Thursday, July 7, 2011

கடைசி நிமிடம்


     இன்று மாலை மதுரையில், ஆறு மணி வாக்கில் தூர ஆரம்பித்த
மழை , சிறிது சிறிதாக பெருத்து கனமழையாக பொழியத்
துவங்கியது. பள்ளியில் இருந்து சுமார் ஐந்து மணியளவில் கிளம்பும்
போது பேருந்திலிருந்து ஒரு மாணவன் அழுகையுடன் ஓடி வந்தான்.
என்னடா என விசாரிக்க , என் தங்கை என்னுடன் காலையில்
வந்தாள். ஆனால் இப்போது பேருந்தில் காணவில்லை என
கதறினான். பேருந்தில் துணைக்குச் செல்லும் ஆசிரியரும் உடன்
வந்தார். விசாரித்து பின்பு, இரண்டாம் வகுப்பு ஆசிரியைக்கு போன்
போட்டேன். எடுக்க வில்லை. தொடர்ந்து தொடர்பு கொண்டும்
பயனில்லை. இப்படியும் பல சமயங்களில் ஆசிரியர்கள் இருப்பார்கள்.
கேட்டால், பைக்கு(bag) அடியில் இருந்தது, அதானால் கேட்க
வில்லை என்பார்கள் . அதாவது சரி செல்லை எடுக்காமவா
இருப்பார்கள் வீட்டில் போயாவது மிஸ்டு கால் பார்த்து உங்களிடம்
விசாரிப்பார்கள் இல்லையா? என நீங்கள் கேட்டால், அதை உங்களின்
முட்டாள் தனம் என்று தான் சொல்லுவேன். இப்படி பட்ட ஆசிரியர்களின்
நடவடிக்கையின் போது என் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற
மரியாதைக்கு உரிய ஜெயலெட்சுமி ஆசிரியர் தான் நினைவுக்கு
வருவார். அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தை, “சார் ,
தேவையில்லாமல் டென்சன் ஆகாதீங்க… அவங்க அவுங்க செய்யிற
பாவம், தொழிலுக்கு செய்கிற தூரோகத்துக்கு கடவுள் இடம் பதில் சொல்ல
வேண்டி வரும். இதே போல அவுங்க பிள்ளைகளும்
பாதிக்க படுவாங்க.. இந்த பாவமெல்லாம் சும்மா விடாது , நம்ம
கடமையை நாம் சரியா செய்யணும் .. அதுவே போதும்” என்பார்.
அடுத்ததாக மற்றொரு ஆண் ஆசிரியரிடம் போன் செய்தேன். உடனே
போன் எடுத்து சார் அந்த பெண் இன்று பள்ளிக்கு வரவில்லை
என்றார். ”சார், அவன் அண்ணன் அழைத்து வந்ததாக சொல்கிறான் ,
நல்லா யோசனைப் பண்ணி சொல்லுங்க” என்றேன். ”சார், கட்டாயம்
வரலை, சார் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, அவ அண்ணன்
மட்டும் தான் வந்தான்”. “ ஏன் காலையிலேயே அவனிடம்
வாராததற்கு காரணம் கேட்கவில்லை..?” “ இல்லை சார்.. அந்த பெண்
வரவில்லை ”. ”சரி வீட்டிற்கு போய் பார்க்க சொல்லுகிறேன்.
தேவையின்னா கூப்பிடுகிறேன்” என சொல்லி , அந்த மாணவனை
சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.

