சனிக்கிழமை நான் என்னுடைய வேகன் ஆர் காரில் அம்மா வீடு வரை சென்று வீடு திரும்பிக் கொண்டு இருந்தேன்.
மாட்டுத்தாவணி வழியாக வந்து , புதூர் பி.டி.ஆர் டிக்கடை அருகில் அய்யார் பங்களா செல்லும் குறுகலான பாதை வழியா தபால் தந்தி நகர் நோக்கி பயணித்தேன். முன்னே வண்டிகள் வரிசையாக நிற்க, நானும் பிரேக் அடித்து நிறுத்தி காத்திருந்தேன். எதிர் வரிசையில் இருந்து வண்டிகள் நகர வழியில்லாமல் முன்னோக்கி டூவிலர் ஆசாமிகள் நகர் , எதிரே மினி பஸ் வர கஷ்டப்பட்டு கொண்டிருந்தது.(எவனுக்கும் வழிவிடாமல் முன்னோக்கி செல்வது தான் மதுரைக்கார டூவிலார்களின் விதிக்கப்படாத விதி)
என்னை ஹார்ன் அடித்து முன்னோக்கி போக சொல்லி , என் பின்னால் இருந்த மாருதி வேன் எச்சரித்தது. அவர்களுக்கு முடிந்தால் முன் செல் என கைகாட்டி சைகை செய்தேன். ஒரு ஐந்து நிமிடப் போரட்டத்துக்கு பின் மினி பஸ் ஒரு வழியாக என்னை கடக்க, நான் மெதுவாக என் வண்டியை நகர்த்தினேன்.
அதற்குள் என் முன்னால் இரண்டு பைக்கில் தமிழ் திரைப்பட வில்லன்களைப் போல கருத்த தடித்த உருவத்தில் என் காரை வழி மறித்தனர்.
அதில் ஒருவன் ஏக வசனத்தில் காரை நிறுத்துடா… என்ற மரியாதை தேய்ந்த வார்த்தைகளால் என் வண்டியை அடிக்க வந்தான். நான் வண்டியை ஓரங்கட்டினேன். காரில் இருந்த வாரே என்ன பிரச்சனை…? என்ன வேண்டும்..? என்றேன். அதற்குள் என்னை சுற்றி ஒரே கூட்டம் கூடி விட்டது. (மதுரையில் கூட்டம் கூட காரணம் வேண்டுமா?)
அவர்களுக்கு பின்னால் மேலும் இரண்டு பைக்குகள் என என்னை சுற்றி வளைத்தனர். ( இப்படி போலீஸ் நிஜத் திருடர்களை சுற்றி வளைத்தால் , நாம் ஏகப்பட்ட வழிப்பறி திருடர்களை பிடித்துவிடலாம்)
கூட்டம் இன்னும் ஆர்வமாக என்ன விசயம் என நான் முந்தும் முன் அவர்களிடம் கேட்டுக் கொண்டது. ( மாகா ஜனங்களே மதுரக் காரங்களுக்கு என்ன பாசம் ரோட்டில எது நடந்தாலும் வந்து ஆஜார் ஆகிவிடுறேங்களே…ஆனா சரியான நேரத்தில் சரியான விசயத்துக்கு உதவ மாட்டீங்களே)
என்ன நடக்கிறது என்று புரியாமல் இருக்கிறேன். அப்போது தான் ஆஜரான ஒரு பெரிசு (எல்லா தமிழ் சினிமாவிலும் ஆஜாராவதைப் போல) இந்த கார் காரங்களே இப்படி தான், எவன இடிச்சு தள்ளிட்டு வந்தான் என வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தது.
வில்லத்தனம் அதிகமாக உள்ள ஒருவன், நீ பாட்டுக்கு எம்.ஐ.டி காரனை இடிச்சு தள்ளிட்டு வர , அவன் கால் போச்சு தெரியுமா என சொல்லிக் கொண்டு கார் கதவை திறக்க முற்பட்டான். நான் அதுவரை பொறுமைக் காத்தவன் மனதில் தைரியத்தை வரவழைத்து யார் வண்டி இடிச்சுது..? என்ன பிரச்சனை.. ? என அடித்தொண்டையில் இருந்து கூவினேன்.
அடுத்தவன், எங்கிருந்து வர்ர…?
முதல்ல என்ன வண்டி இடிச்சுதுன்னு கேளு…. என நானும் ஒருமையில் பேச வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகினேன்.
கூட்டத்தில் பின்னால் இருந்து முன்னோக்கி வந்தவன்,, என் வண்டியின் முன் உள்ள நெளிவை காண்பித்து , இது எப்ப இடிச்சது என்றான். இது இடித்து ஆறு மாதம் ஆகும் என்றேன். ( சோம்பேறியான நான் காரை என் வீட்டு வாசல் கதவில் இடித்து உள்நோக்கி சென்ற நெளிவை சரிசெய்யாமல் இருந்து விட்டேன்)
இல்லை , இப்பதான் இடிச்சுட்டு , அவன் கையையும் காலையும் ஒடச்சுட்டு வர்ற… இரத்தம் சொட்ட சொட்ட சூரியா நகரில் கிடக்கிறான் என்றான்.
சரி போலீசைக் கூப்பிடு என்றான் மற்றொருவன். அதற்குள் பெரிசு.. சவுடாலா காருல.உட்கார்ந்து பதில் சொல்லுறத பாரு…என உசுப்பு ஏத்தினார்.( சினிமாவில் பஞ்சாயத்து காட்சிகள் இம்மாதிரியான சம்பவங்களை பார்த்து தான் , இம்மாதிரியான பெரிசுகளை வைத்து எடுப்பார்களோ..!)
நான் நிதானமாக என்ன வண்டின்னு கேளுங்க.. கலர் என்ன என்று சொல்ல சொல்லுங்க என்றேன். உடனே அதில் ஒரு வில்லன் போன் செய்து என்ன கலரு சொன்ன… ஓயிட்டா… அப்புறம் என்ன வண்டி.. சுவிப்ட்டா.. என போனை கட் செய்தான்.
நல்ல விபரம் தெரிந்து வண்டியை நிறுத்துங்கப்பா… அப்ப நீங்க அந்த ஆக்ஸிடெண்ட பார்க்கலையா என பெரியவர் எனக்கு பதிலாக வாய்ஸ் கொடுத்தார்.
வந்தவர்கள் ஒரே வரியில் "சாரி சார்" என வண்டியை எடுத்து கிளம்பினர்.
அந்த புள்ளைய இந்த மிரட்டு மிரட்டினத பார்த்த எனக்கே கொஞ்சம் பயமா தான் இருந்தது என பெரியவர் அருகில் உள்ள ஜோடி கமண்டு அடித்தது. அடுத்தவனுக்கு ஒண்ணுன்னா வருஞ்சு கட்டிகிட்டு உதவி செய்யிறதுல மதுரக்காரனுக்கு மிஞ்சினவன் யாருமில்லை.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன். என் மனைவியிடம் நடந்ததை சொன்னோன் .
முதலில் நெளிவை எடுங்க..இல்லை எவனோ இடிச்சதுக்கு நீங்க தெண்டம் கட்டப் போறிங்க என சாடினாள்.
வண்டி இடிப்பட்ட உடனே சரிசெய்ய வேண்டும் என பாடம் புகட்டிய மதுரைக்கார பாசமான பசங்களுக்கு ரெம்பவே நன்றி…!