Monday, October 24, 2011

கிடாரிபட்டி -வரலாற்று சான்று



            மலை ஏறும் அரிய வாய்ப்பு வெகு சிலருக்கே வாய்க்கிறது. அப்படிபட்ட வாய்ப்பு எனக்கு மதுரையில் நடந்த இரண்டு நாள் தொல்லியல் மாநாட்டினால் கிட்டியது. சென்னையிலிருந்து என்னுடைய சமண மலை சார்பான கட்டுரையை படித்து , தொடர்பு கொண்ட கல்வெட்டு பற்றி ஆய்வு மேற்கொள்ளும் ஆனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியினால் மதுரையிலுள்ள பல பிராமிக் கல்வெட்டுக்கள், சமண படுக்கைகளை பார்க்கும் வாய்ப்பும் , எனக்குள் புதைந்து கிடக்கும் சமணர்கள் பற்றிய கேள்விகளுக்கும் விளக்கமாகவும் அமைந்தது


    அழகர் மலை மதுரையின் வரலாற்றுக்கான சான்றுகளை புதைத்து வைத்துள்ளது. சித்திரங்கள் , கட்டிடக் கலை, மண்டபம் என பல சான்றுகள் இருந்தாலும், இம்மலையின் கிழக்கு புறம் உள்ள கிடாரிபட்டி என்ற ஊரில் அமைந்துள்ள அழகர் மலையின் ஒரு பகுதியில் சமணர் வாழ்ந்ததாக குறிப்புகள் மதுரைக்கும் சமணத்துக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன. கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டில் சமணர்கள் எனப்படும் ஆருகதர்கள் அங்கு வாழ்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.

     வேத கருத்துக்களுக்கு எதிராக தேன்றிய சமயங்கள் தான் புத்தமும், சமணமும் என்றாலும் , சமணம் தமிழக வரலாற்றில் குறிப்பாக கழுவேற்றம் மூலம் மதுரை வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது . சமண மதத்தை பரப்பியவர்கள் தீர்த்தங்கரர்கள் எனப்பட்டனர். அவர்கள் இருபத்திநான்கு பேர் ஆவர். புத்த மதத்திற்கு முந்தி சமணம் வந்ததா ? சமணம் முந்தி புத்தம் வந்ததா? என்று ஆராய்ந்தோம் என்றால் ரிக்வேதத்தில் முதல் தீர்த்தங்கரான ரிஷப தேவர் , இரண்டாவது தீர்த்தங்கரர் அஜித நாதர் , இருபத்து இரண்டாவது தீர்த்தங்கரர் அரிஷ்டநேமி , இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் பற்றி குறிப்புகள் உள்ளதால் சமணம் முந்தயது எனலாம். லில்லி என்பவர் பெளத்தம் அழிந்த பின் அது சமணம் என்ற வடிவில் மக்களிடைத் தொடர்ந்து வாழ்கிறது என்கிறார்.   

    இப்படி சமண மதத்தின் வரலாற்று பக்கங்களை புரட்டி நினைவுக்கு கொண்டு வரும் போதே , பிரதான சாலையில் இருந்து விலகி மலை நோக்கி அமைக்கப்பட்ட மண் சாலையில் நடந்து மலையின் அடிவாரத்தில் உள்ள தொல்லியல் துறையின் பலகையை வந்தடைந்தோம். கடினமான கற்களும் , முள்களும் நிறைந்த அப்பாதை சமணர்களைப் பற்றிய சிந்தனையில் பூ பாதையாக மாறியிருந்தது.

