Thursday, February 6, 2014

இந்த கெட்டவார்த்தைகளை படிக்க வேண்டாம்.

கெட்ட வார்த்தை என்ற நல்ல வார்த்தை 
-------------------------------------------------------
தவிர்க்கமுடியாத, மிகவும் சிரமத்திற்குள்ளாகும் தருணங்களில், எப்போதாவது படித்த ஏதாவது ஒரு விசயத்தை அசைப்போட்டு சிரித்துக் கொள்வதுண்டு. அப்படி தான் இன்று காலை வகுப்பறையில் நுழைந்த பையன் , ”சார், இவன் கெட்ட வார்த்தை பேசுறான் சார்...” என்றான். உடனே இசையின் வரிகள் நினைவுக்கு வந்தது. “நான் கெட்ட வார்த்தைகள் அர்த்தமற்றுப் புழங்கும் நிலத்திலிருந்து வருகிறேன். அங்கே சும்மாணாச்சிக்கும் கோபப்படுவது, நிஜமாகவே சினம் கொள்வது, மண்ணள்ளித் தூற்றுவது என எல்லாவற்றிற்கும் கெட்ட வார்த்தைகள் தான். அங்கே போலியாக நடிப்பது , காதலாகிக் கசிவது, நெஞ்சைப் பிளந்து காடுவது என எல்லாவற்றிற்கும் கெட்டவார்த்தைகள் தான்” -இசை. (அதனினும் இனிது அறிவினர் சேர்தல், பக் 16 )

விசாரித்தேன். இனிமேல் இப்படி சொல்லாதே என அனுப்பிவைத்தேன். நான் திட்டவில்லை என வாதிட்டான். இசை சொல்வது போல் நெஞ்சை பிளந்து காட்ட உபயோகித்தது தான் அந்த வார்த்தை என்பது புரிகிறது. அதன்படி அது நல்ல வார்த்தையாகவே தோன்றியது. புகார் தெரிவித்த இவனின் கையெழுத்தைப் பார்த்து,
”கோத்தா ..என்னாமா எழுதுறாண்டா.. எழுத்துன்னா இப்படிதாண்டா இருக்கணும்..” என்று சொல்லியிருக்கிறான். ஒரு இலக்கியவாதியாக, அவன் இவனை பாராட்டி தான் பேசியுள்ளான் என்பது உண்மையானாலும், ஆசிரியராய் என் நிலை மாறாமல், ’தவறான வார்த்தைகளை , தீய வார்த்தைகளை உபயோகிக்க கூடாது’ என்று காறாராக சொல்லி அனுப்பினேன். அவன் வாய் முணு முணுத்தது. சிரித்தேன். அவன் முறைத்தப்படி, முணுமுணுத்தே சென்றான். நிச்சயம் இந்த முறை அவன் சொல்லும் வார்த்தை நல்ல வார்த்தை அல்ல என்பது மட்டும் புரிந்தது. இப்படி தான் நாம் நல்லது செய்ய நினைத்து அது நமக்கே கெட்டதாக முடியும். கணக்கு தப்புவது இயற்கையே.

கணக்கு என்றவுடன் எளிய முறையில் கணக்குகள் கற்று தருவது நினைவுக்கு வருகிறது. இன்று கற்றுக்கொடுத்தது. ஒன்றாம் ஸ்தானம் ஐந்தில் முடியும் ஒரே எண்களை பெருக்கும் எளியமுறையை கற்று தந்தேன். 25 x 25 போன்று ஐந்தில் முடியும் எண்களை பெருக்க கிடைக்கும் விடையின் கடைசி இரண்டு இலக்கங்கள் 25 ஆகும். எனவே 25 போட்டு கொள்ளவும் . 5 ( ஒன்றாம் ஸ்தானம்) தவிர்த்து உள்ள பிற எண்களை பார்க்கவும். இந்த கணக்கில் 2. ஆகவே ( 2 )அதனுடன் 1 யை கூட்டவும். கூட்டி வரும் தொகையை அந்த கூட்டிய எண்ணுடன் பெருக்கி 25க்கு முன்னால் போடவும் .விடை கிடைத்துவிடும் . 3 X 2 = 6: 25க்கு முன்னால் போட 625 என கிடைக்கும் என்றேன். 135 X 135 எனில் கடைசி இலக்கம் 25. ஒன்றாம் ஸ்தானம் தவிர்த்து உள்ள எண் 13 . ஆகவே 13 வுடன் 1 ஐ கூட்ட 14. பின் 13ஐ 14 வுடன் பெருக்க 182. விடை 18225. சரியா இல்லையா என்பதை உங்கள் கால்குலேட்டர் மூளைக்கொண்டு சரிபார்க்கவும்.

