Sunday, June 19, 2011

மதுரையில் ஞாநி.   இன்று மாலை மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் காலச்சுவடு மற்றும் கடவு இணைந்து நடத்தும் அற்றை திங்களின் சாதனையாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர் திரு ஞாநி அவர்கள் பங்கு கொண்டு பேசினார். கூட்டம் சரியாக ஆறு மணிக்கு தொடங்கியது. அரங்கம் நிறைந்து இருந்தது. சிறிய அறிமுகத்திற்கு முன் பேசத் தொடங்கினார். தந்தையர் தினமான இன்று அவரின் பேச்சு தந்தையை முன் வைத்து அமைந்தது எதார்த்தமானதாக இருந்தது. அவரின் பேச்சின் சாராம்சம் குடும்பம் சார்ந்த அறநெறியை குறித்ததாக இருந்தது.   மனசாட்சிக்கு நேர்மையாக இருந்தால் வாழ்வு நல்ல முறையில் அமையும். அது குடும்பத்தில் தான் எனக்கு கிடைத்தது. இந்த வாழ்வு என் அப்பாவிடம் இருந்து கிடைத்தது. நான் பத்திரிக்கையாளனாக வர வேண்டும் என்பது என் அப்பாவின் விருப்பம் அல்ல. என் தந்தை எனக்கு அனுபவங்களை தந்து , அந்த அனுபவங்கள் மூலம் நல்லது எது? கெட்டது எது ? என ஆராய்வதற்கு தளம் அமைத்துக் கொடுத்தார். இன்று உள்ள பெற்றோர்களிடம் அதற்கு வாய்ப்பு இல்லை. அன்றைய பெற்றோர்கள் எதையும் தன் பிள்ளைகளிடம் திணிக்க வில்லை. அது தான் 60களில் இருந்து 2000 த்தில் வேறுபடுத்திக் காட்டுகிறது  என்றார்.

   ஒருமுறை நான் காலாண்டு தேர்வு எழுதும் போது கணக்கில் பெயிலாயி விட்டேன். ஆசிரியர் ஏண்டா படிக்க வில்லை என்று கேட்டார். நான் தான் எப்போதும் உண்மையை பேசுபவன் ஆச்சே… நோ டைம் என்றேன். (அரங்கில் அனைவரும் சிரிக்கின்றனர்)ஆசிரியர் பொறுமையாக ஏன் டைம் இல்லை? என்றார். நான் அதற்கு சினிமாவுக்கு சென்றேன் என்றேன். ஆசிரியர் அதற்கு வீட்டிற்கு தெரிந்து தான் சென்றாயா? என்றார். நான் , ஆமாம், என் அப்பாவுடன் தான் சென்றேன் என்றேன். அதற்கு அவர் நம்பாமல் அதே பள்ளியில் படிக்கு என் மூத்த அண்ணனை அழைத்து கேட்டார். அவனும் அப்பா தான் கூட்டிக்கிட்டு சென்றார் என்றான். (அரங்கம் முன்னை விட பலமாக கைதட்டி சிரிக்கிறது )இப்படி தான் என் தந்தை எனக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்ய சொன்னார். எதனையும் சிந்தித்து யோசித்து செய்து கொண்டு, அதன் பயனை  அறிவை பயன்படுத்தி உபயோகிக்க  கற்றுக் கொடுத்தார் என்றார்.
   என்னுடைய வீட்டில் ஒரு தாத்தா இருந்தார். அவர் பக்தி மான். அவர் திடீரென்று காசிக்கு சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டார். எனக்கு அப்போதெல்லாம் நீண்ட தாடியுடன் தாத்தா திடீரென்று வீட்டின் கதவை தட்டுவதாக கனவு வரும் . ஆனால் இது வரை அப்படி ஒரு நிகழ்வு நடக்க வில்லை என்றும் , முன்சிப் வேலையிழந்த தாத்தாவின் கதையை கூறி, தங்கள் குடும்பத்தில் பக்தி உண்டு. ஆனால், அது மேலோட்டமனாது தான். எங்கள் வீட்டில் பிள்ளையார் சதுர்த்திக்கு என் தந்தை என்னையே பூஜை செய்ய சொல்வார். நான் பாரதியின் விநாயகர் சதூர்த்தி நான்மணி கடிகையை பாடுவேன். அதில் பாரதி தன்னை பற்றியே கூறி இருப்பார். அதாவது தன் நண்பனிடம் பேசுவது போல் கடவுளிடம் உறவு கொண்டிருப்பார். தனக்கு வேண்டுவனவற்றை  வேண்டி அது அனைத்து நடக்க விநாயகர் செய்ய வேண்டியது , அது அப்படியே ஆகட்டும் என்று சொன்னால்  மட்டும் போதும் என்று சொல்லி யிருப்பார்.அப்படி தான் என் பக்தியும் இருந்தது என்றார். என் வீட்டில் பொங்கல் கொண்டாடுவோம் . அதுவும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் , நான் சூரியன் படம் வரைந்து அருகில் கரும்பு, பொங்கல் பானை வரைவேன். அதில் தான் பானை வைத்து பொங்கல் கொண்டாடி மகிழ்வோம் . என் அம்மா ரம்ஜான் , கிறிஸ்துமஸ் விழாக்களின் முன் வீட்டின் முன் மிகப் பெரிய கோலமிட்டு, ரம்ஜான் நல்வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் எழுதியிருப்பாள், அந்த அளவுக்கு தான் எங்கள் பக்தி யிருந்தது என்றார்.

