Friday, December 7, 2012

குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த தெருமுனை பிரச்சாரம்

“என்னடா..இப்படி கத்திகிட்டு…கொட்டு அடிச்சுகிட்டு போறீங்க” என்ற மூதாட்டியிடம் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ் கொடுத்து, “நாங்க நாடகம் போட போறோம்..பார்த்துட்டு போங்க பாட்டி”என்றாள் மாணவி ஐஸ்வர்யா.
“அட போங்கடா..உங்களுக்கு வேலையில்ல.. அபேட் மருந்துன்னு சொல்லுறாங்க…ஆனா கொசு அபேஸ் ஆகாம  கடிக்குது…” என தன் மன வேதனையை கொட்டினாள் மூதாட்டி.
“பாட்டி அதுக்கு தான் என்ன செய்யணும்ன்னு… நாடகம் , பாட்டு , ஆடல் எல்லாம் போட போறோம்… உங்க பக்கத்து வீட்டுலேயும் சொல்லி கூட்டிகிட்டு வாங்க..”என்றான் முருகவேல்.

  மதுரை சொளராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் சந்தில் மதுரை புதுவார்டு 72ல் தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நோட்டீஸ் விநியோகித்து ,  ஒவ்வொருவராக வீடுகளில் இருந்து பொது மக்களை அழைத்து , கூட்டம் கூடச் செய்தனர்.
“என்னப்பா ..இப்படி கும்பலா வந்திருக்கீங்க.. எங்க இருந்து வந்து இருக்கீங்க..”என காமராஜ்  கேட்க,
“நாங்களா.. டாக்டர் திருஞானம் துவக்கப் பள்ளியில் இருந்து வந்திருக்கோம்…இவங்க பெயர் காளீஸ்வரி…” என வரிசையாக அறிமுகம் படுத்தி கொண்டு , டெங்கு சார்பான வில்லுப்பாட்டினை பாட துவங்கினர். மாணவர்கள் நாடகம் போடும் போது பொது மக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். கீழச் சந்தைப்போட்டை மாநகராட்சி முன் நடைப்பெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தை பார்த்த , பொது மக்களில் ஒருவர் தன் வீட்டில் வைத்திருந்த விலைஅதிகமான அயல் நாட்டு சாக்லேட்டை நாடக முடிவில் அனைவருக்கும் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
    மகிழ்ச்சியுடன் நகர முற்பட்ட போது, கூட்டத்தில் இருந்த அப்பகுதியை சேர்ந்த அஇஅதிமுக பகுதி செயலாளர் திரு பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு கை குலுக்கி வாழ்த்துக்கள்  தெரிவித்தார் .பின்பு அப்பகுதி கவுன்சிலர் திரு குமார் அவர்களுடன் தொலைப்பேசியில் அழைத்து , எங்களிடம் வாழ்த்து தெரிவிக்க கூறினார். 

பின்பு, மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டே , அபிராமி தியேட்டர் பின்புற உள்ள நீர் தொட்டிகள் உள்ள பகுதியில் ஒன்று கூடி , மீண்டும் தெருமுனை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியது. மாணவர்கள் கூட்ட மிகுதியை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து , மிகவும் அருமையாக வில்லுப்பாட்டு பாடி அசத்தி, அனைவர் கைத்தட்டலையும் பெற்றனர்.  நாடகத்தின் முடிவில் “ஒழிக்க நினைத்தால் கொசுவை ஒழிக்கலாம்…” என பாடி அனைவர் பாராட்டினையும் பெற்றனர்.

   இன்று காலை நடைப்பெற்ற எஸ்.எம்.சி கூட்டத்தில் பங்கு பெற்ற ஆதிமூலம் 1 மாநகராட்சி பள்ளியின் தலைமைஆசிரியை திருமதி சுலேகா அவர்கள் மாணவர் அவர்கள் அனைவருக்கும் எதாவது உணவு கொடுத்து உதவுங்கள் என்று 100 கொடுத்தார், அத்துடன் மீதி தொகையையும் போட்டு மாணவர்களுக்கு இன்று 7-12-2012 பூரி வழங்கப்பட்டது. எஸ்.எம்.சி. குழுவில் இடம் பெற்றுள்ள திருவி.சுரேந்திரன் எ பாபு எங்களுடன் சேர்ந்து பங்கு கொண்டு செயல்படுவது மிகவும் உற்சாக ஊட்டுவதாகவும் , மாணவர்களுக்கு உணவளிக்க டோனர்களை பிடிக்கவும் உதவியாக உள்ளது.

  தெருமுனை பிரச்சாரத்தை காணும் மக்கள் மாணவர்களை பாராட்டி உற்சாக மூட்டுகின்றனர். இது பொது சேவை செய்ய தூண்டுதலாக அமைகிறது. ஒவ்வொருவரும் மாணவர்களை சமூக பணியில் ஈடுபட வைத்தால், பிற்காலத்திலாவது நல்ல சமூகத்தை அமைத்து விடலாம் என தோன்றுகிறது.


8 comments:

மதுரை சரவணன் said...

மாணவர்களின் நல்ல முயற்சி.....

வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

நல்ல முயற்சி
படங்களுடன் பதிவாக்கி
நாங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி
மாணவ மணிகளுக்கும் வழி நடத்தும்
ஆசிரியர் பெருமக்களுக்கும் என்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

renesh said...

வெரி குட்! தங்கள் கொசு ஒழிப்புச் சேவை தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்

'பரிவை' சே.குமார் said...

மாணவர்களின் நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

Easy (EZ) Editorial Calendar said...

மாணவர்களின் முயற்சி முழுமையாக வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

G.M Balasubramaniam said...


முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், சரவணன். வாழ்த்துக்கள்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துகள்!. Congrats for your Team also!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - பள்ளிக் குழந்தைகளை வைத்து தெருமுனை நாடகம் - டெங்குக் காய்ச்சல் பற்றிய நாடகம் - நல்லதொரு சிந்தனை - தொடர்க இவ்வரும் பணீயினை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment