்கோவிலின் உள்ள பெருமாள் , திருப்பதியில் உள்ளது போல நின்று காட்சியளிக்கிறார். பிறக் கோவில்களில் படுத்த வண்ணம் மட்டுமே காட்சித்தருவார்.

    இக்கோவிலின் அம்பாள் சொளந்திர நாயகி என்று வடமொழியிலும், அழகிய நாயகி என தமிழிலும் அழைக்கப்படுகிறார். இதனாலே கோவிலைச் சுற்றியுள்ளப்பகுதி மக்கள் தம் குழந்தைக்களுக்கு அழகிய நங்கை என்ற பெயரை வைத்துள்ளனர்.

   இக்கோவில் இன்றைய நிலையை அடைய பாண்டியர்கள், நயக்கர்கள், நகரத்தார்கள் உதவி புரிந்துள்ளனர். இக் கோவில் சிவகங்கை தேவஸ்தானத்தை சார்ந்த்து.


     இக்கோவிலின் விமானம் பாஸ்கர விமானம் ஆகும். அதாவது ஐந்து முகங்களைக் கொண்டது. மேலும் விமானம் ஒரு கோவிலைப்போன்று அமைப்புடையது.


    அதுசரி ...ஏதோ வருமான இழப்பு என்று சொன்னீர்களே என்று அவசரப்படுவது புரிகிறது.   இக்கோவிலை சார்ந்த கிராமம் பிரமனூர் . அங்கு இக்கோவிலுக்கு சொந்தமாக 815 ஏக்கர்  விவசாய நிலம் உள்ளது. இதில் 600 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

     பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட இடமாதலால் இவ்வூர் பிரமனூர் என அழைக்கப்பட்டது. இவர்கள் உழவடைச் செய்ய பிறசாதிக் காரர்களை பயன்படுத்தினார்கள். நாளடைவில் பிராமணர்கள் இவர்களின் ஆதிக்கத்தால் , ஊரை விட்டு காலி செய்து, இப்போது இவ் உழவடைக்காரர்கள் ஆக்கிரமிப்பில் இக்கோவில்கள் விவசாய நிலங்கள் உள்ளன.


    முன்பு விவசாயத்தில் அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் முப்பது மூட்டை நெல் விளையும். அதில் பத்து மூட்டை கோவிலுக்கும், பத்து மூட்டை உழவடைக்காரர்களுக்கும் , மீதி பத்து மூட்டை பிராமணர்களுக்கு(அதாவது நிலத்தை முறையாக விவசாயம் செய்ததற்கு) என பகிர்ந்துக் கொடுக்கப்பட்டது .

    இன்று ஒரு படி அரிசியோ, அதிகப்பட்சமாக பத்துப்படி அரிசி மட்டுமே தருகிறார்கள் . நிலங்கள் அவர்கள் கைகளில் சிக்கி  ஏமாற்றப்பட்டு வருகிறது. கோவிலை நிர்வகிப்பவர்கள் கேட்டால் , விவசாயம் இங்கு என்ன கிழிக்கிறது என வம்பு இழுப்பதாக சொல்லுகிறார்கள்.
    
     கோவிலுக்கு அருகில் கோவிலைச் சார்ந்து வீடுகள் உள்ளன. அவைகள் இன்று வாடகைக் கொடுக்காமல் , வருமான இழப்பு ஏற்பட்டு கோவில் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிய வருகிறது.

  குசவன் கோவில் தோப்பு என்ற இடத்தில் இக்கோவிலுக்கு சார்ந்த எழுபத்து ஏழு வீடுகள் உள்ளன. அவற்றில் அறுபத்து ஏழு வீடுகள் இதுவரை வாடகைக் கொடுக்காமல் இருந்து வருகின்றன. காலம் காலமாக கோவில் அவர்களிடம் வாடகை வசூலித்து வருகிறது.
ஆனால், தகவல் உரிமைச் சட்டம் வந்து, அதில் ஒருவர் இந்த இடம் , கோவிலுக்கு சார்ந்த்தா என வட்டாச்சியர் அலுவலகத்தில் கேட்க, இவ்விடம் கிராம நத்தம், நத்த புறம் போக்கு என பதிலளிக்க , அவர்கள் ஒட்டு மொத்தமாக வாடகை தரவில்லை.

        கோவில்நிர்வாகம் சிவகங்கை வட்டாச்சியர் அலுவலத்தில் பட்டா கேட்டு விண்ணப்பிக்க , அவர்கள் இது உங்கள் இடம் இல்லை என பதிலளித்துள்ளனர். நூற்றாண்டுகாலமாக வாடகை வசூலித்த கோவிலுக்கு உரிமையில்லை எனில் , அதனை பயன்படுத்தி வந்தவர்களுக்கு அனுபவ பாத்தியத்தில் அந்த இடத்தையும் வீட்டையும் பட்டா கொடுத்து சொந்தமாகும் உரிமையும் உள்ளது.

      இப்போது கோவில் நிர்வாகம் கோர்டு படி ஏறி , தன் உரிமைக்கு சொந்தம் கொண்டாட தன் தரப்பு நியாங்களை கொடுத்து வாதாடுகிறது. கலெக்டருக்கு எதிராகவும் கோவில் நிர்வாகம் இடம் சம்பந்தமாக வழக்கு தொடுத்துள்ளது.

       ராமர் ஜென்ம பூமியைப்போன்று அனைத்து கோவில் இடங்களுக்கும் தனக்கு சொந்தம் என யாராவது வழக்கு தொடரும் நிலை ஏற்படும் முன் அரசு அனைத்துக் கோவில்களுக்கும் பட்டா வழங்க முன் வர வேண்டும் . இந்து அறநிலைத் துறை அரசு சார்ந்த ஒரு நிலையில் கோவிலுக்கு ஆதரவாகச் செயல் படுவதில்லை என கோவில் நிர்வாகம் சலித்துக் கொள்கிறது.

     கோவில் வழக்கு தொடர்வதால், வாடகை வசூலிக்க முடியவில்லை. சிவில் வழக்கு என்பதால் விரைவில் முடியாது என தெரிந்தே... தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்து ஒரு வக்கில் நோட்டீஸ் அனுப்பி , வாடகை கொடுக்க மறுக்கின்றனர். மேலும் , இவ்வழக்கு எந்த வருடம் முடிந்தாலும் , சட்டப்படி முப்பத்தாறு மாத வாடகை மட்டுமே கோவில் வசூலிக்க உரிமை உள்ளது, வழக்கு முடிய குறைந்து முப்பது வருடம் கூட ஆகலாம் என்பதால் மீதிவாடகை  லாபம் என தெரிந்தே மக்கள் தவறான முடிவு எடுக்கின்றனர். சாமியா வாடகை கேட்கிறது என்ற எகத்தாளம் இவர்களை இப்படிதூண்டி விடுகிறது.


     எந்தக் கோவிலாக இருந்தாலும் (அல்லாக் கோவில், சர்ச் உட்பட) தகவல் உரிமைச் சட்டத்தில் அவை இன்று கிராம நத்தம் அல்லது , புறம்போக்கு என்றே தகவல்கள் வருகின்றன . இந்நிலை நீடித்தால், யாராவது இதை நான் தான் அனுபவித்து வந்தேன்  எனக் கூறி பட்டா பெற்று தன் இடம் என சொந்தம் கொண்டாட வாய்ப்பு உள்ளது. அரசு சிந்திக்குமா.? கோவில் இடங்களுக்கு பட்டா வழங்கி முறைப்படுத்துமா..?இந்து அறநிலைஅத்துறை இது சார்த்து விரைவில் ஒரு முடிவை சட்ட சபையில் கோரிக்கை முன் வைத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.  
   
                         இனி கோவில் பற்றிய விரிவான வரலாற்றை அதன் புராணத்துடன் பார்ப்போம்.
 
  

Thursday, November 4, 2010

சாரு உண்மையிலேயே ஒரு மனம் கொத்தி தான்.

      சாரு நிவேதிதா என்ற எழுத்தாளர் ஒரு மமதைப்பிடித்தவர். அவர் தன்னை முன்னிலைப்படுத்தி எதையும் பேசக் கூடியவர். ஜி ரோ டிகிரியைத் தவிர பெரியதாய் எதையும் சாதிக்க வில்லை என பல இடங்களில் பல விமர்சனங்களைக் கேள்வி பட்டுள்ளேன். மதுரை புத்தகத் திருவிழாவின் போது எஸ்.ரா. புத்தக வெளியீட்டு விழாவில்  அவர் பேசிய பேச்சை கேட்டுப்பலரும் படிக்காமல் கதைக்கிறான் என என் காது படப் பேசக் கேட்டுள்ளேன். ஏதோ சாருவை கிழிக்க பதிவு போட்டுள்ளேன் என்று கருத வேண்டாம்.
   
