Monday, October 15, 2012

தடுப்பதற்கில்லை….!



பனையோலை வேய்ந்த
கூரை வீடு எரிச்சலூட்டுகிறது
நாலாபக்கமும் உயர்ந்த கட்டிடங்களில்
செயற்க்கை செடிகளை அழகுக்காகவும்
பறவைகளின் ஒலிகளை
அழைப்பு மணியோசையாகவும்
வைத்திருப்பவர்களுக்கு
அறியாமலா
உயர்ந்து வளர்ந்த
பல மரங்களை சரிந்திருப்பார்கள்
பூத்துக்குலுங்கிய மஞ்சணத்தி மரங்களை
மாய்ந்திருப்பார்கள்
குருவிகள் இல்லை
கூவும் குயில்கள் இல்லை
காடையும் காணவில்லை
அட மனிதர்கள்கூட
எப்போதாவது தான் புலப்படுகிறார்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தரும் நிழலில்
அமர்ந்துக் கொண்டிருக்கிறேன்
டிரங் பெட்டியிலிருந்து எடுத்த
பழைய புத்தகத்தின் பக்கங்களில்
பொதிந்திருந்த
மயிலிறகை அதிசியமாகப் பார்க்கிறாள்
எந்தப் பறவையின் இறகையும்
பார்த்திராத என் பேத்தி
உயிர் வலிக்க கேட்கிறேன்
விலைப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்
கூரை வீட்டையும்
என் மகனிடம்...!




Thursday, October 4, 2012

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு



   மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் பொருட்டும் மன அழுத்தம் , மன உளைச்சல் மற்றும் தேர்வு பற்றிய பயம் ஆகியவைகளை போக்கும் விதமாக, தமிழக அரசு , இலவசக் கட்டாயக் கல்வியை அமுல்படுத்தி, இந்தியாவிலேயே முதல் முறையாக ,பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக , ஆர்.டி.ஈ. சட்டம் 2009 இயற்றப்பட்டு,அது தொடர்பாக பல அரசு ஆணைகளைத் தொடர்ந்து பிறப்பித்து,   முப்பருவ முறையையும் , முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகவும், முழுமையான மாணவர் வருகை சதவீதம் அமையும் விதமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.


    சி.சி.இ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்பது , கல்வி மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவன் காட்டும் ஈடுபாடு , ஆர்வம் , முயற்சி , ஒழுங்கு முறை , செயல் திறன் , ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் , சமுகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடலாகும்.


    மதிப்பிடல் கற்போரை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுதலாகும். மேலும் மதிப்பீடு என்பது , கற்போரின் நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் அளந்தரிதல் ஆகும்.
   

    தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடானது, கல்விசார்(Scholastic Asssessment) மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகள்(co-scholastic Assessment) வாயிலாக மதிப்பிடுதலாகும்.


    கல்விசார் செயல்பாடுகள் என்பது கற்போரின் அறிதல், புரிதல், பகுத்தாய்தல் மற்றும் பாடப் பொருளைப்பயன்படுத்தும் நிலைகளுக்கு ஏற்ப (அதாவது கருத்தை செயல்படுத்தும் விதமாக)பல்வேறு மதிப்பீட்டு உத்திகளையும் , நுட்பங்களையும் கொண்டு கலைத்திட்டத்திலுள்ள கல்விசார் பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறன்களைப் பருவம் முழுவதும், பாடப் பொருளைச் சிறு சிறு பகுதிகளாகக் கற்பித்துக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர்களின் அடைவுத் திறன்கள் வளரறி மற்றும் தொகுத்தறி  மதிப்பீடுகள் வாயிலாக மதிப்பீடுச்  செய்யப் படுதல் ஆகும். இதனால்,  மாணவர்களிடையே உள்ள தேர்வு அச்சமும் , மன அழுத்தமும் குறைகிறது. இதில் உடற்கல்வியும் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    வாழ்க்கைத்திறன் ( உ.ம்., மதித்தல் மரியாதை தருதல், சூழலுக்கேற்பவும் நேர்மறையாகவும் முடிவெடுத்தல்,சுய முடிவெடுத்தல் தெரிவித்தல், தீச்செயல், தீய நோக்குடன் தொடுதலை எதிர்த்தல், ஒத்த வயதுடையோருடன் உறுதியாகவும் இணக்கத்துடனும் இருத்தல் , போன்ற பண்புகள்) , மனப்பான்மைகளும் மதிப்புகளும் ( தேசிய மற்றும் மாநில அரசு சார்பான சின்னங்களுக்கு மரியாதை செலுத்துதல், பாராட்டத்தக்க பண்புடைமை (அதாவது சொல்லிலும், செயலிலும் அனைவருக்கும் மதிப்பளித்தல், நண்பருக்கு உதவும் பண்பு, கோப நிலையிலும் பண்பு நிலை மாறாமல் இருத்தல்) , பள்ளி மற்றும் சமுகத்திலுள்ள பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் மதிப்புகள்),நன்னலம் மற்றும் யோகா/ ஒருங்கிணைந்த உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள் ( வாழ்க்கை கல்வி மற்றும் கலைக் கல்வி) ஆகியவற்றை ஆசிரியர் குழந்தைகளை வகுப்பறையிலும் , பள்ளியிலும் , பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் உற்று நோக்கி , குறிப்பிட்டுள்ள வாழ்க்கைத் திறன்களில் அவர்களுடைய நடத்தைக் கூறுகளைத் தெரிந்துக் கொண்டு ஐந்து குறியீட்டுத் தரநிலை அளவுகளில் மதிப்பீடு செய்து , தரநிலையைப் பதிவு செய்ய வேண்டும். இது கல்வி இணைச்செயல்பாடுகளை மதிப்பிடலாகும்.      


       இதனால் மாணவன் தேவையான அளவில் பாடங்களில் கற்றலடைவைப் பெறுவதுடன் ,ஆர்வமாக கற்கும் நிலை உருவாக்கி, தாம் கற்றவற்றை தானாக பகுப்பாய்வு செய்யவும் , அதனை வெவ்வேறு சூழலில் பயன்படுத்தும் திறன் பெற்றவனாகவும் , தானாகவும் , பிறருடன் ஒருங்கிணைந்தும், இசைந்தும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்யப் பழகிக் கொள்வான்.   சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல் திட்டங்களில் பங்கேற்கவும், சிக்கல்களை அறிந்து , தீர்வு காணும் ஆற்றலைப் பெற்றவனாக உருவாக்கப்படுவான்.


       இத்தனை சிறப்பு மிக்க இந்த மதிப்பீடு முறை வெற்றி பெற பெற்றோர்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் செயல் திட்டங்களுக்கு உதவியாக இருந்து, குழந்தைகளே உருவாக்க உதவிட வேண்டும். ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்களுக்கு செயல் திட்டங்களை உருவாக்கி, ஆனந்தமான கற்றல் சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். பெற்றோர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், அரசு கல்வித் துறை என  அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட்டால், தமிழக மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. 

