Monday, August 22, 2011

தொழில் அல்ல… பணி


   சென்ற வாரம் மதியம் உணவு இடைவேளைக்கான மணி ஒலித்தது. அனைத்து மாணவர்களும் மணி ஒலித்ததும் , ஆசிரியர்களுடன் வரிசையாக சத்துணவு உண்பதற்கு சென்றனர். சில நிமிடங்களில் ஒன்றாம் வகுப்பு அ பிரிவு ஆசிரியர் பதறி அடித்து ஓடி வருகிறார். “சார், சத்துணவு சாப்பிடுகிற இடத்தில ஒரு பையன் இரத்த வாந்தி எடுக்கிறான்”.
“பதற வேண்டாம் …” என்ற என்னை பார்த்து , “சார், குடம் குடமா இரத்த வாந்தி அவசரம் , சீக்கிரம் வாங்க சார்” என சொல்லிக் கொண்டே மாடியிலிருந்து இறங்கிவிட்டார். ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்தி முடித்து நோட்டு திருத்திக் கொண்டிருந்த எனக்கு அப்போது தான் ஒரு வித பதட்டம் பற்றிக் கொண்டது. உடனே, சத்துணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் மாணவர்களை சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பித்து, சத்துணவு பறிமாறும் அறைக்கு சென்றேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முத்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாயில் இரத்தம் ஒழுக நின்று கொண்டிருந்தான். அவனை சுற்றி மாணவர்கள் கூட்டம் மற்றும் இரு ஆசிரியர்கள் நின்று கொண்டு இருந்தனர். கூட்டமாக நின்று இருந்த மாணவர்களை அகற்றி விட்டு , அவனருகில் சென்று பார்தேன். அவனின் வெளிரிய தோல் , மஞ்சள் நிறமாக மாறி , அவன் ஒருவித பதட்டத்துடன் காணப்பட்டான். நிதானமாக ஒண்ணுமில்லை… ”என்ன சாப்பிட்ட? சத்துணவா? “ இன்னும் சாப்பிடவேயில்லை… சாப்பிட வரும் போது தான் இப்படி இரத்த இரத்தமா வாந்தி எடுத்து இருக்கான்.”என்றார் அவன் வகுப்பு ஆசிரியர். ”காலையில் என்ன சாப்பிட்ட ?’’
“இட்டலி”
”சாம்பாரா? பழைய கோழிக் குழப்பு ஊத்தியா சாப்பிட்ட?”
”சாம்பாரு”.
“சார், அவனின் அண்ணன் மூன்றாம் வகுப்பு படிக்கிறான் ” என்றார்
ஒன்றாம் வகுப்பு ஆ பிரிவு ஆசிரியர்.
”டேய், அஜித், உடனே யுவ ராஜை அழைத்து வா ..”
அவனின்  அண்ணன் வந்தான். அவன் வருவதற்குள் சத்துணவை வெளியில் வைத்து பறிமாற சொல்லி டீச்சர்களை அனுப்பி வைத்தேன். அந்த இரத்த வாந்தியை பார்த்த ஆசிரியை ஒருவர் அந்த இட்த்திலேயே வாந்தி எடுத்தார். ஒரு ஆசிரியைக்கு தலைசுற்று வந்து சரிந்தார். கெட்டிக் கெட்டியாக பீட்ருட்டை அரைத்து ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி சிவப்பில் தண்ணியாகவும், திரள் திரளாகவும் இருந்தது. மாணவனை வாய் அலம்ப சொன்னேன். காற்று படும் இடத்தில் நிறுத்தினேன். அவன் வகுப்பு ஆசிரியரை அழைத்தேன். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உத்திரவிட்டேன். செல் போனை கையில் எடுத்துக் கொள்ளுங்கள் . அவனின் அண்ணனிடம் விசாரித்த போது இதுமாதிரி அடிக்கடி வாந்தி எடுப்பான். அப்புறம் சரியாக போயிடும் என்றான். மாணவனின் வீடு என் பள்ளியிலிருந்து இருபதுகிலோமீட்டர் இருக்கும்… சக்கிமங்கலம் ஆகும்.
அவர்கள் அழைத்து சென்ற மருத்துவமனையில் பையன் பிழைக்க மாட்டன். இதை யாரும் வெளியில் உள்ள டாக்டர்கள் பார்க்க மாட்டார்கள் .உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றனர். ஆசிரியர்கள் அவனின் பெற்றோரிடம் விட்டு விடலாம் , எதற்கு இந்த ரிஸ்க் என்றனர். நான் பையனை உடனே ஆட்டோ பிடித்து பெரிய ஆஸ்பத்திரி (இராஜாஜி மருத்துவமனை)க்கு அழைத்து செல்ல உத்தரவிட்டேன்.
இதற்கிடையில் மாணவனின் பெற்றோர்கள் இருவரும் கூலி தொழிலாளிகள் . அவர்கள் காலையில் ஏழுமணிக்கு சென்றால், இரவு எட்டு மணிக்கு தான் வருவார்கள் என விபரம் கிடைத்தது. வீட்டில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. சரி அவர்கள் வேலை செய்யும் இடம் தெரியுமென்று விசாரித்தால், அவர்கள் தினக் கூலிகள் . எந்த இடத்தில் வேலையென்பது தெரியாது என அறிய வந்தேன். மாணவனின் அருகில் உள்ள பெற்றோருக்கு போன் செய்து, அவர்களின் பெற்றோரை தொடர்பு கொள்ள எதாவது போன் இருக்கிறதா? என விசாரித்தேன். அவர்கள் தெரியாது என்றனர். பின்பு , மாணவனின் நிலையை எடுத்து சொல்லி எப்படியாவது எனக்கு போன் செய்ய சொல்லவும், தயவு செய்து அவனின் வீட்டுக்கு அருகில் உள்ள நபர்களை பிடித்து விசாரித்து தகவல் தரும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டேன். அதற்கு இடையில் அரசு மருத்துவமனையில் மாணவன் அவசர வார்டில் கொண்டு சென்றவுடன் மீண்டும் இரத்த வாந்தி