அடுத்த விநாடி , ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் விரைவாக வந்து , "சார்
என் செல் போனை காணாம், சார்" என்றார். எனக்கு தலை சுற்ற
ஆரம்பித்தது. சரியாக தேட சொன்னேன். அவர் அருகில் இருந்த ஆசிரியர்
”சார், ரீங் அடிக்கிறேன் சார்... சவுண்டு இங்க கேட்கலை... “
“டீச்சர் , அவசரப்படாதீங்க... பொறுமையா பேக்கிலத் தேடுங்க..”
”சார், எல்லாத்தையும் தேடிட்டேன் சார்...,பிள்ளைகள் யாரும்
எடுத்திருப்பாங்களான்னு தெரியலை..”
”டீச்சர் , அப்படியெல்லாம் இருக்காது...நல்லா யோசனைப் பண்ணுங்க..
வேனுக்கு போகும் முன் செல் போன் இருந்ததா..?”
”அதான் சார் ஞாபகம் இல்லை...ஆனா பையில காணாம்..”
”பொறுமையா இருங்க...” என சொல்லி, பிள்ளையை காணவில்லை என்ற
ஆசிரியருக்கு போன் அடித்து விசாரிக்கலாம் என முயற்சித்தால் , அவரும்
செல் போனை எடுக்க வில்லை. அடுத்ததாக மற்றொரு பேருந்தில்
செல்லும் ஆசிரியருக்கு போன் செய்தேன். அவர் போன் எடுத்தார்.
அவரிடம் அந்த பஸ்ஸில் காணவில்லை என்ற தேடிய இரண்டாம்
வகுப்புக் குழந்தை இருக்கிறதா என விசாரிக்க சொன்னேன். மேலும்
அவரிடம் காணமல் போன செல் போன் குறித்து ஐந்தாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களிடம் விசாரிக்க சொன்னோன். அவரும் சரி என்று சொல்லி
போனை வைத்தார். பின்பு , காணாமல் போனதாகச் சொல்லப்படும்
 அவரின் செல்லுக்கு போன் செய்தேன். அதை
அவரின் கணவர் எடுத்தார். அவரிடம் நீங்கள் டீச்சர் செல் போன்
வைத்துள்ளீரகளா? டீச்சர் செல் போன் காணாம் என தேடு கிறார்கள் என
கேட்க , "இல்லை சார் இது  என் செல் போன் "என பதிலளித்து
வைத்தார். சார் போன வாரம் தான் வாங்கி கொடுத்த புது செல் போன்
இது என பதிலளித்து , மாட்டி விட்டு விட்டீர்கள் என புலம்பினார். டீச்சர்
உங்க உழைப்புக்கும் நேர்மைக்கும் செல்போன் எங்கும் போய் இருக்காது ,
கிடைத்து விடும் என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தேன்.

  என் செல் போன் ஒலித்தது . எடுத்தேன்... “சார், அந்த பையன்
(தங்கையைத் தேடியவன்)பஸ்ஸை விட்டு இறங்கி ஓடுறான்... சார், நான்
வீட்டுக்கு போய் பார்த்து அந்த பொண்ணு இருக்குதாண்ணு
சொல்லுறேன்...”என்றார். இது என்னடா போதாத காலம் என நினைத்துக்
கொண்டு , என் அறையை பூட்டி விட்டு , வகுப்பறைகளில் விளக்கு
எரிகிறதா என பார்வையிட்டு வெளியே வந்தேன். கழிப்பறை சுத்தமாக
கழுவப்பட்டுள்ளதா என பார்வையிட சென்றேன். ”சார், தண்ணி யில்ல
மோட்டர் போடணும் ”என்றார். தண்ணீர் போட்டு கழுவி விட சொன்னேன். அதற்குள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் எனக்கு போன் செய்தார்.
அதாவது தன் வகுப்பில் பயிலும் மாணவியிடம் செல் போனை பத்திரமாக
பார்த்துக் கொள்ளச் செய்து பேருந்தில் மாணவர்களை வரிசையாக
ஏற்றி விட சென்றார்கள் . அதனை மறந்து விட்டார்கள். வரிசையாக
போன் வர , டீச்சர் தான் அடிக்கிறார் என நினைத்து பேசி,
அவரின் கணவரிடம் செல் போன் தன்னிடம் தான் இருக்கிறது என
சொல்லியிருக்கிறது. இவரும் தன் கணவருக்கு போன் செய்து செல் போன்
தவறவிட்டதை சொல்ல, இல்லை உன் வகுப்பு மாணவி பத்திரமாக
வைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார். எப்படியோ செல் போன் கிடைத்தது.
மகிழ்ச்சி .ஆனால், மாணவர்களை சந்தேகப் பட்டது மிகப் பெரிய தவறு
என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள சொன்னேன்.  தவறுக்காக
வருந்தினார். செல் போனை வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்லும் படி சொல்லி,
ஏற்கனவே போன் செய்த ஆசிரியரிடம் செல் போன் கிடைத்து விட்ட
விசயத்தை சொன்னேன். 
   மீண்டும் செல் போன் அலறியது. “சார் , அந்த பெண் காய்ச்சல் என்பதால்
வீட்டில் இருந்து விட்டாள் , நீங்க கிளம்புங்க சார் “ என்றார்.  கடைசியில்
ஆறு மணியளவில் பள்ளியை விட்டு கிளம்பினேன். ”சார், இந்த டீச்சர் வந்தா
இப்படி தான் சார் லேட் ஆகுது... போன சீக்கிரம் வர
மாட்டிங்கிறாங்க..."என்றார் என் பேருந்து ஓட்டுனர். அவரை
சமாதானப்படுத்தி பத்திரமாக மெதுவாக வண்டியை ஓட்டி செல்லுங்க
என்றேன். ”சார்... எல்லாப் பிள்ளைகளையும் இறக்கி விட்டுட்டேன் “
என்றார் மூன்றாவது வண்டியில் சென்ற ஆசிரியர்.

  வண்டியை ஸ்டாட் செய்து கிளம்பியவுடன் மற்றொரு போன்
இரண்டாவது வண்டி ஆசிரியர் மாணவர்களை பத்திரமாக இறக்கி விட்டு
விட்டதாக சொன்னார்.

எது எப்படியோ ...அனைவரும் வீடு அடைந்து விட்டனர் என்ற மன
நிறைவுடன் அருகில் உள்ள அம்மா வீட்டிற்கு பயணித்தேன்.( மாணவர்கள்
அனைவரும் வீடு செல்லும் வரை நான் வீடு செல்வது இல்லை.. )
   தொடர்ந்து முதல் வண்டி வர வில்லையென போன் வர.. டிரைவரை
தொடர்பு கொண்டேன். ”சார்.. சிந்தாமணி கண்ணன் காலனி அருகில் தீப்
பிடிச்சு இருக்காம்... கேஸ் சிலிண்டர் கம்பேனி இருக்கிறதால.. அந்த பக்கம்
யாரையும் விட மாட்டிங்கிறாங்க.. ஒரே டிராபிக்கா இருக்கு... பேசாம பள்ளி
கூத்துக்கு வண்டியை கொண்டு வந்து விடவா?” என கேட்க ,என் அம்மா
வீட்டிற்குள் நுழைந்த நான் அப்படியே பையை வைத்து விட்டு ,இதோ
வந்திடுறேன்... என கிளம்பினேன்.   

”வண்டியை எங்கு நிறுத்தியிருக்கீங்க.. ?” என்று போனில் கேட்டேன்.
”சார், மேல அனுப்பானடி வழியாக போய் பார்க்கிறேன்” என்றார் டிரைவர்.
நடனா தியேட்டரில் இருந்து மேல அனுப்பானடி கிளம்பினேன். தொடர்ந்து
பெற்றோர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அனைவருக்கும் பதில் அளித்து,
தங்கள் குழந்தைகளை பத்திரமாக ஓப்படைப்பேன். நான் பேருந்து இருக்கும்
இடத்திற்க்கு செல்கிறேன் என பொறுப்பாக பதில் கூறி விரைந்தேன். மேல
அனுப்பானடி வழியாக ஹவுசிங்க போர்டு தாண்டி சிந்தாமணி சாலையை
வந்தடைந்தால், பேருந்தைக் காணவில்லை. அதற்கிடையில் ,டீச்சர்
பேன்செய்து ,”சார் வண்டிய விட மாட்டிங்கிறாங்க சார்” என்றார். இதோ
வந்து விட்டேன் என போனைத் துண்டித்தேன்.

    விரைந்து சென்று பார்த்து, பேருந்து இல்லாததை நினைத்து
வருத்தமடைந்து ,மீண்டும் டிரைவருக்கு போன் செய்கிறேன்.
”சார், மேல அனுப்பானடி ஹவுசிங்க் போர்டு முடிவில் போலீஸ் எங்கள
விடமாட்டேன்னுட்டாங்க அதுனால நாங்க மீண்டும் கீழ அனுப்பானடி
வந்துட்டோம்.” என்றார். “ என்ன பாய்.., டீச்சர் இப்ப தான் போசினாங்க …
ஒண்ணும் சொல்லல…” என சடைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்து
வருகை தரும் அழைப்புகளுக்கு பதில் அளித்து, அனைத்து
பெற்றோர்களையும் ஸ்டாப்பில் நிற்க சொல்லி விரைந்தேன்.
கீழ அனுப்பானடி வழியாக சிந்தாமணி செல்லும் பாதையில்
கொஞ்சம் கூடுதலாக டிராபிக் இருக்க… மீண்டும் போன் செய்து
வண்டி இருக்கும் இடத்தை  கேட்க ,ஒரு குறுக்கு தெருவில்
ஓரத்தில் வண்டியை பாதுகாப்பாக நிறுத்தி இருந்தார். நான்
சிந்தாமணி சென்று பெற்றோர்களை இங்கு அழைத்து வர
முயற்சிக்கிறேன். அல்லது போலீஸ் உதவியை நாடி வழி
விடசெய்கிறேன் என்றேன். சிறுது தூரம் சென்றவுடன் பார்த்தால்
எந்தவித தடையும் இல்லாமல் சாலை வெறுச்சோடியிருந்தது.
 பின்பு டிரைவரை அழைத்து மெதுவாக வரவும், எந்த வித
டிராபிக்கும் இல்லை என விளக்கி வர சொன்னேன். அதற்கு
இடையில் மழை சோ என சூடுபிடிக்க , மழையில் நனைந்த
படி முன்னோக்கி செல்ல, பேருந்து மெதுவாக வர
, சிந்தாமணி வேப்ப மரம், காளியத்தா ஸ்டாப், மேட்டுப்
புஞ்சை, கண்ணன் காலனி என அனைவரையும் மழையுடனே
இறக்கி விட, குடையுடன் தயாராக இருந்த பெற்றோர்
பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

நனைந்த படி வண்டியில் இருந்த நான் , டிரைவருக்கும்
கண்டெக்டருக்கும் , டீச்சருக்கும் டீ, வடை வாங்கி கொடுத்து
அனுப்பும் போது மணி ஏழு இருபது. பின்பு வண்டியை பள்ளியில்
நிறுத்தி , டிரைவரை அனுப்ப எட்டு மணி ஆகிவிட்டது.

தங்கையை காணவில்லை என்று ஆரம்பித்த லேட், தொடர்ந்து லேட்
ஆகி, தீப்பிடித்ததால், மீண்டும் லேட் ஆகி,மழைக் காரணமாகவும்
லேட் ஆகி ஆகி  எட்டு மணியை தொட்டது பள்ளியிலிருந்து
செல்ல.

அதுவே, பத்து நிமிடம் முந்தியிருந்தால், தீவிபத்துக்கு முன்
பிள்ளைகளை வீட்டில் சேர்த்து விட்டு ஆறு மணிக்கெல்லாம்
கிளம்பி யிருப்போம்.  

எம் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பு, பொறுமை,
பண்பு பார்க்கும் போது , எனக்கு என் பணியின் மீது 
இருக்கும் அற்பணிப்பு கூடுதல் பொறுப்பும் , பெறுமையையும் உணர
முடிகிறது. நிச்சயமாக அவர்களின் குடும்பத்துடன் நலமாக பல்லாண்டு
வாழ்வார்கள் எனநம்புகிறேன்.  ஆசிரியர்கள் தான்   முன்னோடியாக
திகழந்து பள்ளியை நல்ல படியாக கொண்டு செல்ல  முடியும் என்பது
இதுவே உதாரணம். 


10 comments:

Anonymous said...

பொறுப்பான ஆசிரியார் நீங்கள் , மாணவர்களுக்கு கற்ப்பித்தல் என்பதோடு கடமை முடிந்துவிடாது என்பதை இந்த சம்பவம் குறிப்புனர்த்துகிறது

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லதோர் அனுபவமும் பொறுப்பும் உள்ள பதிவு.

Rathnavel Natarajan said...

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் திரு மதுரை சரவணன்.
உங்களுக்கும் உங்களது அணியினர் அனைவருக்கும். உங்கள் அனைவரது கடமை உணர்ச்சியை மனப்பூர்வமாக பாராட்டுகிறோம்.
நன்றி.

Mahan.Thamesh said...

சார் நீங்கள் ஒரு கடமை உணர்வு உள்ள நல் ஆசான் உங்கள் பணி தொடரட்டும்

Yaathoramani.blogspot.com said...

படித்துக் கொண்டுவருகிற போதே எனக்கும்
டென்ஷன் எகிறிக்கொண்டே வந்தது
நல்லவேளை சுபமாக முடிந்ததே என முடிவில்
பெரு மூச்சுவிட்டேன்
தங்களைபோல பொறுப்புணர்சி மிக்க ஆசிரியர்கள்
சிலரேனும் இருப்பதால்தான் இன்னும் ஆசிரியருக்கு
சமூகத்தில் உள்ள மதிப்பும் மரியாதையும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

Balakumar Vijayaraman said...

சும்மா, பரபரன்னு இருக்கு போல தினசரி வாழ்க்கை. கலக்குங்க அண்ணே ! :)

வலிப்போக்கன் said...
This comment has been removed by the author.
வலிப்போக்கன் said...

சார்,அப்படியே! சமச்சீர்கல்விக்கு குரல் குடுத்தீங்கன்னா?

சத்யா said...

உங்கள் அனுபவங்களில் சிறு துளியை இந்தப் பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

cheena (சீனா) said...

ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற தாரக மந்திரத்தினைக் கடைப்பிடிக்கும் ஆசிரியர்கள் இன்றும் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் நெகிழ்கிறது சரவணன். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment