கரும்பலகை - அர்ஷியா. எஸ் நூல் விமர்சனம் - மதுரை சரவணன்.
சமீபகாலமாக கல்வி, கல்வி சார்ந்த மாற்றங்கள் குறித்து பேசுவதற்கு நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. கல்வி என்பது ஆசிரியர்களின் மனநிலையை கொண்டும் கணக்கிடப்பட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தியும், ஆசிரியர்களை அலைக்கழிக்க செய்வதால் ஏற்படும் அதிகார வர்க்கத்தின் லாபத்தையும் வெட்ட வெளிச்சமாக்கியும், இதுவரை யாரும் பேசாப்பொருள் குறித்து எஸ்.அர்ஷியாவின் ’கரும்பலகை’ நாவல் பேசுகின்றது.
எஸ்.அர்ஷியா ஆசிரியர்களின் பணி இடமாற்றம் என்ற ஒரு மையக்கருத்தை வைத்து கொண்டு இந்நாவலை எழுதியுள்ளார். பணி நிரவல், பணி மாறுதல் என்பது ஆசிரியர்களின் மனநிலையை எவ்வாறு சிதைவடைய செய்கின்றது, இப்பணி நிரவல் காரணமாக ஆசிரியர்கள் ஊக்கம் இழந்து விடுவதுடன், குடும்ப சிக்கல்களிலும் தள்ளப்படுகின்றனர் என்பதை இராஜ லட்சுமி என்ற ஆசிரியரை கதாநாயகியாக படைத்து, நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றார். பல மைல்கள் கடந்து குடும்பத்தை பிரிந்து ஒத்தையாக வாழும் ஆசிரியர்களின் மன அவஸ்தைகளை மிக எதார்த்தமாக தன் விறுவிறுப்பான நடையில் மிக அழுத்தமாக எஸ்.அர்ஷியா தனது கரும்பலகை நாவலில் பதிவு செய்துள்ளார்.
இந்த நாவலில் நாயகி இராஜ லட்சுமியின் முன் அனுபவம் மெட்ரிக் பள்ளியாக இருப்பதாக காட்டி, தனியார் பள்ளியின் வணிக மனோபாவத்தை , மிக அருமையாக சாடுகின்றார். கிராம பள்ளிகளின் நிலமையையும், கிராம பள்ளிகளின் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலமையையும், கட்டிடங்கள் கட்டுவதில் தலைமை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் கமிஷன்கள் குறித்தும் உண்மையை போட்டு உடைக்கின்றார்.
கிராம மாணவர்களின் சினிமா மோகம் குறித்து பேசும் போது மாணவிகள் தங்கள் பெயர்களை சினிமா நடிகைகள் பெயர்கள் மூலம் அழைப்பதில் இருந்து வெளிப்படுத்துகின்றார். இந்த நாவலை படிக்கும் போது ஆசிரியர்கள் ஏன் இந்நாவலில் ஆசிரியர் அர்ஷியா பேசும் பிரச்சனைகள் குறித்து கூட்டணியில் பேசவில்லை. அரசுக்கு அதிகார வர்கத்திற்கு எதிராக குரல் எழுப்பவில்லை ? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. தோழர் அர்ஷியா சமூக அக்கறையுடன் எழுதிய இப்படைப்பில் ரியல் எஸ்டேட் பற்றியும் சாடுகின்றார். ரியல் எஸ்டேட் தொழில் நுணுக்கம் குறித்தும் பேசுகின்றார்.
பணிமாறுதல் பெற்ற பின்னும் ஆசிரியர்கள் படும் அவஸ்தையை இவ்வாறு விவரிக்கின்றார்.
“சொந்த மாவட்டம்ன்னு வந்தாச்சு. வந்ததுக்கு அப்புறம்தான் தெரியுது. தூராத்து ஊரே பரவாயில்லைன்னு. ரெண்டு பஸ்ஸீ மாறிப்போய் வர்றதுகுள்ளாற எலும்பெல்லாம் கழண்டுருது. அதே நேரம் தான் இங்கேயும் ஆகுது” ( பக் 148)
பணிமாறுதலுக்கு பணம் எவ்வளவு முக்கியம் ? என்பதை அர்ஷியா இந்நாவலில் வெளிச்சம் போட்டு காட்டுகின்றார்.
“அமைச்சர் கையெழுத்து ஒண்ணரை லட்சம். அதுல கையெழுத்து வாங்கி, எஜுகேசன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைக்க எனக்கு ஐம்பதாயிரம். எஜூகேசன் டிப்பார்மெண்டுல எந்த கேள்வியும் கேட்காம அந்தப் பேப்பரை நகர்த்தி, சீல் வச்சு உங்கக் கைக்கு வந்து சேர எல்லாமா அம்பதாயிரம்,. ஆக ரெண்டரை லட்சம். ரெடியா இருந்தா , வாங்க !” (பக்150)
மெட்ரிக் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மதிப்பெண் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதையும் போகிற் போக்கில் சாடுகின்றார்.
“கூண்டிலடித்து, விலங்குகளுக்கும் பயிற்சி கொடுப்பது போலிருக்கும். இதிலெல்லாம் ராஜ லட்சுமிக்கு உடன்பாடு இல்லை. அங்கே, பிரம்புக்கம்பின் பயன்பாடும் இருந்தது. மெத்து மெத்தான அச்சதை விளர்ந்து, கன்றிப்போகச் செய்யும்அடிக்கு பயந்து , சுவரேறிக்குதித்து ஓடிப்போன, தாக்கு பிடிக்க முடியாத மாணாவர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் பலரை, பெற்றோரே மீடு, திரும்ப அழைத்துக் கொண்டு வந்து, இனி இப்படி என் மகன் நடந்து கொள்ள மாட்டான் என்று அழுவாச்சி கடிதம் எழுதிதந்து, பெருமை தேடிக்கொள்வார்கள். “ பக் 22.
கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் எவ்வாறு பந்தாடப்படுகின்றனர். ஆசிரியர்களுக்கு கல்வி அலுவலக பணியாளர்கள் தரும் மரியாதையை இந்நாவல் சாடுகின்றது. அதே நேரம் ஆசிரியர்கள் செய்யும் தில்லுமுல்லு தனத்தையும் தோல் உறித்து காட்டுகின்றார் அர்ஷியா. ஆசிரியர்களை போற்றாத சமூகம் என்றும் உருப்படாது. நல்ல ஆசிரியர்கள் எந்த சூழ்நிலையிலும் தன் கடமையை தவறுவதில்லை என்பதை இந்நாவலின் கதாநாயகி ராஜலட்சுமி வாயிலாக மிக அருமையாக படைத்துள்ளார். பாராட்டுதலுக்குரியத். அனைவரும் , குறிப்பாக கல்வி துறை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் படிக்க வேண்டிய நாவல். சமீபகாலத்தில் சமகால நிகழ்வுகளை கல்விதுறையில் உள்ள பிரச்சனைகளை முன் வைக்கின்ற நாவல் கரும்பலகை ஆகும்.
புத்தகத்தின் பெயர் : கரும்பலகை
ஆசிரியர் பெயர் : எஸ். அர்ஷியா
பதிப்பகம்: எதிர் வெளியீடு
விலை ரூ. 150
விமர்சனம் : மதுரை சரவணன்.
(இந்த நூல் விமர்சனம் மாணவர் உலகம் 2015 ஏப்ரல் இதழில் வெளிவந்துள்ளது )
3 comments:
அட்டகாசம் பண்ணிட்டேள், போங்கோ.
அட்டகாசம் பண்ணிட்டேள், போங்கோ.
நல்லதொரு கல்விசார்ந்த நூலை சிறப்பாக அறிமுகப்படுத்தியதற்கு நன்றி திரு சரவணன். அந்த நூலை நான் விலைகொடுத்து வாங்க முகவரி மற்றும் தொலைபேசி எண் தரமுடியுமா? அப்படியே உங்கள் முகவரியையும் தெரிவித்தால் சமீபத்தில் வெளிவந்திருக்கும் “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” எனும் எனது கல்விச்சிந்தனைகள் சார்ந்த நூலைத் தங்கள் பார்வைக்கு அனுப்ப விரும்புகிறேன். எனது மின்னஞ்சல்-muthunilavanpdk@gmail.com நன்றி வணக்கம்.
Post a Comment