Thursday, September 6, 2012

மதுபானம்






                                             

பியரை குடிக்கும் போது
ஹாட் பற்றி யோசிக்க கூடாது.
எந்த மது வகையும் மற்றொரு
மது வகையுடன் சேர்த்து சாப்பிட முடியாது
ஓட்காவுடன் ரம் சேருமா…?
ரமாவுடன் இருக்கும் போது
உமாவை பற்றி யோசிக்கலாமா!  
பெண்களும் மதுபானமும் ஒன்றுதான்…!



Tuesday, August 28, 2012

கிரிக்கெட்


எத்தனை பந்துக்கள் வீசுனாலும்
அத்தனையும் விக்கெட்டுக்களாய்
வீசப்படும் அனைத்து பந்துகளும்
சிக்ஸர்களாய்
எப்படி சாத்தியமாகும்..?
என்
இரண்டு வயது குட்டிப் பிள்ளையிடம்
விளையாண்டு பாருங்கள்…!

Tuesday, August 21, 2012

அட்டகத்தி



காலை எட்டுமணி .6A பஸ். முனிச்சாலை டு அமெரிக்கன் கல்லூரி. தவறாமல் ஆஜராவதற்கு பல காரணங்கள். நண்பர்கள் . விடலை குசும்புகள். பெண்களை திரும்பி வைக்க வேண்டும் என்பதற்காக காட்டும் குசும்புகள். எபி. முத்து மறக்க முடியாத நண்பர்கள். எபி எப்போதும் பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து ஏறுவான். அதுவும் புத்தகத்தை தனக்கு புடித்த ஜன்னல் ஓரப் பெண்ணிடம் (சாரி …நல்ல பிகரிடம் ) தான் கொடுப்பான். அவன் எப்போதும் சூப்பர் பிகர்களை ஜாரி எப்படிடா இருக்கு என்பான். அவன் அப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது , “என்னோட உம் கொட்டிகிட்டு இரு…” என சொல்லிக் கொண்டு .. அப்பெண்ணின் அருகில் சென்று… ”டேய் இன்னைக்கு டிரஸ் நல்லா இருக்கு, அப்புறம் சாய்ங்காலம் முணறை(3.30) மணி பஸ் தானே.” அவள் சிரித்தால், “டேய் என்ன அப்படி பார்க்காதடா  வெட்கமா இருக்கு…” என லூட்டி அடித்து கரக்ட் செய்து விடுவான். அப்புறம் கடலை தான்.

முத்து (குண்டுக்கு) ஏற்ற ஜோடியாக லேடி டோக் கல்லூரியில் படிக்கும் அதே சைஸ் குண்டை முத்தண்ணே உன் சைட் வந்திடுச்சு… அங்க பாருங்களேன் உங்களைப் பார்த்து சிரிக்குது.. அப்புறம் படத்துக்கு கூட்டிக் கிட்டு போக வேண்டியது தானே என்று காஞ்சனாவை காதலித்ததும், காஞ்சனா இவனின் அதிமீறிய சேட்டைக்கு பயந்து இரண்டு படத்துடன் கழட்டி விட்டவுடன், வேறு ஒரு பெண்ணை பார்த்ததும் , அவள் பின்னே சுத்தி அலைந்து , அவள் ஏரியா வந்தவுடன், அவள் அவனை, “அண்ணே ஏன் அண்ணே வீடு வரை வர்றீங்க… யாரும் பார்த்த தப்பா நினைக்க போறாங்க… நீங்க செய்யுற சேட்டை பிடிக்கும்” என டபாய்க்க … எபியின் சித்து விளையாட்டு அடுத்த பெண்ணைத் தேடி செல்லும். “ மாப்பிள்ளை எப்படியாவது லவ் பண்ணி தாண்ட… மேரேஜ் பண்ணுவேன்.. நமக்குன்னு ஒருத்தி சிக்காமப் போயிடுவா…” என்பான். 

இவனின் விளையாட்டின் ஊடே பேருந்தில் கூட்ட நெருசலில் கர்ச்சிப் வைத்து கையை மறைத்து பெண்ணின் மார்பு, பின்பகுதிகளை தடவும் மூத்த கல்லூரி மாணவர்களையும், பல பெரிசுகளையும் பார்த்து இருக்கிறேன். ஒரு சமயம் எபி இது போல செயலில் ஈடுப்பட்டு , தன் அக்காவிடம் மாட்டிக் கொண்டான். அன்றிலிருந்து அவன் பஸ்சை மறந்து டிவிஎஸ் வண்டியில் சுற்ற ஆரம்பித்தான். பின் அவ்வண்டியில் பல பெண்கள் பயணித்து , அடுத்த வீட்டு பெண்ணை ஒருநாள் ஏற்றிச் செல்லும் போது மாட்டிக் கொண்டு, மீண்டும் பஸ்… பின்பு அவளும் எபியின் உறவுக்காரப் பையனை திருமணம் செய்ய விசாரித்த போது, “டேய்..அவள் என் அண்ணணுக்கு ரூட் விடத்தாண்ட என்னுடன் பழகியிருக்கா.. கடைசியில் என்ன கவுத்திட்டாட மாப்பிள்ளை” என்ற போது சிரிப்பை அடக்க முடியவில்லை.  கடைசியில் அவன் முத்துவுக்கு பார்த்த குண்டு பெண் போல ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக அறிந்தேன்.

அட போங்க … அட்டக்கத்தி பட விமர்சனம் எழுத வந்து, என் கல்லூரி
வாழ்வில் பேருந்தில் பயணம் செய்த போது நடந்த சம்பவத்தை எழுதிட்டேன்.
என் கதையில் எபி எப்படியோ அப்படித்தான் படத்தின் கதாநாயகன் தினாவும்.
பள்ளி வயதில் நந்திதா, கல்லூரி பருவ நந்திதா , கல்லூரி நிறுத்தும் போது
காதலுக்காக உருகும் நந்திதா என எதார்த்த நடிப்பில் நம்கல்லூரிக்காதலியை,அயல்வீட்டில் குடியிருக்கும் அத்தைப் பெண்னை  நினைவுப்படுத்த தவறவில்லை. அதனால் நந்திதாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு அதிகம் .




தினாவுக்கு பள்ளி வயது நந்திதாவுடன் ஏற்பட்ட காதல், அதன் பின் துண்டிப்பு, அதன் தொடர்ச்சியாக கல்லூரியில் சந்திப்பு, நந்திதாவே வழிய வந்து தினா தினா என உருகும் காதல் , கனிந்ததா … இல்லையா? என்பது தான் கதை..

தினா அருமையான நடிப்பு ,நம்மை ஈர்க்கிறது. தினாவின் அப்பா கனகட்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியுள்ளார். அவர் அம்மாவாக நடித்தவர் , தன் கணவர் போதையில் சாப்பிடாமல் இருக்கும் போது உணவு ஊட்டும் காட்சியில்  (மதுரையின் சேரிகளும் இப்படித்தான் உள்ளன) வட சென்னையின் நடுத்தர குடும்பங்களின் அன்றாடக் காட்சியை வெளிப்படுத்தி நம்மிடம் பாராட்டுப்பெறுகிறார் .


பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவு வட சென்னையை மட்டும் அல்ல.. பேருந்து காட்சிகளை மிக துல்லியமாக ஒளிப்பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்தின் பலம் . “ஆசை ஒரு புல்வெளி” , “ஆடிப் போனா ஆவணி…” பாடல்கள் படத்திற்கு ஹிட் கொடுத்துள்ளது பிளஸ். படத்தின் காட்சி அமைப்பு பேருந்தை மையமாக வைத்து இருந்தாலும் , கதையை போர் அடிக்காமல் நகர்த்தி சென்றவிதம் அருமை என்பதால் டைரக்டர் நம்மை கவர்ந்து இழுக்கிறார்.

அட்டகத்தி கல்லூரி வாழ்வை மையமாக வைத்து எடுத்தாலும், வெகுஜனப்படங்களின் வரிசையில் வெற்றி கத்தி . அட்டக்கத்தி கழுத்தை பதம் பார்க்காது என்பதால் தைரியமாக படம்பார்க்கச் செல்லலாம்.

Sunday, July 29, 2012

புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ


         300 ஆண்டுகளாக கிளார்க்குகளை உருவாக்கிய கல்விமுறையில் மாற்றம் எதிர்பார்த்த கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையால் மாற்றம் நிகழும் என்பது மறுக்கப்படாத உண்மை.

    மாணவனின் முழுமையான திறனை இம்மதிப்பீட்டு முறையால் வெளிக் கொணரலாம்  2009 கட்டாய இலவச கல்விச் சட்டம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் மதிப்பீடு அமைய அனைத்து ஆசிரியர்களும் மாணவனை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து பல சுற்றறிக்கைகள் மற்றும் ஜி.ஓ.க்கள் வெளியிடுவது வரவேற்க்கத்தக்கது.

     நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம் . இயல்பது கறவேல் என சொல்லி கொடுத்தார். இன்றும் அப்படித்தான். ஆனால் அதற்கான அர்த்தம் கேட்டால், அதற்கான உரையை எடுத்து படித்து , அதன் பின் அர்த்தம் சொல்லுவார்கள். நானும் அதை புரியாமலே மனப்பாடம் செய்து கற்று வந்து, அதன் பின் அதனை அனுபவ ரீதியில் அர்த்தம் பெற்றுள்ளேன். அதாவது புரியாமல் அதனை மனப்பாடம் செய்து விடுவது. அர்த்தம் பற்றி பயம் கொள்வது இல்லை. வருத்தப்படுவதில்லை. ஏனெனில் அதனை அடிப்பிறலாமல் எழுதினால் மதிப்பெண். ஆனால், பள்ளிப்படிப்பை முடித்தப்பின் தான் அதற்கான முழுமையான அர்த்தத்தைப் பெற்று , கற்றதன் பயனை அனுபவிக்க முடிந்தது.

      ஆனால், இந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் புரிந்து செயல் படுதல் மட்டுமே சாத்தியம். அனுபவ ரீதியாக ஒரு உண்மையை தெரிந்த பின் அல்லது ஒரு கருத்தினை கற்றுத்தரும்போது அதன் உண்மை தன்மை உணரும் படி கற்றுத்தந்தால் மட்டுமே அவனை முழுமையாக மதிப்பிட முடியும். அனுபவ ரீதியாக தெரிந்த பின் கற்றல் மனதில் அழுத்தமான கருத்து  உருவாகிவிடும். 300 ஆண்டுகளாக மனப்பாடம் செய்து தேர்வில் புரிதல் இன்றி கக்கும் முறை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.

     0 முதல் 100 வரை 101 முறையில் மாணவர்களை மதிப்பெண் சார்ந்து தரம் பிரித்த முறை மாற்றப்பட்டு, 9 வகையான ஸ்கேல் கொண்டு நாம் மாணவனை வரிசைப் படுத்தப் போகிறோம். இதனால் மதிப்பெண் ரீதியில் மாணவனுக்கு அழுத்தம் இல்லை. பெற்றோர்கள் 100 க்கு 100 என்ற மன அழுத்தத்தை மாணவனிடம் ஏற்படுத்தும் சாத்தியம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் 2 ஸ்கேல் முறை மட்டுமே உள்ளதையும் அறிய வேண்டும்.     

      நமக்கல் மாவட்டதில் நடைப்பெறும் பள்ளிப் பண்ணைகளின் மவுசு இனி குறையும். மனப்பாடம் செய்து அதன் மூலம் இஞ்னியரிங்க் மற்றும் மருத்துவம் செல்லும் நிலை முற்றிலும் மாற்றப்படும். புரிதல், நன்கு அறிதல், தெரிந்த கருத்தினை பயமின்றி எடுத்துரைத்தல், எடுத்துரைப்பது மட்டுமின்றி அக்கருத்தினை நடைமுறைப்படுத்த தெரிந்திருத்தல் போன்ற பண்புகளை பெற்றவனாக மாணவன் இருக்க வாய்ப்பு இப்புதிய மதிப்பீட்டு முறையால் சாத்தியம். அதற்கு முன்பு அப்படி அல்ல.

       பள்ளிப்பண்ணைகளால் ஒரு +1 மாணவனை இருதய அறுவை சிகிச்சை எப்படி செய்ய வேண்டும் என்பதை எந்த வித திக்கு திணறல் இன்றி பிழையும் இன்றி மனப்பாடம் செய்து அதனை எழுத சொல்லிக் கொடுக்க முடியும். இருதய அறுவை சிகிச்சைக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் எப்படி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனப்பாடம் செய்த ஒருவனிடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? யாரும் முன் வருவீர்களா? முடியாது . இனி இப்படிப்பட்ட மொட்ட மனப்பாடம் சாத்தியம் இல்லை.

     அரசு நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை அமுல் படுத்த ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து , அனைத்து பள்ளிகளிலும் இந்த புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ நடைபெற முயற்சி எடுப்பதுடன் அதனை 100 சதவீதம் வெற்றியடைய செய்ய வேண்டும்.    

Thursday, July 5, 2012

தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள்


    சமூகம் நம் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் பாடங்களைப் பார்க்கும் போது குலை நடுங்குகிறது. சமூகம் மட்டுமே அதனை சுற்றி நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. வீட்டில் ஆரம்பிக்கும் எந்த பழக்கமும் சமூகத்தை தாக்கும் அல்லது சமூகத்தை வடிவமைக்கும் என்ற அடிப்படை நியதி இன்றைய நவீன காலத்தில் மாறு பட்டு சமூகங்கள் மட்டுமே நம் குடும்பங்களின் அமைப்பை அல்லது குடும்பத்திலுள்ள அங்கத்தினரின் குணங்களை வடிவமைக்கின்றன.

   குறிப்பாக நம் குழந்தைகள் பள்ளிகளில் கற்றுக் கொள்வதைவிட தம்மை சுற்றி நடக்கும் விசயங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் பாடங்கள் அதிகம்.

