Saturday, July 2, 2011

யார் கொடுத்தது இந்த அதிகாரத்தை..?


     இன்று (1-7-2011)காலை அவசர அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தேன். இதில் என் மனைவி வேறு தன்னை போகும் வழியில் பஸ் ஏற்றி விட்டு செல்லும் படி கேட்டுக் கொண்டாள். இருவரும் விரைவாக தபால் தந்தி நகரிலிருந்து கிளம்பி கோரிப்பாளையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தோம். மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சேர் ஆட்டோக்கள் பெருகி விட்டன என்பதை என்னை முந்திச் செல்லும் ஆட்டோ, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து தெளிவாக தெரிய முடிகிறது. அது மட்டும் அல்ல எங்கள் பகுதிக்கு சேர் ஆட்டோ ஓடுவதை இப்போது தான் நான் பார்க்கிறேன். காலை நேர நெருக்கடியில் மாணவர்கள் பேருந்துகளில் தொத்திக் கொண்டு செல்வதை காணும் போது என் கல்லூரி நாட்களில் என் நண்பன் பேருந்தில் அமர்வதற்கு இருக்கை இருந்தாலும், புட் போர்டில் தொத்திக் கொண்டு , ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துள்ள பெண்ணிடம் தன் பொருட்களை எல்லாம் தந்து ,(அது எனோ தெரியவில்லை புட் போர்டில் தொங்கும் பையன் விரும்பும் பெண்கள் அனைவரும் முதல் மூன்று இருக்கைகளில் சரியாக வந்து அமர்வது?)   அதாவது தன்னையே தந்த ஒரு பாவனையுடன் என்னிடம் பேசுவது போல அப்பெண்ணைப் பார்ப்பதும் அவளின் கடைக்கண் பார்வையில் தன்னையே மறந்து சினிமாத் தனமான கதாநாயகனாக மாறி தினமும் இதனை வாடிக்கையாக கொள்வதும் , என் நினைவில் வந்து சென்றது.
    
     என் மனைவி ஸ்கூட்டி ஓட்டும் பெண்ணைப் பார்த்து , பாருங்க சின்ன டயர் வழுக்கி விழுந்தா இடுப்பு முறிந்து போகும் இப்படி பாய்ந்து பாய்ந்து ஓட்டுகிறாள். நின்னு போன என்ன? என்று என் காதை கடித்தாள். இளம் கன்று பயம் அறியாது விடு. இங்க பாரு ஒரு வண்டியில நாலு பேர ஏத்திட்டு போறார்… அதுவும் பைய பார்த்திய…? என என் பங்குக்கு கதைத்தேன். போன வருசம் இப்படி தான் தன் பையன வண்டியில கூட்டிட்டு போன ஒருத்தர் , நகரப் பேருந்தை முந்திக் கொண்டு செல்ல முற்படும் போது , தன் பையனின் பை பேருந்தில் தட்ட அவரின் பின்னால் இருந்த அவரின் ஒரே மகன் வண்டியின் பின் சக்கரத்தில் தவறி விழுந்து இறந்ததை நினைவு படுத்தி , என் முன்னால் சென்றவரிடம் நினைவு படுத்தி மெதுவாக செல்ல சொன்னாள். வண்டி நாடார் பலசரக் கடையை தாண்டி , அக்‌ஷயா பல் பொருள் அங்காடியை நெருங்கிக் கொண்டிருந்தது. பாலமந்திரம் பள்ளி மாணவர்கள் அணி அணியாக சென்று கொண்டிருந்தனர். பொது மக்கள் அப்பகுதியில் உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு தன் பிள்ளைகளை வாகனங்களிலும், நடந்தும் , ஆட்டோக்களிலும் அனுப்பி வைத்து கொண்டிருந்தனர். அலுவலகம் செல்லும் ஆண்களும் , பெண்களும் அவசர கதியில் நகர்ந்து கொண்டிருந்தனர்.  திடீரென்று டம், டம் என்று கம்பால் அடிக்கும் சத்தம் கேட்டு , அனைவரும் ஒரு நிமடம் திரைப்படங்களில் வருவது போல ஃபிரிஸ் ஆகி வந்த திசையை நோக்கி பார்த்தனர்.

