Friday, September 18, 2015

நான் பெரியமனுசனான கதை !

நான் அப்போது பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். டேய் எங்க வீட்டு பக்கத்தில் 10 படிக்கிற வசந்தா வயசுக்கு வந்துட்டாளாம்! டேய் நம்மோடு படித்தா புஷ்பா 9 வகுப்பிலேயே குத்த வச்சுட்டாளாம். இப்படி என் வயது ஒத்த அல்லது வயது குறைந்த பெண்கள் பெரிய மனுசி ஆகிய போது எனக்கு பெரிய மனுசன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது.

எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண் பெரும் மதனிடம் டேய் நாம் எப்படா பெரிய மனுசன் ஆவோம் என்றேன். +2 படித்த அவன் பால் உறுப்புகள் பகுதியை எடுத்து தந்தான். டேய் அத தான் சார் நடத்தலையே.. நமக்கு எல்லாம் தெரியும்ன்னு போயிட்டாரே.. என்றேன். நீ இப்ப பெரிய மனுசன் தாண்டா என்றான். அத எப்படிடா உறுதிப்படுத்துறது? போய் கௌதமன் சார் கிட்ட கேளு டீட்டெய்லா சொல்வார் என்றான்.  எதுவும் புரியாமல் கௌதமன் சார் கிட்ட சென்றேன்.

அவர் எங்களுக்கு விலங்கியல் நடத்தும் ஆசிரியர். சார் பெண்கள் எல்லாம் பெரிய மனுசி ஆகிவிடுகின்றார்கள். ஆண்கள் எப்போது பெரிய மனுசன் ஆவர்கள் என கேட்டேன். அப்பாவியான என்னை பார்த்து ஏற இறங்க பார்த்தார். உடன் வந்த மாணவர்கள் கொள் என சிரித்தனர். சார் ஏன் இப்படி சிரிக்கின்றார்கள்? என கேட்டேன். அவர்கள் பெரிய மனுசன் ஆகிட்டாங்களாம் அதான் சிரிக்கிறார்கள் என்றார். நான் எப்ப ஆவேன்? எப்ப ஒரு பொண்ண நீ நினைச்சு உருகுறீய்யோ அப்ப நீ பெரிய மனுசன் ஆகிட்டேன்னு அர்த்தம். அப்ப இந்த பசங்க பொண்ணுகள பார்த்து உருகுகின்றார்களா? என மனதில் சிந்தனையை ஓட்டி வீட்டிற்கு வந்தேன்.
எனக்கு அப்படி எந்த பெண்ணும் உருகும் அளவுக்கு கவர வில்லை. பல நாட்கள் சிந்தித்தேன். ஒன்றும் தோணவில்லை. 

கல்லூரியில் சேர  வேண்டும். விடுமுறை ஓடி கொண்டிருந்தது. அம்மா விடம் எந்த கல்லூரியில் விண்ணப்பிப்பது என கேட்டேன்.  டேய் பேசாம பெரியம்ம்மா வீட்டில் இருந்து படிக்கலாமே! போய் அழகப்பா யுனிவர் சிட்டியில் அப்பிளிகேசன் வாங்கு என்றாள். எப்படி மறந்தேன். பாரிஜாலம். அழகான பெண். மா நிறம் என்றாலும் கொள்ளை அழகு. சிரித்தப்படி அவள் கூறும் கதைகள் ஏராளம். விதவிதமாய் கதைகளும் விடுகதைகளும் சொல்லி அசத்துவாள். ஊரணிக்கு அழைத்து சென்று ஊர் புராணம் பேசுவாள். முத்து பற்கள் சிரிப்பில் அவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோணும். அந்த ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் போது அவள் சிரிப்பு ஒலிக்கு ஆலமரத்தில் பறவைகள் கூடி விடும். அவள் பறவைகளுடன் பேசுவாள். நம்ப முடியாதது போல் இருக்கும் ஆனாலும் அவள் பேசுவதை நம்பி தான் ஆக வேண்டும் ஒவ்வொரு முறையும் என்னை விழுதில் இருந்து தள்ளும் போது பறவையாக மாறி பறப்பதாகவே தோன்றும். ஆஹா எப்படி மறந்தேன். 

இப்போது நானும் பெரிய மனுசன் தான் பாரிஜாலத்தை நினைக்க ஆரம்பித்து விட்டேனே!

கரைக்குடி சென்றேன். பெரியம்மா வீட்டில் பையை தூக்கி போட்டேன். என்னடா விசேசம். பரீட்சை லீவு. அப்படியே யுனிவர்சிட்டியில் அப்ளிகேசன் போடலான் என்று வந்தேன். நாளைக்கு யுனிவர் சிட்டி போகணும். நாளைக்கு பெரியம்மாவுக்கு லீவு கிடையாதே? அப்ப பக்கத்துவீட்டு பாரிஜாலத்தை வர சொல்லுங்க அவளை அழைச்சுகிட்டு யுனிவர் சிட்டி போறேன். முட்டாள் மாதிரி பேசுற.. அவ பெரிய மனுசி ஆகிட்டா. வெளியே எங்கும் போக மாட்டா? நானும் பெரிய மனுசன் தான் . என்னை நம்பி வரலாம். போடா முட்டாள். உன்னோட வயசு வந்த பொண்ண எப்படி அனுப்புவாங்க? என்ன பெரியம்மா சொல்ற போன லீவுக்கு வந்தேன். அவ ஊரணியில் என்னை உட்கார வச்சு ஊஞ்சல் ஆடினா? +2 படிச்சு முடிச்சா பெரிய மனுசியா? அட போடா அப்ப அவ வயசுக்கு வரலை. பஸ் ரூட்டு சொல்றேன் இல்லை ஆட்டோ பிடிச்சு போயிட்டு வா என்று கிளம்பினாள்.

நான் ஊரணி கரைக்கு சென்றேன். ஊரணி கரை அம்மன் கோவில் மணி ஓசை கேட்டது. மெதுவாக நடந்தேன். கோவிலின் உள் பாரிஜாலம் செல்வது போல் உணர்ந்தேன். எட்டு வைத்து நடந்தேன். அவ்வளவு அழகு. நான் அவள் எதிரில் நின்றேன். அவள் என்னை காணதது போல் நடந்தாள். மெதுவாக பாரி என்று அழைத்தேன். அவள் இப்போது என்னை முறைந்தாள். அருகில் அவளது அம்மா நின்று இருந்தாள். பாரி நல்லா இருக்கிய்யா? என்றேன். அவள் அம்மா என்னை பார்த்தாள். ஆண்டி நான் … பக்கத்து வீட்டு ..மதுரையில் இருந்து என்றேன். ஓ நீயா .. நல்லா இருக்கீய்யா.. பட்டினம் போல் இல்லா.. இனி பாரிஜாலம் பேச மாட்டாள் என்றார். இல்லை ஆண்டி என்றேன். அதற்குள் இருவரும் கடந்தனர்.
வெளியில் வந்தேன். ஆலம் விழுதுகள் பற்றினேன். காற்று வீசியது. நான் விழுதுகளை பற்றி கொள்ள பின்னால் இருந்து பாரிஜாலம் தள்ளுவது போல் உணர்ந்தேன். பறந்தேன். பறந்தேன். இப்படி எவ்வளவு் நேரம் ஆலம் விழுதை பற்றி இருந்தேன் என தெரியவில்லை. மணி 9 ஆகியிருந்தது. 

என்ன தம்பி அப்ப இருந்து விழுதை பற்றி படித்து நிற்கின்றாய் என்றார் பட்டர். பறக்க வில்லையா…எதிரில் இருக்கும் பாரிஜாலம் உண்மை இல்லையா? ஏன் இவர் கண்களுக்கு புலப்படவில்லை. இப்போது குளக்கரையில் இருவரும் கால் நனைத்து பேச தொடங்கினோம். வீரப்பனுக்கு உன்னை மாதிரி பறவையின் குரல் அறிந்திருந்தானாம் என்றேன். நீயும் முயற்சி செய் என்றாள். சிரித்தேன். இப்போது ஒரு சத்தம் கேட்கின்றது அது எந்த பறவை தெரியுமா? தெரியவில்லை. உன் பெரியம்மா உன்னை தேடிகிட்டு வருகின்றார்களாம் கிளம்புங்க என ஆந்தை அலறி சொல்கின்றது என சிரித்தப்படி ஓடினாள். அவளை துரத்தி ஓடினேன். எதிரில் பெரியம்மா.. டேய்.. எங்கடா ஓடுற.. நில்லுடா.. என்றாள். இல்லை என மழுப்பியப்படி நின்றேன். பாரிஜாலம் கைகளை காட்டி நாளை சந்திப்போம் என்றாள்.

பார்ம் வாங்கிட்டே வீட்டுக்கு போய் அம்மா கிட்ட கேட்டு அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரியில் சேர வேண்டியது தானே? இல்லை காமராசர் பல்கலைகழகத்தில் சேர வேண்டியது தானே? பெரியம்மாவுக்கு புரோமன் வந்திருக்கு..நான் தேவகோட்டை போனாலும் போயிடுவேன் என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. இருக்கட்டும். அங்கிருந்து காரைக்குடி பக்கம் தானே நான் இங்கே படிக்கின்றேன் என்றேன். அவள் என் கண்களை உற்று நோக்கி என்னடா உன் கண்களில் ஆலமர விழுது தெரிகின்றது என்றாள். கண்ணாடியில் பார்த்தேன் எனக்கு தெரியவில்லை. நாட்கள் செல்ல ஆரம்பித்தது. பாரிஜாலம் என்னிடம் அவளது லவ்வை சொல்ல ஆரம்பித்தாள். அட நீங்கள் நம்புங்கள் இப்போது இருவரும் அழகப்பா பல்கலைகழகத்தில் கணிதம் ஒரே வகுப்பில் பயில்கின்றோம். யுனிவர் சிட்டியில் ஆல மரம் இருக்கின்றது . அங்கு தான் எங்கள் ப்ராஜெட் படிப்பு சாப்பாடு எல்லாம். அவள் என்னை துரத்த அவளை நான் துரத்த ..பல பறவைகள் எங்கள் காதலை ரசிக்க… நாங்கள் பறவை மொழியில் பேசி கொள்ள ஆரம்பித்தோம்.

சில சமயங்களில் பறவை மொழியில் பெரியம்மாவிடம் பேசியது உண்டு. அவள் ஆச்சரியப்பட்டு என்னை உற்று கவனிப்பார். டேய் உன் கண்களில் இப்போது ஆலம் விழுது வேர் விட தொடங்கி விட்டது. ஆழம் விழுது மூக்கு வழியாக தொங்குகின்றது பார்… என்பார். நான் சிரித்து கொண்டே கண்ணாடியில் பார்ப்போன். எதுவும் தெரியாது. இப்போது பறவைகள் அவள் மொழியில் பேச தொடங்கி விட்டன. ஒருமுறை பாரிஜாலத்திடம் இருந்து  வௌவால் செய்தி கொண்டு வந்திருந்தது. பெரியம்மா அலறியபடி தெருவில் உள்ள பலரை அழைக்க தொடங்கி விட்டாள். ஆம வௌவால்கள் என்னை சுற்றி வட்டமிட்டப்படி பேசி கொண்டிருந்தன. வீடு முழுவதும் வௌவால் என அடிக்க தொடங்கி விட்டார். பாவம் அவைகளுக்காக நான் அடிவாங்கி விட்டேன்.

அன்றே மதுரையில் இருந்து என் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் என்னை வந்து வா மதுரைக்கு படித்தது போதும் ஒரு செமஸ்டர் போதும் அடுத்த வருடம் கூட படிக்கலாம் என வற்புறுத்தி அழைத்து சென்றனர். நான் செல்வதை கண்ட பாரிஜாலம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள் . நான் சிரித்தேன். அவள் கண்களை பார்த்தேன். அவள் என் கண்களை பார்த்து அலறியப்படி சென்றாள். நான் பல் இளித்தேன். என் பற்கள் ஆல மரத்தின் பழத்தை போன்று  சிவப்பாக இருந்ததை கண்டு அஞ்சினாள். கதறினாள். இப்போது என் காதைகளில் குடியிருந்த குயில் அவளை நோக்கி பறந்தது. அவள் எப்போதும் போல் இல்லை. நான் சிரித்தப்படி சென்றேன்.