   வெட்ட வெளிக்கு குழந்தைகளை அழைத்து , நிலவையும் நட்சத்திரங்களையும் காட்டி உணவூட்டும் பழக்கம் அரிதாகி , டி.வி. நாடகங்களை போட்டுக் காட்டி , உணவை திணிக்கும் பழக்க வழக்கம் பெருகிவிட்டது. அப்பு செல்லம் ,செல்லம், செல்லம், செல்லமே அடுத்து  தொடங்கும்  குழந்தைகளின்  உறக்கம் இன்னும் விரிவடைந்து சிரிப்புலோகம் நிகழ்ச்சியையும் தாண்டினாலும் ஆச்சரியப்படலாம். குழந்தைகள் உறக்கம் குறைந்து, மனவளர்ச்சியின் அளவும் குறைந்து வளர்ந்து வருகிறார்கள். அதனால் எதையும் பார்த்தவுடன் அதன் தாக்கத்தை அறியாமல் அதை கடைப்பிடிப்பதில் குழந்தைகள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.


    பள்ளி தொடங்கி ஒரு மாதமாகிய நிலையில், நேற்று ஒன்றாம் வகுப்பு 'அ' பிரிவு ஆசிரியர் என்னை வந்து பார்த்து சொன்ன விசயம் அதிர்ச்சி அடைய வைத்தது. சமூகம் எவ்வளவு பெரிய தாக்கத்தை மாணவர் மனதில் ஏற்படுத்தியுள்ளது !

     சிறு குழந்தைகள் வண்டி ஓட்டுவதை வேடிக்கை பார்த்ததும், தானும் அதேப் போல வண்டி ஓட்டி விளையாட முயல்வது வழக்கம்.  பேருந்து ஓட்டுவது போல கையை சுழற்றி ஆட்டிக் கொண்டு விளையாடுவதும் , கையை திருகி கொண்டு இரு சக்கர வண்டி ஓட்டுவது போல் விளையாடுவதும் இயற்கை. அந்த ஆசிரியரின்  வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒருவன் மதிய உணவு இடைவேளை மற்றும் சந்தர்ப்பம் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எல்லாம் பஸ் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளான். இதுவல்ல விசயம். அவன் கையில் கைக் குட்டையை சுற்றிக் கொண்டு வட்டையை சுழற்றுவது போல பாவனை செய்து பேருந்தை பாம் பாம் பீ பீ என சத்தம் கொடுத்து  இயக்கி உள்ளான். பேருந்து இயங்கத் தொடங்கிய சிறிது நேரம் கழிந்த பின் கை குட்டையை காதில் வைத்து , “ ஹாலோ, நான் தான் ரவி பேசுறேன்.. அனுப்பானடியில இருக்கேன்.. இன்னும் பத்து நிமிசத்தில வந்திடுவேன்.. சாவு கிராக்கி வண்டியில மோதுர மாதிரி வற்ரான் பாரு..”( கையை வட்டையை பிடித்து சுழற்றுவது போல பிடித்து கொண்டு , இப்போது கைக் குட்டை காதிற்கும் தோள்பட்டைக்கும் நடுவில் கழுத்து  சாய்த்து கைக்குட்டை கீழே விழாமல் இருக்க ) பேருந்தை இயக்குகிறான் என்று சொன்னார்கள். சமூகத்தில் செல் போன்  ஓட்டிக் கொண்டு வண்டி ஓட்டுவது பெருகி , அது நவீன காலத்தின் கலாச்சாரமாக மாறி , அப்பழக்க வழக்கம் ஆபத்தை உணராமல் குழந்தைகளுக்கும் தொற்றி வருவதைக் கண்டு ஆசிரியர் வருந்தம் தெரிவித்தார்.

     இந்நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் கவிழ்ந்த பேருந்துக்கான காரணங்களில் ஒன்றாக கூறப்பட்ட செய்தியை எனக்கு நினைவூட்டியது. ஆசிரியரின் உரை எனக்கு கன்னத்தில் அறைந்தது போலவும் இருந்தது. நானே பல சமயங்களில் வண்டியை நிறுத்தாமல் செல் போன் பேசிய நிகழ்வுகள் வந்து சென்றன. தருமி அய்யா அவர்கள் செல்போன் பேசிய பெண்ணுக்கு அறிவுரைக் கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது.

      சமூக நிகழ்வுகள் நம் சந்ததிக்கு விட்டுச் செல்லும் எச்சங்கள் பயனுள்ளதாக அமைய நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். சமீபத்திய சர்வே படி இரண்டு லட்சத்து எண்பதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஹெல்மட் அணியாமல் தமிழகத்தில் வண்டி ஓட்டுவதாக கூறுகிறது. வாகன்ங்கள் ஓட்டும் போது செல் போன் பேசுவோர் எண்ணிக்கை அதையும் தாண்டும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
செல் போன் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுவது, ஹெல்மட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவது, சாலையில் வண்டியை கவனிக்காமல் செல் போன் பேசிக் கொண்டே சாலையை கடப்பது, டீக்கடையில் குடிக்கும் நெகிழிக் கோப்பையை ரோட்டில் தூக்கி எறிவது, நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரத்தில் சிறுநீர் கழிப்பது , எச்சில் துப்புவது, பலர் முன்னிலையில் மூக்கை நோண்டுவது என  இன்னும் தவறுகளாக எடுத்துக் கொள்ளப்படாத தவறுகள் , அல்லது கலாச்சரமாகப் பின்பற்றப் படும் தவறுகள், தவறுகள்  என உணரா தவறுகள் தினம் தினம் குழந்தைகள் மனதில் படியும் போது அவை தன்னையறியாமல், அதன் விளைவுகளை பற்றி சிந்திக்காமல், அவற்றை நவீன காலத்தின் நாகரீக பழக்க வழக்கங்களில் ஒன்றாக பின்பற்றுவது வருத்தம் அளிக்கிறது.

    இவை தொடருமானல்,  குழந்தைகள் எதிர்காலம் இன்னும் மோசமானதாகவும்,  குற்றங்கள் நிரம்பியதாகவும் இருக்கும் என்பதை மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.  

Friday, June 29, 2012

சுரேந்திர பாபுவின் கவிதைகள்



என் நண்பரும், என்னை மெருகேற்றியவர்களில் ஒருவருமான மதிப்பிற்குரிய திரு. வே. சுரேந்திரன் (எ) பாபு அவர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தேன். எங்களின் பல நினைவுகளை வெளி கொண்டு வந்தது அந்த சந்திப்பு. அப்போது பேச்சுவாக்கில் தன் மகளுக்கு கல்லூரி போட்டிகளில் எழுதி கொடுத்த கவிதையை மீண்டும் நினைவு கூறி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அக் கவிதைகளை உங்கள் பார்வைக்கு இங்கு வைக்கிறேன்…தங்களின் கருத்துக்கள் அவருக்கு மேலும் உற்சாகம் ஊட்டி அவரை பிளாக் எழுத தூண்டலாம்.

பெண்கள்


பெண்கள் நாட்டின் கண்கள்….
வீட்டின் விடி வெள்ளி
சம்பந்தமில்லா ஆ(ண்)ணை சம்பந்தம் பேசி
வாழ்க்கையை தொலைத்தவர்கள்…
பாரதி கண்ட பெண்கள் நிறைய உண்டு…!
அதில் குறைவில்லை..!
விழிப்புணர்வு தத்துவத்தை அறியா மடமைகள்
மாமியாரும் பெண் தான் என உணரா புதுமை விரும்பிகள்…!
வெறும் பேச்சுகளை பேசும்.. விட்டில் பூச்சிகள்
பத்து விரல் மோதிரம் போட நினைப்பவர்கள்
20 விரல்களில் ஓங்காரத்தை உணரா பதுமைகள்
பட்டிமன்ற பேச்சை வீட்டில் மறந்தவர்கள்..!
5நபர்கள் கூடி 6வது நபரை புரம் கூறுபவர்கள்
கழுத்துக்கு சங்கிலியை உணர்ந்தவர்கள்
சங்கிலித் தொடர் வாழ்க்கையை உணராதவர்கள்..!
அண்ணன்களை நினைத்து …
வானத்தில் சந்திரனை எட்ட நினைப்பவர்கள்
கட்டியவனை நினைத்தால்…
கொடுமையென
பாலை தயிராக்கியவர்கள்!
சகோதரன் சொன்னால் சரி
அதை சந்ததியை உருவாக்கிய
கணவன் சொன்னால் தப்பு என்பார்கள் …!
பாரதியின் கண்ணம்மா போல் சிலர் உண்டு
திருவள்ளுவனின் வாசுகியைப் போல் நமக்கு வேண்டும்..
நைட்டிங்கேல் அம்மையாரை போல பெண்கள் கிடைப்பது அரிது
அரிது… அரிது…
பெண்ணே நீ வாழ் மற்றவரையும் வாழ நினை…!

ஆதிவாசி

சுவாசத்தை அறியா நிம்மதி சுவாச காற்றுகள்
உடை அணியா.. நம் முன்னோர்கள்
எதிர்கால சிந்தனையில்லா மடையர்கள்…
ஆனால் உண்மை தத்துவங்கள் ..!
நடந்தே பொழுதை கடத்தியவர்கள்
மிருகத்தின் கொடுமையை வென்றவர்கள்
மனித மிருகத்தை அறியா பச்சிலங் குழந்தைகள்..!
உலகின் அடிப்படை வேர்கள்
காலத்தின் அடிச்சுவடுகள்..
இன்றை படித்த அறிவாளிகளுக்கு
ஆராய்ச்சி பொக்கிசங்கள்..!
மண் ஆசை , பெண் ஆசை அறியா
தாமரை இலை தண்ணீர்கள்….!
கடமை தெரியாது
கண்டதே கோலம் என வாழ்ந்தவர்கள் 
மறக்க முடியாத
மன்னிக்க முடியாத
ஆனால் மனிதர்கள்..!

 

சுரேந்திர பாபுவின் கவிதைகள் இன்னும் பல உள்ளன. அவை தொடர்ந்து அறிமுகப் படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.    

Monday, June 4, 2012

மழை இரவு




மழை தூர ஆரம்பித்த
இரவொன்றில்
நான் கரைந்து கொண்டிருந்தேன்
உன் கை பட்டு.

தீ மூட்டாமல்
நீயும் நானும்
சூடாகிப் போனோம்
நம் மூச்சுக் காற்றில்
இருள் முனங்கிக் கொண்டிருந்தது.

உன் கரங்களை
தூரிகையாக்கி
என் முதுகில்
ஓவியம் வரைந்தாய்
வியர்வை அழித்த
அவ் ஓவியம்
இன்னும் என் நினைவலையில்
அழியாமல்.

மழை இரவு
இன்னும் எரித்துக் கொண்டிருக்கிறது
உன்னையும் என்னையும்.

Monday, April 16, 2012

எரிகற்கள்…


சுமந்து வரும்
புத்தகப் பை
சுட்டிக்காட்டுவது
அவனின் மனச்சுமையையும் தான்…!

எத்தனையோ அடக்கு முறைகளையும்
அதன் விளைவுகளையும்
கற்றுத் தரும் ஆசிரியருக்கு
ஏன் புரியவில்லை
அவர்களின் அடக்கு முறை…!
வகுப்பறைகளில்
ஆசிரியர்களின் சூரிய வட்டத்தில்
நட்சத்திரங்களாய் ஜொலிக்கும்
மாணவர்கள்…
வெளியில் வந்தவுடன்
எரிகற்களாய்
இலக்கை அடையும் முன்
எரிந்து சாம்பலாவது ஏன்..?


புரியாத குறியீடுகள்


வகுப்புகள் தொடங்கின
வழக்கமாக கத்தும் காக்காயும்
சரியான நேரத்திற்கு கத்த துவங்கியது….
காக்காயை பார்க்கும் போதெல்லாம்
ஏமாந்த காட்சி தான் நினைவுக்கு வருகிறது
நரித்தனம் இல்லாத மனிதர்கள் யார் ?
இன்னும் பாடம் நடத்தி முடியவில்லை…
எந்த வித முன்னெச்சரிக்கையும் இன்றி
கவருடன் வந்த தலைமையாரிசியை
பைன் வாங்குவது நல்ல விசயம் தான்
நீங்கள் திருந்த கொடுக்கும் வாய்ப்பு
யாரோ தவறாக தகவல் கொடுத்துள்ளார்கள்
நீங்கள் யாரும் விசாரித்தால்
பைன் வாங்குவதில்லை என கூறுங்கள் என்றார்
காகம் இன்னும் கரைந்து கொண்டிருந்தது
கணித குறியீடுகள் புரியாத மாணவர்கள்
மேலும் குழம்பிப் போய் இருந்தனர்
காந்தி மட்டும் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தார்
சத்தியமேவ ஜெய
எந்த மாணவனும் சுயசரிதையை வாசிக்க பயப்படுகிறான்
உண்மைகள் மறைந்த உலகில் …! 

Thursday, April 12, 2012

இலையுதிர் காலம்


   பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் உள்ள இடைவெளி தான், நம் வாழ்வை நிர்ணயிக்கிறது. இந்த இடைவெளி வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு இடமளிக்கின்றன. நாம் வாழும் சூழல், சூழல் வாயிலாக ஏற்படும் பயணம் , அதன் நீட்சிகள்  வாயிலாக இந்த இடைவெளி நிரப்பப்படுகிறது.  

   வாழ்வில் நாம் பல தரப்பட்ட விசயங்களை சந்திக்கின்றோம். அவைகள் வாயிலாக நாம் எதை கற்றுக் கொண்டோம் என்பது தான் நம்மையும் , நம் வாழ்வையும் தீர்மானிக்கும். நம் செயல்கள் தான் நம்மை உலகுக்கு அடையாளம் காட்டுபவை. நம் வெற்றி தோல்விகள் என்பவை நம்மை உலகில் தக்க வைத்துக் கொள்ள நாம் நடத்தியுள்ள (நல்ல அல்லது கெட்ட) செயல்களின் விளைவுகள். இவை நமக்கு மட்டுமே பலன் தருபவை. இதற்கும் அப்பாற்பட்டது தான் நம்மை உலகுக்கு அடையாளப்படுத்துப்பவை.