       ”புத்தக வெளியீட்டு விழா என்றால் சாருவை அழைக்காதீர்கள் அவன் வம்பு பிடித்தவன்,கிழித்து விடுவான்” என அன்று சாரு பேசிய போது எனக்கும் அப்படித்தான் பட்டது.   ஆனால்,  அவரின் எழுத்துக்களைப் படிக்கும் போது எனக்கு ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தி , தன்னிலை விளக்கம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்றே தெரிகிறது. ஆனந்த விகடனில் சாரு  எழுதுவது அவரின் டைரிக் குறிப்புகள் போல உள்ளன என்று பலர் விமர்சித்தாலும் , அவை இன்றைய சமூக அவலங்களை தனக்கு தெரிந்த விசயங்களுடன் ஒப்பிட்டு , பின் நவீனத்துவத்துடன் எழுதுவதை புரிந்துக்கொள்ள வேண்டும்.


                  சரி விசயத்துக்கு வருவோம்....இந்த மாத உயிர்மையில் எந்திரன் பற்றி எழுதி என் குடும்பத்துக்கே பிடித்தவர் ஆகிவிட்டார். ஆமாம் , ஒரு வாய்ச் சொல் வீரர் அல்ல என்பதை நிருபித்துவிட்டார். தனக்கு மனதில் பட்டதை , தாம் அனுபவத்தில் பெற்றதை கொண்டு , நல்ல சினிமாக்களை உண்மையான நிலைக் கொண்டு விமர்சிப்பதில் சாரு என்றும் சோடைப் போனதில்லை என்பதை மீண்டும் நிருபித்துவிட்டார்.
 
    எந்திரன் ஒரு வியாபார நோக்கில் அனைவராலும் புகழப்பட்டப் படம் என்பதை ஆணித்தரமாக , ஆதாரப்பூர்வமாக சொல்ல , தமிழகத்தில் எந்த ஒரு எழுத்தாளரும் முன் வராதப் போது துணிந்து ”ரஜினிக்கு எந்திரன் வேடம் போட்டதும் தேங்காய் சீனிவாசன் மாதிரி ஆகி விட்டது ஒரு துயரம் ” என மார்தட்டிச் சொல்ல சாருவால் தான் முடியும்.

      எந்திரன் படம் பார்த்தவுடன் என் மனைவியின் அண்ணண் மாதவன் ,”மாப்பிள்ளை ....இது ஐ ரோபார்ட். டெர்மினேட்டர் படங்கள், மற்றும் பைசெண்டினியல் மேன் படங்களின் கலவை, ஆனால் அந்த படங்களைப் பார்த்தால், இது குப்பை என்று தான் சொல்லுவீங்க... தமிழனை ஏமாளியாக்கும் விசயம்” என விமர்சித்தார் , மேலும் என் பிளாக்கில் எழுதவும் சொன்னார். நமக்கு எதுக்கு வம்பு என நான் இழுத்து மழுப்பி விட்டேன்.


        நான் முதல் முறையாக படம் பார்த்த போது , எனக்கு பிரமாண்டம் எதுவும் தெரியவில்லை ,அதுவும் ரஜினி ரசிகர்களுடன் பார்த்ததால் அந்த உணர்வோ (அவர்களின் ரசனையுடன், சேட்டைகள் கத்தல்களுடன் பார்த்ததால், படம் என் மனதில் ஒட்டவில்லை என்று நினைப்பு ) என எண்ணி மீண்டும் ஒரு ஏ செண்டரில் படம் பார்த்தேன். அப்போதும் அதே உணர்வு வர எனக்கு இப்படம் குறித்து விமர்சனம் எப்படி எழுதுவது அது நமக்கு எதிர்வினையை ஏற்படுத்திவிடுமோ என்ற பய உணர்வு.

      ஆனால், கதைக் கரு நம் தமிழ் சினிமாவுக்கு புதிது. அதை ஹாலிவுட் ரேஞ்சுக்கு பேசி , பேசி , படத்தை ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க செய்த டெக்னிக் சன் குழுமத்திற்கு மட்டுமே உரித்தான வியாபார டெக்னிக் ஆகும். அதுவும் இப்படத்திற்கு டிக்கெட் ஐநூறு , இருநூறு  என்ற விசயம் தான் என் மனதை உறுத்தியது. எனக்கும் சாரு போன்று ஒரு வித உணர்வு , ரஜினி ரசிகர்கள் கொண்டு நல்ல ஒரு படம் என்ற ரீதியில் அதிகமான டிக்கெட் விற்று , ரஜினியையும் நம்மையும் சேர்த்து ஏமாற்றிய உணர்வு.




       ”....எந்திரன் பற்றிய சினிமா விமர்சனம் , அந்தப்படம் நன்றாக இருந்தது, இல்லை என்பதாக எழுத முடியாமல் ஒரு சமுக விமர்சனமாக எழுத வேண்டியிருக்கிறது.குப்பைப் படம் எடுப்பது பற்றிப் பிரச்சனையே இல்லை . ஆனால், ஊடக பலத்தை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையே அது ஒரு சிறந்த படம், ஹாலிவுட்டுக்கே சவால் என்பதாக நம்ப வைப்பது எவ்வளவு பெரிய மோசடி?”

      மேற்சொன்ன சாருவின் கருத்துக்கள் தான் என்னையும் வாட்டியது . பொழுது போக்கு  படம் என்பதை காட்டிலும் , இப்படத்திற்கான வியாபார யுத்திகள் , பாமர ரஜினி ரசிகர்களின் ஒரு வார சம்பளத்தை ஒரு டிக்கெட்டில் பிடுங்குவதாக இருந்தது. இது தமிழனை ஏமாற்றும் வித்தையாகவே எனக்கு பட்டது. ரஜினி இனியாவது அவரின் ரசிகர்களின் ஒரு நாள் சம்பளத்தை மனதில் கொண்டு வியாபார ஊத்திகளை வகுக்க தம் தரப்பு நியாங்களை எடுத்துரைப்பாரா? வர்த்தக ரீதியில் பார்த்தால் திரையிட்ட அனைவருக்கும் லாஸ் என்றே வருகிறது ரிசல்ட். ஏனெனில் பல பிரிண்ட்,  பல தியேட்டர்கள் , என்பதால் அனைவரும் பார்த்தாகி விட்டது. பின் எப்படி...லாபம். சமீபத்திய பிளாக்கர் சந்திப்பில் ஒருவர் தன் கை சுட்ட கதையை சொல்லக் கேட்க முடிந்தது.


         சாரு மேடையில் பேசுவது போலவே...இந்த விமர்சனத்தில் தன் கோபத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.
”ஷங்கருக்கு ரஜினி மீது என்ன கோபம் என்று தெரியவில்லை . அவ்வளவு தூரம் அந்த நல்ல நடிகரை சிறுமைப்படுத்தியிருக்கிறார். விஞ்ஞானி ரஜினிக்கு ஒப்பனைக்காரர் யார்? பாக்யராஜ் மாறு வேடத்தில் வரும் போது ஒரு ஒட்டுத்தாடியுரன் வருவார். அது காற்றில் பறக்கும் போது ரசிகர்கள் கிண்டலாக விசில் அடிப்பார்கள் . அப்படி ஒரு ஒட்டுத்தாடியை ஒட்டியிருந்தார்கள் விஞ்ஞானி ரஜினிக்கு .”


    “எந்திரன் விஞ்ஞானி ரஜினி, ஐஸ்வர்யா, ரொபார்ட் ரஜினி ஐஸின் மேல் கொள்ளும் காதல் ஆகிய பகுதிகள் பைசெண்ட்டனியல் மேன் லிருந்து உருவியவை என்றால் எந்திரன் ரஜினி வில்லனாக மாறுவதிலிருந்து ஐ ரொபார்ட் என்ற படத்திலிருந்து உருவியது. அதாவது, எந்திரனின் முதல் பாதி பைசெண்ட்டனியல் மேன் பின் பாதி இஅ ரொபார்ட்  .   .... காட்சி காட்சியாக , வசனம் வசனமாக உருவியிருக்கிறார்கள். ...”