மறுநாள் போனில் பெரியம்மா..அம்மாவிடம் பேசினாள்.  பாரிஜாலத்திற்கு பேய் பிடித்து விட்டது. அவளாக சிரிக்கின்றாள். கல்லூரிக்கு செல்லாத அவள் கல்லூரி கணிதத்தை நோட்டில் கிறுக்குகிறாளாம். அவளை சென்று பார்த்தேன். உன் மகன் கண்களில் கண்ட ஆலம் மரம் அதன் விழுதுகளை கண்டேன். கொஞ்சம் பயந்து விட்டேன். நான் ஒட்டு கேட்டேன். இப்போது நான் என பாரிஜாலத்திற்காக அழுதேன். என்னை சுற்றி ஆலமரத்தின் இலைகள் குப்பை போல் சேர்ந்திருந்தது. அம்மா டேய் இங்கு எப்படிடா இலைகள் என்றபடி கூட்டி தள்ளினாள். ஒருமுறை நான் அழுவதை கண்டு பறவைகள் குரல் எழுப்பின. நானும் பறவை மொழியில் பேசினேன். என் தந்தை என்னை விநோதமாக பார்த்தார். நான் என் பற்களை பறித்து அவற்றிக்கு திண்ண கொடுத்தேன். அவைகள் என் பற்களை கொத்தி திண்ணுவதை கண்டு அப்படியே முர்ச்சையடைந்து போனார். என் அம்மா அவனை பற்றி தப்பா பேசாதிங்க.. என் அக்கா தான் பைத்தியம் போல் உளறுகின்றாள் என்றால் நீங்களுமா? என்றாள்.

சிலநாட்கள் கழித்து அம்மா என்னை சாப்பிட அழைத்தாள்.  பாரிஜாலத்திற்கும் சேர்ந்து சாப்பாடு வை என்றேன். சமையலறையில் இருந்து என் படுக்கைக்கு வந்த அவள் கதறியப்படி சென்றாள். நான் முழு ஆலமரமாக இருப்பதாகவும் அதன் ஒரு கிளையில் பாரிஜாலம் ஆடிகொண்டிருப்பதாகவும் கூறினாள் . என் தந்தை அப்போதே கூறினேன். இவனை ஒரு சைக்காரிட் இடம் அழைத்து செல்ல வேண்டும் என்றார். போன் ஒலித்தது.  பெரியம்மா குரல் . இப்போது ஸ்பீக்கரில் போட்டு பேசினார்கள். பிள்ளைய பத்திரமா பாத்துக்கங்க.. பாரிஜாலம் செத்துட்டா.. ? எப்படி தெரியலை.. அவள் வீட்டில் நடுவில் ஒரு ஆலம் விழுது வளர்ந்து வந்து இருந்தது. அதில் அவள் தொங்கி உயிரை மாய்த்து கொண்டாளாம். விழுது எப்படி வீட்டில் என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

பாரிஜாலம் நான் பெரிய மனுசன் தானே.. உன்னையே உருகி சாகிறேனே…நீ எப்ப என்னை பாத்தீய்யோ அப்பவே பெரிய மனுசன் தான்… வா போய் நிம்மதியா வாழலாம் என்று அழைத்தாள்.

என்னங்க நம்ம வீட்டுஹாலில் விழுதுகள் தொங்குகின்றன. அய்யோ வீடு முழுவதும் விழுதுகள் பரவி வருகின்றனவே.. அய்யோ நம்ம் மகன்.. என அம்மாவின் குரல் மட்டும் எனக்கு கடைசியாக ஒலித்தது. அதற்கு பின்பு எதுவும் கேட்க வில்லை..


மதுரை சரவணன்.   

Tuesday, September 1, 2015

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு .... வாருங்கள்...விளையாடலாம்!

உங்களால் மட்டும் எப்படி முடிகின்றது? முயன்றால் நீங்களும் விளையாடலாம். வாங்க...!
**********
குழந்தைகளின் உலகம் மாயஜாலங்கள் நிரம்பியது. குழந்தைகள் அதிசயமான உலகில் வாழ்கின்றார்கள். நீங்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக இருந்தால் போதுமானது, அந்த அதிசய உலகின் திறவு கோல் உங்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின்பு நீங்களும் அந்த அதிசய உலகின் அதிசயத்தை கண்டு ரசிக்கலாம். வியக்கலாம். பங்கேற்கலாம்!
என்னை சந்திக்கும் ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள். என் பேச்சை கண்டு வியக்கின்றார்கள்.இது நடைமுறை சாத்தியமா என ஐயம் கொள்கின்றனர். நிச்சயம் சாத்தியம்.
உங்கள் வகுப்பறையை பார்வையிடலாமா? என்றும் கேட்கின்றார்கள். பார்க்கலாம் வாருங்கள் உங்களுக்காக எப்போதும் எம் பள்ளியின் வாசல்கதவு திறந்தே இருக்கும்.
நான் யாரையும் படி என்று கட்டாயப்படுத்துவதில்லை என்ற போது அது சாத்தியமில்லை என்கின்றனர். நான் அவர்களுக்கான வழியை மட்டும் காட்டுகின்றேன். அதனால் எனக்கு வேலை எளிதாகின்றது என்ற போதும் கூட நம்ப மறுக்கின்றனர். ஆனால் என் ஆசிரியர்களே சாட்சி. நான்காம் வகுப்பில் இவன் படிக்கவே மாட்டான் உங்களிடம் எப்படி ? இப்படி படிக்கின்றான் என வியக்கின்றார்கள்.


நான் மட்டுமல்ல. எந்த ஆசிரியர் மாணவரை மையப்படுத்தி கற்று தருகின்றார்களோ அவர்களிடம் மாணவர்கள் எளிதில் பழகிவிடுவார்கள். மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தும் விடுவார்கள். நாம் சரியான பாதையில் அழைத்து சென்றால் , சிந்தித்து புதிய புதிய பதில்களை தருவார்கள். நமக்கு தெரியாத புதிர்களுக்கான விடைகளை அவிழ்பார்கள்.
சமீபத்தில் எல்லா பாடங்களுக்கும் , எல்லா கருத்துக்களுக்கும் விளையாட்டு முறை எப்படி சாத்தியம் ? என ஒரு ஆசிரியர் கேட்டார். கொஞ்சம் மாணவர்களின் இயல்பு நிலையில் சிந்திக்க தெரிந்தால் போதும் என்றேன். சார் புரியவில்லை என்றார்.
சரி எளிதாக புரியும் படி கூறுகின்றேன். மாணவர்களுக்கு குதித்தல், தாவுதல், ஓடுதல் பிடிக்குமா? என்றேன். ஆமாம் என்றார். இந்த எளிய புரிதல் எல்லா கருத்துகளுக்குமான ஒரு விளையாட்டை உருவாக்கும் என்றேன்.
அவர்கள் குதிப்பதை, தாவுவதை, ஒடுவதை வைத்து பாடக்கருத்தை எப்படிகற்று தர முடியும்? விளையாட வேண்டுமானல் செய்யலாம் என்றார். சற்று கோபமாகவே!
நான் எப்போதும் போல் சிரித்தப்படியே, முடியும். குழந்தைகளுடன் குழந்தைகளாக விளையாடிப்பாருங்கள். நிச்சயம் பாடக்கருத்தை குழந்தைகளுக்கு விளையாட்டாய் கற்று தரலாம்! என்றேன்.
அறிவியல் புலன் உறுப்புகள் பாடத்தின் கருத்துக்களை விளையாட்டாய் மாணவர்களை குதிக்க வைத்தே எளிதில் புரிய வைத்துவிடுவேன் ,என்றேன்.


விளையாட்டு விதிகள்:
மாணவர்களை இரு குழுவாக பிரிக்கவும். மாணவர்களை ஏறுவரிசையில் நிற்க செய்யவும். ஆசிரியர் கூறும் கருத்து் சரி என்று நினைத்தால், மாணவர்கள் வலது புறம் தாவ வேண்டும். ஒரு ஸ்டெப் வலது கை சைடில் தாவ வேண்டும். கருத்து தவறானது என்றால் இடது புறம் தாவ வேண்டும். இந்த விதியை தெளிவாக எடுத்துக்கூறி செய்து காட்டவும்.
உ..ம்: விட்டமின் ஏ கண் பார்வைக்கு நல்லது. எல்லோரும் வலது புறம் தாவுவார்கள்.
விட்டமின் டி தலைமுடி வளர உதவும். எல்லோரும் இடது புறம் தாவுவார்கள்.
புலன் உறுப்புகளில் குறைப்பாடு இருப்பின் முறையான மருத்துவரை அணுகாமல், நானே மருந்து எடுத்து கொள்வேன்.
இப்போது மாணவர்கள் இடப்புறமாக தாவுவார்கள்.
புலன் உறுப்புகள் புற உலகின் ஜன்னல் . எல்லோரும் வலப்புறம் குதிப்பார்கள்.
தவறாக குதிப்பவர் விளையாட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் . அவர்கள் மற்ற மாணவர்கள் விளையாடுவதை கவனிப்பார்கள். அடுத்த முறை அவுட் ஆகாமல் கடைசி வரை விளையாட வேண்டும் என்று முனைப்புடன் வீட்டில் பாடத்தை படித்து வருவார்கள். பாடத்தை உன்னிப்பாக கவனிப்பார்கள்.
ஒருமுறை நாம் விளையாட பயிற்சி கொடுத்து பின் மாணவர்கள் மூலமாக விளையாட்டை தொடர்ந்தால் அவர்கள் பாடக்கருத்துக்களை எளிதில் புரிவதுடன், மேலும் அது சார்பான கருத்துக்களை சேகரித்து, விளையாட்டில் புகுத்துவார்கள். அதற்கு இந்த லைப்ரேரி அழைத்து செல்லுதல் , புத்தகம் பொது நூலகத்தில் எடுக்கசெய்தல் உதவும்.

அப்புறம் என்ன அந்த ஆசிரியர் நீங்கள் வித்தியாசமானவர் தான். குழந்தையாகவே சிந்திக்கின்றீர்கள் என்று சென்று விட்டார்.
நான் என்றும் குழந்தையாகவே இருக்கவும் குழந்தைகளுடனே பயணிக்கவும் விரும்புகின்றேன். சொந்த விருப்பு வெறுப்புகள் கடந்து பள்ளிக்குள் நுழையுங்கள் நீங்கள் குழந்தைகளுக்காக வாழ்வீர்கள். மனமும் உடலும் ஆரோக்கியம் கொள்ளலாம்!
மதுரை சரவணன்.

Friday, August 28, 2015

உங்களை பாடாய் படுத்தும் 3 ... கொஞ்சம் கவனமாக இருங்கள்..!


