Saturday, August 20, 2011

சமச்சீர் கல்வி - பாஸ்மார்க்

   கறுப்பு வெள்ளை புத்தகங்களில் இருந்து விடுப்பட்டு  கலர் புத்தகங்களை பெற்றுள்ள குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் அதனை  பெற்றாலும் , பழைய முறைகளில் மனப்பாடம் செய்து பழகிய அவர்களுக்கு ,புதிய சமச்சீர் கல்வி முறை பாட்த்திட்டங்களுக்கு வரும் போது செயல் வழியில் பயில்வதில் சில சிக்கல்களை கொண்டுள்ளனர். அதனை நான் மூன்றாம் வகுப்பு , மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் பார்க்க முடிந்தது. இதனை வெற்றிகரமாக கொண்டு செல்வதில் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது
மூன்றாம் வகுப்பு ஆசிரியர் மதிப்பீடு குறித்த பயிற்சிக்கு சென்றதால், அவ்வகுப்புக்கு செல்ல நேரிட்டது. குழந்தைகளிடம் சமூகவியல் பாடம் நடத்த கேட்டுக் கொண்டனர். புத்தகத்தை சில நிமிடங்கள் பார்த்து விட்டு, அவர்களிடம் வீட்டில் உங்களுக்கு பிடித்த செயல் எது? என கேட்டேன். ஒருவராக சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். . முதலில் எழுந்த மாணவன் , ”சார் , எனக்கு படிக்க பிடிக்கும் ”என்றான். அதனைத் தொடர்ந்து அனைவரும் ”சார், எனக்கு  வீட்டுக்கு சென்று எனக்கு படிக்கப் பிடிக்கும்” என்று மனப்பாட முறையில் கற்றதன் விளைவா ? இல்லை அவர்கள் படித்து வந்த ஆசிரியர்களின் கற்றல் முறையின் விளைவா ? என தெரியவில்லை. நான் அவர்களுக்கு பதில் அளித்தேன். எனக்கு வீட்டில் டி.வி. பார்ப்பது பிடிக்கும். மாதவி, நாதஸ்வரம் என தொடங்கியவுடன்.. ஒரு மாணவி எழுந்து ,”சார், எனக்கும் வீட்டில சாய்ங்காலம் போனதும் டி.வி. பார்க்க பிடிக்கும் “ என்றாள். இப்போது மீண்டும் கேட்டேன். “சார், சாய்ங்காலம் போய் வீட்டில சாப்பிட பிடிக்கும் “ என்றான் அடுத்த மாணவன். வெரி குட்.. இப்படி தான் உங்களுக்கு வீட்டில் பிடித்த விசயத்தை சொல்ல வேண்டும். அடுத்த எழுப்பிய மாணவன், ”சார், எனக்கு இட்டிலி சாப்பிட பிடிக்கும் ” என்றான். நான் மீண்டும் எடுத்துக் கொடுத்தேன். “எனக்கு என் பாட்டியின் மடியில் படுத்து கதை கேட்க பிடிக்கும் “ . எனக்கு என் அம்மாவுடன் சமையல் வேலை செய்ய பிடிக்கும் என்றாள் அடுத்து சொன்ன மாணவி . எனக்கு எங்க அம்மாவோட பேச பிடிக்கும் என்ற மாணவனிடம் ”ஏன் , அப்பாவுடன் பேச பிடிக்காதா?” என்றேன். அதற்கு அவன் எங்க அப்பா  குடிச்சுட்டு வந்து எங்க அம்மாவ அடிப்பாரு அதனால பிடிக்காது என்றான். நீ குடிக்காதீங்கப்பான்னு சொல்லு . எங்க சார் சொல்லியிருக்காரு குடிச்சா சீக்கரம் செத்து போவங்கன்னு , அதனால எனக்காக குடிக்காதீங்கப்பான்னு , கொஞ்சி சொல்லு உங்கப்பா குடிக்க மாட்டார்ன்னு சொல்லி அடுத்தவனுக்கு வாய்ப்பு கொடுக்கும் முன் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சார் எனக்கும் எங்க அப்பாவ பிடிக்காது , அவரு குடிச்சுட்டு கலாட்டா பண்ணுவாரு? என்றனர்.
அடுத்ததாக வீட்டிற்கு வெளியில் உங்களுக்கு என்ன பிடிக்கும்… அதற்கும் மாணவர்கள் தெருவிளக்கில் உட்கார்ந்து படிக்க பிடிக்கும் என்றனர். ஏன் பாடம் என்றால் படிப்பு மட்டும் தான் பேசப்பட வேண்டுமா? இவர்களை மாற்ற முடியாதா? இனியாவது திருந்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டு , எனக்கு வீட்டுக்கு வெளியில் வந்து விட்டால், மிதிவண்டி ஓட்டப் பிடிக்கும் என்றேன். அதனை தொடர்ந்து வரிசையாக மிதிவண்டியை சொன்னார்கள். மீண்டும் அவர்களை குறுகிய வட்ட்த்தில் இருந்து உண்மை நிலைக்கு கொண்டு வர பாடு பட வேண்டியிருந்தது. நான் படிக்கிற காலத்தில் என் நண்பன் ரமேசுடன் ஓடி பிடித்து விளையாட பிடிக்கும் என சொன்னவுடன் , எனக்கு கண்ணாமூச்சு விளையாட பிடிக்கும், பம்பரம் விளையாட பிடிக்கும், ராட்டினம் சுற்ற பிடிக்கும் , அம்மாவுடன் கோவிலுக்கு செல்ல பிடிக்கும். அப்பாவுடன் சாப்பிங் போக பிடிக்கும் என சொல்ல தொடங்கினர்.

   ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடம் வாழ்த்து பகுதியில் ஆயுத்தப் படுத்த , நீங்கள் சாமி எப்போது கும்பிடுவீர்கள்? சாமியிடம் என்ன வேண்டிக் கொள்வீர்கள்? என கேட்டேன்.( கவிமணியின் திருவடித் தொழுகின்றேன் பாடல்.) அப்போது மாணவர்கள் காலையில் சாமி கும்பிடுவோம் என்றனர். சிலர் பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என்றனர். பலர் சாமி எனக்கு படிப்பு கொடு என்றனர். பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்க அப்பா குடிக்க கூடாது , எங்க அம்மாவோட சண்டை போடக் கூடாது என்றனர்.

கல்வி நடைமுறை வாழ்வோடு தொடர்பு படுத்தப்படும் போது தான் அவனின் குடும்ப சூழல் , நம் அரசியல் சூழலின் அவலங்கள் வெளிவருகின்றன. வீதியெங்கும் டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து விட்டு, குடும்ப தலைவர்களை யெல்லாம் குடிமகன்களாக்கி விட்டு, அவர்களின் மகன்களை பாஸ்மார்க் வாங்க செய்ய முடியும்?  கல்வி முறையில் மாற்றம் செய்தால் மட்டும் அவலம் மாறிவிடுமா? மாணவனின் மனநிலை வாதத்தில் பிணைந்து இருக்கும் போது எப்படி ஆனந்த மனநிலையில் கல்வி பயில முடியும்?  
அரசு கல்வியில் மாற்றம் விரும்பும் போது அதற்கு ஏற்றாற்போல சமூக முறைகளிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும். சாராயக் கடைகள் சந்தோசமான குடும்பத்தை சாவுக் காடுகளாக மாற்றி வருகின்றன. மாணவன் தன் தந்தையின் நிலைக் கண்டு வருந்தி, சமூகத்தில் பாதிக்கப்பட்ட மனநிலையில் உழல்வதால், நிச்சயம் அவன் ஒரு மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டு, அவனும் சமூகத்தில் குற்றவாளியாக வளர வாய்ப்பு உள்ளது.
”சார், அவன் அப்பாவை ரோட்டில இருந்து , அவன் தான் சார் தூக்கி வந்தான்.”
”சார், நேத்து ரோட்டில வேட்டி , சட்டை கழண்டது கூடத் தெரியாமல் அவுங்க அப்பா படுத்து கிடந்தார் .. அவன் தான் சார் வீட்டில இருந்து டிரஸ் எடுத்து கொடுத்தான்”
”சார், எங்க அப்பா குடிச்சா , எங்க அம்மாவ போட்டு அடிச்சுருவாரு… நேத்து நைட்டு புள்ள யாரும் தூங்கல..அதனால வீட்டுப்பாடம் எழுதல…”
போன்ற வார்த்தைகள் பிஞ்சுகளின் மனதில் வருவதால்… தயவு செய்து அரசு நம் மாணவர்களின் நல்ல மனநலம் கருதி டாஸ்மார்க்குகளை நிறுத்தினால் நல்லது. 

18 comments:

goma said...

