Saturday, February 15, 2014

காதலர்கள் படிக்க கூடாத சிறுகதை

கொலை வெறி - சிறுகதை.
-------------------------------------
பிப்ரவரி என்றாலே காதலர்களுக்கு கொண்டாட்டம். காதலிப்பவர்களை பார்பவர்களுக்கும் திருவிழா தான். பலருக்கு காதல் தோன்றினாலும் சமூக அந்தஸ்து கருதி, நல்ல பிள்ளை என்ற பெயர் வேண்டும் என்பதற்காக தம் காதலை மறைத்தே வைத்திருக்கின்றனர். வீட்டிலும் அப்படிபட்ட சூழலே நிலவுகிறது . இதில் தவறு ஒன்றுமில்லை. எல்லோரும் குடும்ப கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டவர்கள் தான். சிலர் விதிவிலக்கு. காதலிப்பவர்களை தவறானவர்கள் எனவும் சொல்லக்கூடாது. காதல் கவிதை எழுதினாலே கீழ்பாக்கமும் , இரத்தினா ஆஸ்பத்திரிக்கு போ என்று சொல்லும் சமூகத்தில் தான் வாழ்கின்றோம். முருகன் காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் வாழ்பவன். முருகனைப் பொறுத்தவரை குடும்பக்கட்டுப்பாடு, நல்ல பிள்ளை, சமுக அந்தஸ்து என்ற சிக்கல் எல்லாம் இல்லை. அவனுக்கு இருக்கும் பிரச்சனை வேறு. காதலி கிடைப்பது தான் அவனின் ஒரே சிக்கல். அவனும் ஆள் மாற்றி ஆள் காதலிக்கவே முயற்சி செய்கின்றான். ஆனால் எதுவும் ஓர்க் அவுட் ஆனதில்லை. வரும் பிப்ரவரியிலாவது லவ் யு சொல்லி தன் காதலை ஏற்க செய்திட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். இதோ முருகன் வீட்டை விட்டு கிளம்பிவிட்டான். அவனை தொடர்வோம். 

பஸ் ஸ்டாப்பில் எப்போதும் போல கூட்டம் அதிகமாயிருந்தது. 

இந்த கூட்டத்தில் தானே தொடர்ந்து நான்கு வருடங்களாக முயற்சி செய்கிறோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. சுந்தரபாண்டி படம் போல,இவன் பார்க்கும் எல்லா பெண்களும் இவனுகு பின்னால் முன்னால் இருப்பவர்களுக்கு செட் ஆகி விடுகிறார்கள் . எப்படியும் ஒரு பெண்ணையாவது காதலித்து திருமணம் செய்திட வேண்டும் என்ற இலட்சயத்துடன் நடந்தான். அவன் அதிர்ஷ்டம், இன்று ஆரஞ்சு கலர் சுடிதார் அவனை பார்த்து சிரிப்பதை கண்டான். முன்னெச்சரிக்கையாக தன்னை தான் பார்த்து சிரிக்கிறாளா என முன்னும் பின்னும் செக் செய்து கொண்டான். 

அவள் அவனை இப்போது நெருங்கி வந்தாள். அவன் மனதில் இளையராஜாவில் ஆரம்பித்து ஏ ஆர் ரஹ்மான் வரை உள்ள இசையமைப்பாளர்கள் காதல் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்கள். அவள் அவன் சந்திப்பு எட்டு அடியில் முடிந்துவிடும். ஆனால் அவனுள் அதற்குள் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள எண்ணூறு காதல் ஹிட் பாடல்களும் இசைக்கப்பட்டு விட்டது. இப்போது முருகன் முருகனாய் இல்லை. நாம் நாமாக இல்லாத தருணங்கள் அற்புதமானவை. யாருக்கு வாய்க்கும்! அது இப்போது முருகனுக்கு வாய்த்திருந்தது. காதலித்து பாருங்கள் . நீங்களும் உங்களை மறக்க கூடும் . இந்த மயக்க நிலை மட்டும் தான் தாய் , தந்தை, உற்றார், உறவினர் என எல்லோரையும் மறக்க செய்கிறது. இந்த மயக்கம் தான் எல்லாவற்றையும் உதறி தள்ளி ஓடச்செய்கிறது. காதலித்தவர்கள் அறிவார்கள். இது என்னுடைய வார்த்தை அல்ல. இது முருகன் எல்லோருக்கும் சொல்லும் வார்த்தை. காதல் வயப்படும் தருணம் உணர உங்களை பெண்கள் நெருங்கி வரும் போது உணரலாம் என்பான். 