3 என்ற இல்லாத பூதம்!
நான் எப்போதும் பாடம் நடத்தும் முன் ஏதாவது ஒரு தலைவர் குறித்தோ அல்லது வாழ்வியல் சிந்தனை குறித்தோ உரையாற்றுவது உண்டு அல்லது புத்தகத்தில் இருந்து வாசித்து காட்டுவது உண்டு. . அதை மிகவும் ஆர்வமாக கவனிப்பார்கள்.
இன்று வகுப்பறையில் நுழைந்தவுடன் மூன்று ஒரே அளவிலான துண்டு தாள்களை கட் செய்தேன். ஒரு துண்டு சீட்டில் 1,2, 4 என எழுதி என் மேசையின் மீது வைத்துவிட்டேன். சார், புத்தகம் வாசித்து செய்தி சொல்ல வில்லையா என கேட்டார்கள். பரீட்சை வருகின்றது ஆகவே, நாம் பாடம் படிப்போம் என்று தமிழ் எடுத்து மூன்று பொற்காசுகள் பாடத்தை வரிசையாக வாசிக்கவும் என்றேன். மாணவர்கள் அயர்ச்சியுடன் வாசிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரம் வாசித்தால் நாம் ஒரு ஆக்டிவிட்டி செய்யலாம் என்றேன்.
வேகமாக வாசித்தனர். உடனே ராகவன் சார் பாடத்தை நடத்துவோம் சார், பரீட்சைன்னாலே பயமா தான் இருக்கும். அதனால் இனி டெய்லி நாம் படித்து தேர்வுக்கு தயாராவொம் என்றான். உடனே கீர்த்தனா இப்ப என்ன படிக்காமலா இருக்கோம் என்றாள். எல்லா பாடத்துக்கும் கேள்வி கேட்டால் டான் டான்னு சொல்லுறீய்யே..என்றாள். உடனே, இப்ப அப்படி தான் தெரியும் பரீட்சைன்னு வந்துட்டா.. அப்புறம் தெரியும். எழுதும் போது தானே இருக்கு..சும்மா ஆக்டிவிட்டி, விளையாட்டுன்னு இல்லாம சார் சொல்றமாதிரி இனி தேர்வுக்கு தயாராவோம் என்றான்.
என்னடா ராகவன் சொல்ற மாதிரி தேர்வுன்னா பயமா? என்றேன். சரவணக்குமார் உடனே ஆமாம் சார்.. கொஞ்சம் பயமா தான் இருக்கு. சொல்றத தைரியமா சொல்றோம். ஆனா பரீட்சை வரும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கு என்றான்.
சரி .. எனக்கு மூட் மாறி விட்டது. வாசிப்பை நிறுத்துங்க..! நாம் ஆக்டிவிட்டி செய்வோம். ராகவன் சார்..முதல்ல பாடம் அப்புறம் தான் விளையாட்டெல்லாம். சொன்னதை செய்யுங்க..! உடனே எல்லோரும் அவனை கோரசாக போடா.. முதல்ல ஆக்டிவிட்டி அப்புறம் படிக்கலாம் என்றனர்.
சரி ராகவா.. ஒரு சின்ன ஆக்டிவிட்டி தான் . நான் காலையில் அங்க கார்டு எழுதி வச்சிருந்தேன். அதை எடுத்துகிட்டு வா. வரிசைப்படி அடுக்கி கொண்டுவா என்றேன்.
உடனே சரி என்று தலையசைத்தப்படி சார் ஒரே ஒண்ணு தான் அதுக்கப்புறம் பரீட்சைக்கு படிக்கணும் என்றான்.
நல்லது ராகவா எடுத்து வா..மேசை மீது வரிசையாக எண்கள் எழுதிய அட்டை வைத்துள்ளேன் எடுத்து வா என்றேன்.
அவன் மேசை அருகில் சென்றான். கார்டுகளை எடுத்தான். 1, 2, 4 என பார்த்தான். சார் 3 காணாம் என்றான். உடனே அருகில் இருந்த செந்தில் டேய் நல்லா தேடுடா.. வேண்டாம் வேண்டாம்ன்னு தேடுனைன்னா எப்படி கிடைக்கும் என்றபடி மேசை மீது உள்ள புத்தகங்களை எடுத்து விட்டு தேடினான். ராகவன் கீழே 3 விழுந்து கிடக்கின்றதா என மேசை அடியில், பெஞ்சுக்கு அடியில் தேட ஆரம்பித்தான்.
உடன் பிறரும் இணைந்து கொண்டு தேட ஆரம்பித்தார்கள். டேய் மடையா ஒழுங்க கார்டை எடுக்க தெரியாதா.. உன்னால் ஆக்டிவிட்டி செய்வது வீணாக போகின்றது. டைம் எல்லாம் வேஸ்ட் என்று அவனை கடிந்து கொண்டனர்.
இப்போது அருகில் இருந்த பெண்குழந்தைகளும் தள்ளுங்கடா நாங்க தேடுறோம் என்று இணைந்தனர். நான் எதையும் கவனிக்காத மாதிரி சீக்கிரம் கொண்டு வாருங்கள். கார்டு 3 வந்த தான் விளையாட முடியும் என்றேன்.
இப்போது என் மேசை மீது உள்ள எல்லா பொருட்களையும் பெண்கள் எடுத்து கீழே அடுக்கி வைத்து தேடினர். 3 கிடைக்கவில்லை. மீண்டும் அழகாக அடுக்கி வைத்து விட்டனர். கடைசியாக அனைவரும் தேடி பிடித்து இல்லை என்பதை உறுதி செய்த பின் சார்.. 3 காணாம் இன்னோரு கார்டு எழுதுங்க ..ப்ளீஸ் விளையாடுவோம். ஆக்டிவிட்டி செய்வோம் என்றனர்.
நான் ஆக்டிவிட்டி முடிந்தது என்றேன். வாங்க வந்து உட்காருங்கள் என்றேன். ராகவன் எதையும் அறியாமல் விழித்தான். பிற மாணவர்கள் என்னது ஆக்டிவிட்டி எப்ப பண்ணோம் என வியந்து பார்த்தனர்.
இல்லாத ஒன்றை தேடுகின்றீர்கள். நான் ராகவனை எண்களை அடுக்கி வரிசையாக கொண்டுவரத்தான் சொன்னேன். நீங்கள் 3 என்ற எழுதாத கார்டை தேடினீர்கள். என்னது 3 நம்பர் எழுதவில்லையா? என கோரசாக கேட்டனர்.
ராகவன் இதெல்லாம் ஏமாத்து வேலை. என்னை பயமுறுத்திட்டீங்க.. நான் எடுக்கும் போது விழுந்துவிட்டதே என தேடினேன். போங்க சார்.இது போங்கு என்றான்.
நான் இப்போது அவர்களுக்கு வாழ்வியல் பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தேன்.
உண்மை தான். இது போங்கு தான். நாம் ராகவனை போன்று இல்லாத ஒன்றுக்கு பயந்து போய், அது குறித்து அலைந்தப்படி இல்லாததை பெரிதாக நினைத்து கவலைப்பட்டு அதற்காக நம் வாழ்வை செலவழித்து, தொலைத்து கொண்டிருக்கின்றோம். நம் பொன்னான நேரத்தை வீணடித்து கொண்டிருக்கின்றோம். தேர்வு என்ற இல்லாத பூதத்திற்கு பயந்து நடுங்கி நம் சுய சிந்தனையை இழந்து, மனப்பாடம் என்ற தவறான அணுகுமுறையை பயன்படுத்துகின்றோம்.
நாம் வகுப்பரையில் கற்கின்றோம். அதன் தொடர்சியாக வீட்டில் அதனை நினைவுப்படுத்தி பார்க்கின்றோம்.படிக்கின்றோம். படித்து பெற்ற கருத்தை அனுபவமாக செயல்பாடுகள் மூலம் மாற்றுகின்றோம். அதன் நன்மைகளுக்கு ஏற்ப கருத்தை செறிவாக்கி கொள்கின்றோம். பின் அந்த அனுபவத்தை வாழ்வில் பொருத்தி பார்க்கின்றோம். விளையாட்டாய் பாடம் கற்கும் போது தெளிவாக இருக்கின்றோம். ஆனால் தேர்வு என்ற ஒன்று வரும் போது 3 மாதிரி இல்லாத பூதம் என்ற பயம் தொற்றி கொள்கின்றது, உங்களை கொல்கின்றது. சுய சிந்தனை இன்றி செயல்பட ஆரம்பிக்கின்றீர்கள். தன்னம்பிக்கையை இழந்து பயம் உங்களை ஆட்கொள்கின்றது. இது தான் உங்கள் பலவீனம். நாம் பலமான கல்வி இல்லாத , மதிப்பெண் அல்லது தரம் குறியீட்டுக்கள் என்ற அறிவு சோதனைகளுக்காக பயந்து போய் இருக்கின்ற சிந்தனையை மழுங்கடித்து நம்மை இயல்பாய் செயல்படாமல் ஓரிடத்தில் தங்கி இல்லாத ஒன்றிற்காக கவலை கொள்கின்றோம் என்றேன்.
ஆம் என எல்லோரும் தலையசைக்க..ராகவன் ஆமாம் சார் நாங்க தான் டெய்லி நீங்க கேட்கின்ற எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கின்றோம். பின்பு ஏன் பரீட்சைக்கு பயப்பட வேண்டும். என்றான்.
இனி என்ன இருக்கின்றது. விளையாட்டாய் கல்வி மீண்டும் பலம் பெற தொடங்கியது.
மதுரை சரவணன்.

Monday, August 24, 2015

குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்? சிவகங்கை பள்ளிக்கூடம் சம்பவம் புகட்டுவது என்ன?

எங்கிருந்து தொடங்குவது … குழந்தைகளை பாலியல் குற்றங்கள் இருந்து காப்போம்.!
           பள்ளிக்கல்வி துறை வகுப்பில் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது , அப்படி வந்தால், ஆசிரியர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு , பள்ளி முடிந்து, வீட்டுக்க  அனுப்பும் போது எச்சரித்து திருப்பி கொடுக்க வேண்டும் என்கிறது. இச்செய்தியை பகிர்வதற்கான அவசியம் இருக்கிறது. இன்று செய்தி தாள்களின் பக்கங்களை சிறுவர்களின் மீது ஏற்படுத்தும் பாலியல் வன் கொடுமை தினம் தினம் நிரப்பிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக குழந்தைகள் உரிமை சட்டம் சொல்லும் 18 வயதுக்கும் குறைவானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணங்களை சீர்தூக்கி பார்த்தால் , அது வீட்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. நாம் வாங்கி தரும் சட்டைகள் மிகவும் மார்டனாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு ஆடைகளை வாங்கும் போது, நம் குழந்தைகளின் உடல் வாகுவிற்கு பொருந்தாத ஆடைகள் உடலில் பாகங்களை வெளிப்படையாக காட்டுகின்றன. மார்டன் ஆடை என்ற பெயரில் நாம் விலைகொடுப்பது, நம் குழந்தைகள் மீது செலுத்தப்படும்  வன்கொடுமைகளையும் சேர்த்து தான் !

   குழந்தைகளிடம் இருந்து தப்பி செல்ல வேண்டும் அல்லது ஏதோ ஒருவேளையை நிம்மதியாக பார்க்க வேண்டும் என்று நினைத்து டி.வி பார்க்க வைக்கின்றோம். அவர்கள் சினிமா சம்பந்தமான விசயங்களையே பார்க்கின்றனர். அதனால் மனரீதியாக சில செக்ஸ் வக்கிரங்களை அவர்களை அறியாமலே பதிந்து விடுகின்றனர்.  நாம் நம் குழந்தைகளை அண்டை அல்லது தெரிந்த நபர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் இச்சைகளுக்கு உடந்தையாக்கி,  குழந்தைகள் சீரழிந்து போகின்றன. சில சமயம் நமக்கு தெரிந்தவர்களே நம் குழந்தையை சீரழிக்கின்றனர்.
 குழந்தைகளிடம் கொடுக்கப்படும் அலைப்பேசி மிகவும் ஆபத்தனாது. அவர்கள் வரம்புக்கு மீறிய பேச்சுக்கு துணைப்போவதற்கு நாமே உதவுவது போல் ஆகும். அதில் பதிவிறக்கம் செய்யப்படும் படங்கள் , குழந்தைகள் மனதை மிகவும் பாதிக்கின்றன. குறிப்பாக நடிகைகளின் படங்கள் வால் பேப்பர்கள் அவர்களின் மனதை அலைபாய வைக்கின்றன. அதுவே அவனை ப்ளூ பிலிம் வரை கொண்டும் சென்று விடும்.
   
        குழந்தைகள் முன்னால் பேசப்படும் ஆபாச பேச்சுக்கள் , ஆபாச வார்த்தைகள் குழந்தைகளின் மனதை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. முக்கியமாக கணவன் மனைவி இருவரும் போடும் சண்டைகள் குழந்தைகளை மிகவும் பாதித்து, மனசிக்கலை உருவாக்குகின்றன. அது வெளியில் நமக்கு தெரிந்தவர்களால் அல்லது குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லும் நபர்களின் இச்சைக்கு உடன்பட வைத்து , பாலியல் குற்றங்களில் நம் குழந்தைகளை ஈடுபடுத்த நேரிடலாம்.

       இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர்கள் வேலை காரணமாக , குழந்தைகளை தனிமையில் விட்டு செல்ல நேரிடுகின்றது. எவ்வளவு தான் வீட்டை பூட்டி, மிகவும் பாதுகாப்பாக இருந்தாலும் குழந்தைகளின் மனதை பூட்டி வைக்க முடியாது. அதனாலே குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். தனிமை குழந்தைகளிடம் மனசிதைவை ஏற்படுத்துகின்றன.

