Friday, January 10, 2014

பொங்கலை இம்மாதிரியும் கொண்டாடலாம்...!

இம்மாதிரியான அனுபவங்கள் எல்லாரும் கொடுக்க வேண்டும். இரண்டாவது பருவம் ஆரம்பத்தில் நெகிழி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். பள்ளி வளாகம் வீடு போன்றவற்றை நெகிழி அற்றதாக மாற்ற கூறினேன். அதன் தொடர்ச்சியாக மக்கும் குப்பை மக்கா குப்பை தரம் பிரிக்க கற்றுக் கொண்டனர். அதில் என் வகுப்பில் உள்ள மாணவன் உதயக்குமார் ஏன் குப்பைகளை காசாக மாற்றக்கூடாது என்றான்.

மறுசுழற்சிக்கு காகிதங்கள் செல்வதால், தினம் பள்ளியில் ( நான் வாங்கி படிக்க செய்வது) வாசிக்கும் செய்தி தாள், மற்றும் மாணவர்கள் குப்பையாக்கி கிழித்து போடும் பேப்பர்களை சேர்த்து வைத்து, விலைக்கு விற்கலாமே என்றான். முதலில் இது எதிர்விளைவை ஏற்படுத்தினால் , இவன் விடுமுறை நாட்களில் குப்பை பொறுக்க சென்று விடுவானே என்று அஞ்சினேன். இருந்தாலும் நேர்மறையான விசயங்களை என்றும் மனதில் பொதிய வைத்துள்ளவன் என்ற அடிப்படையில் அதற்கு ஒத்துக்கொண்டேன்.

காலை அரசு விதிப்படி காலைப்பிரார்த்தனை முடிந்தவுடன் டேவிட் காப்பர் மேயர், மற்றும் சத்குரு, மஹாத்ரேயா,ரா வின் தாயம் போன்ற புத்தகங்களில் இருந்து தினமும் ஒன்று அல்லது இரண்டு செய்திகளை வாசித்து கருத்து பகிர்வதுண்டு. மேலும் விவாதிப்பது உண்டு. எப்போதும் மாணவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு தான் செயல்படுவேன் என்பதால் , தீவிர யோசனையில் இச்செய்கையை கவனிக்க தொடங்கினேன். வகுப்பறையில் உள்ள குப்பைகளை தனியாக ஒரு பையில் சேமிக்க தொடங்கினார்கள். அதே சமயம் குப்பைகளை வகுப்பில் போடுவதையும் குறைக்க தொடங்கினார்கள்.

அன்றாட பணிகளில் மாணவர்களிடம் மேல் நாட்டு கல்வி முறை குறித்து விவாதிப்பது உண்டு. சுவாமி விவேகானந்தர் பற்றி கருத்துக்களை மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்திற்கு சென்று படித்து என்னிடம் பகிர்வதுண்டு. (இதை அனைவரும் செய்வது கிடையாது. ஆனால் வகுப்பில் குறைந்தது பத்து மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்தை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வண்டியூர் பகுதி மாணவர்கள் அப்பகுதி நூலகத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களை பிறர் ஆச்சரியமாக பார்ப்பதை விவரித்துள்ளனர். அது குறித்து தனிப்பதிவு செய்கின்றேன்.)