நெருங்கி வந்தவள், ”நீங்கள் முருகன் தானே !” என்றாள். இப்போது அவனுக்கு அவன் பெயர் பிடித்திருந்தது. ஏன் பிடிக்கவில்லை? பல சமயங்களில் அவன் தன் பெயரை உச்சரிக்கும் போது இப்படி அலுத்துக்கொள்வதுண்டு. “எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஒரு பொண்ணு கூடா ஏறெடுத்து திரும்பி பார்க்க மாட்டேன்கிறாள். சாமி பெயராம். அந்த சாமி முருகனுக்கு கூட ரெண்டு பொண்ணுங்க ..இந்த சைடில் ஒண்ணு அந்த சைடில் ஒண்ணு ..நமக்கு பெயர் வைத்த ராசி ஒண்ணு கூட அமைய மாட்டீங்குது. இதுவரை ஓராயிரம் பொண்ணுகளுக்கு காதல் கடிதம் எழுதியிருக்கிறேன் . ஒண்ணும் செட் ஆக மாட்டீங்குதே...பெயரை பாரு முருகனாம் முருகன்...!”

இரவு வானத்தின் தெளிந்த நிலா...! 
மஞ்சள் வர்ணம் பூசி வருகிறது ! 
நெஞ்சம் கிள்ளி ,துள்ளி வருகிறது ! 
என் பெயர் உச்சரிக்கும் போது 
உன் பெயர் கேட்டு நச்சரிக்கிறது மனது!
என மனதினுள்ளே கவிதை சொல்ல ஆரம்பித்தான். அவள் நெருங்கி விட்டாள். மீண்டும் நீங்கள் தானே முருகன் ! என்றாள். ப்லோரசண்ட் சிரிப்பில் ஆமாம் என்றான். அவன் நெஞ்சுக்குள் அத்தனை பல்புகளும் பிரகாசமாய் எரிந்தன. திரிக்‌ஷா, நயன்தாரா, இலியானா என அத்தனை அழகு நட்சத்திரங்களையும் சேர்த்து செய்த கலவையாக தெரிந்தாள். 

நானே தான் முருகன் என்று திருவிளையாடல் நாகேஷ் போல் வேகவேகமாக பதில் சொன்னான். “அதில் என்ன சந்தேகம் !”என்றான். “நீங்க தப்பா நினைக்க மாட்டீங்கன்னா
? ” என்று இழுத்தாள். “நீங்க சொல்லாட்டா தான் தப்பா நினைப்பேன்” என்றான். 

அது வந்து... என இழுத்தவளை , பரவாயில்லை , சொல்ல வந்ததை டக்குன்னு சொல்லிடணும் என்று தூண்டினான். ”காதலுக்கு டைமிங்க் தேவையில்லை. டைம்மிங் காமடிக்கு தான் தேவை . ட்டைம்மிங்க் எதிர்பார்த்தால் காதல் காமடி ஆயிடும். டீ கிளாஸ் இந்த கையிலிருந்து அந்த கைக்கு மாத்திடும் நேரத்தில் காதல் சொல்லாட்டி மாறிடும் “ என்பான். சொல்லிட்டாளே என்ற கும்கி பாடலை யானை மீது ஏறி பாடுவதாக அவன் மனசு கனவு கண்டது. அவள் இன்னும் எதுவும் சொல்லவில்லை. கனவில் மிதக்கும் அவனை ஏற இறங்க பார்த்தாள். 

அவன் கண்கள் பிரகாசமாகின. பிப்ரவரி பிப்ரவரி தான் என்று முணுமுணுத்தான். என்ன ? என்றாள் . பிப்ரவரி காதலர்களுக்கான மாதம் என்றான். அவள் நானும் அதை தான் சொல்லவந்தேன் என்றாள். “ எனக்கு அப்பவே தெரியும் ...நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னா ...” என தன் முடிகளை கோதிவிட்டு ஸ்டைலா கேட்டான். 
மாவீரன் படத்தில் ராம்சரண் தேஜா மற்றும் காஜல் அகர்வால் விரல்களை தொட்டுக்கொள்ளும் போது ஏற்படும் மின்னல் போன்ற உணர்வுகள் வேகமாக பயணித்த பேருந்தினால் ஏற்பட்ட காற்றில் ,அவள் துப்பட்ட அவனை உரசியபோது உணர்ந்தான். அவள் பேச தொடங்கினாள். ராம் சரண் தேஜா போல குதிரையில் துரத்தினான். அவம் கனவில் அவள் பேருந்தில் சென்று கொண்டிருந்தாள். 