    குழந்தைகள் அன்புக்காக ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே,குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்களின் மனதை புரிந்து கொள்ளுங்கள். நம் குழந்தைகளை எந்த புறக்காரணிகளும் பாதிக்காது.
தமிழ்நாட்டில் பெருகி வரும் மதுக்கடைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக சர்வேக்கள் சொல்கின்றன. ஆகவே, பெற்றொர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் கருதி குடிக்காமல் இருந்தல் நலம். மது அருந்துபவர்களை நம்பி நம் குழந்தைகளை ஓப்படைத்து செல்லாதீர்கள். குறிப்பாக பெண் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டாம். போதையில் என்ன செய்கின்றோம் என்பதை மறந்து நடக்க கூடும்.
      
       சினிமா பார்ப்பதை குழந்தைகள் ஒதுக்கி வைப்பது நல்லது. ஹீரோயிசம் என்ற அடிப்படையில் குழந்தைகள் தன்னை ஒரு ஹீரோவாக உருவகம் செய்து, சண்டையில் ஈடுபடுகின்றனர் அதன் விளைவாக காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். காமத்தை தூண்டும் விதமான பாடல்களால் நம் குழந்தைகளை தவறான வழியில் நடக்க செய்யலாம்.

        குழந்தைகள் கோபப் படும் படியாக பேசாதீர்கள். அவர்கள் அடிக்கடி கொள்ளும் கோபம் மனசிதைவை ஏற்படுத்த வாய்ப்பாக அமையலாம்.
         
        இப்படி ஏறக்குறைய குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியில் வன் கொடுமைகளுக்கு குடும்ப சூழலே காரணமாக அமைவதால் , நாம் நம் குழந்தைகளை காலத்தின் அவசியம் கருதி அன்போடு, நல்ல பழக்க வழக்கத்தோடு, கோபப்படாமல், இனிமையாக பேசி, வீட்டில் புத்தகங்கள் நிறைந்து நம் குழந்தைகளோடு டிவி தவிர்த்து, பிறர் கண்களுக்கு உறுத்தாத ஆடைகள் அணிந்து, செல்போன் தவிர்த்து (கொடுக்காமல்)  வாழ்ந்தாலே போதுமனாதாகும்,அது நம் குழந்தைகளை பாலியியல் ரீதியான துன்புறுத்தல் அச்சத்திலிருந்து காத்துவிடும்.     


            தொடர்ந்து பத்திரிக்கையிலிருந்து வரும் செய்திகளை நாம் காணும் போது நம் குழந்தைகளின் மீது தானாகவே கவனம் குவிகின்றது. நாம் யாரையெல்லாம் உயர்வாக நினைக்கின்றோமோ அவர்கள் எல்லாம் பெண்கள் விசயத்தில் மோசமாக இருக்கின்றார்கள். காலத்தின் அவசியம் , நாம் நம் குழந்தைகளுக்கு தன் உடல் மீதான நம்பிக்கையை, அவசியத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அரசும் பாடநூல்களில் பாலியல் கல்வியை மெதுவாக புகுத்தியுள்ளது வரவேற்கதக்கது. எது குட் டச் ? எது பேட் டச் ? என்பதை நாம் நம் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். மூன்றாம் வகுப்பு பாடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது பாலியல் சார்ந்த கல்வி.   

          தகப்பனானாலும் தள்ளி நின்று பேச வேண்டும். தாத்தா வானாலும் மடியில் அமர்ந்து பேசாக்கூடாது போன்ற வரிகள் முக்கியமானவை. ஆசிரியர்கள் நம் குழந்தைகளின் மீது எப்போதும் அக்கறையுடன் தான் இருக்கின்றனர். இருந்த போதிலும் பெற்றோர்களாகிய நாமும் இந்த மாதிரி விசயங்களில் கவனம் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை பாலியல் சார்ந்த தொல்லைகளில் இருந்து காப்பாற்ற  , நாம் நம் குழந்தைகளின் உடைகளில் இருந்து கவனம் செலுத்த வேண்டும். வாய்க்கு நுழையாத பேன்சி டிரஸ்களையும்,  வெற்றிப் படங்களின் கதாநாயகிகளின் பெயரிலும் வெளிவரும் கவர்ச்சியான ஆடைகளை நாம் வாங்க கூடாது. நம் குழந்தைகளின் உடல் அமைப்புக்கு ஏற்ற பிறர் கண்களுக்கு உருத்தாத ஆடைகளை நாம் வாங்கி தர வேண்டும். பள்ளிகளில் அதற்காக தான் சீருடை அமைத்து உள்ளனர்.
சினிமா பார்க்காமல் இருப்பது உத்தமம். பாலியல் சார்ந்த விசயங்கள். பாலியல் சார்ந்த வசனங்கள் குழந்தைகள் அவர்கள் என்னவென்று அறியாமலே பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். சினிமாக்கள் வாழ்க்கையின் நிஜம் என மாணவ பருவத்தில் கருதி விடுகின்றனர். அது நம் குழந்தைகளின் மனதில் தேவையில்லா மன குழப்பத்தை விளைவிக்கலாம்.

        டிவியில் நாடகம் பார்ப்பவர்கள், தங்கள் குழந்தைகள் வீட்டில் இல்லாத தருணங்களில் பாருங்கள். தொலைக்காட்சியில் எத்தனையோ நல்ல விசயங்கள் உள்ளன, அப்படி இருக்க தேவையில்லாத நிகழ்வுகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். அதனால் மனரீதியாக பாலியல் வேட்கையை தூண்டக்கூடும். அது தவறான பாதைக்கு அழைத்து செல்லலாம். நம் குழந்தைகளை நாம் தானே பாதுக்காக்க வேண்டும்.
இண்டர் நெட் உபயோகம் அவசியமானது. இன்று நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ப்ராஜெக்ட் என்ற பெயரில் நெட் செண்டர்களை நாடுகின்றனர். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  முடிந்தால் நீங்களும் ப்ரவுசிங் செண்டர்களுக்கு சென்று , உங்கள் குழந்தைகளுக்கு உதவுங்கள். சின்ன தவறு கூட உங்கள் குழந்தையை திசை திருப்பி விடும் . இதில் ஆண் , பெண் குழந்தைகள் என்ற பாகுப்பாடு இல்லை.

     அதை விட முக்கியமானது, உங்கள் குழந்தைகளிடம் எப்போதும் உரையாற்றுங்கள். காலை முதல் மாலை வரை அவன் என்னென்ன செய்தான், பள்ளியில் என்ன நடைப்பெற்றது, அவனின் நண்பர்கள் யார், அவர்கள் எப்படி பேசுகின்றனர், ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகின்றனர். வீட்டுக்கு அருகில் யாருடன் பழகுகிறான், பள்ளி தவிர வேறு நண்பர்கள் இருக்கிறார்களா என்பது போன்றவற்றை மெதுவாக , அவனுடன் பேசி, தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளின் மன தேவைகளை அறிந்து கொள்ளுங்கள். நாம் அவர்களுக்காக தானே வாழ்கின்றோம்.

       உங்களால் முடிந்தவற்றை வாங்கி தாருங்கள். இல்லை என்பதை இல்லை என்று கூறாமல் , அவனை அடிக்காமல், இல்லை என்பதை உணர்த்துங்கள். குழந்தைகள் அதன் பின் நம்மால் முடிந்தவற்றை மட்டுமே கேட்டு பெற்று  கொள்வார்கள்.

     மொத்தத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நண்பராக இருந்தால் போதுமானது. நம் குழந்தைகளுக்கு பாலியல் சம்பந்தமான எந்த குறையும் நிகழாது. குழந்தைகளை நேசியுங்கள். குழந்தைகளை நண்பர்கள் போல நடத்துங்கள். குழந்தைகளை நம் மீது நம்பிக்கையை உண்டாக்குங்கள். உங்கள் நம்பிக்கை வீணாகது. நீங்கள் நினைத்தப்படி அவன் சிறந்து விளங்குவான்.


மதுரை சரவணன்.

Tuesday, August 18, 2015

பசுமை நடை- தெப்பக்குளம் நினைவு அலைகள்


(50வது பசுமை நடை நிகழ்வில் கலந்து கொண்ட பின்  எழுதியது)


“மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்க துளிக்க என்
குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான்”.  
-பெரியாழ்வார்
தெருவிலே விளையாடும் குழந்தை சிறுநீர் கழித்து விட்டு , தாயின் நினைப்புடன் உடனே வீட்டுக்குள் ஓடி வந்து, அமர்ந்து வேலை செய்கிற தாயினைப் பின்னாகச் சேர்த்துக் கட்டிப்பிடிக்கிறது. மிச்சமிருக்கின்ற சிறுநீர்த் துளி தாயின் முதுகிலே சொட்டு சொட்டாகப் படிகிறது. தாய் மகிழ்ச்சியால் சிலிர்த்து போகிறாள். இது பெரிய புராணம் கூறும் கதை.


பசுமை நடையின் பயணம் 26.10.2014 அன்று தெப்பக் குளம் என்று முடிவான போது என் கண்களில் விரிந்த காட்சி வேறு. அது பெரிய புராண நிகழ்வில் இருந்து தலைகீழானது. வீட்டில் அம்மாவிடம் கிரிக்கெட் விளையாட போறோம் என்று கூறி விட்டு, அதிகாலை 6 மணிக்கே (இன்றும் எனக்கு அதிகாலை 6.30 அல்லது 7 ஆகவே இருக்கின்றது!)   சைக்கிள் மிதித்து நண்பர்களுடன் சி.எம்.ஆர் ரோட்டில் இருந்து தெப்பக்குளம் சென்றதும், முதலில் வருவது சிறுநீர் தான்! உள்ளே இறங்கியவுடன் வேக வேகமாக சிறு நீர் கழித்து விட்டு, சொட்ட சொட்ட தெப்பக்குளம் நனைய , குச்சி(ஸ்டெம்ப்) ஊன்றி விளையாட தயாராக இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது இந்த தெப்ப குளம் மகிழ்ச்சி பொங்க எங்களை அரவணைத்து விளையாட அனுமதிக்கும்! அங்கு விளையாடிய பின் மைய மண்டபத்தில் ஓய்வெடுப்பதில் தனி சுகமே இருக்கின்றது. அதை விட மைய மண்டம் அருகில் ஸ்டெம் ஊன்றி விளையாடும் போது , மையமண்டபத்தில் மேலிருந்து பேட்டிங் செய்யும் நமது அணியினரை உற்சாகப்படுத்தி கண்டு களிப்பது ஏதோ மெல்போர்ன் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடும் உணர்வை தரும்!

இன்றும் பசுமை நினைவாக நான் வீழ்த்திய விக்கெட்டுகள் கண்முன் சரிகின்றன. நான் பிடித்த கேட்சுகளும், அதனை தொடர்ந்து மேலே தூக்கி எறியும் பந்து இன்றும் அந்தரத்தில் மிதந்து மையமண்டபத்தில் இருந்தவாறு நண்பர்களின் பாராட்டுகளில் செவியை கிழிக்கின்றன. நான் அடித்த பவுண்டரிகள், சிக்சர்களில் ஓடிய பந்துகள் மைய மண்டபத்தின் சுவர்களை   முட்டி பரவச படுத்துகின்றன. எத்தனை பாராட்டுகள். எத்தனை பரபரப்புகள்! தெப்பகுளம் என்றதும் எனது பால்யம் அதன் பரப்பை விட பெரிதாக விரிய தொடங்கி விடுகின்றது.


ஆட்சா தான் எங்கள் அணியின் கேப்டன். ரெங்கா (அருணாவின் சகோதரர்)  எங்கள் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னர். மணிசேகரன் எங்கள் அணியின் ரவிசாஸ்திரி. ஆறு பந்துகளையும் சிக்சர் விரட்டியவன். மைய மண்டபத்தினுள் பறந்து சிக்சர் அடித்து பந்தை விரட்டியவன். என் கிரிக்கெட் வாழ்வில் வேறு எவரும் அப்படி சிக்ஸ் அடித்ததில்லை. ஜெயக்குமார் ஸ்பின்னர் . அந்தோணி மெடிக்கல் நடத்தும் நண்பர், ஆல் ரவுண்டர். மால்கம் மார்சல், கபில் தேவ், பிரபாகர் போன்ற பெயர்களுடன் நான் பந்து வீசிக்கொண்டிருந்தது இன்னும் தெப்பகுளத்தின் உள் படிந்திருக்கு புல்லினைப் போன்று பசுமையாக காட்சியளிக்கிறது.

