Tuesday, July 12, 2011

சூர்ப்பணங்கு –நாடக விமர்சனம்கடந்த வெள்ளிக் கிழமை மாலை கா.பா விடம் இருந்து கைப் பேசியில் அழைப்பு வந்தது. கோணங்கியின் தம்பி முருகபூபதி இயக்கும் நாடகம் மதுரைக்கல்லூரியில் நடக்கிறது , ஆறு மணிக்கு வந்து விடுங்கள் என்றார். நாடகம் என்றவுடன் என் கல்லூரி கால நினைவுகள் என்னை சூழ்ந்துக் கொண்டன. அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறையில் படித்தாலும், நான் அடிக்கடி தென்படும் இடம் தமிழ் வகுப்பறைகளிலும் ,என்.எஸ். எஸ் வீதி  நாடகங்களிலும் தான். நாடகங்களை உருவாக்கும்  பேராசிரியர் பிரபாகர் மற்றும் சுந்தர் அவர்களுடனும் பொழுதுகள் இன்றும் பசுமையாக மலர்கின்றன.  சுந்தர் அவர்கள் எந்த ஒரு கருவையும் நாடகமாக்கி , நல்ல திரைக்கதையுடன்(காட்சிப்படுத்தல்) சுவைப்பட இயக்குவதில் வல்லவர். பிரபாகர் அவர்கள் நாடகத்திற்கு தாளம் சேர்ப்பதில் வல்லவர். சூழலுக்கு ஏற்ற இசையினை கொண்டு வந்து நாடக இயல்பினை அதன் தன்மையோடு ரசிக்க வைப்பதில் வல்லவர். வீதி நாடகங்களில் நடிப்பது  மிகவும் சிரமமான ஒன்று. மிகையான நடிப்பு பார்வையாளர்களை முகம் சுழிக்க வைப்பதுடன் , எள்ளி நகையாடச் செய்யும், நாம் சொல்ல வந்த கருத்தினை திசைதிருப்பச் செய்யும். எனக்கு நாடகப் பாத்திரத்தின்  இயல்பு மாறாமல் நடிக்க கற்றுத் தந்தவர் சுந்தர் அவர்கள்.

 மதுரை கல்லூரி நுழைந்தவுடன் சுந்தர் அவர்களை பார்த்தவுடன் மகிழ்ச்சி. அவர் லேசான புன்முறுவலுடன் என்னை பார்த்தார். அதன் அர்த்தம் இன்னும் நீ நாடகப் பைத்தியமாக இருக்கிறாயா? நான் கற்றுக் கொடுத்தது வீண்போகவில்லை என்பது போல இருந்தது. அவரின் நாடகப் பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்டவன் நான் என்பதில் பெருமிதம் கொள்வேன்.  நாடகம் தொடங்கும் முன் பலர் பேசினர். கல்லூரி சார்ந்து பேசியவர் பார்வையாளர்களின் ஆவல் புரியாமல் தான் கொண்டு வந்த குறிப்புக்களை எப்படியும் கொட்டி விட வேண்டும் என்று துடிப்புடன் பேசிக் கொண்டு இருந்தார். இடையில் சல சலப்பு ஏற்படவே , பார்வையாளர்களைப் பார்த்து , “ஏன் இப்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நான் பேசுவதை நிறுத்தி விடவா?  ” என்றார். அனைவரும் சிரித்து விட்டனர். ”அதைத்தானே விரும்புகிறோம் அது கூட புரியவில்லையா? “ என கமண்டு வந்தும் நிறுத்தவில்லை. இப்படியாக நகர்ந்து பொழுது ..என்னை மீண்டும் என் கல்லூரியின் மரத்தடி நிழலுக்கு அழைத்துச் சென்றது.
நாடக சூழல்  மரங்கள் அடர்ந்த வனம் போன்ற பகுதியில் இயற்கையோடு அமைந்து இருந்தது. இது மு.ராமசாமியின் நிஜ நாடக குழுவை நினைவு படுத்தியது. கல்லூரியில்  அனைத்து மாணவர்களும் சென்றவுடன் தமிழ் வகுப்பறைகளுக்கு அருகில் , லைப்ரேரி பின்புறத்தில் அடர்ந்த சருகுகள் நிரம்பிய இடத்தில் அமர்ந்து ஒத்திகைப் பார்ப்பது நினைவுக்கு வந்தது. ஒத்திகையின் நடுவில்  அனைவருக்கும் எதிரில் உள்ள கேண்டீனில் டீயும் , பஜ்ஜியும் வாங்கித் தருவார்கள். சில சமயம் கேண்டீனில் எதுவும் இல்லையெனில் டோக்கன் தந்து விடுவார்கள் மறுநாள் கேண்டீனில் அதை வைத்து ஜமாய்த்து விடுவோம்.

