Sunday, December 8, 2013

குழந்தைகளுக்கு தேவையா பாலியல் கல்வி ? குழந்தைகளுக்கு கொடுப்போம் பாலியல் கல்வி


குழந்தைகள் நமது சொத்து. அவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. பள்ளிக்கல்வித் துறை இதை உணர்ந்து பாடத்திட்டத்தில் ஆரம்பக்கல்வி முதலே பாலியல் கல்வியை கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் கல்வி இணைச்செயல்பாடுகளில் வாழ்க்கைத் திறன் பகுதியில் பாலியல் அறிவு குறித்து மதிப்பீடு செய்ய வாய்ப்பளித்திருப்பது வரவேற்க்கத்தக்கது.
   மாணவர்களுக்கு பாலியல் சார்ந்த அறிவை கொடுப்பது ஆசிரியர்களின் கடமை. குழந்தைகள் பெற்றோர்களிடம் இருப்பதை விட ஆசிரியர்களிடமே மிகவும் அதிக நேரம் இருக்கிறார்கள் , அதனாலே குழந்தைகள் ஆசிரியர்களிடத்தில் அன்பும் , பாதுகாப்பும் கிடைப்பதாக உணர்கிறார்கள். ஆசிரியர்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் உடனிருக்கும் வாய்ப்பு இருப்பதால் , குழந்தைகளிடம் தெரியும் மாற்றங்களை அறியும்  ஆற்றலும் அறிவும் உடையவராக ஆசிரியர் திகழ்கிறார். குழந்தைகளுக்கு நிகழும் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த மாற்றங்களை உணரும் வாய்ப்பு அதிகம் கொண்டிருக்கிறார் என்பதால் பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை வழங்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது.
     ஆசிரியர்கள் குழந்தைகளிடம்  அன்பும் , பாதுகாப்பும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை கட்டாய இலவசக்கல்விச்சட்டம் அத்தியாயம்4 ல் விதி 17 (1) எந்தவொரு குழந்தையும் உடல் ரீதியாக தண்டனைக்கோ மன ரீதியான துன்புறுத்தலுக்கோ உள்ளாக்கப்படக் கூடாது என்று உறுதியளிக்கிறது. அது மட்டுமல்ல , அத்தியாயம் 6 குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்து தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது . ஆசிரியர்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தேவையான உதவியை செய்ய முடியும், பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தையை அக்கொடுமையை மறந்து, முழு ஆற்றலுடைய குழந்தையாக மாற்ற கூடிய பொறுப்பும் கடமையும் ஆசிரியருக்கு உண்டு , அவர்களால் மட்டுமே இயலும் என்பதை இச்சமூகம் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறது.
        சமீபத்திய செய்திகளில் இருந்து பாலியல் கொடுமை இழைப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் (பெற்றோர் , தாத்தா, பாட்டி, மாமா, சித்தி, பெரியப்பா, போன்றார்களாகவும், குடும்ப நண்பர்களாகவும், அண்டை வீட்டார்களாகவும், பள்ளி அல்லது சொந்த வாகனங்களின் ஓட்டுநர்களாகவும் , விளையாட்டு பணியாளர்களாகவும் , அரிதாக ஆசிரியர்களாகவும் உள்ளார்கள்.
    அது சரி குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து தடுப்பது எப்படி ? ஆசிரியர்கள் குழந்தைகளிடம் எடுத்துக்கூறுங்கள் இவ்வாறு:
1.   உங்களின் (குழந்தைகளின் ) தனிப்பட்ட உறுப்பை தொடுதல்
2.   உங்களின் உடம்பை தடவுதல்,
3.    உங்களை மற்றவர்களின் தனிப்பட்ட உறுப்பை தொடச் செய்தல் அல்லது பார்க்க செய்தல்
4.   பாலுணர்வை தூண்டும் படங்களை காட்டுதல் அல்லது நிர்வாணமாக படமெடுத்தல்
5.     அருவருக்கத்தக்க பாலுணர்வை தூண்டும் விதத்தில் பேசுதல்
