Wednesday, January 15, 2014

இந்தமாதிரி காதல் உங்களுக்கும் இருக்கலாம்...!

   காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, 6 மணிக்கு வெள்ளை சாட்டை, வெள்ளை பேண்ட் அணிந்து , சூ பாலிஷ் போட்டு, கிளம்ப எத்தனிக்கையில், ”டேய் வாசல் தெளிக்கவில்லை, கொஞ்சம் நில்லுடா” என்று அம்மாவின் குரல் கேட்கும். வேகமாக பறபறக்க தண்ணிர் தெளித்து, சிறியதாய் கோலம் போட்டு , பார்த்து போயிட்டு வா என்று வழியனுப்ப, சைக்கிள் பெல்லை பக்கத்து வீட்டு வசந்திக்கு கேட்கும் விதத்தில் அழுத்தி, ஓசை எழுப்பி, அவள் பல் இளிக்க , பைக்கை உதைப்பதை போல, சைக்கிள் பெடலை உதைத்து , சைக்கிளில் செல்லும் போது , கனவும் சேர்ந்தே வரும்.

    பாகிஸ்தான் பார்டர், சுற்றிலும் கடல், மிதந்து செல்லும் இந்திய கப்பலில் வெள்ளை சீருடை அணிந்து , பைனாகுலரில் ரோந்து பார்க்கையில், சீறிவரும் விசைப்படகை கை தூப்பாக்கியில் சுடவும் மற்றோரு கையில் கை எறி குண்டு எறிந்து வெடிக்க செய்து, இந்திய இராணுவ கப்பலில் இருந்து குதித்து, கடலில் நீந்தி சென்று பாகிஸ்தான் பார்டரில் நிற்கும் எதிரி கப்பலை அடைந்து, பதுங்கி பதுங்கி , கப்பலில் ஏறி, அனைவரையும் சுட்டு வீழ்த்தி, கடைசியில் கப்பலை சிறைப்பிடித்து, தகவல் கொடுக்க அனைவரும் பாராட்டினர். வீரபதக்கத்துடன் ,ஜனபாதிபதி அருகில் நிற்கும் புகைப்படம், இ அத்துடன் செய்திய மறுநாள் செய்திதாளில் அனைவரும் படிக்கும் கனவுடன் ,அமெரிக்கன் கல்லூரியில் நுழைகையில் பரேட் ஆரம்பித்து இருந்தது.

    ப்ரேட் சீதே சல், பாயே மூட், பீச்சே மூட், சவுதான் என்ற கட்டளைகளுக்கு அடிபணிந்து வியர்க்க வியர்க்க லைப்ட் ரைட் , லைப்ட் ரைட் போட்டு நடந்து, இந்திய இராணுவம் பற்றியும் , கப்பல் படை குறித்த செய்திகள், அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் நிலை குறித்தும் தெரிந்து, அவர்கள் கொடுக்கும் பூரியை சாப்பிடும் போது, பசிக்கு அமிர்தம் போல இருக்கும்.

    கல்லூரியில் , இந்திய இராணுவத்தில் கேப்டனாக வருவேன் என்ற நண்பனை பார்க்கையில் பெருமையாக இருக்கும். பிசிக்ஸ் படிச்சா உடனே கப்பல் படையில் சேர்த்து கொள்வார்கள் என்ற நண்பனிடம், சுவாலஜி படித்தால் சேரமுடியாத என அப்பாவி தனமாக கேட்டு , எம். எஸ் சி  மெரைன் பயாலஜி படி , கண்டிப்பாக கப்பல் படையில் சேரலாம் என்ற டிப்ஸ் பெற்று மனம் திருப்தி கொள்ளும். தேசிய உணர்வு மிகுந்து இருக்கும் அந்த கணங்களில் , காந்தி அம்பேத்கார் பற்றிய உறவு விவாதங்கள் நிறைந்து இருக்கும்.

    உலகில் இந்திய  இராணுவம் 4வது பெரியது. சுமார் 20 லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய ராணுவம் தரைப்படை, கப்பல் படை, விமானப்படை, கடலோர காவல் படை,ய  துணை ராணுவப் படை என ஐந்து படைப்பிரிவுகள் உள்ளன.
     
