பேருந்து நிறுத்தம், இரயில் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பொது இடங்களில் நீங்கள் பார்க்க நேரிடும் புதிய வாசகம், ”தற்போது நம் மாநகரில் ’சைல்டு லைன்’ 1098” என்பதாகும். மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு சிஏபி என்ற மாநகர ஆலோசனைக் குழுமம் சைல்டு லைனுக்காக செயல்படுகிறது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம். சைல்டு லைன் உறுப்பினர்கள் யார் என்பதை அறியவந்தால் ,இதன் அவசியத்தை அறியலாம். காவல் துறை , நீதித்துறை, சுகாதாரத்துறை கல்வித்துறை, போக்குவரத்து துறை, தொலைப்பேசித்துறை, யுனிசெப் ,இவர்களுடன் தொண்டுநிறுவன அதிகாரிகள் சிஏபி குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கஜினி திரைப்படம் பார்த்திருப்பவர்கள் உடனடியாக 1098 ன் அவசியத்தை உணர முடியும். இரயிலில் கொத்தடிமைகளாக கடத்திச்செல்லும் குழந்தைகளை மீட்க போராடும் கதாநாயகியின் செயலை தான் 1098 செய்கிறது. மதுரையில் சிந்தாமணி என்ற பகுதியில் அப்பளக் கம்பெனியில் தந்தை வாங்கிய கடனுக்கு பள்ளி செல்லாமல் ,அப்பளக் கம்பெனி முதலாளியால் கொத்தடிமை குழந்தை தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த சிறுவனை, பொது மக்களில் ஒருவர் 1098 க்கு தொடர்பு கொண்டதன் விளைவு, அவன் குழந்தைப்பருவத்தை மீட்டதுடன், ஆனந்தமாக பள்ளிக்கு செல்ல உதவியது .
துயரமான சூழலில் சிக்கித்தவிக்கும் குழந்தையை காத்திடவும், குழந்தை தொழிலாளர்கள் , தங்க இடமின்றி தவிக்கும் குழந்தைகள், போதை பழக்கத்திற்கு அடிமையான குழுந்தைகள், மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் வீட்டை விட்டு ஓடிவந்த குழந்தைகள், தங்க இடமின்றி ஆதரவற்று தவிக்கும் குழந்தைகள் ஆகியோரை மீட்வும், பாலியல் கொடுமைக்கு ஆளான குழந்தைகளுக்கு ஆதரவளிக்கவும் , பாதுகாப்பும் , கவனிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவிடவும் காத்திருக்கிறது 1098 .
குழந்தைகள் மீது அக்கறையுள்ள அனைவரும் மேற்கண்ட சிறுவர்கள் சார்பான உதவிகளுக்கு 1098 இலவச 24 மணி நேர தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தால் போதும் , குழந்தைகளுக்கு தேவையான சட்ட உதவி, பாதுகாப்பு அளிக்கப்பட்டு, மருத்துவ உதவி கொடுக்கப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவார்கள்.
குழந்தைகளின் உரிமைகளை மதிக்க முற்படும் அனைவரும் குழந்தைகளுக்கு உதவலாம்.
குழந்தைகளுக்கு உரிமையா…? குழந்தைகள் உரிமையை மதிப்பதா..? என உரிமையோடு கேட்பது புரிகிறது.
குழந்தைகள் தங்களுக்கே உரிய மாண்போடும் தன் மதிப்போடும் வாழத் தேவையான அனைத்தும் குழந்தை உரிமையாகும்.
குழந்தையின் அழுக்குரல் , ஆம் , அதன் முதல் குரல் என்று ஆரம்பித்ததோ அன்று முதல் குழந்தைகள் தங்களுக்கான உரிமையை கோர ஆரம்பித்து விட்டார்கள்.
முதல் உலகப் போரின் முடிவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சுவிட்சர்லேண்ட் சேர்ந்த எக்லண்டைன் ஜெப் 1923 குழந்தைகளுக்கான உரிமை பற்றி பேச ஆரம்பித்தார். அதன் விளைவு 1924 குழந்தை உரிமை பிரகடனம் உருவாக்கப்பட்டது . அதன் தொடர்ச்சியாக
· 1948 டிசம்பர் 10 மனித உரிமை பிரகடனம்
· 1959 குழந்தை உரிமை பிரகடனம்
· 1979 சர்வதேச குழந்தைகள் ஆண்டு
· 1986 குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம்
· 1989 சர்வதேச குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை
· 1992 டிசம்பர் குழந்தைகள் உரிமை மீதான உடன்படிக்கை பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
· 2006 குழந்தை திருமண தடுப்புச் சட்டம்
போன்ற சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல , இந்திய அரசியலமைப்புச் சட்டம் குழந்தைகளுக்கான உரிமையை உறுதி செய்கிறது.
சட்டப்படி 18 வயதுக்கு குறைவான அனைவரும் குழந்தைகள் ஆவார்கள்.
· இந்திய அரசியலைமைப்பு சட்டம் ஆர்ட்டிக்கில் 21 ஏ 6 முதல் 14 வயதுள்ள குழுந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிக்க உரிமை வழங்குகிறது.
