Friday, December 13, 2013

தேசத்தின் வெற்றிக்குறியீடு சச்சின்...!
----------------------------------------------------------------------
22 கஜங்கள் , 24 ஆண்டுகள் கொடுத்திருப்பது பாரத ரத்னா. இதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு மிகவும் உன்னதமானது.

நமது காலத்தில் வாழும் சூப்பர் ஹீரோ சச்சின். பெரும்பாலான கிரிக்கெட் சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர் அவர். இந்தியாவில் அவரை கிரிக்கெட் கடவுளாக ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட்  முன்னால் கேப்டன் மைக் ஆதர்டன்.
25 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தை தொட்டு கும்பிட்டு விளையாட தொடங்கிய சச்சின் , தனது கடைசி போட்டியை விளையாடிய வான்கடே ஸ்டேடியத்தில் தான் உலக கோப்பையை பெற்று தந்தார். சச்சின் சச்சின் என்று ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்களின் உணர்ச்சிகளால் நிரம்பியிருந்த அந்த தருணங்களை மறக்க முடியாது.
பலரும் கிரிக்கெட் விளையாட இவரின் விளையாட்டை பார்த்து தான் வந்திருப்பர். கிரிக்கெட் விளையாட்டை பற்றி தெரியாதவர்கள் கூட இவரின் விளையாட்டை பார்த்தால், கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டு விடுவார்கள். குறிப்பாக இவர் பின் காலில் சென்று ஆடும் கவர் டிரைவ், நான்கு ரன்களை அள்ளித்தரும் இவருக்கே உரித்தான ஸ்ட்ரெய்ட் டிரைவ் பார்க்க பார்க்க அழகாக இருக்கும். இவர் விளையாடிய ஆரம்பகாலங்களில், இவர் ஆடினால் ,இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கணித்து வைத்து இருந்தனர். இவர் ஆட்டம் இழந்தால் டிவி பெட்டியை முடிவைத்து சென்ற காலங்களும் உண்டு. எதிர் அணியினரும் அப்படி தான் கருதினர். சச்சினை அவுட் ஆக்கினால் போதும், இந்தியாவை வென்று விடலாம் என நினைத்தனர். 10 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வெற்றிக்குறியீடாக விளங்கினார்.
200 போட்டிகள் , 100 சதங்கள் , என பல சாதனைகள் தன்னகத்தே கொண்ட சச்சின் முன்னேற்றத்தின் காரணம் பயிற்சி மட்டுமே.  கடைசி போட்டியிலும் வலைப்பயிற்சி எடுத்து கொண்டதில் இருந்து அவரின் கடின உழைப்பு நிரூபணமாகின்றது.     
உடல் காயங்களுக்கு நடுவிலும் அவர் தமது ஆட்டத்தின் திறனை வெளிப்படுத்த தவறியதில்லை. அவர் சந்தர்பத்திற்கு ஏற்ப தன் ஆட்டத்தினை தகவமைத்து கொள்ளும் திறன் பெற்று இருந்தார்.
2007 , 2009, 2010 ஆண்டுகளில் சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் இவர் ஓய்வு பெற வேண்டும் என குரல்கள் ஒலித்தன. 2009ல் ஆஸ்திரேலியாவுடன் அதிவேக 175 ரன்களை எடுத்து , தனது திறமையை நிருப்பித்தார். 2010ல் ஆப்ரிக்காவுடன்  ஒருநாள் போட்டியில் 200 ரன்களை எடுத்து உலகசாதனை படைத்தார்.
2011 ல் தன் திறமையால் உலக கோப்பை பெற்று தந்தார். அத்தொடரில் அதிக ரன் குவித்த முதல் இரண்டு வீரர்களில் சச்சினும் ஒருவர். பல தடுமாற்றங்களுக்கு நடுவில் தனது 100வது சதத்தை வங்காளதேச அணியுடன் அடித்து முடித்தார்.
சரி இவரின் வாழ்க்கை பாடம் நமக்கு கற்றுத்தருவது என்ன? எந்த தருணத்திலும் அவர் அவப் பெயரை எடுத்ததில்லை. அவர் மீது எந்த தருணங்களிலும் குற்றங்கள் எழவில்லை. எந்த சர்சையிலும் மாட்டிக்கொள்ள வில்லை.  
அவர் கடைசியாக நிகழ்த்திய உரையில் இருந்து அவர் கொண்டுள்ள ஒழுக்க நெறிகள் அல்லது சாதனைகளுக்கு காரணத்தை பின்வருமாறு பட்டியலிடலாம்.
1.   நீ குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் சென்று அடைய வேண்டும் என்ற அவரின் தந்தை மொழி. – நேர்மை,
2.   தாயின் பிரார்த்தனை. –  கடவுள் நம்பிக்கை .
3.   அத்தையின் உணவு _ நல்ல ஆகாரம். உடல் திடம் பெற போதிய உணவு தேவை
4.   எதை செய்தாலும் 100 % அற்பணிப்புடன் செய் ( அண்ணன் அறிவுரை)
5.   நல்ல துணை. ( மனைவி அஞ்சலி)
6.   குரு மீது பற்று ( அச்ரேகர் குறித்து பேச்சு)
7.   நாட்டுக்காக விளையாடுதல்
8.   பிற விளையாட்டு வீரர்களுடன் கொண்டுள்ள இணக்கமான உறவு( சக வீரர்களுக்கு நன்றி கூறும் பேச்சு)
9.   மன்னிப்பு கேட்கும் குணம். ( விடுபட்டவர்களுக்காக மன்னிப்பு குறித்த பேச்சு)
10.  நன்றி கூறும் பண்பு ( பள்ளி நாட்களின் விளையாடிய தோழர்களுக்கு நன்றி கூறல்)

சச்சின் பாரத ரத்னாவுக்கு பொருத்தமானவரா என கேட்பவர்கள், பாரதத்தின் ரத்தினங்களுள் சச்சினும் ஒருவர் என்பதை மறுக்க மாட்டார்கள்.


கால்பந்து ஜாம்பவான் பீலேவின் 1,281 சர்வதேச கோல்கள், டென்னிஸ் சூப்பர் ஸ்டார் ரோஜர் பெடரரின் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், சர் ஸ்டீவ் ரெட்கிரேவ்ஸின் 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் ஆகியவற்றுக்கு நிகரானது சச்சினின் சாதனை என்று மிர்ரர் இதழில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. ஆகவே சச்சின் பாரதத்தின் மதிப்பு மிகுந்த ரத்தினம் என்பதை ஒப்புக்கொள்வோம். அவர் வாழ்க்கை வரும் இளைய தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.

மதுரை சரவணன்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சச்சின் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். சந்தேகமேயில்லை. நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

பட்டியல் அருமை... உண்மை...

Post a Comment