Monday, January 6, 2014

செக்ஸ் ...செக்ஸ்...செக்ஸ்....வாழ்வின் தேவை!

        நான் தொடக்கப் பள்ளி அளவில் செக்ஸ் கல்வி தேவை என்பதை (என் பிளாக் வாயிலாக) பலமுறை வலியுறுத்தி உள்ளேன். செக்ஸ் என்பது மனிதன் உணர்வில் இயற்கையாகவே பொதிந்துள்ள விசயம். அது அன்பின் பெருக்கின் வெளிப்பாடு. இதை தவிர்க்க முடியாது. ஆனால் நாம் உணர்வுகளை கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்தலாம் என்பதை விட முறைப்படுத்தலாம். 
      முறைப்படுத்துதல் இல்லாத போது நம்முடைய பார்வை காமப்பார்வையாக மாறி , வெறி கொண்டு, டெல்லி அல்லது சமீபத்திய காரைக்கால் விசயமாக மாறவே வழி வகுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

     செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமையே நடக்கும் அனைத்து கற்பழிப்பு, பாலியல் வன்முறைகளுக்கு காரணம்.

    நம் தமிழ் சமூக அமைப்பில் பண்பாடுகளை மறந்து வாழ்கின்றோம். நம் சமூக அமைப்பில் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்கள். கால மாற்றத்தின் விளைவு செக்ஸ் பற்றி பேசுவது தவறு என்று சொல்லி சொல்லியே ,அதை பேச மறந்து விட்டோம். செக்ஸ் பற்றி பேசுவது என்பது பாவ செயலில் சேர்த்து விட்டனர்.

    இதன் விளைவால் நம் குழந்தைகள் நமக்கு தெரியாமல் செக்ஸ் பற்றி பேச தொடங்கிவிட்டார்கள். முறையான செக்ஸ் சிந்தனையில்லாமல், தொடங்கப்படும் பேச்சு, அவர்களை கணினி உலகத்தில் கையளவு கைபேசியில் நீலப்படங்களை காண உதவியிருக்கிறது என்பது தான் உண்மை.

      மூன்றாம் வகுப்பில் எழுத கற்று கொண்டவுடன் அவன் இவ்வாறாக எழுத ஆரம்பித்து விடுகிறான். உன்னை லவ் பண்றேன். உன்னை பார்க்கலைன்னா எனக்கு என்னவோ மாதிரி இருக்குது . நீ டூ போடாதா.. என் கூட பேசு . உன்னை நான் காதலிக்கிறேன். இது போன்ற கிறுக்கலகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மாணவர்களை நன்கு உற்று நோக்கும் ஆசிரியர்கள் இதை அறிய முடியும்.

     பள்ளி முடிந்து செல்லும் போது வகுப்பறையின் குப்பைகளில் இது மாதிரியான மனகுப்பைகளை காண்பது மிகவும் சாதாரண விசயமாக இருக்கிறது. ஆசிரியர்களுக்கு இது சாதாரண விசயமா இல்லை என்பது தான் உண்மை. இந்த மனகுப்பைகளை போக்குவதில் தான் நம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்பதை புரிந்தால், செக்ஸ் கல்வியின் அவசியத்தை ஆரம்ப கல்வியில் ஆரம்பிக்க ஆதரவை உடனே கொடுத்து விடுவீர்கள்.

     சமீபத்திய சமச்சீர் புத்தகம் ஆங்காங்கே புத்தகங்களில் மூன்றாம் வகுப்பு முதல் சில விசயங்களை கொண்டு வந்துள்ளது. குட் டச் பேட் டச் பற்றி பேச ஆசிரியர்களுக்கு அனுமதி அளித்து உள்ளது. இருப்பினும் அதனை ஒரு பாடமாக வைப்பது தான் நம் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமான நட்புடன் , ஆண் பெண் பேதம் இன்றி , செக்ஸ் பற்றிய புரிதலுடன் இருக்க முடியும்.