 நாடகம் தொடங்க நேரமாகவே,  கோணங்கி அண்ணனை பார்க்க சென்றேன். கோணங்கியின் எழுத்து ஆளுமை என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலத்தரப்பட்ட வாசகருக்கான மொழியின் நெகிழ்ச்சித்  தன்மை கொண்டவர். நவீன இலக்கிய வாதிகளுக்கு முன்னோடியாக திகழ்பவர். அவருடன் பழகியவருக்கு தான் அவரின் எளிமை, பிறரை ஊக்குவிக்கும் தன்மை, அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை புலப்படும். எப்போதும் இலக்கியத்தை தோளில் தொங்கப்போட்டுக் கொண்டிருப்பவர். கல் குதிரை படியுங்கள் , அவரை நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
நான் கோணங்கி அண்ணனை பார்த்த சமயம் ,அவர் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்த நடிகருக்கு (இரமேஸ் என நினைக்கிறேன்)வயிற்றில் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். இதை பார்க்கையில் நான் கல்லூரியில் மேடை நாடகமான  முட்டை’ போடும் சமயம் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. ’முட்டை’ நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இன்பம் என்ற பொருளாதரத் துறையைச் சார்ந்த மாணவனுக்கு தீடீர் என்று வயிற்று வலி வந்தது. தொடர்ந்து ஒத்திகை இடைவிடாது பல்வேறு இடங்களில் நடித்தல் தொடர்ச்சியான பயணம் போன்றவை நடிகனுக்கு உடல் உபாதையை ஏற்படுத்தும் என்பது அதை அனுபவிப்பனுக்கு தான் தெரியும். எதையும் வெளியில் இருந்து பார்த்து சரி தவறு என அனுபவம் இல்லாமல் எளிதாக விமர்சித்து விடலாம்.
சிலர் தான் தான் சிறந்த விமர்சகன் , தான் நிறைய புத்தகங்களை பயின்றவன் தன்னால் மட்டுமே சிறந்த விமர்சனத்தை தர முடியும் , சிறந்த படைப்புக்களை தர முடியும் என மார்த்தட்டிக் கொள்வார்கள். ஆனால் அத் துறைச் சார்ந்த எந்த பட்டறிவும் இருக்காது , அனுபவமும்  இருக்காது . ஆனால் அவர்களை தான் இவ்வுலகம் நேசிக்கிறது , கவிஞன் என வர்ணிக்கிறது. அதற்கு அவர்கள் தங்களை  வெளிப்படுத்தும் தன்மை ,மிகச்சிறந்த எழுத்து ஆளுமைகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பு, அவர்கள் மூலமாக ஏற்படுத்திக் கொள்ளும் அறிமுகம் மூலம் தன்னை மிகைப்படுத்திக்காட்டுவது  இயல்பான  , நம்மையும் ஏமாறச் செய்கிறது.   போலி டாக்டர்கள் இருப்பது போன்று போலி இலக்கிய வாதிகளும் பெருகி விட்டனர் என எண்ணத் தோன்றுகிறது.
சமீப காலமாக தான், நான் இலக்கியத்தில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளேன். என் சக பதிவர்கள் கொடுக்கும் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படிக்கிறேன். சமீப காலமாக இலக்கிய உலகில் மனுஷ்யபுத்திரன் , எஸ்.ராமகிருஷ்ணன் , சாரு , பிரபஞ்சன் ஆகியோரை புகழ்வதும் , அவர்களின் படைப்புகளை பஸ்ஸில் இடுவதன் பேரில் தன்னை ஒரு சிறந்த வாசகர் என்பது போலவும் ,விமர்சகன் என்பது போலவும் ,  தானும் இந்த இலக்கியவுலகில் இருக்கிறேன் என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி , தன்னை வளர்த்து கொள்பவர்களையும் , மேற்கண்ட ஆளுமைகளின் மூலம்  பத்திரிக்கைகளில் வாய்ப்பு தேடுபவர்களையும்  பார்க்க முடிகிறது  இத் தனிப்பட்ட கருத்துக்கு எதிர்ப்புகள் வந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளவும் தயாராக உள்ளேன். வாய்ப்புகளை தேடுவது என்பது இயல்பு. வாய்ப்புகளுக்காக தன் சக தோழனையும் இழிவு படுத்தி,முடிந்த அளவுக்கு தனக்கான  வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள மாய தோற்றத்தை ஏற்படுத்துவது என்பது போலி இலக்கியத் தனமாகப்படுகிறது.  


