Friday, February 17, 2012

மரபையும் புரிந்து கொள்ள உதவும் எச்சங்கள்


    நம்பிக்கை என்பது மனதின் உள் ஆழத்தில் இருந்து பிறக்கும் ஒரு வித உண்மை . குழந்தை பிறப்பில் இருந்து ஆரம்பிக்கும் நம்பிக்கை , வளர்ந்து ஆளான பின்பும், ஒவ்வொரு நிகழ்விலும் தொடந்து,   ஒரு வித பண்பாட்டு சார்ந்த மரபாக மாறி உருவெடுக்கிறது.  

     நான் சிறுவனாக இருக்கும் போது விளக்கு ஒளியில் தெரியும் நிழலை பார்த்து பேசிவது பழக்கம். அப்போது என் பாட்டி, “டேய் சுவத்து நிழலை பார்த்து பேசாத ஆயுசு குறைஞ்சு போயிடும்” என அதட்டுவார். என் தம்பிக்கு பிறக்கும் போது ஆறு விரல் இருந்தது. உடனே பக்கத்து வீட்டு அத்தை என் தம்பியை பார்த்து அதிர்ஷ்டக் காரன் ஆறு விரல் இருக்கு என்றார். அது மட்டுமல்ல குடும்பத்துக்கு யோகம் என்றார்கள். ரித்திக் ரோஷன் போன்று பலரையும் ஆறு விரலுடன் பார்க்கும் போது (என் தம்பி  உட்பட ) இக் கூற்று உண்மையானதாக இருப்பதாக தோன்றுகிறது.

     அட என்னங்க இன்னைக்கு நம்பிக்கையை பத்தி எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா? அது ஒன்றுமில்லீங்க… என் தங்கையின் மகன் தெற்கு வாசல் பள்ளிவாசலுக்கு சென்று மந்திரித்து வருவதாக என் அன்னையை அழைத்துக் கொண்டு சென்றான். இன்றைய கணிணியுகத்தில் இன்னும் இவர்கள் மாறாமல் இருக்கிறார்களே ? இவர்களிடம் ஊறிப்போன நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் அசைக்க முடியாத ஒரு வித பண்பாட்டு மரபாக மாறி உள்ளதே என ஆச்சரியப்பட வைக்கிறது.

    இன்றும் மதுரை சந்தைப் பேட்டை சிங் கிடம் மந்திரிக்க ஒரு கூட்டமே நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. அனைத்தும் பச்சிளங்குழந்தைகள். உறை விழுந்திடுச்சு என்று என் மூத்த தம்பி போன வாரம் தன் ஒரு வயது பையனை சிங்கிடம் அழைத்து சென்றான்.

    என் மாமியார் , என் தம்பியின் துணைவியாரிடம் போனில் இதற்கு ஒரு வைத்தியம் சொன்னார். அதை கேட்டு ஆச்சரியம் உண்டாயிற்று. இதோ:
தாய் மாமன் வேட்டியை எடுத்து , வாசப்படியில நின்னு , தொட்டியில போடுற மாதிரி குழந்தையை போட்டு, வேட்டி முனையை உயர்த்தியும் தாழ்த்தியும் பிடிச்சு உருள விடு … மூணு நாளையில உறை விழுந்தது சரியாகிடும் .

    என் அம்மா மருமகளிடம் வீட்டுக்கு தூரமா இருக்கிறப்ப… பால் குடுக்காத.. பிள்ளைக்கு ஆகாது என்றார்.

    “நம்பிக்கைகளின் அடிப்படை மனிதனின் அகமனம் ஆகும். மூளைக்கு அகமனமானது காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணங்களை உணர்த்துகிறது. மூளையில் பதியும் அவ்வெண்ணங்கள் உண்மையாகி உறுதிப்படும் போது நம்பிக்கையாகிறது. மனித வாழ்வின் உறுதிப்பாட்டிற்கு ஆதரவு தரும் இந்நம்பிக்கைகள் மனித வாழ்வில் மிகஇன்றியமையாதவை” என்கிறார் ஜேம்ஸ் வின்சென்டர்.

    இப்படிப் பட்ட நம்பிக்கைகள் எப்போது உருவாகின என தெரியவில்லை. என் அம்மாவிற்கு அம்மா இதை அவரிடம் சொல்லி போய் உள்ளார் என்று வைத்துக் கொண்டால் இவை நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் பாதுகாக்கப்பட்டு வருவது புலனாகும்.

    குழந்தை சார்ந்த நம்பிக்கைகள் என் கண்களுக்கு புலப்படுவதற்கு , நான் துவக்கப் பள்ளி தலைமையாசிரியராக இருப்பது காரணமாக இருக்கலாம்.
கண்ணேறு கழித்தல் பற்றி சொல்லியே ஆக வேண்டும். என் பள்ளியில் மூன்று வருடங்கள் முன்னால் நடந்த சம்பவம். சுவேதா என்ற பெண் குழந்தையின் தாய் வெகு நேரமாக பள்ளி தொடங்கியும் காத்திருந்தார். ரவுண்ட்ஸ் வந்தவன் அவரை கவனித்து பள்ளி நேரத்தில் வகுப்புக்கு அருகில் அமர்ந்திருப்பது தவறு என்று எச்சரித்து சென்றுவிட்டேன்.  அரை மணி நேரம் கழித்து என் அறையில் இருந்து பார்த்தால் அவர் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்து இருந்தார்.

