Friday, April 10, 2015

இசைக்காத இசைக்குறிப்பு - வேல்கண்ணன் - கவிதைகள் குறித்து விமர்சனம்.

இசைக்காத இசைக்குறிப்பு - வேல்கண்ணன் - புத்தக விமர்சனம்.

“ஒரு வரி கூட எழுதவில்லை இன்று எழுதிவிட வேண்டும் ஒரு வரியாவது” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு வேல்கண்ணன் கவிதை  குறித்து எழுத தொடங்கினேன்.
‘முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி’
’கிழிந்து தொங்குகின்றது வானம்’
‘கர்ப்ப கிரஹத்தில் எதிரொலிக்கிறது/ கருவறையற்றவளின் விசும்பலோசை’
போன்ற வரிகள் என்னை எழுத விடாமல் தொடர்ந்து என்னுள் ஒருவித இரசமாற்றத்தை ஏற்படுத்தி பலவித சிந்தனையை பறக்க விடுகின்றன.  

கரையோரத்து மணலை
இரு கைகளால் அள்ளி
மூடினேன்.
மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து
ஓடிக்கொண்டிருக்கிறது 
நதி என்ற கவிதை வேல்கண்ணனின் நினைவோட்டமாக இருந்தாலும், அது தரும் குறுகுறுப்பு கொஞ்சம் நெஞ்சை சுடத்தான் செய்கின்றது.

எங்கள் ஊரின் வைகையை கடக்கும் போதெல்லாம், என் குழந்தைகளுக்கு கைகளில் அள்ளிக்காட்ட மணல் கூட இல்லாமல் இருப்பது குறுகுறுக்கத்தான் செய்கின்றது. சாக்கடைகள் வழிந்தோட நாற்றத்துடன் காணும் வைகையின் மீது குழந்தைகள் தொடுக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், வேகமாக ஓசையெழுப்பி கடந்து செல்லும் வாகனங்களில் உதிரும் மணல் கண்களை நெருடவே, மெல்ல கண்களை கசக்கி செல்கின்றோம். இந்த குறுகுறுப்பை எல்லோரும் தங்கள் ஊரில் ஓடும் நதியோடு உணர்ந்திருப்பீர்களானால், நிச்சயம் அது வேல்கண்ணன் முன் வைக்கும் அரசியல் எது என்று நீங்கள் உணரக்கூடும்.
வேல்கண்ணன் வைக்கும் அரசியல் கவிதையில் சொற்பமாக இருந்தாலும் அதுவே இக்கவிதை தொகுப்பு பேசப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றது.  

வேல்கண்ணனின் கவிதை சமகால அரசியலை பேசுகிறது. அதற்காக அவர் எந்தவித கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்த வில்லை. அதேசமயம் அதை எளிதாக புரியாத விதத்தில் தமிழக அரசியல் தலைவர்களை செவிட்டில் அறைவது தெரியாமல் கடிந்து ஈழம் குறித்து பேசுகின்றார். அதனாலே வேல்கண்ணன் முதல் போட்டியிலேயே எளிதாக டபுள் செஞ்சுரி அடித்து விளாசுகின்றார்.

மறுக்கையில்
நிர்மூலமாக்கப்பட்ட பிடரியில்
வெடித்தது துவக்கு
ஒன்றன் பின் ஒன்றாக
கையொப்பம் இட்டு நிமிர்கையில்
உடைந்தது சூரியன்
என்று முடியும் கவிதையில் ……துவக்கு என்ற சொல் பிரயோகம் இலங்கையில்
துப்பாக்கிக்கு பயன் படுத்தும் சொல்லாகும்.  உடைந்தது சூரியன் என்ற வரிக்கு நான் அர்த்தம் கூறத் தேவையில்லை. ஆக அவரின் கவிதைகள் சமகாலம் குறித்து பேசுகின்றன என்பதை இக்கவிதை உறுதிப்படுத்துகின்றது.
“இறுதி செய்தி” என்ற கவிதையில்

இனம் அழித்தல் பற்றியும்
இனம் அழிதல் பற்றியும் பேசிக்கொண்டோமே
அது நடந்தேறி விட்டது
என்று சொல்லிவிட்டுப்போகத்தான் வந்தேன்.
நான் இனி திரும்பி வரப்போவதே இல்லை
இனி நீ ஒளியவேண்டிய அவசியமும் ல்லை” என்று சலிப்போடு முடிக்கிறார் வேல்கண்ணன்.

இனி நீ ஒளிய வேண்டிய அவசியமும் இல்லை என தமிழக தலைவர்களை பார்த்து நகைப்பது போலவே உள்ளது. அந்த நகைப்புக்கு பின் பொதிந்துள்ள எரிச்சல், மன கசப்பு, மனக்குமுறலை சொல்லி மாளாது. இது ஒவ்வொரு தமிழனிடமும் உள்ள மன எரிச்சலாகும். வேல்கண்ணன் முன்னிலை படுத்தும் அரசியலை நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லை எனில் இக்கவிதையை வாசிப்பதால் பயன் எதுவும் நிகழ்ந்துவிடாது.

வேல்கண்ணனின் கவிதைகள் பால்யம்காமம்கழிவிரக்கம்ுயரம்நிராயாசைதாம்பத்யம்ாதல்துரோகம்...என இசைத்துக் கொண்டே இருக்கின்றன. அவரின் அனுபவங்கள் தந்த கசப்பு, இனிப்பு தன்னைத்தானே இசைக்கமுற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அவரின் கவிதைகள் பல இடங்களில் அதிபுனைவு வழியாக பயணித்து ஒரு கவித்துவத்தை அடைகின்றன. ஒரு கதை சொல்லலில் ஆரம்பித்து, தன் ஆற்றாமையை கவித்துவமாக்குகின்றார். அவர் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு கவிதைகளிலும் இன்னும் புதிய புதிய சொற்சேர்க்கைபுதிய மொழிதல் முறைசில பரிசோதனைமுயற்சி,அலுப்பற்ற மொழிநடை இவற்றையெல்லாம் அமிர்தம் சூர்யா கூறியது போல வரும் காலங்களிலும்செய்து பார்க்கவேண்டும்.   
இந்தத் தொகுப்பில் ’என் காதல் விதையும் நீயும்’, ’மௌன தவம்’, ’மௌனப் புரிதல்’, சரிகை வண்ணத்துப் பூச்சி...போன்ற கவிதைகளில்  பறக்கிற வண்ணத்துப்பூச்சிஅளவுக்கு அதிகமாகவே தமிழ் நவீனக் கவிதைகளில் பறந்துஅலுத்துவிட்டன என்றாலும், அதனால் ஏற்பட்ட தாக்கத்தால் அவை அவரை அறியாமலே பறக்கின்றன.இக்கவிதைகள் வேல்கண்ணனை சமகால கவிஞர்கள் மத்தியில் இருந்து ஒரு அடி தூரம் எட்ட வைக்கின்றது. வரும் காலங்களில் அவற்றை தவிர்ப்பார் என நம்புகின்றேன். இது குறையாக கருதவில்லை. இருந்தாலும் பல நிறைகளை கொண்ட வேல்கண்ணணிடம் வாசகர்கள் எதிர்பார்ப்பது அதனை விட சிறந்த ஒன்றை தான். பட்டாம்பூச்சிகளை கொண்டு கவிதைகளை எழுதுவதற்கு நிறைய பேர் இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு முறையும் சென்னைக்கு பயிற்சிக்கு செல்லும் போது வேல்கண்ணனுக்கு போன் செய்வதுண்டு. அவரும் ஒவ்வொரு முறையும் சந்திக்க முயற்சி செய்வார். அந்த வாய்ப்பு எனக்கு வாய்க்கவில்லை. இதுவரை நாங்கள் இருவரும் நேரில் சந்தித்தது இல்லை. இந்த கவிதை வாசிப்பின் வாயிலாக அவரை நான் சந்திக்க கோவை இலக்கிய நிகழ்வு 49 வாய்ப்பளித்திருக்கின்றது. எனது மனமார்ந்த நன்றிகள். அவரின் கவிதைகள் வாயிலாக வேல்விழியை அறிய முடிந்தது. கழுத்தை இறுக்கிய பிஞ்சுக்கரங்களில் தன் ஆற்றமை , கசப்பு , எரிச்சல் என எல்லாவற்றையும் மறந்துவிடுவதையும் அறிந்து மகிழ்ச்சி கொள்கின்றேன். என்னைப்போல் ஒருவன் இருந்தால் யாருக்கு தான் மகிழ்ச்சி இருக்காது!

தீவிர இலக்கியத்தின் மீது ஆசையும் பற்றுதலும் இருந்தாலும் அந்த வெகுஜன இயல்பு என்றுமே மாறுவதில்லை. ஏனெனில் ஒரு தீவிர வெகுஜன இயல்பு தான் ஒரு வாசகனை தீவிர இலக்கியத்துக்குள் எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் இயங்குபவன். அந்தவகையில் என் வெகுஜன ரசிப்புக்குள் பயணிக்கும் வேல்கண்ணனின் கவிதை.
சவுக்கால்/தன்னையே அடித்துக்கொள்ளும்/இளைஞனின் கால் சலங்கை ஒலிக்கேற்ப/இடுப்பசைத்தபடியே/ முதுகின் வழி பாதம் தொடும்/ சிறுமி.
அதிர்ந்து பார்க்கும் என்னுடைய/வலது மணிக்கட்டை தொட்டு/ ‘பசிக்குதுண்ணா’/என்றபடி கைநீட்டும் பெண்.
செல்லும் பேருந்து வந்து விட்டது.
என்னிடம் இருப்பது ஒன்றுதான்./பயணத்தை தொடங்கவில்லை/ இன்னும் நான்.
இது போன்ற நிறுத்தங்கள் தான் தொடர்ந்து நம்மை வேல்கண்ணனுடன் பயணிக்க செய்கின்றன. வேல்கண்ணன் தொடர்ந்து எழுதவேண்டும். அவரின் அடுத்தபடைப்புக்காக ஒரு வாசகனாக காத்திருக்கின்றேன். வாழ்த்துக்களுடன்.   

மதுரை சரவணன்.

No comments:

Post a Comment