    நாற்பதி எட்டு அல்லது ஐம்பது வயதுள்ள பெண்ணை காக்கி சட்டை அணிந்த காட்டு மிராண்டி லத்தியால் அடித்த சவுண்டு தான் அப்படி கேட்டது. பாவம் அந்த பெண் வழி தாங்க முடியாமல் தெருவின் ஓரத்தில் உள்ள காம்பவுண்டு சுவற்றின் ஓரத்தில் ஒடுங்கி அமர்ந்தாள். கூட்டத்தை பார்த்த குசியானவனாகவோ இல்லை எதுவோ ஒன்று அவனை மேலும் ஓங்கி ஒங்கி அடிக்க தூண்டியது போல தொடர்ந்து அடித்தான். என்னிடம் கேமரா இல்லை , இல்லையென்றால் நிச்சயம் அதனை படம் பிடித்து மனித உரிமை கமிஷனுக்கு அனுப்பி இருப்பேன்.
     யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? நாம் எந்த காலத்தில் இருக்கிறோம்? எப்படி பட்ட உயர்ந்த தப்பாக இருக்கட்டும் , அதற்காக இப்படியா ஒரு பெண்ணை நடுத்தெருவில் அதுவும் மிகவும் தடிமனான தடியால் டம், டம் என அடிக்கும் சத்தம் அனைவர் காதிலும் வாகனங்களின் இரைச்சலையும் தாண்டி விழும்படியாக அடிப்பது? யாரும் இதனை தட்டிக் கேட்க வில்லை. என்னையும் சேர்த்து . என் மனைவி நிறுத்துங்க அவனை நாலு இழு இழுத்துட்டு வரேன். கொலையே செய்யட்டுமே , அதற்காக இப்படியா? இவனை கேட்பதற்கு யாரும் இல்லையா? மனிதாபிமானம் , மனித உரிமை என கூக்குரல் கொடுக்க யாரும் இக்கூட்டத்தில் இல்லையா? என்று கொதித்தாள். நாலு நாள் வேலைக் கெட்டாலும் பரவாயில்லைன்னு இவனையெல்லாம் கோர்டுக்கு இழுத்து தண்டனைக் கொடுக்க வேண்டும் என சூடாக பேசினாள்.  அதற்குள் நான் அந்த இடத்தை கடந்து சென்றேன்.

  என் மனைவி பின்னால் இருந்து என்னை பயந்தாங்கோளி? உங்கள மாதிரி ஆளுக இருக்கிறதாலத் தான் இது மாதிரி நடக்கிறது.  இதனை யார் தான் தட்டிக் கேட்பது? எல்லாரும் தான் வேலையுண்டு என கடந்து சென்றால் , சமுக பொறுப்பு யாருக்குதான் உள்ளது?  அவள் ஒருதப்பும் செய்யாதவளாக இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவமானம் தாங்காமல் லாக்கப்பில் தற்கொலை செய்து கொள்வாள். அல்லது இது போன்றே அவளை போலீஸ் ஸ்டேசனில் காட்டு மிராண்டித் தனமாக அடித்தால் இறந்தே போய் விடுவாள். இது போன்ற நடத்தையால் தான் காக்கி சட்டை மீது பொது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகிறது என ஏசிக் கொண்டே வந்தாள். என்னால் பிளாக்கில் இது போன்ற விசயத்தை எழுத முடியும் அதை தவிர சாராசரி மனிதனாக தான் நடக்க முடியும் என சப்பைக்கட்டு கட்டி விட்டு அவளை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டேன்.
    அந்த நிகழ்ச்சியை பார்த்த யாரும் அதனை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது? அவள் செய்த தவறுதான் என்ன? அவள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாளை செய்தி தாளில் வருமா? இல்லை இது யாருக்காகவாவது வந்து மிரட்டல் விடுத்த செயலா? அம்மா வந்தும் நிலமை இப்படித்தானா? அம்மாவின் ஆட்சியில் தாய்மார்களுக்கு விடிவு கிடையாதா?  மனித உரிமை மீறல் செயல்களில் அம்மா விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் லாக்கப் மரணம் தொடர்கதையாகி ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விட வாய்ப்பு உள்ளது! எல்லா துறைகளிலும் குறைகளை களைய துரித நடவடிக்கை மேற்கொள்ளும் அம்மா விரைவில் போலீஸ் துறையில் நடக்கும் அத்து மீறல்களை கவனிக்க வேண்டும் என்பது சாமானிய மனிதனாக அதிமுக அனுதாபியாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

   இனி என்னத்த சொல்ல அதான் மூட் அவுட் ஆயிடுச்சுல்ல… நினைவலைகளுடன் நாளை சந்திக்கின்றேன்.