     கல்லூரி முடிந்து 1999 ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் ,இந்திய இராணுவம் வெற்றி பெற்றது. செய்தி தாளில் செய்தி படிக்கும் போது நம்முடன் பயின்ற நண்பர்கள் பெயர்  இருக்க்கிறதா என்று பார்ப்பேன். எனக்கு விவரம் தெரிந்து என்னையும் சேர்த்து யாரும் இராணுவத்தில் சேர்ந்ததாக விவரம் இல்லை. இருப்பினும் செய்திதாள்களில் நம் வீரர்கள் பாகிஸ்தான், சீனர்களின் எல்லை அத்துமீறல்களை தடுக்கும் வீரர்களை  நினைக்கும் போது, என் நானே இராணுவ வீரனான உணர்வு ஏற்படும்.

   என்னுடைய என்.சி.சியின்  பி, மற்றும் சி சர்டிபிகேட்டுகளை எடுத்து பார்க்கின்றேன். அவை என் கனவுகளை போல நொருங்கி விழுகின்றன. இருந்தாலும் அவை என்னுடைய கனவை தாங்கி இன்னும் சான்றிதழாகவே அடையாளம் காணப்படுகின்றது. என்னைப்போன்று எத்தனைப்பேரின் கனவுகளை தாங்கி வீட்டில் பி, மற்றும் சி சர்டிபிகேட்டுகள் உறங்கி கிடக்கின்றனவோ..! நம் வீரர்களை நினைத்து பெறுமை கொள்கின்றேன்.

   இந்திய இராணுவத்தில் இடம் பெறும் கனவுகளுடன் அந்த நாள் முழுவதும் நண்பர்களுடன் பேசி களைத்து போய் வீடுதிரும்புகையில், நான் அணிந்து இருக்கும் சீருடையை கண்டு, வீட்டுக்கு அருகில் இருக்கும் பெரியவர்கள் சுபாஷ் சந்திர போஸ் இராணுவத்தில் சேர பர்மாவிற்கு சென்ற நண்பர்கள், உறவினர்கள் கதைகள், மதுரைக்கு காந்தி வந்த கதை, ஆடை துறந்த கதை என சொல்லி , நம் மனதில் தேச பற்றை விதைத்து , நம்மை இராணுவ வீரனாகவே மெருகேற்றி விடுவார்கள்.

1948 ஜனவரி 15 ல் ராணுவ தளபதி கரியப்பா பெறுப்பேற்ற , இந்த நாள் ஜனவரி 15, இந்த வரலாற்று நினைவை கவுரவிக்கும் பொருட்டும் , நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்காலுக்குமரியாதை செலுத்தும் விதமாகவும் இந்திய இராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. நாம்மிடம் இரானுவத்தில் சேர வேண்டும் என்ற உணர்வு நிரம்பி இருந்தாலும் , நாம் சேர இயலாமைக்கு ஆயிரமாயிரம் காரணம் இருந்தாலும், நாம் பாதுகாப்பாக இருக்க காரணமான இராணுவ வீரர்களை இந்நாளில் நினைத்து போற்றுவோம். நம் இளைய சமூகம் ராணுவத்தில் சேர ஊக்குவிப்போம்.

   என்னுடைய சி, மற்றும் பி சர்டிபிகேட்டுகளுடன் பாரா கிளைம் பேட்ஜ் , மற்றும் பல கேம்புகள் சென்ற சர்டிபிகேட், குடியரசு தின அணிவகுப்பு தேர்வில் பங்கு கொண்ட நினைவுகளுடன் இந்த நாள் முழுவதும் ராணுவ கனவுகளுடன் கடக்கின்றேன்.


ஜெய் ஹிந்த்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சொன்ன விதம் மிகவும் அருமை... இராணுவ வீரர்கள் என்றும் நினைத்து போற்றப்பட வேண்டியவர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

இராணுவ வீரர்கள் என்றென்றும்
போற்றப்பட வேண்டியவர்கள்

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமை....
வாழ்த்துக்கள்.

Post a Comment