(50வது பசுமை நடை
நிகழ்வில் கலந்து கொண்ட பின் எழுதியது)
“மொட்டு நுனையில் முளைக்கின்ற
முத்தேபோல்
சொட்டுச் சொட்டென்னத் துளிக்க
துளிக்க என்
குட்டன் வந்தென்னைப் புறம்
புல்குவான்”.
-பெரியாழ்வார்
தெருவிலே விளையாடும் குழந்தை
சிறுநீர் கழித்து விட்டு , தாயின் நினைப்புடன் உடனே வீட்டுக்குள் ஓடி வந்து, அமர்ந்து
வேலை செய்கிற தாயினைப் பின்னாகச் சேர்த்துக் கட்டிப்பிடிக்கிறது. மிச்சமிருக்கின்ற
சிறுநீர்த் துளி தாயின் முதுகிலே சொட்டு சொட்டாகப் படிகிறது. தாய் மகிழ்ச்சியால் சிலிர்த்து
போகிறாள். இது பெரிய புராணம் கூறும் கதை.
பசுமை நடையின் பயணம்
26.10.2014 அன்று தெப்பக் குளம் என்று முடிவான போது என் கண்களில் விரிந்த காட்சி வேறு.
அது பெரிய புராண நிகழ்வில் இருந்து தலைகீழானது. வீட்டில் அம்மாவிடம் கிரிக்கெட் விளையாட
போறோம் என்று கூறி விட்டு, அதிகாலை 6 மணிக்கே (இன்றும் எனக்கு அதிகாலை 6.30 அல்லது
7 ஆகவே இருக்கின்றது!) சைக்கிள் மிதித்து நண்பர்களுடன் சி.எம்.ஆர் ரோட்டில்
இருந்து தெப்பக்குளம் சென்றதும், முதலில் வருவது சிறுநீர் தான்! உள்ளே இறங்கியவுடன்
வேக வேகமாக சிறு நீர் கழித்து விட்டு, சொட்ட சொட்ட தெப்பக்குளம் நனைய , குச்சி(ஸ்டெம்ப்)
ஊன்றி விளையாட தயாராக இருக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது இந்த தெப்ப
குளம் மகிழ்ச்சி பொங்க எங்களை அரவணைத்து விளையாட அனுமதிக்கும்! அங்கு விளையாடிய பின்
மைய மண்டபத்தில் ஓய்வெடுப்பதில் தனி சுகமே இருக்கின்றது. அதை விட மைய மண்டம் அருகில்
ஸ்டெம் ஊன்றி விளையாடும் போது , மையமண்டபத்தில் மேலிருந்து பேட்டிங் செய்யும் நமது
அணியினரை உற்சாகப்படுத்தி கண்டு களிப்பது ஏதோ மெல்போர்ன் கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடும்
உணர்வை தரும்!
இன்றும் பசுமை நினைவாக நான்
வீழ்த்திய விக்கெட்டுகள் கண்முன் சரிகின்றன. நான் பிடித்த கேட்சுகளும், அதனை தொடர்ந்து
மேலே தூக்கி எறியும் பந்து இன்றும் அந்தரத்தில் மிதந்து மையமண்டபத்தில் இருந்தவாறு
நண்பர்களின் பாராட்டுகளில் செவியை கிழிக்கின்றன. நான் அடித்த பவுண்டரிகள், சிக்சர்களில்
ஓடிய பந்துகள் மைய மண்டபத்தின் சுவர்களை முட்டி பரவச படுத்துகின்றன. எத்தனை பாராட்டுகள்.
எத்தனை பரபரப்புகள்! தெப்பகுளம் என்றதும் எனது பால்யம் அதன் பரப்பை விட பெரிதாக விரிய
தொடங்கி விடுகின்றது.
ஆட்சா தான் எங்கள் அணியின்
கேப்டன். ரெங்கா (அருணாவின் சகோதரர்) எங்கள்
அணியின் பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னர். மணிசேகரன் எங்கள் அணியின் ரவிசாஸ்திரி. ஆறு
பந்துகளையும் சிக்சர் விரட்டியவன். மைய மண்டபத்தினுள் பறந்து சிக்சர் அடித்து பந்தை
விரட்டியவன். என் கிரிக்கெட் வாழ்வில் வேறு எவரும் அப்படி சிக்ஸ் அடித்ததில்லை. ஜெயக்குமார்
ஸ்பின்னர் . அந்தோணி மெடிக்கல் நடத்தும் நண்பர், ஆல் ரவுண்டர். மால்கம் மார்சல், கபில்
தேவ், பிரபாகர் போன்ற பெயர்களுடன் நான் பந்து வீசிக்கொண்டிருந்தது இன்னும் தெப்பகுளத்தின்
உள் படிந்திருக்கு புல்லினைப் போன்று பசுமையாக காட்சியளிக்கிறது.