இப்படி எண்ணற்ற நண்பர்கள் தெப்பகுளம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். தண்ணீர் இல்ல தெப்பக்குளமே மதுரையின் சிறுவர்கள் கல்லூரி இளைஞர்கள் விரும்புவது!. வெகுவாக சில காதலர்களை நாங்கள் மைய மண்டபத்தில் காண்பது உண்டு. ஆனால் பாவம் அவர்கள். சில மணி நேரங்களிலேயே போலீஸ்சாரால் விரட்டப்படுவார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காக! எங்கிருந்து தான் மோப்பம் பிடிப்பார்களோ! எதிரிலே போலீஸ் ஸ்டேசன் பி4 இன்றும் இருக்கின்றது.  இன்று காதலர்களை விரட்டும் அந்த வேலையை வேறு நபர்கள் செய்கின்றார்கள்!  


தெப்பக்குளம் என்றதும் எங்களுக்கு நினைவிற்கு வருவது கிரிக்கெட் கிரவுண்ட் தான்! மதுரையின் மெல்போர்ன் கிரவுண்டு. இப்போதும் சிறுவர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை கிரிக்கெட்விளையாடுவதை பார்க்கலாம். எங்கள் காலத்தில் டோர்னமெண்ட் நடந்தது. பைனல் வரை சென்று தோற்ற மேட்சுகள் அதிகம்! வாங்கிய கப்புகள் சில. என் ஆட்டத்தை காண எனது தந்தை வந்து பார்ப்பதும் உண்டு!
நீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் நீச்சல் அடித்து விளையாடிய அனுபவம் உண்டு. கரையிலிருந்து நீந்தி மைய மண்டபத்திற்கு செல்வதும் உண்டு. சில சமயம் போலீசார் விசில் அடித்து நீந்த தடை போடுவதும் உண்டு.  “டேய் அது சாக்கடை தண்ணீர் அங்கே போய் நீந்தி விளையாடிட்டா வர்ற…” என அம்மாவிடம் திட்டும், சில சமயம் அடி உதை வாங்கியதும் உண்டு. ஒரு சமயம் அதில் விழுந்து யாரோ செத்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் பயம் வந்தது. அதன் பின் நீந்த சென்றது கிடையாது. ஆம் சடலம் மிதப்பதை பார்த்தால் யாருக்கு தான் நீந்த முடியும்! சில நேரங்களில் சடலங்கள் சகதியில் மாட்டி நான்கைந்து நாட்கள் தேடியும் கிடைக்காமல் போனதுண்டு! ஒரு சிறுவனின் இறப்பு நேரில் பார்த்த போது தான் தெரிந்தது, நான் அடிப்பது நீச்சல் அல்ல. அது காலை கையை உதறி, தண்ணீரை உளப்பி , கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்க கால் சோர்வாகும் போது மேட்டில் நின்று சுவாசம் கொள்வது என்பது! நல்ல வேளை அப்போதெல்லாம் நான் தண்ணீரில் முழ்க வில்லை. மேடான போலீஸ் ஸ்டேசன் பக்கம்(கிழக்கு பக்கம்) நீந்தியதால் இருக்கலாம்! முறையான நீச்சல் ஜெயின் வித்யாசாலாவில் கற்று கொண்ட போது அதை உணர்ந்தேன்!


தெப்ப திருவிழாவிற்கு தெப்பத்தில் தண்ணீர் நிரப்புவார்கள். அப்போது கரும்பு, சௌமிட்டாய் விற்கும் அதனை வாங்கி சாப்பிட்டு கொண்டு, கூட்டத்தில் தூரத்தில் தேர் இழுப்பதை பார்த்து பிரமித்து, இடிப்பட்டு வீட்டிற்கு வந்து சேர்வது உண்டு. ஒருமுறை கூட்டத்தில் அம்மாவை தவற விட்டு, வீட்டிற்கு நடந்து வந்து, சௌமிட்டாயையும், திண்பண்டங்களையும் தவற விட்டதுடன், திட்டும் பெற்று கொண்டேன்.

இவை தான் தெப்பக்குளம் என்றதும் நினைவில் வருவது. அது தவிர வரலாறாக பார்த்தால் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவில் கட்ட மண் அள்ளிய இடம் . ஆழம் அதிகமாகவே, தெப்பக்குளமாக மாறியது. வைகையில் இருந்து நீர் கொண்டு வரப்படுகின்றது என்பது மட்டுமே தெரியும். இதன் நீளம் அகலம் பற்றி எல்லாம் கவலை எப்போதும் கொண்டதில்லை. தெப்ப திருவிழா தை மாதம் நடக்கும் என்ற கூடுதல் தகவலுடன் வேறு வரலாறு தெரியாது.


என்ன புதிய தகவல் கிடைக்கும் என்ற எண்ணத்துடனும், அதேவேளையில் சாந்தலிங்கம் அய்யாவின் நக்கல் மிகுந்த சமூகச்சாடல் மிக்க பேச்சினை கேட்கவே பயணப்பட்டேன். தொடர்ந்து முத்துகுமாரின் சீடர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருகை புரிந்து, அனைவரையும் ஒருங்கிணைத்து, எல்லோருக்கும் வாகனம் ஏற்பாடு செய்து , கோழி தன் குஞ்சை பாதுகாப்பது போல் பாதுகாத்து குறிபிட்ட இடத்தில் ஒன்று கூடச்செய்து, சாந்தலிங்கம் அய்யாவின் உரையை கேட்க மைக் தாயர் செய்து, ஒரு மாணவர்களை போல் ஓடியாடி வேலை பார்த்து பிரமிக்க செய்வது எப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது! அன்று பிளாக்கர் மீட்டிங் மதன கோபால மந்திர் அரங்கில் நடக்க இருப்பதால் நிறைய நண்பர்களை காணலாம் என்று விரைந்தேன்.


பசுமை நடையில் கிடைத்த கூடுதல் தகவல்கள் இங்கே உங்களுக்காக..வரலாற்றை புரட்டும் நேரம் கொஞ்சம் சீரியசாக வாசிக்கவும்.
-    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கே 3.9கிமீ தொலைவில் தெப்பகுளம் உள்ளது.
-    வண்டியூர் தெப்பக்குளம், மாரியம்மன் தெப்பக்குளம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
-    கி.பி 1645ல் மன்னர் திருமலை நாயக்கரால் திருமலைநாயக்கர் அரண்மனை கட்ட மண் தோண்டிய இடம் தெப்பகுளமாயிற்று. வைகையில் இருந்து நீர் வர சுரங்க கால்வாய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-    தென்வடலாக 1000அடியும், கீழ்மேலாக 950 அடியும் ஏறத்தாழ மீனாட்சி அம்மன் கோவில் இடத்திற்கு சமமானது இத்தெப்பக்குளம்.
-    தெப்பக்குளத்தின் நடுவே மையமண்டபம் உள்ளது. அதன் நான்கு மூலையிலும் நான்கு சிறிய மண்டபங்கள் உள்ளன. நீர் நிரம்பியபோது சிறிய தீவாக காட்சி அளிக்கும்.
-    தைமாதம் பூசநட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இது திருமலைநாயக்கரின் பிறந்தநாள்விழா எனவும் கூறப்படுகின்றது.
-    இதை தோண்டும் போது முக்குறுணிப்பிள்ளையார் கிடைத்ததாக கூறுவார்கள். தெப்பகுளத்தின் மேற்கு பகம்  முக்திஸ்வரர் கோயில் உள்ளது. வடக்கு பக்கம் தியாகராசர் கலைக்கல்லூரியும் மாரியம்மன் கோவிலும் உள்ளது.

அங்கு முத்துகிருஷ்ணன் இன்ப அதிர்ச்சி அளித்தார். காற்றின் சிற்பங்கள் என்ற நூலினை வெளியிட்டார். அதில் பசுமைநடையில் கலந்து கொண்டு பிளாக்கிலும் முகநூலிலும் எழுதிய கட்டுரைகளை திருத்தி புத்தகமாக  கொண்டு வந்திருந்தார். எழுதிய அத்தனை நபர்களையும் நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டது பசுமையான நினைவு. அய்யா தாமோதர் சந்துரு வந்திருந்தது கவிஞர் மோகனசுந்தரம் அவர்களுடன் புத்தகத்தை பெற்று கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.


இதுவரை கண்டிராத தெப்பக்குளத்தினை அங்கு கண்டேன். இதுவரை பார்த்திராத அத்தனை புதுமுகங்களையும் கண்டேன். அவர்களின் (பசுமைநடை நண்பர்கள்) முகங்களில் பசுமையை காண முடிந்தது. ஏதோ ஒரு தாகம் தென்பட்டது. அதனை தங்கள் குழந்தைகளை அழைத்து வந்ததன் மூலம் உறுதி செய்தேன். அதேப்போல் குடும்பம் குடும்பமாக வந்து நம் மதுரை நம் வரலாறு அறிந்து கொள்ள வேண்டும். அழிய விடக்கூடாது என்ற முனைப்புடனும் பலர் வந்திருப்பதை காண முடிந்தது. என்னை போன்று பலரும் பலர் நட்புக்காக பலரின் அறிமுகத்திற்காகவும் வந்திருந்ததை காண முடிந்தது. பசுமைநடையுடன் அர்ஷியா, செல்வம் ராமசாமி, தீபா நாகராணி, துர்கா போன்ற நண்பர்கள் தொடர்ந்து பயணிப்பது பிரமிக்க வைக்கின்றது. அன்று கடங்கநேரியான் குடும்பத்துடன் வந்திருந்தார். அவரின் பிரனவ் குட்டி தொடர்ந்து தந்தையிடம் கேள்வி எழுப்பியப்படி இருந்தான். அழகு! இப்படி பல சந்தோசமான தருணங்கள்..பசுமை நடை வரலாறுகளை சொல்வதுடன் ஒரு குடும்பமாக நல்ல சமூகமாக வளர்ந்து இருக்கின்றது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகின்றேன்.

50 நடையை தொட்ட இந்த விழாவில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் அய்யா அவர்கள் பேசிய பேச்சு முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது. கல்வி கூடங்கள் ஆசிரியர்கள் கற்று தராத ஒன்றை போதிக்கும் கல்விச்சாலையாக இந்த பசுமை நடை உள்ளது என்ற பேராசிரியர் பிரபாகரன் பேச்சு இதன் பணிக்கு சான்றாகும்.

தொடர்வோம்… அ.முத்துகிருஷ்ணனின் இப்பணி போற்றதக்கது. அவருக்கு பக்கபலமாக விளங்கும் சாந்தலிங்கம் என்ற இளைஞரின் பணி சிறப்பானது, குறிப்பிடதக்கது. அதற்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை நபர்களும் பாராட்டுக்குரியவர்கள். அனைவரும் இணைவோம். நம் வரலாறு பற்றி அறிவோம். நம் சிறப்பை பரப்புவோம். நம் வரலாற்று சின்னங்களை அடையாளங்களை அழிய விடாமல் பாதுகாப்போம்! மலைகள் போற்றுவோம்! பாறைகளை குவாரியாக்கி, சமணம் வழி வரலாறு அழியாமல் இருக்க, நம் வரலாற்றை அம்மணமாக்காமல் காப்போம்!.  

.மதுரை சரவணன்.  