  

12 comments:

Unknown said...

உங்கள் எழுத்தின் நேர்மை பிடிச்சிருக்கு,ஆனால் உங்கள் மனசாட்சியின் நேர்மையை நினைக்க வெறுப்புதான் வருகிறது.:-(

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
சில நேரம் ஒன்றும் செய்ய முடிவதில்லை. வேதனை தான்.

A.R.ராஜகோபாலன் said...

யார்கொடுத்த அதிகாரமும் இல்லை
இந்த காட்டுமிராண்டிகளே
எடுத்துக் கொண்டது
இவர்களின் வீரம் எல்லாம் இந்த மாதிரி அப்பாவிகளிடம்தான்
அரசியல்வாதிகளிடமும்
பணக்காரகளிடமும்
வாலை ஆட்டுபவர்கள் இவர்கள்

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

தவறு தான் நாம் தட்டி கேட்காமல் விட்டதால் தண்டனை கிடைக்காமல் போய்விடாது.....

வலிப்போக்கன் said...

யார் கொடுத்த அதிகாரம்.நீங்கள் கொடுத்த அதிகாரதான்

Yaathoramani.blogspot.com said...

கொடுமையை உணர்ந்தமைக்கும்
மனச் சுமையை பதிவில் இறக்கிவிட்டமைக்கும் நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... தட்டி கேட்க நினைத்தும் நம்மால் முடியவில்லையே...ஏன்?
நமக்கு தெரிந்தவருக்கு அது மாதிரி இருந்தால்?

shanmugavel said...

நம்மையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டுமோ? அப்படி செய்து இன்னொரு பதிவு எழுதுவீர்களா?

bandhu said...

இது அநியாயம். அதிகாரம் கொஞ்சம் கைக்கு வந்தவுடன் இது போன்ற மனிதர்களுக்கு அது நேரே தலைக்கு ஏறி விடுகிறது!

நீங்கள் என்ன செய்தீர்களோ அதையே தான் நானும் செய்திருப்பேன். என்ன, உங்களைப்போல நேர்மையாக ஒத்துக்கொண்டிருக்க மாட்டேன். :-)

கோவை நேரம் said...

உங்களை போலவே தான் அனைவரும்.நமக்கேன் இந்த வம்பு என்று ..?சுய காரணம் வேறு இருக்கும்....ஆபீஸ் டைம் ஆச்சு , இது மாதிரி ...உங்கள் மனைவி கொண்ட உறுதி கூட உங்களிடம் இல்லையே...

ad said...

நானும் பார்த்திருக்கிறேன்-சென்னையில் இப்படி பல சம்பவங்கள்.சில சமயம் ஏன் என்று கேட்க நினைத்திருக்கிறேன்.அப்போதெல்லாம் அம்மா - நீ கேட்கப்போக உன்னில பொய் கேஸ் போட்டு அடைப்பாங்கள்.உன்ர ஊரில இருக்கேலாம இங்க வந்திருந்துகொண்டு எங்கள திருத்துறியோ எண்டு கேப்பாங்கள்.-என்று கூறி,என்னை இளுத்துச் சென்றிருக்கிறார்.இங்குள்ளவர்களே கண்டும் காணாமல் நடந்துகொள்ளும்போது என்னாலும் என்ன செய்ய முடியும்.வார்த்தைமூலம் நாலுபேரிடம் பகிர்ந்துகொள்ளத்தான் முடியும்.

cheena (சீனா) said...

அன்பு நண்பர்களே ! மறு மொழி இட்டவர்கள் அனைவருமே எழுதியவரைக் குறை கூறுகிறீர்களே ! தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி. நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள். நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. பரிதாபப் படத்தான் முடியும்.

Post a Comment