        சாருவைக் கொண்டாடுவோம். சாரு ஒரு தமிழன் என்ற ரீதியில் அடிக்கடி வருத்தமடைவதைப் பார்த்திருக்கிறேன்.” கேரளாவில் பாருங்கள் ... எழுத்தாளரை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் நிலமை வேறு ... “   
தமிழ் நாட்டில் அந்த காலம் வெகு விரைவில் வரும். ஆம். இன்று ஒரு விமர்சனத்திற்கு என் குடும்பத்தில் அனைவரும் உங்களைக் கொண்டாடுகின்றனர் என்றால் நிச்சயம் அது போல காலம் வெகு விரைவில் வரும் என்று தான் அர்த்தம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் , எதையாவது படித்து விட்டு , அதை ஒரு  காதில் வாங்கி , அப்படியே மறு காதில் வெளியிடும் காலம்  மாறி, எழுத்தாளர் யார் .பயமின்றி தெளிவாக எழுதியுள்ளாரே என எழுத்தாளரை விமர்சிக்கும் காலமாக குடுமப்ங்கள் மாறி வருகின்றன.

     ஊசிய பண்டத்தை தங்கக் தட்டில் வைத்துக் கொடுத்தால் சாப்பிட முடியுமா? என்ற கேள்வி  ஒன்றே எந்திரன் மீது  சாரு கொண்டுள்ள கோபத்திற்கு உதாரணமாகும்.

            சாரு உண்மையிலேயே ஒரு மனம் கொத்தி தான்... தொடரட்டும் உங்கள் புகழ் . தமிழகமும் உங்களைக் கொண்டாடட்டும்.
 

 
   

Wednesday, November 3, 2010

மனநிறைவான தீபாவளி


          பள்ளி செயலர் திரு பி . சௌந்தர பாண்டியன் தலைமை ஆசிரியர் சரவணன் மாணவர்களுடன் தீபாவளி வெடி வெடித்து மகிழும் காட்சி.

       டாக்டர் .டி.திருஞானம் துவக்கப்பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம் பள்ளிச் செயலர் திரு. பி. சௌந்தர  பாண்டியன்    தலைமையில் நடைப்பெற்றது . ஆசிரியர்கள் சார்பாக தாய் , தந்தை  அற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள்  வழங்கப்பட்டது . இதன் மூலம் சுமார் பதிமூன்று குழந்தைகள் பயனடைந்தனர்.




   மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வெடி வெடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் மூத்தோர்கள்  உதவியுடன் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வெடிக்காத வெடிகளை சேகரித்து , அவற்றின் மருந்தை ,பிரித்துக்  காகிதத்தில் கொட்டி, பின் எரிப்பதால் ஆபத்து ஏற்படும் என்று விளக்கி கூறப்பட்டது. ஆகவே, வெடிக்காத வெடிகளை தண்ணீரில் போடவும் வேண்டும் என்றும் , மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.



                    மெர்குரி பொருத்தி மகிழும் மாணவிகள் , உதவும் தலைமை ஆசிரியர் மற்றும் செயலர்


           வெடி வெடிக்க வில்லையெனில் , உடனே அதை எடுத்து கையில் பார்க்கக்  கூடாது.
மேலும் கண்ணிற்கு அருகில் கொண்டுச்  சென்ற பார்க்கக்  கூடாது. அதன் மீது தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். எக்காரணம் கொண்டும் வெடிகளை வெடிக்கும் போது பாதுகாப்பற்ற முறையில் பாட்டில் வைத்தோ , அல்லது வேறு காயம் ஏற்படும் பொருளை கொண்டு மூடியோ வெடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
வெடி இருப்பது தெரியாமல் யாரும் சென்றால் , வெடி வெடிப்பதை அறிவுறுத்தவும் என சொல்லப்பட்டது.வயதானவர்கள் பாதையைக் கடந்தப் பின் வெடி வெடிக்கவும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

                வெடி வெடித்து மகிழும் எம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்.


    மாணவர்களுக்கு பாதுகாப்பாக வெடி வெடிப்பது பற்றி சொல்லும் போது , இந்திரா ஆசிரியர் , குறுக்கிட்டு , மாணவர்களை ஆடு , மாட்டு , நாய்களின் வால்களில் வெடிகளை கட்டி தொங்க விட்டு வெடிப்பதை தவிர்க்க சொல்லவும் என்றும் , அவைகளும் நம்மை போன்று உயிருள்ள பிராணிகளேஎன்று அறிவுறுத்த சொன்னார்.மேலும் நோயாளிகள் இருப்பின் வெடி வெடிப்பதை தவிர்க்கவும் என்றும் மருத்துவமனை அருகில் வெடி வெடிக்கக் கூடாது எனவும் சொல்லச் சொன்னார். அதுவும் சொல்லப்பட்டது.


 
மாணவர்கள் வெடி வெடித்து மகிழ்ந்தனர். ஆசிரியர்களும் மாணவர்களுடன் வெடி வெடித்து மகிழ்ந்தனர். விழா முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஆசிரியர்கள் மாணவர்களுடன் மனநிறைவான தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். 

                                         நன்றி கூறும் தங்கமான ஆசிரியர் தங்கலீலா .

அனைவரும் மகிழ்ச்சியுடன் இன்று காணப்பட்டனர். குழந்தைகளுடன் தீபாவளிக் கொண்டாடுவது எனக்கு பேரானாந்தத்தைக்  கொடுத்தது. சிறிய உதவியாகிலும் நான் சொன்னவுடன் கொடுத்து , ஏழை மாணவர்களும் புத்தாடை அணிய உதவிய  என் ஆசிரிய பெருந்தகைகளுக்கு  இத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, November 2, 2010

மாற்றுத் திறனாளிகள்

  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் (Academic resource support for IED )என்ற தலைப்பில் பயிற்ச்சிகள் நடந்தது.அப்பயிற்ச்சியில் கலந்துக் கொண்டு , நான் அடைந்துள்ள பயன்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

IED என்பதன் விரிவாக்கம் inclusive education for differently able .


        இன்று மாற்றுத் திறனுடையக் குழந்தைகள் தமிழ்நாட்டில் சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் பயில்கின்றனர். அவர்களுக்கு உதவியாக பள்ளிகளுக்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் சிறப்பு ஆசிரியர்களை நியமித்து கண்காணிக்கிறது. மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு தங்கள் உடல்நலம் தேர்ச்சியடைய சிறப்பு மருத்துவர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள் கொண்டு அவர்களுக்கு உடற்பயிற்சி, பேச்சு பயிற்சி , நடை பயிற்சி தர டே கேர் செண்டர் நடைபெறுகிறது. (மதுரை தெற்கு வட்டார வளமையத்திற்கு மாநகராட்சி மறை மலை அடிகள் பள்ளி தெற்கு வாசல் அருகில் உள்ளது.   இதுபோல ஒவ்வொரு  வளமையத்திற்கும் தனி தனி மையங்கள் செயல் படுகின்றன)

           பெற்றோர்களும் ஒரு சோர்சாக (source )பயன் படுத்தப் படுகின்றனர். அவர்களுக்கு டே கேர்   மையம் உதவிகள் செய்கிறது. முற்றிலும் பாதிக்கப்பட்டக் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெற்றோர்கள் அவர்களை கவனிக்கும் பொருட்டு ஒரு சோர்சாகப் பயன்படுகின்றனர்.

          சாதாரணப் பள்ளிகளில் மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் படிக்கும் போது , சக மாணவன் துணைக்  கிடைக்கிறது. அவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மை அகற்றி , பிற மாணவர்களை போலத்  தாமும் படிக்க மற்றும் செயல் பட  முற்படுகின்றனர். இதனால் விரைவில் அவர்கள் தங்கள் குறைபாட்டில் இருந்து குணமடைவதுடன், சகஜ நிலை அடைந்து , கல்வியில் முழு திறனை பெறுகின்றனர்.

           ஆசிரியப் பயிற்றுனர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் தனித் தனியாக நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் பள்ளியை பார்வையிட வரும் பொழுது ,இந்த மாணவர்களையும் கண்காணிக்கின்றனர். டே கேர் சென்டர்களில் செல்லும் போது இவர்களின் உடல் நலம் பற்றி தெரிவித்து, சிறப்பு ஆசிரியர்களின் உதவிகளை பெற்றுத் தருகின்றனர்.


