Monday, November 1, 2010

மன நலம் பாதிக்கும் சி.டிக்கள்

         நான் சென்ற வாரம் மழை நாளில் என்  தோழியின் வீட்டிற்கு சென்றேன். அவரின் கணவரும் , அவரும் பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் பேப்பர் செய்திகளை விவாதித்துக் கொண்டிருந்தனர். என் தோழி அருமையாக  கவிதை எழுதுவார். அவரின் கணவர் அவருக்கு நல்ல விமர்சகர். தெள்ளத்  தெளிவாக முகத்தில் அறைவதுப் போல விமர்சனம் செய்வார். வக்கீல் என்றால் சும்மாவா...?இருவரின் விமர்சனங்களை அவர்களின் குழந்தைகளுடன் நானும் ரசிப்பேன். என் தோழியின் அத்தனை வெற்றிகளுக்குப் பின்னும் அவரின் கடும் விமர்சனம் ஒரு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்து ,நம்மை விமர்சிக்க யாரும் இல்லையே என்ற ஏக்கமும்  உண்டு .

         அன்று அவரின் மகன் படுக்கையில் படுத்திருந்தான். அவரின் மகள் கணினியில் விளையாடிக் கொண்டு இருந்தாள். சரி .. என நானும் அவர்களின் பேச்சில் பங்கு எடுக்க முயன்ற போது , "சார் ... மழையில வந்திருக்கீங்க .. டீ சாப்பிடுங்க..." என சொல்லிக் கொண்டே வழக்கம் போல டீ போட கிளம்ப " சும்மா இருங்க ... இவன் பிளாக்ல போட்டு மானத்தை வாங்கிடுவான்....இவனோட பழகி இதைத்தான் கண்டேன்..." என என்னை கடிந்துக் கொண்டே சமையல் கட்டுக்குள் நுழைந்தார். "உண்மையத் தானே எழுதுகிறார்...அதுவம் பெருமையாதானே சொல்லுகிறார்..." . " என்னமோ நான் வேலை செய்யாத மாதிரில்லா...எழுதுறான்... உங்களுக்கு வேணும்ன்னா ..பெருமையா இருக்கலாம்.. " என கடிந்துக் கொண்டே டீ. வந்தது. எப்போதும் என்னை பார்த்ததும் சந்தோசமாக வரும் அவரின் மகள் அன்று கணினியை விட்டு எழுந்திருக்க வில்லை. அவரின் மகனும் அசதியில் உறங்கிக்  கொண்டு  இருந்தான்.

      டீயை ரசித்துக் கொண்டே எங்களின் உரையாடல் அன்றைய பேப்பரில் வந்திருந்த தற்கொலை சம்பவத்தை பற்றி சென்றது. மக்கள் மனதில் தைரியத்தை இழந்து விடுகின்றனர். மேலும் சமூகத்தில் கொலை , கொள்ளை பெருத்துக் காணப்படுகிறது. "சார், கோர்டில பாருங்க இது ஒரு சர்வ சாதாரணம் .... கொலை செய்தவனுக்கு பெயில் உடனே மூவ் ஆகிவிடும்.. பின்ன என்னா... சாதரணமாக திரிவான்.." என கடிந்துக் கொண்டார். "எல்லாம் உங்க வக்கீல்க தானே செய்யிறாங்க.. " என தோழி சண்டை இழுக்க அவர் எதையோ சொல்ல முயலும் போது..." அவனை நல்ல குத்துடா... அவன் கையில உள்ள துப்பாக்கியை புடுங்குடா..." என கணினியில் ஒரு வெறியோடு என் தோழியின் மகள் விளையாடியதை பார்த்து பயந்து போய் ... பக்கத்தில் சென்றேன்.