இப்படி எண்ணற்ற நண்பர்கள்
தெப்பகுளம் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். தண்ணீர் இல்ல தெப்பக்குளமே மதுரையின் சிறுவர்கள்
கல்லூரி இளைஞர்கள் விரும்புவது!. வெகுவாக சில காதலர்களை நாங்கள் மைய மண்டபத்தில் காண்பது
உண்டு. ஆனால் பாவம் அவர்கள். சில மணி நேரங்களிலேயே போலீஸ்சாரால் விரட்டப்படுவார்கள்.
அவர்களின் பாதுகாப்பிற்காக! எங்கிருந்து தான் மோப்பம் பிடிப்பார்களோ! எதிரிலே போலீஸ்
ஸ்டேசன் பி4 இன்றும் இருக்கின்றது. இன்று காதலர்களை
விரட்டும் அந்த வேலையை வேறு நபர்கள் செய்கின்றார்கள்!
தெப்பக்குளம் என்றதும் எங்களுக்கு
நினைவிற்கு வருவது கிரிக்கெட் கிரவுண்ட் தான்! மதுரையின் மெல்போர்ன் கிரவுண்டு. இப்போதும்
சிறுவர்கள் முதல் கல்லூரி நண்பர்கள் வரை கிரிக்கெட்விளையாடுவதை பார்க்கலாம். எங்கள்
காலத்தில் டோர்னமெண்ட் நடந்தது. பைனல் வரை சென்று தோற்ற மேட்சுகள் அதிகம்! வாங்கிய
கப்புகள் சில. என் ஆட்டத்தை காண எனது தந்தை வந்து பார்ப்பதும் உண்டு!
நீர் நிரம்பிய தெப்பக்குளத்தில்
நீச்சல் அடித்து விளையாடிய அனுபவம் உண்டு. கரையிலிருந்து நீந்தி மைய மண்டபத்திற்கு
செல்வதும் உண்டு. சில சமயம் போலீசார் விசில் அடித்து நீந்த தடை போடுவதும் உண்டு. “டேய் அது சாக்கடை தண்ணீர் அங்கே போய் நீந்தி விளையாடிட்டா
வர்ற…” என அம்மாவிடம் திட்டும், சில சமயம் அடி உதை வாங்கியதும் உண்டு. ஒரு சமயம் அதில்
விழுந்து யாரோ செத்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் பயம் வந்தது. அதன் பின் நீந்த சென்றது
கிடையாது. ஆம் சடலம் மிதப்பதை பார்த்தால் யாருக்கு தான் நீந்த முடியும்! சில நேரங்களில்
சடலங்கள் சகதியில் மாட்டி நான்கைந்து நாட்கள் தேடியும் கிடைக்காமல் போனதுண்டு! ஒரு
சிறுவனின் இறப்பு நேரில் பார்த்த போது தான் தெரிந்தது, நான் அடிப்பது நீச்சல் அல்ல.
அது காலை கையை உதறி, தண்ணீரை உளப்பி , கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்க கால் சோர்வாகும்
போது மேட்டில் நின்று சுவாசம் கொள்வது என்பது! நல்ல வேளை அப்போதெல்லாம் நான் தண்ணீரில்
முழ்க வில்லை. மேடான போலீஸ் ஸ்டேசன் பக்கம்(கிழக்கு பக்கம்) நீந்தியதால் இருக்கலாம்!
முறையான நீச்சல் ஜெயின் வித்யாசாலாவில் கற்று கொண்ட போது அதை உணர்ந்தேன்!
