Wednesday, December 12, 2012

சிரிக்க வைக்கும் தெருநாடகம்

அட நாங்களும் டிவியில வர்றோம்ல்ல…



“காலையில் போகிற என் மவள் .. எப்ப வருவான்னு  தெரியாது… மெடிக்கல் பீல்டுல இருக்கா…பசங்க அருமையா டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் செய்யிறாங்க….”

“ ரெம்ப நன்றிங்க… “

“நான் ரிட்டையர்டு … ஆசிரியர் , என் பெயர் பிச்சையம்மாள். என் மகள் ஒரு மருத்துவர் , இன்னொரு மக இதே மெடிக்கல் பீல்டுல.. இருக்கா.. அதிகாலையில டெங்கு ஒழிப்பு முகாம் …க்கு சென்றால் எப்ப வருங்கன்னு சொல்ல முடியாது….அவுங்க பார்த்தா சந்தோசப் படுவாங்க..கொசுவை வளர முடியாம தடுத்தாலே… போதும் நல்லா அருமையா சொன்னாங்க… பிள்ளைகளுக்கு என் சார்பா  நூறு ரூபாயை கொடுங்க..” மாணவர் குழு தலைவி சத்தியபிரியாவிடம் வழங்க சொன்னேன். “நன்றி.. ரெம்ப தாங்க்ஸ் ..எல்லாரும் பார்த்து ரசிச்சாங்களா” என்று பீட் பேக் வாங்கி கொண்டே பெற்றுக் கொண்டாள். இது நேற்று மனதை தொட்ட நிகழ்வு.







இப்படி பிள்ளைகளின் தெருமுனைப்பிரச்சாரத்தை பார்த்து வாழ்த்து சொல்லியவர்களும் , அவர்களுக்கு தங்கள் வீடுகளில் இருந்து , மிட்டாயை அன்பாக கொடுத்தவர்களும் அதிகம். ஆனால் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் கொசு இல்லா மதுரை. கொசுவால் பரவும் வியாதிகள் அற்ற மதுரை. சுத்தமான வீதிகள் நிரம்பிய மதுரை. குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படும்படி அறிந்து , குப்பைகளை உரிய இடத்தில் இட அறிந்த மக்கள் நிறைந்த மதுரை என்பது தான் லட்சியம்.   எங்கள் லட்சியப் பயணம் இன்று இருபத்தி ஐந்து என்ற இலக்கை எட்டியது. அதன் பரிசாக டி.டி. பொதிகை டிவி ரிப்போட்டர் எங்கள் தெரு நாடகத்தை படம் பிடித்தார்கள். மேலும் நாளை காலை 8 மணி செய்தியில் பொதிகையில் ஒளிபரப்பாகும் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. 





மதுரை, கீழச்சந்தைப்பேட்டை பள்ளிவாசல் அருகில் எங்களின் இருபத்தி ஐந்தாவது தெருமுனை பிரச்சாரத்தை தொடங்கினோம். வழக்கம் போல நோட்டீஸ் வழங்கி  தொடங்கப்பட்டது. மக்கள் கூட ஆரம்பிக்க , எங்களின் கொசு ஒழிப்பு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கிய  சிறிது நேரத்தில் எங்களை ஒருவர் படம் பிடிப்பதைப் பார்த்து ஆச்சரியம், வியப்பு , நெருங்கி சென்று பார்த்த போது டி.டி. பொதிகை  என அறிந்தோம். மிக உற்சாகமாக வழக்கம் போல அசத்த தொடங்கினர்.
“அட அவங்க அப்படி தாண்டா சொல்லுவானுக.. நாம எப்பவும் போல ரோட்டில பீய பேண்டு வைப்போண்ட…”
“அட..வீட்டில பாத்ரூம் கட்டி இருங்கடா… தெருவெல்லாம் ஈ, கொசு மொய்த்து வியாதிய பரப்புது.. அதான் ஸ்கூல்ல பாத்ரூம் கட்டி கொடுத்து இருக்காங்க… அங்க போய்யாவது இருங்கடா..” என்ற கிழவி வசனங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தன.
”ஒழிக்க நினைத்தால் ஒழிக்கலாம்…”என்ற டெங்கு ஒழிப்பு பாடல்கள் மக்களை சிந்தனையை துண்டும் விதத்தில் அமைந்துள்ளது பாராட்டப்பட்டது.
பள்ளி வாசல் பகுதியில் இருந்து விடைப்பெற்று, குருவிக்காரன் சாலை இறக்கத்தில் மக்களை ஒன்று திரட்டினர். குழாய் அடியில் கூடியிருந்த பொது ஜனங்கள் வேடிக்கை பார்க்க.. கூட்டம் எதிர்பார்த்ததை விட அருமையாக கூடியது. உரக்க வில்லுப்பாடலை பாடியபடி அனைவரும் ஆச்சரியப்படும் படி கருத்துக்களை முன்வைத்தனர்.
“அட பசங்க சொல்லுறது ..வாஸ்தவம் தானே… அத புரிஞ்சு நடந்தாலே போதுமே..” என பொதுமக்கள் முணுமுணுக்க , மாணவர்கள் , “ சார், நீங்க நினைச்ச படி , நம் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்” என்றனர் மாணவர்கள். 




பின்பு துரைராஜ் மிச்சர் கடையில் அனைவருக்கும் சிலேபி வழங்கப்பட்டது. மாணவர்களில் செயல் வியக்க வைத்தது என்று வெகுவாக பாராட்டி சிலேபி ஜெயராஜ் வழங்கினார்.
எஸ்.எம்.சி உறுப்பினர் திரு. வி.சுரேந்திரன்(எ) பாபு மாணவர்களை பாதுகாப்பாக ரோட்டை கடக்க உதவிட.. அவரின் தலைமையில் பங்கஜம் காலனி 1 வது தெருவில் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். மாடி வீடுகளில் இருந்தும் , தங்கள் வீடுகளின் மெட்டை மாடிகளில் இருந்தும் , வீடுகளின் ஜன்னல்களில் நின்று கொண்டும் மாணவர்களின்  தெரு நாடகத்தை கண்டு களித்தனர். மாணவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பொது ஜன்ங்களில் ஒரு பெண்மணி மாணவர்களுக்கு மிட்டாய் வழங்கினார். 




எஸ்.எம்.சி உறுப்பினர் திரு. வி.சுரேந்திரன்(எ) பாபு மாணவர்களை பாதுகாப்பாக ரோட்டை கடக்க உதவிட.. அவரின் தலைமையில் பங்கஜம் காலனி 1 வது தெருவில் பிரச்சாரத்தை தொடர்ந்தனர். மாடி வீடுகளில் இருந்தும் , தங்கள் வீடுகளின் மெட்டை மாடிகளில் இருந்தும் , வீடுகளின் ஜன்னல்களில் நின்று கொண்டும் மாணவர்களின்  தெரு நாடகத்தை கண்டு களித்தனர். மாணவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட பொது ஜன்ங்களில் ஒரு பெண்மணி மாணவர்களுக்கு மிட்டாய் வழங்கினார். 





அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள், எஸ்.வி.எஸ் கல்யாண மகால் தெருவின் கடைசியில் மக்களை ஒன்று திரட்டி, மீண்டும் தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். அங்கும் தெருமுனை நாடகத்தையும் வில்லுப்பாட்டு, ஆடல் பாடல் என அனைத்து நிகழ்ச்சிகளையும்  சிறப்பாக முடிக்க .. இருட்ட ஆரம்பித்தது..
“சார்.. இன்னைக்கு நாம் முப்பதாவது தெருமுனை பிரச்சாரத்தை தொட்டுவிடுவோம் .. இன்னும் இரண்டு இடத்தில் தெருமுனை நாடகம் போடலாம்” என்ற மாணவிகளின் ஆர்வத்தை தடை செய்து.. திரு. ஆத்தியப்பன் ( எங்களின் தெருமுனை பிரச்சாரத்தை பார்த்து மாணவர்களுக்கு உணவு வழங்க தயார் என அன்புடன் உதவியவர்) அவர்களால் ஆறு மணிக்கே தயாரான சூடான இட்டிலிகளை சாப்பிடலாம் என மகாலட்சுமி அழைக்க, அருமையான சுவையான இட்டிலியை உண்ட பின்பு அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டோம். சுரேந்திரன் அவர்களும் , நானும் வண்டிகளில் மாணவர்களை பத்திரமாக அவர் அவர் வீடுகளில் விட்டப்பின்பு இன்றைய நிகழ்ச்சி இனிதாய் முடிந்தது.
நாளை அனுப்பானடி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெறும்.

  

Tuesday, December 11, 2012

சீனா அய்யா குடும்பத்துடன் கண்டு ரசித்த தெருமுனை பிரச்சாரம்

 “ அய்யா .. உள்ள வந்து பாருங்க.. எவ்வளவு தண்ணி பெருகி வழியுது.. இதுல கொசு ஒழிக்க வந்துட்டீங்க… வந்து இத கிளீன் பண்ண பாருங்க..”
என கம்ப்ளெய்ண்டு பண்ணிய பொது ஜனங்க கிட்ட மாட்டிகிட்டு முழுச்சிகிட்ட எஸ்.எம்.சி குழு உறுப்பினர் சுரேந்திர பாபு வை பார்த்து சிரிப்பு வந்தது.

“அட.. போம்மா.. நீ கூப்பிட்டதைப் பார்த்தா.. எதோ பிள்ளைகளுக்கு டீ போட்டு கொடுக்க கூப்பிடுறீய்யே என நினைச்சேன்…எம்மா ரோட்டிலா…போறவன் வர்றவன்னெல்லாம் வந்து உன் வீட்டு கக்கூஸ்ச கழுவ சொல்லுவைய்யோ… பச்ச புள்ளைக சொல்லுறத கேளும்மா..”
என பாபு கமண்டு அடித்தவுடன் அவர்கள் அருகில் உள்ள அனைவரும் கொள்ளு என சிரித்தனர். 






    மதுரை அண்ணாநகர் 10வது குறுக்கு தெரு அருகில் உள்ள ஜன நெருக்க மிகுந்த சந்தில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்ட போது நடந்த சம்பவம் இது.  சாக்கடைக்குள் வசிக்கும் பொது ஜனங்களிடம் எங்கு புகார் கொடுக்க வேண்டும் என்பதை தெரிவித்து, அடப்பு எடுக்க ஆட்கள் வரவில்லை என்றால், அனைவரும் சேர்ந்து கலெக்டரிடம் புகார் தெரிவியுங்கள் என்றோம்.
“பச்ச புள்ளைக.. தெருவில இறங்கி நமக்காக பிரச்சாரம் செய்யுதுக.. ஏம்மா  ..நம ஒண்ணு சேர்ந்தா முடியாததுன்னு ஒண்ணு இருக்கா ” என்றாள் அவர்களில் ஒரு  மூதாட்டி .

மதுரை அம்பிகா தியேட்டர் முன்பு மாலை 4.40 க்கு கூடியது மாணவர்கள் குழு, சீனா அய்யாவுக்கு போன் செய்தோம். அப்பலோவில் ரெகுலர் செக்கப்புக்கு சென்றுள்ளேன் ஒரு கால் மணி நேரத்திற்குள் வந்து விடுவேன் என்றார். மாணவர்கள் அதற்குள் ஒரு தெருமுனைப்பிரச்சாரம் மேற்கொண்டு விடுவோம் என முடிவெடுத்து சுரேந்திரன் பாபு அவர்களை அழைத்துக் கொண்டு , தெரு தெருவாக டெங்கு கொசு ஒழிப்பு சார்பான பிரச்சார நோட்டீஸ் விநியோகம் செய்ய துவங்கினர். 




அண்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகில் செல்லும் சந்தின் துவக்கத்தில் மாணவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டு டெங்கு பிரச்சாரம் தொடங்கினர். வில்லுப்பாட்டு ஆரம்பித்தவுடனே ,தெருவில் ஆங்காங்கே குழுமிய மக்கள் மாணவர்களை நோக்கி திரண்டனர். நாடகம் அரங்கேறிய போது, மக்கள் அனைவரும் விழுந்து சிரித்தனர்.
ஆடல், பாடல் முடிந்த பின்பு , கொசுவை வளர விடாமல் தடுப்பது தான் நாம் நோய்களில் இருந்து நம்மை பாதுக்காக்க வழி என்று விளக்காமாக எடுத்துரைத்தேன்.

பின்பு, அனைவரும் அண்ணா நகர் 10 வது குறுக்கு தெரு முனைக்கு செல்ல தயாரானோம். அப்போது சீனா அய்யா தான் பஸ் ஸ்டாப்புக்கு வந்து விட்டதாக சொல்லவே, நான் சற்று முன்னோக்கி பாருங்கள் என சொல்லி , எங்களின் இருப்பை அடையாளப் படுத்தினோம். பின்பு அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு , சீனா அய்யா அபார்ட்மெண்ட் அருகில் உள்ள (பின் கேட்) பிள்ளையார் கோவில் முன்பு கூடினோம்.




மாணவர்கள் அப்பகுதி மக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு நோட்டீஸ் கொடுத்து, வீதி நாடகம் போடப்போவதாக சொல்லவே , அனைவரும் ஒன்று திரண்டனர்.  மாணவர்கள் வந்தனம் அய்யா வந்தனம் .. என பாட ஆரம்பிக்க அனைவரும் வீடுகளின் மாடிகளில் இருந்து பார்வையிட தொடங்கினர்.
சீனா அய்யாவும் அவரின் துணைவியார் அவர்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் மாணவர்களின் செயல்பாட்டினை பார்த்து ரசித்தனர். அவர்களின் நாடகத்தினை மிகவும் மகிழ்சியாக கண்டு கழித்தனர். மாணவர்கள் பாடிய மக்கும் குப்பை, மக்கா குப்பை பாடல் அவர்களின் மனதை கவர்ந்ததை வெகுவாக கண்டு ரசித்தேன். அப்பகுதியில் தெருநாடகம் முடிந்ததும் அனைவரும் சீனா அய்யாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டோம். சீனா அய்யாவின் துணைவியார் காலையிலிருந்து அப்பல்லோவில் இருந்து செக்கப் மேற்கொண்டு , இப்போது தான் வந்துள்ளதால், எங்களிடம் விடைப் பெறவே, சீனா அய்யா எங்களுடன் தொடர்ந்தார். அனைவரும் எஸ். எம். பி காலணி பகுதியை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். வழி நெடுகிலும் கொசுவை ஒழிப்போம் .. டெங்குவை தடுப்போம் என்ற முழக்கங்களுடன் மாணவர்கள் நோட்டீஸ் விநியோகித்து சென்றனர்.
   பின்பு அங்கும் தெரு நாடகம் நடத்தும் போது வீட்டில் கட்டப் பட்டிருந்த நாய் குரைக்கவே , அதனை உள்ளே அழைத்துச் சென்றனர். மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக தங்களின் தெருமுனை பிரச்சாரத்தினை மேற்கொண்டனர். முடிவில் மாணவி ஐஸ்வர்யா “சார் ஒரு சின்ன டவுட் .. நாங்க நடிச்சு பேசினப்பா எல்லாம் நாய் குரைக்கல.. ஆனா நீங்க பேசினப்ப மட்டும் எப்படி சார் கரெக்டா குரைக்குது”
அடுத்துள்ள மாணவி சக்தி பிரியா “சார் உங்கள.. நாயுன்னு சொல்லுது சார் “ என்றாள். நானும் சும்மா இருந்திராமல் “ அது தானே.. ஒரு நாயோட.. பாஷை இன்னொரு நாய்க்கு தான் தெரியும்” என்றேன். அனைவரும் இப்படியாக மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் வாரிக் கொண்டு சிரித்துக் கொண்டும் சென்றோம்.





சீனா அய்யா எங்களுக்கு தெருமுனை பிரச்சாரத்தின் முடிவில் , கிருஷ்ணா ஹோட்டலில் இட்டிலி, பொங்கல் வாங்கி தந்து மகிழ்ச்சியுரச் செய்தார். மாணவர்கள் நன்றி பெருக்கோடு பார்த்தனர்.

உண்மையான கற்றல் நடைப்பெற்று கொண்டிருக்கிறது என சீனா அய்யாவின் துணைவியார் எங்களை வாழ்த்தினார்.

நாளை மதுரை கீழச்சந்தைப்பேட்டை பள்ளி வாசல், குருவிக்காரன் சாலை, கணேஷ் தியேட்டர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  

Monday, December 10, 2012

அட.. சின்ன பசங்க அசத்திட்டாங்கப்பா…!


மிக உற்சாகமாக சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள் ,“சார், இன்னைக்கு சாய்ங்காலம் நாம எங்க சார் ..தெருபிரச்சாரம் செய்யுறது” என கோரசாக கேட்க தொடங்கினார்கள். “முதலில் பாடங்களை படியுங்க அப்புறம் சாய்ங்காலம் பற்றி பார்க்கலாம்” என்றேன்.  “சரியுங்க சார்” என உற்சாகமாக பாடப் புத்தகங்களை எடுத்து செய்யுள் பகுதியை உரக்க பாட ஆரம்பித்தார்கள். 




மாலை எஸ்.எம்.சி குழு கல்வியாளர் திரு சுரேந்திரன் (எ) பாபு மதியம் போன் செய்து இன்று நம் சொளராஷ்டிரா பள்ளி பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள கற்பக விநாயகம் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் அவர்கள் மாணவர்களுக்கு தெருமுனைப் பிரச்சாரம் முடிந்த பின் பாஸ்கர் டிபன் ஹோம்மில் உணவு சொல்லி விட்டார், நாம் 72, 71 ம் வார்டுகளில் கொசு ஒழிப்பு, டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரம் கேற்கொள்வோம் என கூறினார். 




   மாலை மாணவர்கள் பாலரெங்காபுரம் பகுதியில் உள்ள கேஸ் கம்பெனி அருகில் குழுமினர். பின் நோட்டீஸ் விநியோகம் செய்து, பொது மக்களை ஒருங்கிணைத்தனர். மக்கள் கூடியவுடன் “ என்ன நீங்கள் எல்லாம் எங்கிருந்து வந்திருக்கீங்க..” என கேட்க ,  “ நாங்க எல்லாம் டாக்டர் டி, திருஞானம் துவக்கப் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு குழந்தைகள் , இவன் பெயரு காமராஜ், வல்லரசு” என சொல்ல அனைவரும் வணக்கம் சொல்லி தங்கள் பெயர்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.  பின்பு வில்லுப்பாட்டு , நாடகம், ஆடல் , பாடல் அமைத்து மக்களுக்கு டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.  சிரிப்பாக நாடகம் அமைந்திருந்தாலும் சிந்திக்கும் கருத்தை சொல்லுறாங்காய்யா பசங்க என பொது ஜனங்க பாராட்ட உற்சாகம் அடைந்தனர்.
எங்களை அழைத்து வந்தவர்கள் மதுரை கார்ப்பிரேசன் ஆட்கள் என நினைத்து கூட்டத்தில்  இருந்து வந்த பச்சைக்கலர் கட்டிய நடுத்தர வயது பெண்மணி “ ஐய்யா…நீங்க நாடகத்தில சொன்ன மாதிரி தான் ரோட்டிலேயே வீட்டுக்கு முன்னாடி ஒண்ணுக்கு இருந்து வைக்கிறாங்க.. பீ பேண்டு வைக்கிறாங்க… தயவு செய்து (இடத்தை சுட்டிக்காட்டி ) அங்க வந்து ஒரு அதட்டு போடுங்க” என நம் கல்வியாளரை சந்தித்து குறைகூற, “அட போமா …இது அங்க நீக்கிறாரே அவரு …(பெயரை சொல்லி ) ஆர்வக் கோளாரில் மாணவர்களை அழைத்து நீங்க கொசு வளராம பார்த்துக்க என்ன நடவடிக்கை எடுக்கணும்ன்னு பிரச்சாரம் செய்யுறாரு ..” என விளக்கம் அளிக்க மாணவர்கள் அனைவரும் மொளனமாக சிரித்தனர்.