           சாதாரணப் பள்ளிகளில் பணிப் புரியும் ஆசிரியர்கள் . தங்கள் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதுடன். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பெறும் உதவிகளை பெற்று , அவற்றை முறையாகப் பயன் படுத்தக் கற்றுத் தருகின்றனர். . மாணவர்களின் முன்னேற்றத்திற்கு  சிறப்பு ஆசிரியர்கள் மற்றும்  மருத்துவர்கள் உதவிகளை பெற்றுத் தருகின்றனர்.

     மாணவர்களுக்கு காலிபர் ஸூ , பிரைலி சிலேட் , காது கேட்க உதவும்  கருவி , மூன்று சக்கர வண்டி, மற்றும் பல உபகரணங்களை அனைவருக்கும் கல்வி இயக்கம் தருகிறது.


     மாற்றுத் திறனாளிகள் என்பவர்கள் தங்கள் ஊனம் குறித்து மருத்துவரிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும். நாற்பது சதவீதம் மேல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.  காது கேளாமை,லோ விசன், முழுமையாக பார்வை இழந்தவர்(குருடு) ,வாய் பேசாதவர், கை, கால் இயக்க குறைபாடு (போலியோ) , மன நலம் பாதிக்கப் பட்டவர்  
என  ஊனத்தின்  வகைகள் பிரிக்கப்படுகின்றன.

        சிறப்பு பள்ளிகளில் எட்டு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் மாணவர்கள் ஆசிரியர் வீதம் உள்ளது.சாதாரணப் பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியருக்கு நாற்பது. தற்போது முப்பது என்கின்றனர். 


இனி அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பதை அடுத்தப் பதிவில் பார்ப்போம் .

Monday, November 1, 2010

மன நலம் பாதிக்கும் சி.டிக்கள்

         நான் சென்ற வாரம் மழை நாளில் என்  தோழியின் வீட்டிற்கு சென்றேன். அவரின் கணவரும் , அவரும் பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் பேப்பர் செய்திகளை விவாதித்துக் கொண்டிருந்தனர். என் தோழி அருமையாக  கவிதை எழுதுவார். அவரின் கணவர் அவருக்கு நல்ல விமர்சகர். தெள்ளத்  தெளிவாக முகத்தில் அறைவதுப் போல விமர்சனம் செய்வார். வக்கீல் என்றால் சும்மாவா...?இருவரின் விமர்சனங்களை அவர்களின் குழந்தைகளுடன் நானும் ரசிப்பேன். என் தோழியின் அத்தனை வெற்றிகளுக்குப் பின்னும் அவரின் கடும் விமர்சனம் ஒரு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்து ,நம்மை விமர்சிக்க யாரும் இல்லையே என்ற ஏக்கமும்  உண்டு .

         அன்று அவரின் மகன் படுக்கையில் படுத்திருந்தான். அவரின் மகள் கணினியில் விளையாடிக் கொண்டு இருந்தாள். சரி .. என நானும் அவர்களின் பேச்சில் பங்கு எடுக்க முயன்ற போது , "சார் ... மழையில வந்திருக்கீங்க .. டீ சாப்பிடுங்க..." என சொல்லிக் கொண்டே வழக்கம் போல டீ போட கிளம்ப " சும்மா இருங்க ... இவன் பிளாக்ல போட்டு மானத்தை வாங்கிடுவான்....இவனோட பழகி இதைத்தான் கண்டேன்..." என என்னை கடிந்துக் கொண்டே சமையல் கட்டுக்குள் நுழைந்தார். "உண்மையத் தானே எழுதுகிறார்...அதுவம் பெருமையாதானே சொல்லுகிறார்..." . " என்னமோ நான் வேலை செய்யாத மாதிரில்லா...எழுதுறான்... உங்களுக்கு வேணும்ன்னா ..பெருமையா இருக்கலாம்.. " என கடிந்துக் கொண்டே டீ. வந்தது. எப்போதும் என்னை பார்த்ததும் சந்தோசமாக வரும் அவரின் மகள் அன்று கணினியை விட்டு எழுந்திருக்க வில்லை. அவரின் மகனும் அசதியில் உறங்கிக்  கொண்டு  இருந்தான்.

      டீயை ரசித்துக் கொண்டே எங்களின் உரையாடல் அன்றைய பேப்பரில் வந்திருந்த தற்கொலை சம்பவத்தை பற்றி சென்றது. மக்கள் மனதில் தைரியத்தை இழந்து விடுகின்றனர். மேலும் சமூகத்தில் கொலை , கொள்ளை பெருத்துக் காணப்படுகிறது. "சார், கோர்டில பாருங்க இது ஒரு சர்வ சாதாரணம் .... கொலை செய்தவனுக்கு பெயில் உடனே மூவ் ஆகிவிடும்.. பின்ன என்னா... சாதரணமாக திரிவான்.." என கடிந்துக் கொண்டார். "எல்லாம் உங்க வக்கீல்க தானே செய்யிறாங்க.. " என தோழி சண்டை இழுக்க அவர் எதையோ சொல்ல முயலும் போது..." அவனை நல்ல குத்துடா... அவன் கையில உள்ள துப்பாக்கியை புடுங்குடா..." என கணினியில் ஒரு வெறியோடு என் தோழியின் மகள் விளையாடியதை பார்த்து பயந்து போய் ... பக்கத்தில் சென்றேன்.

                 கணினி திரை முழுவதும் ரத்த சிதறல்கள். என் தோழியின் மகள் ...தொடர்ந்து ஒருவரை கத்தியால் குத்தினார்...அவரிடம் உள்ள துப்பாக்கி , மற்றும் பணம் ஆகியவை தானாக கையில் வந்தது..அருகில் ஆங்காங்கே ஆண்களும் , பெண்களும் ரத்த சிதறல்களுடன் மரணம் அடைந்துக் கிடக்கிறார்கள். ஆச்சரியம்...இதை இவர்களா வாங்கிக்  கொடுத்தார்கள்? என்ற கேள்விக் குறியுடன் நான் அவர்களை நோக்க . என்தோழி ,"நான் திட்டாத நாளே கிடையாது... அதோ அவன் இப்போது தான் விளையாடி விட்டு தூங்குகிறான்.இவள் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறாள். நீங்க வந்தா எப்படி அங்கிள் என துள்ளிக் குதித்து வருவாள் ..இப்ப பாருங்க...இத நீங்களே சொல்லுங்க எல்லாம் இவரை சொல்லணும்.." என பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

       " சார்..நான் பார்க்கும் போது பைக் ஓட்டுவாள், பின் ஆம்புலன்சு ஓட்டுவாள்..எங்கெங்கோ இடித்து விடுவாள்...ஆனால் நீங்கள் இருவரும் சொல்லுவதை பார்த்தால்.." என அவரும் மானிட்டர் பார்க்க ... ரத்த சிதறல்களுடன் .. ஒரு அம்புலன்சை பறித்துக் கொண்டு .. சாலையில் செல்லுபவரை எல்லாம் இடித்து சாகடித்து கொண்டு சென்றாள். பின் வண்டியில் இருந்து இறங்கி ஒரு டிபார்டு மெண்டல் ஸ்டோருக்கு கிளம்பினால்..அங்கு அனைவரையும் அடித்து பணம் பறித்தல்.. கடைக்காரரைக்  கத்தியால் குத்தியும் , துப்பாக்கியால் சுட்டும் துணி மணிகளை அள்ளிக்கொண்டு வந்தாள், சிகை அலங்காரக்கடைக்கு சென்றாள். ரவுடித் தனமான ஒரு மேக்கப் செய்தாள்.பின்பு வெளியில் வந்து ஒரு பைக் காரனை அடித்து பைக்கை பறித்து ஓட்டினால். ...இப்படி கொலையும் , கொள்ளையுமாக விளையாட்டு தொடர்ந்தது.

          சாந்தமாக வரவேற்கும் அவளின் முகம் ...என்னைக் கூட பார்க்காமல் விளையாடக் கொண்டிருந்த  ..அவளின் சாந்த குணம் ஒரே வாரத்தில் மாறி இருந்தது... அவளின் வாயில் "குத்து டா .. கொல்லுடா... பைக்க புடுங்குடா..பின்னால ஒருத்தன் வரான் ... குத்து... துப்பாக்கி எடுத்து சுடு ...எதிர போறவகிட்ட பைக்கை பறிடா ...குத்து பணம்  பறிடா.. என்ற வன்முறை வார்த்தைகள் தானாக முளைத்து இருந்தன...மேலும் என்ன விளையாட்டு என்ற என்னையும் கடிந்துக் கொண்டாள்.

