Sunday, March 8, 2015

நூல் விமர்சனம் - சிரிக்கும் வகுப்பறை (வம்சி பதிப்பகம்)

சிரிக்கும் வகுப்பறை - நூல் விமர்சனம்.
கட்டாய இலவச கல்வி சட்டம் தண்டனை அற்ற வகுப்பறையை உறுதி செய்கின்றது. இருப்பினும் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவர்கள் தண்டிக்கப்படுவது வாடிக்கையாகி கொண்டு தான் இருக்கின்றது. தேர்வு, அதன் பின் ஒளிந்துள்ள வெற்றி , இவற்றிற்கு இடையேயான போராட்டத்தில் தண்டனை நிச்சயமானதாகிப் போகின்றது.இந்த தண்டனை, மாணவர்களை எப்படி துரத்துகின்றது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் தனது சிரிக்கும் வகுப்பறை என்ற நாவலில் தன் மகனுடன் இணைந்து மிக அற்புதமான நாவலை படைத்துள்ளார்.

தண்டனை முறைகள் குறித்து பேசும் புத்தகங்கள் வரிசையில் ஆயிஷாவுடன் சிரிக்கும் வகுப்பறையும் இணைந்து கொள்கின்றது. இன்று தமிழ் வழிக்கல்வி ஆசிரியர்கள் குழந்தைகளை வீட்டிற்கு சென்று அழைத்துவரும் நிலமையில் எஸ்.ராம கிருஷ்ணன் மெட்ரிக் பள்ளிகளில் உள்ள தண்டனை குறித்து தனக்கே உரிய எளிய நடையில் சிறுவர்களுடன் நம்மை பயணிக்க வைக்கின்றார். மிரட்டவும் செய்கின்றார்.

‘சிரிக்கும் வகுப்பறை’ திவாகர் என்ற சேட்டைக்கார சிறுவன் பள்ளிக்கூடங்களில் மாணவர்களை அடிப்பதால், பாடம் கவனிக்காமல் இருப்பதனால், எலியுடன் பேசுகின்றான், பள்ளியில் இருந்து வெளியில் அனுப்ப படுகின்றான். கடைசியில் டிராப் அவுட் ஆகி வீட்டில் அடைக்கப்படுகின்றான். அவன் பள்ளிக்கு செல்வானா? அவன் வேறு என்ன செய்ய போகின்றான் ? என்ற தவிப்பை உண்டாக்கும் நேரத்தில், முரடர்கள், முட்டாள் என ஒதுக்கி தள்ளும் மாணவர்களுக்காக சயனகிரியில் ராபர்ட் லொங்கோ நடத்தும் அக்ரமா என்ற தண்டனைப்பள்ளியில் சேர்வதற்கு திவாகருக்கு அழைப்பு வருகின்றது. பெற்றோரும் எங்கோ இருக்கும் உறைவிடப்பள்ளியில் சேர்ந்து விடுகின்றனர். அங்கு என்ன நடக்கிறது ? அவன் அங்கிருந்து எப்படி தப்பி வருகின்றான் என்பதாக கதை இருக்கிறது.

அக்ரமா பள்ளி எந்த நேரத்தில் தொடங்கி எப்படி முடியும் என்பதும் லொங்கோவால் தான் முடிவு செய்யப்படும். லொங்கோ தண்டனை கருவிகளை உருவாக்கி, அங்கு பயிலும் மாணவர்கள் மீது செயல்படுத்தி, அதை மெட்ரிக் பள்ளிகளுக்கு விற்பனை செய்பவராக இருகின்றார். அப்பள்ளி சமண பள்ளியாக இருந்ததாகவும் அதன் ஆசிரியரை துரத்தியே அப்பள்ளியை நடத்துவதாக கதை சுவராஸ்யம் அடைகின்றது. காற்றில் மிதக்கும் மனிதன் நிர்மயா மற்றும் ஏழு மீன்கள், மலை உச்சியில் குளம் என கற்பனை விரிகின்றது.

சிரிக்கும் வகுப்பறை -குழந்தைகளுக்கான நாவல் என்பதில் எனக்கு உடன் பாடு கிடையாது. இது கல்வியாளருக்கான நாவல் என்றே கூறுவேன். எந்த குழந்தையும் தன்னை அடிப்பதை விரும்பாது. தான் அடிபடுவதற்கான கருவிகள் குறித்து பேசுவதை தவிர்த்தே விடும். அடிக்க போறேன் என்று மிரட்டினாலே குழந்தைகள் வாய் பொத்தி அமர்ந்து விடும். ஆகவே, இதை குழந்தைகள் விரும்பி படிக்கும் வாய்ப்புகள் குறைவு. இதில் வரும் நிர்மயா , புகை மனிதர்கள், பறக்கும் மீன்கள் குழந்தைகளை கவரும் விதமாக இருந்தாலும், நாவல் முழுவதும் தண்டனை குறித்து பேசுவதாக உள்ளது. குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து.(சிறுவர்களுக்கான நாவல் வரிசையில் வருவதால்)

