Saturday, March 14, 2015

குழந்தைகளும் உரிமையும் – விடுப்பட்ட 14 – 18 ! அதிர்ச்சி தகவல்.


குழந்தைகள் இந்த நாட்டின் வளங்கள் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. அக்குழந்தைகளை நாம் பதுகாப்பாக வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.  இச்சூழலில் குழந்தைகள் வயது மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்து கேள்வியும் எழுகின்றது!

சில நாட்களுக்கு முன் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியினை பெற்றொர்களுக்கு அளித்தப்போது தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் உரிமைகள் குறித்து, அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். 80 சதவீத பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உரிமையாக பெருமையாக கூறினர். பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதாகவும், நல்லா படிக்க வேண்டும் என்பதற்காகவும் , அதிகமான மார்க் பெறுவதற்காகவும் டியூசன் அனுப்புவதாக கூறினார்கள். இது மட்டுமே குழந்தைகளுக்கு தாங்கள் வழங்கும் உரிமை என அழுத்தம் திருத்தமாக கூறினார்கள்.

50 சதவீதப் பெற்றோர்கள் குழந்தைகளை டிவி பார்க்க அனுமதிப்பதில்லை என்றும் மீதி 50 சதவீதத்தினர் காட்டூன் , போகோ போன்று சுட்டி சேனல்கள் மட்டுமே பார்க்க அனுமதிப்பதாக கூறினார்கள். பெரும்பாண்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நண்பர்களுடன் பேச அனுமதி இல்லை என்றும், தங்கள் குழந்தைகளை வீட்டில் உள்ள பொருட்களை தொடுவதற்கு உரிமை வழங்குவதில்லை (உடைத்துவிடுவதால்)என்றும் மீறி சேட்டை செய்தால் அடித்து திருத்துவோம் என்றும் கூறினார்கள். அதேப்போல் சேட்டை செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கலாமா என்றால் 75 சதவீதம் பேர் சட்டத்தில் இடமில்லை என்று மலுப்பலான பதிலையும், 25 சதவீதம் பேர் அடிக்கின்ற மாடு தான் படியும் என்பது போன்ற பழமொழிகள் சுட்டிக்காட்டி அடிக்கலாம் என்றும் கூறினார்கள்.

பலரும் அவனுக்கு தங்கள் குழந்தைகள் யோகா, கராத்தே, செஸ் விளையாட தனிப்பயிற்சி அளிப்பதாக கூறினர். அதேப்போல் 90 சதவீதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த விழிப்புணர்வை வழங்குவதாகவும் கூறினார்கள்.

உண்மையிலேயே குழந்தைகளுக்கு என்ன உரிமை இருக்கின்றது ? என பார்ப்போம்.

ஐக்கியநாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை நமது குழந்தைகளுக்கு நான்கு வகையான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. 1.உயிர் வாழ்வதற்கான உரிமை (உயர்ந்தபட்ச தரமான உடல்நலம், சத்தான உணவு, வாழப்போதுமான வசதி ) , 2.பாதுகாப்பிற்கான உரிமை (அனைத்துவகைச் சுரண்டல்களிலிருந்தும்) 3. முன்னேற்றத்திற்கான உரிமை (கல்வி, விளையாடுதல், குழந்தைப்பருவவளர்ச்சி, ஓய்வு & கலாச்சார நடவடிக்கை சார்ந்த உரிமை )4. பங்கேற்பதற்கான உரிமை (குழந்தைகள் கருத்து மதிப்பளிப்பது, பகிர்வது, சிந்திப்பதற்கு, தகவல் பெறுவதற்கான உரிமை )  

இந்த குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை,  அடையாளத்தை பாதுகாத்தல் (விதி 8), பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படாமல் இருத்தல் (விதி 9), கருத்துக்களை வெளிப்படுத்துதல் (விதி 12) , பெற்றோரின்கடமைகள் (விதி 18), குழந்தைகளின் நல உரிமை (விதி24), கல்வி உரிமை (விதி 28) விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு (விதி 31) , பாலியல் சுரண்டல் (விதி 34), விற்றலும் கடத்தலும் (விதி 35) , சித்திரவதை, சுதந்திரமின்மை, கொடூரத்தண்டனை (37) என்பது போன்ற  37 விதிகள் மூலம் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்துள்ளது.