   பி.ஏ. படித்து முடித்த வுடன் வேலைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் சேர விண்ணப்பித்திருந்தேன். அப்போது எனக்கு வேலை தர மறுத்து விட்டனர். என் அப்பா அங்கு தான் வேலை பார்த்தார். இருந்தும் வேலை கொடுக்க வில்லை. ஏன் என்றால் என் அப்பாவை பிடிக்காது. என் அப்பா மிகவும் கரார் பேர் வழி. ஒரு சமயம் அங்கு வேலைநிறுத்தப் போராட்டம்  நடைப் பெற்றது. வேலை நிறுத்த போராட்டத்தில் அப்பா கலந்து கொள்ள வில்லை. அப்பாவின் எண்ணம் ஒரு பத்திரியாளன் வேலை நிறுத்தம் செய்ய முடியாது , கூடாது, அவன் வாசகனுக்கு தினமும் நடக்கும் செய்தியை கொடுக்க கடமைப் பட்டவன். ஆகவே, வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. அவரைப் போல உள்ள சிலரைக் கொண்டு அன்று பத்திரிக்கை வெளிவந்தது. பதினைந்து நாட்களுக்கு பின் , வேலை நிறுத்தத்தை நிர்வாகம் பேச்சு வார்த்தை மூலம் சரிசெய்து , அனைவரும் வேலைக்கு  வந்தனர். அவர்கள் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் கொடுத்தனர். ஆனால் , என் அப்பா  அந்த சம்பளத்தை வாங்க மறுத்தார். வேலை பார்த்தவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசத்தை மேற்கொண்டது, என நிர்வாகத்தையும் பகைத்தார். அப்படி பட்ட அவரிடம் இருந்து கற்றுக் கொண்டவன் என்பதால் தான் நானும் இப்படி உள்ளேன் என்று பெருமையாக தந்தையைப் பற்றி பேசினார்.  
 மதிப்பீடுகளில் நிலை குலையாமல் இருக்க வேண்டுமானால் குடும்பம் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் . என் தந்தை அன்றே வரிக்கொடுப்போர் இயக்கம் நடத்தினார். ஒரு தெருவில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் , அல்லது தெரு விளக்கு செப்பனிட வேண்டும் என்றால் ,அதற்கு எவ்வளவு செலவாகும் என்று முன்னமே திட்ட மிட்டு, அதனை அனைவரிடத்திலும் பெற்று,அக்காரியத்தை நிறைவேற்றி , அதற்கு பின் ஸீரோ பேலன்ஸில் சங்கத்தை வைத்து விடுவார்கள். அப்படி தான் கடைசி வரை இருந்தார்.
    1974ல் முயற்சி செய்து இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பர கணக்கு பிரிவில் அட்டன்டர் வேலைக் கிடைத்தது. நான் யாருக்கும் காபி, டீ வாங்கி கொடுத்ததில்லை.கேட்டாலும் மறுத்துவிடுவேன். எனக்கு வேலை பைல்களை அனைவர் டோபிளுக்கு வைத்து விடுவதும், விளம்பரதாரர்களுக்கு தபால் அனுப்புவதும் தான் . ஒரு நாளைக்கு அறநூறு தபால் மட்டுமே அனுப்ப முடியும் . ஆனால் , ஆயிரத்து ஐநூறு தபால்கள் வரும். நான் சரியாக அறநூறு தபால்கள் மட்டுமே அனுப்புவேன். ஏனெனில் அது அடுத்தவனுக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும். முடிவில் என்னை ஓட்டி  பார்க்க சொன்னார்கள். ஓவர் டைம் நீங்கள் கொடுத்தாலும் அதை என்னால் பார்க்க முடியாது. நான் இலக்கிய பணிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதை  தவிர்த்தேன். பின் வேலையை விட்டு சென்னை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன் ஜெர்னலிசம் படித்தேன். அங்கும் கல்லூரியில் பிரச்சனை , போராட்டம் என்று காலம் சென்றது.அன்று ஜெர்னலிசம் பாஸ் செய்ய டைப்ரைட்டிங்க் மற்றும் சார்ட்கேண்டு அவசியம் பாஸ் செய்ய வேண்டும்.. என்னை சார்டுகேண்டில் பெயில் ஆக்கினர். நான் மறு வருடம் பாஸ் செய்து , மீண்டும் இந்தியன் எக்ஸ்பிரஸில் ஜெர்னலிஸ்டாக சேர்ந்தேன்.