 அதற்கு அடுத்து அனுமார் கோவில் எதிர்புறம் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி எதிர்புறம் சந்தில் பொதுமக்களை கூட்டி தெருமுனைப்பிரச்சாரம் செய்ய தொடங்கினர். மாணவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடினர்.
உரக்க அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரமாதமாக தெருமுனைப்பிரச்சாரம் மேற்கொண்டனர். கடைசியா வந்து அவுங்க ஸ்கூல் தலைமையாசிரியர்ன்னு அறிமுகமாகி டெங்கு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினாரே செம பஞ்ச் ப்பா என பாரட்டி, அனைவரும் எந்த ஸ்கூல் பசங்கப்பா.. இந்த போடு போடுறாங்க.. என கேட்க உரக்க பதில் அளித்தனர். பின் நடந்து பாலரெங்காபுரத்தில் இருந்து வந்து பகத்சிங் தெருவின் நடுவில் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டனர்.   
  பகத்சிங் தெருவில் வண்டிகளின் நடமாட்டத்தின் நடுவே பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.  மணி சரியாக 6.45 என காட்ட , அப்படியே நடந்து காமராசர் சாலையை அடைந்து , பாஸ்கர் டிபன் ஹோம்மில் உணவு அருந்தி விட்டு அனைவரையும் வீட்டிற்கு பத்திரமாக இறக்கி விட்டு இப்போது உங்களிடம் செய்திகளை பகிர்ந்து கொள்வதிலுள்ள மகிழ்ச்சி அளவேயில்லை.
   நாளை அம்பிகா தியேட்டர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் . மாணவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதாக நம் சீனா அய்யா உறுதியளித்து , மாணவர்களின் தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வாழ்த்துக் கூறினார். அனைவரும் வருக…மாணவர் கூறும் அறிவுரையை கேட்டு மகிழவும். சிந்திக்கவும்.


Sunday, December 9, 2012

யார் யாரை குறை கூறுவது..!


எல்லா இடங்களிலும் மரங்களை
வேரோடு புடிங்கி எடுத்து விட்டனர்
புதியதாய் முளைத்த
வானுயர்ந்த கட்டிடங்களின்
நிழலில் நின்று
ரமணனை ஏசிக்கொண்டிருந்தனர்
மழை பொய்த்துவிட்டதென்று..
இவர்களை யார் ஏசுவது..?

Friday, December 7, 2012

குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த தெருமுனை பிரச்சாரம்

“என்னடா..இப்படி கத்திகிட்டு…கொட்டு அடிச்சுகிட்டு போறீங்க” என்ற மூதாட்டியிடம் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ் கொடுத்து, “நாங்க நாடகம் போட போறோம்..பார்த்துட்டு போங்க பாட்டி”என்றாள் மாணவி ஐஸ்வர்யா.
“அட போங்கடா..உங்களுக்கு வேலையில்ல.. அபேட் மருந்துன்னு சொல்லுறாங்க…ஆனா கொசு அபேஸ் ஆகாம  கடிக்குது…” என தன் மன வேதனையை கொட்டினாள் மூதாட்டி.
“பாட்டி அதுக்கு தான் என்ன செய்யணும்ன்னு… நாடகம் , பாட்டு , ஆடல் எல்லாம் போட போறோம்… உங்க பக்கத்து வீட்டுலேயும் சொல்லி கூட்டிகிட்டு வாங்க..”என்றான் முருகவேல்.





  மதுரை சொளராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிர்புறம் சந்தில் மதுரை புதுவார்டு 72ல் தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நோட்டீஸ் விநியோகித்து ,  ஒவ்வொருவராக வீடுகளில் இருந்து பொது மக்களை அழைத்து , கூட்டம் கூடச் செய்தனர்.
“என்னப்பா ..இப்படி கும்பலா வந்திருக்கீங்க.. எங்க இருந்து வந்து இருக்கீங்க..”என காமராஜ்  கேட்க,
“நாங்களா.. டாக்டர் திருஞானம் துவக்கப் பள்ளியில் இருந்து வந்திருக்கோம்…இவங்க பெயர் காளீஸ்வரி…” என வரிசையாக அறிமுகம் படுத்தி கொண்டு , டெங்கு சார்பான வில்லுப்பாட்டினை பாட துவங்கினர்.



 மாணவர்கள் நாடகம் போடும் போது பொது மக்கள் அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். கீழச் சந்தைப்போட்டை மாநகராட்சி முன் நடைப்பெற்ற தெருமுனைப்பிரச்சாரத்தை பார்த்த , பொது மக்களில் ஒருவர் தன் வீட்டில் வைத்திருந்த விலைஅதிகமான அயல் நாட்டு சாக்லேட்டை நாடக முடிவில் அனைவருக்கும் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
    மகிழ்ச்சியுடன் நகர முற்பட்ட போது, கூட்டத்தில் இருந்த அப்பகுதியை சேர்ந்த அஇஅதிமுக பகுதி செயலாளர் திரு பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு கை குலுக்கி வாழ்த்துக்கள்  தெரிவித்தார் .பின்பு அப்பகுதி கவுன்சிலர் திரு குமார் அவர்களுடன் தொலைப்பேசியில் அழைத்து , எங்களிடம் வாழ்த்து தெரிவிக்க கூறினார். 





பின்பு, மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் விநியோகித்துக் கொண்டே , அபிராமி தியேட்டர் பின்புற உள்ள நீர் தொட்டிகள் உள்ள பகுதியில் ஒன்று கூடி , மீண்டும் தெருமுனை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியது. மாணவர்கள் கூட்ட மிகுதியை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து , மிகவும் அருமையாக வில்லுப்பாட்டு பாடி அசத்தி, அனைவர் கைத்தட்டலையும் பெற்றனர்.  நாடகத்தின் முடிவில் “ஒழிக்க நினைத்தால் கொசுவை ஒழிக்கலாம்…” என பாடி அனைவர் பாராட்டினையும் பெற்றனர்.

   இன்று காலை நடைப்பெற்ற எஸ்.எம்.சி கூட்டத்தில் பங்கு பெற்ற ஆதிமூலம் 1 மாநகராட்சி பள்ளியின் தலைமைஆசிரியை திருமதி சுலேகா அவர்கள் மாணவர் அவர்கள் அனைவருக்கும் எதாவது உணவு கொடுத்து உதவுங்கள் என்று 100 கொடுத்தார், அத்துடன் மீதி தொகையையும் போட்டு மாணவர்களுக்கு இன்று 7-12-2012 பூரி வழங்கப்பட்டது. எஸ்.எம்.சி. குழுவில் இடம் பெற்றுள்ள திருவி.சுரேந்திரன் எ பாபு எங்களுடன் சேர்ந்து பங்கு கொண்டு செயல்படுவது மிகவும் உற்சாக ஊட்டுவதாகவும் , மாணவர்களுக்கு உணவளிக்க டோனர்களை பிடிக்கவும் உதவியாக உள்ளது.

