காதல் வயப்பட்டவனாய் கனிந்த காதலை மனதிலேந்தி , கையில் ரோஜா செடி , அவள் வீட்டு வாசலில், அவள் எழுந்து கோலமிடும் முன்பே பதியமிட திட்டமிட்டு செல்கின்றேன். அவள் எனக்கு முன்பே வாசல் தெளித்து , ஒரு வனத்தை உருவாக்கி இருந்தாள். அதில் அவளும் நானும் காதல் புரிவதாக செய்தியை மறைத்து வைத்திருந்தாள். யாரும் அறியாத சமயத்தில் ரோஜா செடியுடன் வனம் புகுந்தேன். தேடினேன். வழியில் , வனபேச்சியிடம் அவள் இருப்பிடம் கேட்டேன். அவள் ஒற்றை புன்னகையுடன் மறைந்தாள். என்ன நினைத்தாலோ தெரியவில்லை , என் கையில் இருந்த ரோஜா செடியை பறித்துக் கொண்டாள். மலர்ந்து இருந்த ஐந்து ரோஜாக்களை எடுத்து கொண்டு, செடியை தூக்கி எறிந்தாள். ரோஜாவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட , அது வீழ்கின்ற இடமேல்லாம் , தங்கமென மின்ன , இருபுறமும் பசுமையின் ஊடே அவளின் வாசனை வந்தது. எல்லோருக்கும் ஒரு வாசனை உண்டு. அவள் வாசனை என்னை வழிநடத்த ,அவளை தேடி விரைகின்றேன். காற்றின் ஈரப்பதம் மிகுதியால் குளிர்ச்சி அதிகமாய் இருந்தது. அடர்ந்த காட்டினுள் தேடுதல் தீவிரமானது. வாசனையும் தீவிரமாகவே அவள் வெகு அருகில் இருப்பதாக உணர்ந்தேன். அப் போது, எதிரில் வனபேச்சி மீண்டும் தோன்றினாள். உற்று கவனிக்கிறேன். இப்போது என்னை பின்னால் இருந்து யாரோ கட்டிப் பிடிக்கின்றனர். எதிரில் இருந்த வனபேச்சியை காணவில்லை. கரங்கள் தொட்ட வேளையில் உணர்கின்றேன் , அந்த மென்மை என்னவளுடையது தான். இன்னும் ஐந்து நிமிட நடையில் காதல் மரம் வந்துவிடும் என்று காதில் கிசுகிசுத்தாள். உற்று கவனித்தேன். அதில் கனிகள் பறித்து புசிப்போம்.அதன் ருசியில் நீ என்னை கண்டுபிடி. அதுவரை திரும்பி பார்க்காமல் என்னை அழைத்து செல் என்ற போது. குரலில் வித்தியாசம் அறிந்து, நீ என்னவள் அல்ல , முடியாது என்றேன். வாழ்வில் அவளை தவிர வேறு யாரையும் நான் சுமப்பதில்லை, இதை அவள் அறிவாள். சந்தேகிக்காத காதலிகள் உண்டோ! வானம் அதிரும் படியாக சிரிப்பொலி கேட்டது. ஏன் என்னை பயமுறுத்துகிறாய்? என்றேன். ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது சிவப்பு கலர் மீது கொண்ட மோகத்தால், உடன் பயிலும் அம்முவை உன் மனதில் சுமந்தாய். இரண்டாம் வகுப்பில் நீ விரும்பி சுவைக்கும் முறுக்கு நொறுக்க கொடுத்தால் (தினமும்) ஊர்மிளாவை சுமந்தாய். ஐந்தாம் வகுப்பில் உனக்கு வீட்டுப்பாடம் எழுதி கொடுத்ததால் கண்ணம்மாவை சுமந்தாய். ஏழாம் வகுப்பில் நீளமுடியில் மயங்கி நிவிதாவை சுமந்தாய். இருவருடம் முன்பு கூட கருப்பு தான் உண்மையான நிறம் என சொல்லி கண்ணகியை சுமந்தாய் . இப்படி உண்மையை அடுக்கிக் கொண்டே போனது அந்த குரல். போதும் நிறுத்து என்று எரிச்சல் கொண்டேன். அவையெல்லாம் அறியாமல் சுமந்தவைகள். இப்போது அவள் இன்றி நான் இல்லை. அவளைத்தவிர வேறு யாரையும் நான் சுமப்பதில்லை. இறங்கு என்றேன். முதுகில் இருந்து இறங்க வில்லை. இப்போது முன்பு போல் பாரம் உணரமுடியவில்லை. அவள் இறங்கி இருக்க கூடும். இப்படி இருந்தும் இல்லாமலும் இருப்பது தான் காதல் உணர்வா! மெல்ல நடக்கின்றேன்.