சில நாட்களுக்கு முன் சீனா அய்யா துணைவியார் இங்கிலாந்து கல்வி முறை குறித்து என்னிடம் விரிவாக பேசினார்கள். அவர்கள் பேத்தி இங்கிலாந்து நாட்டில் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை விற்று பணமாக்கி வீட்டிற்கு கொண்டு வருகின்றனர். அதுப்போல் தாங்கள் உருவாகிய கலைப்பொருட்களை சேல்ஸ் டே என்று உருவாக்கி விற்பனை செய்கின்றனர். வீட்டில் தாங்கள் உழைப்பில் கிடைத்த பணத்தொகையை கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பின்பு , அப்பணத்தை தங்களுக்கு பிடித்தமான அல்லது வேண்டியவர்களுக்கு( ஏழை மாணவர்களுக்கு ) உதவித்தொகையாக கொடுக்கின்றனர் ( இங்கு காண்பித்தால் அதை நாம் உடனே நம் வீட்டு தேவைகளுக்கு பிடிங்கி வைத்து விடுவோம் ) என்று என்னிடம் பகிர்ந்து கொண்டார். இக்கருத்தை என் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். நாம் தோட்டம் பயிரிட முடியாது. அதற்கு தேவையான இடம் இல்லை. மேலும் உருவாக்கிய பொருடகள் விற்பனைக்கான தரத்துடன் இருக்காது. அதற்கான பயிற்சி பெற்று கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. வீட்டிலும் உதவிகள் கிடைக்காது. பாடத்தின் பகுதியில் வரும் பொருட்களைத் தான் நாம் கலைப்பொருட்கள் என்று சொல்கின்றோம் என்று விவாதித்து , அது நம் கல்வி முறையில் கடினம் ஆகும் என்ற போது , உதயனும் கார்த்திக்கும் சேர்ந்து சார் , நம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு உதவினால் என்ன ? என கேள்வி எழுப்பினர்.

அந்த உதவி நம் உழைப்பில் உருவானதாக இருக்க வேண்டும் என்றேன். அப்போது தாங்கள் சேமித்து வைத்துள்ள பள்ளியில் குப்பையாக தெருவில் அல்லது குப்பை கூடையில் வீசப்படும் காகித்தை சேமித்து விற்போம் அப்பணத்தில் நாம் உதவி செய்வோம் என்றனர். இரண்டாவது பருவம் ஆரம்பத்தில் இருந்து சேமிக்க தொடங்கினர். ஒரு கண்டிசன் மட்டும் கொடுத்தேன். நம் வகுப்பில் சேரும் குப்பைகளை தான் உருவாக்க வேண்டும். நவம்பர் மாத இறுதியில் ஐம்பது
ரூபாய் பேப்பர் போட்டதில் கிடைத்தது. இந்த வருடம் பள்ளி தொடங்கியவுடன் செய்தி தாள் , மற்றும் சேகரித்த பேப்பர் போட முடிவெடுத்தார்கள். எதற்கு இப்போதே போட வேண்டும் என்றேன். சார் நாம் பொங்கலுக்கு உதவி செய்யலாமே என்றான் கார்த்திக்.

ஆனால் போதிய பணம் கிடைக்காதே என்றேன். பரவாயில்லை. நாங்கள் சேமிக்க போகிறோம். எங்களால் வாங்கி சாப்பிட்டது போக மீதி இருந்தால் கொடுக்கிறோம் என்றார்கள் நானும் சரி என்றேன். நானும் உதவுகின்றேன் என்றேன். அப்ப நீங்க ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல் போடக்கூடாது என்றனர். ஓகே என்றேன்.

பொங்கல் நெருங்கியது. நாளை சனிக்கிழமை மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் . அனைவரும் வந்திருக்கும் இன்று ( 10-1-2014) கொண்டாடுவது என முடிவெடுத்து, புதன் அன்று பேப்பர் எடை போட்டார்கள். நாற்பது ரூபாய் கிடைத்தது. ஏற்கனவே ஐம்பது, இப்போது நாற்பது, உண்டியல் பணம் எண்ணினோம் நாற்பது தேறியது. மொத்தம் நூற்றி முப்பது வைத்து , துணி எடுத்து கொடுக்க முடியாதே என்று வருந்தினர். நான் பரவாயில்லை எத்தனை பேருக்கு எடுப்பது என முடிவெடுங்கள் என்றேன். ஒருவனுக்கு மட்டும் போதும் என்று சொன்னார்கள். ஏன் என்றேன். சார் அவன் யுனிபார்ம் தவிர வேறு எதையும் அவன் போட்டதில்லை. அதுவும் இலவசமாக கொடுத்தது. நான் விசாரித்தேன் அவனுக்கு புது துணிமணி கிடையாது என்றான் கார்த்தி. சரிடா... அவனுக்கு உதவி வேண்டிய புது டிரஸ் கொடுத்து விடுவோம் என்றேன். முடிவெடுத்து அவன் சைஸ்க்கு சட்டை பேண்டு எடுத்து கொடுப்பது என முடிவெடுத்து, ஒன்றாம் வகுப்பு அ ஆசிரியரிடம் அனுப்பினேன்.

