Tuesday, September 1, 2015

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு .... வாருங்கள்...விளையாடலாம்!

உங்களால் மட்டும் எப்படி முடிகின்றது? முயன்றால் நீங்களும் விளையாடலாம். வாங்க...!
**********
குழந்தைகளின் உலகம் மாயஜாலங்கள் நிரம்பியது. குழந்தைகள் அதிசயமான உலகில் வாழ்கின்றார்கள். நீங்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக இருந்தால் போதுமானது, அந்த அதிசய உலகின் திறவு கோல் உங்களுக்கு கிடைத்துவிடும். அதன் பின்பு நீங்களும் அந்த அதிசய உலகின் அதிசயத்தை கண்டு ரசிக்கலாம். வியக்கலாம். பங்கேற்கலாம்!
என்னை சந்திக்கும் ஆசிரியர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள். என் பேச்சை கண்டு வியக்கின்றார்கள்.இது நடைமுறை சாத்தியமா என ஐயம் கொள்கின்றனர். நிச்சயம் சாத்தியம்.
உங்கள் வகுப்பறையை பார்வையிடலாமா? என்றும் கேட்கின்றார்கள். பார்க்கலாம் வாருங்கள் உங்களுக்காக எப்போதும் எம் பள்ளியின் வாசல்கதவு திறந்தே இருக்கும்.
நான் யாரையும் படி என்று கட்டாயப்படுத்துவதில்லை என்ற போது அது சாத்தியமில்லை என்கின்றனர். நான் அவர்களுக்கான வழியை மட்டும் காட்டுகின்றேன். அதனால் எனக்கு வேலை எளிதாகின்றது என்ற போதும் கூட நம்ப மறுக்கின்றனர். ஆனால் என் ஆசிரியர்களே சாட்சி. நான்காம் வகுப்பில் இவன் படிக்கவே மாட்டான் உங்களிடம் எப்படி ? இப்படி படிக்கின்றான் என வியக்கின்றார்கள்.


நான் மட்டுமல்ல. எந்த ஆசிரியர் மாணவரை மையப்படுத்தி கற்று தருகின்றார்களோ அவர்களிடம் மாணவர்கள் எளிதில் பழகிவிடுவார்கள். மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தும் விடுவார்கள். நாம் சரியான பாதையில் அழைத்து சென்றால் , சிந்தித்து புதிய புதிய பதில்களை தருவார்கள். நமக்கு தெரியாத புதிர்களுக்கான விடைகளை அவிழ்பார்கள்.
சமீபத்தில் எல்லா பாடங்களுக்கும் , எல்லா கருத்துக்களுக்கும் விளையாட்டு முறை எப்படி சாத்தியம் ? என ஒரு ஆசிரியர் கேட்டார். கொஞ்சம் மாணவர்களின் இயல்பு நிலையில் சிந்திக்க தெரிந்தால் போதும் என்றேன். சார் புரியவில்லை என்றார்.
சரி எளிதாக புரியும் படி கூறுகின்றேன். மாணவர்களுக்கு குதித்தல், தாவுதல், ஓடுதல் பிடிக்குமா? என்றேன். ஆமாம் என்றார். இந்த எளிய புரிதல் எல்லா கருத்துகளுக்குமான ஒரு விளையாட்டை உருவாக்கும் என்றேன்.
அவர்கள் குதிப்பதை, தாவுவதை, ஒடுவதை வைத்து பாடக்கருத்தை எப்படிகற்று தர முடியும்? விளையாட வேண்டுமானல் செய்யலாம் என்றார். சற்று கோபமாகவே!
நான் எப்போதும் போல் சிரித்தப்படியே, முடியும். குழந்தைகளுடன் குழந்தைகளாக விளையாடிப்பாருங்கள். நிச்சயம் பாடக்கருத்தை குழந்தைகளுக்கு விளையாட்டாய் கற்று தரலாம்! என்றேன்.
அறிவியல் புலன் உறுப்புகள் பாடத்தின் கருத்துக்களை விளையாட்டாய் மாணவர்களை குதிக்க வைத்தே எளிதில் புரிய வைத்துவிடுவேன் ,என்றேன்.


விளையாட்டு விதிகள்:
மாணவர்களை இரு குழுவாக பிரிக்கவும். மாணவர்களை ஏறுவரிசையில் நிற்க செய்யவும். ஆசிரியர் கூறும் கருத்து் சரி என்று நினைத்தால், மாணவர்கள் வலது புறம் தாவ வேண்டும். ஒரு ஸ்டெப் வலது கை சைடில் தாவ வேண்டும். கருத்து தவறானது என்றால் இடது புறம் தாவ வேண்டும். இந்த விதியை தெளிவாக எடுத்துக்கூறி செய்து காட்டவும்.
உ..ம்: விட்டமின் ஏ கண் பார்வைக்கு நல்லது. எல்லோரும் வலது புறம் தாவுவார்கள்.
விட்டமின் டி தலைமுடி வளர உதவும். எல்லோரும் இடது புறம் தாவுவார்கள்.
புலன் உறுப்புகளில் குறைப்பாடு இருப்பின் முறையான மருத்துவரை அணுகாமல், நானே மருந்து எடுத்து கொள்வேன்.
இப்போது மாணவர்கள் இடப்புறமாக தாவுவார்கள்.
புலன் உறுப்புகள் புற உலகின் ஜன்னல் . எல்லோரும் வலப்புறம் குதிப்பார்கள்.
தவறாக குதிப்பவர் விளையாட்டில் இருந்து நீக்கப்படுவார்கள் . அவர்கள் மற்ற மாணவர்கள் விளையாடுவதை கவனிப்பார்கள். அடுத்த முறை அவுட் ஆகாமல் கடைசி வரை விளையாட வேண்டும் என்று முனைப்புடன் வீட்டில் பாடத்தை படித்து வருவார்கள். பாடத்தை உன்னிப்பாக கவனிப்பார்கள்.
ஒருமுறை நாம் விளையாட பயிற்சி கொடுத்து பின் மாணவர்கள் மூலமாக விளையாட்டை தொடர்ந்தால் அவர்கள் பாடக்கருத்துக்களை எளிதில் புரிவதுடன், மேலும் அது சார்பான கருத்துக்களை சேகரித்து, விளையாட்டில் புகுத்துவார்கள். அதற்கு இந்த லைப்ரேரி அழைத்து செல்லுதல் , புத்தகம் பொது நூலகத்தில் எடுக்கசெய்தல் உதவும்.

அப்புறம் என்ன அந்த ஆசிரியர் நீங்கள் வித்தியாசமானவர் தான். குழந்தையாகவே சிந்திக்கின்றீர்கள் என்று சென்று விட்டார்.
நான் என்றும் குழந்தையாகவே இருக்கவும் குழந்தைகளுடனே பயணிக்கவும் விரும்புகின்றேன். சொந்த விருப்பு வெறுப்புகள் கடந்து பள்ளிக்குள் நுழையுங்கள் நீங்கள் குழந்தைகளுக்காக வாழ்வீர்கள். மனமும் உடலும் ஆரோக்கியம் கொள்ளலாம்!
மதுரை சரவணன்.

3 comments:

'பரிவை' சே.குமார் said...

மிகவும் சிறப்பான பணி... வாழ்த்துக்கள்.

Geetha said...

சிறந்த பணி... புதுகை வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.நன்றி

yathavan64@gmail.com said...

அன்பின் இனிய
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
நலமும் வளமும் சூழ வாழ்க வளமுடன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

Post a Comment