Thursday, August 6, 2015

விளையாட்டு முறையில் கற்பிப்பது குறித்த தி இந்து ஆங்கில இதழ் செய்தி

அன்பு நண்பர்களே இன்று 07-06-2015 ஆங்கில இந்து மெட்ரோப்ளஸ் பக்கம் 2 இல் என்னுடைய விளையாட்டு முறை கற்பித்தல் குறித்து கட்டுரை வெளிவந்துள்ளது. இம்மிகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கின்றேன். அதன் லிங்க் இதோ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/when-learning-is-fun/article7509357.ece

Friday, July 24, 2015

வகுப்பறை குழந்தைகள் விரும்பும் கருவறை! *





நான் வளர்கின்றேனே மம்மி! இந்த விளம்பரம் பார்க்கும் போது கேலியாக இருந்தது. ஆனால் எவ்வளவு உண்மை. அந்த விளம்பரத்தில் மகிழ்ச்சியுடன் துள்ளி குதிக்கும் குழந்தை இப்போதும் நினைவுக்கு வருகின்றான். மம்மி..அது சாதாரண வார்த்தை அல்ல. அது உயிர், மகிழ்ச்சி. அன்பு, பாசம் , நேசம், பாதுகாப்பு, வளர்ச்சி, அரவணைப்பு என அத்தனையும் உள்ளடக்கியது.





கருவாக இருக்கும் போது எல்லாவற்றையும் தனது எதிர்காலத்திற்காக கொடுத்து, அதற்காகவே தன்னை அர்பணித்து , மகிழ்ச்சியாக இருந்து, தன் கவலை மறந்து, கருவின் பாதுகாப்பையே முக்கியமாக உணர்ந்து தனது உதிரம் தந்து, கருவின் அறிவு வளர்ச்சிக்கு புத்தகம் பல படித்து, உடல் ,உள்ளம், அறிவு என எல்லாவற்றிலும் முழுவளர்ச்சியை கொடுக்கும் தாய் மட்டுமே, என்றும் குழந்தைகளின் விருப்பமாக உள்ளது.

நான் எனது வகுப்பறையை குழந்தைகள் விரும்புமாறு மகிழ்ச்சியோடு பாதுகாப்பு, அன்பு, நேசத்தோடு அவர்களின் முழுவளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் தாயின் கருவறையாக எப்போதும் குழந்தைகளை உணரச் செய்கின்றேன் என்பதில் பெருமை பட்டு கொள்கின்றேன். தாயின் உணர்வை ஒவ்வொரு நாளும் பெருகின்றேன்!




சமூக அறிவியல் மூன்றாம் பாடம் நாம் வாழும் பூமி பாடத்திற்கு எப்படி விளையாட்டை உருவாக்குவீர்கள். அவை எல்லாம் பூழியின் நில அமைப்பை பற்றி அல்லவா உள்ளது என அருகிலுள்ள மாவட்ட ஆசிரியர் ஆச்சரியத்துடன் கேட்டார்! கவலை வேண்டாம் பிரதர் நாங்கள் ஏற்கனவே அந்த பாடத்திற்கு விளையாட்டை உருவாக்கி விட்டோம். விளையாண்டு கொண்டிருக்கின்றோம். இன்று முகநூலில் காணவும் என்று விளக்கமளித்தேன். சபாஷ். விரைவில் எல்லா வகுப்புகளுக்கும் எல்லா பாடங்களுக்கும் விளையாட்டை உருவாக்கினால் நலம் என்றார். அதற்கான பணியை தொடங்கிவிட்டேன் என்றேன். மகிழ்ச்சியுடன் வாழ்த்தி போனை கட் செய்தார்.

அதற்கு அடுத்து காலையில் முல்லைநிலவன் செம்மலரில் நான் எழுதியுள்ள “வாத்தியார் ஹீரோவாகிறார்” கதையை படித்துவிட்டு, பாராட்டினார். மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற உற்சாகங்கள்.
இப்போது விளையாட்டு குறித்து காண்போம்.





விதிமுறைகள்:
1.கண்டங்கள் ஏழு . அவற்றின் பெயரை கூறும் போது கண்ணை கைகள் கொண்டு மூட வேண்டும்.
2.மலைகள் 5. இமயமலை, ஆண்டிஸ் , ஆல்ப்ஸ், ராக்கி, கிளிமாஞ்சாரோ என சொல்லும் போது கைகளை நன்றாக உயரமாக உயர்த்தி, கைகள் சேர்த்து மலை போன்று காட்ட வேண்டும்.
3.பீட பூமிகள் திபெத், தக்காணம், கொலராடோ என கூறும் போது கைகளை நெஞ்சுக்கு அருகில் கூம்பு போல் சேர்த்து காட்ட வேண்டும். அதாவது மலையை உயர்த்தி காட்டியது போல் அப்படியே நெஞ்சுக்கு அருகில் காட்ட வேண்டும். மலையை விட உயரம் குறைந்த பூமி மட்டத்திற்கு மேல் உள்ளவை பீட பூமி என்பதற்காக!
4. சமவெளி : சிந்து கங்கை, லியானஸ், லம்பார்டி எனும் போது மாணவர்கள் சமமாக இரு கைகளையும் காற்றில் அலைய விட்டு காட்ட வேண்டும்.
5. பள்ளத்தாக்குகள்: நைல், கிராண்ட்கேன்யான், சிந்து எனும் போது மாணவர்கள் கீழே அமர வேண்டும்.
6. கடல்கள் : பசிபிக், அட்லாண்டிக், இந்திய, தெற்கு, ஆர்டிக் எனும் போது மாணவர்கள் ஒரு கையால் காற்றில் அலையை ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்களை வட்டமாக நிற்க செய்யவும். ஆசியா என்றவுடன் தானாக கண்களை கைகள் கொண்டு முடுவான். கிளிமாஞ்சாரோ எனும் போது தானாக கைகளை உயர்த்தி மலையை நினைவுபடுத்தி நிற்பான்.தக்காணம் என்றவுடன் கைகளை நெஞ்சுக்கு நேராக குவிப்பான், ஆர்டிக் என்றவுடன் ஒரு கையால் அலை எழுப்புவான், சிந்து கங்கை என்றவுடன் இரு கைகளால் சமம் என காட்டுவான்.
தொடந்து விளையாட மாணவர்களுக்கு கண்டங்கள், மலைகள் பீடபூமிகள், சமவெளிகள், பள்ளதாக்குகள், கடல்கள் குறித்து பரிச்சயமாகி விடுவான்.

விளையாடுங்கள். வகுப்பறையை மகிழ்ச்சியாகவும் பாட கருத்துகள் எளிமையாக குழந்தைகள் மனதை சென்றடையவும் துணைபுரியுங்கள். எல்லாம் நம் கையில் தான். எனது வகுப்பறை ஒரு தாயின் கருவறை என்ற உணர்வை கொண்டதாக குழந்தைகளுக்கு எப்போதும் இருக்கும். அதனால் எப்போதும் இல்லை ஆப்சண்டிஸ்!

குழந்தைகளுடன் நானும் வளர்க்கின்றேன். மகிழ்கின்றேன். நாளை எப்படி ஆக்கபூர்வமாக வகுப்பறையை கொண்டு செல்வது என்பதற்கு அதுவே வினை ஊக்கியாக இருக்கின்றது. தினமும் ஒரு தாயின் உணர்வோடு உறங்க செல்கின்றேன் !
மதுரை சரவணன்.

Tuesday, July 21, 2015

சவால்கள் நிறைந்த வகுப்பறை சாதனைக்கு வழிவகுக்கும்!


“சார், எல்லா பாடங்களுக்கும் விளையாட்டு என்று கூறிய நீங்கள் வண்ணத்து பூச்சிக்கு ஒரு விளையாட்டை கொடுங்களேன் பார்ப்போம்”என்று எப்போதும் போல் என்னிடம் சவால் விட்டான் ராகவன்.
“நிச்சயமாக , சார் ஆள முடியாது “ என்றாள் கீர்த்தனா, விளையாடும் ஆர்வத்தில்.
வார்த்தைகளை பொறுக்க முடியாத சோலையம்மாள் , “ ஏய் சார் ஆள முடியாதது ஒன்றுமில்லை.. இப்ப பாரு நமக்கு ஒரு விளையாட்டு கொடுப்பார் “
விளையாட்டு ரெடி. நாளை காலை விளையாடுவோம். நீங்கள் வண்ணத்து பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை படியுங்கள் என்றேன். அனைவரும் ஆர்வமாக படித்தனர்.




மறுநாள் அபராஜிதா பவுண்டேசனில் இருந்து நண்பர் வந்திருந்தார். அவர் எப்.பி யில் பார்க்கின்றேன். விளையாட்டு விளையாட செய்யுங்கள் என்றார். ஒரு பழைய விளையாட்டை சொல்லி விட்டு, இன்று புதிய விளையாட்டு பாருங்கள் என்றேன்.
விடியோவில் பதிந்தார். இதோ அந்த விளையாட்டு முயன்று பாருங்கள். வகுப்பறை ஆனந்தமே!





விளையாட்டு விதி:
வண்ணத்துப்பூச்சியின் முதல் பருவம் சார்ந்த விசயத்தை கூறும் போது மாணவர்கள் தனித்தனியாக நிற்க வேண்டும்.உ.ம். இலையின் அடிப்பகுதியில் முட்டை இடுதல்.
வண்ணத்துப்பூச்சியின் இரண்டாம் பருவம் சார்ந்த விசயம் கூறும் போது இரண்டு இரண்டு மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.
உ.ம்: ஐந்து நாட்களுக்கு பின் புழுவாக வெளிவரும்.
பச்சை அல்லது பழுப்பு நிறம். அதிகமாக உணவு உட்கொள்ளும் நிலை. உடல் பல நிறங்களில் வரிவரியாக காணப்படும்.
மூன்றாவது பருவம் குறித்து கூறும் போது மூன்று மூன்று மாணவர்களாக இணைந்து நிற்க வேண்டும்.
உ.ம். உடல் உறுப்புகளில் இறக்கைகள் முளைக்கும் பருவம்.
தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும் பருவம்.
கூட்டுப்புழு பருவம். உடல் உறுப்புகள் முளைக்கும் பருவம்.
நான்காவது பருவம் குறித்து கூறும் போது நான்கு நான்கு நபர்களாக இணைந்து நிற்க வேண்டும்.
உம். முழு வண்ணத்துப்பூச்சி . கூட்டை உடைத்து வெளிவரும் பருவம்.
மாணவர்கள் தவறான இணையில் நின்றால் விளையாட்டில் இருந்து விலக்க படுவர்.
வண்ணத்துப்பூச்சியின் நான்கு பருவங்கள் குறித்த அறிவு, விளையாட்டு விதிகளை மதித்தல், இணைந்து செயல்படுதல், குழுவாக செயல்படுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடலாம்.


இந்த செயல்பாடு 5ம் வகுப்பு அறிவியல் பாடம் 3 வண்ணத்துப்பூச்சியும் தேனீக்களும் பாடத்திற்குரிய செயல்பாடாகும்.
வகுப்பறையை கலகலப்பாக கொண்டு செல்வது ஆசிரியரால் தான் முடியும். மாணவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், படிப்பில் நாட்டம் ஏற்படுத்தவும், சிந்திக்க செய்ய வைக்க முடியும். நல்ல ஆசிரியராக இருக்க கொஞ்சம் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கினால் போதும். குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கும் எல்லா ஆசிரியர்களும் நல்ல ஆசிரியர்களே, நல் ஆசிரியர்களே!
க.சரவணன், தலைமையாசிரியர் .

Wednesday, July 15, 2015

தூய தமிழ் சொற்களை அறிவோம் ! தூய தமிழில் பேசுவோம்!

விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு தூய தமிழ் கற்று தருவோம். அறியச் செய்வோம்! மாணவர்களை வட்டமாக அமரச்செய்யவும். மாணவர்களிடம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிற மொழி சொற்கள் எழுதிய அட்டை மற்றும் அவற்றிற்கு உரிய சரியான தமிழ் சொற்கள் கொண்ட அட்டை இரண்டையும் கொடுக்கவும்.


அட்டையை கொடுத்த பின் தங்களிடம் உள்ள அட்டையில் எழுதியுள்ள வார்த்தையை அனைவரும் கேட்கும்படி சத்தமாக வாசிக்க கூறவும். பின்பு, பிற மொழி சொற்களுக்கு உரிய அட்டை  வைத்துள்ள மாணவர்களை எழுந்திருக்க செய்யவும். அதில் யாரேனும் தூய தமிழ் வார்த்தை சொற்கள் உள்ளவர்கள் எழுந்து நின்றால், அவர்களிடம் காரணம் கேட்டு அதனை விளக்கவும். அதன் பின்பு ஒவ்வொருவரும் இணையான தமிழ்சொல்லை கண்டுபிடிக்க செய்யவும்.