அவர் சார் நானும் இதில் பங்கெடுக்கலாம இல்லை வேறு ஒரு பையனுக்கு எடுத்து தருகின்றேன் என்றார். நான் மன்னிக்கவும் இது அவர்கள் உழைப்பில் அவனுடன் இருக்கும் ஒருவனுக்கு உதவும் உதவி, ஆகவே அவர்கள் முடிவெடுத்த ஒரு பையனுக்கு மட்டுமே கொடுக்க போகின்றேன். பின்னொரு நாளில் மாணவர்களுக்கு உதவி செய்யலாம் என்றேன். கடைசியில் அவர் நீங்கள் கொடுக்கும் தொகையில் சரிபாதி தருகின்றேன் என கேட்டதன் பேரில், மாணவ தலைவன் கார்த்தியிடம் அனுமதிப் பெற்று , அவரையும் இதில் சேர்த்து கொண்டோம்.

இன்று மதியம் உணவு வேளை முடிந்து வாய்ப்பாடு, தமிழ் வாசிப்பு, ஆங்கில புது வார்த்தைகள் படித்த பின், கார்த்தி பொங்கல் விழா ஆரம்பிப்போம் என்றான். அனைவரும் மகிழ்ச்சியாக தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த புது துணியை வழங்கினார்கள்.

இன்றைய தினம் மன நிறைவாக சென்றது. அடுத்து இரண்டு மாதத்தில் நாம் ஊதுவர்த்தி, சாம்ராணி, மெழுகு வர்த்தி , கிரிட்டிங்க் கார்டு போன்றவை செய்து, அப்பணத்தின் மூலம் நம் பள்ளியில் பயிலும் இயலா குழந்தைகளுக்கு உதவுவோம் என்று முடிவெடுத்தனர். உதவும் பணபை இந்த பொங்கலில் விதைத்துள்ள மனதிருப்தியில் அனைவருக்கும் , மாணவர்களுடன் சேர்ந்தே இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

8 comments:

Unknown said...

நல்ல விடயம்.இம்மாதிரி மாணவர்களும் உங்கள் போன்ற ஆசிரியரும் கிட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும்!வாழ்க!!!

Deiva said...

Hats off to you!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான ஆசிரியர் நண்பரே நீங்கள்
வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

வாசிக்கும் போதே மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்துக்கொண்டே சென்றது !வளரும் பயிர்களையும் அவர்களை வழி நடத்தும்
தங்களையும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம் .வாழ்த்துக்கள் சகோதரா தங்களும் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் இப் பொங்கல் விழா மறக்க முடியாத இனிய நினைவுகளுடன்
சங்கமித்திருக்க .

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் தொண்டே தொண்டு, மனசார பாராட்டுகிறேன் சரவணன்...!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களைப் போல நிறையப் பேர்கள் இருக்க வேண்டும்...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான விஷயத்தை மாணவர்களை வைத்து செய்திருக்கிறீர்கள் சரவணன். வாழ்த்துக்கள்.

அ. வேல்முருகன் said...

சக மனிதனுக்கு உதவும் எண்ணத்தை மிக எளிமையாக குழந்தைகள் மனதில் விதைத்துள்ளீர்கள். நிச்சயம் இது பல்கி பெருகும். உழைப்பை உயர்த்தும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

Post a Comment