தெப்ப திருவிழாவிற்கு தெப்பத்தில்
தண்ணீர் நிரப்புவார்கள். அப்போது கரும்பு, சௌமிட்டாய் விற்கும் அதனை வாங்கி சாப்பிட்டு
கொண்டு, கூட்டத்தில் தூரத்தில் தேர் இழுப்பதை பார்த்து பிரமித்து, இடிப்பட்டு வீட்டிற்கு
வந்து சேர்வது உண்டு. ஒருமுறை கூட்டத்தில் அம்மாவை தவற விட்டு, வீட்டிற்கு நடந்து வந்து,
சௌமிட்டாயையும், திண்பண்டங்களையும் தவற விட்டதுடன், திட்டும் பெற்று கொண்டேன்.
இவை தான் தெப்பக்குளம் என்றதும்
நினைவில் வருவது. அது தவிர வரலாறாக பார்த்தால் திருமலை நாயக்கர் மீனாட்சி அம்மன் கோவில்
கட்ட மண் அள்ளிய இடம் . ஆழம் அதிகமாகவே, தெப்பக்குளமாக மாறியது. வைகையில் இருந்து நீர்
கொண்டு வரப்படுகின்றது என்பது மட்டுமே தெரியும். இதன் நீளம் அகலம் பற்றி எல்லாம் கவலை
எப்போதும் கொண்டதில்லை. தெப்ப திருவிழா தை மாதம் நடக்கும் என்ற கூடுதல் தகவலுடன் வேறு
வரலாறு தெரியாது.
என்ன புதிய தகவல் கிடைக்கும்
என்ற எண்ணத்துடனும், அதேவேளையில் சாந்தலிங்கம் அய்யாவின் நக்கல் மிகுந்த சமூகச்சாடல்
மிக்க பேச்சினை கேட்கவே பயணப்பட்டேன். தொடர்ந்து முத்துகுமாரின் சீடர்கள் குறிப்பிட்ட
நேரத்தில் வருகை புரிந்து, அனைவரையும் ஒருங்கிணைத்து, எல்லோருக்கும் வாகனம் ஏற்பாடு
செய்து , கோழி தன் குஞ்சை பாதுகாப்பது போல் பாதுகாத்து குறிபிட்ட இடத்தில் ஒன்று கூடச்செய்து,
சாந்தலிங்கம் அய்யாவின் உரையை கேட்க மைக் தாயர் செய்து, ஒரு மாணவர்களை போல் ஓடியாடி
வேலை பார்த்து பிரமிக்க செய்வது எப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது! அன்று பிளாக்கர்
மீட்டிங் மதன கோபால மந்திர் அரங்கில் நடக்க இருப்பதால் நிறைய நண்பர்களை காணலாம் என்று
விரைந்தேன்.
பசுமை நடையில் கிடைத்த கூடுதல்
தகவல்கள் இங்கே உங்களுக்காக..வரலாற்றை புரட்டும் நேரம் கொஞ்சம் சீரியசாக வாசிக்கவும்.
-
மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கே 3.9கிமீ தொலைவில் தெப்பகுளம் உள்ளது.
-
வண்டியூர்
தெப்பக்குளம், மாரியம்மன் தெப்பக்குளம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
-
கி.பி
1645ல் மன்னர் திருமலை நாயக்கரால் திருமலைநாயக்கர் அரண்மனை கட்ட மண் தோண்டிய இடம் தெப்பகுளமாயிற்று.
வைகையில் இருந்து நீர் வர சுரங்க கால்வாய் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
தென்வடலாக
1000அடியும், கீழ்மேலாக 950 அடியும் ஏறத்தாழ மீனாட்சி அம்மன் கோவில் இடத்திற்கு சமமானது
இத்தெப்பக்குளம்.
-
தெப்பக்குளத்தின்
நடுவே மையமண்டபம் உள்ளது. அதன் நான்கு மூலையிலும் நான்கு சிறிய மண்டபங்கள் உள்ளன. நீர்
நிரம்பியபோது சிறிய தீவாக காட்சி அளிக்கும்.
-
தைமாதம்
பூசநட்சத்திரத்தன்று தெப்பத் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இது திருமலைநாயக்கரின்
பிறந்தநாள்விழா எனவும் கூறப்படுகின்றது.
-
இதை
தோண்டும் போது முக்குறுணிப்பிள்ளையார் கிடைத்ததாக கூறுவார்கள். தெப்பகுளத்தின் மேற்கு
பகம் முக்திஸ்வரர் கோயில் உள்ளது. வடக்கு பக்கம்
தியாகராசர் கலைக்கல்லூரியும் மாரியம்மன் கோவிலும் உள்ளது.
