மணி எட்டு. படுக்கையில் வார இதழ் படித்தப்படி படுத்திருக்கின்றேன். இந்த இரவை கழிக்க வேண்டியவனாய் படுக்கையில் புரண்ட படி வார இதழில் கவனம் கொள்கின்றேன். விடிந்தால் காந்தி இறந்த தினம். இருந்தாலும் நாளை தை அம்மாவாசை. அருகில் மகள் எஸ்.ரா தமிழில் மொழிப்பெயர்த்துள்ள வம்சி பதிப்பின் ஆலிஸின் அற்புத உலகம் படித்து கொண்டிருக்கிறாள். செல்போனில் அம்மா அழைத்தார் ,தம்பி நாளை காலையில் கோயிலுக்கு போகணும். விரதம் இருக்கணும். மதியம் விரதம் விடணும். அம்மா வீட்டுக்கு சாப்பிட வந்து விடு என கட்டளைகள் தொடர்கின்றது. அனைத்திற்கும் சரி என தலையாட்டி வைத்தாயிற்று. என் மகள் கேட்கிறாள்,” ஏம்பா , அப்பத்தா எப்பா பார்த்தாலும் விரதம் இருன்னு சொல்றாங்க! விரதம்ன்னா என்னப்பா!”
இதற்கு முன் அன்னஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது விரதம் சம்பந்தமாக கேள்வி எழுப்பியது உண்டு. டிவியில் செய்தியில் சின்னகுழந்தை ஜூஸ் கொடுப்பதை பார்த்து , ஏம்பா ஜூஸ் குடிச்சு தான் விரதத்தை முடிக்கணுமா? என்று கேட்டவள். அப்போது அவள் உண்ணா விரதம் என்று சேர்ந்து இருந்ததால், சாப்பிடாமல் பட்டினி இருப்பது என்பதை உணர்ந்து வேறு எந்த கேள்வியும் எழுப்பவில்லை. காந்தி பற்றிய அடையாளம் ரூபாய் நோட்டிலும், புத்தகத்தில் , காந்தி கண்காட்சியகத்தில் மேலாடை அற்ற, தொப்பி அற்றவராக காட்சியளித்ததால் காந்தி போலன்னு சொல்றாங்க என ஹசாரேவை பார்த்து மோலோட்டமான கேள்வியை மட்டும் முன் வைத்து என்னை நழுவ விட்டுவிட்டாள். நான் பல கேள்விகளுக்கு பதில்களை அவளின் அம்மாவையே கேட்டு தெரிந்து கொள்ள சொல்வேன்.
அம்மாக்கள் எப்போதும் குழந்தைகளை எளிதாக சமாளிக்கும் திறன் பெற்றவர்கள். அப்பண்பு இயற்கையாகவே அமைந்து விடுகிறது. இதன் ரகசியம் தெரிந்து தான் துவக்கப்பள்ளியில் ஆண் ஆசிரியர்களை விட அதிகம் பெண் ஆசிரியர்களுக்கு அரசு முக்கியத்துவம் தருகின்றது. பெண் ஆசிரியர்களுக்கு அற்பணிப்பு பண்பு உண்டு. சிலர் எதிலும் விதிவிலக்கானவர்கள். அவர்களை பற்றி நான் எப்போதும் பேசுவது இல்லை. ஆண் ஆசிரியர்கள் குறித்து ஒரு செய்தி.
சமீபத்திய ஜ.நா அறிக்கை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதற்கு , ஆசிரியர்கள் வகுப்புக்கு முறையாக வராததும் காரணம் என்கிறது. ஆசிரியர்கள் பள்ளி அல்லது வகுப்புக்கு வராமல் தவிர்க்கும் வீதம் 10 சதவீதம் அதிகரித்தால், அது 1.8 சதவீதம் மாணவர்கள் வருகையை குறைக்கிறது எனவும் புள்ளிவிபரத்தை தருகிறது. பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களே தொடக்கப் பள்ளி அளவில் அலுவலக உதவியாளர்கள் இல்லாத காரணத்தால், அனைத்து வேலைகளையும் பார்க்க நேரிடிகிறது என்பதையும் அரசு நினைவில் வைத்துக் கொண்டால் இந்த குறையை தவிர்க்கலாம். சமீபத்தில் ஆன் லைனில் பள்ளி மாணவர் விபரம் சேர்க்கையில் ஆண் ஆசிரியர்களே இரவு பகல் பாராமல் இணையத்தில் மாணவர்களின் புள்ளி விபரங்களை பதிவேற்றினார்கள் என்பதை அனைத்து ஆசிரியர் உலகமும் அறியும். வகுப்புகளில் ஆசிரியர்கள் வருகை முறைப்படுத்த வாயளவில் பிற பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது என்று சொன்னாலும் அலுவலக உதவியாளரை நியமிக்காத வரை ஆண் ஆசிரியர்கள் வகுப்புக்கு செல்லாமல் அலுவலக பணிகளை செய்ய நேரிடும் என்பதும் நிதர்சன உண்மை.