  தெருமுனை பிரச்சாரத்தை காணும் மக்கள் மாணவர்களை பாராட்டி உற்சாக மூட்டுகின்றனர். இது பொது சேவை செய்ய தூண்டுதலாக அமைகிறது. ஒவ்வொருவரும் மாணவர்களை சமூக பணியில் ஈடுபட வைத்தால், பிற்காலத்திலாவது நல்ல சமூகத்தை அமைத்து விடலாம் என தோன்றுகிறது.


Thursday, December 6, 2012

டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் 5ம் வகுப்பு மாணவர்கள்


   மாலை மதுரையில் மழைபொழிய துவங்கியது. மாணவர்கள் மிகவும் உற்சாகமாக , “சார், இன்னைக்கு மழை நல்லா பெய்யட்டும், அப்ப தான் மழை விட்டவுடன் எல்லாரும்  வீட்டிலே இருப்பாங்க.. நம்ம நாடகம் போட்ட எல்லாரும் பார்ப்பாங்க… நம்ம செய்தி எல்லாருக்கும் போய் சேரும்”  என்றார்கள்.






“மழை நேரமாக இருக்கு, நாளைக்கு நாம டெங்கு பிரச்சாரம் செய்வோம்..” என்றேன். “சார், நம்ம கடமை பிரச்சாரம் செய்வது தொடர்ந்து செய்வோம்..டெங்கு கொசுவை ஒழிப்போம் “என்று மிரட்டல் விட்டாள் ஐஸ்வர்யா.
அவளை பின் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் கோரஸ்ஸாக “ சார், கட்டாயம் போகணும் “என்று கத்திக் கொண்டே கிளம்பினார்கள்.  
“வாங்கடா…மேக்கப் போடுவோம்… ரெடியா இருப்போம் … மழைநின்றவுடன் நாடகம் போடுவோம்”என்றாள் சத்தியப்பிரியா. 




மழை தூறல் நின்றவுடன் அனைவரும் ஒருங்கிணைந்து நிர்மலா பள்ளி அருகில் உள்ள அழகர் நகர் பகுதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சார நோட்டீஸ் வழங்கி , மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தார்கள். பலர் மாடிகளில் நின்று மாணவர்கள் கூறும் கருத்தை கேட்க ஆரம்பித்தார்கள்.  
  வந்தனம் அய்யா வந்தனம் வந்த ஜனங்க குந்தனும் என்று பாட ஆரம்பிக்க ஆங்காங்கே இருந்த மக்கள் மாணவர்களை நோக்கி வந்து கூட ஆரம்பித்தனர். அனைவருக்கும் வணக்கம் சொல்லி டெங்கு பிரச்சாரத்தினை தொடங்கினார். 


 
                                             


காமராசர் நாடார் முன்னேற்ற பேரவை பகுதி செயலாளர் வி.மதியழகன் அவர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டது. எம்.மகாலெட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். 





   இரா.பிரியதர்ஷினி, நா.அமிர்தவர்ஷினி, பா.சத்தியப்பிரியா, ப.ஐஸ்வர்யா, அ.ரேஸ்மா, பா. ரேஷ்மா, இரா.காமராஜ், மு.முகேஷ், செ.முருகவேல், நா.வல்லரசு, மு.சண்முகவேல், க.சமயமுத்து, ,ப.இராஜபாண்டி, மு.கார்த்திகேயன், க.சூர்யா, அ.அர்சத் அய்பு, பெ.வழிவிட்டான், ப. முகமதுஅலி, ப. பாலாஜி, லி.காளிஸ்வரி ஆகிய மாணவர்கள் இன்று 6-12-2012 மாலை 5.30 மணிக்கு நிர்மலா மகளிர் பள்ளி அருகில் டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 






தெருமுனை பிரச்சாரத்தின் முடிவில் மாணவர்களுக்கு மகாலெட்சுமி அவர்கள் டீ வழங்கினார். அவ்வழியாக சென்ற எம் பள்ளி ஆசிரியர் திருமதி. மா.ஓம்சக்தி ஆசிரியர் அவர்களின் கணவர் திரு.இரவிசந்திரன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு மிக்சர் பொட்டலம் இலவசமாக வழங்கினார். எம் பள்ளி எஸ்.எம்.சி குழுவில் இடம்பெற்றுள்ள கல்வியாளர் திரு. வி.சுரேந்திரன் (எ) பாபு எங்களுடன் இணைந்து தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.


   
     தெருமுனைப் பிரச்சாரத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. துவக்கப் பள்ளி அளவில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள், இச்சிறிய வயதில் மக்கள் பணியில் ஈடுபடுவதை பாராட்டிச் செல்கின்றனர். மக்கள் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது, இப்பணியினை சிறப்பாக செய்ய தூண்டும் டானிக்காக உள்ளது. மதுரையில் உங்கள் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரத்தை செயல் படுத்த என் செல் நம்பர் 9344124572 போன் போடலாம். உதவிகள் வரவேற்கப்படுகின்றன.
  

Wednesday, December 5, 2012

அஇஅதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற டெங்கு ஒழிப்பு பிரச்சாரம்

    எங்கள் பள்ளியை சேர்ந்த இருபது மாணவர்கள் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பின்பு , மாலை 4.40லிருந்து தொடங்கி மாலை ஆறு முப்பது அல்லது இருட்டும் வரை தெருமுனைப் பிரச்சாரம் மூலம்  டெங்கு ஒழிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கள் முதல் இச்செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 








    தினமும் மக்கள் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நோட்டீஸ்களை வழங்கி , நாடகம் நடத்தப்போகிறோம் வாருங்கள் என அழைத்து, ஆடல் , பாடல் மூலம் மக்களை ஒருங்கிணைத்து ,  நாடகம், வில்லுப்பாட்டு, ஆடல் , பாடல் மூலம் பொது மக்களிடம் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பணியை மேற்கொள்கின்றோம். இப்பணிக்கு பங்குப் பெறும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து ஆதரவு வெகுவாக கிடைத்துள்ளது. மாணவர்களும்  பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் மக்கள் பணியினை மேற்கொள்வது மகிழ்ச்சி தருகிறது என ஆர்வத்துடன் கூறுவது மதுரை முழுவதும் இப்பிரச்சாரத்தை கொண்டு செல்ல தூண்டுகிறது. 





     பள்ளி எஸ்.எம்.சி குழுவில் இடம் பெற்றுள்ள கல்வியாளர் திரு. வி.சுரேந்திரன் (எ) பாபு தலைமையில் மதுரை 53வது வார்டில் இன்று 5-12-2012 டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  









     திரு. வி.சுரேந்திரன் பாபு அதிமுக 53வது வார்டு பிரதிநிதி என்பதால் மதுரை கிழக்கு மண்டல தலைவர் திரு ராஜபாண்டி அவர்களை அழைத்து தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்தார். 53 வது வார்டில் தாமரை நகர் சந்திப்பிலும், பங்கஜம் 1 வது தெரு முனையிலும், பங்கஜம் காலனி 2வது தெருவிலும், ஏ.ஏ. ரோடு பிள்ளையார் கோயில் அருகிலும் மாணவர்கள் தெருமுனை பிரச்சாரம் மேற்கொண்டனர். அதுசமயம்      மதுரை கிழக்கு மண்டல தலைவர் திரு ராஜபாண்டியன், திரு. வே.சுரேந்திரன் என்ற பாபு , மதுரை 53வது வார்டு அஇஅதிமுக பிரதிநிதி, திரு .பார்த்தசாரதி பாகச் செயலாலர் மற்றும் திரு. வள்ளி நாகலிங்கம் அஇஅதிமுக கழக பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டு , மாணவர்களுக்கு துணையாக இருந்து, தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக செயல்பட உறுதி செய்தனர். 










