Tuesday, September 28, 2010

பொறுப்பு உடையவர்கள்.

     ஆசிரியர் என்பவர் வீட்டுக்கும் நாட்டுக்கும் உலகுக்கும் ஒளியுண்டாக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் , உயர்வு உண்டாக்கும் பெரும் பொறுப்பு உடையவர்கள்.
    
      ஆசிரியர், ஆசான், கணக்காயர், குரு, ஈகையர், கொடைஞ்ர்,ஓதுவார், பார்ப்பார், புலவர் என பலப்பெயரால் ஆசிரியர்கள் அழைக்கப்பட்டாலும் ,குற்றமில்லாமை, நூல்தேர்ச்சி , செம்மை, உள்ளொளி, கொடைநலம், பயிற்றல், ஆய்தல், புலமைச்சீர் எனும் சிறப்பியல்புகள் இல்லை எனில் ஆசிரியர் என்பர் ஒரு சாதாரண மனிதரே.

       ஏட்டுக்  கல்வி கற்பிப்பவரே ஆசிரியர் என்று கற்றல் தொழிலை சுருக்கி , அதன் சிறப்பும் குறுகிவிட்டது . மருத்துவர், தச்சர், கொல்லர், துன்னர் (தையற்காரன்)என பயன் தரும் ஒன்றை அதாவது தான் கற்ற ஒன்றை பிறருக்கு கற்பிப்பவர் யாவரும் ஆசிரியரே.


      அது சரி , இன்று ஆசிரியர்கள் ஏன் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது வெறுக்கப்படுகிறார்கள்?
 
       இந்த  மாணவர்களுக்கு பாடம் எடுப்பதும் ஒன்று தான் எடுக்காமல் இருப்பதும் ஒன்றுதான் என பல ஆசிரியர்கள் வருந்த கேள்வி பட்டுள்ளேன். இவர்கள் எல்லாம் மாணவர்களா...? மாடு மேய்க்க கூட லாயக்கு இல்லாதவர்கள் ...
முதலில் தம் நிலை உணர வேண்டும் , தாம் ஆசிரியராக இல்லாத போது அவர்கள் மாணவர்களாக  மட்டுமல்ல , எதுவுமாக இருந்தாலும் என்ன பயன்..?
    
    கண்டிப்பது நம் கடமை ஆனால் அதற்கு முன் நாம் ஆசிரியராகக பரிணமிக்க வேண்டும். வள்ளுவர் தன் 562  வது    குறளில் தண்டனை கடுமையானது போல்  இருக்க வேண்டும் ஆனால் அது மென்மையானதாய் அமைய வேண்டும் என்கிறார்.

       மொராச்சி தேசாய் ஒரு முறை செய்தியாளர்கள் ஒரு மாநில முதல்வரை சுட்டிக் காட்டி நீங்கள் ஏன் அவரை கண்டிக்க வில்லை என்ற கேள்விக்கு பதில் கூறும் போது,"நான் என்ன பள்ளி ஆசிரியனா , கண்டித்து கூறுவதற்கு ? கேட்டுக் கொண்டுள்ளேன் " என்றாராம்.

   கண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு உள்ளது. நாம் ஆசிரியர்களாக இருந்து கண்டிக்கும் போது எந்த மாணவனும் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தற்கொலைக்கு முயல மாட்டான். மாணவன் மனம் உணாரும் விதமாக நாம் தண்டிக்க வேண்டும்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம். வளர்ந்த மாணவன், தவறு செய்துவிட்டான், அவனை துணைவேந்தர் அழைக்கிறார், ஒரு பிரம்பை எடுத்தார் , எத்தனை ஆண்டுகள் இங்கு பயில்கிறாய்? மூன்றாண்டுகள். முன்றண்டுகள் பயின்று இத்தவறு செய்கிறாயா ? இது யார் குற்றம் ? மாணவன் பதில் கூறாமல் நிற்கிறான். பிரம்பை எடுத்தார் , உன்னை கண்காணிக்காதது என் குற்றம் ..உன்னை துருத்தாது என் குற்றம் என்று தன்னை தானே பிரம்பால் அடித்துக் கொண்டார். பையன் அவரின் காலில் விழுந்து கதறி கண்ணீர் விட்டு இனி அத் அத்தவறை செய்ய மாட்டேனென்று உறுதி கூறுகிறான். மாணவனின் தவறை உணரச் செய்தவர் துணைவேந்தர் வெண்கல ஒலியார் சீனிவாசர் !


    நாம் நம் தகுதிகளை மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவு உயர்த்திக் கொள்ள வேண்டும் .  நாம் கடைக்கு செல்கிறோம் ஏதாவது ஒரு பொருளை கடைக்காரர் கொடுத்தால் அப்படியே வாங்கி வருவோமா! அதன் தரம் , மற்றும் அது எப்போது தயாரிக்கப் பட்டது , எப்போது வரை உபோயோகிக்க முடியும் என்று சரி பார்த்து , விலையை முடிந்த வரை குறைத்துப் பேசி வாங்குகிறோம். அது போல் தான் எதிலும் என்பதை உணர்ந்து நாம் தகுதி உள்ளவராக மாற வேண்டும்.