அந்த சனியனைத் தான் அமத்திப் போடுங்களேன் என்ற நிஜ நாடகங்களுக்கான அறிமுகத்துடனே செல்போன் குறித்து எச்சரித்து 
சூர்ப்பணங்கு நாடகம் ஆரம்பிக்கிறது . நாடகம் ஆரம்பித்தவுடனேயே பின்னனிஇசையும், ரீங்கார  ஒலியும் பார்வையாளனுக்குள் புகுந்து இரசவாதத்தை ஏற்படுத்தி , நாடகத்துடன் லயிக்க செய்கிறது.  . இசை பார்வையாளனுக்கு நாடகத்தின் மீது ஒரு வித ஈர்ப்பையும் எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியது . காட்சி மாற்றங்களில் பின்னால் செல்லும் நிழல் உருவங்கள் பார்வையாளனை சோர்வடையாது ஒருவித எதிர்ப்பார்த்தலை ஏற்படுத்தியது . நாடகத்தில் சில இடங்களில் வரும் மொளனம் பார்வையாளனிடம் பல படிமங்களை உருவாக்க இடமளிக்கிறது . இயக்குநர் இடத்தில்  அவரின் குருவான மு.ராமசாமியின் சாயல் இருப்பது மறுக்கமுடியாத உண்மை. நாடகத்தின் உடல்படிங்களில் ஏற்படுத்தியுள்ள கற்பனை ,  பூபதியின் அப்ரித கற்பனைக்கு சான்றாகும். அவரின் மொழி நடை நாடகத்தின் தரத்தை கூட்டி, பார்வையாளன் செவிகளுக்கு இன்பத்தையும், சிந்தனையையும் ஏற்படுத்தி ,  எதார்த்த வாழ்வில் குடும்ப கட்டுக்குள் அடுப்பங்கறையில் அடங்கியுள்ள பெண்ணின்  உப்பு தன்மையை பலபடிமங்களில் உருவகப்படுத்தச் செய்வது  நாடகத்தின் வெற்றியை உறுதி செய்கிறது.   

  காட்சிப்படுத்துதல் என்பது இயக்குநருக்கு தேசிய விருதினை பெற்றுத் தரும் என்பதனை நாடகத்தினை கண்டுணர்ந்தவர்கள் தன் நிலை மறந்து  பாராட்டும் போதும், பூபதியை தொடுதலின் மூlaமும்  அறிய முடிந்தது. ஒவ்வொரு காட்சியும் பார்வையாளனுக்கு பரவசத்தை தந்தது. நல்லதங்காள்  கிணற்றுக்குள் கூந்தல் எடுத்து முடிந்து அணங்காய் மாறி, தன் ஏழுக் பிள்ளைகளுடன் வரும்  காட்சியில் இம் மண்ணின் அவலத்தை அருமையாக காட்சிப்படுத்துகிறார். கடைசியில் சுரக்காய்களை முலைக்காம்புகளாக உருவகப்படுத்தி , அதனை தன் ஏழுக் குழந்தைகளும் பருகும் போது நல்லதங்காள் பரவசப்படும் காட்சி ஒரு கவிதைக்கான தன்மையை வெளிக்கொணர்வதுடன் , அனைவரையும் கட்டிப் போடுகிறது  அனைவரும் அந்த ஐந்து விநாடிகள் நாடகத்தின் காட்சிப்படுத்துதலில் கரைந்து போய், தன்னையே மறந்து இருக்கும் விநாடியில் நாடகம் முடிவது இயக்குநரின் தனித் தன்மையைக் காட்டுகிறது. நாடகத்தின் கற்பனையின் உச்சநிலைக்கு உதாரணமாக சுரக்காய் முலைகளில் பாலூட்டுதல் அமைகிறது.   
 அது மட்டுமின்றி நாடக நடிகர்களின் அனைத்து அங்கங்களும் பேசுகின்றன. கண்கள் வார்த்தைகளுக்கு உயிரூட்டுகின்றன. புருவங்களின் ஏற்ற இறக்கங்கள் பார்வையாளர்களை நாடகத்தின் உணர்வுக்குள் அழைத்து செல்கிறது.  ஒவ்வொரு நடிகராக பாராட்ட ஆசை. இருப்பினும் அதற்கு காரணகர்த்தாவான முருகப்பூபதியைத் தான் பாராட்டத் தோண்றுகிறது.  