     இரண்டு மணி நேரம் தொடர்ந்து டிவி பார்த்தால் மனநலம் பாதிக்கப்படும் என்று செய்தி தாளில் பார்த்து எனக்கு சொன்ன தோழி வீட்டிலா இப்படி என்று கடிந்துக் கொண்டேன்.  நீங்கள் ஹிந்துவில் வந்த செய்தியை தானே சொன்னீர்கள்.இதோவிளையாடுகிறாளே  இவள் தின மலரில் செய்திப்படித்து சொன்னவள் என்று விவாதம் சென்றது. என் தோழியின் கணவர் உடனே அந்த விளையாட்டை டெலிட் செய்தார்.

       என் தோழியின் வீட்டில் புகுந்த வன்முறை விளையாட்டு இன்னும் எத்தனை வீடுகளில் வன்முறையை பரப்புகிறதோ...? தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு கணினி விளையாட்டை வாங்கும் முன் அதனை நன்கு தெரிந்துக் கொண்டு ... வன்முறைகள் அற்று , மூளையை வளர்க்கும் விளையாட்டுக்களை வாங்கி கொடுங்கள்.


      சாதாரணமாக , இரண்டு மணி நேரம் ஒரு வன்முறையை தினமும் பார்த்தல், அவன் மனநலம் பாதிக்கப்படுவதுடன், அவன் மனது முழுவதும் வன்முறை தொற்றிக் கொண்டு , என்ன நன்றாகப் படித்தாலும் , அது அவனை ஒரு சமூக விரோதியாகத் தான் மாற்றும்.  . உளவியல் ரீதியாக பதிப்பை ஏற்படுத்தும் . தயவு செய்து பெற்றோர்களே உங்கள் வீடுகளில் உங்களை அறியாமலே வன்முறையை வளர்க்காதீகள் . விலை கொடுத்து வன்முறையை வாங்காதீர்கள். சைக்கிள் ரேஸ் , பைக் ரேஸ் , கார் ரேஸ் , செஸ் , சீட்டுக் கட்டு போன்ற விளையாட்டுக்களை , புதிர் விளையாட்டுக்களை , வாங்கி கொடுங்கள்,கல்வி அறிவை வளர்க்கும் சி.டிக்கள் எத்தனையோ வந்துள்ளது அதனை வாங்கிக் கொடுங்கள்.

                      உங்கள் வீடுகளில் மட்டும் தடை செய்யக் கூடாது,அரசும் இது போன்ற சி. டி க்களை சென்சார் செய்து வெளியிட வேண்டும். பிளாக்கர்கள் அனைவரும் இது போன்ற சி.டிக்களின் பெயர்களை எழுதி தடை செய்ய அரசை வேண்டினால் என்ன ?

நான் கண்ட சி,டியின் பெயர்....GTA SAN AND ANDRESAN .  
.

Sunday, October 31, 2010

தீவுவாசியாகவே....

நான் பயணிக்கும் பாதை
முள்ளாக இருந்தாலும்
முன்னேச் சென்று
மலர் தூவி
தன் காலில் முள் சுமந்து
சுகம் மட்டும் தரும்
என் நட்பே...

நான் அழும் தருணங்களில்
என் கண்ணீராய்...
என் துயரம் துடைத்தாயே...

பிளாட்பாரக் கார வடைக்கு
ஏங்கியபோது ...
பின்னாலே வந்து
வாங்கித் தந்து
என் தந்தையாகிப்போனாயே...

பள்ளியில் காலடி எடுத்துவைத்த
நாள் முதலாய்
என் அருகில் இருந்து
அன்னையைப்போல
எல்லாத் தருணங்களிலும் காத்தாயே...

நான் எழுதாத பக்கங்களை
நீ எழுதி
முற்றுப்பெறச்செய்தாய்...
போட்டியில் வெற்றிப் பெறச் செய்தாயே
பரிசு மட்டும் என்னுடன்

உன்னைப்போலவே...!

நீ வராத காலைப் பொழுது
எனக்கு விடியாதே...
உன்னுடன் பேசாத இரவும்
எனக்கு கரைந்து போகாதே...
தொடர்புகள் அறுந்த
ஒரு தீவுவாசியாகவே
உன்னைக் காணாப்பொழுதுகளில்....

உன் கரம் பிடித்து
கதைத்து சென்ற கடற்கரையும்
பாலைவனாமாய் மாறியதே
நீ இல்லாமல்...

நீ இல்லா வாழ்வு
கனவாகக் கூட
இருக்கக் கூடாது
என்பதாலே இரவுகளில்
உன் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே
கண் திறந்து உறங்குகின்றேன்....

நான் கவிதையானால்
நீ கவி வரிகாளாய் இருக்கிறாய்...
நான் கதையானால்
நீ கதைக் கருவாய் இருக்கிறாய்...
நான் எழுத்தானால்
நீ பேனா மையாய் மாறி
எனக்கு உருக் கொடுக்கிறாய்...
நீ இல்லா உலகம்
எனக்கு ஒரு நரகம்
எனவே உனைத் தேடி வருகின்றேன்...
உன்னைப்பார்த்த மகிழ்ச்சி
பட்டாம்பூச்சியாய் பறக்கிறேன்
நட்புக் கொள்ளுங்கள்
வண்ணமயமான இறக்கை முளைக்கும்
பறந்துச் சொல்லுங்கள்
நட்புன் அருமையை....!

Friday, October 29, 2010

மனசு சொன்னது

மருத்துவமனையில்
சாகும் தருவாயிலுள்ள
நோயாளியை
பார்க்கும் போது பிறக்காத இரக்கம்
உன்னை பார்த்தபோது ஏற்பட்டு   
மனசு சொன்னது
நீ செத்துப்  போ என்று ...!

எனக்கு மட்டும் எமன் போல
உயிர் பறிக்கும் உரிமை இருந்தால்
உன்னை பார்த்த மாத்திரத்திலேயே
கொன்றிருப்பேன்...
இந்தியாவில் பிறந்ததினால்
அதற்கு சட்டத்தில் இடமில்லை...!

உயிர் ...
இரத்தமும் சதையுமாய் உருவானது
நீயோ
மலமும் சலமுமாய்
மனநலமும் இன்றி
உருகிக் கொண்டு இருப்பதாலே
ஈக்கள் மொய்த்த உடலை
ஈக்கள் மொய்த்த சடலமாய்
பார்க்க ஆசை படுகிறேன்
என்னை மறந்து சென்றக் காதலியை
புதைத்ததுப் போலவே
அப்படியே அள்ளி புதைக்கவே
மனம் விரும்புகிறது ....!

நடைப்பாதை
நாடக மேடை
உன்னையும் ஒரு நடிகையாகப்
பார்த்தாலும் ...
எனக்கு மட்டும் பிடிக்கவில்லை
ஆடைகள் அற்ற உன்னை
மேயும் கண்கள்
இரவு நேர ஆந்தைகள்
இரைக்கு...
நீ இறந்தே போகலாம் ...!

இரவு நேர வேட்டையில்
நகக் கீறல்களினால்
ஏற்பட்ட தொடை காயங்களில்
புழுக்கள் நெளிந்தாலும் ...
ஜன்னலோர பேருந்து வாசிகள்
சைக்கிள் , ரிக்ஷாக்காரன்
மோட்டார் வண்டிக்காரன்
என் அத்தனை காரனின்
பார்வையும் ....
காயம் படாத ....
மறைக்கப்படாத  மார்பில் அல்லவா
புழுக்களைப் போல
நெளிந்து செல்கின்றன...
இதைக் கூட அறிய முடியாத
நீ இருப்பதை விட
இறப்பதே மேல்...!

கருணை மனுக் கொடுத்து
காத்திருக்க விரும்பாததால்
நீ உடனே சாக
வழித்தெரியாமல்
முழிக்கிறேன் வலியுடனே...!

நான் உடுத்திய உடையை
உன் மீது போர்த்திய போது
என்னை பார்த்து ஏளனமாய்
சிரித்து
என் சட்டையை மட்டும் கிழித்து
எறிய வில்லை
என்னையும் சேர்த்து
எறிந்து விட்டாய்
பார்வையில் அம்மணமாய்
தெரிபவர்கள் எல்லாம்
என் மானத்தை பார்த்து
சிரித்து ஏமாளி , கோமாளி
என்கின்றனர்...
மன நோயாளிகள் .!

Wednesday, October 27, 2010

வென்று சொல்

தொலைவில் இருந்தாலும்
தொலையாமல் தான் இருக்கிறாய்...
தொலைந்துப்போன பென்சில்
தொலைவில் உள்ள உன்னை
அதனுடனே மூலை முடுக்குகளிலெல்லாம்

தேட வைத்தது...
கிடைத்தது தேடும் போது ...
நீ கொடுத்த அத்தனையும்
ஆசையுடனே அள்ளிப்பார்த்தேன்
நேற்று வரை நீ எனக்கு கொடுத்த
செண்டு பாட்டில் வரை.....
ஸ்பிரே செய்தேன்
உன் வாசனை வந்தது...
தோழமை வீசியது ...
என்னைப்போல
நீயும் எதை தொலைத்து
என்னைத் தேடுகிறாயே....
நீயும் நானும் ஒண்றாய்
ஒரு தட்டில் உணவருந்தும்
புகைப்படம் ....
வேதம் ஓதும் உன் தந்தை
கருப்பு அணிந்து சொல்லுவாரே
கடவுள் மறுப்பு என் தந்தை
இருவரும் அருகில்
நம் நட்பில்.....
அன்பாய் ஒருங்கிணைந்து இருந்தனரே...

நட்புக் கொள்
வென்று சொல்
என்னைப்போல ....

Tuesday, October 26, 2010

மதுரை சாம நத்தம் -3

  பெரியவர் வேகவேகமாக நடக்க , மதியம் வெயில் உச்சியில் அதுவும் செருப்பில்லாமல் நடக்கிறீர்களே என கேட்க நாற்பது வருடமாக செருப்பில்லாமல் பழகியாயிற்று .... பள்ளி வயதில் போட்டது ... ஒண்ணும் செய்யாது என சொல்லிக்கொண்டே தன் நடையுடன் பழைய நினைவுகளையும் வேகமாகவே பகிர்ந்துக் கொண்டார்.
                                          வேகமாகச் செல்லும் பெரியவர் சொக்கர்.

   திருஞானசம்பந்தர் தம் மூன்றாவது பதிகத்தில் சமணரை கீழ்க்கண்டவாறு சாடுகிறார்.

   தம்மை வணங்குபவருக்கு நிரம்ப ஆசிகளைச் சொல்லும் பண்பற்றவர்கள் சமணரும் சாக்கியரும் , சிவ நெறியில் சேராதவர்கள் , சிவநெறியில் செல்பவரை இகழ்ந்து அன்பில்லாது பேசுபவர். அவர் சொற்களை பொருட்படுத்த வேண்டா.

”ஆசியா ரமொழி யாரமண் சாக்கிய ரல்லா தவர் கூடி
எசியி ராமில ராய்மொழி செய்தவர் சொல்லைப் பொருளென் னேய்”

     இப்படி தம் சமயமே பெரியது என வாழ்ந்த  திருஞான சம்பந்தரின் சமயப் போரில் சமணர்களை கழுவேற்றம் செய்த  சாமநத்தம் கிராமம் இன்று அவரின் சிலையுடன் அவரை தெய்வமாகக் கருதி ஒரு கோவிலை கொண்டுள்ளது. இக் கோவில் கோபுரங்களில் சிவபுராணக் காட்சிகளும் , சிவனும் பார்வதியும் உள்ள சிலையும், முருகன் , விநாயகர் சிலையும் உள்ளன. அக்கோவிலை பராமரிக்க மன்னர் காலத்து இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு , அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இரண்டு வேளை பூசை நடைப்பெறுகிறது என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.


                    அருள்மிகு திருஞான சம்பந்தர் சுவாமிகள் ஆலயக் கோபுரம்  


அய்யனார் கோவில் எல்லையில் இருக்க , அதை கீழ்தட்டு மக்கள் பராமரிக்கிறார்கள். கோவில பூட்டப்பட்டு இருக்கிறது. அக்காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் வரவே பயப்படுவார்கள் என சொல்லிக்கொண்டே .... இருளப்பன் கோவிலுக்கு காலனி குடியிருப்புகளுக்கு ஊடே நடந்துக்கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார்.

    கிராமத்துக் கதைகள் என்றாலே அதில் சாமிக் கலப்படம் உண்டு. அதுவும் காத்துக் கருப்பு கதைகள் மிகவும் சுவரசியமாக இருக்கும். அதுவும் பெரியவர்கள் வாயால் அவர்கள் பாணியில் கேட்பது நாமே அதில் பாதிக்கப்பட்ட விதமாக இருக்கும். இக் காலத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்த நிலையில் , சக்கரத்தைக் காலில் கட்டிக் கொண்டு இயங்கும் தனிக் குடும்பச் சூழலில் கதைகள் அவர்களின் தாத்தா பாட்டிப் போன்றே காணாமல் போயிற்று என்பதுடன் மறுக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை. இன்று பள்ளிகளிலும் கதைச் சொல்லும் ஆசிரியர்கள் அதிகமில்லை , மலிந்து வருகின்றனர்.

                                                         இருளப்பர் படுக்கை      

அந்தக் காலத்தில பெண்கள் இந்த பக்கமே வரப் பயப்படுவாங்க... அதுவும் தீட்டான சமயம் இங்கு தெரியாத்தனமாக வந்தா அவ்வளவு தான் முனி அடிச்சுடும் என்றார். இப்படி தான்தெரியாத்தனமாக வந்த பெண் (ஏதோ பெயர் கூறினார்) முனி அடித்து, அப்படியே ஸ்பாட்டிலேயே அவுட் என்றார். சிறுவனாக இருக்கும் போது இங்கு வரவே பயப்படுவோம் என்றார். இருளப்பன் வேட்டைக்குச் சென்று திரும்பிய பின் படுக்க , இது தான் அவனின் படுக்கை என பட்டியக் கல் மேடையை காட்டினார். மிகவும் பயப்பக்தியுடன் செருப்பைக் கழட்டி போட்டோ எடுத்துக் கொண்டேன்.

  இருளப்பன் கோவிலுக்கு அவர் விறு விறு என்று நடந்தார். நாங்களும் அவருக்கு ஈடாக நநக்க முடியவில்லை. கோவிலுக்கு உள்ளே உள்ள மரம் நீண்டுக் கொண்டு வள்ர்ந்து சென்றது. அதில் மணி கட்டப்பட்டு இருந்தது. அது உடை மரம் என்று சொன்னார்கள். அம்மரம் வானைப் பார்த்து உயரமாக வளராமல், நெடுக்காக நீண்டு வளரும் அதை வெட்டி வெட்டி உடைத்து விடுவதால், அதற்கு உடைமரம் என்று பெயர் வந்துள்ளது என்றார்கள்.

   அய்யனார் கோவில் எதிர்புறம் கண்மாய் இருந்தது. அதில் இக்கிராமத்தில் பயன்படும் அத்தனை அசுத்த தண்ணீரும் கலப்பதைப் பார்க்கும் போது வருத்தமளித்தது.
மேலும் முறையாக பயன்படுத்தாமல் பாசி ஏறி , தண்ணீர் பச்சை பசேல் என்று இருந்தது. இதை சமநத்தம் கிராம நிர்வாகம் கவனிக்காமல் , நவின முறையில் குளத்தை கழுவேற்றம் செய்கிறது. அப்பெரியவர் பார்வைக்கு எடுத்து சென்று , குடி நீர் அவசியத்தை கூறி விடைப்பெற்றேன்.

    கிராமம் ஒரு வரலாற்று சம்பவத்தை மறந்து , முட்களுடன் , ஒரு பிற்போக்கான கிராமமாக உள்ளதை பார்க்க அதிசயமாக இருக்கிறது. நாமே தேடி பிடித்து விசயத்தை சேகரிக்க வேண்டியுள்ளது,அப்படி இருக்க இன்றைய குழந்தைகள் பழைமையை மறந்து , அஞ்சா செஞ்சுடன் வாழ்வதால் எதுவும் பயனுண்டா?   (அய்யா சாமி....இதில் எந்த அரசியல் உள் குத்தும் இல்ல...நான் மதுரையில பிழைப்பு நடத்தனும் ...ஒரு ஆதங்கத்தில் வந்தா வார்த்தை ... நான் சொக்கு வீட்டில் கதை கேட்கும் போது அவர் பேரன் பய்மின்றி... எங்களை இடையூறு விளைவிக்கும் வண்ணம் பிளாஸ்டிக் குடத்தில் தாளமிட்டான் என்பதை தான் அஞ்சா நெஞ்சு என்றேன்)       

சாமநத்தத்தில் ஒரு நூலகம் உள்ளது. அங்கே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. நிறைய சிறுசிறு கோவில்கள் உள்ளன. அவை சாதி ரீதியாக உள்ளதை பார்க்க முடிகிறது. சாயப்பட்டறை தொழில்கள் உள்ளன். ரைஸ் மில் கண்மாய்க்கு மறுபுறம் மெயின் ரோட்டில் உள்ளது. அனைவரும் மதுரை சார்ந்த தொழிலையே கொண்டுள்ளனர். சாலைகள் முறைப்படி பாராமரிக்க வில்லை என்றே படுகிறது. கிராம மக்கள் அன்பாக பழகுகிறார்கள் . மதம் சார்ந்த கிராமம் ஆதலால்  அன்பு சிறந்தரமாக  உள்ளது. அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு மட்டுமே என்று அன்புடன் அடுத்த பயணம் ...  திருப்புவனம் சிவன் கோவில்...

                                                                               அடுத்து திருப்புவனம் சிவன் கோவில்....



 

Sunday, October 24, 2010

சாம நத்தம் 2



  கீழக் குயில் குடி சமணமலையை பார்க்கும் போது சாமநத்தம் கழுவேற்றம் மிகவும் பாதிக்கவே ,சாமநத்தம் எங்குள்ளது என விசாரிக்க தொடங்கி விட்டேன். மதுரை மஹால் அருகில் செயின் மேரீஸ் பள்ளியின் பின் புறம் சிந்தாமணி ரோடு செல்கிறது அதன் வழியாக பயணம் செய்தால் நெடுங்குளம் செல்லும் வழியில் ஆறு கிலோ மீட்டருக்கு முன்பாக வலது புறம் ஒரு கிளை ரோடு பிரிகிறது, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாம நத்தம் கிராமம் உள்ளது. ஊர் செல்லும் வழியில் சாய பட்டறை காணப்படுகிறது.அக் கிராமத்தில் முதலியார்கள், யாதவர்கள் , ஒரே ஒரு சைவ குடும்பம் என கலந்து வாழ்கின்றனர். கிராமம் தெருக்களுக்கு செல்லும்  முன்பாக இடது புறம் செல்லும் பாதையில் அய்யனார் கோவிலின் வலப்புறம்  காமராசர் திறந்து  வைத்த அரிஜனக் காலனி . அதன் உள்ளே ஐம்பத்து ஐந்தாயிரம் செலவில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் என ஒரு கட்டுப்பாடான கிராமமாகவே திகழ்கிறது. 


            இருளப்பர் கோவில் முன் மதுரை சாரவணனும் , கற்பூர சொக்கும்

    சாம நத்தம் கழுவேற்றம் செய்யும் முன் சமணர்களுக்கும் , சைவ சமயத்தை சார்ந்த திருஞான சம்பந்தருக்கும் அனல் வாதம் , மற்றும் புனல் வாதம் நடந்தது. அதாவது அவர்கள் பாடிய பாடல்கள் உள்ள ஏடு அனலில் அதாவது தீயில் போடும் போது அது எரிந்து போகாமல் , அதில் உள்ள செய்திகள் அப்படியே வெளிப்படுமாம். அதே போல் தண்ணீரில் போடும் போது , அது நீரை எதிர்த்து தன் உரையை வெளிப்படுத்துமாம்  . நான் ஏற்கனவே சொன்னது போல திருஞான சம்பந்தர்  ஏடு வைகை நீரில் எதிர்த்து சென்று திருவேடகம் அடைந்ததாக வரலாறு சொல்லுகிறது.



எல்லை காக்கும் அய்யனார்  கோவில் முன் ரவி, பிரபாகர் மற்றும் பெரியவர் கற்பூர சொக்கு 


கூன் பாண்டியன் நோய் தீர்க்க சம்பந்தர் பதிகம் பாடியதாக வரலாறு கூறுகிறது. புறச் சமயம் மறுப்பில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரம் எழாம் நூற்றாண்டை சார்ந்தது. அதில் ஒவ்வொரு பத்து பாடலிலும் சமண , பௌத்த மதத்தை எதிர்த்து பாடல்கள் உள்ளன. 

  முதல் பதிகத்தில் புத்தரும் , அறிவில்லாத சமணரும் நேர் நின்று பேச முடியாது, புறம் கூறவும், வரம்புக்கு உட்படாமல் ஒரே கருத்தை சொல்லவும் செய்வர் ,உலகத்தே பிச்சை ஏற்று என்  உள்ளம் கவர்ந்த கள்வன் சிவன் ஏறும் பாடுகிறார். 

பாடல் வரிகள் இதோ...
"புத்தரோடு பொறி யில் சம ணும்புறங் கூற நெறி நில்லா      
ஒத்தசொல் லவுல கம்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன் "

                                              சாம நத்தம் இருளப்பர் படுக்கை 

     பெரியவர் கதை சொன்னது மட்டும் அல்லாது  எங்களுடனே வந்து , அதோ அய்யனார் கோவில் இருக்கிறதே , அதன் மேற்கே உள்ள திடல் தான் சமணர் கழுவேற்றப்பட்டு , பின் எரித்த புதைக்கப்பட்ட இடம் . இது முழுவதும் நான் படிக்கும் காலத்தில் ஒரே சாம்பல் திட்டாக இருக்கும் என்று தன் நினைவலைகளை பின்னோக்கி செலுத்தி எங்களையும் அந்தக் காலத்திற்கு அழைத்துச் சென்றார். 



   சீர்வாகனம் தூக்கும் ஒருவர் மீனாச்சி அம்மன் கோபுரம் உச்சில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டான் என்ற வரலாறு , மதத்தின் மீது மனிதனுக்கு  உள்ள பிடிப்பை எடுத்துக் கூறியது . சமணர்களுக்கும் , சைவர்களுக்கும் சண்டை வந்த போது , சமணர்கள் சைவக் கோவில்களை இடித்து  , அவைகளை சேதப்படுத்தியதாகச்  சொல்கிறார்கள். அவ்வாறு  வரும் போது மீனாச்சி அம்மன் கோவிலை நெருங்கி அழிக்க  முற்படும் போது ,சீர் வாகனம் தூக்கும் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறி , தன் மண்டை சிதறி ரத்தம் தெறிக்கும் வண்ணம் தற்கொலை செய்து கொண்டானாம் , அதை பார்த்தவர்கள் ஏற்கனவே ரத்தம் சிந்திய கோவிலை அழிப்பதில்லை என்பதால் , அப்படியே விட்டு விட்டு சென்றனராம்.இது ஐதீகம் என்கின்றனர்.




          உச்சத் திடல் உள்ள பகுதி பணிக்களுக்கு பின்னால் காமராஜர் திறந்த காலனி

இவ்வொரு மதத்தின் மீது  பற்றுக் கொண்டு தன்னை தானே அழித்துக் கொண்ட சீர்வாகணனுக்கு , உத்திர பூஞ்சை இரண்டு ஏக்கர் ஆகவும், சாவன் செய் இரண்டு ஏக்கர் ஆகவும் மன்னனால் வழங்க்கப்பட்டதாகவும் செய்தி உள்ளது. அந்த நிலங்களை அவர்களின் வழித் தோன்றல்கள் விற்று விட்டதாகவும் சொல்கிறார்கள்.



      நாயக்கர் காலத்தில் இந்த சீர் தூக்கும் முறை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் , தற்போது அது திருவாப்புடையார் கோவில் நடைபெறுவதாகவும் சொல்கிறார்கள். 


                                                                                  சாம நத்தம் கிராம் பற்றி செய்திகள் சாம்பல் பறக்க தொடரும்..... 

Saturday, October 23, 2010

சாம நத்தம்

    சாம நத்தம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அங்கு கழுவேற்றம் நடந்ததற்கான அடையாளங்கள் எதுவும் இல்லை என்பதுபோல் கிராமம் உறங்கி கிடக்கிறது . முகவரி தொலைத்த சிறுவர்களை போன்ற உணர்வுடன் நின்றிருந்த எங்களை பார்த்த பெரியவர் விசாரித்து , கொஞ்சம் தள்ளி போங்க .. திருஞான  சம்பந்தர் கோவில் இருக்கு, ஊர் பெரியவர் யாராவது இருப்பாங்க கேட்டு தெரிஞ்சுக்கங்க என வழி அனுப்பினார்.


           இந்த பகுதியை காட்டி இது தான் சமணர்களை எரித்த இடம் என்கிறார்கள் .

                 திருஞான சம்பந்தர் கோவில் நாங்கள் சென்ற போது பூட்டி இருந்தது. கோவிலில்  ஒரு பெரியவர் அமர்ந்து இருந்தார். நடக்க முடிய வில்லை. கோவில் பூசாரி வீடு அருகில் தான் என்று கூறி யாரையோ அழைக்க ,ஒருவர் ஓடி வந்து நீங்கள் யார் எந்த பத்திரிகை என விசாரிக்க ,இல்லை நான் பொழுது போகாமல் மதுரையின் வரலாற்றி தோண்டுகின்றேன் என மனசு வந்தாலும் , சாமநத்தம் கிராமம் பற்றி அறிந்து செல்ல வந்திருக்கும் ஒரு பள்ளியின் ஆசிரியர் என்றே சொல்ல ...காரை திருப்புங்க என அழைத்துச் சென்றார்.

 எங்களை கற்பூரசொக்கு என்ற என்பது வயது பெரியவரிடம் அழைத்துச் சென்றார். கிராமம் அதற்கே உரிய அழகுடன் சிறியதாக இருந்தது.  மேல் மட்ட சாதிக் காரர்கள் ஒருபுறமும் , கீழ் தட்டு மக்கள் ஒருபுறமும் இருந்தனர். இதில் கீழ்தட்டு மக்களுக்கான குடியிருப்புக்கள் காமராஜரால் திறந்து  வைக்கப்பட்டு உள்ளது.இந்த குடியிருப்புகளுக்கு  மேற்கே தான் சமணர்களை கழுவேற்றம் செய்து, எரித்ததாக அந்த பெரியவர் சொல்கிறார். அவர் சிறுவனாக இருக்கும் போது இந்த சாம்பலை நெற்றியில் பூசி , பள்ளிக்கு செல்வாராம் அது மூன்று நாள்களுக்கு அழியாதாம்  என வரலாற்றை தமக்கு  தெரிந்த மாட்டில் சொன்னார்.

                           காமராஜர் திறந்து வைத்ததாகச் சொல்லப்படும் குடியிருப்பு பகுதி

   கூன் பாண்டியன் சமண மதத்தையும் , ராணி மங்கையர்கரசி சைவ சமயத்தையும் தழுவிய போது , மன்னனின் வெப்பு நோயை திருஞான சம்பந்தர் போக்கினார் என்றும் , அவர்களுக்குள் விவாதம் நடந்தது அப்படி நடக்கும் போது ,ஏடு வைகை ஆற்றில் விடும் போது சைவர்கள் விட்ட ஏடு மேற்கு நோக்கி சென்று அடைந்த இடம் திருவேடகம் எனவும் , அதுபோல சமணர்கள் விட்ட ஏடு கிழக்கு நோக்கி சென்ற இடம் திருப்பவனம் என்றும் கூறுகிறார். இன்றும் திருப்பவனத்தில் சிவன் கோவில் நாயக்கர் காலத்தை சார்ந்தது வரலாற்று சான்றாக உள்ளது என கதை சொல்ல ஆரம்பித்தார்.

                                             திருஞான  சம்பந்தர் கோவில் கோபுரம்

மேலக்கால் அதாவது கொடிமங்கலம் பகுதியில் இருந்து சாமநத்தம் வரை கழுவேற்றம் நடந்தது , சாமணர்கள் இங்கு தான் எரிக்கப்பட்டு சாம்பல் பரவி கிடந்ததால் இந்த ஊர் சாம்பல் நத்தம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள சம்பந்தர் கோவிலுக்கு இரண்டு ஏக்கர் நிலம் பாண்டியன் காலத்தில் வழங்கப்பட்டது. அது இப்போதும் கிராமத்து சபையால் பாராமரிக்கப்படுகிறது. இந்த நிலம் இன்று குத்தகைக்கு விடப்பட்டு , அதன் வருமானத்தின் மூலம் கோவில் பூஜை நடக்கிறது என்கிறார்.

    சித்திரை திருவிழா பற்றி கேட்கும் போது ... ஆறாம் நாள் கழுவேற்றம் இப்போது இல்லை. அது கோவிலிலேயே நடக்கிறது என்கிறார். இக்கிராமம் செங்குந்த முதலியாருக்கு பாத்தியப்பட்டது என்றும் கதை கூறுகிறார்.

         இந்த கிராமம் மீனாட்சி கிராமம் என்றும் அழைக்கப்பட்டது . இது சீர் வாதக் கட்டளையை சார்ந்தது. அறுபத்தி நான்கு பேர் மீனாச்சி கல்யாணத்தின் போது சுவாமி சிலையை சுமப்போம் . முன்னர் சுவாமி சிலையை சுமப்பவர்கள் எழுகடல் தெருவில் தான் இருந்தோம் , பின்பு ராணியால் எங்களுக்கு இந்த கிராமம் வழங்கப்பட்டது என்கிறார்

          மீனாட்சிக்கு பங்குனி சீர் மீனாட்சி திருக்கோவிலில் இருந்து திருப்புவனம் கொண்டு செல்லப்படும் மீண்டும் அங்கிருத்து கோவிலுக்கு ஒரே நாளில் கொண்டு சேர்க்கப்படும் . அதன் பாதை சாமநத்தம் , பனையூர், கீலடி , சிலைமான், மணலூர், திருப்புவனம் ஆகும்.  இப்படி ஒருநாள் சீர் எடுத்து செல்லும் போது திருப்புவனம் அருகில் ஆற்றில் வெள்ளம் வந்தது , அப்போது கழுத்தளவு வெள்ளத்தில் நீந்தி சீர் தூக்கி வந்ததால் அவர்களுக்கு வீர செங்குந்த முதலியார் என பெயர் வந்தது என்கிறார்.

         பங்குனி மாதம் பொன்னடியார் நாடகம் நடத்த கோவிலில் இருந்து சீர் சுமப்பது எங்கள் வழக்கம் . சொக்கரை சுமக்க இருபத்தி நான்கு நபர்கள். அதாவது நான்கு புறமும் ஆறு நபர் என்று இருப்பத்தி நான்கு நபர்கள். அது போல மீனாட்சி அம்மனை சுமக்க இருபது நபர் . நான்கு  காலுக்கு ஐந்து நபர்கள் வீதம் இருபது ஆட்கள். பிள்ளையாருக்கு எட்டுபேர். தண்டீஸ்வரருக்கு நன்கு பேர் . முருகனுக்கு நான்கு  பேர். அகுதாங்கு அதாவது சப்ஸ்டிடுட் நான்கு பேர். மொத்தம் அறுபத்தி  நான்கு நபர்கள். என கணக்கு கூறினார்.  எட்டு எட்டு விதமாக அறுபத்தி நான்கு பங்காளிகள்.
                                கற்பூர சொக்கு , ரவி சந்திரன் மற்றும் madurai  saravanan
                            பேசிக் கொண்டிருந்த எங்கள் மீது சம்பல் புழுதி வீசி பெரியார் பேருந்து நிலையம் போர்டு மாட்டிய பேருந்து பறந்து சென்றது. வாங்க அந்த மேட்டுப் பகுதியை காட்டுகிறேன் என முற்காடுகள் நிறைந்த பகுதிக்கு அழைத்து சென்றார்.

                                                                                            சாமபல் பறக்கும்.....
                                                             

Friday, October 22, 2010

காலடி நிழல்

என் நிழல் எனக்கே பாடம் கற்றுத் தந்தது...
தன் நிழல் காலடியில் விழும் போது
என்னை உணர்ந்தேன்....
வாழ்வும் நீண்டும் , குறுகியும்
நிழல் போலவே மாறி மாறி வரும்...
வாழ்வும்  எப்போதும் மாறுபட்டே
நிழல் போலத் தோன்றினாலும்
உழைப்பில் வியர்வைச் சூரியனில் ....!
அதிகாலை போல நீண்டே
வசந்தத்தின் தொடக்காமாய் இருக்கும்..!
உழைத்துப்பார் வாழ்வின் அருமை
உன் காலடி நிழல் போல
உன்னுடன் ஒட்டிக் கொள்ளும் ... !