திருப்பூவணம் சிவன் கோவில் சென்று விவரங்கள் சேகரித்த போது அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன. இந்து அறநிலைத்துறையின் நிலைக் கண்டு வருத்தம் ஏற்பட்டது.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தால் ,அனைத்துக் கோவில் சொத்துக்களும் பறிப்போகும் நிலை கண்டு கோபம் வருகிறது. சிவன் சொத்து குல நாசம் என்ற காலம் மாறிவிட்டது. கோவில் சொத்து எடுத்தா பாவம் என்பது மாறி கோவில் சொத்து எடுத்தா என்ன மோசம் என்றாகிவிட்டது. திருப்பூவணம் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டக் கோவில். இது தன்னுள் பல வரலாறுகளையும் , புராணங்களையும் கொண்டுள்ளது, இதற்கு பட்டா வழங்காமல் , அரசு புறம் போக்கு என தகவல்கள் வருவது ஆச்சரியம் என்பதுடன் விசயம் முடிந்துபோகவில்லை . இதனால் வருமான இழப்பு என்பதுடன் முடிவதில்லை.விசயம் இன்னும் ஆழமானது..!
அறுபத்து நான்கு சிவப் புராணங்களில், முப்பத்தியாறாவது புராணம் நடைப்பெற்ற இடம் இந்த திருப்பூவணம் சிவன் கோவில் ஆகும். இது ரசவதா சேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பூவணம் சிவன் கோவிலின் தலவிருச்சம் பிலா மரம் ஆகும் . திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள். இதன் புண்ணிய விபரத்தை கீழ் கண்டவாறு பட்டியலிடுகின்றனர்.
காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.
இந்த கோவில் நால்வர் பாடிய திருத்தலம் ஆகும். ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்திரமூர்த்தி, மாணிக்க வாசகர் ஆகியோர் பாடிய திருக்கோவில் ஆகும்.
புறப்பாடு விக்கிரகத்தில் கந்தர் நின்று இருப்பார். ஆனால் இக்கோவிலின் புறப்பாடு விக்கிரகத்தில் குழந்தைப்பருவத்தில் தாய் மடியில் அமர்ந்துள்ளார். இது இக்கோவிலின் சிறப்பு ஆகும்.
இக்கோவிலின் உள்ள பெருமாள் , திருப்பதியில் உள்ளது போல நின்று காட்சியளிக்கிறார். பிறக் கோவில்களில் படுத்த வண்ணம் மட்டுமே காட்சித்தருவார்.
இக்கோவிலின் அம்பாள் சொளந்திர நாயகி என்று வடமொழியிலும், அழகிய நாயகி என தமிழிலும் அழைக்கப்படுகிறார். இதனாலே கோவிலைச் சுற்றியுள்ளப்பகுதி மக்கள் தம் குழந்தைக்களுக்கு அழகிய நங்கை என்ற பெயரை வைத்துள்ளனர்.
இக்கோவில் இன்றைய நிலையை அடைய பாண்டியர்கள், நயக்கர்கள், நகரத்தார்கள் உதவி புரிந்துள்ளனர். இக் கோவில் சிவகங்கை தேவஸ்தானத்தை சார்ந்த்து.
இக்கோவிலின் விமானம் பாஸ்கர விமானம் ஆகும். அதாவது ஐந்து முகங்களைக் கொண்டது. மேலும் விமானம் ஒரு கோவிலைப்போன்று அமைப்புடையது.
அதுசரி ...ஏதோ வருமான இழப்பு என்று சொன்னீர்களே என்று அவசரப்படுவது புரிகிறது. இக்கோவிலை சார்ந்த கிராமம் பிரமனூர் . அங்கு இக்கோவிலுக்கு சொந்தமாக 815 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 600 ஏக்கர் நிலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோலிலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட இடமாதலால் இவ்வூர் பிரமனூர் என அழைக்கப்பட்டது. இவர்கள் உழவடைச் செய்ய பிறசாதிக் காரர்களை பயன்படுத்தினார்கள். நாளடைவில் பிராமணர்கள் இவர்களின் ஆதிக்கத்தால் , ஊரை விட்டு காலி செய்து, இப்போது இவ் உழவடைக்காரர்கள் ஆக்கிரமிப்பில் இக்கோவில்கள் விவசாய நிலங்கள் உள்ளன.
முன்பு விவசாயத்தில் அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் முப்பது மூட்டை நெல் விளையும். அதில் பத்து மூட்டை கோவிலுக்கும், பத்து மூட்டை உழவடைக்காரர்களுக்கும் , மீதி பத்து மூட்டை பிராமணர்களுக்கு(அதாவது நிலத்தை முறையாக விவசாயம் செய்ததற்கு) என பகிர்ந்துக் கொடுக்கப்பட்டது .
இன்று ஒரு படி அரிசியோ, அதிகப்பட்சமாக பத்துப்படி அரிசி மட்டுமே தருகிறார்கள் . நிலங்கள் அவர்கள் கைகளில் சிக்கி ஏமாற்றப்பட்டு வருகிறது. கோவிலை நிர்வகிப்பவர்கள் கேட்டால் , விவசாயம் இங்கு என்ன கிழிக்கிறது என வம்பு இழுப்பதாக சொல்லுகிறார்கள்.
கோவிலுக்கு அருகில் கோவிலைச் சார்ந்து வீடுகள் உள்ளன. அவைகள் இன்று வாடகைக் கொடுக்காமல் , வருமான இழப்பு ஏற்பட்டு கோவில் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று தெரிய வருகிறது.
குசவன் கோவில் தோப்பு என்ற இடத்தில் இக்கோவிலுக்கு சார்ந்த எழுபத்து ஏழு வீடுகள் உள்ளன. அவற்றில் அறுபத்து ஏழு வீடுகள் இதுவரை வாடகைக் கொடுக்காமல் இருந்து வருகின்றன. காலம் காலமாக கோவில் அவர்களிடம் வாடகை வசூலித்து வருகிறது.
ஆனால், தகவல் உரிமைச் சட்டம் வந்து, அதில் ஒருவர் இந்த இடம் , கோவிலுக்கு சார்ந்த்தா என வட்டாச்சியர் அலுவலகத்தில் கேட்க, இவ்விடம் கிராம நத்தம், நத்த புறம் போக்கு என பதிலளிக்க , அவர்கள் ஒட்டு மொத்தமாக வாடகை தரவில்லை.
கோவில்நிர்வாகம் சிவகங்கை வட்டாச்சியர் அலுவலத்தில் பட்டா கேட்டு விண்ணப்பிக்க , அவர்கள் இது உங்கள் இடம் இல்லை என பதிலளித்துள்ளனர். நூற்றாண்டுகாலமாக வாடகை வசூலித்த கோவிலுக்கு உரிமையில்லை எனில் , அதனை பயன்படுத்தி வந்தவர்களுக்கு அனுபவ பாத்தியத்தில் அந்த இடத்தையும் வீட்டையும் பட்டா கொடுத்து சொந்தமாகும் உரிமையும் உள்ளது.
இப்போது கோவில் நிர்வாகம் கோர்டு படி ஏறி , தன் உரிமைக்கு சொந்தம் கொண்டாட தன் தரப்பு நியாங்களை கொடுத்து வாதாடுகிறது. கலெக்டருக்கு எதிராகவும் கோவில் நிர்வாகம் இடம் சம்பந்தமாக வழக்கு தொடுத்துள்ளது.
ராமர் ஜென்ம பூமியைப்போன்று அனைத்து கோவில் இடங்களுக்கும் தனக்கு சொந்தம் என யாராவது வழக்கு தொடரும் நிலை ஏற்படும் முன் அரசு அனைத்துக் கோவில்களுக்கும் பட்டா வழங்க முன் வர வேண்டும் . இந்து அறநிலைத் துறை அரசு சார்ந்த ஒரு நிலையில் கோவிலுக்கு ஆதரவாகச் செயல் படுவதில்லை என கோவில் நிர்வாகம் சலித்துக் கொள்கிறது.
கோவில் வழக்கு தொடர்வதால், வாடகை வசூலிக்க முடியவில்லை. சிவில் வழக்கு என்பதால் விரைவில் முடியாது என தெரிந்தே... தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்து ஒரு வக்கில் நோட்டீஸ் அனுப்பி , வாடகை கொடுக்க மறுக்கின்றனர். மேலும் , இவ்வழக்கு எந்த வருடம் முடிந்தாலும் , சட்டப்படி முப்பத்தாறு மாத வாடகை மட்டுமே கோவில் வசூலிக்க உரிமை உள்ளது, வழக்கு முடிய குறைந்து முப்பது வருடம் கூட ஆகலாம் என்பதால் மீதிவாடகை லாபம் என தெரிந்தே மக்கள் தவறான முடிவு எடுக்கின்றனர். சாமியா வாடகை கேட்கிறது என்ற எகத்தாளம் இவர்களை இப்படிதூண்டி விடுகிறது.
எந்தக் கோவிலாக இருந்தாலும் (அல்லாக் கோவில், சர்ச் உட்பட) தகவல் உரிமைச் சட்டத்தில் அவை இன்று கிராம நத்தம் அல்லது , புறம்போக்கு என்றே தகவல்கள் வருகின்றன . இந்நிலை நீடித்தால், யாராவது இதை நான் தான் அனுபவித்து வந்தேன் எனக் கூறி பட்டா பெற்று தன் இடம் என சொந்தம் கொண்டாட வாய்ப்பு உள்ளது. அரசு சிந்திக்குமா.? கோவில் இடங்களுக்கு பட்டா வழங்கி முறைப்படுத்துமா..?இந்து அறநிலைஅத்துறை இது சார்த்து விரைவில் ஒரு முடிவை சட்ட சபையில் கோரிக்கை முன் வைத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இனி கோவில் பற்றிய விரிவான வரலாற்றை அதன் புராணத்துடன் பார்ப்போம்.