Friday, August 28, 2015

உங்களை பாடாய் படுத்தும் 3 ... கொஞ்சம் கவனமாக இருங்கள்..!


3 என்ற இல்லாத பூதம்!
நான் எப்போதும் பாடம் நடத்தும் முன் ஏதாவது ஒரு தலைவர் குறித்தோ அல்லது வாழ்வியல் சிந்தனை குறித்தோ உரையாற்றுவது உண்டு அல்லது புத்தகத்தில் இருந்து வாசித்து காட்டுவது உண்டு. . அதை மிகவும் ஆர்வமாக கவனிப்பார்கள்.
இன்று வகுப்பறையில் நுழைந்தவுடன் மூன்று ஒரே அளவிலான துண்டு தாள்களை கட் செய்தேன். ஒரு துண்டு சீட்டில் 1,2, 4 என எழுதி என் மேசையின் மீது வைத்துவிட்டேன். சார், புத்தகம் வாசித்து செய்தி சொல்ல வில்லையா என கேட்டார்கள். பரீட்சை வருகின்றது ஆகவே, நாம் பாடம் படிப்போம் என்று தமிழ் எடுத்து மூன்று பொற்காசுகள் பாடத்தை வரிசையாக வாசிக்கவும் என்றேன். மாணவர்கள் அயர்ச்சியுடன் வாசிக்க ஆரம்பித்தார்கள். சீக்கிரம் வாசித்தால் நாம் ஒரு ஆக்டிவிட்டி செய்யலாம் என்றேன்.
வேகமாக வாசித்தனர். உடனே ராகவன் சார் பாடத்தை நடத்துவோம் சார், பரீட்சைன்னாலே பயமா தான் இருக்கும். அதனால் இனி டெய்லி நாம் படித்து தேர்வுக்கு தயாராவொம் என்றான். உடனே கீர்த்தனா இப்ப என்ன படிக்காமலா இருக்கோம் என்றாள். எல்லா பாடத்துக்கும் கேள்வி கேட்டால் டான் டான்னு சொல்லுறீய்யே..என்றாள். உடனே, இப்ப அப்படி தான் தெரியும் பரீட்சைன்னு வந்துட்டா.. அப்புறம் தெரியும். எழுதும் போது தானே இருக்கு..சும்மா ஆக்டிவிட்டி, விளையாட்டுன்னு இல்லாம சார் சொல்றமாதிரி இனி தேர்வுக்கு தயாராவோம் என்றான்.
என்னடா ராகவன் சொல்ற மாதிரி தேர்வுன்னா பயமா? என்றேன். சரவணக்குமார் உடனே ஆமாம் சார்.. கொஞ்சம் பயமா தான் இருக்கு. சொல்றத தைரியமா சொல்றோம். ஆனா பரீட்சை வரும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கு என்றான்.
சரி .. எனக்கு மூட் மாறி விட்டது. வாசிப்பை நிறுத்துங்க..! நாம் ஆக்டிவிட்டி செய்வோம். ராகவன் சார்..முதல்ல பாடம் அப்புறம் தான் விளையாட்டெல்லாம். சொன்னதை செய்யுங்க..! உடனே எல்லோரும் அவனை கோரசாக போடா.. முதல்ல ஆக்டிவிட்டி அப்புறம் படிக்கலாம் என்றனர்.
சரி ராகவா.. ஒரு சின்ன ஆக்டிவிட்டி தான் . நான் காலையில் அங்க கார்டு எழுதி வச்சிருந்தேன். அதை எடுத்துகிட்டு வா. வரிசைப்படி அடுக்கி கொண்டுவா என்றேன்.
உடனே சரி என்று தலையசைத்தப்படி சார் ஒரே ஒண்ணு தான் அதுக்கப்புறம் பரீட்சைக்கு படிக்கணும் என்றான்.
நல்லது ராகவா எடுத்து வா..மேசை மீது வரிசையாக எண்கள் எழுதிய அட்டை வைத்துள்ளேன் எடுத்து வா என்றேன்.
அவன் மேசை அருகில் சென்றான். கார்டுகளை எடுத்தான். 1, 2, 4 என பார்த்தான். சார் 3 காணாம் என்றான். உடனே அருகில் இருந்த செந்தில் டேய் நல்லா தேடுடா.. வேண்டாம் வேண்டாம்ன்னு தேடுனைன்னா எப்படி கிடைக்கும் என்றபடி மேசை மீது உள்ள புத்தகங்களை எடுத்து விட்டு தேடினான். ராகவன் கீழே 3 விழுந்து கிடக்கின்றதா என மேசை அடியில், பெஞ்சுக்கு அடியில் தேட ஆரம்பித்தான்.
உடன் பிறரும் இணைந்து கொண்டு தேட ஆரம்பித்தார்கள். டேய் மடையா ஒழுங்க கார்டை எடுக்க தெரியாதா.. உன்னால் ஆக்டிவிட்டி செய்வது வீணாக போகின்றது. டைம் எல்லாம் வேஸ்ட் என்று அவனை கடிந்து கொண்டனர்.
இப்போது அருகில் இருந்த பெண்குழந்தைகளும் தள்ளுங்கடா நாங்க தேடுறோம் என்று இணைந்தனர். நான் எதையும் கவனிக்காத மாதிரி சீக்கிரம் கொண்டு வாருங்கள். கார்டு 3 வந்த தான் விளையாட முடியும் என்றேன்.
இப்போது என் மேசை மீது உள்ள எல்லா பொருட்களையும் பெண்கள் எடுத்து கீழே அடுக்கி வைத்து தேடினர். 3 கிடைக்கவில்லை. மீண்டும் அழகாக அடுக்கி வைத்து விட்டனர். கடைசியாக அனைவரும் தேடி பிடித்து இல்லை என்பதை உறுதி செய்த பின் சார்.. 3 காணாம் இன்னோரு கார்டு எழுதுங்க ..ப்ளீஸ் விளையாடுவோம். ஆக்டிவிட்டி செய்வோம் என்றனர்.
நான் ஆக்டிவிட்டி முடிந்தது என்றேன். வாங்க வந்து உட்காருங்கள் என்றேன். ராகவன் எதையும் அறியாமல் விழித்தான். பிற மாணவர்கள் என்னது ஆக்டிவிட்டி எப்ப பண்ணோம் என வியந்து பார்த்தனர்.
இல்லாத ஒன்றை தேடுகின்றீர்கள். நான் ராகவனை எண்களை அடுக்கி வரிசையாக கொண்டுவரத்தான் சொன்னேன். நீங்கள் 3 என்ற எழுதாத கார்டை தேடினீர்கள். என்னது 3 நம்பர் எழுதவில்லையா? என கோரசாக கேட்டனர்.
ராகவன் இதெல்லாம் ஏமாத்து வேலை. என்னை பயமுறுத்திட்டீங்க.. நான் எடுக்கும் போது விழுந்துவிட்டதே என தேடினேன். போங்க சார்.இது போங்கு என்றான்.
நான் இப்போது அவர்களுக்கு வாழ்வியல் பாடம் எடுக்க ஆரம்பித்திருந்தேன்.
உண்மை தான். இது போங்கு தான். நாம் ராகவனை போன்று இல்லாத ஒன்றுக்கு பயந்து போய், அது குறித்து அலைந்தப்படி இல்லாததை பெரிதாக நினைத்து கவலைப்பட்டு அதற்காக நம் வாழ்வை செலவழித்து, தொலைத்து கொண்டிருக்கின்றோம். நம் பொன்னான நேரத்தை வீணடித்து கொண்டிருக்கின்றோம். தேர்வு என்ற இல்லாத பூதத்திற்கு பயந்து நடுங்கி நம் சுய சிந்தனையை இழந்து, மனப்பாடம் என்ற தவறான அணுகுமுறையை பயன்படுத்துகின்றோம்.
நாம் வகுப்பரையில் கற்கின்றோம். அதன் தொடர்சியாக வீட்டில் அதனை நினைவுப்படுத்தி பார்க்கின்றோம்.படிக்கின்றோம். படித்து பெற்ற கருத்தை அனுபவமாக செயல்பாடுகள் மூலம் மாற்றுகின்றோம். அதன் நன்மைகளுக்கு ஏற்ப கருத்தை செறிவாக்கி கொள்கின்றோம். பின் அந்த அனுபவத்தை வாழ்வில் பொருத்தி பார்க்கின்றோம். விளையாட்டாய் பாடம் கற்கும் போது தெளிவாக இருக்கின்றோம். ஆனால் தேர்வு என்ற ஒன்று வரும் போது 3 மாதிரி இல்லாத பூதம் என்ற பயம் தொற்றி கொள்கின்றது, உங்களை கொல்கின்றது. சுய சிந்தனை இன்றி செயல்பட ஆரம்பிக்கின்றீர்கள். தன்னம்பிக்கையை இழந்து பயம் உங்களை ஆட்கொள்கின்றது. இது தான் உங்கள் பலவீனம். நாம் பலமான கல்வி இல்லாத , மதிப்பெண் அல்லது தரம் குறியீட்டுக்கள் என்ற அறிவு சோதனைகளுக்காக பயந்து போய் இருக்கின்ற சிந்தனையை மழுங்கடித்து நம்மை இயல்பாய் செயல்படாமல் ஓரிடத்தில் தங்கி இல்லாத ஒன்றிற்காக கவலை கொள்கின்றோம் என்றேன்.
ஆம் என எல்லோரும் தலையசைக்க..ராகவன் ஆமாம் சார் நாங்க தான் டெய்லி நீங்க கேட்கின்ற எல்லா கேள்விக்கும் பதில் அளிக்கின்றோம். பின்பு ஏன் பரீட்சைக்கு பயப்பட வேண்டும். என்றான்.
இனி என்ன இருக்கின்றது. விளையாட்டாய் கல்வி மீண்டும் பலம் பெற தொடங்கியது.
மதுரை சரவணன்.

2 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...
அருமையான ஆக்டிவிட்டி வகுப்புதான் போங்க..
வாழ்த்துக்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இப்படி அனைத்து ஆசிரியரும் சொல்லிக் கொடுத்தால் நன்றாய் இருக்குமே..
த.ம.1

Post a Comment