அங்கு முத்துகிருஷ்ணன் இன்ப
அதிர்ச்சி அளித்தார். காற்றின் சிற்பங்கள் என்ற நூலினை வெளியிட்டார். அதில் பசுமைநடையில்
கலந்து கொண்டு பிளாக்கிலும் முகநூலிலும் எழுதிய கட்டுரைகளை திருத்தி புத்தகமாக கொண்டு வந்திருந்தார். எழுதிய அத்தனை நபர்களையும்
நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டது பசுமையான நினைவு. அய்யா தாமோதர் சந்துரு வந்திருந்தது
கவிஞர் மோகனசுந்தரம் அவர்களுடன் புத்தகத்தை பெற்று கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
இதுவரை கண்டிராத தெப்பக்குளத்தினை
அங்கு கண்டேன். இதுவரை பார்த்திராத அத்தனை புதுமுகங்களையும் கண்டேன். அவர்களின் (பசுமைநடை
நண்பர்கள்) முகங்களில் பசுமையை காண முடிந்தது. ஏதோ ஒரு தாகம் தென்பட்டது. அதனை தங்கள்
குழந்தைகளை அழைத்து வந்ததன் மூலம் உறுதி செய்தேன். அதேப்போல் குடும்பம் குடும்பமாக
வந்து நம் மதுரை நம் வரலாறு அறிந்து கொள்ள வேண்டும். அழிய விடக்கூடாது என்ற முனைப்புடனும்
பலர் வந்திருப்பதை காண முடிந்தது. என்னை போன்று பலரும் பலர் நட்புக்காக பலரின் அறிமுகத்திற்காகவும்
வந்திருந்ததை காண முடிந்தது. பசுமைநடையுடன் அர்ஷியா, செல்வம் ராமசாமி, தீபா நாகராணி,
துர்கா போன்ற நண்பர்கள் தொடர்ந்து பயணிப்பது பிரமிக்க வைக்கின்றது. அன்று கடங்கநேரியான்
குடும்பத்துடன் வந்திருந்தார். அவரின் பிரனவ் குட்டி தொடர்ந்து தந்தையிடம் கேள்வி எழுப்பியப்படி
இருந்தான். அழகு! இப்படி பல சந்தோசமான தருணங்கள்..பசுமை நடை வரலாறுகளை சொல்வதுடன் ஒரு
குடும்பமாக நல்ல சமூகமாக வளர்ந்து இருக்கின்றது. அதில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில்
பெருமைப்படுகின்றேன்.
50 நடையை தொட்ட இந்த விழாவில்
அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகரன் அய்யா அவர்கள் பேசிய பேச்சு முத்தாய்ப்பாய்
அமைந்திருந்தது. கல்வி கூடங்கள் ஆசிரியர்கள் கற்று தராத ஒன்றை போதிக்கும் கல்விச்சாலையாக
இந்த பசுமை நடை உள்ளது என்ற பேராசிரியர் பிரபாகரன் பேச்சு இதன் பணிக்கு சான்றாகும்.
தொடர்வோம்… அ.முத்துகிருஷ்ணனின்
இப்பணி போற்றதக்கது. அவருக்கு பக்கபலமாக விளங்கும் சாந்தலிங்கம் என்ற இளைஞரின் பணி
சிறப்பானது, குறிப்பிடதக்கது. அதற்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை நபர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
அனைவரும் இணைவோம். நம் வரலாறு பற்றி அறிவோம். நம் சிறப்பை பரப்புவோம். நம் வரலாற்று
சின்னங்களை அடையாளங்களை அழிய விடாமல் பாதுகாப்போம்! மலைகள் போற்றுவோம்! பாறைகளை குவாரியாக்கி,
சமணம் வழி வரலாறு அழியாமல் இருக்க, நம் வரலாற்றை அம்மணமாக்காமல் காப்போம்!.
.மதுரை சரவணன்.
7 comments:
தெப்பக்குள நினைவுகளைக் கிளப்பி விட்டீர்கள்
தொடரட்டும் சிறப்பு...
அழகான பதிவு சார்
ரசனையான பதிவு!
மிக அருமையான போற்றிபாதுகாக்கவேண்டிய பதிவு
மிக அருமையான போற்றிபாதுகாக்கவேண்டிய பதிவு
பசுமை நடையும் பசுமையான நினைவுகளும் அருமை சரவணன்...
Post a Comment