                 கணினி திரை முழுவதும் ரத்த சிதறல்கள். என் தோழியின் மகள் ...தொடர்ந்து ஒருவரை கத்தியால் குத்தினார்...அவரிடம் உள்ள துப்பாக்கி , மற்றும் பணம் ஆகியவை தானாக கையில் வந்தது..அருகில் ஆங்காங்கே ஆண்களும் , பெண்களும் ரத்த சிதறல்களுடன் மரணம் அடைந்துக் கிடக்கிறார்கள். ஆச்சரியம்...இதை இவர்களா வாங்கிக்  கொடுத்தார்கள்? என்ற கேள்விக் குறியுடன் நான் அவர்களை நோக்க . என்தோழி ,"நான் திட்டாத நாளே கிடையாது... அதோ அவன் இப்போது தான் விளையாடி விட்டு தூங்குகிறான்.இவள் இப்போது தான் ஆரம்பித்து இருக்கிறாள். நீங்க வந்தா எப்படி அங்கிள் என துள்ளிக் குதித்து வருவாள் ..இப்ப பாருங்க...இத நீங்களே சொல்லுங்க எல்லாம் இவரை சொல்லணும்.." என பொரிந்து தள்ள ஆரம்பித்தார்.

       " சார்..நான் பார்க்கும் போது பைக் ஓட்டுவாள், பின் ஆம்புலன்சு ஓட்டுவாள்..எங்கெங்கோ இடித்து விடுவாள்...ஆனால் நீங்கள் இருவரும் சொல்லுவதை பார்த்தால்.." என அவரும் மானிட்டர் பார்க்க ... ரத்த சிதறல்களுடன் .. ஒரு அம்புலன்சை பறித்துக் கொண்டு .. சாலையில் செல்லுபவரை எல்லாம் இடித்து சாகடித்து கொண்டு சென்றாள். பின் வண்டியில் இருந்து இறங்கி ஒரு டிபார்டு மெண்டல் ஸ்டோருக்கு கிளம்பினால்..அங்கு அனைவரையும் அடித்து பணம் பறித்தல்.. கடைக்காரரைக்  கத்தியால் குத்தியும் , துப்பாக்கியால் சுட்டும் துணி மணிகளை அள்ளிக்கொண்டு வந்தாள், சிகை அலங்காரக்கடைக்கு சென்றாள். ரவுடித் தனமான ஒரு மேக்கப் செய்தாள்.பின்பு வெளியில் வந்து ஒரு பைக் காரனை அடித்து பைக்கை பறித்து ஓட்டினால். ...இப்படி கொலையும் , கொள்ளையுமாக விளையாட்டு தொடர்ந்தது.

          சாந்தமாக வரவேற்கும் அவளின் முகம் ...என்னைக் கூட பார்க்காமல் விளையாடக் கொண்டிருந்த  ..அவளின் சாந்த குணம் ஒரே வாரத்தில் மாறி இருந்தது... அவளின் வாயில் "குத்து டா .. கொல்லுடா... பைக்க புடுங்குடா..பின்னால ஒருத்தன் வரான் ... குத்து... துப்பாக்கி எடுத்து சுடு ...எதிர போறவகிட்ட பைக்கை பறிடா ...குத்து பணம்  பறிடா.. என்ற வன்முறை வார்த்தைகள் தானாக முளைத்து இருந்தன...மேலும் என்ன விளையாட்டு என்ற என்னையும் கடிந்துக் கொண்டாள்.

     இரண்டு மணி நேரம் தொடர்ந்து டிவி பார்த்தால் மனநலம் பாதிக்கப்படும் என்று செய்தி தாளில் பார்த்து எனக்கு சொன்ன தோழி வீட்டிலா இப்படி என்று கடிந்துக் கொண்டேன்.  நீங்கள் ஹிந்துவில் வந்த செய்தியை தானே சொன்னீர்கள்.இதோவிளையாடுகிறாளே  இவள் தின மலரில் செய்திப்படித்து சொன்னவள் என்று விவாதம் சென்றது. என் தோழியின் கணவர் உடனே அந்த விளையாட்டை டெலிட் செய்தார்.

