Monday, July 11, 2011

சலூன் கடையில் சமச்சீர்

  கடந்த வாரம் முடி திருத்தம் செய்வதற்காக சலூன் கடைக்கு செல்ல முயன்றேன். மழை லேசாக தூரத் தொடங்கியது. இதமான காற்று. லேசான  சாரல். நனைந்த படி சென்றேன். வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் சலூன் . வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது சலூனில் கூட்டம் அதிகமாக தென்படவே, என் கால்கள் நடையை தளர்த்தின. சலூனில் காத்திருப்பது என்பது ஒரு வலி தரும் அனுபவம்.  வேலை வெட்டியில்லாதவர்களுக்கு அதுவே வரப்பிரசாதம். அங்கு தான் அனைத்து விசயங்களும் பேசப்படும். சிறுவயதில் துப்பு துலக்க போலீஸ் முதலில் சலூனிலும், அயன் வண்டி தேய்ப்பவனிடமும் தான் விசாரிப்பார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன். பலமுறை முடி திருத்தம் செய்யும் போது, தெரு ரகசியங்கள் முதல் உலக அரசியல் வரை பேசக் கேட்டு இருக்கிறேன். பேசிக் கொண்டே முடி வெட்டினாலும் , தொழிலில் சுத்தம் திருத்தம் செய்து  முடிந்ததும் தெரியும்.

    பலர் ஒரே கடையில் காலம் காலமாக முடி திருத்தம் செய்வது உண்டு. சிலர் என்னதான் அழகாக திருத்தம் செய்திருந்தாலும் , கடையை மாற்றிக் கொண்டே இருப்பர். அவர்களுக்கு யாரிடமும் திருத்தி ஏற்படாது. நான் என் இருப்பை தபால் தந்தி நகருக்கு மாற்றி இருந்தாலும் , என் அம்மா வீட்டு அருகில் தான் இன்றும் திருத்தம் செய்கிறேன். பழகிவிட்டது என்பதை விட தலையை வேறு யாரிடமும் கொடுக்க மனமில்லை. குடும்ப டாக்டர், வக்கில் இருப்பது போல முடி திருத்துபவர்களும் பலருக்கு இருக்கிறார்கள். அதில் என் குடும்பமும் அடங்கும். வீட்டில் யாருக்கும் முடியவில்லை, கடைக்கு வர இயலாத சூழல் வந்தால், அழைத்தவுடவே வந்து வீட்டிலேயே முடி திருத்தம் செய்வார்கள். இதில் முக்கியமானது சாதாரணமாக கொடுக்கும் தொகையையே வாங்கிக் கொள்வார்கள்.

   கடைக்கு முன் நிற்கும் கூட்டதைப் பார்த்தவுடன் ,வீட்டிற்கு திரும்பி விடலாமா என்று தோன்றியது. இருப்பினும் மழை நேரமாதலால், ஓதுங்கிய கூட்டமாவும் இருக்கலாம் எனவும் தோன்றவே, சலூன் நோக்கி எட்டு வைத்து நடந்தேன். மழையும் என் நடையின் வேகத்திற்கு தகுந்து தன் வேகத்தைக் கூட்டியது. நல்ல வேளை கடையில் முடி திருத்தம் செய்ய யாரும் இல்லை. உட்கார்ந்தேன். ஆட்டோ ஓட்டுனர் வேகமாக ஓடி வந்து , சார் டி.சி வாங்கி சேர்த்துட்டேன். இன்னும் புத்தகம் கொடுக்கலையே என்று என்னிடம் கேட்டார். ஒன்றாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்பிற்கும் புத்தகம் கொடுத்தாகி  விட்டதே என்றேன். நம்ம பாப்பா நான்காம் வகுப்பு படிக்கிறது என்றார். அதற்குள் முடி வெட்டுபவர், என் பாப்பா ஆறாம் வகுப்பு படிக்கிறது. அதற்கு புத்தகம் கொடுத்தார்கள் . அதில் ஓட்டியுள்ள பகுதியை பிரித்துப் பார்த்தேன். அதில் முந்தைய அரசு தன் கட்சியை , தன் குடும்பத்தை பற்றி செய்திகளை பரப்புவதாகவே செய்துள்ளதாக தோன்றுகிறது. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள், சூரியனை கருப்பு சிவப்பில் உள்ள படமாகப் போட்டுள்ளனர். கனிமொழி பற்றி செய்தி சங்கமம் பற்றிய பாடத்தில்  உள்ளது என்றார். என்ன சார் உண்மையா இல்லையா? என என்னிடம் கேள்வியும் கேட்டார். எனக்கு எதுவும் தெரியாது. நான் ஓட்டிய பகுதிகளைப் பற்றி கவலைப்படவில்லை. அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் புத்தகம் கிடைத்தால் போதும் அதுவே எங்களுக்கு முக்கியம் என்றேன். சார் அரசு ஊழியராம் எப்படி நழுவு கிறார் என்றார் சலூன் கடைக்காரர்.
   
    ஆட்டோகாரர் மீண்டும் என்னிடம் பேச்சுக் கொடுத்து, சார் சமச்சீர் கல்வி வருமா வராதா? என்றார். இதுவரை எந்த அரசும் , எந்த கட்சியும் சமச்சீர் கல்வி  கொண்டு வருவதில், வந்ததில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது முறையாக அனைவருக்கும் சமச்சீராக கிடைக்க வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. தற்போது உள்ள அரசு புத்தகத்தை ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளது என்று கூறிக் கொண்டு இருக்கும் போது, அருகில் புகைத்து கொண்டிருந்தவர், சார் இது தான் எல்லாருக்கும் தெரியுமே? அந்த கமிட்டியில யாரும் அரசு பள்ளி சார்ந்தவர்கள் இல்லையே? உங்களை ஆய்வு பண்ண சொன்னா என்ன சொல்லி யிருப்பீங்க? என எனக்கு கேள்விகளை தொடுத்தார்.

  ”சும்மா அவரையே கேள்வி கேட்காதீங்க… நான் சொல்லுகிறேன்..” என முருக்கு விற்பவர் எனக்கு பதிலாக ஆஜராகியதல்லாமல், ”சார் முருக்கு வாங்கி சாப்பிட்டுகிட்டே பேசுங்க…”என வியாபாரத்தையும் செய்து கொண்டு,”நாலு முருக்கு சாப்பிடுகிறவனுக்கு , இரண்டு முருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எப்படி இருக்கும்? ஒரு முருக்கு சாப்பிடுகிறவனுக்கு இரண்டு முருக்கு  தந்தா எப்படி இருக்கும் ? அப்படி தான் சமச்சீர் கல்வி மெட்ரிக் பள்ளிக் காரனுக்கு போதாதது..அதுவே சாதா தமிழ் மீடியம் காரனுக்கு கொண்டாட்டமனாதாக உள்ளது, ஆனாலும் அது பற்றி விழிப்புணர்வு பொது மக்களிடம் கம்மியாகத் தான் உள்ளாது ” என்றார்.

   உடனே சலூன் கடைக்காரர் அடிப்படை வசதிகளையும் , ஆசிரியரின் தரத்தையும் கூட்டாமல் புத்தகத்தில் மட்டும் தரத்தை கூட்டினால் எல்லாம் சமச்சீர் ஆகிவிடுமா? என கேட்க, மழை தன் வேகத்தை கூட்டியது. சரியாக மாட்டிக் கொண்டோம் என நினைத்தேன்.

    பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாதம் ஆகப்போகிறது,காலாண்டு வரப் போகிறது புத்தகம் தராமல், மாகால், தெப்பக்குளம் என ஊர் சுற்றிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது? இதை பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள் ?என ஆட்டோகாரர் மீண்டும் ஊசுப் பேற்றினார்.

   டீச்சருக்கும் வாத்தியாருக்கும், கல்வியாளருக்கும் அரசுக்கும் அக்கறையில்லாதது போல சும்மா எதிர்மறையாகவே பேசாதப்பா? அது அதுக்கு தகுந்த படி ஆங்கிலம் , பொது அறிவு , உடல் நலக் கல்வி, சுகாதாரக் கல்வி ,  டிவியில கேசட் போட்டுக் காட்டுறாங்க? என் புள்ள இப்ப எவ்வளவு மகிழ்ச்சியா ஸ்கூலுக்கு போகுது..அருமையா ஆங்கிலம் பேசுது என முருக்கு விற்பவர் அதட்டினார். ”எல்லாருக்கும் ஒரு அதிரசம் , இரண்டு முருக்கு கொடுங்க .. காச நான் தருகிறேன்” என்றேன்.

  இதுவரை பேசாதிருந்த பெயிண்டர், ”அவரு சொல்றதும் சரிதான். இப்படி எதுவும் படிக்கலைன்னா பொது மக்கள் சும்மா விடுவாங்களா? இன்நேரம் சாலைமறியல் , பள்ளிகூடம் முன் போராட்டம், அது இதுன்னு எதாவது நடந்து இருக்கும்லா.. சமச்சீர் பத்தி ஏன் அக்கறை இல்லைன்னா… மெட்ரிக் பள்ளியில படிப்பவர்கள் தான் அதிகம். என் பிள்ளை எடுத்துக்க நர்சரியில தான் சேர்த்து இருக்கேன். உன் மக கான்வெண்டு ஸ்கூல்ல தமிழ் மீடியம் படிக்குது. இவரு குழந்தை மெட்ரிக் படிக்குது. இவரு பிள்ளை தனியார் பள்ளியில தமிழ் மீடியம் படிக்குது. இங்கேயே  எல்லாரும் தனியார் பள்ளி தான். யாரும் அரசு பள்ளிக் கிடையாது. அப்படி இருக்க இதற்கு வலுசேர்ப்பது என்பது தவறானது. எல்லாரும் தகுதியான , நல்ல கல்வி தான் தேடுறோம்.. என் பக்கத்து வீட்டுக் குழந்தை போன வருடம் எல்.கே.ஜி படிச்சது. அதுக்கு ஆயிரம் வரை எழுத படிக்க தெரியும். ஆனா இப்ப கொடுத்த ஒன்றாம் வகுப்பு புத்தகத்தில் கணக்கில் நூறு வரைத் தான் உள்ளது. அதுக்கு ஏ,பி,சி, டி எல்லாம் தெரியும் ,சின்ன சின்ன வாக்கியம் எழுதும் , ஆனா இப்ப  அதவிட கம்மியா தான் படிக்கிறா!இப்படி எனக்கே தெரியுற குறை அம்மாவுக்கு அதிகமா தெரியாதா? அதான் புத்தகத்தை சரி செய்யாணும்ன்னு சொல்லுறாங்க… நம்ம புள்ளைகளுக்கு நல்லது தான் செய்வாங்க.., “

   திசை மாறிய கப்பலாக அம்மாவின் மதுரை பேச்சு, சமகால அரசியல், அதனை தற்போது நிறைவேற்றி வருவது என பேச்சு அரசியலாக, மழையும் தன்னை மறந்து தூங்கிப் போக, நான் மெதுவாக விடைப்பெற்றேன்.

    சலூனில் கிடைக்கப் பெறும் அனுபவம் மிகவும் சுவரசியமானது. சில சமயம் அதுவே சண்டைக்கு காரணமாகி , கத்திக் குத்து கொலையில் முடிவதும் உண்டு. அதனால், என் மூத்த தம்பி(கிரிமினல் லாயர்) சலூனுக்கு போனமா முடி வெட்டுனோமான்னு வந்திடனும் , அநாசியமாகப் பேசக் கூடாது . பின்னாடி வம்பு வந்திடும் என என்னையும் , என் தந்தையையும் எச்சரித்துக் கொண்டேயிருப்பான். இன்று அவர்களின் அரசியல் பேச்சும் அப்படி தான் கார சாரமாக இருந்தது. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த அனுபவம் உங்களின் சலூன் கடையை நினைவுபடுத்தியிருக்குமானால் மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.        
         

9 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

சமச்சீர் கல்வி பத்தி மக்கள் பேசத் தயாரா இருப்பதே நல்ல விஷயம்தான தலைவரே.. நல்லா எழுதி இருக்கீங்க..

Anonymous said...

தொடர்ந்து கலக்குங்க...

தடம் மாறிய யாத்ரீகன் said...

டீ கடையும் சலூனும் இதற்காகவே உருவாக்கப்பட்டது என நினைக்கிறேன் .... சுவாரசியம்...!!!

கோவை நேரம் said...

நல்ல விஷயம் ..அப்புறம் முடி வெட்டினிர்களா...

Unknown said...

சரிதான் நண்பா!

Unknown said...

நண்பரே
என் வலைப் பதிவிலே, இன்று உங்கள் வருகையைக் கண்டேன். நன்றி வணக்கம்
உங்கள் பதிவைக் கண்டேன் மிக இயல்பாக
உள்ளது வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நல்ல அனுபவம்.
அங்கு போய் நாம் வாய் திறக்கக் கூடாது. கேட்டுக் கொண்டு மட்டும் இருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா சலூன்ல எப்பவும் அரசியல் பேசுவாங்க - கேர்ஃபுல்லா காத மட்டும் கொடுக்கணும் - வாயத் தொறந்துடக் கூடாது - தொலச்சிடுவானுங்க - ஆமா

ராஜ நடராஜன் said...

சமச்சீர் கல்வியை எளிதாகப் புரிய வைத்த பதிவு இதுவாகத்தான் இருக்கும்.

சலூன் கடை சின்ன படிப்பகம் மாதிரி.மதுரையில் கத்திகுத்து வரை போகுமா?அவ்வ்வ்வ்வ்....

Post a Comment