    இரண்டாம் வகுப்பு டீச்சர் பாத்ரூம் சென்றார். அவர் சென்ற பின் , சுவேதாவின் தாய் அவர் நடந்து சென்ற பாதையில் இருந்து மண் எடுத்து சென்றார். 
     நான் முதல் வகுப்பு ஆசிரியையிடம் இது பற்றி கேட்ட போது ,  சுவேதவை பற்றி  இரண்டாம் வகுப்பு ஆசிரியை எப்போதும் புகழ்ந்து தள்ளுவதாலும், அவளின் முடி நல்லா இருக்கு, அழகா சீவி பள்ளிக்கு வருகிறாள் என இரண்டாம் வகுப்பு ஆசிரியை கண் வைத்து விட்டதால்  அவருக்கு தெரியாமல் காலடி மண் எடுத்து செல்ல காத்திருந்தார் என விளக்கம் அளித்தார்.

    என் அம்மா நாங்கள் சிறுவர்களாக இருந்த சமயம் இரவு படுக்கும் முன் அனைவரையும் அழைத்து, கண்ணேறு கழிப்பதற்காக சூடத்தை எடுத்து , மூன்று முறை தலையை சுற்றி, உடம்பை தடவி , நாங்கள் அனைவரும் சூடத்தின் மேல் துப்ப , அதனை வாசல் படியில் வெளியில் வைத்து எரித்து விட்டு , பார்க்காமல் வந்து கதவை சாத்திவிடுவார்.  சூடத்தை துப்பும் போது எங்களுக்குள் போட்டி வரும். 
     இதை மூட நம்பிக்கை என இளைய தம்பி சாடுவான். ஆனால், இன்று அவனின் மகளுக்கு தினமும் சூடம் சுற்றி கண்ணேறு கழிப்பதை பார்க்கும் போது ஆச்சரியப்படுகிறேன்.

    சுவேதா அம்மா , அந்த டீச்சரின் காலடி மண்ணை எடுத்து , அதனுடன் மூன்று மிளகாய் வற்றல் எடுத்து, கொஞ்சம் உப்பு , கடுகு சேர்த்து, கையில் வைத்து மடக்கி , தலையில் மூன்று முறை சுற்றி, அதில் துப்பி, எரிகிற அடுப்பில் போட்டு கண்ணேறு கழித்ததாக முதல் வகுப்பு ஆசிரியர் கூறினார். (பின் குறிப்பு: கண்ணேறு இருந்தால் அடுப்பில் போடும் பொருள்களால் தொண்டை கமறாது என்பது நம்பிக்கை. அன்று தொண்டை கமறவில்லையாம்)

    மூட நம்பிக்கை என்பதை விட இதை பழக்க வழக்கம் என்று சொல்வது தான் முறை என்று படுகிறது. கணிணி உலகத்தில் உள்ள நாம் இன்னும் ஆதி வாசிகள் போல இந் நம்பிக்கைகளின் பின்னால் உழன்று திரிவது  எவ்வகையில் நியாயம்? என்பதை விட இவை எச்சங்களாக நம் வாழ்வில் தங்கி விட்டன. அவை வாழ்வில் பிரிக்க முடியாது பின்னி பிணைந்து விட்டன. இவை மட்டுமே நம் பண்பாட்டையும் , மரபையும் புரிந்து வைத்துக் கொள்ள உதவும் எச்சங்களாகும் என நம்புகிறேன்.           
   

1 comment:

passerby said...

நம்பிக்கைகள் எப்படியும் இருந்து தொலைக்கட்டும்.

அவை நமது பாரம்பரியத்தைக்காட்டியும் காட்டாமலும் இருந்து தொலைக்கட்டும்.

ஆனால் அவை சமூகக்கேடாக இருந்தால் என்ன செய்வது?

திருஸ்டி கழிப்பதற்காக சூடத்தைக் கொழுத்தினால் சமூகத்துக்குத் தொல்லையில்லை. அதே வேளையில் கலசத்தில் எதையோ வைத்து முச்சந்தியில் போட்டு அதை மிதிப்பவருக்கு என் மகனுக்கு வந்த தீராநோய் மிதித்தவனுக்குப்போய் சேர்ந்து என் மகன் பிழைப்பானாக என்றால்? இது என்ன் குணம்? பேய்க்குணம்தானே?

இவ்வாறாக நம்பிக்கைகள் சமூகத்தை, அல்லது மக்களின் வாழ்க்கைக்குணத்தைக் கெடுக்கும்போது, அவை பாரம்பரியத்தைக் காத்தாலென்ன காக்காவிட்டாலென்ன? விட்டுத்தொலைத்தே தீரவேண்டும்? செயவினை வைப்பது இந்த ரகம்.

பாரம்பரியம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட முடியாது.

Post a Comment