நீண்ட நாட்களுக்கு பின் என்னுடைய பள்ளி நண்பனும் இன்றும் என்னைப் போன்று உதவி பெறும் பள்ளி ஆசிரியருமான,( கிருஸ்துவ பள்ளியில் பணியாற்றும் ) இளம் ஹீரோ, புன்னகை மன்னன், என்றும் மாறாத இளமையுடன் இருக்கும் ராபர்ட்டை சந்தித்தேன்.
இந்த மாதிரி ஹீரோக்கள் சிக்னலில் தான் சிக்குவார்கள். அவர்களுக்கு சிவப்பு விளக்கு எரியும் போது, அவர்களுடன் பேசுவதற்கு நமக்கான பச்சை விளக்கு எரியும்.
“டேய் எப்படி இருக்க ? நல்லா இருக்கீய்யா? வாடா டீ சாப்பிடுவோம்” என்று பத்தாம் வகுப்பு மாணவனைப்போன்று, என்னை மறந்து அந்த திணமணி தியோட்டர் சிக்னலில் கத்தினேன். முன்னே நகரமுடியாமல் தவித்து கொண்டிருந்த ஆட்டோவில் இருந்த அனைவரும் அந்த கண நேரத்தில் என்னைப்பார்த்து பொழுதை போக்க தொடங்கினார்கள்.
அவனே ஆட்டம் கண்டு விட்டான்.
ஏண்டா கத்தி மானத்தை வாங்குற..? பார் எல்லோரும் நம்மையே பார்க்கின்றார்கள் என்றான். அட நீ என் நண்பண்டா.. உன்ன பார்த்த குசி. ஊர் உலகத்தை விடுடா..எப்படிடா இருக்க. வீட்டுல எல்லோரும் சவுக்கியமா? என்றேன்.ம்ம் என்றான். வண்டிய நிறுத்துடா ஆறுமுகம் டீக்கடையில் டீ சாப்பிடுவோம் என்றேன்.
டிராபிக்கில் சத்தமாக நான் பேசுவது கண்டு பயந்தவன், டீ என்ன வா ... டிபனே வாங்கி தருகின்றேன் என்றான். டேய் சம்பளம் உனக்கு ஏறிவிட்டதா? எங்க சைட்டு பக்கம் சம்பளம் இன்னும் ஏறவில்லை என்றேன். சம்பளத்தை வச்சாடா வண்டி ஓடுது! டிப்பனுக்கு காசு தரமாட்டீய்யா என்றேன்.
நான் என்ன உன்னை மாதிரியாடா? கடன் வாங்கிறதும் இல்லை. கடன் கொடுக்கிறதும் இல்லை. இருக்கிறத வச்சு ஓட்டுற அன்றாடம் காட்சி . வக்கத்த வாத்தி தாண்டா இன்னும் என்றேன். இன்னும் உனக்கு அந்த வாய் கொழுப்பு மாறவே இல்லை என்றான் . அது கிருஸ்துவ பள்ளி கற்று கொடுத்த பாடம் என்றேன். போதும்டா உன் பிரசங்கத்தை ஆரம்பிச்சுடாத என்றான்.
ஏண்டா வாய் கொழுப்பா இருக்கிறது தப்பா என கேட்டேன். சீக்கிரம் சிலுவையில் அறைந்து விடப்போகிறார்கள் என்றான். அட போடா சிலுவையில் அறைந்து கொள்வது பேசனாகி போயிருச்சு. என்னமோ பெரிசா இன்னும் பைபிள் காலத்திலேயே இருக்க என்றேன். அவன் என் காதருகே வந்து சத்தமா பேசாத என்றான்.
அங்க பாரு .. என்றேன். அவன் பார்த்தான். எதிரில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பெண் , வண்டி ஓட்டிக் கொண்டிருப்பவன் மண்டையில் தட்டி, ஏபிகே டெக்ஸ் பக்கம் போ என்று கூறி கொண்டிருந்தாள். நான் என்ன சொல்ல வந்தேன் என்பது அவனுக்கு புரிந்தது. புரியாதவன் மாதிரி வா ததா (அண்ணன்) பொங்கல் கடைக்கு போவோம் என்றான். நாடே இப்படி தாண்டா இருக்கு என்றேன். அவன் சிரித்து கொண்டே இரண்டு பொங்கல் , இரண்டு ஆம்பளேட் என்றான்.
