Thursday, February 13, 2014

காதலிப்பவர்கள் தூக்கில் தொங்க வேண்டியதில்லை...!

காலை பிரார்த்தனை கூட்டம் முடிந்து, எப்போதும் போல் தன்னம்பிக்கை விதையை தூவ ஆரம்பித்தேன். 

பிரச்சனையில் இருந்து நழுவுதல் தவறு என்பது என் கான்சப்டாக இருந்தது. எஸ்கேபிசம் தவறு என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். வாசிக்க வரவில்லை, எழுத தெரியவில்லை என வாசிப்பதிலும் , எழுதுவதிலும் இருந்து நழுவுதல் என்பது நம்மை நாமே ஏமாற்றுவது, நாம் கொண்ட குறிக்கோள்(டாக்டர், இஞ்சினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ்) தோல்வியில் முடிய காரணமாகிவிடும் . சில சமயம் நம் குறிக்கோள் மீது வெறுப்பை ஏற்படுத்தி, கோபத்தை உண்டாக்கும். கோபம் பொல்லாதது என்றேன். என் வகுப்பில் பயிலும் கார்த்தி,” சார் ,எங்க வீட்டு பக்கம் இப்படி தான் சார் ஒரு அண்ணம் தோத்துவிடுவோம்... என்று தூக்கு போட்டு கொண்டார்” என்றான். எதுக்குடா என அருகில் இருந்த அய்யப்பன் கேட்டான்.

” அந்த அண்ணன் ஒரு பிள்ளைய காதலித்தாங்க. அவுங்க அம்மா , அவுங்க அண்ணன் பெண்ணை கட்டிக்க சொன்னாங்க. அவுங்களுக்கு பிடிக்கல. அதுக்காக அந்த அண்ணன் சண்டை போட்டிருக்காங்க. ஆனா அவுங்க அம்மா ஒத்துக்கல. கட்டின அண்ணன் பொண்ணத் தான் கட்டணும் இல்லை செத்து போன்னு சொல்லியிருக்கு. அவுங்க மாமாவும் தன் பெண்ணை கட்டிக்க சொல்லியிருக்கு. கட்டினாலும் கட்டி வச்சுடுவாங்கன்னு.. கடைசியில அந்த அண்ணன் நேத்து தூக்கு மாட்டிகிடுச்சு...” என முடித்தான் கதையை.

அருகில் இருந்த அய்யப்பன், “ ஏண்டா , அவுங்க மாமா பொண்ணு நல்லா இருக்காதா? “ என கேட்டான்.
”போடா ... அந்த அக்கா சிவப்பா அழகா சினிமா ஸ்டார் மாதிரி சூப்பரா இருப்பாங்க...”
”உனக்கு எப்படிடா தெரியும்...”
“ அவுங்க எங்க சொந்தக்காரங்க.. அந்த அண்ணனோட அம்மா எனக்கு ஆயா முறை வேண்டும்”
”இதுக்கெல்லாமாடா தூக்குல தொங்குவாங்க...”அருகில் இருந்த மணிகண்டன்.
”ஏன் சார் ...அந்த அக்காவ கட்டிக்க முடியாதுன்னு நினைச்சு தானே ...மாமா பொண்ணுக்கு கட்டிவச்சுடுவாங்களோன்னு நினைச்சு ..பிரச்சனையில் இருந்து தப்பிக்க தானே தூக்கில் தொங்கிட்டாங்க...”
”சூப்பர்டா... எப்படி பாடத்தோட பொருத்துறான்...இவன் பெரிய வாத்தியார வருவாண்டா...”
“ அவன் போலீஸ் அதுவும் ஐபிஎஸ்” என்றான் சஞ்சை.
நல்லது நாம் இப்போது தமிழ் பாடம் படிப்போம் என்றேன்.

தன்னம்பிக்கை தாத்தா கதை சொல்கிறேன் என்றான் தங்க மணி. மூணு வரியில் சொல்ல வேண்டும் என்றேன். பக்கத்து ஊருக்கு போகணும்ன்னா மலையை சுற்றி தான் போகணும். தூரத்தை குறைக்க மலையை குடைந்து வழி அமைக்க வேண்டும். தாத்தா அனைவரையும் அழைத்தார். யாரும் வரவில்லை. இது ஆகாத வேலை என்று சென்றுவிட்டனர். ஆனால் தாத்தா காலையில் கடப்பாரை கம்பியுடன் மலையை வெட்ட ஆரம்பித்தார். அனைவரும் அவரை பார்த்து சிரித்தனர். நான் இறந்தாலும், எனக்கு பின் என் மகன் இந்த மலையை உடைப்பான். அதன் பின் என் பேரன் இந்த மலையை உடைப்பான் என்றார். அனைவரும் அவரின் தன்னம்பிக்கையை வியந்து மலையை குடைய ஆரம்பித்தனர். வழி கிடைத்தது. சூப்பர் என்று பாராட்டினேன்.