       என் தோழியின் வீட்டில் புகுந்த வன்முறை விளையாட்டு இன்னும் எத்தனை வீடுகளில் வன்முறையை பரப்புகிறதோ...? தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு கணினி விளையாட்டை வாங்கும் முன் அதனை நன்கு தெரிந்துக் கொண்டு ... வன்முறைகள் அற்று , மூளையை வளர்க்கும் விளையாட்டுக்களை வாங்கி கொடுங்கள்.


      சாதாரணமாக , இரண்டு மணி நேரம் ஒரு வன்முறையை தினமும் பார்த்தல், அவன் மனநலம் பாதிக்கப்படுவதுடன், அவன் மனது முழுவதும் வன்முறை தொற்றிக் கொண்டு , என்ன நன்றாகப் படித்தாலும் , அது அவனை ஒரு சமூக விரோதியாகத் தான் மாற்றும்.  . உளவியல் ரீதியாக பதிப்பை ஏற்படுத்தும் . தயவு செய்து பெற்றோர்களே உங்கள் வீடுகளில் உங்களை அறியாமலே வன்முறையை வளர்க்காதீகள் . விலை கொடுத்து வன்முறையை வாங்காதீர்கள். சைக்கிள் ரேஸ் , பைக் ரேஸ் , கார் ரேஸ் , செஸ் , சீட்டுக் கட்டு போன்ற விளையாட்டுக்களை , புதிர் விளையாட்டுக்களை , வாங்கி கொடுங்கள்,கல்வி அறிவை வளர்க்கும் சி.டிக்கள் எத்தனையோ வந்துள்ளது அதனை வாங்கிக் கொடுங்கள்.

                      உங்கள் வீடுகளில் மட்டும் தடை செய்யக் கூடாது,அரசும் இது போன்ற சி. டி க்களை சென்சார் செய்து வெளியிட வேண்டும். பிளாக்கர்கள் அனைவரும் இது போன்ற சி.டிக்களின் பெயர்களை எழுதி தடை செய்ய அரசை வேண்டினால் என்ன ?

நான் கண்ட சி,டியின் பெயர்....GTA SAN AND ANDRESAN .  
.

20 comments:

அலைகள் பாலா said...

ஆமாம், அந்த கேம் கிராண்ட் தேப்ட் ஆட்டோ. அதில் நெறைய பார்ட் இருக்கு. இன்னும் கொடூரமாகலாம் உண்டு. இப்போது சிறுசுகளிடையே அது ஒரு பேஷன். எத்தனை பார்ட் முடிச்சிருக்கோம்னு போட்டி.

அன்பரசன் said...

// சாதாரணமாக , இரண்டு மணி நேரம் ஒரு வன்முறையை தினமும் பார்த்தல், அவன் மனநலம் பாதிக்கப்படுவதுடன், அவன் மனது முழுவதும் வன்முறை தொற்றிக் கொண்டு , என்ன நன்றாகப் படித்தாலும் , அது அவனை ஒரு சமூக விரோதியாகத் தான் மாறும் . உளவியல் ரீதியாக பதிப்பை ஏற்படுத்தும் //

கண்டிப்பாக

கார்த்திகைப் பாண்டியன் said...

நியாயமான ஆதங்கம்.. குழந்தைகளுக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்பதை நாமும்
சரியாகத் தீர்மானிக்க வேண்டும்..

Chitra said...

சாதாரணமாக , இரண்டு மணி நேரம் ஒரு வன்முறையை தினமும் பார்த்தல், அவன் மனநலம் பாதிக்கப்படுவதுடன், அவன் மனது முழுவதும் வன்முறை தொற்றிக் கொண்டு , என்ன நன்றாகப் படித்தாலும் , அது அவனை ஒரு சமூக விரோதியாகத் தான் மாற்றும். . உளவியல் ரீதியாக பதிப்பை ஏற்படுத்தும் . தயவு செய்து பெற்றோர்களே உங்கள் வீடுகளில் உங்களை அறியாமலே வன்முறையை வளர்க்காதீகள் .


....கருத்துள்ள அறிவுரை. இந்த விழிப்புணர்வு பெற்றோருக்கு முதலில் அவசியம். அவர்களே, பின்விளைவுகளை உணர்வதில்லை.

ம.தி.சுதா said...

சகோதரா தங்களின் சமூகப் பொறுப்பு பிடித்திருக்கிறது... ஆனால் தங்களின் திட்டம் எந்தளவிற்கு சாத்தியப்படுமோ தெரியாது( அதுவும் தமிழ் நாட்டில்)

முகுந்த் அம்மா said...

//சாந்தமாக வரவேற்கும் அவளின் முகம் ...என்னைக் கூட பார்க்காமல் விளையாடக் கொண்டிருந்த ..அவளின் சாந்த குணம் ஒரே வாரத்தில் மாறி இருந்தது... அவளின் வாயில் "குத்து டா .. கொல்லுடா... பைக்க புடுங்குடா..பின்னால ஒருத்தன் வரான் ... குத்து... துப்பாக்கி எடுத்து சுடு ...எதிர போறவகிட்ட பைக்கை பறிடா ...குத்து பணம் பறிடா.. என்ற வன்முறை வார்த்தைகள் தானாக முளைத்து இருந்தன...//


டிவி மற்றும் வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகளிடம் பலரிடமும் இது போன்ற மாற்றத்தை நானும் கண்டிருக்கிறேன்.

// உங்கள் வீடுகளில் மட்டும் தடை செய்யக் கூடாது,அரசும் இது போன்ற சி. டி க்களை சென்சார் செய்து வெளியிட வேண்டும். பிளாக்கர்கள் அனைவரும் இது போன்ற சி.டிக்களின் பெயர்களை எழுதி தடை செய்ய அரசை வேண்டினால் என்ன ?//

நல்ல முயற்சி. திரைப்படங்களுக்கு தணிக்கை இருப்பது போல சி. டிக்களுக்கும் டிவி நிகழ்ச்சிகளுக்கும் அவசியம் தணிக்கை இருக்க வேண்டும். அரசு செய்யுமா? .

சமூக அக்கரையுள்ள நல்ல இடுகை.

Ananthi said...

///உங்கள் வீடுகளில் மட்டும் தடை செய்யக் கூடாது,அரசும் இது போன்ற சி. டி க்களை சென்சார் செய்து வெளியிட வேண்டும். ///

அவசியமான, அக்கறையான பதிவு.. நம்மால் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும்..! இப்போது, CD வாங்கி விளையாடுவது தவிர... இன்டர்நெட்டில் நிறைய... இது போல் ப்ரீ கேம்ஸ் இருக்கு..

நம் குழந்தைகள் மேல் எப்பவும் ஒரு கண் வைத்திருப்பது நல்லது..

ஸ்ரீராம். said...

கண்டிப்பாகத் தவிர்க்கப் படவேண்டிய விஷயம். அதே போல RAW, WWF போன்றவையும். டிவியிலும் டென் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளில் இதே போன்று உண்டு. என்ன கொடூரமான நிகழ்சிகள்..இவற்றை ஒன்றும் செய்ய முடிவதில்லை. குழந்தைகளின் இன்றைய ஆதர்ச சினிமா ஹீரோக்கள் கூட திரையில் ரத்தம் சிந்த சிந்தக் காட்டும் வன்முறைகள் கூட தடை செய்யப் பட வேண்டியவைதான்.

பார்வையாளன் said...

உங்கள் ஆதங்கம, கவலை நியாயமானதுதான்...
ஆனால் இதை விட வக்கிரமான சிந்தனைகள் பரவுவது தொலைகாட்சி மூலம்தான்

சி.பி.செந்தில்குமார் said...

மாசத்தோட ஓப்பனிங்கலயே கலக்கலான கருத்துள்ள பதிவு

ஆனந்தி.. said...

ரொம்ப உபயோகமான பதிவு !!

வார்த்தை said...

is this the way you really experience life or for narration sake you have adopted this style?
it was more like reading an article by "anthumani" (i'm mentioning to the style of presentation and not a word about message).

it would be better if you could comeup with your own style saravanan
(with no offence)

angelin said...

nalla padhivu.idhu oru paadam ellorukkum.
when we watch a violent scene in tv or cinema we get nightmares.just think about these little ones.

தங்கம்பழனி said...

மிகவும் பயனுள்ள பதிவு! பெற்றோர்களுக்கு அதுவும் இளம் பெற்றோர்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பதிவு.. வாழ்த்துக்கள்!

அரசன் said...

ஆசிரியரே உங்களின் கூற்று மிகவும் உண்மை...

இன்றைய இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு நீங்கள் கூறிய இந்த ஒற்றை காரணம் மிகப்பெரிய உதாரணம்..

இந்த அவசர வாழ்க்கையில் பிள்ளைகளை சரியாக கவனிக்க முடியாமல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கூட கவனிக்காமல் அலுவலகம் சென்று பிள்ளைகளுக்கு பணம் சேர்க்கும் பெற்றோர்கள் ஒருமணித்துளி சிந்திக்க வேண்டும்....

Vinoth said...

இந்த சிடி வெளியில் எங்கும் கிடைக்கது.. ஒரிஜினல் தான் அதுவும் விலை அதிகம். பெறும்பாலும் நெட்டில் இருந்து எடுக்கபடும் திருட்டு நகல் பென் டிரைவ் முலம் காப்பி செய்யப்படும்...

இதை சட்டம் போட்டு எல்லாம் தடுக்க முடியாது.
சென்சர்ர் இன்டெர் நெட்டுக்கும் சத்தியம் இல்லை.

குழந்தகைகளை நாமே க்ண்காணிப்பது ஒன்றுதான் சாத்தியம் .

புதுகைத் தென்றல் said...

ஆமாங்க எனக்கும் இந்த எண்ணம் உண்டு. திருடன் போலிஸ் விளையாட்டாக நம் பிள்ளை போலிஸிடமிருந்து தப்பித்து ஓட பார்க்கும் விளையாட்டு பற்றி தெரிந்த பொழுது உடன் தடை போட்டுவிட்டேன். டாம்& ஜெர்ரி ஷோ கூட வன்முறையை வளர்க்கும்னு மனநல மருத்துவர் சொன்னப்ப ஷாக்கா இருந்துச்சு. அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

ரொம்ப எச்சரிக்கையா இருக்கவேண்டிய காலமிது.. நிறைய கார்ட்டூன் தொடர்கள்கூட பசங்க பார்க்கமுடியாத அளவுக்கு வன்முறை நிறைந்ததா இருக்கு.. தென்றல் சொன்னதுபோல் டாம்&ஜெர்ரி உட்பட.

சீரியல்கள் பெரியவங்க மனசைக்கெடுக்குதுன்னா சிறுசுகள் மனசைக்கெடுக்க இதுமாதிரி எக்கச்சக்கம்..

கனாக்காதலன் said...

வருத்தமாக இருக்கிறது இன்றைய தலைமுறையை நினைத்தால். இவர்களில் எத்தனை பேருக்கு பாட்டி தாத்தாவிடம் கதை கேட்கும் பாக்கியம் கிடைக்கிறது ? ம்ம்ம்...

சுபத்ரா said...

அன்புடன் ஆனந்தி சொன்ன மாதிரி குழந்தைகளை நாம் சாதாரணமாக நினைத்துவிடாமல் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

Post a Comment