Thursday, April 16, 2015

இதை படிச்ச பின் குழந்தை பெத்துக்க கூடாதுன்னு எவனும் சொல்ல முடியுமா?

வேலூரில் சிப்பாய் சரவணன்.
*
கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. என்ன அழுகின்றீர்கள் என மனைவி அருகில் அமர்ந்து ஆறுதல் படுத்தினாள். ஒன்றுமில்லை என்றபடி முகத்தை நீரால் கழுவினேன்.
இன்று எதுவும் பள்ளியில் நடந்ததா! ஏதாவது பிரச்சனையா? என கேட்டாள். ஒன்றுமில்லை என்றாலும் மனம் அதையே நினைத்து குமுறி கொண்டு இருந்தது. முகநூல் எடுத்து வைக்கலாம் என்று நினைத்தாலும் மனது அதையே நினைத்து புலம்ப ஆரம்பித்தது.
என் மனைவி சந்தேகப்பட்டவளாக சக ஆசிரியருக்கு போன் செய்ய தொடங்கினாள். யாராலும் சமாதானப்படுத்த முடியாது. நினைவுகள் காற்றில் என்னை பின்னோக்கி அழைத்து செல்ல தொடங்கின. அவை மிகவும் மெல்லிசான இறகாக பறக்க தொடங்கின.
இங்கு அருணாச்சலம் அவர்கள் எடுத்தப்புகைப்படம் நினைவில் தொக்கி நிற்க, என் நினைவு இறகும் முள்மேல் விழுந்து முன்னும் செல்ல இயலாமல், பின்னோக்கியும் வர இயலாமல் , அதே இடத்தில் காற்றில் படப்படத்தது.
ஆம். அப்போது 5ம் வகுப்பில் பாடம் நடத்தி கொண்டு இருந்தேன். சுவர் சொல்லும் கதைகள். கோட்டைகள் பற்றிய பாடம். எப்போதும் இல்லாத அளவில் உள்ளம் களிப்போடு வேலூர் கோட்டை பற்றி சொல்ல ஆரம்பித்தேன். சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்டது.
இந்த கோட்டையை பிஜ்ஜப்பூர் சுல்தான்கள், மாராடியர்கள், ஆற்காடு நவாப்புகள் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியர்கள் ஆண்டார்கள் என்றேன்.
நம் சுதந்திர வரலாற்றில் மிகவும் சிறப்பு பெற்றது என்றேன். வேலூர் புரட்சி இங்கு தான் நடைப்பெற்றது. இங்கு சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். 1806 ஜீலை 10ல் கோட்டைக்குள் ஆங்கில அதிகாரிகள் மீது தாக்குதல் தொடங்கினர். 150 வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களுமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் செய்தி கேட்டு வெகுண்ட ஆங்கிலேயர்கள் ஆற்காட்டிலிருந்து வந்து மறுநாள் 800 சிப்பாய்களை கொன்று குவித்தனர். நம் சுதந்திரம் இரத்தம் சிந்தி பெறப்பட்டது என்றேன்.
சார் அந்த பூமி முழுவதும் இரத்தமா இருந்திருக்கும்ல என்றான் வசந்த்.
சார் சாகும் போது அழுக்குரல் கேட்கவே பயமா பாவமா இருந்திருக்கும்ல என்றாள் சுவாதி.
நினைத்து பார்த்தேன். அய்யோ அதற்கு மேல் பாடம் நடத்த முடியவில்லை.
கமலம் கண்ணீர் வடிக்க தொடங்கினாள். ஏன் என்றேன். “சார் எங்க தெருவில ஒரு ரவுடிய ஓட ஓட வெட்டி கொன்னுட்டாங்க.. ரோடு எல்லாம் இரத்தம். பார்க்கவே பயமா, பயங்கரமா இருந்துச்சு . பாவம் சிப்பாய்கள் ”என அழுதாள். நான் அப்போது அழத்தொடங்கியவன் . இன்னும் நிறுத்த முடியவில்லை.
உங்க அப்பா சரியான லூசு என போன் பேசி முடித்தவள் கூறினாள்.
நான் அப்படியே உறங்கிப்போனேன்.
அந்த இறகு இப்போது பலத்த காற்றில் விடுப்பட்டது. ஒருபைத்தியம் போல் நிதானம் இல்லாமல் பறக்க தொடங்கியது.