டேபிளில் அமர்ந்தோம். நுழையும் போதே ஆர்டர் சொன்னதால், இலையை உடனே போட்டான். டேய் சுவீட் என்றேன். கேசரி மஞ்சள் நிறத்தில் என்னை ஈர்த்தது. ஒரு கேசரி ஆர்டர் செய்தான். இருவரும் பங்கு போட்டு கொண்டோம். சுவையான பொங்கல் வந்தது.
மதுரை திணமணி (தற்போது இல்லை ) தியேட்டர் எதிர்புறம் உள்ள பொங்கல் கடையில் மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரை பொங்கல் விதவிதமாக சுவையுடன் கிடைக்கும்.பல பொங்கல் கடைகள் அப்பகுதியில் உள்ளன. இதை நடத்துபவர்கள் சௌராஷ்டிரா இனத்தை சார்ந்தவர்கள்.
சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள பகுதி . மேலும் அந்த சமூகத்தினர் செய்யும் பொங்கல் தனி சுவையும் ரூசியும் உடையது. அதனை சுவைக்க தவறியவர்கள் பாக்கியம் அற்றவர்கள். அவர்கள் செய்யும் அந்த புளியோதரை எங்குமே இப்படி இருக்க வாய்ப்பே இல்லை.
சௌராஷ்டிரா சமூகத்தினர் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்பவர்கள். பட்டு நூல் தொழிலாக கொண்டவர்கள். ஏழை சௌராஷ்டிரா மக்கள் வீட்டில் நெசவு நெய்து பிழைப்பை நடத்துவார்கள். இந்த நெசவு தொழில் நாளடைவில் நலிவடையவே, இது மாதிரி ஓட்டல் தொழிலுக்கு தாவி , சிறபாக செய்து வருகின்றார்கள். அவர்கள் தொழில் மீது கொண்டுள்ள அக்கறை ,அவர்களை மிகவும் சாதுவாக வைத்துவிட்டது. சௌராஷ்டிரா சமூகத்தினர் மென்மையானவர்கள்..
எனக்கு நினைவு தெரிந்தவரை அவர்கள் யாருடனும் சண்டை போட்டு பார்த்ததில்லை. அடித்தால் கூட , அவனுக்கு என்ன கோபமோ ,இப்ப அவன் கோபம் தீர்ந்து போயிருக்குமில்லை என்று அமைதியாக இருப்பவர்கள். அவர்கள் சமணர்களை போன்றே இருப்பதாக உணர்ந்துள்ளேன். சௌராஷ்டிரா பெண்கள் ஒருவித அழகுடன் சினிமா கதாநாயகிகளுக்குரிய சிவப்பில் இருப்பார்கள்.
பொங்கல் மெதுவாக தொண்டையில் இறங்கியது.
வாசலில் ஓனர் யாரோ ஒருவனிடம் தீடீரென்று தர முடியாது என்றார். வெளியில் முரட்டு தனத்துடன் கையில் ஏதோ பேப்பருடன் நன்றாக வளர்ந்த ஒருவன் நின்று இருந்தான். நீ தனியா தொழில் பார்த்திடுவீய்யா ! எங்களை பகைச்சு கிட்டு கடையை நடத்திடுவீய்யா ! என்றான். இவர் உன்னால் முடிந்ததை பார் என்றவரே என் எதிரில் இருந்த சேரில் வந்து அமர்ந்தார்.
அவன் வெளியில் நின்றிருந்த மற்றொருவனை பார்த்து , ததா தர மாட்டாராம்! எவ்வளவு திமிர் பார்த்தியாடா.. இவன் ஒருநாள் சிக்காம வா போயிடுவான். வெட்டியா சீரழிஞ்சிடாத !.ஒழுங்க கொடுத்திடுய்யா.. அப்புறம் நீ வீணா அழியப்போற என்றான்.
