Monday, December 10, 2012

அட.. சின்ன பசங்க அசத்திட்டாங்கப்பா…!


மிக உற்சாகமாக சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் ,“சார், இன்னைக்கு சாய்ங்காலம் நாம எங்க சார் ..தெருபிரச்சாரம் செய்யுறது” என கோரசாக கேட்க தொடங்கினார்கள். “முதலில் பாடங்களை படியுங்க அப்புறம் சாய்ங்காலம் பற்றி பார்க்கலாம்” என்றேன்.  “சரியுங்க சார்” என உற்சாகமாக பாடப் புத்தகங்களை எடுத்து செய்யுள் பகுதியை உரக்க பாட ஆரம்பித்தார்கள். 
மாலை எஸ்.எம்.சி குழு கல்வியாளர் திரு சுரேந்திரன் (எ) பாபு மதியம் போன் செய்து இன்று நம் சொளராஷ்டிரா பள்ளி பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள கற்பக விநாயகம் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் அவர்கள் மாணவர்களுக்கு தெருமுனைப் பிரச்சாரம் முடிந்த பின் பாஸ்கர் டிபன் ஹோம்மில் உணவு சொல்லி விட்டார், நாம் 72, 71 ம் வார்டுகளில் கொசு ஒழிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரம் கேற்கொள்வோம் என கூறினார். 
   மாலை மாணவர்கள் பாலரெங்காபுரம் பகுதியில் உள்ள கேஸ் கம்பெனி அருகில் குழுமினர். பின் நோட்டீஸ் விநியோகம் செய்து, பொது மக்களை ஒருங்கிணைத்தனர். மக்கள் கூடியவுடன் “ என்ன நீங்கள் எல்லாம் எங்கிருந்து வந்திருக்கீங்க..” என கேட்க ,  “ நாங்க எல்லாம் டாக்டர் டி, திருஞானம் துவக்கப் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் , இவன் பெயரு காமராஜ், வல்லரசு” என சொல்ல அனைவரும் வணக்கம் சொல்லி தங்கள் பெயர்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.  பின்பு வில்லுப்பாட்டு , நாடகம், ஆடல் , பாடல் அமைத்து மக்களுக்கு டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.  சிரிப்பாக நாடகம் அமைந்திருந்தாலும் சிந்திக்கும் கருத்தை சொல்லுறாங்காய்யா பசங்க என பொது ஜனங்க பாராட்ட உற்சாகம் அடைந்தனர்.
எங்களை அழைத்து வந்தவர்கள் மதுரை கார்ப்பிரேசன் ஆட்கள் என நினைத்து கூட்டத்தில்  இருந்து வந்த பச்சைக்கலர் கட்டிய நடுத்தர வயது பெண்மணி “ ஐய்யா…நீங்க நாடகத்தில சொன்ன மாதிரி தான் ரோட்டிலேயே வீட்டுக்கு முன்னாடி ஒண்ணுக்கு இருந்து வைக்கிறாங்க.. பீ பேண்டு வைக்கிறாங்க… தயவு செய்து (இடத்தை சுட்டிக்காட்டி ) அங்க வந்து ஒரு அதட்டு போடுங்க” என நம் கல்வியாளரை சந்தித்து குறைகூற, “அட போமா …இது அங்க நீக்கிறாரே அவரு …(பெயரை சொல்லி ) ஆர்வக் கோளாரில் மாணவர்களை அழைத்து நீங்க கொசு வளராம பார்த்துக்க என்ன நடவடிக்கை எடுக்கணும்ன்னு பிரச்சாரம் செய்யுறாரு ..” என விளக்கம் அளிக்க மாணவர்கள் அனைவரும் மொளனமாக சிரித்தனர்.

 அதற்கு அடுத்து அனுமார் கோவில் எதிர்புறம் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி எதிர்புறம் சந்தில் பொதுமக்களை கூட்டி தெருமுனைப்பிரச்சாரம் செய்ய தொடங்கினர். மாணவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடினர்.
உரக்க அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரமாதமாக தெருமுனைப்பிரச்சாரம் மேற்கொண்டனர். கடைசியா வந்து அவுங்க ஸ்கூல் தலைமையாசிரியர்ன்னு அறிமுகமாகி டெங்கு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினாரே செம பஞ்ச் ப்பா என பாரட்டி, அனைவரும் எந்த ஸ்கூல் பசங்கப்பா.. இந்த போடு போடுறாங்க.. என கேட்க உரக்க பதில் அளித்தனர். பின் நடந்து பாலரெங்காபுரத்தில் இருந்து வந்து பகத்சிங் தெருவின் நடுவில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டனர்.   
  பகத்சிங் தெருவில் வண்டிகளின் நடமாட்டத்தின் நடுவே பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.  மணி சரியாக 6.45 என காட்ட , அப்படியே நடந்து காமராசர் சாலையை அடைந்து , பாஸ்கர் டிபன் ஹோம்மில் உணவு அருந்தி விட்டு அனைவரையும் வீட்டிற்கு பத்திரமாக இறக்கி விட்டு இப்போது உங்களிடம் செய்திகளை பகிர்ந்து கொள்வதிலுள்ள மகிழ்ச்சி அளவேயில்லை.
   நாளை அம்பிகா தியேட்டர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் . மாணவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதாக நம் சீனா அய்யா உறுதியளித்து , மாணவர்களின் தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வாழ்த்துக் கூறினார். அனைவரும் வருக…மாணவர் கூறும் அறிவுரையை கேட்டு மகிழவும். சிந்திக்கவும்.


2 comments:

john said...

super

Easy (EZ) Editorial Calendar said...

நல்லா இருக்கு.....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Post a Comment