      ஏன் ? அவசியம் என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள். இன்று அளவிலும் 10, +1,+2 வகுப்புகளில் கருவுறுதல் பாடம் நடத்தப்படாமல் இருபதற்கு காரணம் கொஞ்சம் சொன்னீர்களானால் அதற்கான அவசியம் புரிந்து விடும். ஆசிரியரும் நடத்த தயங்குகிறார். மாணவர்களும் கேட்பதற்கு சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் செக்ஸ் பற்றி புரிதல் இல்லை. ஆகவே பேச மறுக்கின்றனர்.

   

                             

      நம் முன்னோர்கள் அதனால் தான் கோயில்களின் காம விளையாட்டு சிற்பஙகளை வைத்து உள்ளனர். நான் வேலைக்கு சேர்ந்த (22வயது ) புதிதில் அழகர் கோயிலுக்கு மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். பேருந்து நிறுத்தி விட்டு , பதினெட்டாம் படியானை கும்பிட்டு , நுழைவாயில் சிற்பங்களை மாணவர்கள் பார்க்க, அதில் ஒருவன் அங்க பாருடா... என சொல்ல.. என்னுடன் வந்த மூத்த ஆசிரியர் டேய் செருப்பை கலட்டி போட்டுட்டு வேகமா நட ... பிராக்கு பார்க்காத... மலைக்கு மேல போறோம் முருகனை பார்க்கிறோம். பின்னாடி இங்க வந்து மண்டப்பதிலே வந்து சாப்பிடுவோம்... என அறிவுரை கூறி நகர்த்தினார்.ஆனால் எட்டாம் வகுப்பு மாணவன் குசு குசு என பேசி சிற்பத்தை ரசிக்க.. என்ன சிரிப்பு வா வேகமா என்று அதட்ட தொடங்கினார்.

     இப்படி தான் நாம் நம் குழந்தைகளுக்கு தேவையில்லாத எதிர்பார்ப்பை உருவாக்கி, அவர்களை கடத்தி விடுகிறோம். இந்த எதிர்பார்ப்பு மறைக்கும் விசயத்தில் உள்ள ரகசியத்தை அறிகின்றேன் என பாதை தவறி செல்கின்றனர்.

    நான் இளைஞனாக இருந்த காரணத்தால் என்னிடம் நன்றாக பேசுவார்கள். மேலே சென்று தீர்தம் ஆடி, மலையடிவாரம் வந்து , சாப்பிட்டு முடித்தவுடன் , வாருங்கள் சிற்பம் பார்க்கலாம் என அழைத்தேன். மூத்த ஆசிரியர் என்னை பார்த்து, சரவணன் சும்மா இருங்க தேவையில்லாம, எதையாவது காட்டி மாட்டிக்க போறிங்க.. பெரிய டீச்சர் பார்த்த உங்கள தப்பா நினைக்க போறாங்க.. நீங்க பெர்மணன்டு ஆக வேண்டாமா..? உங்க மீது இருக்கிற நல்ல இமேஜ் போயிடும் என்று அதட்டினார்.

    சட்டை செய்யாமல் ,நான் மெதுவாக நகர்ந்தேன். என்னிடம் பேசும் சாக்கில் அனைவரும் என்னை நோக்கி நகர்ந்தனர். நான் அவர்களிடம் ஒவ்வொரு சிற்பமாக பார்க்க அனுமதித்தேன். சார் இவன் அதை பார்க்கிறான் சார் என மெல்ல என்னிடம் ஒட்ட ஆரம்பித்தனர். நான் அவர்களிடம் கோயில்களில் இது மாதிரி சிற்பங்கள் ஏன் வைக்கிறாங்க. தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் இப்போது சிற்பத்தை மறந்து அதானே ஏன் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தனர். நீங்களே சொல்லுங்கள் என்றேன்.

     சார் ... தெரியாத விசயத்தை தெரிஞ்சுக்க தான் என்றனர் பலரும். டேய் இத போய் யாரும் சொல்லி கொடுப்பாங்களாடா என்றான், மற்றொருவன். சபா
ஷ் என்று மேலும் அவர்களை உற்சாகப்படுத்தி கேட்டேன். சார் கோயிலுக்கு தப்பு பண்ணிட்டு வரக்கூடாது,அத சொல்றதுக்கு தான் என்றான் முதல் மதிப்பெண் எடுப்பவன். இது என்ன தப்பா ? என கேட்டேன். சார் எங்க வயசுல பார்க்கிறது தப்பு தானே என்றான் அவர்களில் சிறியவன்.