நான் சும்மா இருக்காமல் , வெடுக்கென்று , எந்த கட்சிப்பா? இப்படி மரியாதை குறைவா பேசுற என்றேன். யேய் ஒழுங்கு மரியாதையா வந்தோமா சாப்பிட்டோமான்னு போ ! என்றான். மற்ற அனைவரும் அமைதியாக இருந்தனர். அவன் வேட்டி கரையை தேடினேன். எந்த கரையும் இல்லை. போலீஸ்க்கு போன் போடுங்க என்றேன். எங்க போட சொல்லு என்றான். அங்கு உணவு அருந்தி கொண்டிருந்த 10 பேரும் அமைதியாக என் நண்பனைப்போன்று எந்த சலனமும் இன்றி ருசித்து கொண்டிருந்தனர்.
வேகமாக சாப்பிட்ட நண்பன் , கை கழுவும் இடத்திற்கு சென்றவன், அங்கிருந்து , என்னை வாய் மூடும் படி சைகை செய்தான். அதற்குள் வெளியில் இருந்தவன் . வா வா சிக்கமாலா போவான் என்றான். வெளியில் பைக்கில் மூன்று பேர் நின்றிருந்தனர். நான் உள்ளே இருந்து சாப்பிட்டு கொண்டே கவனித்தேன்.
கை கழுவும் இடத்திற்கு சென்றேன். வாய் வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீய்யா.. என்றான். ஏண்டா ராபர்ட் தப்ப தட்டி கேட்க விட மாட்டீங்கிற..? என்றேன். அருகில் இருந்த சர்வரிடம் அவுங்க எந்த கட்சியை சேர்ந்தவங்க என கேட்டேன்.
அவனுங்க எந்த கட்சியும் இல்லை. டெய்லி இப்படி வருவானுங்க. பொங்கல் மூணு நாலு கேட்பானுங்க. பார்சல் கட்டியவுடன் காசு தராம போயிடுவானுங்க. காசு கேட்டா, என்ன உதை வாங்கணுமா ..என மிரட்டி செல்வார்கள். இன்னைக்கு தான் எங்க முதலாளி வாய் திறந்து தர முடியாதுன்னு சொல்லி இருக்கார். நீங்களும் எதுக்குன்னு கேட்டுடீங்க என்றான். நான் கட்சிக்கு டோனேசன் கேட்கிறான்னு நினைச்சேன் என்றேன். சிரித்தான்
அவனுங்க எங்க ஏரியாடா? என்னை அவனுங்களுக்கு தெரியும். உன்னால் எனக்கு தான் பிரச்சனை என நெந்து கொண்டான் ,ராபர்ட். ஏண்டா உனக்கு பிரச்சனை என கேட்டேன். போடா நீ எதிர்த்து பேசினதுக்கு..என்னை வழி மறிச்சு.. காசு கேட்க போறானுங்க. ஒரு தடவை தந்து பழகிட்டா.. வாடிக்கையா கேட்க ஆரம்பிச்சுடுவாங்க. இனி அவனுங்களுக்கு கப்பம் கட்ட வேண்டியது தான் என்றான்.
சிரித்தேன். இப்ப கூட நான் சத்தமா பேசினதுக்கு பயந்து தான் , கப்பம் கட்டி இருக்க என்றேன். முழித்தான். இனி அவனை பார்க்கும் போதெல்லாம் பொங்கல் சாப்பிடலாம் என முடிவு செய்து கொண்டேன். விடைப்பெற்றான்.
உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. அந்த ரவுடிகளுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் ?
மதுரை சரவணன்.
3 comments:
வித்தியாசமே இல்லை...
நெசவு தொழில் - உடலின் மூளையும் மனதும் அனைத்து பாகங்களும் வேலை செய்ய வேண்டும்... இப்போது நலிந்து வருவது கொடுமை...! ம்...
தொழில் போய் வேற பிழைப்புக்கு போனால் அங்கும் அடாவடியில் பிழைக்கும் கும்பல் விடாது போல. சிந்திக்கவைக்கின்றது.
தம +1 தான் போட்டேன். ஆனா அது
தானா
பிளாஸ்திரி ஆயிடுச்சே.
Post a Comment