    மலையடிவாரத்தில் இருந்து தலையை உயர்த்தி மலையை பார்க்கும் போது ,மூச்சு முட்டியது. இந்த மலையிலா ஏறப்போகிறோம் என்ற மலைப்புத் தட்டியது . மலையின் கம்பீரம் அதன் அருகில் நின்று பார்க்கும் போது தான் தெரியவரும். தூரத்தில் இருந்து பார்க்கும் போது அதன் அழகு நம்மை அதனை நோக்கி நகர்த்த செய்யும்மலை அடிவாரத்தில் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி போட்டிருந்தனர்கிராமத்தில் மாடுமேய்க்கும் இளைஞன் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணமூர்த்தி அவனை அழைத்து இந்த முள் வேலி எதற்காக அமைத்துள்ளனர் என்றார். அதற்கு மலையிலுள்ள மாடு ஊருக்குள் வந்து கிழங்குகளை(விவசாயம்) தின்று விடுகிறது என்றான். நான் சும்மா இருக்காமல், இங்குள்ள சமண குகை ஏறி போகும் தூரம் தானே என்றேன். அவன் இதுவரை இந்த மலையில் ஏறியவர்கள் திரும்பியதேயில்லை என அடிவயிற்றில் புளியை கரைக்கும் விதமாக பதிலளித்தான்.
   
   மலை ஏறுவதற்கு எதுவாக படிகள் அமைக்கப்பட்டு இருந்தது. வாகை செடிகள் வழியெங்கும் மஞ்சள் பூக்களை தூவி ஒருவித பக்தியை உண்டு பண்ணின. பாதைகள் திடீரென்று மோசமாகி படிகள் உடைந்து காணப்பட்டனஇருநூறு அடி தாண்டி இருப்போம்குகை தென்படவே அப்பாடி வெகு அருகில் வந்து விட்டோம் இதற்கு போய் பயமுறுத்தி விட்டானே அந்த இடையன் என நினைத்த போது , மலையின் விளிம்பின் ஓரத்தின் வழியாக நடந்து , அதற்கு அடுத்துள்ள பாறைக்கு செல்ல வேண்டும்  என்று சொல்லியப் படி பாறையின் விளிம்பில் நடந்த கிருஷ்ண மூர்த்தியை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அறுபத்தி ஐந்து வயதுக்கு மேலுள்ள  இளைஞர் எந்தவித பய உணர்வுமின்றி வெகு நேர்த்தியாக மலை ஏறுவது , அவரின் பயிற்சியா அல்லது ஆராய்சியா? என வியக்க வைத்தது. என்னால் முடியாது என அழுது விட்டேன். மலையின் விளிம்பில் சாகசம் செய்ய யாரால் முடியும்? முற்றும் துறந்த துறவு மேற்கொள்ளும் அமண முனிவர்கள் சாவு பற்றி அஞ்சாது இப்படி ஏறினார்களோ? ஏன் இந்த சமண முனிவர்கள் ரிஸ்க் எடுத்து வாழ்ந்துள்ளனர் ? என வினாவை எழுப்பிய போது ஊருக்கு ஒதுக்கு புறமாக வாழ்ந்த இவர்கள் திகம்பரர்களாக வாழ்ந்தவர்கள் என்றார். பாறையில் பாம்பு போல ஊர்ந்து விளிம்பைக் கடந்து அடுத்த பாறையை அடைந்தேன். அந்த பாறையின் சமதளப் பகுதியை அடைந்த போது தான் நிம்மதி அடைந்தேன்