இப்போது மாணவர்களை வட்டமாக அமர செய்யவும். எதேனும் மூன்று வாக்கியங்கள் தொடர்ந்து பேச செய்யவும். அவ்வாக்கியங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி அம்மாணவன் கூறும் வாக்கியத்தில் பிற ஆங்கில மொழி சொற்கள் இருக்குமானல், யாராவது சுட்டிக்காட்டி அதற்கு இணையான தூய தமிழ் சொல்லை கூறினால், தவறாக கூறிய மாணவன் எழுந்து நின்று சரியாக கூறிய மாணவன் செய்ய சொல்லும் ஒரு செயலை ( நடனம், வசனம், நடிப்பு , பாடல் ) செய்ய வேண்டும். குரங்கு போல் நடிக்க செய்தால் குரங்கு போல் நடிக்க வேண்டும்.


ஒவ்வொருவராக வாக்கியம் கூற , பிழைகளை கண்டுபிடிக்க என ஆட்டம் தொடர வேண்டும்.

மாணவர்கள் மகிழ்ச்சியாக இச்செயலை செய்வார்கள். நாம் நம்மை அறியாமல் பயன்படுத்தும் பல பிற மொழி சொற்களை அறியவும். அதற்கு இணையான தூய தமிழ் சொல்லை பயன்படுத்தி பேசவும் முடியும்.

உங்கள் வகுப்பறையிலும் ஏன் குடும்பத்திலும் விளையாண்டு பழகுங்களேன்.! தூய தமிழை வளருங்களேன்!

மதுரை சரவணன்.  

Friday, July 10, 2015

ஆசிரியர் மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும். அதற்கு தீர்வும் !

ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு, அதில் ஏற்படும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்
Education is the most powerful weapon which you can use to change the world – Nelson Mandela.
குழந்தைகளின் அறிவு, சமூக, ஒழுக்க மற்றும் மனவெழுச்சி வளர்ச்சிக்கு ஆதரமாய் விளங்குவது தொடக்க கல்வி ஆகும். இத்தொடக்க கல்வி தரம் உள்ளதாக இருத்தல் அவசியம் ஆகிறது. கல்வியின் தரம் என்பது ஒவ்வொரு மாணவனின் இயல்பான திறன்களை ஊக்குவித்தலும், கற்றுத் தேற வேண்டிய திறன்களை வளர்த்தெடுப்பதும், ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியை உறுதி செய்வதும் ஆகும்.

ஒவ்வொரு மாணவனும் தனது 5 வயது பூர்த்தி அடைந்த  நிலையில் பள்ளிக்கு வருகின்றான். இந்த பிள்ளைப்பருவத்தில் , அவனது அறிவு வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. பல கேள்விகளைக் கேட்டுத் துளைப்பதும் காரணங்களை அறிய முற்படுவதும் இப்பருவத்தின் முக்கிய நடத்தை ஆகும். இக்கேள்விகளுக்கான சிந்தனைகளைத் தூண்டுவதும் பதில்களைத் தரும் விதமாக ஆசிரியர்களின் செயல்பாடுகளும், பள்ளிச் சூழலும் அமையப் பெற வேண்டும்.

குழந்தைகளின் சிந்தனைத் திறன்கள் வளர்ச்சியடைய ஆசிரியரின் ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. வகுப்பறை நிகழ்வுகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்க, அறிவு சார்ந்த கருத்துகள் மாணவரிடம் சென்றடைய ஆசிரியரின் மனப்பான்மை மிக முக்கியம்.
ஆசிரியர் தாம் கற்றுணர்ந்த கருத்துக்களை மாணவர்களிடம் சாதாரண முறையில் கொண்டு சேர்ப்பதும், படைப்பூக்க முறையில் அக்கருத்தினைச் செம்மைப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்ற முறையில் ஏற்ற உத்திகளைப் பயன்படுத்திப் பல துண்டல்கள் நிறைந்ததாகக் கொண்டு சேர்ப்பதும் அந்தந்த ஆசிரியரின் மனப்பான்மையை பொருத்தது.
 
இன்று ஆசிரியரின் செயல்பாடுகள் மாணவனின் கற்றலை துலங்கச் செய்வதாக இருக்கின்றனவா என்பது பொது மக்களிடையே பெரும் கேள்வியாக இருக்கிறது! மாற்றத்தை எதிர்ப்பார்த்து பெற்றோர்களும் கல்வியாளர்களும் ஏங்கி தவிக்கின்றனர். ஆகவே, மாற்றம் நிகழ வேண்டியது ஆசிரியரின் மனதில் தான்.

ஒவ்வொரு மாணவரும் அறிவைப் பெற, கற்றலுக்கான சூழலில் ஆசிரியரின் பணித்திறனும், ஈடுபாடும் பெரும் பங்கு வகிக்கிறது. ஆசிரியரின் பணித்திறனும் ஈடுப்பாடும் அவ்வாசிரியரின் மனப்பான்மையை ஓட்டியே அமைகிறது. ஆசிரியர் தன் பணி சார்ந்த திறன் மற்றும் திறமையை வளர்த்து கொள்ள தொழில்முறை பயிற்சிகளும் அதனை சார்ந்த செயல்திறனும் முக்கியம். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் மாணவர் நிலையிலிருந்து நாள்தோறும் தம்மை மேம்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களின் கற்றலில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ஆசிரியரின் தொழில் சார்ந்த திறன்களில் பாடங்கள் மற்றும் படிப்புகள் திட்டமிடல், பாடத்தை நிருவகித்தல், வளங்கள் நிர்வகித்தல், கற்றலை மதிப்பிடுதல் என பல இருந்தாலும், அதில் மாணவர்களை புரிந்து கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். மாணவர்களை புரிந்து கொள்ளாத நிலையில் தான் ஆசிரியர்களை சமுதாயம் போற்ற மறுக்கிறது.
Those who educate children well are more to be honored than they who produce them. – Aristotle.

ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு முறை குறித்து பேசும் போது இந்தியா முழுவதும் நிலமை ஒன்றாக இருப்பதாகத் தான்  கருத முடிகிறது. சமீபத்திய பெங்களூர் நிகழ்வு இதற்கு உதாரணமாக கொள்ளலாம். அதேப்போல் கோர்ட் வரை சென்று தினம் செய்தி தாள்களில் பரப்பரப்பாக பேசப்பட்ட தமிழகத்தில் ஒரு பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை ஒரு மாணவருடன் ஓடிவிட்டார் என்ற செய்தி. 12 வயது சிறுவனை தாக்கி கன்னங்களிலும் காதுகளிலும் இரத்தக்காயம். ஏற்படுத்திய ஆசிரியர் கைது. இப்படி செய்திகள் அவ்வப்போது வந்து நம்மை கதி கலங்க செய்கின்றன!
இப்படி பட்ட சூழ்நிலையில் மாணவர்கள் ஆசிரியருடன் பழகுவதில் ஏதோ சிக்கல் உள்ளதாக படுகிறது! ஆசிரியர் மாணவர்கள் உறவு சரியாக இல்லாத பட்சத்தில், உளவியல் ரீதியாக சிக்கல் இருக்கும் பட்சத்தில்  மாணவர்களைப் புரிந்து கொள்ளுதல் எப்படி சாத்தியமாகும்!
இவ்வாறு வரும் செய்திகளை கொண்டு ஒட்டுமொத்த ஆசிரியர்களை குறை கூறிவிடுதலும் நல்லதல்ல. ஓடிப்போதல் , அடித்தல், காயம் ஏற்படுத்துதல், மாணவர்களை கண்டு கொள்ளாது இருத்தல், பள்ளிக்கு தாமதாமாக வருதல், மாணவர் நலனில் அக்கறை கொள்ளாது இருந்தல் போன்ற செய்கைகள் தனிப்பட்ட சில மனிதர்களின் மனோவக்கிரத்தின் செயல்பாடாகும்.  ஆனால், இப்படிப்பட்டவர்கள் செய்கைகள் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. அதனால் ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் அவமானம் அடைகின்றது.
இவைகளை கருத்தில் கொள்ளும் போது இது தனிபட்ட நபர்களின் மனோவக்கிரமா? அல்லது  ஒட்டுமொத்த சமுதாயத்தின் தரவீழ்ச்சியின் வெளிப்பாடா? எனவும் சந்தேகம் கொள்ள செய்கின்றது.  இந்நிகழ்வுகளை யார் தடுக்க தவறியது? தலைமையா? இல்லை முறையான கண்காணிப்பு இன்மையா? என்ற கேள்விகளும் நம்மை மேலும் அச்சுறுத்துவதாக உள்ளன.

நான் படிக்கும் காலங்களில், சுமார் 30 வருடங்களுக்கு முன் இருந்த சமூக சூழல் இப்போது இல்லை. அப்போது குடும்ப தலைவரான அப்பா மீது பயம் கலந்த மரியாதை இருந்தது. அதேப்போல் மரியாதையை நாம் ஆசிரியர்களுக்கும் கொடுத்தோம். ஆனால், இன்று குடும்ப சூழல் மட்டுமல்ல, சமுக சூழலும் மாறி உள்ளது. மாணவர்கள் ஆசிரியரை விட தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் பலம் பொருந்தியவனாக உள்ளான்.  அது மட்டுமல்லாமல் குடும்பங்களில் பணமே பிரதானமாக உள்ளது. தனிநபர் வருமானத்தை நம்பி வாழும் நிலையில் குடும்பங்களிலேயே மரியாதை என்பதும் கேள்வி குறியாக உள்ளது. இந்த சூழலில் இருந்து வரும் தற்போதைய இளம் ஆசிரியர்களிடம் நாம் உன்னதமான பண்புகளை எதிர்பார்ப்பது தவறே! அடிப்படை நடத்தை விதிகள் இன்றி பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் செயல்படுவது யாருடைய தவறு?
இன்று பள்ளிகள் ( தனியார், அரசு, அரசு நிதிஉதவி ) வீழ்ச்சி எனபது ஆசிரியர்களின் நடத்தையை முக்கிய காரணமாக கொண்டுள்ளது. பள்ளியின் வளர்ச்சி என்பது ஆசிரியர் மாணவர் உறவு நிலையின் மேம்பாட்டில் உள்ளது.

இன்று ஆசிரியர்கள் இளம் வயதில் வேலைக்கு வருகிறார்கள். சேல்ஸ் ரெப்,போலீஸ், தனியார் கம்பெனியில் கணக்கு பிள்ளை என்ற நிலையில் இருந்து பொருளாதார மேம்பாட்டிற்காக ஆசிரியர் வேலைக்கு வருகின்றார்கள். அவர்களுக்கு  ஆசிரியர் பணி அனுபவம் கிடையாது. வாழ்க்கை அனுபவமும் குறைவு. அவர்களுக்கு போதுமான அளவு பயிற்சி என்பது சாத்தியமில்லாதது. மூத்த ஆசிரியர்கள் வழி காட்டுதல் மிகவும் அவசியம். ஆனால் இவர்கள் எவருடனும் பழகுவதில்லை.
அதுமட்டுமல்ல, அவ்வாசிரியர்களின் குடும்ப சூழல்(பொருளாதார சூழல்)  அவ்வாசிரியர்களின் பணியினை பாதிப்பதாக உள்ளது. காலை எழுந்து குடும்பத்திற்கு வேலை பார்த்து, சோர்ந்து பள்ளிக்கு வருவதால்,, பிஞ்சு மனங்களை கையாளும் பக்குவம் இல்லாத நிலையில் தினசரி செய்திகளில் எவ்வகையிலாவது வருவது எதார்த்தமே!

பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆசிரியர் மாணவர் உறவு நிலையில் நல்ல அணுகுமுறை சாத்தியம். கிராம கல்விக் குழுவை தலைமையாசிரியர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் பயிற்சிகளும் வழங்க வேண்டும். தொடர் கண்காணிப்பு முக்கியம்.
இவை எல்லாவற்றையும் விட அவ்வாசிரியரின் மனமாற்றம் முக்கியம்.