இப்போதும் வகுப்பின் பின்புறம் இருந்து , நல்ல பதத்தில் ஒருவன்,” .......,ரெம்ப ஈஸியா இருக்கிதுல்ல” என்றான். அவன் பாராட்ட தான் செய்தான் என்பது உண்மையாக இருந்தாலும், நகர வாழ்வில் கெட்ட வார்த்தைகள் அர்த்தமில்லாமல் , மிக நல்லவார்த்தைகளாக புழங்குவதை பார்க்கும் போது மனது வெம்புகிறது. மாணவனை அழைத்தேன். யார் இது மாதிரி பேச கற்றுக் கொடுப்பது என்றேன். ”சார் ,இதையெல்லாம் போய் கெட்ட வார்த்தை..ன்னா மத்த வார்த்தைகளை யெல்லாம் என்ன சொல்றது. எங்க வீட்டுபக்கம் இதவிட செமயா திட்டுவாணுங்க. சாரி சார் இனி வகுப்பில் பேசலா ”என்றான்.
எங்கப்பா டீ நல்ல இருந்துச்சுன்னா...எங்கம்மாவ பார்த்து “தாயோலிமவ ..இன்னைக்கு டீ சூப்பாரா போட்டுடிருக்கான்னு சொல்லுவாறு...”. “கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று அப்பாவிடம் சொல்லவேண்டும் தம்பி” என்றேன். ”அப்பா உன்னை திட்டுதுண்ணு சொன்னா, எங்கம்மா சொல்லுது... அப்பா திட்டலைடா நான் போட்ட டீ நல்லாஇருக்குன்னு சொல்லுது ன்னு அம்மா சொல்றாங்க சார்...” என்கிறான்.

குட்டி கதை சொல்லுங்க என்றனர். ஒரு வீட்டுல ஒரு கிளி வளர்த்தாங்க. அந்த கிளி நல்லா பேசும். ஆனா கெட்ட கெட்ட வார்த்தையா பேசும். கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்று சொல்லி பார்த்த , அதன் உரிமையாளர், ஒரு முனிவரிடம் அழைத்து போய் காட்டினார். கிளியின் கெட்டவார்த்தைகளை கேட்ட , அந்த முனிவர் சாபமிட்டார். இனி நீ கெட்ட வார்த்தைகளை பேசினால், உன் தலையிலிருந்து ஒவ்வொரு முடியாக தானாக உதிர்ந்து விடும் என்று சாபமிட்டார். அன்றிலிருந்து அந்த கிளி கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை என்றேன். உடனே ஒருவன் சார் அது பெம்பள கிளிதானே சார்...அதான் முடி உதிரது பத்தி கவலை வருது என்றான். அடுத்தவன் ,சார், இனி நீங்களும் சாபம் போடுங்க சார்..அப்பதான் கெட்ட வார்த்தைகள் பேச மாட்டார்கள்” என்றான். தம்பி கதை முடியல.. என்றேன். சார் போதும் என்றான். டேய் கெட்ட வார்த்தை பேசினா சார் முனிவர் மாதிரி சபித்துவிடுவார் என்று கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். வகுப்பறையில் நானும் கதையை அத்துடன் முடித்து விட்டேன்.

மீதிக் கதையை உங்களிடம் சொல்லி தானே ஆக வேண்டும். சில ஆண்டுகள் கழித்து , கிளியின் உரிமையாளரை பார்க்க முனிவர் வந்தார். இப்போது அவரின் தலையில் முடிகள் இல்லை. முடிகள் கொட்டிப் போயிருந்தன. இதைப் பார்த்த கிளி
சிரித்தது. முனிவர் கிளியிடம் ,”நீ எதையாவது நினைத்து சிரிக்கிறாயா? “ என்றார். அதற்கு கிளி, “ இல்லை, இல்லை, நான் உங்கள் தலை ஏன் மொட்டையானது என்று நினைத்தேன் . சிரித்தேன் . அவ்வளவு தான் ”என்றது.

இப்போது நீங்கள் எதை நினைத்து சிரித்தாலும் பரவாயில்லை. நல்லவார்த்தைகளாய் புழங்கும் நிஜமான கெட்ட வார்த்தைகளை குழந்தைகளில் வாழ்க்கையில் இருந்து பிரிக்க வேண்டும். இதன் விபரீதத்தை உணர்ந்து நாம் அர்த்தமின்றி பயன்படுத்தும் கெட்டவார்த்தைகள் தவிர்ப்போம். அல்லது குழந்தைகள் முன் பேசாது இருப்போம்.

- மதுரை சரவணன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... உங்களின் கற்றுவிக்கும் பாணியே தனி... தொடரட்டும்...

வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

Unknown said...

நான் எட்டாவது படிக்கும்போது நடந்தது.

ஒரு XX மாணவன் மற்ற சில மாணவர்களிடம் டேய் கெட்ட வார்த்தையெல்லாம் பேசாதீங்கடா என்றான். உடனே ஒருவன் டேய் எதெல்லாம் கெட்ட வார்த்தை என்று சொல்லு அதையெல்லாம் பேச மாட்டோம் என்றான். பிறகு XX மாணவன் வாயே திறக்கவில்லை. பிழைக்கத் தெரிந்த பசங்க.

கே. கோபாலன்

கரந்தை ஜெயக்குமார் said...

//நாம் அர்த்தமின்றி பயன்படுத்தும் கெட்டவார்த்தைகள் தவிர்ப்போம். //
அனைவரும் உணர வேண்டிய வரிகள்
நன்றி நண்பரே

Post a Comment