   1980ல் நான் என் தந்தையை விட்டு பிரிய வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் என் அம்மாவிற்கும் என் அப்பாவிற்கும் பிரச்சனை. நான் அவரிடம் யு ஹெவ்பின் குட் பாதர் டு மீ, பட் யு ஹவ் பின் நாட் குட் ஹஸ்பண்டு டு மை மம்மி என்று சொல்லி,என் தாய்யை தனியாக அழைத்து செல்ல விரும்புவதாக கூறி, என் தந்தையை விட்டு தனியாக பிரிந்தேன். அப்போது எனக்கு வேலையை விட்டு நீக்கினார்கள். ஏனென்றால் அன்று மட்டும் அல்ல இன்றும்  பத்திரிக்கையாளனுக்கு என்று சொந்த யுனிட்டுக்குள் அசோசியேசன் இல்லை. அதை அமைக்க முயற்சித்த போது , நான் இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்து கொண்டு கணையாழி, கல்கி , ஆன்ந்த விகடன்  போன்ற தமிழ் பத்திரிக்கைகளுக்கு கதை, கட்டுரை எழுதுகின்றேன் என்று நிர்வாகம் என்னை வேலையில் இருந்து தூக்குவதாக சொன்னது. மேலும் அதற்காக மன்னிப்புக்  கேட்டுக் கொண்டால், வேலையில் சேர்த்துக் கொள்வதாகவும், இன்னும் இருபத்து நாலு மணி நேரம் தருகின்றேன் என்றது. நான் பரவாயில்லை நீங்கள் உங்கள் கெடு முடிந்த பின்பே என் டிஸ்மிஸ் ஆடர் கொடுக்கவும் என்றேன்.  என் அம்மாவிடம் இதை பற்றி சொன்னேன். என் அம்மா அதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டாம் நீ தான் எந்த தப்பு செய்ய வில்லையே எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். அந்த கால கட்டங்களில் என் தாய் எனக்காக அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி , அரிசி பருப்பு கடன் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய சூழல் வந்தது. அன்று, இன்றைய நீதிமான் திரு சந்ரு அவர்கள் தான் எனக்கு டீ, காபி, வடை வாங்கி கொடுத்து என் கேஸ்ஸை லேபர் கோர்டில் நடத்தினார். அன்றைய சாப்பாடு செலவையும் அவரே செய்தார். முடிவில் எனக்கு நியாயம் கிடைத்தது. எனக்கு பேக்வேசஸ் எல்லாம் கிடைத்தது. எல்லா கடனையும் அடைத்தேன். ஆனால் என் அம்மா மட்டும் அப்போது என்னுடன் இல்லை. அவர் அதற்கு முன்பே இறந்து விட்டார் என்றார்.

   குடும்பம் தான் ஒருவனை வாழ வைக்கும் , அழிக்கவும் செய்யும் . அதற்கு கருணாநிதியின் குடும்பமே சாட்சி. அவர் குடும்பத்தின் மீது கொண்ட அதீத அக்கரை தான் இன்று அவரை ஆட்சியில் விட்டு தூக்கியது மட்டுமல்லாமல் கட்சியையும் ஆட்டுவிக்கிறது. ஆகவே, குடும்ப அற நெறி மிக்கதாக அமைய வேண்டும். மனிதனின் மதிப்பீடுகள் தான் அவனை சந்தோசமாக வைத்திருக்கும்.


     இன்றைய பெற்றோர்கள் குழந்தைகளை ஒரு பணம் சம்பாதித்து கொடுக்கும் இயந்திரமாக தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் இன்வெஸ்மெண்டுக்கு ரிட்டன்ஸ் எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பதனால் தான் அவனும் உனக்கு பணம் தானே வேண்டும் என்று , பணத்தை கொடுத்து நல்ல ஹோம்களுக்கு அனுப்புகிறான். வாழ்வு சந்தோசமாக இருக்க வேண்டும் எனில் பெற்றோர்களும் கல்வியாளர்களும் மாற வேண்டும். ஆனால் இன்று கல்வியாளர்கள் எப்படி இருக்கிறார்கள்? மூத்த கல்வியாளர் வா.கோ. குழந்தைச்சாமி கனிமொழி கைது ஏன் ? என்று கலைஞருக்கு கடிதம் எழுதுகிறார். கனிமொழி என்ன அறப்போராட்டம் செய்தா சிறை சென்றார்?  முடிவாக இரண்டு உதாரணங்களை சொல்லி என் உரையை முடிக்கிறேன்.

    இன்றைய இளைஞர்களிடம் இரண்டு முக்கியமான பிரச்சனைகள் இருக்கின்றன. 1.அதிகம் சம்பளம் அதாவது குறைந்தது ரூ.45,000 சம்பளம் வேண்டும் 2வது அவர்களுக்கு அதற்கான தகுதியில்லை. இருப்பினும் காத்திருந்து அந்த வேலைக்கு செல்ல காத்திருக்கின்றனர். பெற்றோர்களும் இதை ஊக்குவிக்கின்றனர். அவர்களுக்கு பாசம் பந்தம் எல்லாம் விட மகன் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது  மட்டுமே.இப்படி பட்ட சூழலில் நெறியை நாம் எதிர்பார்க்க முடியாது.

   ஒன்று பெங்களூரில் மற்றொன்று கோயம்புத்தூரில் நடந்த சம்பவங்களை நான் சொல்ல நினைக்கிறேன். பெங்களூரை சார்ந்த தமிழ் பெண் அமெரிக்க மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்கின்றனர். அவள் கர்ப்பம் அடைகிறாள். அவன் வேண்டாம் ஐந்து வருடம் கழித்து நாம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். அதுவரை செக்ஸ் வைத்துக் கொள்வோம் என்கிறான். ஆனால் அவள் மறுத்து இது தன் முதல் குழந்தை இதை நான் அழிக்க விரும்ப வில்லை என்று சென்னைக்கு வந்து விடுகிறாள். குழந்தை பிறக்கிறது. தகவல் அனுப்பப்படுகிறது. அவனும் வருகின்றான். குழந்தையை கொஞ்சி மகிழ்கின்றான். இரவு பன்னிரெண்டு மணிக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி விட்டு வருகின்றான். காலையில் எழுந்து குழந்தை எங்கே என்றால், அது கிணற்றில் நன்றாக தூங்குகிறது. இனி நாம் சந்தோசமாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் வா என்றானாம்.

  இரண்டாவது கதை சற்று வித்தியாசம் படும். அவனும் இவனைப் போல குழந்தை வேண்டாம் என்று இருக்கிறான். அவளும் கலைக்க மறுத்திருக்கிறாள். குழந்தை பிறக்கிறது . வருகிறான். வந்ததும் குழந்தையை கொஞ்சுகிறான். தன் பின் குழந்தையை ஓங்கி சுவற்றில் அடித்து கொன்று விடுகின்றான்.
இங்கு எங்கே  படிப்பு உதவுகிறது. அவன் கற்று கொண்டது என்ன.? அவன் பெற்றோர்கள் அவனுக்கு கொடுத்தது தான் என்ன?
ஆகவே தான் நான் சொல்கிறேன் அறிவையும் , மனதையும் தெளிவாக வைத்துக் கொண்டால் வாழ்வில் பிரச்சனைகளேயில்லை. குடும்பம் தான் இந்த அற நெறிகளை தரும். எனக்கு கொடுத்திருக்கிறது என்று முடித்தார். பின் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 

7 comments:

R.Puratchimani said...

Good Post...Thanks

வை.கோபாலகிருஷ்ணன் said...

voted. 2 to 3 in INDLI

ஞானி அவர்களின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. நல்ல மனிதர். அனுபவம் அதிகம். அவரின் கட்டுரைகளை நான் கல்கியில் விரும்பிப்படிப்பதுண்டு.

பதிவிட்டுத்தந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
ஞானியின் அருமையான பேச்சை சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

1.அதிகம் சம்பளம் அதாவது குறைந்தது ரூ.45,000 சம்பளம் வேண்டும் 2வது அவர்களுக்கு அதற்கான தகுதியில்லை. இருப்பினும் காத்திருந்து அந்த வேலைக்கு செல்ல காத்திருக்கின்றனர். பெற்றோர்களும் இதை ஊக்குவிக்கின்றனர். அவர்களுக்கு பாசம் பந்தம் எல்லாம் விட மகன் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே//

நூற்றுக்கு நூறு உண்மை.....!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான கட்டுரை

Muruganandan M.K. said...

தந்தையர் நாளுக்கு ஏற்ற அருமையான பேச்சு. அதைப் பொறுப்புறணர்வுடன் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் சரவண, ஞானிக்கு எப்படி மலரும் நினைவுகளாய் அத்தனையும் நினைவில் இருந்ததோ - அதை விட ஒரு படி அதிகம் போய் சொற்பொழிவினை அப்படியே பதிவாக்கிய நினைவாற்றல் போற்றத்தக்கது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment