Tuesday, December 17, 2013

11 கோடிக்குழந்தைகள் காப்போம்…. !பீகார் மாநிலம் சாப்ரா அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்தனர். பலர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், மதிய உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அடுத்தடுத்த மிகப்பெரிய அதிர்ச்சிகள் நம்மை வந்து தாக்கிக் கொண்டு இருக்கின்றன. இதற்கிடையில் பீகார் மட்டுமல்ல, பல மாநிலங்களில் தலைமையாசிரியர்கள் உணவை சாப்பிட்டு  பார்த்த அரைமணி நேரத்திற்கு பின் தான் மதிய உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பையும் , பல இடங்களில் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பீகார் ஆசிரியர் சங்கம் மதிய உணவு அளிப்பதை தனியாக எஜென்சி கொண்டு செயல்பட வலியுறுத்தியுள்ளது.


12 இலட்சம் பள்ளிகளில் 11 கோடி குழந்தைகள் சமைக்கப்பட்ட மதிய உணவை உண்கிறார்கள் என புள்ளி விபரம் தருகிறது, மனிதவள மேம்பாட்டுத் துறை. மதிய உணவு திட்டத்தில் ஊழல் புரையோடியுள்ளது , தரமான உணவு பொருடகள் வழங்குவது இல்லை, உணவு பொருட்களை பாதுகாக்க தகுந்த இடங்கள் போதுமானதாக இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் நாடுமுழுவதும் இருந்தாலும் , தமிழ்நாட்டை பொறுத்தவரை மதிய உணவு திட்டம் சிறப்பாக செயல்படுகிறது என்பது தான் உண்மை.

கர்மவீரர் காமராஜர் ஏழைக்குழுந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை இயக்குனர் நெ.து. சுந்தரவடிவேலுவிடம் பள்ளிக் கூடங்களில் அனைத்து குழுந்தைகளுக்கும்  இலவச மதிய உணவு வழங்குவது பற்றிமுதன்முதலாக ஆலோசித்தார்அதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையை கூட்டி ஆலோசித்து, வருவாய்த் துறையினரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து , 1955 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் மதிய உணவு திட்டம். இது மறைந்த முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின் வாரம் ஒரு முட்டை என இருந்தது, வாரம் இரண்டு ,மூன்று  என உயர்த்தப்பட்டு, இப்போது வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கப்படுகின்றன.(முட்டையின் எடை குறைந்தது 46 கிராம் இருக்க வேண்டும்)
இதுதவிர கொண்டைக்கடலை , வேக வைத்த பாசி பயிறு , உருளைக்கிழங்கும் வழங்கப்படுகின்றன.  
தமிழ்நாட்டில் ஏறக்குறைய 55 இலட்சம் மாணவர்கள் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.
இந்தியா முழுவதும் இத்திட்டத்தினால் ஏழை மாணவர்கள் , குறிப்பாக பெண்குழுந்தைகள் உணவுக்காக பள்ளிக்கு செல்கின்றனர். மதிய உணவு அக்குழந்தைகளின் உடல் நலதிற்கு போதுமான சத்துக்களை வழங்குவதுடன், அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், நாள்தவறாமல் பள்ளிக்கு வருகைபுரியவும் வகை செய்கிறது.
 ப்ரோப் (Public Report on Basic Education ) அறிக்கையான கூறுவதுயாதெனில், 84% குடியிருப்புகள் தங்கள் குழந்தைகள் மதிய உணவு பெறுவதாகவும், அங்கு வழங்கப்படும் வேறுபட்ட மெனுவை விரும்பி சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முன்னும் பின்னும் கை கழுவும் பழக்கத்தை பள்ளியில் கற்றுக் கொடுத்துள்ளனர். பள்ளியில் சேர்க்கையும் அதிகரித்துள்ளது என்கிறது. அசர் (Annual Status of Education Report ) 83.4% பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது (ஒருநாள் பார்வை) , ஏறக்குறைய அதே அளவில் 81.3% பள்ளிகளில் சமையல் கூடங்கள் உள்ளன. பரவலான மேம்பாட்டுடன் கிடைக்ககூடிய மதிய உணவு பள்ளியின் வருகையை அதிகரித்துள்ளது என்கிறது.


இத்திட்டம் இன்னும் வெற்றிக்கரமாக நடைப்பெற உணவு பொருட்கள் பலகட்ட சோதனைகளுக்கு பின்தான் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு பள்ளிகளில் வந்திறங்கும் உணவு பொருட்களை பாதுக்காப்பாக வைக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விலங்குகள் , பூச்சிகள், புழுக்கள் ஆகியவை உணவு பொருட்களை சேதப்படுத்தாத வகையில் உணவு பாதுகாப்பு கூடங்களை உருவாக்க வேண்டும். (உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கும் குழந்தைகளுக்கு தரமான ஆரோக்கியமான உணவினை வழங்குவதற்காக  5.77 இலட்சம் பாதுகாப்பு வசதியுடன் கூடிய சமையல் கூடங்கள் அமைக்க மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது ).மாவட்ட தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டிலுள்ள சத்துணவு திட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சேமிப்பு கிடங்குகளிலிருந்து உணவு பொருட்கள் மதந்தோறும் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முன் , கிடங்குகளில் உணவு பொருட்களின் தன்மை பரிசோதிக்கப்பட வேண்டும். இவ்வாறன பரிசோதனை  நல்ல தரமான உணவு பொருட்களை வழங்கி , அதன் வாயிலாக தரமான உணவை மாணவர்களுக்கு வழங்க உதவிடும்.  
எது எப்படியோ இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.  22 ஜீலை 2013 ல் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கைட்லைன் படி (F.NO. 1-4/2013 DESK (MDM) DEPARTMENT OF SCHOOL EDUCATION & LITERACY) தினமும் ஒரு ஆசிரியர் மற்றும் அவருடன் பள்ளியின் கல்விக்குழு உறுப்பினர் வீதம் உணவை சாப்பிட்டு பார்த்த பின்னர் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். உணவு தரம் குறித்து தனியான நோட்டு போடப்படவேண்டும். இது உணவை தரமாக மாணவர்களுக்கு வழங்கிட உதவும்.
அக்கையேட்டில் தமிழ்நாட்டில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
   


நம்  குழந்தைகள் அவர்களின் வளமான வாழ்விற்கு, பிரகாசமான எதிர்காலத்திற்கு உணவை ருசித்தப்பின் வழங்குவது நமக்கு கஷ்டமல்ல.  இக்கட்டுரையை எட்டையாபுரத்தில் காமராசர் மதியஉணவுதிட்டத்தில் பேசிய உரையுடன் முடிப்பது சிறந்தது. "அன்னதானம் நமக்குப் புதிதல்லஇதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவுஅளித்தோம்இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம்இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம்,படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும்எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விடஎனக்குமுக்கியமான வேலை வேறு இல்லைஎனவேமற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுஊர்வலமாக வந்துபகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்."
  
க.சரவணன்,பி.எஸ்.சி.,எம்.ஏ.,எம்.எட்.,
தலைமையாசிரியர்,
செல்; 934124572

இக்கட்டுரை மாணவர் உலகம் இதழுக்காக எழுதியது. 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான சிறப்பான கட்டுரை...

வாழ்த்துக்கள்...

Post a Comment