The highest education is that which does not merely give us information but makes our life in harmony with all existences- Rabindranath Tagore.
நல்ல பள்ளி என்பது தூய்மையான வகுப்பறை, பாதுகாப்பான குடிநீர், பயன்படுத்தும் வகையில் அமைந்த கழிப்பறை, நல்ல காற்றோட்டமான தூய்மையான பள்ளி வளாகம் ஆகியவற்றை கொண்டதாகும். அதை விட முக்கியம் ஆசிரிய மாணவ நல்லுறவு ,மாணவர்கள் சுதந்திரமாக இடைவினையாற்றும் வகையில் வகுப்பறை அமைதல், குழந்தைகளின் இயல்பான திறன்களை வெளிகொணரும் வகையில் அமைந்த நிர்வாகம், கற்றல் உபகரணம், ஆசிரியர் பயன்படுத்தும் புதிய உத்திகள், மாணவர்களின் பன்முக திறன்களை மேம்படுத்தும் செயல்பாடுகள் மற்றும் மாணவர்களிடையே காணப்படும் சமூக மற்றும் ஒழுக்க நடத்தைகள் ஆகியவை ஒரு பள்ளியின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றன. 

மாணவர்களுக்கு தன்சுத்தம் கற்றுதருதல் மூலம் ஆசிரியர் மாணவர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் அமையும் பட்சத்தில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் சுமூகமா பழக வாய்ப்பு ஏற்படுகின்றது. பள்ளிகளில் மரம் ஊன்றுதல், தோட்டம் அமைத்தல், தீயணைப்பு கருவிகள் பயன்படுத்துதல், வகுப்பறையை சுத்தம் செய்தல், பள்ளி வளாகத்தை அலங்கரித்தல் ஆகிய நிகழ்வுகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் போது மாணவர்கள் ஆசிரியருடன் இணக்கமாக பழக வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே அவர்களிடையே நல்லுறவை வளர்க்கின்றன.
பள்ளியின் மாணவர் சேர்க்கை, அன்றாட நிகழ்வுகளில் VEC, SMC ஆகியவற்றின் ஒத்துழைப்பை நாடும் போது பெற்றோர்கள் பள்ளியின் அன்றாட செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் ஒத்துழைப்பு தருவார்கள். ஆசிரியர்களும் தமது கடமை உணர்ந்து பொறுப்பாக செயல்பட்டு பள்ளி வளர்ச்சிக்கு உதவ முடியும்.

பள்ளிகளில் உள்ள டிவி, டிவிடி, கணினி போன்றவற்றை மாணவர்கள் கையாள்வதற்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவதன் மூலம் தொழில்நுட்ப அறிவு கொண்டவராக மாணவர்கள் திகழவும். ஆசிரியர் மாணவர் உறவு மேம்படவும் வாய்ப்பு பெருகுகின்றது.

மாணவர்களிடம் அகராதியை பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துதல் மூலம் புதிய சொற்களை உருவாக்கும் திறனை மாணவர்களுக்கு வழங்க முடியும். இதன் மூலம் கல்வி சார் செயல் வலுவடையும். 
மாணவர்கள் கதை சொல்ல அனுமதித்தல், ஓவியம் வரைய வாய்ப்பு உருவாக்கி தருதல், சமூக விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், விளயாட்டு முறை யில் கற்று தருதல், வில்லு பாட்டு மூலம் கற்பித்தல் போன்ற செயல்பாடுகள் மாணவர்களின் கருத்துக்கள் எண்ணங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கின்றன. அதனால் மாணவர்கள் ஆசிரியர்களிடம்  மரியாதையுடனும் சக மாணவர்களுடன் சகோதர உணர்வுடன் ஒற்றுமையாக பழக வாய்ப்பை  ஏற்படுத்துகின்றது.

ஆசிரியர் மாணவர் உறவு நிலை உளவியல் சார்ந்து இருந்தாலும், அது எதார்த்தமான மரியாதையுடன் மதிப்பு மிக்கதாக அமைய வேண்டுமானல்,கல்வி குழந்தை மையமாக இயங்கு வேண்டும். வகுப்பறை செயல்பாடுகள் நிரம்பியதாக உயிரோட்டத்துடன் அமைய பெற்று, எல்லா வகுப்பறை வளங்களையும் பயன்படுத்தி கற்றுதருவதாக அமையும் பட்சத்தில் எதிர்பார்த்த நல்ல விளைவுகளை மாணவர்களிடம் உருவாக்கும். மேலும் பெற்றோர், நிர்வாகிகள்,  தலைமை வகிப்பவர்கள் ஆசிரியர்களை நன்றாக கண்காணித்து அவர்களிடம் உள்ள குறைகளை  கண்டுபிடித்து , உடனுக்குடன்  அவற்றை சரிசெய்வதற்கான வழிமுறைகளை செய்வதன் மூலம் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.
 
மதுரை சரவணன்.

அகல் என்ற மின்னிதழில் வெளிவந்துள்ள கட்டுரை -ஜீலை 2015

Saturday, June 27, 2015

குழந்தை கொத்தடிமைத்தனம் இல்லை என்று யார் சொன்னது!




குழந்தை தொழிலாளர்கள் குறித்து ஒரு சரியான தகவல் நமக்கு கிடைக்க வில்லை. தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2004 ன் படி 8.4 மில்லியன் என்கிறது. சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் 3000க்கு மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக செய்தி படித்தேன்.
குழந்தை பள்ளிக்கு செல்ல வில்லை என்றால் என்ன நிகழும்? உழைப்பாளியாக மாறிவிடுவார்கள். அக்குழந்தையின் ஒட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கும். குழந்தைகளுக்கு குழந்தைக்குரிய அனுபவங்கள் கிடைக்காமல் போய் விடும்.



இந்த அவலம் நிகழாமல் இருக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். குழந்தைகள் ஆர்வமாக பள்ளிக்கு வரும் வகையில் கற்றல் பணி செய்ய வேண்டும். அவர்களின் பெற்றோர்களிடம் கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். மாணவர்களின் சமூக பொருளாதர நிலையை கண்டறிந்து உதவிட வேண்டும். பெற்றோர்களிடம் தொடர்ந்து பேச வேண்டும். கல்வியின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர் முறை என்று இல்லை என்று கூறுபவர்களுக்கு சாட்சியாக ஒரூ நிகழ்வை சுட்டி காட்ட விரும்புகின்றேன். ஆதரவு நிலைப்பாடு எனும் போது எப்படி போராடுவது என்பவர்களுக்கும் ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.




எனது பள்ளிக்கு சிந்தாமணிப்பகுதியில் இருந்து மாணவர்கள் வருகின்றார்கள். சிந்தாமணி பகுதியில் அப்பளக்கம்பெனிகள் நிரம்பிய பகுதி. அங்கு வாழும் மக்கள் தினக்கூலிகளாகவோ அல்லது வார சம்பளம் பெறுபவர்களாகவோ இருப்பார்கள். நடுத்தர வர்க்கமும் மிகவும் பொருளாரத்தில் பின் தங்கியவர்களும் வாழும் பகுதி.
இரண்டு வருடங்களுக்கு முன் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தை இரண்டு நாள்கள் பள்ளிக்கு வரவில்லை. விசாரிக்க சொன்னேன். அவர்கள் தாய், தந்தை அப்பளக்கம்பெனியில் அட்வான்ஸ் பெற்று
அதை திரும்ப தர இயலவில்லை. தாய்க்கு உடம்பு சுகமில்லை. ஆகவே, கடனை அடைக்க கூலி வேலைக்கு தன் மகளை ஓனரின் கட்டாயத்தில் அனுப்பி உள்ளார் என்ற விபரம் அறிந்தேன். உடனே ஆசிரியரை அனுப்பி பெற்றோரிடம் முறையிட சொன்னேன். அவர்கள் வறுமையை சுட்டி காட்டினர். நீங்க வேணும்னா 40 ஆயிரம் தாங்க என பேசி உள்ளார். தெரிந்தநபர்கள் மூலமாக ஓனரிடம் பேச செய்தேன். அவர் இதை அறியாதவர் மாதிரி, அப்படி யாரும் தன்னிடம் வேலை பார்க்கவில்லை என்று அடம் பிடித்து பேசினார்.
கடைசியில் சைல்ட் லைனுக்கு ஆசிரியரை பேச செய்தேன். அவர்கள் விபரம் மட்டும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கிறோம் என கூறி வைத்துவிட்டனர்.
குழந்தையை காண வீட்டிற்கு சென்றேன். அவரின் தாயிடம் குழந்தையை வேலைக்கு அனுப்புவது தவறு . சட்டப்படி குற்றம். நான் புகார் அளித்தால் அது மேலும் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று மிரட்டி வந்தேன்.
அடுத்த நாள் உடனே பிள்ளையை அனுப்பி விட்டார். ஆனால்
அப்பளக்கம்பெனிக்காரர் அவர் உறவினர் மூலம் அப்பகுதியில் தங்களிடம் வேலை பார்ப்பவர்கள் எங்கள் பள்ளியில் சேர்க்க கூடாது என கூறி விட்டார்.
அடுத்தவருடம் டிசி வாங்கி அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார்கள்.



குழந்தைகளுக்கு கல்வி கற்கும் உரிமைக்கான ஆதரவான சூழ்நிலை,பெற்றோரிடம் விழிப்புணர்வு, நல்ல ஆசிரியர்கள் ஆகியோரால் மட்டுமே சாத்தியம். அப்போது மாணவியின் பெற்றோரை அணுகி பேசிய எங்கள் பள்ளி தங்கலீலா ஆசிரியரை நினைத்து பார்க்கின்றேன். சைல்ட் லைனில் பேசிய போது அவர் அடைந்த பதற்றம் சிரிப்பு வரவழைத்தது. பயம் . தன்னை பற்றி விசாரிப்பார்களோ என்று, நான் தைரியமாக தலைமையாசிரியர் தான் பேச சொன்னார் என்று கூறி வெற்றி கண்டோன். அப்பெண் வேறு பள்ளியில் சேர்ந்தாலும் அந்த ஆசிரியரின் தொடர் கண்காணிப்பு பாராட்டுகுரியது. அவளை வேலைக்கு அனுப்பினா நான் புகார் அளிப்பேன் என தொடர்ந்து அந்த பெற்றோரிடம் கூறிவந்தார்.
பள்ளிக்கு செல்லா எல்லா குழந்தைகளுக்காகவும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் போராட வேண்டும்.


நேற்று என் குழந்தைகளுக்கு அறிவியல் இரண்டாம் பாடத்தில் மதிப்பீடு செய்ய விளையாட்டு கற்று கொடுக்கப்பட்டது. சரணாலயங்களும் அங்கு வாழும் விலங்குகள் குறித்தும் மதிப்பிடப்பட்டது.
முதுமலை என்று கூறினால்,மாணவர்கள் யானைப்போல் செய்து காட்ட வேண்டும். கிண்டி என்றால் மான் போல் குதித்து காட்ட வேண்டும். பன்னீர் கட்டா சூ என்றால் பட்டாம் பூச்சி பறப்பது போல் கை அசைக்க வேண்டும். கிர் காடு என்றால் சிங்கம் போல் கர்ஜனையுடன் செய்ய வேண்டும். முண்டந்துறை என்றால் புலி மாதிரி பாய்ந்து காட்ட வேண்டும். வேடந்தாங்கல் என்றால் பறவை போல் பறந்து காட்ட வேண்டும்.
மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர். தவறான செய்கை காட்டும் மாணவர்கள் விளையாட்டில் இருந்து விலக்க படுவார்கள். பின்பு அவர்கள் விளையாட்டை நடத்தும் தலைவனாக விளையாட்டு தொடரும். தொடர்ந்து விளையாடுதல் மூலம் அப்பாடப்
பகுதியில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர்.
பள்ளியில் குழந்தைகள் குறித்து யோசனை செய்யும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்து பேசியப்படி உங்களுடன் விளையாட்டை பகிர்கின்றேன்.
நாளை அரசு மான்யம் உபரி ஆசிரிர்கள் மூலம் எப்படி வீணாக்கப்படுகின்றது என்று கட்டுரையை வாசிப்போம்.
கல்வி குறித்து மாற்றி யோசிப்போம்.
மதுரை சரவணன்.