   உடையமைப்பு, ஒப்பனை, ஒளியமைப்பு, காட்சி ஜோடனை, நாடகப் பொருட்கள் , நடிகர்களில் உடல் அசைவு, அவர்களின் குரல் ஒலி, மொழியின் உச்சரிப்பு தன்மை,  அத்தனையும் பார்வையாளனை நாடகத்தில் ஒருங்கிணைத்து கட்டிப்போட்டு சத்தமின்றி ,உணர்வுப்பூர்வமாய் ரசிக்கச் செய்தது.  
  நான் போகணுமா … என அடுக்கடுக்கான காரணங்களை முன் வைக்கும் போது , அதிகார வர்க்கத்தின் அதட்டல்களும் ,அதற்கு நல்லதங்காள் அடிக்கிச் சொல்லும் காரணங்களும் , நான் போகணுமா சொல்லு என தொடர்ந்து அழுகையுடன் கேட்கும் காட்சிகளில் வசனங்கள் பார்வையாளனுக்கு பல படிமங்களை உருவாக்கி கொடுக்கிறது.     
  
  அப்பத்தாமார்களை அழைக்கும் போது உலக்கையால் குத்தும் ஒவ்வொரு குத்தும் பார்வையாளனின் இதயத்தை துளைக்கிறது. உண்மையான வலியை உணர்த்துவதாக அமைகிறது. நடிகர்கள் இயல்பு மாறாமல், மிகை நடிப்பு இல்லாமல் , இயல்பாய் நடித்து பார்வையாளனை ஒரு வித மயக்க நிலைக்கு அழைத்துச் செல்வது நடிகர்களின் நடிப்பிற்கு கிடைத்த சான்று.
  பார்வையாளனுக்கு ஒரு படிமத்தை மட்டும் வழங்காமல் ஒவ்வொரு காட்சியும் பல மடிமங்களை ஏற்படுத்தி, பார்வையாளனின் புரிதலை விரிவுபடுத்தியிருப்பது நவீன தமிழ் நாடகங்களின் தன்மையில் முருகப்பூபதியின் நாடகம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது யாவராலும் மறுக்க முடியாது.

  

8 comments:

KANA VARO said...

நாடகம் என்றதும் நான் பல தடவை பார்த்த சத்தியவான் சாவித்திரி நாடகமே ஞாபகத்திற்கு வருகின்றது. அதில் எமனாக நடிப்பவர்களின் பாத்திரக் கனதி அதிகம். பதிவர் கூல்போயின் அண்ணன் எனது பாடசாலையில் எமனாக நடித்ததை மறக்க முடியவில்லை. உங்கள் நாடகம் பற்றிய விமர்சனம் நன்றாக உள்ளது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அருமையான விமர்சனம்.
நாடகம் நேரில் பார்த்து போன்ற உணர்வு.
நல்ல புகைப்படத் தொகுப்புகள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமையா சொல்லி இருக்கீங்க மக்கா...!!!! வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

ஆகா ஆகா சரவணன் - கவிதை எழுத ஆரம்பித்து - நாடகத்திலும் கலக்க ஒரு திட்டம் இருக்கா - வாழ்க வளமுடன் - எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா வந்திருப்பேனெ - பரவால்ல - நட்புடன் சீனா

Unknown said...

நண்பரே
நாடகத்தை நேரில் கண்டது போன்ற
உணர்வை உங்கள் பதிவு உணர்த்தியது
அது மட்டுமல்ல நீங்கள் சிறந்த விமர்சன
வித்தகர் என்பதையும் கண்டேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

நல்ல பதிவு சரவணன்.... எங்களையும் நாடகத்துக்கே கூட்டிப்போயவிட்டீர்கள்...உங்கள் நகரை பற்றியும் எழுதுங்கள்...எனக்கு முறைப்பெண்கள் ஆறு பேரு அங்க உண்டு ...:)

Karthikeyan Rajendran said...

அருமையாக உள்ளது, இது போல போஸ்ட் போடும்போது இரண்டு பாகங்களாக வெளியிட்டால் வாசகர்கள் படிக்க வசதியாக இருக்கும் என்பது என் தாழ்மையான் கருத்து...

கவியோவியத்தமிழன் said...

நாடக இவ்மர்சனம் மிக நேர்த்தி. உங்களுக்குள் ஒருசிறந்த இலக்கிய விமர்சகன் ஒளிந்துள்ளான்.வாழ்த்துக்கள்..

Post a Comment