Friday, January 3, 2014

இந்த வருடத்தின் முதல் நாள்.. கடவுளே காப்பாத்து...!

        பள்ளி துவங்கிய புதுவருடத்தின் முதல் நாள் வெகு இயல்பாக, இயல்பை காட்டிலும் கூடுதலான மகிழ்வுடன் கழிந்தது. சார், கிறிஸ்துமஸ் அன்று சன் டிவியில் சாண்டா வந்து நான் எழுதி கேட்டு இருந்த டிராயிங் புத்தகத்தை தந்தார் என்றான் மணி. 

”அட பரவாயில்லையே. என்னை டிவியில பார்க்கலையா?” ( ஏண்டா வெட்டி பயளே நீ மட்டும் டிவியில வந்த நாங்க பார்கணும் ? மைண்டு வாய்ஸ் பேசியது)

“ சார் ... ஏசு மனிசன் தானே? ”என கேட்டான் கார்த்தி.

“சார் ஏசு போல நபிகள் நாயகமும் மனிசனா தானே வந்தார்!” என்றான் இப்ராஹிம்.

”சார் , கிருஷ்ணன் கூட மனுசன் தானே?” என்றாள் செல்வராணி. ரிசானா ,” சார்... ஏசு, நபிகள் நாயகம், கிருஷ்ணண் எல்லோரும் கடவுள் தானே? “.
“ ஆம்” என்றேன்.


   

தேவதர்ஷினி என் சிந்தனையை தூண்டும் ஒரு கேள்வியை கேட்டாள். “ சார்.. அவுங்க எல்லாம் சாமி தானே சார்.. மக்கள் கஷ்டம் போக்க வந்தவங்க தானே சார், ஏன் சார் சாமியாவே வந்து நமக்கு உதவியிருக்கலாம் இல்ல...ஏன் மனிசனா வந்தாங்க...?”

“சார்.. அதானே !”என்றான் கார்த்தி.

யுவராஜ், “ சாமிய எல்லாம் தப்பா பேசக்கூடாது... சார் கிட்ட மன்னிப்பு கேளு... சார் மூளையை போட்டு குழப்பிக்காதீங்க...தமிழ் முதல் பாடாம் நூறு வயது தருவன படிப்போம்...”

“சார் ,எனக்கும் அதே டவுட்டு தான் சார்... கடவுள் ஏன் சார் மனுசனா வரணும்.. அரக்கன் ,பேய் எல்லாம் மனுசன் மாதிரி இல்லையே.. மனுசனா இருந்தாலும் கொம்பு வச்சு எதாவது மிருகம் சாயல்ல தான் இருக்காங்க..” என தனக்கே உரிய புன்முறுவலுடன் மணிப்பாண்டி தன் அறிவை வெளிப்படுத்தினான்.

தெளிவான சிந்தனை கொஞ்சம் யோசிங்க .. விடை கிடைத்துவிடும் என்றேன்.

“ சார்... கோவிலுக்கு போனா பொங்கல் தர்றாங்க... சர்ச் போனா அப்பம் தர்றாங்க... மசூதிக்கு போனா குர்பானி கறி , நோம்பு கஞ்சி, பிரியாணி தர்றாங்க.. “ என்று எப்போதும் போல் சாப்பாட்டு விசயத்தை தெளிவாக பேசி யுவராஜ்ஜை உசுப்பு ஏத்தினான் சஞ்சய்.

“ சார்... கோவிலுக்கு போனா கஷ்டம் தீர்ந்திடும், சாமி கும்பிட்டா நல்லது நடக்கும்....இதில்லெல்லாம் ரெம்ப ஆராய்ச்சி பண்ணக்கூடாது.... நூறு வயது தருவன...பார்ப்போம் “ என மீண்டும் தன் பக்தியை வெளிபடுத்தினான் யுவராஜ்.

அப்போது யோசனை வந்தவளாக” சார், நீங்க காலையில ரவுண்ட்ஸ் போயிருந்தப்ப...மூன்றாம் வகுப்பு டீச்சர் திருப்பதி லட்டு கொண்டு வந்தாங்க... லீவுல.. திருப்பதி போயிருந்தாங்களாம்... டேபிள் ல வச்சுருக்கேன் ...” என்றாள் திவ்யா.

”வாங்க எல்லோரும் பிச்சு திண்ணுவோம்” என்றேன்.

”சார் நாங்க வாங்கி சாப்பிடக்கூடாது” என்றாள் ரிசானா.
”ஏய் அதெல்லாம் ஒண்ணுமில்லே சும்மா சாப்பிடு” என்றான் இப்ராஹிம்.