  திகம்பரர்கள் என்பவர்கள் திசைகளை மட்டும் ஆடைகளாக அணிந்தவர்கள். சமணர்களில் இரு பிரிவுகள் உண்டானது ஆடைகளை வைத்துதான். பார்சுவநாதர் காலம் வரை ஆடைகள் உடுத்துவது தடைசெய்யப்படவில்லை. மகாவீரர் காலத்தில் தான் முற்றும்  துறந்த முனிவருக்கு ஆடைகள் தேவையில்லை என்ற கொள்கைகள் உண்டானது. பார்சுவநாதர் சிலைகளில் உடைகள்(கொளபீகம்) இருப்பதைக் காணலாம். வெள்ளாடை உடுத்தியவர்கள் ஸ்வேதம்பரர்கள் என அழைக்கப்பட்டனர்கி.மு 327-329 ல் அலெக்ஸாண்டர் படையெடுப்பின் போது அம்மணத் துறவிகள் இருந்ததாக கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
   மலையில் சிறு படிக்கட்டுகள் உண்டாக்கப்பட்டு , மலை உச்சிக்கு செல்ல வழி காட்டப்பட்டது. அங்கு சென்ற போது தான் மீண்டும் ஒரு அபாயம் காத்திருந்தது. அங்கிருந்து கீழ் நோக்கி இறங்க வழி அமைக்கப்பட்டு இருந்தது. இரும்பு ஏணி அமைக்கப்பட்டு இருந்தது. மெதுவாக இரும்பு பட்டைகளில் கால் வைத்து இறங்கினேன்அங்கிருந்து மலை மீண்டும் ஏறி செல்ல வேண்டி இருந்தது. இந்த மலை பகுதி கீழ் நோக்கி சரிந்து காணப்பட்டது. அங்கிருந்து மீண்டும் மேலே ஏறிய போது மலையில் குகை காணப்பட்டது. குகையில் நீர் நிரம்பி இருந்தது. அது மழை நீராகும் . சுனை எங்கு உள்ளது என ஆராயும் போது , அது புதர்கள் தாண்டி அமைந்த குகையில் இருப்பதாக பட்டது . மலையை குகையாக குடைந்து , விளிம்புகளில் பிராமி எழுத்துக்கள் செய்தியை தந்தன. குகையின் இடது ஓரத்தில் திகம்பரர் சிலை பாறையில் வெட்டப்பட்டு இருந்தது. கணித குறிகள் படுக்கைகளின் ஓரத்தில் பறையில் வரையப்பட்டு இருந்தன.

   கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, மாணிநோன்பு(பிரமச்சரியம்) , பொருட்பற்றறுத்தல் போன்ற கொள்கைகளை கொண்ட சமணர்கள் மலைகளில் குகைகள் அமைத்து, அதன் நிழல்களில் படுக்கைகள் அமைத்து , மருந்து அரைக்க குழிகள் அமைத்து  வாழ்ந்ததன், காரணம் கேட்டு மூச்சு வாங்கினேன். நூற்றுக்கு மேற்பட்ட சமண படுக்கைகள் தென்பட்டன. தற்போது நீர் தேங்கிய இடத்திலும் படுக்கைகள் இருந்ததை கண்டேன். படுக்கையில் அமர்ந்து மூச்சு இழுத்து விட்டு காற்றை உள்வாங்கிய போது புது தெம்பு கண்டு ஆச்சரியப்பட்டேன். சிறுது நேரம் எந்த வித எண்ணமும் இன்றி கண்களை மூடி, ஆழ்ந்த சிந்தனையின்றி , புருவ மத்தியில் என் மனதை ஒருமுகப் படுத்தி , படுத்திருந்தேன். மலையின் காற்று என்னை எல்லாவித அலுப்புகளில் இருந்தும் விடுவித்து, வாதை போக்கி, மனதில் நிம்மதியை கொடுத்தது.

    மலையிலிருந்து வலப்புறம் யானை மலை. அதனை அடுத்து , மாங்குளம் எனப்படும் மீனாட்சிப்புரம் மலை, அதனை அடுத்து அதன் தொடர்ச்சியாய் மூலையில் இடது புறம் அரிட்டாப்பட்டி மலை என பார்க்க ரம்மியமாகத் தெரிந்தது. மலையிலிருந்து அதன் எதிரேயுள்ள மற்றொரு மலையின் அழமை ரசிப்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். இங்கிருந்த படியே பிற மலைகளில் உள்ள சமணர்களோடு தொடர்பு கொள்ள இப்படியொரு மலையைத் தேர்ந்தேடுத்து வாழ்ந்திருப்பார்களோ என்ற ஐயம் எழுந்தது. அப்போது அம்மலையில் ஒரு ஆள் ஏறுவது எனக்கு புள்ளியாக தென்பட்டது. இங்கிருந்து சைகையில் பேசிக் கொள்வார்களோ என்றும் தோன்றிற்று.