இப்படி மெதுவாக கற்றல் பணி நடைப்பெற்றது. இடைவேளை வந்தது.

மணி கார்த்திக்கை பார்த்து , அந்த அண்ணன் உங்க அடுத்த வீடா ? என கேட்டான். ஏன் கேட்கிற ?என்றேன். ”இல்லை சார் பேய்யா வந்து சுத்துவாரு அதான் சொல்ல வந்தேன் .“
” அடுத்த தெரு. அந்த காம்பவுண்டுல ஹவுஸ் ஓனர் பையனும் கத்தி வச்சு குத்தி கொன்னுபுட்டாங்க.”
பாத்தீங்களா சார்.. அந்த ஆவி தான் தூக்கில தொங்க வச்சுருக்கும்”
“ ஆமா..சார்... இப்ப அந்த காம்பவுண்டுல எல்லோரும் காலி பண்ணிட்டாங்க. எங்க ஆயாவும் ஹவுஸ் ஓனரும் தான் இருக்காங்க...” என்றான்.

எனக்கு உயிர்மையில் இந்த மாதம் படித்த சாருவின் பேய் கதை நினைவில் வந்தது. “கீழே குருதி தோய்ந்து கிடக்கும் நாக்கையும், கண்களையும் எடுத்துத் தின்று பசியாறுவான். மனித உடம்பில் அவனுக்குப் பிடித்தமானது மூளை. சடங்கு முடிவதற்குள் கபாலமும் உடைபட்டுத்தான் இருக்கும். அதிலிருந்து மூளையை எடுத்து உண்பான்.” ( இந்தவார உயிர்மை ’இல்லாதவர்களின் நிழல்கள்” சாரு நிவேதிதா)
அதற்குள் வரிசையாக அவரவர் வீட்டுப்பகுதியில் நடந்த பேய்கதைகளை சொல்ல ஆரம்பித்தனர். நானும் பேய்கதைகள் எழுதும் அளவுக்கு திகில் நிரம்பிய கதைகள் பல வெளிவந்தன. கணக்கு பாடம் படிப்போம் என்றேன். சார் ஆங்கிலம் என்றான் ஒருவன். சரி ஆங்கிலம் படிப்போம் என்று மெல்ல ஆங்கிலத்தில் உரையாட தொடங்கினோம்.

மதியம் சாப்பாட்டு நேரம் . வட்டமாக அமர்ந்து மாணவர்களுடன் உணவு அருந்துவது வழக்கம். அப்போது மீண்டும் அழகேஸ்வரி என்ற அழகி ... காதல் தோல்வியில் முடிந்த தூக்கு கதைகளை சொல்ல ஆரம்பித்தாள். வரிசையாக ஏரியா வாரியாக காதல் தோல்வியால் முடிந்த தூக்கு கதைகளை சொல்ல ஆரம்பித்தார்கள். என் ஆசிரிய தோழன் செல்வக்குமார் , மதம் மாறி காதல் திருமணம் செய்து கொண்ட நண்பன் ஒருவனுக்கு எம்ப்ளாய்மெண்டில் சிறப்பு பதிவு செய்ய தேவையான அரசாணையை கேட்டான். கொடுக்கிறேன் என்றேன்.

காதல் பற்றி பேசுவது தவறு. காதல் புரிவது தவறு. சாதி என்ன என்று தெரிந்து காதல் கொள் . காதலித்து திருமணம் முடிப்பவன் அனாதை. அவனுக்கு எந்த உறவும் இருக்காது. காதலித்தால் சாவு தான் மிச்சம் என்பது போன்ற பயமுறுத்தல்கள் இருக்கத்தான் செய்யும்.

சாதி, மதம் மாறி திருமணம் முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் சலுகைகள் வழங்கினாலும், காதல் என்பது கனவு பிரதேசத்தின் கனியாகவும். எழுத்தில் மட்டுமே வாழும் விசயமாகவும் உள்ளது. வருத்தத்துக்குரியது. காதலை வளர்க்க வேண்டாம். காதலர்களை வெறுக்காமலாவது இருக்க பழகுங்கள். அடுத்த தலைமுறையாவது சரியாகட்டும்.

மோடி அலைவீசும் இந்த நேரத்தில், பார்க் பீச் பொது இடங்களில் கூடும் காதலர்களை பாசிச மதவாத பழமைவாதியினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்று பார்ப்போம். ஓட்டுக்களை குறி வைத்து இருக்கும் இவர்கள் மாறியிருக்கிறார்களா ? நாளை வரை காத்திருப்போம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பு தினம் என்றும் வேண்டும்...
தினம் என்றும் அன்பாக வேண்டும்...

வாழ்த்துக்கள்...

Post a Comment