”என்ன கனவா ? “என்றவளிடம், ”இல்லை ” என்றான். 
“ இருந்தாலும் நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள். “ இதில என்னங்க தப்பு இருக்கு? மனச ஏமாத்திடக்கூடாதுங்க...! ” என்றான். மனம் இப்போது எதையோ சாதித்தது போல உணர்வில் தலையை ஆட்டிக் கொண்டான். “நான் கடந்த நான்கு மாதமா வாட்ச் பண்ணுகிறேன்” என்றாள் . ”நான் உங்கள கடந்த எட்டு மாதமா பார்க்கிறேன்” என்றான். “தெரியும்”. இப்பவும் கேட்கிறேன் தப்பா நினைக்க மாட்டீங்களே” என்றாள். அட சொல்லுங்க...! என்றான். தமிழ் சினிமாவின் காதல் பாடல்களின் இசை அவன் மனதில் எப்போதையும் விட கூடுதலாக இசைக்க தொடங்கியது. 

”நானும் உங்கள மாதிரி தான் மனச ஏமாற்ற மாட்டேன்” என்றாள். அவன் இப்போது மௌனமாக இருந்தான். எல்லா இசையும் இப்போது பின்நவீன இசையாக நின்று போயிருந்தது. எல்லா ஓசைகளும் அவனுக்கு மட்டும் கேட்கவில்லை. இப்போது அவள் குரல் மட்டுமே கேட்டுக் கொண்டு இருந்தது. ”என்ன பேசாம நிக்கிறீங்க ”என்றாள். ”நீங்க பேசுங்க.. கேட்டுகிட்டே இருக்கணும்ன்னு தோணுச்சு” என்றான். அவள் அவனை பார்த்து சிரித்து கேட்டாள், “நீங்க எப்பவும் இப்படி தானே என்று!”. அவன் சிரித்தான். குதிரையில் துப்பட்டாவை சுழற்றி சென்றான். 

”அய்யோ பஸ் வந்திருச்சு...” கனவு கண்ட அவன் , ஆமாம் பஸ் போகுது என்றான். ”முருகன் நான் சொல்றது கேட்குதா..” ” கேட்குது, சொல்லுங்க “ என சுயநினைவு வந்தவனாக கூறினான். அப்போது அவள் அவனிடம் இருந்து நாலடி தள்ளி சென்று கொண்டிருந்தாள். ”பிளீஸ் சொல்லுங்க” என கெஞ்ச ஆரம்பித்தான். “ பிப்ரவரி 14 க்கு என் காதலை ப்ரப்போஸ் செய்யணும் .. அதனால் என் காதலனுக்கு கொடுக்கிற மாதிரி செம கவிதை ஒண்ணு எழுதி தர முடியுமா?” என்றாள் .
பேருந்தின் ஹாரன் ஒலி அவன் கேட்காமலே அவன் காதில் இரைந்தது. செவிடான உணர்வு. எல்லா இசை கலைஞர்களும் அவனை விட்டு பிரிந்து சென்று கொண்டிருந்தனர். 

வேகமாக பேருந்தில் ஏறியவள் , ”இன்னும் இரண்டு மூணு நாளில் கொடுத்துடுங்க முருகன் அண்ணா” என்றாள். 
அவன் காதுகளை பொத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தான். முடியவில்லை. அருகில் வந்த ஆட்டோவில் தனுஷ் குரல் கொடுக்க அனிரூத் இசைத்து கொண்டிருந்தார்,” ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டீ...!”

மதுரை சரவணன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... பலருக்கும் நடக்கும் கொலை வெறி தான்...!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.2

நாம் நண்பர்கள் said...

செம சிறுகதை ,ரெம்ப நல்ல இருக்கு

Post a Comment