போன்ற செயல்களில் யாரும் ஈடுப்பட்டால் உடனே ஆசிரியர்களிடம் அல்லது பெற்றோர்களிடம் தெரிவிக்க செய்யவும். (மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் குட் டச் பேட் டச் குறித்த அறிவை வளர்த்தல் வேண்டும்)
     குழந்தைகளூக்கு  தீங்கிழைப்பவர் குறித்து பயமும், தீங்கை வெளியே கூறினால் தம்மை தவறாக நினைப்பார்கள் என்ற உணர்வும், அதை பிறரிடம் தெரிவிக்கும் வாய்ப்பு குறைவு. ஆசிரியர்கள் குழந்தைகளின் நடவடிக்கை மாற்றங்கள் மூலமாக பாலியல் தீங்கிற்கு உள்ளாகியுள்ளார்களா என்பதை கண்டறியலாம். திடீரென்று மாணவன் மனச்சோர்வு மிக்கவனாக காணப்படலாம். அல்லது மதிப்பெண் குறைவாக பெற்று , பாடங்களை கற்பதில் சிரமம் பெற்றவனாகவும், சிந்தனையை ஒருமுகப்படுத்துவதலில் சிரமம் உடையவனாகவும் இருப்பான். விளையாட்டு , பொழுதுபோக்கு போன்ற உடலுழைப்பு சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட ஆர்வமின்றி இருப்பான், உடல்ரீதியாக காரணம் ஏதுமின்றி தலைவலி, வயிற்றுவலி அல்லது வாந்தி பற்றி முறையிடுவான் . இதன் தொடர்ச்சியாக மாணவன் விட்டை விட்டு ஓடிப்போகலாம் அல்லது குடி, போதை பழக்கம் எற்பட வாய்ப்பு உள்ளது.  தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் பாலியல் கொடுமையிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறிவதன் மூலம் நாம் அக்குழந்தைக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதை உறுதி செய்யலாம்.
   மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் குழந்தைகள் நிச்சயமாக தமக்கு நேர்ந்த தீங்கை சொல்லும் வாய்ப்பு உள்ளது, இருப்பினும் குழந்தைகள் விட்டு விட்டு  கூறும் . அப்போது ஆசிரியர்கள் குழந்தைகளை நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஆதரவாக பேச வேண்டும். நடந்த சம்பவத்திற்கும் குழந்தை எந்தவிதத்திலும் பொறுப்பு  இல்லை என்று நம்பிக்கையளிக்கவும். தயவு செய்து குழந்தை  உங்களிடம் கூறியதை வேறொறு ஆசிரியரிடம் சொல்லாதீர்கள். தங்களால் அப்பிரச்சனைக்கு தீர்வு எடுக்க முடியவில்லையெனில் 1098 உதவியை நாடலாம்.
   ஆசிரியர்கள் இக்கட்டுரையை படிப்பதன் மூலம் தங்களிடம் பயிலும் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அறிவை வழங்க முடியுமானால் இதுவே இக்கட்டுரையின் வெற்றியாகும். மாணவர் உலகம் வாசகர்கள் , பெற்றோர்கள், மாணவர்கள் இக்கட்டுரையை படித்து பாலியல் தீங்கு குறித்த விழிப்புணர்வு பெறுவார்கள் என்றாலும் இக்கட்டுரையினை வெற்றியை மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.
  மதுரை சரவணன்.
9344124572 

7 comments:

மகேந்திரன் said...

நல்ல விழிப்புணர்வுக் கட்டுரை நண்பரே...
கடைபிடித்தல் நலம்.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதொரு விழிப்புண்ர்வுக் கட்டுரை நண்பரே
ஆசிரியர்களின் பணிதான் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.2

MANO நாஞ்சில் மனோ said...

பெற்றோரே தயங்கும் போது ஆசிரியர்களின் பங்குதான் இதில் அதிகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விழிப்புண்ர்வுக் கட்டுரை...

Geetha said...

இப்போது தேவையான கட்டுரை இது.ஒரு ஆசிரியர் தன் குழந்தையாக நினைத்து செயல் பட வேண்டும்.நன்றி சிறந்த பதிவு

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமையானதொரு விழிப்புணர்வுக் கட்டுரை...
வாழ்த்துக்கள்.

Post a Comment