   நான் சிறுவனாக இருக்கும் போது , ஜன நெருக்கமான , குறுகலான சந்துகளை கடந்து தான் பள்ளியை அடைய நேரிடும். மதுரை காமராஜ புரம் என்றாலே அனைவருக்கும் ஒரு வித பயம் தான் . நான் குடியிருந்த பகுதி ராம் தியேட்டர் பின்புறமாக உள்ள சி.எம்.ஆர் ரோடு. ராம் தியேட்டர் ஓட்டியுள்ள பீ சந்து வழியாக தான் கடக்க வேண்டும் . இல்லையென்றால் பள்ளிவாசல் தெருவை கடந்து வந்து , பின் மார்க்கெட் அடைந்து, பால ரெங்கா புரம் ஆஸ்பத்திரியை ஓட்டியுள்ள சந்து , பின் ஆஸ்பத்திரியின் எதிர்புறம் பயணித்து கார்பிரேசன் மருத்துவமனை,  குயவர் சாலை வழியாக செயிண்ட் மேரிஸ் .

   பீ சந்தை கடக்கும் போது குடலை பிரட்டி வரும். அதுவும் பெண்கள் பேசும் வசவுகள் காதுகள் கூட அழச் செய்யும். “நல்ல பார்த்துட்டு  போங்கடா… உங்க ஆத்தாகிட்ட இருக்குறது தான்…”. “மசிறுதான்டா தெரியும் … தே..பயலே..” “ நல்ல தூக்கி காமிடி … பார்த்துகிட்டு போயி ..அடிச்சுகிட்டு திரியட்டும்…”. “யேய் …ஆளுங்க வர்றானுங்க எந்திருச்சு நில்லுடி..” இவை எங்களுடன் வரும் வளர்ந்த பசங்களுக்கும் , வாட்ட சாட்டமான ஆள்களுக்கும் கிடைக்கும் வசனங்கள்.  இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் எட்டாம் வகுப்பு வரை கடந்து சென்றுள்ளோம். எட்டு வருடமாகியும் அந்த குடலை பிடுங்கும் வசவுகளும் நாற்றங்களும் மறைந்த பாடில்லை. பொது கழிப்பிடம் தான் அரசு சார்பில் பெருகின. இருந்தாலும் இயற்கையாக இருந்து பழகிய அவர்கள் இயல்பை மாற்றிக் கொள்ள வில்லை. அதற்கு அருகில் ஒரு திருமண மண்டபம் கட்டிக் கொடுத்தார்கள். அது திருடர்கள் மற்றும் குண்டர்களின் கூடாரமாக தான் இருந்தது. அதனாலும் அவர்களை ஒன்றும் செய்ய வில்லை. அதனை ஓட்டியுள்ள இடத்தில் தான் காய்கறி மார்க்கெட். இருந்த கையோடு , காய் வாங்கி செல்லும் பலரை பார்த்து வியந்துள்ளேன். என் வீட்டிலும் அங்கு தான் காய் வாங்குவார்கள் !

    நேற்று என் பள்ளியின் உதவி ஆசிரியை மாலை அரைமணி நேரம் முன் கூட்டியே செல்ல அனுமதிக் கேட்டார். ஏன் என்றேன். என் தோழி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டார் என்றார்.
நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக நானும் ரமேஷ் என்ற மூத்த மாணவனும் பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தோம். நாங்கள் பள்ளி செல்லும் போது சாலை ஓரங்களில் உள்ள வீட்டின் படிகளில் ஏறி இறங்கி பயணிப்போம். அதில் எங்களுடன் கிருஷ்ண குமார் என்ற நண்பன் வந்தால் மிகவும் ஜாலியாக இருக்கும். அவன் படிகளில் ஏறும் போது காலிங் பெல் அடித்து விடுவான். இது தெரியாமல் எங்களை போலவே விளையாடி வரும் பள்ளி செல்லும் மாணவர்கள் பல சமயங்களில் மாட்டிக் கொண்டு வசவு வாங்கியுள்ளார்கள். சில சமயங்களில் படிகளில் ஏறும் போதே எங்களை விரட்ட காத்திருக்கும் ஆட்களும் உண்டு.
அன்று பாலரெங்காபுரம் ஆஸ்பத்திரி எதிர் புறமுள்ள சந்தில் சென்று, கல் சந்தை ஓட்டி திரும்பும் போது உடலில் தீ பற்ற வைத்து கொண்ட ஒரு ஆண் எங்களை நோக்கி ஓடி வந்தார். கண் முன் உடலில் தீ எரிகிறது. செய்வது அறியாது அப்படியே நின்றோம். அவர் அலறிய படி அம்மா தாங்க முடியல… தாங்க முடியல.. என சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டினுள் நுழைந்து நீர் உள்ள அண்டாவுக்குள் தன் தலையை  நுழைக்க முயன்ற போது சரிந்து விழுந்தார்.  வெந்த சதைப்பிண்டமாக பார்த்த காட்சி இன்னும் கண் முன் நிற்கிறது. மண்டை ஓடு பொரிந்து சதைகள் வெந்து தொட்டால் ஓட்டும் நிலையில் இருந்தது. எவரும் அருகில் வரவில்லை. மண்ணெண்ணெய் நெடி மட்டும் உடலில் இருந்து வந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்த ஒரு தடியாள் எங்களை போங்கடா என விரட்ட நாங்கள் மௌனமாக நகர்ந்தோம்.

    தீ காயம் என்றவுடன்  என் நினைவுகள் என்னை வாட்டி விட்டது. சரி சென்று வாருங்கள். பயந்து விடாதீர்கள் . மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். வீட்டுக்காரர் வேலைக்கு செல்ல வில்லை, வேலைக்கு போக சொல்லி சண்டை . அவரு போன பின்னாடி மண்ணெண்ணெய் ஊத்திகிடுச்சு  என்றார்.
                                               தொடரும்…

Wednesday, March 21, 2012

விகடன் ரீச் உண்மையிலே ரிச் !


   கடந்த வாரம் ஆனந்த விகடன் என் விகடனில் என் பிளாக் அறிமுகம் செய்யப்பட்டது. 
   பல பணிகளுக்கு இடையில் பிளாக் பக்கம் வர இயலவில்லை. விகடன் வாயிலாக என் பள்ளியில் 1978 படித்த சோம சுந்தரம் என்ற பழைய மாணவர் சிங்கப்பூரில் இருந்து தொடர்பு கொண்டார். அவர் தான் படித்த போது அவரின் ஆசிரியையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அனுப்பி தன் நினைவுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

    ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து ரத்தின வேல் அய்யா விகடன் பார்த்து முதலாவதாக வாழ்த்து தெரிவித்தார். என்னையும் என் எழுத்தையும் செம்மைப் படுத்தி ஒரு நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்று துடிக்கும் என் இனிய நண்பன் சகோதரன் கா. பா குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

   பல ஆசிரிய நண்பர்கள் விகடன் மூலமாக நான் பிளாக்கில் எழுதி வருவதை அறிந்து மகிழ்ந்தார்கள். என்னுடைய முன்னாள் நிர்வாகி திரு ராஜா அவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அல்லாமல் நான்கு ஆனந்த விகடன் வாங்கி கொடுத்து அதிகாரிகளிடம் தெரிவிக்க சொன்னார்.