· ஆபத்து விளைவிக்ககூடிய தொழில்களில் 14வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கிறது ஆரிடிக்கிள் 24.
· ஆர்டிக்கிள் 39 எஃப் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்பையும், ஆரோக்கியமான முறையில், சுதந்திரமான சூழலில் வளர்வதற்கான வசதியையும் உருவாக்கவும், குழந்தைகள் மாண்பு மற்றும் , குழந்தைமைக்கு எதிரான சுரண்டலில் இருந்து மனரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதுகாப்பும் அளிக்கவும் உறுதி செய்கிறது.
1098 உருவாக காரணமான குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கை , குழந்தைகள் உரிமையை பாதுகாக்கவும் நிலைநாட்டவும் உறுதியளிக்கிறது குழந்தைகள் உரிமைக்கான வழிகாட்டு நெறிமுறையில் பிரிவு 3 குழந்தைகள் நலன் கருதும் எல்லா அமைப்புகளும் , ஒவ்வொரு குழந்தைக்கும் எது மிக சிறந்ததோ, அதை நோக்கி செயல்பட வேண்டும் என்கிறது. பிரிவு 9 உங்களுக்கு (குழந்தைக்கு) மிகவும் நல்லது என்றால் ஒழிய உங்களை உங்கள் பெற்றோரிடம் இருந்து பிரிக்க கூடாது . உதாரணத்திற்கு அம்மாவோ, அப்பாவோ ஒரு குழந்தையை ஒதுக்கி வைப்பது அல்லது நல்லபடியாக கவனிக்காமல் இருப்பது. உங்கள் தாய் , தந்தை பிரிந்து வாழும் நிலையில் உங்களூக்கு தீங்கு விளைவிக்காது என்றால் இரண்டு பேரிடமும் பேச்சு வார்த்தை வைத்திருப்பதற்கு குழந்தைக்கு உரிமையளிக்கிறது. பிரிவு 24 நீங்கள் ஆரோக்கியமான வாழ தேவையான நல்ல தரமான மருத்துவ பராமரிப்பு , சுத்தமான குடிநீர், சத்துள்ள உணவு , தூய்மையான சுற்றுபுறம் இவையாவும் கிடைக்க வேண்டும் .இது உங்கள் உரிமை என்கிறது. பிரிவு 28 நீங்கள் ஏழையாக அல்லது உதவி தேவைப்படும் நிலையில் இருந்தால் அரசாங்கத்திடம் இருந்து உதவி பெற உங்களுக்கோ உங்கள் பாதுகாவலருக்கோ உரிமை உள்ளது என்கிறது. பிரிவு 34 படி உங்களை பாலியல் வன்முறையில் இருந்து அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். பிரிவு 35 குழந்தைகள் கடத்தப்படுவதோ , விற்கப்படுதோ அரசாங்கத்தால் தடுக்கப்பட வேண்டும். பிர்வு 37 படி உங்களை (குழந்தைகளை ) எந்த விதத்திலும் கொடுமையான மனிதாபிமானமற்ற முறையில் கீழ்த்தர்மாக நடத்தவோ கண்டிக்கவோ கூடாது என்கிறது. இப்படியாக குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கை குழந்தைகள் வாழ்விற்கு , வளர்ச்சிக்கு , பாதுகாப்பிற்கு உறுதியளிக்கிறது.
அது சரிங்க… 1098 ல ஆரம்பிச்சு குழந்தைகள் உரிமைகள் பற்றி பேச ஆரம்பிச்சுட்டீங்க.. இப்ப என்ன சொல்ல வர்றீங்க என்று கேட்பது புரிகிறது. குழந்தைகள் வருங்கால இந்தியாவின் தூண்கள். அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் , கல்வி கற்க தேவையான வாய்ப்புகளுடனும் , அன்போடு , மரியாதையோடு நடத்தப்படவும் வேண்டும் , அது மட்டும் அல்ல , அவர்களுக்கு அவர்களின் உரிமைகளும் தெரிய வேண்டும் . அதற்காக மாணவர் உலகம் வாயிலாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், பொது மக்கள் , வாசகர்கள், தொண்டு நிறுவன நண்பர்கள் இவ்விசயத்தை குழந்தைகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவே இக்கட்டுரையின் பலமாகும். இந்தியாவின் நிகழ்காலம் குழந்தைகள், அவர்களே நம் இந்தியாவின் வருங்காலம் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டாலே போதும் குழந்தைகளின் மாண்பும் , மதிப்பும் பேணிக்காக்கப்படும் என்பது உறுதி.
3 comments:
விரிவான விளக்கம்... முடிவில் சிறப்பான கட்டுரையின் பலம் அனைவருக்கும் புரிய வேண்டும்... நன்றி...
வாழ்த்துக்கள்...
நல்லதொரு பகிர்வு...
விரிவான விளக்கம்...
வாழ்த்துக்கள் நண்பா...
மிகவும் பயனுள்ள கட்டுரை நண்பரே
வாழ்த்துக்கள்
Post a Comment