  முடிவில் மாணவர்களுக்கு அஇஅதிமுக 53வது வட்ட பிரதிநிதி மற்றும் எங்கள் பள்ளியில் எஸ்.எம்.சி குழு கல்வியாளர் திரு வி.சுரேந்திரன்(எ) பாபு அவர்கள் உணவு வழங்கினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றனர். 

Monday, December 3, 2012

இலவச மடிக்கணிணி எதிர் நோக்கியுள்ள சவால்கள் ...



உலகமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கி வருகிறது.  எல்லாத் துறைகளிலும் கணிணி ஆக்கிரமித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை தேர்வு முறையில் கிரேடிங்க் சிஸ்டம் கொண்டு வந்து அனைவர் பாராட்டையும் பெற்றிருக்கும் இந்த முக்கிய தருணத்தில் இது குறித்து விவாதிக்காமல் இருப்பது நல்லது அல்ல. எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்ப ரீதியில் எந்த வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற ரீதியில் அரசு அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக் கணிணி கொடுக்க முடிவெடுத்து வழங்கிக் கொண்டு இருப்பது வரவேற்க்கத் தக்கது. ஆனால், இதுவும் இலவச சைக்கிள் மாதிரி சந்தைக்கு வந்து விடக்கூடாது என கல்வி யாளர்கள் கவலைக் கொண்டுள்ளது முக்கியமானது.

     அனைவருக்கும் கல்வி திட்டம் மூலமாக , தமிழ் நாட்டில் மாவட்டம் தோறும் CALL சென்டர்கள் இயங்கி வருகின்றன. துவக்க கல்வி முதலே கணிணி வழி கல்வி செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு கணிணி குறித்து அடிப்படை அறிவுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. அசிம்பிரேம்ஜி பவுண்டேசன் மூலமாக கல்வி குறித்த சி.டிக்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்படி அரசு துறைச் சார்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் கணிணி குறித்த அடிப்படை அறிவு கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ளது.
இனி கேரளா கல்வி துறையில் நடைபெறும் கணிணி சார்ந்த கல்வி முறையை நோக்குவோம். கேரளாவில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு (மொத்தமுள்ள 5500 பள்ளிகளுக்கும்) கணிணி வழிக் கல்வி கொடுக்கப்படுகிறது.  பாடம் சார்ந்த மென்பொருட்கள் கொண்டு (உபண்டு சாப்டு வேரில் இயங்கக் கூடியவை) வாரத்தில் இரண்டு தியரி மற்றும் இரண்டு செய்முறை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அனிமேசன் ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகிறது.
கேரள அரசு அனைத்து ஆசிரியர்களுக்கும்  (மொழிப்பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்கள் உட்பட) கணிணி பயிற்சி முறையாக கற்றுகொடுத்துள்ளது மட்டுமல்லாமல்,  பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசு மூலமாக வழங்கப்பட்டுள்ள கணிணிகள் மூலமாக சிறந்த கல்வி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. சுமார்ட் எசுகேசன் செயல் பட கேரள கல்வி துறை  அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு எல்.சி.டி புரஜெக்டர் வழங்கியுள்ளது .  பாடம் சார்ந்த சி.டிக்கள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்து குறைந்தது (அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் உட்பட) பத்து முதல் பதினைந்து கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மின் இணைப்பு வசதி வழங்க( ஒரு பிளக் பாயிண்டு, ஒரு பேன், ஒரு டுயுப்லைட்) ரூபாய் ஆயிரத்து ஐநூறு கொடுக்கப்பட்டுள்ளது.  ஹர்ட் வேர் கிளினிக் மூலமாக பழுதடைந்த கணினிகள் சரி செய்யப்படுகின்றன. 

     கணினி சார்ந்த கல்வி பாடவேளையில் ஒரு பகுதி.  வாரத்தில் நான்கு வகுப்புகள் கணினிக் கல்விக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கென தேர்வுகளில் கட்டாயம் பாஸ் மார்க் எடுக்க வேண்டியுள்ளதாலும் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றனர். ஆசிரியர்களும் தங்கள் மாணவரகளுக்கு பாடம் சார்ந்த திறனை கணிணிக் கொண்டு கற்றுத் தருவதால், புரிதல் எளிமையாவதுடன் நல்ல தேர்ச்சி விகிதமும் பெறமுடிகிறது என்கின்றனர்.

    இன்னும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி  மாணவர்களுக்கு எந்த வித அடிப்படை கணிணி அறிவும் இல்லாமல் இலவச மடிக் கணிணி வழங்குவது என்பது எதன் அடிப்படையில்….? என்பது கல்வியாளர்கள் கேள்வியாக உள்ளது.    உயர்ந்த நோக்கத்துடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மடிக் கணிணி அடிப்படை கணிணி அறிவு இல்லாமல் வழங்குவதால் அதன் பயன்பாடு அறியாமல் சந்தைப் பொருளாவது உறுதி என பயம் கொண்டுள்ளனர் ஆசிரியர்களும், கல்வியாளர்களும்.

இரவு= தியானம்



இரவென்றால்
இருட்டு அல்ல
சாத்தப்பட்ட கதவுகளுக்குள்
உறங்காத இரவு
விழித்திருக்கும் இருட்டு
தியானத்தின் அடையாளம்
இரவென்றால் இருட்டுத்தான்
உனக்கு எனக்கு
அவனுக்கு இவனுக்கு
தியானம் வித்தியாசப்படும்
*
இரவு வித்தியாசமானது தான்
எல்லோருக்கும்

Sunday, December 2, 2012

சார் , செக்ஸ்…ன்னா என்ன ?


சார் , செக்ஸ்…ன்னா  என்ன ?   

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் டெங்கு விழுப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் டெங்கு ஊர்வலத்திற்கு தயாராக இருந்தனர். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி வருகைக்காக காத்திருந்தனர் மாணவர்கள்.  புதிதாக வழங்கப்பட்ட டெங்கு உறுதி மொழியினை மாணவ தலைவி உரக்க படிக்க ,அனைத்து மாணவர்களும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.  கல்வி அதிகாரி வந்த பின் மாணவர்களிடம் டெங்கு பரவக் காரணம் என்ன என்று கேட்க, மாணவர்கள் கொசு என்றனர். கல்வி அதிகாரி கொசுவினால் பரவும் நோய்களான டெங்கு, சிக்கன் குன்யா, மலேரியா, யானைக்கால் வியாதி, மூளைக்காய்ச்சல் பற்றி விளக்கம் அளித்து , கொசு பரவாமல் தடுப்பது குறித்து பேசினார். மாணவர்கள் அதிகாரி கேட்ட கேளிவிகளுக்கு பதில் சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊர்வலம் கிளம்பியது. “ஒழிப்போம் ஒழிப்போம் டெங்குவை ஒழிப்போம்!, அழிப்போம் அழிப்போம் ஏடிஸ் கொசுவை அழிப்போம்! தடுப்போம் தடுப்போம் ஏடிஸ் கொசுப்புழு பரவுவதை தடுப்போம்! தெளிப்போம் தெளிப்போம் அபேட் மருந்தினை தெளிப்போம்! என மக்கள் வசிக்கும் பகுதியிலும் , காமராசர் சாலையிலும் மாணவர்கள் ஊர்வலம் சென்று வந்தனர்.  மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்டது. வகுப்பறைக்கு சென்றனர். பாடம் நடத்தப்பட்டது . மதிய உணவு அனைவரும் உணவு அருந்த  சென்றனர்.
என் வகுப்பில் சில மாணவ மாணவர் சிரித்துக் கொண்டே எதோ குசு குசு என்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்து,
 “ என்ன ஒரே சிரிப்பு ?”என்றேன். உடனே துடுக்கான மாணவி பிரியா, “ சார், செக்ஸ் ன்னா என்ன? “ என்றாள். நான் உனக்கு ஏன் இந்த சந்தேகம் இப்போது ? என்றேன். “ நான் சொன்னேன்லா.. சார் சொல்ல மாட்டார்ன்னு ..” என்று அருகில் இருந்த மாணவி சொல்ல.. “நான் பதில் சொல்றேன்.. அதுக்கு முன்னாடி தீடீரென்று ஏன் இந்த சந்தேகம் என்று சொல்லணும்”. “சார் நீங்க சொல்லுங்க ..அப்புறம் நாங்க சொல்றோம்..”. “ செக்ஸ் என்பது  பாலினம் அது ஆண் \ பெண் என இருபாலரையும் குறிக்கும் சொல் ”என்று சமாளித்தேன்.
உடனே பிரியா “ அது தான் எங்களுக்கே தெரியும் … நாங்க அத பத்தி கேட்கல…” “அப்புறம் வேறு எத பத்தி..?” என இழுத்தேன்.
சார் நான் விளக்கமா சொல்றேன்.  எஇஓ சார் … சொல்லும் போது ..இது ஒருத்தர் கிட்ட இருந்து பரவாது அப்படின்னு சொன்னார்..அப்ப நம்ம வாயடி பையன் முகேஸ்… செக்ஸ் வியாதி தான் பரவுன்னு சொன்னான்.. அது மட்டுமில்ல செக்ஸ் வச்சுகிட்டா தான் பரவும் என்கிறான்..” என்றாள். நான் அவனிடமே கேட்க வேண்டியது தானே? என சொல்லி முகேஷை அழைக்க சொன்னேன். அதற்குள் முதல் ராங்க் எடுக்கும் மாணவி , “வாடி …நாம நம்ம டீச்சருகிட்ட கேட்போம்..சாரு மழுப்புராரு ..”என ஒன்றாம் வகுப்பு ஆசிரியரை நாடி சென்றனர்.
     மீண்டும் ஓடி வந்தனர். சார் இவ்வளவு தானா… இதுக்கு ஏன் சார் பயப்படுறீங்க என்றார்களே பார்ப்போம். நான் பிரியாவை அழைத்து என்ன பதில் சொன்னார் என்றேன். நீங்க சொன்னது போல ஆண் பெண்ணுண்ணு சொன்னாங்க .. நாங்க செக்ஸ் வியாதி என்ன? அது எப்படி வரும்? ன்னு கேட்டோம் என்றாள். அது சரி டீச்சர் என்ன பதில் சொன்னாங்க… என கேட்க, “ சார் .. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் எந்த வியாதியும் வராது.. ஒரு ஆணு பல பெண்களை கட்டிகிட்டாலும், ஒரு பெண்ணு பல ஆண்களை கல்யாணம் பண்ணிகிட்டாலும் இந்த வியாதி வருமாம் சார்…” . “எங்களுக்கு புரிஞ்சு போச்சே..” என அனைவரும் ஒருமித்த குரலில் பதில் அளித்தனர்.
   துவக்க பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு நியாயமானது என்பதை உணர்ந்தேன். துவக்கப்பள்ளி அளவிலே செக்ஸ் கல்வி அவசியம் என்பதையும் இச்செயல் உணர்த்துகிறது. பல இடங்களில் குழந்தைகள் மீதான பாலியல் புகார்கள் வராமல் பார்த்துக் கொள்ள , குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி அவசியம். குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். அடுத்த ஆணின் கை படும் போது அதை தட்டி விடும் உணர்வையாவது வளர்க்க வேண்டும்.
பள்ளி அளவிலே குழந்தைகளை பாதுகாக்க கட்டாய இலவச கல்வி சட்டம் உறுதியளிக்கிறது. தமிழக அரசு பாலியல் புகார்களுக்கு உள்ளாகும் ஆசிரியர்களின் சான்றிதழை கேன்சல் செய்யும் உத்தரவையும் பிறப்பித்து இருப்பது வரவேற்க தக்கது. 

Monday, October 15, 2012

தடுப்பதற்கில்லை….!



பனையோலை வேய்ந்த
கூரை வீடு எரிச்சலூட்டுகிறது
நாலாபக்கமும் உயர்ந்த கட்டிடங்களில்
செயற்க்கை செடிகளை அழகுக்காகவும்
பறவைகளின் ஒலிகளை
அழைப்பு மணியோசையாகவும்
வைத்திருப்பவர்களுக்கு
அறியாமலா
உயர்ந்து வளர்ந்த
பல மரங்களை சரிந்திருப்பார்கள்
பூத்துக்குலுங்கிய மஞ்சணத்தி மரங்களை
மாய்ந்திருப்பார்கள்
குருவிகள் இல்லை
கூவும் குயில்கள் இல்லை
காடையும் காணவில்லை
அட மனிதர்கள்கூட
எப்போதாவது தான் புலப்படுகிறார்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தரும் நிழலில்
அமர்ந்துக் கொண்டிருக்கிறேன்
டிரங் பெட்டியிலிருந்து எடுத்த
பழைய புத்தகத்தின் பக்கங்களில்
பொதிந்திருந்த
மயிலிறகை அதிசியமாகப் பார்க்கிறாள்
எந்தப் பறவையின் இறகையும்
பார்த்திராத என் பேத்தி
உயிர் வலிக்க கேட்கிறேன்
விலைப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்
கூரை வீட்டையும்
என் மகனிடம்...!




Thursday, October 4, 2012

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு



   மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கும் பொருட்டும் மன அழுத்தம் , மன உளைச்சல் மற்றும் தேர்வு பற்றிய பயம் ஆகியவைகளை போக்கும் விதமாக, தமிழக அரசு , இலவசக் கட்டாயக் கல்வியை அமுல்படுத்தி, இந்தியாவிலேயே முதல் முறையாக ,பிற மாநில அரசுகளுக்கு முன்னோடியாக , ஆர்.டி.ஈ. சட்டம் 2009 இயற்றப்பட்டு,அது தொடர்பாக பல அரசு ஆணைகளைத் தொடர்ந்து பிறப்பித்து,   முப்பருவ முறையையும் , முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் அறிமுகப்படுத்தி, மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாகவும், முழுமையான மாணவர் வருகை சதவீதம் அமையும் விதமும் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது அனைவரும் பாராட்டியே ஆக வேண்டும்.


    சி.சி.இ. எனச் சுருக்கமாக அழைக்கப்படும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்பது , கல்வி மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவன் காட்டும் ஈடுபாடு , ஆர்வம் , முயற்சி , ஒழுங்கு முறை , செயல் திறன் , ஆளுமை வளர்ச்சி என உடல், மனம் , சமுகம் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் தொடர்ந்து மதிப்பிடலாகும்.


    மதிப்பிடல் கற்போரை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுதலாகும். மேலும் மதிப்பீடு என்பது , கற்போரின் நடத்தைகளையும் மனப்பான்மைகளையும் அளந்தரிதல் ஆகும்.
   

    தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடானது, கல்விசார்(Scholastic Asssessment) மற்றும் கல்வி இணைச்செயல்பாடுகள்(co-scholastic Assessment) வாயிலாக மதிப்பிடுதலாகும்.


    கல்விசார் செயல்பாடுகள் என்பது கற்போரின் அறிதல், புரிதல், பகுத்தாய்தல் மற்றும் பாடப் பொருளைப்பயன்படுத்தும் நிலைகளுக்கு ஏற்ப (அதாவது கருத்தை செயல்படுத்தும் விதமாக)பல்வேறு மதிப்பீட்டு உத்திகளையும் , நுட்பங்களையும் கொண்டு கலைத்திட்டத்திலுள்ள கல்விசார் பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறன்களைப் பருவம் முழுவதும், பாடப் பொருளைச் சிறு சிறு பகுதிகளாகக் கற்பித்துக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர்களின் அடைவுத் திறன்கள் வளரறி மற்றும் தொகுத்தறி  மதிப்பீடுகள் வாயிலாக மதிப்பீடுச்  செய்யப் படுதல் ஆகும். இதனால்,  மாணவர்களிடையே உள்ள தேர்வு அச்சமும் , மன அழுத்தமும் குறைகிறது. இதில் உடற்கல்வியும் மதிப்பீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    வாழ்க்கைத்திறன் ( உ.ம்., மதித்தல் மரியாதை தருதல், சூழலுக்கேற்பவும் நேர்மறையாகவும் முடிவெடுத்தல்,சுய முடிவெடுத்தல் தெரிவித்தல், தீச்செயல், தீய நோக்குடன் தொடுதலை எதிர்த்தல், ஒத்த வயதுடையோருடன் உறுதியாகவும் இணக்கத்துடனும் இருத்தல் , போன்ற பண்புகள்) , மனப்பான்மைகளும் மதிப்புகளும் ( தேசிய மற்றும் மாநில அரசு சார்பான சின்னங்களுக்கு மரியாதை செலுத்துதல், பாராட்டத்தக்க பண்புடைமை (அதாவது சொல்லிலும், செயலிலும் அனைவருக்கும் மதிப்பளித்தல், நண்பருக்கு உதவும் பண்பு, கோப நிலையிலும் பண்பு நிலை மாறாமல் இருத்தல்) , பள்ளி மற்றும் சமுகத்திலுள்ள பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பைக் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் மதிப்புகள்),நன்னலம் மற்றும் யோகா/ ஒருங்கிணைந்த உடற்பயிற்சி, பாட இணைச்செயல்பாடுகள் ( வாழ்க்கை கல்வி மற்றும் கலைக் கல்வி) ஆகியவற்றை ஆசிரியர் குழந்தைகளை வகுப்பறையிலும் , பள்ளியிலும் , பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சூழ்நிலைகளிலும் உற்று நோக்கி , குறிப்பிட்டுள்ள வாழ்க்கைத் திறன்களில் அவர்களுடைய நடத்தைக் கூறுகளைத் தெரிந்துக் கொண்டு ஐந்து குறியீட்டுத் தரநிலை அளவுகளில் மதிப்பீடு செய்து , தரநிலையைப் பதிவு செய்ய வேண்டும். இது கல்வி இணைச்செயல்பாடுகளை மதிப்பிடலாகும்.      


       இதனால் மாணவன் தேவையான அளவில் பாடங்களில் கற்றலடைவைப் பெறுவதுடன் ,ஆர்வமாக கற்கும் நிலை உருவாக்கி, தாம் கற்றவற்றை தானாக பகுப்பாய்வு செய்யவும் , அதனை வெவ்வேறு சூழலில் பயன்படுத்தும் திறன் பெற்றவனாகவும் , தானாகவும் , பிறருடன் ஒருங்கிணைந்தும், இசைந்தும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்யப் பழகிக் கொள்வான்.   சமூக மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செயல் திட்டங்களில் பங்கேற்கவும், சிக்கல்களை அறிந்து , தீர்வு காணும் ஆற்றலைப் பெற்றவனாக உருவாக்கப்படுவான்.


       இத்தனை சிறப்பு மிக்க இந்த மதிப்பீடு முறை வெற்றி பெற பெற்றோர்கள் விழிப்புடன் செயல் பட வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வழங்கப்படும் செயல் திட்டங்களுக்கு உதவியாக இருந்து, குழந்தைகளே உருவாக்க உதவிட வேண்டும். ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாணவர்களுக்கு செயல் திட்டங்களை உருவாக்கி, ஆனந்தமான கற்றல் சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும். பெற்றோர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், அரசு கல்வித் துறை என  அனைவரும் ஒருங்கிணைந்து செயல் பட்டால், தமிழக மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. 

Thursday, September 6, 2012

மதுபானம்






                                             

பியரை குடிக்கும் போது
ஹாட் பற்றி யோசிக்க கூடாது.
எந்த மது வகையும் மற்றொரு
மது வகையுடன் சேர்த்து சாப்பிட முடியாது
ஓட்காவுடன் ரம் சேருமா…?
ரமாவுடன் இருக்கும் போது
உமாவை பற்றி யோசிக்கலாமா!  
பெண்களும் மதுபானமும் ஒன்றுதான்…!