கடா மீசையை முறுக்கிய படி காவல் காத்து கொண்டிருக்கின்றேன். அந்த சிறை கம்பிகளுக்கு பின்னால் பத்தே ஹைதர் நின்று கொண்டு இருக்கின்றான். திப்பு சுல்தானின் மூத்த மகன். “இது நம் பூமி. இதை நாம் தான் ஆள வேண்டும். நாம் யாருக்கும் அடிப்பணிய தேவையில்லை. நம்மிடம் இல்லாத ஒற்றுமையால் தான் அந்நியர்கள் நம்மை சிறைபிடித்து கைது செய்து வைத்துள்ளார்கள். நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் நாம் கம்பெனிக்காரர்களை எதிரித்து போரிட வேண்டும் “ பத்தே ஹைதரின் உரை எனது காதுகளில் ஏறவில்லை. ’
சுதந்திரம்’ என்ற வார்த்தையை முதன் முதலில் கேள்வி படுகின்றேன். இதற்கு முன்னால் நான் சிப்பாயக தானே இருந்தேன். இப்போது இவர்களுக்கு இருக்கின்றேன். வித்தியாசம் இல்லை. இருந்தாலும் நம் இனத்தவர்களையே எதிர்ப்பது தான் எனக்கு பிடிக்க வில்லை. போர் என்று வந்தால் அருகிலுள்ள இவன் தானே வருவான் சண்டைக்கு... எல்லாம் ஒன்று தான் என சும்மா இருந்தேன்.
இரவு காவலுக்கு பின் வீடு செல்ல தயாரானேன். ஓர் ஆங்கிலேயன் என்னை அழைத்தான். என் மீசையை சுட்டிக்காட்டி ஏதோ பேசினான். ஒன்றும் புரியவில்லை. என்னை படைத்தலைவன் (ஆங்கிலேயன்) அறைக்கு அழைத்து சென்றார்கள். உன் கடா மீசையை நறுக்கி விட்டு சாதரணமாக வா என்றான். மறுத்தேன். என்ன நினைத்தானோ தெரியவில்லை, என் மீசையை இழுத்து பிடித்து தன் கத்தியால் அறுத்து விட்டான். எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. கை நரம்புகள் புடைத்தன. அமைதியாக இருக்க சொன்னான் என்னுடன் வந்து ,தன் வேட்டியை பறிகொடுத்த சக காவலன். அவன் உடை வித்தியாசமாக இருந்தது.
வெளியில் வந்தேன். காது அறுப்பட்டு ஓடினான் ஒருவன். என்ன என்று விசாரித்தேன். கடுக்கண் கழற்ற மறுத்ததால் காதை அறுத்து விட்டார்களாம்!
அட கொடுமை! மறுநாள் என் தலைப்பாகையும் பறிக்கப்பட்டு தொப்பி வைக்கப்பட்டது.
பிழைக்க வழியில்லாமல் நிலத்தை பறி கொடுத்த விவசாயிகள் . இந்த படையில் ஏராளம். எங்கள் உணர்வுகள் பறிக்கப்பட்டன. இருந்த விளைநிலங்களுக்கு பறித்து கொள்ளப்பட்டன. வரி செலுத்த முடியாமல் அடிமைகளாக ஆக்கப்பட்டனர் பலர். வரி கட்ட தவறிய மன்னர்கள் சிறைபிடிக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டனர். வேறு வேலைகள் இன்றி கம்பெனி படையில் சிப்பாயாக பலர் சேர்ந்தனர்.
நானும் ஹைதரோடு சேர்ந்து இவர்களை எதிர்க்க முடிவெடுத்து விட்டேன். என்று மீசை போனதோ அன்றே இவர்கள் மீது வெறுப்பு அதிகமானது. எங்கோ மூலையில் இவர்கள் அந்நியர் என்று இருந்த வெறுப்பு பற்றிக் கொண்டது.
அன்று இரவு காவலுக்கு வந்தேன். ஆனால் நான் வரும் முன்பே ஹைதர் சிறையில் இருந்து தப்பித்திருந்தார். திடீரென்று இந்திய சிப்பாய்கள் அங்கிருந்த ஆங்கிலேயர்களை தாக்க ஆரம்பித்தனர். நானும் நிலமையை புரிந்து கொண்டு வாளை உருவி சுழற்ற ஆரம்பித்தேன். தோட்டாக்கள் சீறி பாய்ந்தன. இருந்தாலும் தப்பித்தவாறு எதிர்பட்ட ஆங்கிலேயரை தாக்கினேன்.
விடியலில் இரவின் கருமையை சிவப்பாகி கொண்டிருந்தது. முற்றிலும் இருள் அகற்று விடும் இந்த விடியலை போல் நம் வாழ்வு ஒளிமயமாகி விடும் என்று எண்ணியப்படி போரிட்டேன். ஆனால் எங்கிருந்து வாந்தார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் ஆர்காட்டில் இருந்து வந்த படை என்றார்கள். பீரங்கி முழங்க தொடங்கியது. டம்... டம்.... டுமீல்... டும்... டுமீல் ...இப்போது நாங்கள் கொத்து கொத்தாக மடிய தொடங்கினோம்.