    தவறு என்றால் ஏன் இப்படி யொரு சிற்பத்தை கோயில் வாயிலில் சிறியவர் முதல் பெரியவர் முதல் அனைவரும் காணும் படி சிற்பத்தை செதுக்கி வைக்கின்றனர் என எதிர் கேள்வி எழுப்பினேன். நமக்கும் கல்யாணம் ஆனா இப்படி தாண்ட செய்யணும் அத சொல்ல தான் என்றான் ஆர்வம் கூடிய ஒருவன். அனைவரும் ஓ என கத்தினர். மூத்த ஆசிரியர் என்னை முறைத்தார்.

      கல்யாணம் ஆகலைன்னா செய்ய கூடாதா? என்றான் அவனுடைய கூட்டாளி. அதை விட பயங்கர சத்தம் . மேலும் பல மாணவர்கள் கூடினர். சூப்பரா சிந்திக்கிறான். அப்படி யெல்லாம் செய்ய கூடாது என்று சொல்ல தான் இப்படி வைச்சுருக்காங்க...என்று மற்றொருவன், முந்தயவனின் வாயை அடைக்க முயன்றான். பலர் ஏன் சார் சொல்லுங்க.. டேய் சும்மா இருங்கடா என அமைதி படுத்தினர்.

        இப்போது நான் கேட்டேன். இந்த சிற்பத்தை பார்த்தவுடன் என்ன மாதிரி உணர்கிறீர்கள்.? சார் ஆனந்தம் சார்... , சந்தோசமா இருக்கு சார்..,. ச்சீ அசிங்கம் சார்..,இதையெல்லாம் கோயில்ல வைச்சுருக்காங்க பாருங்க என வாய்க்கு வந்ததை சொன்னார்கள். கடைசியில் எல்லோருமோ ஒப்புக்கொண்டனர் ஆசையா பார்க்கணும் போல இருக்கு சார்... சந்தோசம இருக்கு என்று.

        கோயில் எதுக்கு கட்டியிருக்காங்க...? என்று கேட்டேன். சாமி கும்பிட என பதில் வந்தது. எதற்கு சாமி கும்பிட வேண்டும்? என மீண்டும் கேட்டேன். நல்லா படிக்க, நல்லா இருக்க , கவலையில்லாம வாழ, சந்தோசமா வாழ, நல்ல புத்தி கொடுக்க... என பதில்கள் வந்து விழுந்தன.

        கோயிலுக்கு வந்தா நல்லது நடக்கும் ,அப்படி தானே என்று தொடர்ந்து கேட்டேன். ஆமாம் என்றனர்.

       கோயில் வந்தால் வாழ்க்கை மேன்மை அடையுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்குமா? என கேட்டேன்.

       அனைவ்ரும் ஒருமித்த குரலில் சாமி கும்பிட்டா சாமி நம்மள நல்லா வச்சுக்குவார் சார் என்றனர்.

       கோயில் உள்ளே என்ன சாமி வச்சுருக்காங்க..?

       இந்த கோயிலோட சாமி அழகர் சாமி , முருகன், கருப்பன், என பல பதில்கள் வந்தன. உள்ளே சென்று பார்த்த பின் என்ன சாமி என பார்த்து பதில் சொல்லுங்கள். அவரை மூலவர் என அழைப்போம் என்றேன்.

       இந்த சிற்பம் காட்டுவது உடல் சார்ந்த இன்பமா? இல்லையா ? என்றேன்.

உடல் சார்ந்த இன்பம் என்றனர்.

கோயில்கள் நமக்கு நல்ல விதமான வாழ்க்கையை, உண்மையான இன்பத்தை கொடுக்க வேண்டுமானால், நாம் உடல் ரீதியான சிற்பம் காட்டும் இந்த இன்பத்தை கடந்து போக வேண்டும் .