கார்த்தி அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்க ஆரம்பித்தான்.

மீண்டும் நினைவு வந்தவளாக திவ்யா,” ரிசானா... இரண்டாம் பருவம் கடைசி பரீட்சைக்கு நீ கொடுத்த பேனா .... மறந்திட்டேன்..தாங்க்ஸ்” ” பரவாயில்லை “ என்றாள் ரிசானா.

” சரி எல்லோரும் கவனிங்க... எதுக்கு தாங்க்ஸ் சொன்னே திவ்யா?” என்றேன்.

“சார், என் போனாவில் இங்க் தீர்ந்து விட்டது அதனால், நான் பரீட்சை எழுத போனா வாங்கினேன்...திருப்பி கொடுக்க மறந்துட்டேன்... இப்ப கொடுத்து உதவியதற்கு தாங்கஸ் சொன்னேன்...”

“ கார்த்தி.... சார் எதையோ சொல்ல வர்றார் பார்த்தியா? “ என்றான் பாண்டி.

“சாமிகிட்ட கேட்டா தந்திருக்குமா? மனிசன் கிட்ட கேட்டதால் தானே கிடைச்சுது என சொல்ல வர்றீங்க“ என்றான் கார்த்திக்.

“டேய் சாமி கும்பிட்டு வந்து பரீட்சை எழுதினா..அதனால் தான் தடங்கல் வராமா.. சாமி... ரிசானா மூலமா போனா கொடுத்துள்ளார் சாமி...” என்று தன் பக்தியை வெளிப்படுத்தினான் யுவராஜ்.

” சார்.. மனுசன் தான் இன்னொரு மனுசனுக்கு உதவ முடியும்... சாமி வந்து உதவுறது கஷ்டம்...” என்றான் கார்த்தி.

“சபாஸ்...இப்ப சொல்லு பார்ப்போம்.. சாமி ஏன் மனுசன் உருவத்தில் வருகிறார்...?” என கேட்டேன்.

“மனுசன் மட்டுமே இன்னொரு மனுசனுக்கு உதவ முடியும். உதவிகளால் மட்டும் தான் மனுசன் பயன் பெற முடியும்.. சந்தோசமா வாழ முடியும்“ என்றான் பாண்டி.

“ யுவராஜ் கோபப்படாம கேட்கணும்....தெய்வம் மனுசனா வர காரணம்.. அருகில் உள்ள மனிதர்கள் தான் சக மனிதர்களுக்கு உதவ முடியும். இப்ப எழுத படிக்க தெரியாத ஒருத்தனுக்கு படிக்க உதவும் போது , அவன் வாசிக்கும் போதெல்லாம்.. எனக்கு யுவராஜ் தான் வாசிக்க கத்துக்கொடுத்தான் என சொல்லி மகிழ்வான்...அதேவேளையில் உனக்கும் சந்தோசம்...நம்மால் ஒருவன் பயன்பெற்றுள்ளான் எனும் போது மிக்க மகிழ்ச்சி அடைவாய் . “ என்றேன்.

“ ஆமாம்” என்று தலையசைத்தவாறு யுவராஜ்

”மனுசனா பிறந்து உதவுறவன் தான் சாமின்னு சொல்லுறீங்க...” என்றான். அனைவரும் கை தட்டி... வாடா நூறு வயது தருவன பாடம் படிப்போம் என்றனர்.

நான் இப்போது கதை சொல்ல தொடங்கினேன்.
 

மதுரை சரவணன்.
9344124572

5 comments:

Deiva said...

Very impressing way to explain complex things in simple manner!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பர் அருமை
உதவுகின்றவரே உண்மையான தெய்வம்
த.ம.2

mohamed salim said...

அருமை!! மாணவர்களிடம் குழு சார்ந்த விவாதங்களை ஊக்கப்படுத்தி அவர்களின் சிந்தனையை தூண்டுவது !! மாணவ,மாணவியரை பேச விட வேண்டும் அப்போதுதான் சிந்தனை விரிவடையும் !! நிறைய ஆசிரியர்கள் பேசவே விடுவதில்லை!! பாடம் நடத்தாத பொழுது ஊமையாக்கி உட்கார்த்தி வைத்து விடுகிறார்கள்!! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

/// நம்மால் ஒருவன் பயன்பெற்றுள்ளான் எனும் போது மிக்க மகிழ்ச்சி அடைவாய்... ///

உரையாடல் மிகவும் சிறப்பு... பாராட்டுக்கள்...

Geetha said...

மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்.நல்ல அணுகுமுறை.

Post a Comment