இந்த உரிமைகள் நம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றனவா? என்ற போது வாயடைத்து போயிருந்தனர். அதேப்போல் குழந்தைகள் யார் ? என்ற கேள்விக்கு நம் சட்டத்திலுள்ளது போலவே குழப்பமான பதிலையும் தந்தனர். 6வயது முதல் 14 வயது முடிய என்று கூறினார்கள். 0-5 என்ன செய்வது என்ற போது குழம்பினர். சிலர் அவர்கள் பச்சைக்குழந்தைகள் என பதிலளித்து சிரிப்பை வரவழைத்தனர். 14 – 18 வயதை உடையவர்களை குழந்தைகள் என்று அழைக்க கூடாதா? போன்ற கேள்விகளுக்கு அவர்கள் அமைதியாக இருந்தனர். ஏன் இவர்கள் குழம்பி உள்ளார்கள் என்பதற்கு நம் சட்டமும் குழந்தைகளுக்கான வயதை 
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவிதமாக   வேறுபடுத்தி காட்டுகின்றது.

-    
  •   இளஞ்சிறார் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்புச்)சட்டம் 2000 ல் குழந்தைகளின் வயது 18 என்று குறிப்பிடுகின்றது.
  • -      குழந்தைகள் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குப்படுத்தும் ) சட்டம் – 1986 ல் குழந்தைகளின் வயது 14 என்று குறிப்பிடுகின்றது.
  • -    குழந்தைகள் திருமணச் சட்டம் 2006 S2(b) ன் படி குழந்தை மற்றும் சிறியவர்கள் என்பவர்கள் பெண்ணாக இருந்தால் 18 வயது உட்பட்டவர்கள் என்றும், ஆணாக இருந்தால் 21 வயதுக்குட்பட்டவர் என்கின்றது.
  • -    சுரங்க மற்றும் ஆபத்தான தொழில்கள் தடைச்சட்டம் 16 வயதுகுட்பட்டவர்கள் குழந்தைகள் எனக் கருதுகின்றது.
  • -    பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (2(aa)) குழந்தைகள் என்பவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள் என வரையறுக்கின்றது.
  • -    கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ல் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைக்கு மட்டும் இலவசக் கட்டாய கல்வி வழங்கப்படுகின்றது. ஆனால் இந்தச்சட்டம் 14 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பொருந்தாது.

  • -    தேசியக்குழந்தைகள் கொள்கைகள் 2013 குழந்தைகள் என்பவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறுகின்றது.


இவ்வாறாக, நம் சட்டத்தில் குழந்தைகள் நிலை குறித்து தெளிவற்ற நிலை நிலவுகின்றது. இந்த நிலை மாற்றமடைந்து 0- 18 வயது உடையவரை குழந்தைகளாக அறிவிக்க வேண்டும் என்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராடி வருகின்றன. 

   மதுரையை சேர்ந்த பார்வத வர்த்தினி (லிட்டில்ஸ் குழந்தைகள் மையம்) என்பவர் தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்திவருகின்றார். 0- 18 என மாற்றுவதன் மூலம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் குழந்தைகள் வயது 18 ஆக மாற்ற மடைய செய்ய வேண்டும். 15 -18 வயது உடையவர்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்கின்றார்.

   பயிற்சியின் போது தங்களிடம் உள்ள திறமை குறித்து கேட்டப்போது, சமைக்க தெரியும் என்றும், ருசியாக( கோழிக்கறி, ப்ரியாணி, சாம்பார்) சமைப்பேன் என்றே அனைவரும் பதில் அளித்தனர்.  குழந்தைகளிடம் உள்ள திறமைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, அனைவரும் தன் மகன் / மகள் வீட்டுக்கு வந்தவுடன் ஹோம் ஒர்க் எழுதிவிடுவதாகவும், வந்தவுடனே முகம் கழுவி டியூசன் சென்று விடுவதாகவும், தான் கூறும் முன் புத்தகம் எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவதாகவும் கூறி படிப்பதை(அதிக மார்க் பெறுவது ) மட்டுமே  திறமையில் வகைப்படுத்தி இருந்தனர்.  ஒருசிலர் தங்கள் குழந்தைகள் குறிப்பிட்ட நடிகரின் சினிமா பாடல்களை முழுமையாக பாடுவதாக கூறினார்கள்.

