Thursday, December 19, 2013

தமிழகத்தில் சி.சி.இ….. ! மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் சி.சி.இ.


     சி.சி.இ … தமிழக மாணவர்கள் , பெற்றோர்கள் உச்சரிக்க தொடங்கியிருக்கும் வார்த்தை. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்பதன் சுருக்கம் தான் சி.சி.இ. மாணவர்களை ஆசிரியர்கள் இதுவரை முழுமையாக மதிப்பீடு செய்யவில்லையா? அது என்ன தொடர்ச்சி…? என்ற விபரங்களை தெரிந்துக் கொள்ளும் முன் இது எப்படி வந்தது என்று பார்ப்போம்.
ஆர்.டி.இ என்னும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மாணவர்களுக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம் தான் இந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு. சி.சி.இ என்பது கல்வி மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவன் காட்டும் ஈடுபாடு, ஆர்வம், முயற்சி, ஒழுங்குமுறை, செயல்திறன், ஆளுமை வளர்ச்சி என உடல், மனம், சமூகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடுதலாகும்.   
சற்றுப் புரியும் படி சொல்வதென்றால், முழுஆண்டுத்தேர்வு என்று ஒன்றை வைத்து மாணவனின் அடைவுத்திறனை மதிப்பிடுவது  தவிர்க்கப்பட்டு, கற்றல் நடைப்பெறும் போதே மாணவனை தொடர்ந்தும், குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மதிப்பீடு செய்தலாகும். இதனால், மாணவனுக்கு தேர்வு பயம் முற்றிலும் நீங்குகிறது. மாணவன் அறியாமலே, அவன் மதிப்பிடப் படுகிறான். அதனால், ஆசிரியர் அவனின் மதிப்பீட்டை கொண்டு, அவனுக்கு தேவையான உதவிகளை செய்ய முடிகிறது .அதனால் மாணவனின் கற்றல் மேம்பாடு அடைவதுடன் , கற்றலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு, பள்ளி வருகை சதவீதம் அதிகரிக்கிறது. தோல்வியும் தவிர்க்கப்படுகிறது.
   அட ஆமாங்க … பெயில் ஆக்க மாட்டாங்க… சாரி பெயில் ஆக மாட்டான். எத்தனைப் பேர் தோல்வியால் அவமானம் அடைந்து, மீண்டும் அதே வகுப்பில் தன்னை விட வயது குறைந்தவர்கள் அல்லது தம்பியுடன் சேர்ந்து படிப்பதற்கு அஞ்சி அல்லது கூசி  , இடைநிற்றல் () அடைந்துள்ளதை , அதாங்க பள்ளியை விட்டு நின்று விடுவதை , ஓடிவிடுவதை பார்த்திருக்கிறோம். அவையெல்லாம் முற்றிலும் தவிர்க்கப் பட்டு, மாணவன் ஆசையுடன் செல்ல வழிவகைசெய்கிறது இந்த சி.சி.இ.

அது சரி… எல்லாரும் பாஸ் . அப்புறம் எப்படி வாத்தியார்  பாடம் சிறப்பா சொல்லிக் கொடுப்பாரு… பையன் படிப்பான்…ன்னு இழுக்கிறது தெரியுது…! குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அத்தியாம் 4 , பிரிவு 24  படி ஆசிரியர் பள்ளிக்குத் தொடர்ச்சியாகவும் உரிய நேரப்படியும் வருதல், கலைத்திட்டத்தை முடித்தல், முழு கலைத்திட்டத்தையும் வரையறுக்கப்பட்ட கால அளவுக்குள் முடித்தல், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனையும் மதிப்பிடுதல் , தேவைப்படுமானால் கூடுதல் பயிற்சி வழங்கி ஈடு செய்தல், பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளருடன் சந்திப்புக் கூட்டங்கள் நடத்தி, குழந்தையின் தொடர்ச்சியான வருகை, கற்றல் திறன், கற்றலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இதர பொருத்தமான தகவல்களைத் தெரிவித்தல் ஆசிரியரின் கடமை என கூறுகிறது. இக்கடமைகளை செய்யத்தவறினால் அவர் மீது பொருத்தமான பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என உறுதியளிக்கிறது. அது மட்டுமல்ல பிரிவு 29 மதிப்பீட்டு முறை குறித்தும் , அதை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து விளக்கப்பட்டுள்ளது.
அட சட்டத்தை விடுங்க… தற்போதைய கல்வி முறையில் பாட போதனாமுறை செயல்வழிக்கற்றல் முறையை கொண்டுள்ளதால், அதாவது மாணவனை மையப்படுத்துவதாக உள்ளதால், ஆசிரியரை மட்டுமே மையமாக கொண்டு கற்பித்தல் நடைப்பெறாமல், ஆசிரியர் மாணவனுக்கு கற்க உதவியாக இருப்பதால், ஆசிரியர் மாணவர் உறவு சுமூகமாக இருக்கிறது. சக மாணவன் உதவியுடன் கற்பதால் , கற்றல் பயம் நீங்கி, உந்துதல் ஏற்பட்டு கற்றல் இனிமையாகிறது.  அதுவே , ஆசிரியர் அவனின் செயல்பாடுகளை எளிமையாக மதிப்ப்பீடு செய்து, மாணவனின் கற்றல் சிறக்க உதவியாக இருக்கிறார் .

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு இரண்டு பிரிவுகளில்  மதிப்பிடப்படுகிறது. அவை வளரறி மதிப்பீடு(40) மற்றும் தொகுத்தறி மதிப்பீடு(60) ஆகும்.வளரறி மதிப்பீடு(அ) 20 மதிப்பெண்கள் .இதுவே எப்.ஏ. (ஏ) எனப்படுகிறது. கற்றலில் குழந்தையின் தன்னார்வம், பங்கேற்றல், முயற்சி, ஆர்வம், ஈடுபாடு , மகிழ்ச்சி ஆகியவற்றை அளவிடுகிறது. சிறு குழு மதிப்பீட்டை உள்ளடக்கியது. ஆசிரியரின் உற்று நோக்கல், இடைவினையாற்றலை அடிப்படையாக கொண்டு மதிப்பிடுகிறது. எ.கா., பாடுதல், திரும்பக்கூறுதல், பங்கேற்று நடித்தல், பொம்மலாட்டம். செயல்திட்டங்களும் எஃப்.ஏ(ஏ) மதிப்பீடு வகையைச் சேர்ந்தது. அதில் மாதிரிகள் தயாரித்தல், கைவினைப் பொருள்கள் செய்தல், தகவல்கள் திரட்டுதல், பாடத்தொகுப்பு தயாரித்தல்,நேர்காணல், மேற்கோள்கள் திரட்டுதல், அகரமுதலியைப் பயன்படுத்துதல், துண்டுப்புத்தகம் தயாரித்தல் போன்றவைகள் அடங்கும்.
வளரறி மதிப்பீடு(ஆ) 20 மதிப்பெண்கள். இது குறிப்பிட்ட பாடப்பொருள்/ அலகில் மாணவர்களின் கற்றலடைவை அறிய, வாய்மொழியாகவும் , சிறு எழுத்துத் தேர்வு வாயிலாகவும் மதிப்பிடலாம். நெகிழ்வு தன்மை மிக்க இம்மதிப்பீடு பருவம் முழுவதும் கற்றல் நடைபெறூம் பொழுதும் கற்றல் முடிந்த பின்னும் பல்வகை வினாக்களை அமைத்துக் கற்றலடைவைச் சோதக்கவும், குறைகளைக் கண்டறியவும், குறைதீர் கற்பித்தலுக்கு திட்டமிடவும் துணைப்புரிகிறது. எ.கா. சரியா? தவறா? , பலவுள் தேர்வு, பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, வரிசைப்படுத்துக, சொல்லைக் கேட்டு எழுதுக, சிறுவினா, குறுவினா, விடுகதைகள், புதிர்கள்.
தொகுத்தறி மதிப்பீடு 60 மதிப்பெண்கள் கொண்டது. இது பருவ இறுதியில் வினாத்தாள் திட்ட வரைவின் (புளு பிரிண்டு) அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது.  

பருவ மதிப்பீடு செய்வதால் பெற்றோர்கள் ஆசிரியரை வருடத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சந்திக்க நேர்வதால், தங்கள் குழுந்தையின் முன்னேற்றம் குறித்து அறிய முடிகிறது, அதனால் ஆசிரியருடன் இணைந்து செயல்பட முடிகிறது.
முன்ன மாதிரி ஆண்டுக்கடைசியில பெயிலுன்னு தெரிஞ்சு, நம்ம பையனோட படிப்பு பத்தி அறிய வாத்தியாரை போய் பார்த்து, கடைசியில பையன் சரியில்லைன்னு சொல்லி படிப்ப நிறுத்துற பழைய தேர்வு முறையை தூக்கி போட்டுட்டு சி.சி.இ க்கு கை கொடுப்போம்.

(மாணவர் உலகம் மாத இதழில் வெளிவந்த கட்டுரை )

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சி.சி.இ. விளக்கத்திற்கு நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

பருவ மதிப்பீடு செய்வதால் பெற்றோர்கள் ஆசிரியரை வருடத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சந்திக்க நேர்வதால், தங்கள் குழுந்தையின் முன்னேற்றம் குறித்து அறிய முடிகிறது, அதனால் ஆசிரியருடன் இணைந்து செயல்பட முடிகிறது.//

சத்தியமான உண்மை சரவணன், சி சி இ விளக்கமும் இப்போதான் எனக்கு புரிகிறது நன்றி...!

Geetha said...

தேவையான பதிவு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

மிகத் தேவையான பகிர்வு....
வாழ்த்துக்கள்

Post a Comment