   என் குடும்ப நண்பர் மற்றும் தற்போதைய பள்ளி நிர்வாகி திரு சுரேந்திரன் எ பாபு அக மகிழ்ச்சி கொண்டதுடன் ,  2002 ல் வெளியிடப்பட்ட படைப்பான “நீங்களும் முதல்வராகலாம்” என்ற புத்தகத்தை நினைவில் கூர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன் , பெங்களூரில் உள்ள தன் மகளிடம் பகிர்ந்து கொண்டு நெட்டில் படித்து வாழ்த்துக்களை தெரிவிக்க சொன்னார்.

    இப்படி பல வாழ்த்துக்களை சொல்லிக் கொண்டே செல்லலாம்.  அத்தனை ஆனந்தத்திற்கும் ஒரே காரணம் ஆனந்த விகடன் மட்டுமே…!

   ஓரே வரியில் நன்றி என்று சொல்லி விட மனமில்லை. என் மகிழ்வுக்கும் என்னுடைய எழுத்தின் விரிவுக்கும் அதன் பின் உள்ள மகத்துவத்திற்கும் , என் பணியின் ஆழத்திற்கும் உள்ள உன்னத தொடர்பை எடுத்து கொடுத்த ஆனந்த விகடனுக்கு என் வாழ் நாள் முழுவதும் கடமைப் பட்டவனாவேன்… !

ஐ லவ் விகடன்…!


இந்த வாரம் பாவா சொன்னது போல அதன் ரீச் உண்மையிலே ரிச்.  

Friday, March 9, 2012

நைஜிரியா ராகவனுக்கும் 2ஜி அலைக்கற்றைக்கும் உள்ள தொடர்பு - புதிய தகவல் உடனே படியுங்கள்


 “சொற்கள் மூலமாக இந்த மனித குலம் முழுவதையும் வியாபித்திருப்பேன்”- சார்த்தர்.

     தன் நட்பு மூலமாக உலகம் எங்கும் தன்னை விரிவுபடுத்தியுள்ள  மனிதர்களில் ஒருவர்  நைஜிரியா ராகவன். சென்னை வந்து ஒன்பது மாதங்கள் ஆகிய நிலையில் தன் சொந்த பயணம் காரணமாக இராமேஸ்வரம் சென்று திரும்புகையில் மதுரையில் கா.பாவின் புண்ணியத்தில் மடக்கினோம்.

     கார் டிரைவர் இல்லாத சூழலில் தானே கார் ஓட்டி வந்ததாலும், ஓய்வு எடுக்கும் சூழலில் மதுரை மீனாட்சியின் அருளில் மதுரையில் அவசியம் தங்க  வேண்டியாகி விட்டதாலும் நைஜிரியா ராகவனை பார்க்கும் வாய்ப்பு சீனா, சுந்தர்(சித்திரை வீதிக்காரன்), கா.பா, தருமி மற்றும் எனக்கு கிட்டியது.
 .
     அரவிந்த் சென்ற முறை வந்த போது இருந்ததை விட மிகவும் துடிப்புடன் என்னுடன் உரையாற்றினான். ஆழமான விசயங்களை பற்றி மிகவும் அழுத்தமாக எடுத்து உரைத்தான்.

     தருமி அய்யா விலங்கியல் துறை சார்ந்த பேராசிரியர் என்று அறிந்த வுடன் , நைஜிரியாவில் காமர்ஸ் குரூப் படிப்பில் பையாலஜி சேர்த்துள்ளார்கள் ஏன் ? என கேள்வியை முன் வைத்தான். காமர்ஸ்க்கும் பையாலஜிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டான்.

     நம் கல்வி முறையில் மதிப்பெண் அடிப்படையிலே மட்டுமே +1 குரூப்பில் சையின்ஸ் மற்றும் பிற குரூப்கள் ஒதுக்கப்படுகிறது. மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு பள்ளியில் இடம் கிடையாது. இப்படி மதிப்பெண் அடிப்படையிலேயே பள்ளியின் தரத்தை உயர்த்துகிறார்கள் என குற்றம் சாட்டினான். (நல்ல சிந்தனை … தாய்யை போல பிள்ளை … மன்னிக்கவும் தந்தையை போல தான் அறிவு அமைந்திருக்கும்.)இந்தியாவின் கல்வி முறையை சாடினான்.

     அய்யா தருமிக்கு அதற்கான விடை தெரியவில்லை. சித்திரை வீதி சுந்தர் உடனே ஈ காமர்ஸ் பேப்பர் இருக்குல்ல… அதுனால ஈ யை பற்றி படிக்க பையோ சயின்ஸ் வைத்திருப்பார்கள் என கடித்தார். ( தருமி ரசித்தார்)

     மாணவர்கள் தங்களின் சுற்றுப்புறம் மற்றும் தங்கள் நாட்டில் உள்ள உயிரினங்கள் பற்றி அறிய அதனை ஒரு பாடமாக சேர்த்து இருப்பார்கள் என்றேன்.

     நம் மண்ணில் விளையும் பயிர்கள் பற்றி இன்றைய மாணவர்களுக்கு தெரியவில்லை. நாம் நம் மண்ணை மறந்து திரிகிறோம். நம் மண் வளத்தை அறிய முற்படுவதில்லை. சாதரணமாக  ஜன்னலில் வந்தமர்ந்து குரல் எழுப்பி நம் தனிமையை இனிமையாக்க தன் குரலில் இசைக்கூட்டி அறிய வைக்கும் எந்த பறவையின் பெயரும் நமக்கு தெரிவதில்லை.
தருமி அய்யா தன் பேத்திக்கு, அமெரிக்காவில் சவுத் , நார்த் அமெரிக்காவினை பற்றி கற்று தருவதை சுட்டிக் காட்டினார்.  அது கூட அந்நாட்டின் வளத்தையும் சுற்று சூழலையும் அறிந்து கொள்ள கற்று தருகிறார்களோ என்று ஐயத்துடன் பதிலளித்தார்.

     சாருவின் எக்ஸைல் பற்றி நான் நல்ல முறையில் விமர்சித்தேன். ராகவன் எனக்கு சாருவை மிகவும் நன்றாக தெரியும். நேரடி தொடர்பு உண்டு , நீங்கள் வாசகர் வட்டத்தில் இருந்தாலும் , அவரை நான் ரசித்து படித்துள்ளேன். எக்ஸைல் பற்றி தவறான கருத்து நிலவுவதை தனக்கே உண்டான நகைச்சுவை உணர்வுடன் சுட்டிக் காட்டினார். . அதற்கு நான் விளக்கம் அளிக்கும் போது கா. பா வந்து விட்டார். நான் இலக்கியம் பேசுவதை நிறுத்தி விட்டேன். (நண்பர்களுக்குள் சண்டை எதற்கு?)