அவளின் வாசனை தீவிரமாக வருகிறது. இப்போது என் உதடுகளை யாரோ வருடுவது போல உணர்கின்றேன். யாரோ எனக்கு முத்தம் கொடுக்கிறார்கள். இந்த உணர்வு நிஜம். நீங்கள் முத்தம் கொடுத்ததுண்டா? இல்லையெனில் இப்போதே உங்கள் காதலியை தேடி சென்று இதழ்களை சுவையுங்கள். முத்தம் உங்களில் உள்ள(ம்) உணர்வுகளை அப்படியே உடலின் எல்லா பாகங்களுக்கும் கடத்தும் ஹை வேல்ட் டிரான்ஸ்பாரம் ஆகும். ஒவ்வொரு முத்தமும் உங்களை அவளின் இதயத்தில் நீங்கா இடம் பிடிக்க செய்யும். நான் முத்தம் கொடுத்த அந்த நாளை நினைத்துப் பார்க்கின்றேன். அது ஒரு மழைப் பொழுது. தூறல் நின்ற சமயம் ஆகும். அவள் கரங்கள் பற்றி யாருமற்ற வீதியில் நடக்கின்றேன். ஏதோ உந்துதலில், தீடீரென்று வீதிகளை சுற்றி பார்க்கின்றேன். யாரும் இல்லை என்பதை உணர்கின்றேன். அவளின் தலையை பிடித்து, அவள் உதட்டை என் உதட்டால் கவ்வி, என் சுவாசத்தை அவளுள் செலுத்தினேன். அப்போது அவள் பதறிப் போனாள். அதன் பின் முத்தம் அற்ற நாட்களே இல்லை. அவள் அடைந்த அதே பதற்றம் இப்போது எனக்கு ஏற்படுகிறது. என் எச்சில் உறிஞ்ப்படுகிறது. ;உதட்டில் உணர்வுகள் ,சுவையாகத்தான் பரிமாறப்படுகின்றன. சபலம் தட்டுகிறது. இருப்பினும் அது அவள் இல்லையென்றால் என்ன செய்வது? என் தலையை அழுந்த பிடித்து ....விவரிக்க முடியாத உணர்வில் ஒரு முத்தம். அவளை, என் அவளை முற்றிலும் மறந்தேன். முத்தம் முத்தம் ஆனந்தம். அதே மயக்க நிலையில் இருந்து இன்னும் மீளவிலை. நான் என்ற நினைவை அற்று, தான் என்ற அகந்தை மறைந்து , ஏதோ ஒரு தியான நிலையில் இருக்கின்றேன். எங்கிருந்தோ ஆலம் விழுது போன்ற நீண்ட காதல் மரத்தின் கரங்கள் என்னை சுற்றி தன்னுள் இழுத்துக்கொண்டு போகிறது. தூரத்தில் வனப்பேச்சி ஒரு புள்ளியாய் தெரிகின்றாள். காதல் மரம் தன் கரங்களால் என்னை பற்றி தூக்கி செல்கிறது. மரம் இரண்டாக பிரிகிறது. கதவு போல திறந்து . இப்போது வன பேச்சி என்னை நோக்கி வருகிறாள். மிக அருகில். உற்று நோக்குகின்றேன். அது என்னவள். மிக அழகாய். அவள் வாசம் அந்த மரம் முழுவதும் நிரம்பியுள்ளதாய் உணர்கின்றேன். கனிகளை தருகின்றாள். புசிக்கின்றேன். அவள் இதழ்கள் தான் கனியாக மாறியிருக்கின்றன . சுவைத்த போது உணர்ந்தேன். காதல் மரத்தின் உள்ளே அவளும் நானும் நுழைகின்றோம். தன் கரங்களால் என்னை தழுவிக் கொண்டு , தன் நாவினால் காதல் சுவையூட்டிக் கொண்டு, இதழ்களின் வழியாக காதல் மொழி பேசிக்கொண்டு செல்கின்றோம். நான் கொண்டு வந்த ரோஜா செடி .... வழியெங்கும் பூத்து குலுங்குகிறது. வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்து வாசனை பரப்புகின்றன. இப்போது அந்த வனத்தில் நானும் அவளும் மட்டும். ஆதாம் ஏவாள் காலம் . உடைகள் இல்லா நிர்வாண காலம். அவளை நானும், என்னை அவளும் ரசிக்கின்றோம். இன்னும் தூங்கலையா ...? இது என் வனப்பேச்சி கட்டிலிருந்து அதட்டுகிறாள். காதல் கனவில் இருந்து வெளிவருகின்றேன். ஏனென்றால் அவள் எப்போது வேண்டுமானாலும் இரத்த காட்டேரியாக மாறும் சாத்தியம் உண்டு.
Thursday, February 13, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment