Tuesday, January 10, 2012

கஷ்டப்படுத்தும் இந்த விசயத்தை புறக்கணீக்காதீர்கள்…!


   கல்வியின் பரிமாணம் உடனடி வேலைவாய்ப்பு ,கைநிறைய சம்பளம், முதலீடுக்கு தகுந்த உடனடி லாபம், உத்திர வாதம் அளிக்கும் எதிர்பார்க்கும் உடனடி பயன் என ரெடிமேட் உணவகம் போல் குறுகி விட்ட நிலையில் , நாம் நாட்டின் நன்மை நோக்கிய விழுமியங்களை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சாத்தியம்.

     நாம் மிருக காட்சி சாலைக்கு சென்று மிருகங்களை காணும் காலம் மாறி விட்டது. ஆம், முன்பெல்லாம் விடுமுறை என்றால் நாம் சித்தப்பா , பெரியம்மா  வீட்டுக்கு சென்று, அப்படியே சென்னையில் மிருக காட்சி சாலைக்கு சென்று மிருகங்களை கண்டு களித்து வரலாம் என்று திட்ட மிடுவோம். இன்று காலத்தின் கோலம், கல்வியின் அவசர அதிரடி விழுமியத்தின் விளைவு, மனிதன் மனிதனை காட்சி பொருளாக காணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

    கை நிறைய காசு , காண்பதற்கு அழகிய மனைவி என கூடிய வாழ்க்கையுடன் கண்ணுக்கு எட்டாத தொலைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு , நம் பெற்றோர்களை அனாதைகளாக விட்டுவிட்டு என்பதை விட அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு என்ற அடிப்படையில் வசதியான ஒரு முதியோர் விடுதியை ஏற்படுத்தி கொடுத்து சென்று விடுகின்றோம். விடுமுறைகளில் மிருக காட்சி சாலைகளுக்கு சென்று மிருகங்களை பார்க்க திட்டமிடுவது போன்று நம் மனித தெய்வங்களை ஒரு நாள் பயணமாக காணச் செல்கிறோம். எவ்வளவு மாறியுள்ளோம்? சாரி கல்வியின் விழுமியம் மாற்றியுள்ளது.

     அது மட்டுமல்ல அறிவியல் பூர்வமாக சிந்திக்க தவறியுள்ளோம். எதற்கும் பயம். எதற்கும் போராட்டம்.  எதனாலும் நன்மை கிடைக்கும் என்றால் உடனே அதனை தேர்ந்தெடுக்க தவறுவதில்லை. அது போலவே எதனாலும் தீமை வந்துவிடுமென்றாலும் அதற்காக எப்போதும் விட பயப்படுவதும் உண்டு. சக்கரத்தை பார்த்து பயந்திருந்தால் , என்ன நடந்திருக்கும்? பல்பு எறிவதை கண்டு பயந்திருந்தால், இன்னும் இருளில் மூழ்கி இருப்போம். இப்படி அறிவியல் வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகளை நாம் எப்போதும் தவறவிடுவதில்லை. அவை நம்மை அறியாமல் நம்மை தொற்றிக் கொள்ளுகின்றன. ஆனால் இன்று அணு உலை விசயத்தில் நம் விஞ்ஞானி அப்துல் கலாம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறோம். ஏன்? மிக தூய்மையான மின்சாரம் அணு உலையினால் கிடைக்கும் என்கிறார்களே? சிந்திக்க மறுக்கும் மனதினை கொடுத்ததும் , நம் கல்வி முறையில் உள்ள கோளாறை எடுத்து இயம்புவதாகவே நம்புகிறேன். மாற்று எரிசக்திக்கான உடனடி தேவை குறித்த ஆய்வை மேற்கொள்ள நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தமிழக முதல்வர் அம்மாவின் பசுமை வீட்டு திட்டத்தில் சூரிய மின்கலன் கொடுக்கப்படுவது பாராட்டுக்குரியது.

     மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்றலை தொடக்க கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். (அறிவியலில் கற்றல் ஆனந்தமாக இருக்க ஆசிரிய பயிற்றுனர்கள் மூலமாக அறிவியல் ஆனந்தம் பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது )  எதையும் பகுத்து ஆராயும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.

    ஆன்மிகத்தையும் கற்று கொடுக்க வேண்டும். அப்போது தான் மாணவன் அதனை மறுக்கும் போதோ , ஏற்கும் போதோ அதனை அறிவியல் சார்ந்து புறக்கணிக்கவோ , ஏற்கவோ முடியும். ஒரு சி.டி பிளையரில் சி.டியை போட்டு பாட்டோ, படமோ, பாடமோ கேட்கும் போது நாம் நடுவில் ஆப் செய்கிறோம். ஆனால் , அது மீண்டும் இயக்கும் போது , மீண்டும் முதலில் இருந்து தான் தொடங்குகிறது. எப்படி? ஏன்? இது எதனுடன் பொருந்தும் என சிந்திக்க செய்யுங்கள். இதனை நான் ரிக் வேதத்தில் உள்ள கருத்தோடு பொருத்திப்பார்க்கிறேன். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் அந்நிகழ்வு நடக்கும் என்ற ரிக் வேத கருத்துடன் இந்த சி.டி மேட்டரை பொருத்தும் போது மீண்டும் அதே இடத்தில் ப்ளே(play) ஆவதைப் போன்று பத்தாயிரம் ஆண்டு கழித்து மீண்டும் இதே போல ஒரு போஸ்டில் உங்களுடன் இதே போன்று தொடர்பு கொள்வேன் என நம்புகிறேன்.
    
    நான் எதிர்பார்க்கும் கல்வி மாணவர்களுக்கு கிடைக்க ஆசிரியர்கள் அற்பணிப்பு பண்புடன் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக செயல் பட வேண்டும். மேலும் விழுமியங்களை அவனையறியாமல் உணரச் செய்ய வேண்டும் . எதிர்ப்பார்க்கும் நற்பண்புகளால் மட்டுமே நாம் இந்தியாவை முன்னேரிய உலக நாடுகளில் ஒன்றாக பார்க்க முடியும். 

9 comments:

Chitra said...

மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்றலை தொடக்க கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். (அறிவியலில் கற்றல் ஆனந்தமாக இருக்க ஆசிரிய பயிற்றுனர்கள் மூலமாக அறிவியல் ஆனந்தம் பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது ) எதையும் பகுத்து ஆராயும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.


..... well -said!
பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்புகள் - முதலிடம் பெறும் மாணவர்கள், அதன் பின் சாதனையாளார்களாக அடையாளம் காணப்படாமல் சென்று விடுவது வேதனையான விஷயம் தான்.

கடம்பவன குயில் said...

எல்லாம் இயந்திர மயம் எல்லோரும் இயந்திர மனிதர்களாகிவிட்ட இந்தக் காலத்தில் அர்பணிப்பு உணர்வுடன் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் ஆசிரியர்கள் செயல்படுவது சாத்தியமா தெரியவில்லை.

கடம்பவன குயில் said...

//எதிர்ப்பார்க்கும் நற்பண்புகளால் மட்டுமே நாம் இந்தியாவை முன்னேரிய உலக நாடுகளில் ஒன்றாக பார்க்க முடியும். //

முன்புபோல் மனதை பண்படுத்தும் ஆன்மீக கருத்துக்கள் கொண்ட விவேகானந்தர் போன்ற மகான்களின் கருத்துக்கள் நிறைந்த பாடப்புத்தகங்கள் எங்கே வருகிறது சார். தற்கால அரசியல்(வியாதி)வாதிகளின் (சோ)சாதனைகள் என்றபெயரில் சுய தம்பட்டம் நிறைந்த பாடங்களை படிப்பதால் மாணவர்களின் கதி.........அதோ கதிதான்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

