ஒவ்வொரு வாரமும் வரமே...!
*
*
எல்லா செயல்களுக்கும் துவக்கமாக மதுரை இருக்கின்றது.
ஞாயிறு இளைஞர்களின் தூக்க நாள், சனி இரவின் கொண்டாட்டங்களின் நீண்ட உற்சாகத்திற்கு பின் அலுப்பை நீக்கும் நாள், குடித்து விட்டு மட்டையாகும் நாள், குடும்பத்துடன் செலவிடும் நாள் என்பதெல்லாம் தவிர்த்து இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான நாள் என்பதாக மதுரையின் ஞாயிறு மாறியிருக்கின்றது.
எதிர்காலம் சிறப்பானதாக இளைஞர்கள் கைகளில் அமைவதற்கான விடியலின் அறிகுறி. முத்துகிருஷ்ணனின் பசுமைநடையில் ஆரம்பித்த எழுச்சி, நாணல்காடான், விழித்தெழு மதுரை, ஐலீட் இந்தியா என தொடர்ந்து எதாவது ஒருவகையில் மதுரை ஞாயிறுகளில் விழித்து கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு இயக்கம் ’வா நண்பா தோள் கொடு ’ வாரம் தோறும் மரம் நடுவது, எதாவது ஒரு பொது இடத்தை சுத்தம் செய்வது என தொடர்கின்றது. இந்த இளைஞர்கள் கூட்டம், மக்கள் இயக்கமாக மாறி வருவது கவனிக்க வேண்டிய ஒன்று.
சமீபத்தில் சென்ற ஞாயிறு (15/03/2015) 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பச்சை நிற பனியன்களுடன் எல்லீஸ் நகரில் குழி தோண்டி மரம் நட்டு கொண்டிருந்தனர். மெல்ல விசாரித்தேன்.
அப்போது அங்கு ஒரு வயதான பாட்டியம்மா, பெயர் ரூப்லா என்று சொன்னார்கள். அவர் அவர்களை , “தம்பி இங்க நாம் தோண்டனும், இந்த வீட்டுக்காரங்க தண்ணீ ஊத்தி செடி வளர்த்திருவாங்க..”என அன்பு கட்டளை பிறப்பிக்க , அந்த அம்மாவின் குரலுக்கு அடிபணிந்து ஓடி ஓடி குழி தோண்டி, செடி வைத்து தண்ணீர் ஊற்றி முள் வேலி அமைத்து கொண்டிருந்தார்கள்.
சற்று தள்ளி போனால் ஒரு ஆட்டோக்காரர் , பெயர் முத்துராமன் என்பவர் அந்த இளைஞர்களுடன் செடி வைக்க குழி தோண்டி கொண்டிருந்தார். அவரும் இவர்களுக்கு உதவியாக பல இடங்களை வீட்டின் முன் வீட்டுக்காரர்களின் அனுமதியோடு மரம் நட்டுக் கொண்டிருந்தார்கள்.
சரி என போலீஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள டீக்கடை அருகில் சென்றால், பா னு என்ற முஸ்லீம் பெண்மணி , “இங்கு ஊன்றியவுடன் அடுத்த தெருவில் ஊன்ற வேண்டும். வேப்பங் கன்று ஊன்றுங்கள் ”என அன்பு கட்டளை பிறப்பிக்க , அந்த பச்சை சீருடை அணிந்த நண்பர்கள் பொது மக்கள் உதவியுடன் அவ்வீதியில் பரபரப்பாக தொண்டாற்றி கொண்டிருந்தனர்.
அந்த இளைஞர்களிடம் , அவர்களின் செயல் குறித்து விசாரிக்க யாரை அணுகுவது என விசாரித்தேன். சரவணன் என்றனர்.
நான் தாங்க சரவணன், அதுவும் மதுரை சரவணன் என்றேன்.
நான் தாங்க சரவணன், அதுவும் மதுரை சரவணன் என்றேன்.
சார், சாரி சார். என அடையாளம் காட்டினர். அந்த இளைஞர் மிக எளிமையாக பிட் நோட்டீஸை அப்பகுதியில் உள்ள மக்களிடம் கொடுத்து கொண்டு இருந்தார். மரம் நடுங்கள். கொசுவை ஒழிக்க நீர் தேங்க விடாதீர்கள். டெங்கு ஒழிக்க சுத்தமான சுகாதாரமான சுற்றுப்புறம் அமைத்து கொள்ளுங்கள் என எழுதிய துண்டு பிரசுரம் விநியோகித்து கொண்டிருந்தார்.
அவரிடம் விசாரிக்க, அவர் ரஹ்மான் என்பவர் தான் இதன் தலைவர் என தன்னடக்கத்துடன் தன் கடமையை ஆற்ற தொடங்கினார். ரஹ்மானை அழைக்க, அவர் குழி தோண்டி கொண்டிருந்தார், அவரும் சுந்தரை(பொருளாளர்) பாருங்கள் என கூறினார்.
அதன் பின் அக்கூட்டத்தில் உள்ள மனோகர் என்ற என் கல்லூரி தோழனை சந்தித்தேன். அவன் துணைத்தலைவர் காளியை அறிமுகம் செய்து வைத்தான். அவரும் முள்வேலி வைத்து கொண்டிருக்க, துடிப்பான இளைஞர்களை பார்த்து வியந்தேன்.
நோட்டீஸ் கொடுத்து முடித்து வந்த எம்.சி. சரவணன் ”வா நண்பா ” என்ற படி என் தோளில் கை போட்டார். சிரித்தார். பின் தன் இயக்கத்தை பற்றி தெளிவாக கூற தொடங்கினார்.
ஒவ்வொரு ஞாயிறு தோறும் வா நண்பா மதுரையில் எதாவது ஒரு இடத்தை சுத்தம் செய்து, அவ்விடத்தில் மரம் நட்டு கொண்டிருக்கும். இவர்கள் மரத்தை நடுவதுடன் விட்டுவிடுவதில்லை, அதனை தொடர்ந்து பராமரிக்கின்றார்கள் என்பதே வியப்பாக இருக்கின்றது.
இவர்களுடன் இணைந்து பணியாற்ற சரவணன். எம்.சி. 9894189550 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
உங்கள்பகுதியில் மரம் நடுவதற்கும் , குப்பைகளை அகற்றுவதற்கும் இவர்கள் உதவியை நாடலாம்.
சமீப காலமாக மதுரை விழித்துள்ளது கண்டு பெருமிதம் கொள்கின்றேன். அய்யா அரசியல் வாதிகளே கொஞ்சம் சுதாரிப்பா இருங்க! வேறு என்னத்த சொல்ல..!
மதுரை சரவணன்..
2 comments:
சரவணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துகள்...!
Post a Comment