     கா.பா வந்தவுடன் பின் நவீனத்துவம், போஸ்ட் மார்டனிசம் , மாஜிக்கல் ரியாலிசம் என பல்வேறு இசங்களை பற்றி விளக்கமளித்து சுந்தருடன் கலந்துரையாடினார்.

     ரம்யா அக்கா வீட்டு கிரக பிரவேசம் பற்றி பேச்சு வந்தது. சாரி போன் வந்தது . கா. பா இந்த வார ஆனந்த விகடனில் மகளிர் தினத்தை முன்னிட்டு ரம்யா அக்காவின் தன்னம்பிக்கை பற்றி அழகாக எழுதியிருப்பதை நினைவூட்டினேன். ராகவன் அண்ணன் கா.பா வின் மகளீர் தின  பக்கங்களை பி.டி.எப் பார்மெட்டில் சேகரித்து ரம்யா அக்காவிற்கு மெயில் அனுப்பினார்.

     அட இப்படி தானுங்க … மின்சாரம் அற்ற வெப்பம் உமிழும் இரவுகளில் யாரையோ பற்றி எழுத வந்து..எதையோ எழுதும் போது மௌனியின் சுந்தரி  கதை ஆரம்பம் நினைவுக்கு வருகிறது.

“கோடை மிகக் கடுமையாகக் கண்டு விட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப் பற்றி  யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு யுக்தியாகக் கண்டு விட்டேன். மூளை, மூளையாக இல்லாது, வயல்களைப் போல் கட்டிதட்டிப் போயிருக்கலாம். அல்லது பேனாவின் மசி உறைந்து, எழுத ஓடாதிருக்கலாம். என் எழுது கோலை எடுத்து இரண்டு தரம் வேகமாக உதறியதில் , பேனாவைப் பற்றிய தகராறை ஒருவகையில் தீர்த்து விட்டேன். ஆனால் என் தலையை உதறிக் கொண்டால், பரிதாபம்! பல சிரமங் கொண்டு பன்றிக்கு வாரிவிட்டது போல் படிய வைத்த எனது அழகான கிராப் தலைமயிர் சிலிர்த்து நிற்குமே என்று ஒரு பயம் அடைந்தேன். எனினும், அப்படி இப்படி எழுத ஆரம்பித்து விட்டேன். இப்போது தான் எழுதுவதன் முட்டாள் தனத்தையும் கஷ்டத்தையும் உணர ஆரம்பிக்கிறேன்” – சுந்தரி கதை ( மணிக்கொடி 1936)  

     நீங்க மிரட்டின காலம் போய், பசங்க மிரட்டுர காலம் வந்து விட்டது என ராகவன் சுட்டிக் காட்டினார். ராகவன் எப்போதுமே மனதில் பட்டதை  பட்டாசாக வெடித்து தள்ளுபவர். பழக்கத்திற்கு மிகவும் அருமையான நண்பர். சமூக அவலங்களை எள்ளி நகையாடுவதில் அவருக்கு நிகர் அவரே!

     மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அதில் நானும் கொடுத்து வைத்தவன். பாருங்க, இரவு ஒரு மணிக்கு மேல் முழித்து படித்தாலும் , டைப் செய்தாலும் தொந்தரவு செய்ய மாட்டாள்..! ( தண்ணி தெளிச்சு விட்டுடாங்கப்பா…என தருமி கமண்டு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை)
  
     ராகவனின் துணைவியார் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் அண்ணாவைப் போல பழகுகிறார். அது மட்டுமல்ல அண்ணாவுக்கு எல்லா விசயங்களுக்கும் ஒத்து போகிறார். புத்தக வாசிப்பு பழக்கம் பற்றி பேச வரும் போது , மிகவும் இனிமையாக , “நான்கு பெட்டி நிறைய புத்தகங்கள் அடுக்கி சேந்தியில் வைத்திருப்பதையும், இரண்டு பெட்டி புத்தகங்கள்  அவரின் நண்பர் வீட்டில் கொடுத்துள்ளார்” என சுட்டிக் காட்டினார். இந்த முறை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க வில்லை என்ற ஆச்சரியத் தகவலையும் கொடுத்தார்.
  
     இரவின் தனிமை என்னை வாட்டுகிறது.. இருப்பினும் ராகவனின் நினைவுகள்  நிலவு ஒளிப்போல என்னை வழிநடத்துகின்றன. அவரின் அன்பில் கரைந்து பெருகி , வெள்ளம் போல மதுரை வீதிகளில் உறக்கம் மறந்து இன்னும் வலம் வருகின்றேன் .   கா.பாவின் மூச்சுக்காற்றில் கரைந்து வெளிவரும்  இலக்கிய சிந்தனைகள் , என்னிடம் மறு சுவாசம் அடைந்து சார்த்தர் படிக்க தூண்டியுள்ளது எனக்கு வியப்பை தருகிறது.  
ஓய்வின்றி உழைக்கும் சீனா அய்யாவின் உழைப்பு , நட்பு பாராட்டும் பண்பு, என்னை நேர்த்தி மிக்கவனாக மாற்றி வருகின்றது. சீனா அய்யா, தருமி அய்யாவின் ஆழ்ந்த நட்பு  கூட ராகவன் அண்ணாவை மதுரையில் தங்க வைத்திருக்கலாம். அரவிந்த் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு அற்புத சக்தி. அவனின் நகைச்சுவை உணர்வு என்னை ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்துச் செல்கிறது.

     கடைசியாக சார்த்தரின் வரிகளுடனே ராகவன் அவர்களை காண்கிறேன்.

“என் சக நண்பர்கள் , நான் புதைக்கப் பட்ட மறுநாளே என்னை மறந்தாலும் , அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. அவர்கள்  உயிரோடு இருக்கும் வரை நான் அவர்களைத் தொடர்வேன், பெயர் இன்றி யாரும் அறியாவண்ணம், எனக்கு தெரியாத மில்லியன் கணக்காய் இறந்தவர்கள், என்னில் அழியா வண்ணம் நான் பாதுகாத்து வருவது போல் நான் ஒவ்வொருவரிடத்திலும் இருப்பேன்”

     ஆம் ராகவனுடன் உரையாடுங்கள்… அவர் நம் நட்பை வருடங்கள் கடந்தாலும் சார்த்தர் சொல்வது போல் பாதுகாத்து வருவது அறிய வரும். அக நக நட்புக்கு ஒரு வாழும் உதாரணம் நம் நைஜிரியா ராகவன் மற்றும் குடும்பத்தார். 

     நட்பு வட்டத்தில் 2ஜி அலைக் கற்றை போல நைஜிரியா ராகவன் மிகவும்  பிரபலமானவர் என்று சொன்னால் மிகையாகாது.