//கை நிறைய காசு , காண்பதற்கு அழகிய மனைவி என கூடிய வாழ்க்கையுடன் கண்ணுக்கு எட்டாத தொலைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு , நம் பெற்றோர்களை அனாதைகளாக விட்டுவிட்டு என்பதை விட அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு என்ற அடிப்படையில் வசதியான ஒரு முதியோர் விடுதியை ஏற்படுத்தி கொடுத்து சென்று விடுகின்றோம். விடுமுறைகளில் மிருக காட்சி சாலைகளுக்கு சென்று மிருகங்களை பார்க்க திட்டமிடுவது போன்று நம் மனித தெய்வங்களை ஒரு நாள் பயணமாக காணச் செல்கிறோம். எவ்வளவு மாறியுள்ளோம்?//

வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பெற்ற தாயை வைத்திருப்பதைவிட முதியோர் இல்லம் மேலானது.

கணவன் மனைவி சம்பாதித்தால் தான் வாழ்கையை ஓட்ட முடியும் என்ற பொருளியல் சூழலில் வயதானவர்களை கவனித்துக் கொள்வது யார் என்ற கேள்வியின் விடையாகத்தான் முதியோர் இல்லங்கள் வடிகலாகத் தெரிகின்றன.

மனைவி வேலைக்குப் போகாத பழைய காலங்களில் பெற்றோர்களை உடன் வைத்துப் பார்த்துக் கொள்வது கடினமான ஒன்று இல்லை, அதைத்தான் நம் பெற்றோர்கள் செய்துவந்தார்கள். இன்றைக்கு ஒன்று இரண்டு என்று பெற்றோருக்கு குழந்தைகள் குறைந்த பிறகு பழைய வாழ்க்கையை நாம் எதிர்ப்பார்ப்பதும் ஞாயம் இல்லை.

காலத்தின் ஓட்டத்தில் நாம் வாழ்க்கைப் பாதையும் மாறுகிறது அதை ஏற்றுக் கொள்ளும் மன நிலை இருந்தால் நாளைக்கு நாம் முதியோர் இல்லம் செல்லத் தயங்க மாட்டோம்.

கிருஷ்ண மூர்த்தி S said...

ஒரே இடத்தில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சித்திருப்பதால், இங்கே கோவி கண்ணன் முக்கியமாக எடுத்துக் கொண்டு சொல்லும், பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கும் விஷயம் உட்பட எதிலுமே போதுமான அழுத்தம் கிடைக்கவில்லையோ?

கல்வியின் முக்கியமான அடிப்படையே, சக மனிதர்களுடன் எப்படி ஒத்திசைந்து வாழ்வது என்று புரிய வைப்பதுதான்! வேறெந்த ஜீவராசிக்கும் இது தேவைப்படுவதில்லை! நம்முடைய பாரம்பரியமான கல்வி முறையைத் தொலைத்துவிட்டு, அடையாளமில்லாதவர்களாக ஆகிக் கொண்டிருக்கும் நிலையில், நம்முடைய பாரம்பரிய வாழ்வு முறைகளில் உள்ள நல்ல விஷயங்களை மீட்டெடுத்தல்,கண்டடைதல் என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஒரு ஆசிரியராக உங்களுடைய சிந்தனை சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான சிந்திக்க வேண்டிய கருத்துகள்.

Thoduvanam said...

அருமையா எழுதி இருக்கீங்க.ரொம்ப ஆழ்ந்து அறிவு பூர்வமா சிந்திக்க வேண்டிய கருத்து.உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ..

சாந்தி மாரியப்பன் said...

//மாணவர்களிடம் அறிவியல் ரீதியில் உண்மைகளை தேடும் கற்றலை தொடக்க கல்வியில் இருந்து தொடங்க வேண்டும். (அறிவியலில் கற்றல் ஆனந்தமாக இருக்க ஆசிரிய பயிற்றுனர்கள் மூலமாக அறிவியல் ஆனந்தம் பயிற்சி அனைத்து ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது ) எதையும் பகுத்து ஆராயும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்.//

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

Post a Comment