எடுத்திருக்கான், மருத்துவமனை செவிலியர்கள் , டாக்டர்கள் மாணவன் பள்ளியிலிருந்து வருகிறான் என்றவுடன் பெற்றோர்கள் இருந்தால் தான் அனுமதிப்போம் என்கின்றனர். உயிருக்கு ஆபத்து இருக்குதாம்.. சொல்ல முடியாது என்கின்றனர் என எனக்கு போன் செய்தனர். நான் பயப்பட வேண்டாம் , முதலில் சேர்க்கை படிவத்தில் கையொப்பம் இட்டு சேர்க்கவும். எது நடந்தாலும் அதற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். என்னை நம்பி உடனே கையொப்பம் இடவும். நான் நேரில் சென்றாவது அவர்களின் பெற்றோர்களை அழைத்து வருகின்றேன். அதுவரை நீங்கள் மாணவனுடன் இருங்கள் என கட்டளை பிறப்பித்து , மீண்டும் அவர்களின் அருகில் உள்ள வீட்டுக்கு தொடர்பு கொண்டேன். அவர்கள் ”சார் என் மகள் தான் என் செல் போனில் அவர்களின் நம்பரை குறித்தது , எந்த பேருல குறிச்சுதுன்னு தெரியல…” ”ஒரு உயிர காப்பத்துரதுக்கு உதவுறீங்க…. தயவு செய்து எங்க வேலை பார்க்கிறாங்க என சொல்லுங்க … நானே நேரில் சென்று பார்க்கிறேன் என்றேன். சார் பத்து நிமிடம் கழித்து போன் பண்ணுங்க , நான் உடனே வாங்கி தருகிறேன் என்றனர். அதற்குள் மருத்துவமனையில் இருந்து போன்… “சார், பிளட் கேன்சர் இருந்தாலும் இப்படி வாமிட் வருமாம், இல்லைன்னா.. அல்சர் முத்தி போனாலும் இப்படி வருமாம்…அதுனால கட்டாயம் பெற்றோர் வேணுமாம்.. எங்களுக்கு எதுவும் பிரச்சனை வராதுல்லா… அவுங்க பயமுறுத்துராங்க… “என அழத் தொடங்கினார். “ஒண்ணும் ஆகாது.. தைரியமாக இருங்க… அவுங்க பெற்றோரை அழைத்து வருகின்றேன்… மாணவனுக்கு உடனடியாக முதலுதவி செய்ய சொல்லுங்க…” என்றேன்.
மீண்டும் மாணவனின் எதிர் வீட்டுக்கு போன் செய்தேன். ”சார்… அவுங்க கூட வேலை செய்யுறவுங்க.. போன் நம்பர் எழுதிக்கீங்க…” என்று தந்தார்கள்.   போன் செய்து நிலமையை சொல்லி உடனே மருத்துவமனைக்கு செல்ல சொன்னேன். ஆசிரியர்களின் செல் நம்பரையும் தந்தேன். அங்கு சென்று ஆசிரியரை போன் செய்ய சொன்னேன். ஆசிரியர்களுக்கும் முத்துவின் செல் நம்பரை கொடுத்து பேச சொன்னேன்.
மருத்துவ மனையில் இருந்து போன் வந்தது. ”சார் , முத்துவோட அம்மா, ”டீச்சர் எதுவும் அடிச்சாங்களா… வகுத்துல எத்துனாங்களா…? என கேட்கிறாங்க சார்… இதுக்கு முன்னால இந்த மாதிரி வந்த்தில்லைன்னு பொய் சொல்லுறாங்க சார்… “
“சரி , ஆத்திரத்தில அப்படி தான் பேசுவாங்க.. நாமயில்ல மருத்துவ மனையில சேர்த்து இருக்கோம்.. எல்லாரும் அப்படி தான்…முத்து எப்படி இருக்கான்..? “
”குழந்தைகள் வார்டுல.. குளூக்கோஸ் ஏறுது சார்”
”காலையில என்னை வந்து அவுங்க அப்பாவை பார்க்க சொல்லுங்க.. செலவுக்கு பணம் கொடுத்திட்டு வாங்க …நான் தர்றேன்…” என்றேன்.
பள்ளிக்கு வந்தவுடன் உடன் சென்ற மூத்த ஆசிரியர் டாக்டர் என்ன வியாதியின்னே தெரியல்லை… உடனே வீட்டில போய் டெட்டால் உற்றி கை கழுவி , குளித்துவிட்டு வேறு வேலை பார்க்க சொன்னார் சார்… நாங்க கிளம்புகிறோம் என்றாரே பார்க்கலாம். வேறு என்ன செய்ய அனுப்பி வைத்தேன்.  
காலையில் அவரின் தந்தை மூன்றாம் வகுப்பு மாணவனை பள்ளியில் விட்டு சென்றுள்ளார். நான் வருவதற்கு முன்பே சென்று விட்டார். மூன்றாம் வகுப்பு ஆசிரியரிடம் “சாருக்கு நன்றி சொல்லுங்க… சார் மட்டும் சொல்லி சேர்க்கலைன்னா.. என் பிள்ளைய பார்த்திருக்க மாட்டேன்.. டாக்டர் சொன்னார்… தக்க சமயத்தில கொண்டு வந்திருக்காங்க… இன்னும் டிரிப் ஏறுதுன்னு சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு சென்றாறாம்.
ஆசிரியரிடம் என்ன வியாதின்னு கேட்டீங்களா..? என்று விசாரித்தேன். அதான கேட்கலை என்ற ரீதியில் பதில் அளித்தார். மறு நாள் வந்தவரிடம் விசாரித்த போது .. கல்லீரலில் பிரச்சனையாம். கல்லீரல் அடிபட்டு இருக்குன்னு டாக்டர் சொல்றார். நாலு நாள் முன்னாடி சைக்களில் விழுந்தான்… கால்ல மட்டும் தான் அடின்னு .. கட்டு போட்டு விட்டோம்.. நல்லா கேட்டுட்டேன்.. சைக்கிள் வந்தவுடன் ஓடி வந்தானாம். கால்ல மட்டும் தான் ஏத்துச்சுன்னு சொல்லுகிறான். என்றார்.
சாதரணமாக  விழுந்தாலும் உடனே மருத்துவமனையில் காட்டி சரி செய்தால் நல்லது என்று அப்போது தோன்றியது. அற்பணிப்பு இல்லையென்றால் ஆசிரியர் பணிக்கு வரக் கூடாது என்பது மட்டுமே என் வேண்டுகோள் என்பதை விட என் அனுபவம். தயவு செய்து ஆசிரியராக விரும்பும் எவரும் அற்பணிப்பு இருந்தால் மட்டும் பணிக்கு வாருங்கள் .இல்லையேல் தொழில் என்றால் வேறு வேலையை தேர்ந்தேடுங்கள்.


  


3 comments:

G.M Balasubramaniam said...

அன்பு சரவணன், மிகச் சரியாகச் சொன்னீர்கள். அர்ப்பணிப்பு இல்லாமல் ஆசிரியர் வேலைக்கு வரக்கூடாது. உங்களை நினைத்து பெருமையாய் இருக்கிறது. எனக்கு ஒரு நல்லாசிரியர் நண்பர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...

இடம்பெற்றது ஒரு சிறுசம்பவம்தான். ஆனால் அந்தக் கதையை நீங்கள் நகர்த்திச்சென்றவிதம் ஒரு திகில் படம் பார்ப்பதுபோல நாற்காலி நுனியில் உட்காரவைத்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு மனிதாபிமானம் மிக்க ஆசிரியர்மட்டுமல்ல கைதேர்ந்த ஒரு எழுத்தாளனும்கூட உங்களைப்போல ஆளுங்கதான் நாட்டிற்குத் தேவை சார். எழுந்து நின்று உங்க சேவைக்காகக் கை தட்டிக்கிறேன் வாழ்த்துக்கள்.

வெங்காயம் said...

/”சார் , முத்துவோட அம்மா, ”டீச்சர் எதுவும் அடிச்சாங்களா… வகுத்துல எத்துனாங்களா…? என கேட்கிறாங்க சார்… இதுக்கு முன்னால இந்த மாதிரி வந்த்தில்லைன்னு பொய் சொல்லுறாங்க சார்… “//

ithu matteru . kasu kodutheengala

Post a Comment