Monday, April 13, 2015

இரத்தம் கொதிக்கின்றது ...கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்!

படபடக்கின்றது காலண்டர் தாள் !
*
கண்கள் திறக்க முடியவில்லை. மனத்திற்குள் அழுத்தம் உண்டாகியது. காலண்டரில் தேதி ஏப்ரல் 8 என்று காட்டியது. காற்றாடியில் காலண்டர் காகிதம் படபடத்தது. அதையே கவனிக்க தொடங்கினேன்.
காற்று சுழன்று அடிக்க தொடங்கி இருந்தது. இப்போது சத்தம் மாறி இருந்தது. குதிரையின் குளம்படி சத்தம் காதை கிழித்தது. அதற்கு மேல் தூங்க வில்லை. எழுந்து கொண்டேன். எனக்கு நினைவுகள் சுழல ஆரம்பித்தன.
எனது அருகில் துப்பாக்கி இருந்தது. எல்லோரும் தயாராகுங்கள் என்று ஆங்கிலமும் தமிழும் கலந்த சத்தம் என் காதுகளை கிழித்தன.
துப்பாக்கி ராவையை எடுத்தேன். அந்த கொழுப்பின் வாசனை எனக்கு குமட்டலை உண்டாக்கியது. வாந்தி வருவது போல் இருந்தது. எனக்கருகில் இருந்தவன் மஞ்சள் நிற திரவமாக வாந்தி எடுக்க தொடங்கினான். எனக்கு மண்டை கிர் என்று சுற்ற ஆரம்பித்தது. என் மனதை வாட்டிய அந்த வாதை வெகுண்டு எழுந்தது. துப்பாக்கியை ஒரு தோளில் போட்டு கொண்டு என் உடை வாளை எடுத்து சுழற்ற ஆரம்பித்தேன். இனி யாராவது இந்த கொழுப்பை பயன்படுத்த சொன்னால் அவ்வளவு தான்.. !
சார்ஜண்ட் மேஜர் ஹியூசன் என்னை பிடித்து கட்ட சொன்னான்.
என்னை பிடிக்க எவரும் முன் வரவில்லை. பெங்காலி மொழியில் என்ன செய்கின்றாய்...! என சிலர் கூச்சலிட்டனர். இது போன்ற எந்த குரலும் என் காதுகளை அடையவில்லை.
யாரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. நான் அந்த மேஜரை என் வாளில் வெட்டி சரித்தேன். முதல் முறையாக கும்பினியனின் இரத்தத்தை இந்த பூமி சுவைத்தது ! இதுவரை எந்தன் இனத்தவனின் இரத்தத்தை வேண்டா வெறுப்பாக சுவைத்திருந்த பூமி உடனே அவனின் இரத்தத்தை உறிஞ்சியது.
இப்போது குதிரையில் லெப்டினெட் அந்தஸ்தில் உள்ள ஒருவன் வேகமாக வந்தான். எல்லோரும் பா... கத்தியை கீழே போடு என்றனர். நிச்சயமாக இந்த குரல்கள் பெங்காலியின் குரல்கள் அல்ல. இவை ஆங்கிலம் கலந்திருந்தன.
பா ...த்து போ.. என்றபடி எந்தன் துப்பாக்கில் ரவையை திணித்தேன். திணிக்கும் போது இருந்த அத்தனை வெறுப்பையும் ஒன்றாக டிகரில் சேர்த்து அழுத்தினேன். குதிரையில் இருந்து சரிந்தான் பா. இப்போது பா துப்பாக்கியில் குறிபார்க்க , என் வாளை எடுத்து சுழற்ற ஆரம்பித்தேன். அவனும் சரிந்தான். மீண்டும் இந்தியத் தாய் ருசிக்க ஆரம்பித்தாள் . அவள் உதட்டின் சாயம் கண்டு ரசித்தேன்.
நான் ஏன் இப்படி கொலை வெறியனானேன். என்னை நானே கிள்ளி பார்த்தேன். இப்போது ஒரு கம்பெனிக்காரன் என்னை குறி பார்க்க , எதிரே இருந்த பெங்காலியன் அவனை தட்டி விட்டான். ஒருபுறம் கம்பெனிக்காரர்கள். மறு புறம் என் இனத்தவர்கள். “பாண்டேயை தொடவிடமாட்டோம்.” .பாண்டே எனது பெயர் என அறிந்து கொண்டேன்.
கர்னல் வீலர் வருகிறார் என்று கம்பெனிக்காரர்கள் சொன்னார்கள். அனைவரும் அமைதியாகினர். இருந்தாலும் பாண்டே பாண்டே என்பது மட்டும் என் காதில் விழுந்தது. அந்த கொழுப்பின் அறுவெறுப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. எனக்கு மட்டும் அல்ல.. இது கொழுப்பின் மீது மட்டும் இருந்த வெறுப்பு அல்ல என்பது மட்டும் எனக்கு புரிந்தது. அது அடி மனதின் ஆழத்தில் இருந்த வெறுப்பு . கம்பெனியரின் மீது இருந்த வெறுப்பு.தாய் மண்ணின் மீது இருந்து பிடிப்பினால் உருவான வெறுப்பு என்பது என் வாளில் இருந்து கொப்பளித்து பூமியை நனைத்து கொண்டிருந்த இரத்தம் கூறி கொண்டு இருந்தது.
இப்போது எந்தன் வாள் கீழே சரியத்தொடங்கியது. இப்போது கம்பெனியர்கள் என்னை நெருங்கி கொண்டிருந்தனர். எனக்கு சுயநினைவு தட்டியது. இவர்கள் கையிலா சாவது? துப்பாக்கியை எடுத்தேன்.. சுட்டு கொண்டேன். அதற்குள் ஒருவன் என் மீது பாய்கின்றான். குறி தவறி காயமடைகின்றேன்.
எனக்கு வலி பொறுக்க முடியவில்லை. அது இராணுவ முகாம் என்பது மட்டும் தெரிகின்றது. சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள். யார் உன்னை தூண்டியது சொல் ? என்று புரியாத பெங்காலி மொழியில் ஆங்கிலம் கலந்து கேட்கின்றான் ஒருவன். உனக்கு உயிர் பிச்சை தருகின்றோம் சொல் என்று என் மீது இரக்கம் கொண்டு ஒருவன் பேசுகின்றான்.
“ஆங்கிலேயரை சுட்டேன். அவர்கள் உயிர் போய்விட்டது. எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. எனக்கு தேசம் தான் உயிர் . அது தான் என் மதம். அது தான் என் தர்மம். தேசம் தெய்வம் தர்மம் இம்மூன்றின் பெயரில் வாளை சுழற்றினேன். என் தேசத்திற்காக என் உயிரை கொடுப்பேன். இது என் ஒருவனால் நிகழ்ந்தது அல்ல. என்னைப்போன்ற மங்கல் பாண்டே பலரும் இருக்கின்றார்கள் “
“உனக்கு தூக்கு உறுதி “
சிரித்தேன். என்னை பைத்தியம் என்றார்கள்.
1857 ஏப்ரல் 8 இப்போது காலண்டர் பட படத்தது. தூக்குப்போட கயிறு மாட்டுபவர்கள் வர மறுக்கின்றார்கள் என்றனர். அவர்கள் தூக்கு மாட்டினால் உனக்கு ஒரு இராஜாங்கத்தை தருகின்றோம் என்றனர். அவர்கள் ஏற்று கொள்ள வில்லை. நீங்கள் என் இரத்தமடா? ஒரு உயிர் போக விட மாட்டீர்கள் என்பது தெரியும்! நான் இங்கு மடிய வில்லை. விதைக்கப்படுகின்றேன் என்றேன்.
வேறு இடத்திலிருந்து தூக்கு மாட்ட ஆள்களை அழைத்து வந்தனர். என்னை ஈட்டி, கத்தியை கொண்டு மிரட்டி , கயிற்றில் கட்டி இழுத்து வருகின்றனர். அப்போதும் அவர்கள் என்னிடம் ஆசை வார்த்தை காட்டினர்.
“ உயிர் தப்பிக்கலாம். சொல். உன்னுடன் சேர்ந்து செயல்பட்டது யார்? “
“சொல்ல மாட்டேன்”
இப்போது என் கழுத்து இறுக்கப்படுகின்றது.
1857 போராட்டத்தில் முதல் பலி மங்கள் பாண்டே !
ஏப்ரல் 8 காலண்டரில் படபடக்கின்றது. எழுந்து நிற்கின்றேன்.
டீ வருகின்றது. கழுத்தில் இறுக்கி இருந்த துண்டை எடுத்து போட்டு டீயை சுவைத்தப்படி செய்தி தாள் படிக்கின்றேன். மங்கள் பாண்டே பற்றி எந்த செய்தியும் காணவில்லை. சுதந்திர இந்தியாவில் அதற்கான ஆணிவேர் மறக்கடிக்கப்பட்டிருந்தது.
பாரதிய ஜனதா அதன் தேர்தல் அறிக்கையில் கூறியப்படி செயல்படவில்லை என சுப்ரமணிய சுவாமி பேட்டி என்றிருந்தது. ஆ ரூட் மாறுதே என்று படிக்க ஆரம்பித்தேன். எனக்கு காலண்டர் படபடப்பது தெரிய ஆரம்பித்தது. அய்யோ...!
மதுரை சரவணன்.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ...!

G.M Balasubramaniam said...

ஏப்ரல் 8 உங்களை ஒரு உசுப்பு உசுப்பி விட்டிருக்கிறது. தேவைதான்வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

படிக்கப் படிக்க ஆவேசம் வருகிறது இப்படி நாட்டுக்குழைத்த பலரை மறப்பது நமது வழக்கமாகப் போயிற்று.
மங்கள் பாண்டேயை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி

Post a Comment