ஆகவே தான் கோயில்களின் வாயில்களில் இம்மாதிரியான சிற்பங்களை படைத்துள்ளனர். மேலும் நாம் கோயிலுக்கு வரும் போது நம்மிடம் உள்ள கெட்ட எண்ணங்களை வெளி பிரகாரத்துடன் விட்டுவிட்டு, முழுமனதோடு ஈடுபாட்டுடன், மூலவரை வணங்க வேண்டும் என்பதை உணர்த்த தான் நம் முன்னோர் வெளி பிரகாரத்தில் சிற்பஙக்ள் வடித்துள்ளனர்.
....என நீண்ட உரையை நிகழ்த்த அனைவரும் கைதட்ட , மூத்த ஆசிரியர் நடந்தவற்றை கண்டு வியந்து , நான் உன்னை என்னவோ நினைச்சேன் விசயமான ஆளாத்தான் இருக்க என்று பாராட்டினார்.

      மாணவர்கள் இயற்கையில் பால் உணர்வுகளுடன் தான் இருக்கிறார்கள்.அதை தெளிவு படுத்த வேண்டியது நம் கைகளில் தான் இருக்கின்றது. செக்ஸ் கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஆக்க பூர்வமாக நம் குழுந்தைகளிடம் சொல்லுவோம், அறியாமையை களைவோம், செக்ஸ் சார்பான குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடவாமல் இருக்க இது ஆரம்பமாக இருக்கட்டும். மனதில் ஏற்படும் வக்கிரங்களை ஆன்மீக கருத்துக்கள் மூலம் செக்ஸ் கல்வி கொடுத்து களைவோம்.
 

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

//மாணவர்கள் இயற்கையில் பால் உணர்வுகளுடன் தான் இருக்கிறார்கள்.அதை தெளிவு படுத்த வேண்டியது நம் கைகளில் தான் இருக்கின்றது. //
தாங்கள் கூறுவது உண்மைதான் நண்பரே
ஒரு ஆசிரியர் என்னும் வகையில் தங்களின் கருத்துடன்
முழுமையாக ஒத்துப் போகின்றேன்
நன்றி நண்பரே
தம.2

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொன்னால் சரி தான்...

Unknown said...

செக்ஸ் கல்வி என்பது தீக்குச்சி போன்றது தரமான ஆசிரியர்கள் அதனை தீபம் ஏற்ற பயன்படுத்துவர் கீழ்த்தரமான ஆசிரியர்கள் தீயாய் கொளுத்திவிடுவார்கள். என்று கற்பித்தல் உண்மையான தரத்தை எட்டுகிறதோ அன்றுதான் செக்ஸ் கல்வி பள்ளிகளில் கொண்டுவந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆந்திராவில் பள்ளிகூட செக்ஸ் கல்வியால் மாணவர்கள் சீரழிந்துவிட்டதாக உயர்னீதிமன்ற நீதிபதியே தெரிவித்துள்ளார்.

Unknown said...

என்ன கொடுமைடா சரவணா என்று தலைப்பைப் பார்த்ததும் நினைத்தேன் ...ஆசிரியர் என்ற முறையில் மாணவர்களின் எண்ணங்களை அறிந்து நீங்கள் கூறியிருக்கும் கருத்து ஏற்புடையதே...செக்ஸ் கல்வியில் தியரி மட்டும் சொல்லிக் கொடுப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது ,சில கறுப்பாடுகள் பிராக்டிகளில் இறங்கலாம் என்ற ஐயம் தேவை அற்றது!
த.ம 4

Avargal Unmaigal said...

உங்களைப் போல நல்லாசிரியர்கள் அமைய மாணவர்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். நான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் ஆசிரியர் செக்ஸ் ப்ற்றிய சந்தேகங்களை கேளுங்கள் அதற்கு நான் பதில் சொல்லுகிறேன் என்று சொல்லி மிக அருமையாக விளக்கம் தந்தார்

எனது குழந்தையின் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள் இங்கு செக்ஸ் கல்வி என்று சொல்வதில்லை ஹெல்த் சப்ஜெக்ட் என்று சொல்லி நடத்துகிறார்கள்.

Post a Comment