புத்தகம் வரவில்லை என்று ,2 மாதங்கள் சும்மா இருக்காமல் ,எத்தனை பள்ளிகள் ,மாணவர்களுக்கு யோகா,பேச்சுத் திறன் வளர்ப்பு,ஓவியம்,எழுத்து,என்று ஆக்கப்பூர்வமான வகுப்புகளுக்கு வழி அமைத்தனர் ..கிடைத்த சந்தர்ப்பத்தை, வீண்ணாக்காமல் உபயோகப்படுத்தியது எத்தனை ஆசிரியர்கள்?

SURYAJEEVA said...

உண்மை,
எத்தனை ஆசிரியர்கள் வெறுப்பின் உச்ச கட்டத்தில் நின்று கொண்டு எனக்கு கல்லூரி விரிவுரையாளர் வேலை கிடைத்தால் ரொம்ப சிரமம் இல்லாமல் இருப்பேன் என்ற மன நிலையில் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து பாருங்கள்...
எத்தனை பள்ளிகளில் முறையான தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் வேறு பாட ஆசிரியர்களை வைத்து தமிழ் பாடம் எடுக்கிறார்கள் என்று நினைத்து பாருங்கள், சில சமயங்களில் ஓவிய ஆசிரியர் தமிழ் பாடம் எடுப்பதாக கேள்வி...
என் கடைக்கு வரும் மாணவன், தனியார் கல்வி நிலையத்தில் படித்தவன் ஐம்பது சதவிகித மதிப்பெண் பெற்று விட்டதால் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.. அவனுக்கு ஆங்கிலமும் சரி தமிழும் சரி எழுத்து கூட்டி படிப்பதில் சிரமம் உள்ளது என்று சொன்னால் நம்ப ஆள் உண்டா?
அவனுக்கு இருக்கும் ஆர்வம் அலைபேசி தொழில் நுட்பங்கள் குறித்தது.. எத்தனை பாட திட்டங்கள் தமிழகத்தில் அவன் ஆர்வத்துக்கு சோறு போடுகின்றது சொல்லுங்கள் பார்க்கலாம்..
புவியியல் பாடம் மிகவும் விரும்பும் மாணவன் ஒருவன் பத்தாவது வகுப்பு முடிந்தவுடன் எந்த பள்ளியில் புவியியல் உயர் நிலை வகுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் எதோ ஒன்றை கற்றுக் கொண்டு எதோ ஒன்றை செய்து கொண்டு இருக்கிறான்.. அவன் மனம் இரும்பால் ஆனதால் அவன் துவண்டு விடவில்லை, எதிர் நீச்சல் போட்டு கொண்டிருக்கிறான்.. அவனை போல் எத்தனை மாணவர்கள் துணிவுடன் இருப்பார்கள்...
பதினெட்டு வயதுக்குள் ஒருவனால் எந்த முடிவையும் சுயமாக எடுக்க முடியாததால் தான் அவன் வாழ்க்கை அவன் பெற்றோர் கையிலும் ஆசிரியர்கள் கையிலும் விடப்படுகிறது... பொறுப்பில்லாத ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பல மாணவர்களின் வாழ்க்கை இருளில் மூழ்குகிறது... என்று விடியும் என்பது ?

ரிஷபன் said...

வீதியெங்கும் டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்து விட்டு, குடும்ப தலைவர்களை யெல்லாம் குடிமகன்களாக்கி விட்டு, அவர்களின் மகன்களை பாஸ்மார்க் வாங்க செய்ய முடியும்? கல்வி முறையில் மாற்றம் செய்தால் மட்டும் அவலம் மாறிவிடுமா? மாணவனின் மனநிலை வாதத்தில் பிணைந்து இருக்கும் போது எப்படி ஆனந்த மனநிலையில் கல்வி பயில முடியும்?

யோசிக்க வைத்த வரிகள்.

Unknown said...

என்று மாறும் இன்நிலை பெண்னாக பிறந்து இன்று முதலஅமைச்சரக இருக்கும் அம்மா மனது வைத்தால் மாணவர்கள் மட்டுமல்ல அவர்களை பெற்றவளும் மனம் மகிழ்வாள்.

MANO நாஞ்சில் மனோ said...

சரியான அலசல்...!!

கோகுல் said...

”சார், எங்க அப்பா குடிச்சா , எங்க அம்மாவ போட்டு அடிச்சுருவாரு… நேத்து நைட்டு புள்ள யாரும் தூங்கல..அதனால வீட்டுப்பாடம் எழுதல…”
போன்ற வார்த்தைகள் பிஞ்சுகளின் மனதில் வருவதால்… தயவு செய்து அரசு நம் மாணவர்களின் நல்ல மனநலம் கருதி டாஸ்மார்க்குகளை நிறுத்தினால் நல்லது//


கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்!
நல்ல பகிர்வு!பாராட்டுக்கள்!

KOMATHI JOBS said...

பயனுள்ள பதிவு!
நல்ல பகிர்வு!பாராட்டுக்கள்!!!

தொடருட்டும் உங்கள் சேவை!!!

மாணவன் தன் தந்தையின் நிலைக் கண்டு வருந்தி, சமூகத்தில் பாதிக்கப்பட்ட மனநிலையில் உழல்வதால், நிச்சயம் அவன் ஒரு மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டு, அவனும் சமூகத்தில் குற்றவாளியாக வளர வாய்ப்பு உள்ளது.

தயவுசெய்து,
மாணவர்களின் நல்ல மனநலம் கருதி டாஸ்மார்க்குகளை அரசு நிறுத்தினால் நல்லது.

குணசேகரன்... said...

நல்ல மனநலம் கருதி டாஸ்மார்க்குகளை நிறுத்தினால் நல்லது. கஷ்டம்தான்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நடமாடும்போது மதுக்கடைகளில் உள்ள கூட்டத்தை பார்த்து மனசு வேதனைப்படுகிறது. இதில் ஒரு கொடுமை, தொடர்ந்து குடிப்பவர்கள் ஐம்பது வயதுக்குள் இறந்து விடுகிறார்கள். அவர்களது குடும்பம் படும் வேதனை, அவர் இருக்கும்போதும் வேதனை, இறந்ததுக்குப் பின்னாலும் வேதனை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

shanmugavel said...

//அரசு கல்வியில் மாற்றம் விரும்பும் போது அதற்கு ஏற்றாற்போல சமூக முறைகளிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.// ஆமாம்.சார்.

அருள் said...

உலகில் மிகச்சில அரசுகள் மதுபானத்தை தடை செய்துள்ளன. மிகப்பெரும்பாலான அரசுகள் மதுவை சட்டபூர்வமாக அனுமதித்தாலும் அதனை மிதமிஞ்சிப்போகாமல் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கின்றன. இந்திய மாநிலங்கள் உட்பட சில அரசாங்கங்கள் மதுவை சட்டபூர்வமாக அனுமதித்துவிட்டு - பட்டும்படாமல் ஒதுங்கி நிற்கின்றன.

ஆனால், உலகிலேயே ஒரே ஒரு அரசுதான் தனியார் சாராய நிறுவனங்களையே மிஞ்சும் வகையில் மதுவைக் கூவிக்கூவி விற்கிறது. தீவிரமாக குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கிறது. அந்த கேடுகெட்ட நாடு: தமிழ்நாடு!

Unknown said...

ஒவ்வொரு பதிவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள்.சிந்தனை வளர்க!சமுதாயத்தில் மாற்றம் தேவை,,,,.

Unknown said...

அழகான விளக்கங்களுடன் பதிவு அருமை நண்பா!

Anonymous said...

நல்ல பகிர்வு... பாராட்டுக்கள்!


சே.குமார்.
மனசு (Http://vayalaan.blogspot.com)

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

மிகவும் கனத்த மனத்தோடு இருக்கிறேன் நான். சில நாட்களுக்கு முன் அப்பா குடித்துவிட்டு வந்து, என் தம்பியின் சர்ட்டிபிக்கட்டுகளை எரித்துவிட்டார்.

உங்கள் மாணவர்களைப் போல, நான் இப்போது இப்போது நானும் அந்த சிறுவர்களைப் போல..
சார் எனக்கும் எங்க அப்பாவ பிடிக்காது , அவரு குடிச்சுட்டு கலாட்டா பண்ணுவாரு? என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

Yowan1977 said...

சூப்பரு

செங்கோவி said...

சமச்சீர்க் கல்வி பற்றி வெளியாட்கள் பேசுவதை விட, ஆசிரியர் பேசுயதில் மகிழ்ச்சி!..அந்த திட்டம் வெற்றி பெறுவதும் ஆசிரியப் பெருமக்கள் கையிலேயே உள்ளது!

நல்ல பகிர்வு!

virutcham said...

பள்ளிகளில் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் கவுன்செலிங் முறையை அமுல்படுத்தினால் மாணவர் பெற்றோர் உறவு நிலை மேம்படும். வீட்டுச் சூழல் ஆரோக்கியமாக இருத்தல் தன குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அவசியம் என்பதை உணர்த்த உதவும். குடிப் பழக்கத்துக்கும் மருத்துவ முறையில் தீர்வு காண முடியும் என்பதை புரிந்து கொள்வார்கள்.

Post a Comment