“இந்த இடத்தில் ராபர்ட் லொங்கோவைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது, தலையில் கொட்டுவது, வட்டம் போட்டு அடிப்பது, முழங்கால் போட்டு முதுகில் அடிப்பது, உச்சந்தலையைச் சுவரில் மோத வைப்பது, கன்னத்தில் அறைவது, காதைப் பிடித்து உக்கி போட வைப்பது, மைதானத்தில் ஓட விடுவது, நூறுமுறை இம்போசிஷன் எழுதுவது போன்ற பல்வேறு தண்டனை முறைகளைக் கண்டுபிடித்தவர் லொங்கோ, அவரே இந்தியாவெங்கும் உள்ள பள்ளிகளுக்கு இதை அறிமுகம் செய்து வைத்தவர்.” (பக் 49)
இந்த மாதிரி தண்டனைகளை நாம் கடந்து தான் வந்துள்ளோம். இன்று கல்வி முறையில் மாற்றம் உருவாகி இருக்கின்றது. அதுவும் தமிழ் வழிக்கல்வி குழந்தை மையமாக செய்ல்படுவது குறிப்பிடதக்கது. எஸ்.ராமகிருஷ்ணன் நேரடியாகவே மெட்ரிக் பள்ளியில் நடைமுறைகளை சாடுகின்றார்.

”இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லொன்கோ ஒருதண்டனை முறையை ஆங்கிலப்பள்ளிகளுக்கு கொண்டு விற்றார். அந்த தண்டனை எளிமையானது. பள்ளியில்தமிழ் பேசும் குழந்தைகளின் நாக்கில் ஒட்டும் ரெட் ஸ்டிக்கர் அது. அதை ஒட்டிவிட்டால் சில நிமிசங்களில் நாக்கு புண்ணாகி விடும். எதையும் சாப்பிட முடியாது. பள்ளி முடியும் நேரம் ஸ்டிக்கரை எளிதாக நீக்கி விடலாம். இந்த புண் ஆறுவதற்கு பத்து நாட்களுக்கு மேலாகும். அதுவரை நாக்கில் தண்ணீர் பட்டால் கூட எரியும். இதற்கு பயந்து பிள்ளைகள் தமிழில் பேச மாட்டார்கள் என்பதே இந்தக்கண்டு பிடிப்பின் சிறப்பு “ (பக் 50)
என்ன கொஞ்சம் திகிலாக இருக்கிறதா ! அதனால் தான் குழந்தைகள் இந்தமாதிரி பக்கங்களை கடந்து செல்ல இயலாது. ஆனால் ஆசிரியர்கள், பெரியவர்கள் இந்த நகைச்சுவை முரணை புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
திவாகர் வாயிலாக எஸ்.ராமகிருஷ்ணன் நம் ஆசிரியர்கள் மீது கேள்விகளை எழுப்புகின்றார். ”ஒரு ஆசிரியருக்குக் கூட புத்தகம் மனப்பாடமாகத் தெரிவதில்லை. பின்பு மாணவர்கள் மட்டும் ஏன் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.” (பக் 20)
எஸ்.ராமகிருஷ்ணன் , நிர்மயா மூலமாக சமகால கல்வி குறித்து பேசுகின்றார். அதற்கு சாட்சியாக கீழ்கண்ட வரிகள் உள்ளன.
“எங்கள் பள்ளியில் தண்டனை கிடையாது. ஆசிரியர்கள் மாணவர் என்ற பேதமில்லை. பரஸ்பரம் பேசி விவாதம் செய்து கற்றுக் கொள்வோம். நான் நடத்தும் பாடங்களை விட இயற்கை அதிகமாக அவர்களுக்குக் கற்று தருகிறது. ஆகவே நல்ல இயற்கையான சூழலில் அவர்கள் தங்கி பாடம் படிக்கிறார்கள்”
“படிக்காத மாணவன் என்று எவருமில்லை. என்ன படிக்க வேண்டும் என்பதில் ஆளுக்கு ஒரு விருப்பம் இருக்கிறது. அதைக்கண்டு பிடித்து அவனைப் படிக்க வைப்பேன்” பக் 111.
இன்றைய தமிழ் வழிக்கல்வி நல்ல சூழலை எட்டியுள்ள நிலமையில் மெட்ரிக் பள்ளிகளின் நிலமை மாற வேண்டும் என்ற எஸ்.ராமகிருஷ்ணனின் குரல் இந்நாவல் முழுவதும் நன்றாக ஒலித்து இருக்கின்றது. அனைத்து ஆசிரியர்களும் , பெற்றோர்களும் படிக்க வேண்டிய நாவல்.

புத்தகம்: சிரிக்கும் வகுப்பறை (சிறுவர்களுக்கான நாவல்) ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன். வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. விலை :ரூ.100/-
நூல் விமர்சனம்: மதுரை சரவணன்.

1 comment:

'பரிவை' சே.குமார் said...

அருமையான விமர்சனம்.

Post a Comment