   இன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உரிமையாக கல்வி ஒன்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகின்றனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு படிப்பு ஒன்றை தவிர வேறு எதுவுமே உரிமையாக வழங்கப்படுவதில்லை. பொழுது போக்கு என்று பேச்சுக்கு இடமில்லை. குழந்தைகள் காலை 8 மணிக்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டு மாலை 8 மணிக்கு தான் வீடு திரும்புகின்றனர். வந்தவுடன் உணவு அருந்தியும் அருந்தாமலும் உடனே டியூசன் அனுப்பப்படுகின்றார்கள். இரவு டியூசன் முடிந்து வீடு திரும்பும் போது மணி 10 ஆகி விடுகின்றது. அதன்பிறகு மறு நாள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று இரவு நேரப்படிப்பு தொடர்கின்றது.  முடிவில் குழந்தைகள் உறங்க 12 மணி ஆகிவிடுகின்றது. மீண்டும் காலை 6 மணி என இயந்திரத்தனமாக வாழ்க்கை செல்கின்றது.

பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். 14 – 18 வயது தான்  பகுத்து ஆராய்ந்து பார்க்கும் ஆற்றலும், உயர்ந்த எண்ணங்களும், எதிர்கால லட்சியங்களும், சுய அடையாளத்தை கட்டமைத்து கொள்ளும் காலகட்டமாகும். ஆனால் அந்த வயதில் நாம் குழந்தைகளிடம் நம் எண்ணங்களையும்,நம் லட்சியங்களையும் திணித்து , குழந்தைகளின் சுய அடையாளத்தை வெளிப்படுத்த அனுமதி   மறுக்கின்றோம். இதன் விளைவு ? யோசித்தோமானால் அதி பயங்கரமாக இருக்கும் !

14 – 18 வயது உள்ள வளரிளம் பருவக் குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூகப் பொருளாதார நிலை அவர்களின் உரிமைகள் குறித்து அரசும் மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இல்லையெனில் எண்ணற்ற குழந்தைகள் கட்டிடத்தொழிலாளர்களாகவும், மில் தொழிலாளர்களாகவும், விவசாயக்கூலிகளாகவும், கேபிள் பதிப்பவர்களாகவும், செங்கல் சூளைத்தொழிலாளர்களாகவும்  கரும்பு தோட்டக்கூலிகளாகவும் சுரண்டப்படுவார்கள்.

இன்று உலக அளவில் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் பயந்து போய் உள்ளார்கள். பள்ளிகளில் புகுந்து குழந்தைகளை கொல்லும் தீவிரவாதம் அதிர்ச்சியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது. தீவிர வாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் உலகில் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கின்றது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?

"If we are to teach real peace in this world, and if we are to carry on a real war against war, we shall have to begin with the children." என்கின்றார் காந்தி.

ஆம் நம் குழந்தைகளுக்கு அமைதியை போதிப்போம், அதே வேளையில் கொடுக்க வேண்டிய உரிமைகளை கொடுப்போம் . அதுவே உலகம் அமைதிக்கான வழியாகும். 14 – 18 வயது குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை நாடு முழுவதும் விதைப்போம் !


க. சரவணன், பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எட்.,
தலைமையாசிரியர் ,

(இக்கட்டுரை - மாணவர் உலகம் என்ற மாத இதழில்( மார்ச் 2015) வெளிவந்துள்ளது. 

3 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

இப்பதிவை எனது முகநூலில் பகிர்ந்துள்ளேன்...
அவசியமான, அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய விதிகள் இவை....
பகிர்வுக்கு நன்றி...

துளசி கோபால் said...

மதிப்பெண் வாங்கும் மெஷீனாகத்தான் குழந்தைகளைப் பார்க்கிறார்களா? :(

திண்டுக்கல் தனபாலன் said...

போதனை முதலில் பெற்றோர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும்...

Post a Comment