     என்பெருங்குன்றங்களில் தளைத்து ஓங்கிய இந்த சமணம் திருஞனசம்பந்தரால்  அழிக்கப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கையில் , சமண மதத்தின் அழிவை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
பூழியன் மதுரை உள்ளார் புறத்துளார் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆனஎல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக் கிளரொளித் தூய்மை செய்தே
வாழிஅப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார்
                       (பெரியபுராணம்பாடல் 871)
                                     தொடரும்

   

13 comments:

வவ்வால் said...

நல்லா சொல்லி இருக்கிங்க, நீங்க மெய்யாலுமே கல்வெட்டுப்படிப்பிங்களா? கல்வெட்டுனு ஒரு பதிவர் இருக்கார் படிச்சு இருக்கீங்களா?

ரிக் வேதத்தில் சமண மதம் இருக்குனு சொல்றிங்க, ஆதாரம் இருக்கா? ஏன்னா ரிக் வேதம் தான் பழமையானது, அது பல லட்ச கணக்கான ஆண்டுக்கு முன்ன வந்தது சொல்றாங்க, சமண மதம் இப்போ சமிபத்தில 2300 ஆண்டு தானே. நாங்க எல்லாம் மஹா வீரர் தான் சமன் மதம் தோற்றுவித்தார்னு படிச்சோம், இப்போ பார்சுவநாதர்னு புச்சா ஒருத்தர் பேரும் சொல்றிங்க.

கிடாரிப்பட்டிக்கு இன்னொரு வரலாற்று ஆவணம் இருக்கு, தெலுங்கு டப்பிங்க் படம், ரவி டேஜா, சிறியா நடிச்சது அதுல அடிக்கடி கிடாரிப்பட்டி சந்துனு ஹீரோ சொல்வார். அதுவே நல்ல ஆவணம் தானே!

விச்சு said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் வளமும் பெருகட்டும்...

சித்திரவீதிக்காரன் said...

கிடாரிப்பட்டிக்கு இன்னும் சென்றதில்லை. பசுமைநடை மூலம் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அரிட்டாபட்டி, மாங்குளம் எல்லாம் பசுமைநடை மூலம் போய் பார்த்துவந்து விட்டேன். மகாவீரர் முக்தி அடைந்த நாள் தீபாவளிதான். அற்புதமான பகிர்வு. நன்றி. சமணம் தொடர்பான சில பதிவுகள்.
http://banukumar_r.blogspot.com/

http://www.tamiljains.org/jain-cave-temples-tamilnadu

http://maduraivaasagan.wordpress.com/2011/03/18/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...

Karthikeyan Rajendran said...

அன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! சமண சமயம் பற்றிய செய்திகளை கிடாரிப்பட்டியோடு இயல்பான நடையில் எழுதியுள்ளீர்கள்.உங்களது கட்டுரையே ஒரு ஆவணம்தான்.

தருமி said...

நல்ல ஒரு ஆய்வுக்கள கட்டுரை.

பி.கு. மலைமேல் படுத்திருக்கும் உருவம் மிக அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது!!

மாதேவி said...

நல்ல பகிர்வு.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

விச்சு said...

நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள். எஸ்.ராமகிருஷ்ணனும் மதுரையைச் சுற்றியுள்ள பல சமணப் படுகைகளைப் பற்றித் தன் நூலில் எழுதியுள்ளார். செய்திகள்,போட்டோக்கள் மிக அருமை.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பதிவு.

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

good

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

அழகான புகைப் படங்கள் அருமையான பதிவு.நானே போய்வந்தது போல் ஓர் உணர்வு..

Unknown said...

சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டுகின்ற அருமையான பதிவு.....!!

Post a Comment