விரதம் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது காந்தி தான். நாளை தியாகிகள் தினம் என்று என் மகளிடம் சொன்னேன். அவள் சுதந்திரத்துக்கு போராடினவர்கள் நினைவாக கொண்டாடப்படுகிறதா ? என்றாள். காந்தி இறந்த தினம். கோட்சே தானேப்பா காந்தியை சுட்டார். அவர் ஏன்னப்பா சுட்டார்? காந்தி அமைதியானவர் தானே அப்பா? அவர்கிட்ட வேட்டியை தவிர எதுவும் இல்லையே அப்பா அப்புறம் எதை புடுங்க காந்தியை சுட்டார் என பரிதாபமாக கேட்டாள். அவளை உறங்க வைப்பதற்கான கதை கரு கிடைத்த மகிழ்ச்சியில் சொல்ல துவங்கினேன். இந்து முஸ்லீம் பிரிவினை கல்கத்தா கலாட்டா என உரையாற்ற தொடங்கினேன். வாத்தியார் வேலையை இங்கேயும் விடமாட்டீயாப்பா.. சுருக்கமா சொல்லுப்பா... இல்லை புத்தகம் இருந்தா கொடு நான் படிச்சுக்கிறேன். அதான் நான் எதையும் அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். நீ எப்பவுமே வள வளா கொள கொளா என்றாள்.
விரதம் பத்தி கேட்டா இவரு காந்தி அது இதுன்னு அறுக்கிறார் அம்மா? என்றாள். என் மனைவி , விரதமா மது...! அது வேற ஒண்ணுமில்லை காலையில வழக்கம் போல இட்லி சாப்பிட்டு...(பலகாரம்) காபி டீ குடிச்சுட்டு....அதுக்கு பின்னாடி நொருக்கு தீணி சாப்பிடாம . நேரடியா மதியம் புல் மீல்ஸ் அவுங்க அப்பா புண்ணியத்தில் வடை பாயசத்துடன் சாப்பிடுறது என்றாள். நல்ல விளக்கம்.
ஈரான் மீது பொருளாதர தடையை நாடாளுமன்றம் கொண்டு வந்தா தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்வேன் என்று சொல்ல நான் என்ன அமெரிக்க அதிபர் ஓபாமாவா...! என் மனைவியின் விரதம் சார்பான விளக்கத்திற்கு தடை விதிக்க. அதை அப்படியே ஏற்று கொள்ள அமெரிக்க பாரளுமன்றம் அல்ல என் மகளும். !
ஜெயமோகன் எழுதிய காந்தி பற்றிய புத்தகத்தை தேடி, இரவை காந்தியின் நினைவுடன் கழிக்க முற்படுகின்றேன். இதோ அதை பற்றி எழுத தொடங்கி விட்டேன். காந்தி நினைவு தினத்தில் உலக தொழு நோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த நோய் பாதிப்பு இந்தியாவில் அதிகம். இந்த நோயை உருவாக்கும் கிருமியை நார்வே டாக்டர் ஹெர்கார்ட் ஆர்மோர் கான்ஸன் 1873ல் கண்டு பிடித்தார். அதன் பிறகு தான் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை குறித்து விரிவாக இன்னொரு தருணத்தில் பார்க்கலாம்.
பித்ருகடனைத் தீர்க்க தை அம்மாவாசை விரதம் இருக்க வேண்டும். கோயிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கவலை ஆட்கொள்கின்றது. அப்பா எனக்காக செய்த தியாகங்கள் என் கண் முன் விரிய , என் தந்தையை கோட்சே போல பலமுறை சுட்டு வீழ்த்தியது காட்சிக்கு வர அப்படியே உறங்கிப்போனேன்.