    ஆசிரியர் தினம் கொண்டாடும் நாம் ....அவரின் (டாக்டர் ராதாகிருஷ்ணன் ) வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு முறை தம் கண்ணை ஆய்வு செய்வதற்காக கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். மருத்துவர்  அவரை ஒரு  இருக்கையில் அமரச் செய்து பரிசோதிக்க ஆயுத்தமானார். அப்போது மருத்துவர் ராதகிருஷ்ணானிடம் தங்கள் மடியில் உள்ள குழந்தையை கீழே இறக்கி வையுங்கள் என்றார். நம் ஆசிரியர் திகைத்தார். ஏனனெனில் அவர் மடியில் வைத்திருந்தாது தன் தலைபாகையை . தலைபாகைக்கும்,குழந்தைக்கும் வேறுபாடு தெரியாத கண்ணொளியுடைய  மருத்தவரிடம் தாம் மருத்துவம் செய்ய விரும்பாதவராய் விடை பெற்று சென்றார்.

     குறையுடைய பார்வையர் குறையுடைய பார்வையருக்கு மருத்துவம் செய்தல் குறையுடையதாகும் என்பது இராத கிருஷ்ணன் கருத்து. அது போல தெளிவு பெற வந்த மாணவர்களுக்கு தெளிவிலாத ஆசிரியர் தெளிவு காட்ட முடியாது என்பது அவர் கருத்து.

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக்  கொள்ளார்
 குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழ மாறே "
                                                               -திருமூலர் (திரு மந்திரம் 1680 )      



திருவள்ளுவர் , தமக்கு தெளிவில்லாத ஒன்றில் ஒருவர் ஈடுபாடுவதே அவர்க்கு இழிவு என்பதை 464 வது குறளில் கூறுகிறார் .

"தெளிவி லதனைத் தொடங்கார் இனிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர் "
  
  ஆகவே, ஆசிரியர்களாகிய நாம் நம் தகுதிகளை வளர்த்துக் கொண்டு வகுப்பறையை இனிமையானதாக மாற்றி , நம் கடமைகளை உணர்ந்து சிறப்பாக செயல் படவேண்டும்.

ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது என்றால் ஒரு சிறைக்கூடம் மூடப்படுகிறது என்பது பொருள் . ஆகவே , அந்த பொருள் உணர்ந்து தம் தகுதிகளை மேம்படுத்தி ஆசிரியர்கள் தம் பணியினை செய்திட வேண்டும் .

8 comments:

அன்பரசன் said...

Super sir..

அழகி said...

\\தாம் ஆசிரியராக இல்லாத போது அவர்கள் மாணவர்களாக மட்டுமல்ல , எதுவுமாக இருந்தாலும் என்ன பயன்..?\\

மிகச் சரியான வார்த்​தைகள்.

ஹுஸைனம்மா said...

தலைவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் அறிந்துகொண்டேன். நல்ல கட்டுரை.

மோகன்ஜி said...

அரிய நிகழ்வுகளோடு அழகான பதிவு!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

கல்வி முறையில் பெரிய மாற்றம் வேண்டும். இப்போது ஆசிரியர்களின் கைகளில் இருந்து பிரம்பை பிடுங்கிக்கொண்டு விட்டார்கள். ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பணிந்து நடக்கும் நிலை மாறி மாணவர்களுக்கு ஆசிரியர் பணிந்து நடக்க வேண்டியிருக்கிறது.

எங்கள் பள்ளி அதனாலேயே வீணாகப் போனது. சில மாணவர்களை கடிந்துகூட பேச இயலாதவர்களாக ஆசிரியர்கள் ஆகும் போது, எக்கேடோ கெட்டுப்போங்க என்று சொல்லி வருத்தம் கொள்கிறார்கள்.

100 சதவீத தேர்ச்சி என்ற மட்டமான சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. 5 ஆம் வகுப்பில் அ, ஆ தெரியாதவர்களை உருவாக்கி தருகிறார்கள். அது இன்னும் நீடித்து 10ம் வகுப்பு வரை செயல்படுத்த திட்டம் இருப்பதாக சொல்கின்றார்கள்.

மாணவர்களுக்கு நன்மை செய்கிறோமா. தகுதியில்லாத மாணவனை வைத்துக்கொண்டு சமூகம் என்ன செய்யப்போகிறதோ!.

ஸாதிகா said...

நல்ல பகிர்வு.அறியாததை அறியத்தந்தமைக்கு நன்றி.

Ravi kumar Karunanithi said...

"வள்ளுவர் தன் 562 வது குறளில் தண்டனை கடுமையானது போல் இருக்க வேண்டும் ஆனால் அது மென்மையானதாய் அமைய வேண்டும்"

indha line migavum arumayaga irundhadhu.... padhivu arumai....

குமரன் (Kumaran) said...

வாவ். மிக மிக ஆழ்ந்த பொருளுள்ள வரிகள். அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஆசிரியரே!

Post a Comment