ஆயிரம் போர் இருப்போம். 800 பேர் பிணங்களாக கிடந்தார்கள்.
மீதி இருந்தவர்கள் சிறை பிடிக்கப்படனர். நானும் சிறை பிடிகப்பட்டேன்.
என்ன நடந்தது என அறியும் முன்னே துப்பாக்கியை கொண்டு தாக்க ஆரம்பித்தான். எதற்காக கலவரம் வெடித்தது. ஏன் கொன்றீங்கள். ஹைதர் எங்கே? என கேள்விகளால் துளைத்தார்கள்.
என் அருகில் இருந்தவன் வாயில் துப்பாக்கியை விட்டு , நடந்ததை சொல் என்று விசாரித்தார்கள். அவன் தெரியாது என்று
தலையாட்டினான். விசையை அழுத்த மூளை சிதற இரத்தம் தெறித்தது. என் கண்களில் வழிந்தது. இந்த முறை நான்.
நீங்கள் பயந்த படி துப்பாக்கியை பயன்படுத்தவில்லை. என்ன சொல்வது? உன்னை பிடிக்க வில்லை. நீ வரி என்ற பெயரில் புரியும் அக்கிரமம் சகிக்க வில்லை. எங்கள் கலாச்சாரத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பு உன்னை வெறுக்க செய்கின்றது என சொல்ல ஆசை தான்.
“வாயை திறந்தேன். உன்னை பிடிக்க வில்லை. என் சிற்றரசை விட்டு வெளியேறு. எம் கோட்டையை எமக்கு கொடு” என பயத்தையும் மீறி கூறிவிட்டேன். அவனுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை!
சிரித்தான் பரங்கியன். இருவர் வந்தனர். என் இரு கைகளையும் பிடித்து இழுத்து சென்றனர். திமிறினேன். அடுத்து இன்னும் நான்கைந்து பேர் வந்தனர். எல்லோரும் சேர்ந்து என்னை தூக்கி, பீராங்கியின் வாயிலில் கட்டி வைத்தனர்.
சண்டைக்கான கலகத்துக்கான காரணத்தை கூற மறுத்த பலரும் பீராங்கி குண்டுக்கு பலியாக துரத்தில் கைகள் கால்கள் கட்டி நிறுத்தப்பட்டனர். எப்படியும் தப்பித்து விட வேண்டும். என் மனைவி நினைவிற்கு வந்தாள். என் குழந்தைகள் வந்தனர்.
அடுத்து நான் யாரை நினைக்க டம் என்று பீரங்கி வெடித்தது. துண்டு துண்டாகி போனேன்.
கதவு காற்றிற்கு டம் என்று அடித்தது.
“என்னங்க கதவ சாத்திட்டு தூங்கிறது இல்லையா? அப்ப இருந்து டம் டம் ன்னு கதவு அடிக்கிற சத்தம் கேட்கலைய்யா? என கத்தினாள் மனைவி.
என் காதிகளிலும் அந்த டம் டம் ஓசை கேட்க தான் செய்கின்றது என்றபடி அழுகின்றேன்.
அவள் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றாள்.
பைத்தியம் தான். நான் பைத்தியம் தான்!
இந்த பைத்தியம் இன்று இல்லை என்பதால் தான் நாம் பெற்ற சுதந்திரத்தின் மகிமை கூட அறியாது, சிறுபான்மையினர் குழந்தை பெற்று கொள்ளக்கூடாது என்று கூச்சல் போடுகின்றோம்!
மதுரை சரவணன்.

2 comments:

துளசி கோபால் said...

போனவாரம்தான் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியது) படிச்சு முடிச்சேன். அதுலே வேலூர் கோட்டை சண்டைகள் எல்லாம் விவரமாக வரும். அந்த நினைவுவந்துருச்சு உங்க பதிவை வாசிக்கும்போது.

ஒன்னே ஒன்னு புரியலை:(

// சிறுபான்மையினர் குழந்தை பெற்று கொள்ளக்கூடாது என்று கூச்சல் போடுகின்றோம்!//

அப்ப பெரும்பான்மையினர் மட்டும் குழந்தைகளைப் பெத்துக்கலாமா?

திண்டுக்கல் தனபாலன் said...

அடப் போங்கப்பா...!

Post a Comment